Saturday, February 11, 2012

NEWS OF THE DAY.

மக்கள் போராட்டம் இலங்கையில் விரைவில் ஏற்படும்!- சரத் பொன்சேகா.
மாலை தீவில் மக்கள் போராட்டம் வெற்றியளித்துள்ளதைப் போன்று, இலங்கையில் இவ்வாறான ஓர் நிலைமை ஏற்படும் காலம் தொலைவில் இல்லை என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார் மாலைதீவில் ஏற்பட்ட மக்கள் ஆர்ப்பாட்ட அலை தென் ஆசியாவையும் தாக்கியுள்ளது என குறிப்பிட்ட சரத் பொன்சேகா, அழகிய நாட்டை உருவாக்கிக் கொடுப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பெப்ரவரி 8ஆம் திகதி தன்னை விடுதலை செய்யுமாறு போராட்டத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துள்ளார்.மருத்துவ சிகிச்சைகளுக்காக கொழும்பு தனியார் வைத்தியசாலைக்கு சென்று திரும்பிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு - மாலைதீவு பயணிகள் விமானங்கள் ரத்து.
இலங்கையிலிருந்து மாலைதீவுக்குச் செல்லவிருந்த இரண்டு பயணிகள் விமானங்கள் தற்காலிகமாக ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக எமது கட்டுநாயக்க விமான நிலைய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.இன்று வெள்ளிக்கிழமை இரவு 11.45 மணியளவில் செல்லவிருந்த யூ.எல்-107 விமானமும், நாளை சனிக்கிழமை அதிகாலை 1 .00 மணியளவில் செல்லவிருந்த யூ.எல்-105 ஆகிய இரண்டு பயணிகள் விமானங்களுமே ரத்துச் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி முஹம்மது நஷீட் மருத்துவ சிகிச்சைக்காக இலங்கைக்கு வரலாம் என கட்டுநாயக்க விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் பொலிஸ் திணைக்களங்களிலே அதிகளவு ஊழல்: மக்களின் கருத்துக் கணிப்பில் தெரிவிப்பு.
இலங்கையில் பொலிஸ் மற்றும் அரசியல் கட்சிகளிலே அதிக ஊழல் இடம்பெறுவதாக ட்ரான்ஸ்பரன்ஸி இன்டர்நெஷனல் நிறுவனம் நடத்திய கணிப்பீடொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.இலங்கை மக்களில், 1000 பேரிடம் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.
இதில் ஏறத்தாழ 50 சதவீதமானோர் பொலிஸ் மற்றும் அரசியல் கட்சிகளில் அதிகளவில் ஊழல் இடம்பெறுவதாக கருத்துத் தெரிவித்துள்ளனர்.மேலும், இக்கருத்துக் கணிப்பின்படி பொலிஸாரின் சேவைகளிலும், அரச திணைக்களங்கள் மீதும் மக்கள் அதிகளவில் அவநம்பிக்கை கொண்டிருப்பதை இந்த ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.கருத்துக்கணிப்பில் பங்குபற்றியவர்களில் 23 சதவீதமானோர், ஒரு குறித்த சேவையைப் பெறுவதற்காக தாம் லஞ்சம் வழங்கியுள்ளதாகக் தெரிவித்துள்ளனர்.
இலங்கை - பாகிஸ்தான் இடையில் இரு உடன்படிக்கைகள்.
இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் தலைவர்களுக்கு இடையில் இரண்டு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட உள்ளன.பாகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும், அந்நாட்டு பிரதமர் யூசுப் ராசா கிலானி ஆகியோருக்கு இடையில் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட உள்ளன.
ஊடக ஒத்துழைப்பு மற்றும் தொழில் பயிற்சி ஆகிய துறைகள் தொடர்பிலான இரண்டு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட உள்ளன.மேலும், பாகிஸ்தான் செனட் சபையின் தலைவர் பாரூக் ஹமீடை ஜனாதிபதி இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.இந்த நிகழ்வுகளில் பாகிஸ்தானுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஜயலத் வீரக்கொடியும் பங்கேற்பார் என தெரிவிக்கப்படுகிறது.
