பதிவிற்குள் நுழையும் முன் ஒருவர் புரிந்துக்கொள்ள வேண்டிய வார்த்தைகள்:
1. உயிரினப்படிமங்கள் (Fossils) - விலங்குகள் மற்றும் தாவரங்களின் இயற்கையாக பாதுகாக்கப்பட்ட மிச்சங்கள்/ஆதாரங்கள்.
2. தொல்லுயிரியலாளர் (Paleontologist) - உயிரினப்படிம ஆய்வுகளில் தனித்துவம் பெற்றவர்.
**********
பரிணாம கோட்பாடு (Evolution Theory) - இவ்வுலகில் உயிரினங்கள் எப்படி வந்திருக்கும் என்பதை விளக்க முயற்சிக்கும் கோட்பாடு. டார்வின் மூலமாக பிரபலமாக துவங்கிய இந்த கோட்பாட்டின்படி உயிரினங்கள் தற்செயலாக வந்திருக்க வேண்டும், ஒன்று மற்றொன்றாக காலப்போக்கில் மாறியிருக்க வேண்டும். இந்த அளவுகோல்படியே மனிதனும் வந்தான். அதாவது, உயிரினங்கள் ஒவ்வொன்றாக மாறி பின்னர் குரங்கு போன்ற ஒன்றிலிருந்து மனிதன் வந்திருக்க வேண்டும் என்று விளக்குகின்றது இந்த கோட்பாடு.
இந்த கோட்பாடு முன் வைக்கப்பட்டதிலிருந்தே பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்து வந்துள்ளது. இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று, இந்த கோட்பாடு வெறும் யூக அடிப்படையில் அமைந்தது என்பதுதான். இன்று வரை பரிணாமம் நடந்ததை நிரூபிக்கக்கூடிய ஆதாரங்கள் நமக்கு கிடைக்கவில்லை. டார்வினும் இதே போன்றதொரு சந்தேகத்தை கொண்டிருந்தார். ஆனால் தோண்டி எடுக்கப்பட்ட உயிரினப்படிமங்கள் குறைவே என்றும் பிற்காலத்தில் படிமங்கள் அதிகளவில் கண்டுபிடிக்கப்படும் போது தன்னுடைய ஆருடம் பலிக்கும் என்றும் நம்பினார். ஆனால் அன்று அவருக்கு கிடைக்காதது இன்று வரை அவரது ஆதரவாளர்களுக்கும் கிடைக்கவில்லை. பரிணாமத்திற்கு எதிரான ஆதாரங்கள் தான் தொடர்ந்து அதிகரித்து வருகின்றனவே தவிர பரிணாமம் நடந்ததற்கு ஆதரவாக இதுவரை ஒரு ஆதாரமும் இல்லை.
ஒரு செயல்படக்கூடிய சிஸ்டத்தில், inputகள் மாறினால் outputகளும் மாறும். ஆனால் பரிணாமத்தை பொறுத்தவரை inputகள் மாறிக்கொண்டே இருக்கின்றனவே தவிர, output மட்டும் மாறவே இல்லை. அதாவது, "பரிணாமம் நிச்சயம் நடந்திருக்க வேண்டும்" என்ற output மட்டும் மாறவே மாட்டேன் என்று அடம்பிடிக்கின்றது. பரிணாமம் உண்மை என்று சாதிக்க முயலும் சகோதரர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். ஒரு பொய்யை திரும்ப திரும்ப கூறுவதால் அது உண்மையாகாது.