நல்லாட்சியை ஏற்படுத்த ஆணைக்குழு அறிக்கையை அமுல்படுத்த வேண்டும்!- ரணில் விக்ரமசிங்க.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்தவும், ஜனநாயகத்தை நிலைநாட்டவும் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அமுல்படுத்தப்பட வேண்டும்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஒரே நிலைப்பாட்டைக் கொண்டுள்ளன.ஆணைக்குழுவின் பல பரிந்துரைகள் வரவேற்கப்பட வேண்டியவை. அவற்றை அனைவரும் ஒன்றிணைந்து அமுல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது தொடர்பில் ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.இதேவேளை, மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு அந்தநாட்டு ஆட்சியாளர்களிடம் தாம் கோரியுள்ளதாகவும் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பு.
இலங்கையில் எரிபொருள்களின் விலைகள் இன்று இரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக  அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.இதன்படி, பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 20 ரூபாவாலும், ஒரு லீற்றர் டீசலின் விலை 13 ரூபாவாலும், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 13 ரூபாவாலும் அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எண்ணெய் ஏற்றுமதியில் உலகில் இரண்டாவது இடத்தை வகிக்கும் ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைவிதித்துள்ளதன் காரணமாகவே எரிபொருள்களின் விலைகளை உயர்த்தவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.இலங்கை 70 சதவீதமான மசகு எண்ணெய்யை ஈரானிலிருந்தே இறக்குமதி செய்கின்றது. இதற்கு ஈரான் அரசு மூன்று மாதகால கடன் நிவாரணத்தை இலங்கைக்கு வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.இந்தநிலையில், இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் மீளமைப்பு செய்யப்படவுள்ளபோதும் தனியார் பொதுப் போக்குவரத்து மற்றும் மீன்பிடித்துறையினருக்கு விலை நிவாரணம் வழங்கப்படும் என்று இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
கடாபியின் மகன் லிபியாவுக்கு எதிராக போராட்டம் நடத்தப் போவதாக அறிவிப்பு.
லிபியாவின் புதிய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தப் போவதாக லிபியாவின் மறைந்த ஜனாதிபதியான மம்மர் கடாபியின் மகன் ஸாதி கடாபி தெரிவித்துள்ளார்.மம்மர் கடாபியின் மறைவுக்குப் பின்னர் ஸாதி கடாபி நைஜர் நாட்டிற்கு தப்பிச் சென்றார்.
அல் அரேபியா தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், தான் எந்த நிமிடத்திலும் லிபியாவுக்கு திரும்பலாம் என்றும், தான் நடத்தப்போகும் போராட்டம் சில குறிப்பிட்ட இடங்களில் மட்டுமல்லாது நாடு முழுவதும் நாளுக்கு நாள் இந்தப் போராட்டம் வளர்ந்து வலுப்பெறும் எனவும் உறுதிபடத் தெரிவித்தார்.தன் தந்தையாரைப் போல இவரும் லிபியாவை ஜமாஹ்ரியா என்றே குறிப்பிட்டுள்ளார். தேசிய மறுமலர்ச்சிக் குழுவினர் மற்றும் இராணுவ அதிகாரிகள் போன்றவர்களுடன் கடாபி குடும்பத்தார் இன்னும் தொடர்பில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.மேலும் லிபிய மக்கள் தற்போது நடைபெற்று வரும் ஆட்சியின் மீது அதிருப்தியில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மததூதரை இழிவுப்படுத்திய கட்டுரை ஆசிரியர் மலேசியாவில் கைது.
மததூதரை இழிவுப்படுத்தி டுவிட்டரில் கருந்து வெளியிட்ட கட்டுரை ஆசிரியரான ஹம்ஸா கஷ்காரி என்பவர் மலேசியா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.கடந்த வாரம் முஸ்லிம்களின் நபியான முகமது நபியின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் ஹம்ஸா கஷ்காரி என்ற கட்டுரை ஆசிரியர் டுவிட்டரில் "உன்னைப் பற்றிய பல அம்சங்களை நான் நேசிக்கிறேன். அதேநேரம் உன்னைப் பற்றிய சில அம்சங்களை நான் வெறுக்கவும் செய்கிறேன். உன்னைப் பற்றிய பல விஷயங்களை என்னால் புரிந்துகொள்ள முடியாமலும் இருக்கிறது. நான் உனக்காக பிரார்த்திக்க மாட்டேன்” என்று கருந்து வெளியிட்டிருந்தார்.
இக்கருத்துக்கு சுமார் முப்பதாயிரம் பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் சிலர் அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். இந்நிலையில் கடந்த 9ம் திகதி இவர் மலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையத்தில் வந்து இறங்கிய போது, சர்வதேச பொலிஸ் பிரிவான இண்டர்போல் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இவர் கைது செய்யப்பட்டார்.இதையடுத்து இவர் தான் வெளியிட்ட கருத்துக்காக மன்னிப்புக் கேட்டிருந்ததோடு, மற்றவர்கள் மனதைப் புண்படுத்தும் மாதிரியாக இருந்த கருத்துகளை டுவிட்டரில் இருந்து நீக்கியும் இருந்தார். ஆனாலும் அவர் மேலிருந்த வெறுப்பு இன்னும் சவுதி மக்களிடம் குறைந்தப்பாடில்லை.
சவுதியில் இறைதூதரை இழிவுபடுத்தும் விதமான கருத்துகளைச் சொல்வது மதநிந்தனையாக கருதப்படுகிறது. எனவே இவர் மீது வழக்கு தொடுக்க வேண்டும் என மதகுருக்கள் கூறியுள்ளனர்.மேலும் சவுதி அரேபியாவில் மதநிந்தனை குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை கூட விதிக்கப்படலாம். இதற்கிடையில் இவரைக் கைது செய்யுங்கள் என்று சவுதி மன்னரும் உத்தரவிட்டதாக கூறப்படுகின்றது.
மேலும் இவர் எந்த நாட்டிலிருந்து வந்த விமானத்தில் மலேசியாவுக்கு வந்தார் என்ற தகவலை மலேசியாவின் காவல்துறை அதிகாரிகள்வெளியிடவில்லை. தேசப் பாதுகாப்பு தொடர்பான இருதரப்பு ஒப்பந்தங்களின் கீழ் கஷ்காரி சவுதி அரேபியாவிடம் ஒப்படைக்கப்படலாம் என பெயர் குறிப்பிட விரும்பாத மலேசியா அதிகாரிகள் தெரிவித்தனர். 
1300 பேரின் உயிரைப் பறித்த சர்க்கரை மருந்து.
பிரான்ஸ் நாட்டில் சர்க்கரை நோயாளிகளுக்கு மீடியேட்டர்(Mediator) என்ற மருந்து கொடுக்கப்பட்டது. இதனால் 1300 பேர் உயிரிழந்ததாக இன்செர்ம் என்ற சுகாதார மற்றும் மருத்துவ ஆய்வுக்கான தேசிய மையம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.பரிசோதனைக் கூடத்தில் இந்த மருந்தை பென்ஃபுளு ஓ ரெக்ஸ் என்ற பெயரில் அழைக்கின்றனர்.
ஆய்வு மையத்திலிருந்து இந்த ஆராய்ச்சியை நடத்திய மஹ்மூத் சுரேயக் கூறுகையில், 33 ஆண்டுகளாக இந்த மருந்து விற்கப்பட்டு வந்ததில் 3100 பேருக்கு சிகிச்சை தேவைப்பட்டுள்ளது.இந்த மருந்தினால் இதய வால்வுகள் பாதிக்கப்பட்டு பின்பு மூச்சுத் திணறல் உண்டாகிறது. இறந்து போனவர்கள் பெரும்பாலும் பழுதுபட்ட இதய வால்வுகள் கொண்டவர்களாகவே இருந்தனர். ஆகவே கடந்த 2009ம் ஆண்டில் இந்த மருந்தை ஜரோப்பிய சந்தைகளில் விற்க தடை விதிக்கப்பட்டது.