அறிவியேலே அல்லாத, நிரூபிக்கப்படாத இந்த கோட்பாட்டை நாத்திகர்கள் தங்களது கொள்கையை நியாயப்படுத்த துணையாக கொள்வது ஆச்சர்யமளிக்கும் உண்மை. பரிணாம கோட்பாடு உண்மையாக இருந்தால் கூட அதை வைத்து கொண்டு இறைவனை மறுக்க முடியாது. அப்படி இருக்கும் பட்சத்தில் அதனை கொண்டு இறைவனை மறுப்பது அறியாமையின் உச்சம்.மனிதர்களில் உயர்வு தாழ்வு என்று பேதம் கற்பிக்கும் வர்ணாசிரமத்தை தீவிரமாக எதிர்க்கும் நாத்திகர்கள், எப்படி உலக மக்களிடையே உயர்வு தாழ்வை கற்பிக்கும் பரிணாமத்தை ஏற்றுக்கொள்கின்றார்கள்? இனவெறியால் பலரும் பாதிக்கப்பட பரிணாமமே காரணம் என்பதை எப்படி மறந்தார்கள்?
பல நாத்திகர்களின் மதமான பரிணாம கோட்பாட்டிற்கு ஆதாரங்கள் இல்லை என்பதையும், அது யூகமாக (Hypothesis) இருக்க கூட தகுதி இல்லாதது என்பதையும்கட்டுரைகள் மூலம் விளக்க முயற்சித்துள்ளேன்.ஒரு உயிரினம் படிப்படியாக காலப்போக்கில் இன்னொரு உயிரினமாக மாறுகின்றது (gradualism) என்ற கோட்பாட்டை டார்வின் முன்வைத்தார். அதாவது, '1' என்ற உயிரினம் '2' என்ற உயிரினமாக மாறுகின்றது என்றால் அது 1.1, 1.2, 1.3, 1.4 etc போன்ற நிலைகளுக்கு காலப்போக்கில் மாறி பின்னர் தான் '2' என்ற உயிரினமாக மாறும். மற்றுமொரு எளிய உதாரணம் மூலம் மேலே கூறிய கருத்தை பார்ப்போம். ஒரு எலி, புலியாக மாறுகின்றது என்று வைத்துக்கொள்வோம். முதலில் அந்த எலி கொஞ்ச கொஞ்சமாக மாற ஆரம்பிக்கும். காலப்போக்கில் 'பாதி எலி பாதி புலி' போன்ற உயிரினமாக மாறும். பின்னர் கடைசியாக புலியாக மாறிவிடும்.
இப்போது டார்வினின் கோட்பாட்டில் உள்ள பிரச்சனை என்னவென்றால், உயிரினப்படிமங்கள் மூலமாக நமக்கு கிடைக்கும் தகவலின்படி, வரலாற்றில் எலி இருந்திருக்கின்றது, அதுபோலவே புலியும் இருந்திருக்கின்றது. ஆனால், இந்த இரண்டிற்கும் இடைப்பட்ட உயிரினங்கள் (அதாவது 'பாதி எலி பாதி புலி' மற்றும் 1.1, 1.2 போன்ற உயிரினங்கள்) உயிரினப்படிமங்களில் காணப்படவில்லை. இதுவரை நமக்கு கோடிக்கணக்கான படிமங்கள் கிடைத்து, வரலாற்றில் உயிரினங்கள் எப்படி இருந்திருக்கின்றன என்ற தெளிவை கொடுத்து கொண்டிருக்கின்றன. ஆனால் இவற்றில் ஒன்று கூட ஒரு உயிரினம் மற்றொன்றாக மாறிய ஆதாரத்தை தரவில்லை.
டார்வினும் தன் கோட்பாட்டில் உள்ள இந்த பிரச்னையை நன்கு உணர்ந்து இருந்தார். எதிர்காலத்தில் உயிரினப்படிமங்கள் அதிக அளவில் கிடைக்கும் போது, தன் கருத்து நிரூபிக்கப்படும் என்று நினைத்தார் அவர். ஆனால், அன்று அவருக்கு கிடைக்காத ஆதாரம், இன்று வரை அவரது ஆதரவாளர்களுக்கும் கிடைக்கவில்லை. கிடைத்ததாக நினைத்த சில ஆதாரங்களும் பிற்காலத்தில் பித்தலாட்டம், ஆதாரமில்லை என்று கூறி நிராகரிக்கப்பட்டு விட்டன.
இடியக்கரா காலம்:
பரிணாம கோட்பாட்டிற்கு மற்றுமொரு பிரச்சனையாக இருப்பது கேம்ப்ரியன் கால (Cambrian) உயிரினப்படிமங்கள். கேம்ப்ரியன் காலம் என்பது சுமார் 500 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய காலக்கட்டம். இந்த காலக்கட்டத்தில் தான் உயிரினங்கள் முதல் முதலாக உயிரினப்படிமங்களில் காணப்படுகின்றன. இதில் நம்மை வியப்பில் ஆழ்த்தும் விசயம் என்னவென்றால், பலதரப்பட்ட இந்த விலங்குகள், முதன் முதலாக காணப்படும் போதே சிக்கலான உடலமைப்புடன், முழுமையாக தோன்றியிருக்கின்றன.
இது என்ன பெரிய ஆச்சர்யம், இந்த கேம்ப்ரியன் காலக்கட்டத்திற்கு முந்தைய காலக்கட்டத்திற்கு போய் பார்த்தால், இந்த விலங்குகளின் முன்னோர்கள் மற்றும் இவை படிப்படியாக மாறியதற்கு ஆதாரம் கிடைத்து விடப்போகின்றது என்று உங்களில் சிலர் கூறலாம். அங்கு தான் விசயமே இருக்கின்றது. கேம்ப்ரியன் காலக்கட்டத்திற்கு முந்தைய காலக்கட்டம் இடியக்கரா காலம் (Ediacara) என்று அழைக்கப்படுகின்றது. இது சுமார் 600 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய காலக்கட்டம். இந்த காலகட்டத்திற்கு சென்று பார்த்தால் விலங்குகளின் சுவடே அங்கு இல்லை. A complete blank...blank...blank.
இது பரிணாமவியலாளர்களுக்கு மிகுந்த வியப்பையே இன்று வரை தந்துக் கொண்டிருக்கின்றது. அவர்களின் கோட்பாடு உண்மையென்றால், கேம்ப்ரியன் காலத்தில் திடீரென தோன்றியிருக்கும் உயிரினங்களின் முன்னோர்கள், பரிணமித்து கொண்டிருக்கும் நிலையில் இடியக்கரா காலக்கட்டத்தில் காணப்பட்டிருக்க வேண்டும். ஆனால் உண்மையோ அப்படியே நேரெதிராக இருக்கின்றது.
உலகில் முதன் முதலாக காணப்படும் விலங்குகள் பரிணாமம் என்ற ஒன்றை கடந்து வரவே இல்லை.
"Ever since Darwin there has been a disturbing void, both paleontological and psychological, at the base of the Phanerozoic eon. If his theory of gradualistic evolution be true, then surely the pre-Phanerozoic oceans must have swarmed with living animals—despite their conspicuous absence from the early fossil record" - N. J. Butterfield, Terminal Developments in Ediacaran Embryology, Science Magazine, 23 December 2011, Vol. 334, no. 6063, pp. 1655-1656, DOI: 10.1126/science.1216125.
தொல்லுயிரியல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் ஒரு குழப்பமான வெற்றிடம் டார்வினின் காலந்தொட்டே இருந்து வருகின்றது. படிப்படியாக உயிரினங்கள் மாறியிருக்க வேண்டும் என்ற அவருடைய கோட்பாடு உண்மையென்றால், கேம்ப்ரியன் காலத்திற்கு முன்பான காலக்கட்டம் விலங்குகளால் நிரப்பப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஆரம்ப கால உயிரினப்படிமங்களில் அவை தென்படவே இல்லை - (extract from the original quote of) N. J. Butterfield, Terminal Developments in Ediacaran Embryology, Science Magazine, 23 December 2011, Vol. 334, no. 6063, pp. 1655-1656, DOI: 10.1126/science.1216125 (simplified for the easy understanding).