தடை விதிக்கப்படுவதற்கு முன்பு பிரெஞ்சு மருந்துக்கடைகளில் இந்த மீடியேட்டர் என்ற மருந்து சுமார் 145 மில்லியன் பாக்கெட்கள் விற்கப்பட்டுவிட்டது என்றார்.ஆரம்பத்தில் மீடியேட்டர் என்ற இந்த மருந்து புரதக்கொழுப்பு, லிபிட்புரதம், இரத்தத்தின் சர்க்கரை போன்றவற்றைக் குறைக்க பயன்படுத்தப்பட்டது.1990ம் ஆண்டின் கடைசியில் பென்ஃபுளூரனமன் என்ற எடைகுறைப்பு மருந்தில் ஏற்பட்ட ஊழலை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த போது மீடியேட்டரும் இடையில் வந்து சிக்கிக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ரூ.60 கோடிக்கு ஏலம் போன ஓவியம்.
19ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரான்ஸ் நாட்டு ஓவியர் கிளாட் மோண்ட் வரைந்த ஓவியம் ரூ.60 லட்சத்திற்கு ஏலம் போனது.இந்த ஓவியம் லண்டன் ஏல நிறுவனத்தின் மூலம் ஏலம் விடப்பட்டது. இயற்கை காட்சிகள் கொண்ட இந்த ஓவியம் ரூ.60 கோடிக்கு ஏலம் போனது.
ஜேர்மனியை உளவு பார்த்த ஒற்றர்கள் கைது.
ஜேர்மனியில் ஒற்றர் வேலை பார்த்த இருவர் பெர்லினில் கைது செய்யப்பட்டனர். மேலும் நால்வரை நாடு கடத்தப் போவதாக ஜேர்மனியின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் குய்டோ வெஸ்டர்வேலே தெரிவித்தார்.
சிரியா நாட்டிற்காக இராணுவ இரகசியங்களை சேகரிக்கும் பணியில் இவர்கள் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டனர். அடுத்த நால்வரும் சிரியாவின் தூதரகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இன்னும் மூன்று நாட்களில் நாட்டை விட்டு வெளியேறி விட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இவர்களைக் குறித்து சிரியாவின் தூதுவருக்கு தகவல் அறிவிக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் 47 வயது நிரம்பிய ஹ்முத் அல் என்பவர், மற்றொருவர் 34 வயது நிரம்பிய சிரியா தேசியவாதியான அக்ரப் ஓ என்பவர் ஆவர்.இவர்கள் கடந்தாண்டு டிசம்பர் மாதத்தில் பசுமைக்கட்சியை சேர்ந்த உள்ளூர் அரசியல்வாதி ஒருவரை அவரது வீட்டில் வைத்து கடுமையாகத் தாக்கியுள்ளனர். இவர்கள் தொடர்ந்து சிரியாவை எதிர்த்து வந்ததால் தாக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
சிரியா போராட்டம்: 400 குழந்தைகள் பலி.
சிரியாவில் கடந்த 11 மாதங்களாக நடைபெற்ற தாக்குதல்களில் 400 குழந்தைகள் வரை கொல்லப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.சிரியாவில் ஜனாதிபதி பஷர் அல் அசாத் பதவி விலக கோரி கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் போராட்டக்காரர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுடன் பொது மக்களும் இணைந்து போராடி வருவதால் அவர்களை ஒடுக்குவதற்காக ஜனாதிபதி இராணுவத்தை ஏவி விட்டுள்ளார்.
பொது மக்களுக்கு ஆதரவாக போராட புரட்சி படையும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த படையினர் சில பகுதிகளில் வலுவாக உள்ளனர். அந்த பகுதிகளில் இராணுவம் நுழைந்து கண்மூடித்தனமாக தாக்கி வருகிறது. ஹாம்ஸ் நகரில் இராணுத்தினர் பீரங்கி மற்றும் ராக்கெட் குண்டுகள் மூலம் கடுமையான தாக்குதல் நடத்தினார்கள்.
தற்போது இராணுவத்தினர் வீடு, வீடாக சென்று பொதுமக்களை கொன்று குவித்து வருகின்றனர். இது தவிர கடந்த 11 மாதங்களில் மட்டும் 400 குழந்தைகள் வரை கொல்லப்பட்டுள்ளதாக யுனிசெப் கணக்கெடுப்பு ஒன்று தெரிவித்துள்ளது.சிரியாவில் இராணுவத்தினர் வெறியாட்டம் அதிகரித்து வருவதால் அந்நாட்டிற்கு 3ம் எண் எச்சரிக்கையை பிலிப்பைன்ஸ் அறிவித்துள்ளது. சிரியாவில் மக்கள் போராட்டம் தொடங்கி இதுவரை 7 ஆயிரம் பேர் கொல்லப்பட்டு இருக்கின்றனர். வியாழக்கிழமை மட்டுமே ஒரேநாளில் 100 பேர் உயிரிழந்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மெக்சிகோவில் ஒரே இடத்தில் 15 பேரின் பிணங்கள் கண்டுபிடிப்பு.