இது பரிணாம கோட்பாட்டிற்கு மற்றுமொரு மிகப்பெரிய பின்னடைவாக இன்று வரை இருந்துக்கொண்டிருக்கின்றது. இடியக்கரா காலக்கட்டத்தில் விலங்குகள் காணப்படவில்லை என்றாலும் ஒரு ஆறுதலான(?) விசயம் பரிணாமவியலாளர்களுக்கு 1998-ஆம் ஆண்டு கிடைத்தது. தென் சீனாவில் கண்டெடுக்கப்பட்ட இடியக்கரா காலத்திய படிமங்கள், விலங்குகளின் கருக்களை (animal embryos) கொண்டிருந்ததாக நம்பப்பட்டது.
"...the 1998 report of fossilized animal embryos in the early Ediacaran Doushantuo Formation of South China was met with almost palpable relief" - N. J. Butterfield, Terminal Developments in Ediacaran Embryology, Science Magazine, 23 December 2011, Vol. 334, no. 6063, pp. 1655-1656, DOI: 10.1126/science.1216125 (tailored not to confuse).
1998-ஆம் ஆண்டு கண்டெடுக்கப்பட்ட இடியக்கரா காலத்திய விலங்குகளின் கருக்கள் கிட்டத்தட்ட மனரீதியான ஆறுதலை (பரிணாமவியலாளர்களுக்கு) தந்தன - (extract from the original quote of) N. J. Butterfield, Terminal Developments in Ediacaran Embryology, Science Magazine, 23 December 2011, Vol. 334, no. 6063, pp. 1655-1656, DOI: 10.1126/science.1216125.
ஒரு நிமிஷம்...
விலங்குகளின் கருக்கள் எல்லாம் படிமங்களில் தென்படும்போது, பரிணமித்து கொண்டிருக்கும் விலங்குகள் மட்டும் எப்படி கிடைக்காமல் போகும்? மிக எளிதாகவே நமக்கு தோன்றும் இத்தகைய கேள்விகள் பரிணாமவியலாளர்களுக்கு தோன்றாமல் இருக்க வாய்ப்பில்லை. இதுவாவது கிடைத்ததே என்று ஆறுதல் அடைவதெல்லாம் தங்கள் நம்பிக்கையை தக்கவைத்துக்கொள்ள இவர்கள் நடத்தும் மனரீதியான போராட்டமே ஒழிய வேறொன்றுமில்லை. அந்த ஆறுதலும் தற்போது வழக்கம் போல உடைந்து சுக்குநூறாகி இருக்கின்றது.
சமீபத்தில் (23rd dec 2011) 'Science' ஆய்விதழில் வெளியான ஆய்வு முடிவுகள் பரிணாமவியலாளர்களுக்கு மற்றுமொரு அதிர்ச்சியை தந்திருக்கின்றன. அதாவது, 'ஆரம்ப கால விலங்குகளின் கருக்கள்' என்று அவர்கள் எண்ணிக்கொண்டிருந்த இடியக்கரா காலத்திய படிமங்கள், விலங்குகளின் கருக்களோ அல்லது விலங்குகளோ கிடையாது என்று தற்போது தெரிய வந்திருக்கின்றது.
"..X-ray microscopy revealed that the fossils had features that multicellular embryos do not, and this led the researchers to the conclusion that the fossils were neither animals nor embryos.." - Chinese Fossils Shed Light On Evolutionary Origin of Animals from Single-Cell Ancestors, Science daily, 22nd dec 2011 (tailored to fit the explanation)
பலசெல் உயிரின கருக்களின் தன்மைகளுடன் இந்த படிமங்கள் ஒத்துபோகவில்லை என்பது எக்ஸ்ரே நுண் நோக்கியியல் யுக்தி மூலம் தெரியவந்துள்ளது. ஆகையால் இந்த படிமங்கள் விலங்குகளோ அல்லது கருக்களோ இல்லை என்ற முடிவிற்கு ஆய்வாளர்கள் வந்துள்ளனர் - (extract from the original quote of) Chinese Fossils Shed Light On Evolutionary Origin of Animals from Single-Cell Ancestors, Science daily, 22nd dec 2011.