பிரேசில் நாட்டில் இரண்டு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் நுற்றுக்கும் அதிகமானோர் பலியாயினர்.இரண்டு பிரிவினர் இடையே நீண்ட நாட்களாக மோதல் நடந்து வருகின்றது. ஏற்கனவே இந்த சம்பவத்தில் 100க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து அகாய்கான் என்ற இடத்தில் உள்ள காட்டுப்பகுதியில் ஒரே இடத்தில் பதினைந்து பேர் கொன்று புதைக்கப்பட்டு இருப்பதை பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.இந்த உடல்கள் அனைத்தும் அழுகி சிதைந்த நிலையில் இருந்தன. பிணங்கள் கண்டுபடிக்கப்பட்டதை தொடர்ந்து அந்த பகுதி மக்களிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் பலர் கொல்லப்பட்டு இருக்கலாம் என அச்சம் நிலவி வருகின்றது.
போப்பை கொலை செய்ய சதி திட்டம்.
கிறிஸ்தவர்களின் மத குருவான போப்பை கொல்ல சதி நடப்பதாக இத்தாலியிலிருந்து வெளிவரும் பிரபல பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டது.இச்செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது, கடந்தாண்டு டிசம்பர் மாதம் 30ம் திகதி கொலம்பியாவைச் சேர்ந்த கார்டினல் டைரோகாஸ்ட்ரி‌லோன் ஹை‌யோன் என்பவர் போப்பை சந்தித்து பேசினார்.
அப்போது அவரை கொல்ல சில அமைப்புகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாகவும், எதிர்வரும் நவம்பர் மாதம் சீனா செல்லும் போது இதை நிறைவேற்ற உள்ளதாகவும் அந்த பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.இதற்கு வாடிகன் வட்டாரம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து வாடிகன் செய்தி தொடர்பாளர் பெர்டரிக்கோ லோம்பர்டி கூறுகையில், போப்பை கொல்ல சதி திட்டம் குறித்து அவ்வாறு எந்த ஒரு தகவலும் எங்களுக்கு வரவில்லை. அடிப்படை ஆதாரமற்றது என்றார்.இந்நிலையில் போப்பின் நம்பிக்கைகுரிய டார்ஸிஸோ பெர்டோன் என்பவர் வாடிகன் நிர்வாகத்தின் வெளிவிவகார செயலராக உள்ளார். இவரை பதவி நீக்கம் செய்ய போப் நடவடிக்கை எடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகிய நிலையில் தான் இப்படி ஒரு வதந்தி கிளம்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
உறைந்த நிலையில் டான்யூப் ஆறு.
ஜரோப்பாவில் மிக முக்கியமான நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் டான்யூப் எனப்படும் ஆறு கடுமையான பனிப்பொழிவின் காரணமாக உறைந்துக் காணப்படுகின்றது.மத்திய ஐரோப்பாவில் டான்யூப் எனப்படும் ஆறு முக்கியமான நீர் வழித்தடமாக இருந்து வருகிறது. சுமார் 2,860 கி.மீ நீளமுள்ள இந்த ஆறு செர்பியா, குரோஷியா, பல்கேரியா, ருமேனியா, ஹங்கேரி, ஆஸ்திரியா உட்பட 10 நாடுகளின் வழியாகச் செல்கிறது.
மின்சார உற்பத்தி, மீன்வளம், விவசாயப் பாசனம், நகர்ப்புற குடிநீர், தொழில் நிறுவனத் தேவை ஆகியவற்றுக்கு டான்யூப் நதியே பயன்படுத்தப்படுகிறது. இந்த ஆறு உறைந்ததினால் கப்பல் போக்குவரத்து உட்பட அனைத்துப் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.220க்கும் மேற்பட்ட சிறுபடகுகள் உறைந்த நீரில் சிக்கிக் கொண்டதினால், இன்னும் 10 நாள்களுக்கு கப்பல் போக்குவரத்து நடைபெறாது என செர்பியா கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் பாவ்லே கலிகோ தெரிவித்தார்.
பல்கேரியாவின் வடமேற்குப் பகுதியில் உள்ள விடினில் என்னும் நகரத்தில் பனிப்பொழிவு -28.6 டிகிரி செல்சியஸ் பதிவானது. இதனால் அங்கு மின்சார ஏற்றுமதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.பராகுவேயில் வெப்பநிலை -40 டிகிரி செல்சியஸ் பதிவாகும் என்றும், ரோமில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இன்று கடுமையான பனிப்பொழிவு ஏற்படும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இம்ரான் கான் பேரணியில் குண்டு வெடிப்பு.
பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கட் அணித்தலைவரும், அரசியல் கட்சித் தலைவருமான இம்ரான் கான் பேரணியில் குண்டு வெடித்தது.பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியான சவாபியில் இம்ரான் கான் பேரணி ஒன்றில் கலந்து கொண்டார்.
பேரணி நடக்கும் இடத்திற்கு பொலிசாரை ஏற்றிச் சென்ற பேருந்தின் மீது குறைந்த சக்தி வாய்ந்த வெடி குண்டு ஒன்று வீசப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 12 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.மேலும் இந்த சம்பவம் நடப்பதற்கு முன்பே இம்ரான் கான் அந்த இடத்தை விட்டு சென்றுவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. காயம் அடைந்தவா்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அர்ஜென்டினாவுக்கு பிரிட்டன் பிரதமர் பதிலடி.
பாக்லாந்து விவகாரம் குறித்து ஐ.நா சபையிடம் முறையிடப் போவதாக அர்ஜென்டினா ஜனாதிபதி அறிவித்தற்கு பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன் பதிலடிகொடுத்துள்ளார்.அர்ஜென்டினாவிற்கு சொந்தமான பாக்லாந்து தீவுகளை 1982ம் ஆண்டில் பறித்துக் கொண்ட பிரிட்டன், தென் அட்லாண்டிக் கடல் பகுதியை இராணுவமயமாக்குகிறது. இது குறித்து ஐ.நா.விடம் முறையிடுவோம் என்று அர்ஜென்டினா ஜனாதிபதி சமீபத்தில் அறிவித்திருந்தார்.
பாக்லாந்து பிரிட்டனிடம் இருப்பதற்கு காரணம் அங்கு வாழும் மக்கள் பிரிட்டனை விரும்புவது தான். மேலும் பாக்லாந்து கடலில் நிறுத்தப்பட்டுள்ள பிரிட்டனுக்கு சொந்தமான போர்க்கப்பல் பாதுகாப்புக் காரணங்களுக்காகவே நிறுத்தப்பட்டுள்ளது என்றும் கமரூன் தெரிவிதுள்ளார்.பாக்லாந்து கடலில் எண்ணெய் கிடைக்கும் என்று பிரிட்டிஷார் நம்புவதால் இந்தத் தீவைத் தங்கள் வசம் வைத்துக்கொள்ள விரும்புகின்றனர். இதனை எதிர்த்து அர்ஜென்டினாவின் வெளிவிவகாரத்துறை அமைச்சா் ஐ.நா சபையிடம் தங்களது முறையீட்டை சமர்ப்பிக்கிறார் என தெரியவந்துள்ளது.
திபெத் மீது போர் தொடுக்க சீனா முயற்சி.
சீனா திபெத்திற்கு எதிராக போர் தொடுக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றது என தகவல்கள் வெளியாகியுள்ளன.சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி நடக்கிறது. தற்போது சீனாவின் ஆக்கிரமிப்பில் சுயாட்சி மாகாணமாக உள்ள திபெத்தை விடுவிக்க கோரி தலாய்லாமா தலைமையில் திபெத்தியர்கள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.