இப்போது, ஆரம்ப கால உயிரினங்கள் குறித்த குழப்பங்கள் மறுபடியும் பழைய நிலைக்கே திரும்பிவிட்டன. இருந்த சிறிய ஆறுதல்(?) மற்றும் யூகமும் காலி.
கேம்ப்ரியன் கால விலங்குகள் எப்படி திடீரென தோன்றின?
முதல் முறை காணப்படும் போதே சிக்கலான மற்றும் முழுமையான உடலமைப்பை பெற்றிருக்கின்றனவே, அது எப்படி?
அதற்கு முந்தைய காலக்கட்டத்தில் இவை பரிணாமம் அடைந்துக்கொண்டிருந்த ஒரு சுவடும் இல்லையே, ஏன்? பரிணாமவியலாளர்கள் மனதில் ஓடிக்கொண்டிருக்கும் மில்லியன் டாலர் கேள்விகளான இவை தொடர்கின்றன. இந்த ஆய்வை நடத்திய ஆய்வாளர்கள் தங்களது ஆய்வு முடிவுகள் குறித்து என்ன நினைக்கின்றார்கள்?
"We were very surprised by our results -- we've been convinced for so long that these fossils represented the embryos of the earliest animals -- much of what has been written about the fossils for the last ten years is flat wrong. Our colleagues are not going to like the result" - Chinese Fossils Shed Light On Evolutionary Origin of Animals from Single-Cell Ancestors, Science daily, 22nd dec 2011.
எங்கள் ஆய்வின் முடிவுகள் மிகுந்த ஆச்சர்யத்தை தருகின்றன. இந்த படிமங்களை 'ஆரம்ப கால விலங்குகளின் கருக்கள்' என்று மிக நீண்ட காலமாக நாங்கள் நம்பியிருந்தோம். கடந்த பத்து ஆண்டுகளாக இந்த படிமங்களை பற்றி எழுதியவை முற்றிலுமாக தவறு என்று தற்போது தெரிய வருகின்றது. எங்கள் சக ஆய்வாளர்கள் இந்த முடிவுகளை விரும்பப்போவதில்லை - (extract from the original quote of) Chinese Fossils Shed Light On Evolutionary Origin of Animals from Single-Cell Ancestors, Science daily, 22nd dec 2011.
ஆம், நிச்சயமாக உங்கள் நண்பர்கள் இந்த முடிவுகளை விரும்பப்போவதில்லை. ஆனால், இது என்ன இன்று நேற்றா நடக்கின்றது? அடிப்படை இல்லாத யூகத்தை வைப்பதும், அது தவறென்று தெரிந்த பிறகு வியப்பு, அதிர்ச்சி போன்ற வார்த்தைகளை உபயோகப்படுத்துவதும் பரிணாமவியலாளர்களுக்கு புதிதா என்ன?
எல்லா அதிர்ச்சிகளுக்கும் தயாராக இருந்தால், அதிர்ச்சி வரும் போது அதிர்ச்சியடைய வேண்டிய தேவை இருக்காது பாருங்கள். அதுசரி, இவை விலங்கோ அல்லது விலங்குகளின் கருக்களோ கிடையாது. வேறு என்ன தான் இவை?அதிநுண்ணுயிரியாக (Encysting Protists) காட்சி தருகின்றனவாம் இவை*. இவற்றின் பிரதி எடுக்கும் தன்மை விலங்குகளில் இருப்பது போல இருப்பதால் இதுவும் பரிமாணத்திற்கு ஆதாரம் தானாம்.