இதற்காக தலாய்லாமா சர்வதேச நாடுகளின் உதவியை நாடி வருகிறார். இதனால் ஆத்திரமடைந்த சீனா தலாய்லாமாவை நாடு கடத்தியது. சீனாவின் சீய்ஜூவான் மாற்றும் குயீங்காய் மாகாணத்தில் வசிக்கும் திபெத்தியர்கள் தலாய்லாமாவிற்கு ஆதரவாகவும், சீனாவின் போக்கை கண்டித்து போராட்டம் தீக்குளிப்பு போன்ற சம்பவங்களை நிகழ்த்தி சீனாவிற்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். கடந்த ஜனவரி 23ம் திகதியன்று திபெத்தியர்கள் மீது சீன காவல்துறை அதிகாரிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதில் யாக்ஸ்ஹி ரிக்சால்(40) மற்றும் அவரது சகோதரர் ஒருவர் என இரண்டு பலியாயினர். இந்நிலையில் திபெத் பிரச்னையை முடிவுக்கு கொண்டு வரவும் போராட்டக்காரர்கள், பிரிவினைவாத கொள்கை உடைய தலாய்லாமா ஆதரவாளர்களை ஒடுக்க நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது.இது தொடர்பாக சீனா பிரதமர் வென்ஜியாபோ, திபெத் தலைவர் பான்சென்லாமாவை சந்தித்து நேற்று ஆலோசனை நடத்தினார். திபெத்திற்கு எதிராக போர் தொடுக்க முயற்சிப்பதாக கூறப்படுகிறது. அதன்படி திபெத் புத்தாண்டு பிப்ரவரி மாதம் 22ம் திகதி கொண்டாட்டப்படுகிறது. அதே நேரத்தில் சீனா இத்த‌கைய அறிவிப்பு வெளியிட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
அமெரிக்காவுக்கு ஏவுகணை திட்ட ரகசியங்களை அளித்த பொறியாளருக்கு சிறைத் தண்டனை.
ரஷ்யாவின் ஏவுகணை திட்ட இரகசியங்களை அமெரிக்க உளவு அமைப்பிற்கு(சி.ஐ.ஏ) தெரிவித்ததாக ரஷ்யா விண்வெளி பொறியாளருக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.ரஷ்யா தனது இராணுவ உபயோகத்திற்கான ஏவுகணைகளை வடமேற்கு விண்வெளி மையத்தில் தயாரித்து வருகிறது. மேலும் நவீன ரக ஏவுகணைகளையும் தயாரித்து வருகிறது.
இந்நிலையில் ரஷ்ய விண்வெளித்துறையின் ப்ளஸ்டெக் பிரிவில் ஏவுகணை சோதனை திட்ட பொறியாளர் விளாடிமிர் நெஸ்டரட்ஸ் என்பவர், விண்வெளி ஏவுகணை திட்டத்தின் தகவல்களை திருடி அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ.யிடம் விற்று பணம் பெற்றுள்ளார் என்பது ரஷ்யாவின் எப்.எஸ்.பி. படையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.இதையடுத்து அந்த பொறியாளர் கைது செய்யப்பட்டார். வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணையில் இவருக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
வினோதமாக தீர்ப்பு வழங்கிய நீதிபதி.
அமெரிக்காவில் மனைவியின் பிறந்த நாளை மறந்த கணவன், குடும்ப வன்முறை குற்றத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.அமெரிக்காவின் தெற்கு புளோரிடாவை சேர்ந்தவர் ஜோசப் பிரே(47). இவர் தனது மனைவியின் பிறந்த நாளை மறந்து விட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த மனைவி, பிரேவுடன் கடுமையான வாக்குவாத்தில் ஈடுபட்டார். அப்போது மனைவியை தள்ளி விட்டுள்ளார். இந்த பிரச்னை பெரிதானதால், குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் பிரேவை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைந்தனர்.இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை நீதிபதி ஹர்லே விசாரித்தார். அப்போது பிறந்த நாள் மறந்து போனதற்கான சூழ்நிலை குறித்து பிரேவிடம் கேட்டறிந்தார்.
அதன்பின், பிறந்த நாளை மறந்ததால் கணவன்- மனைவிக்குள் வாக்குவாதம் நடந்துள்ளது. அப்போது மனைவியை கோபத்தில் தள்ளிவிட்டுள்ளார் பிரே. ஆனால் அடிக்கவில்லை என்று தெரிகிறது.மேலும் பிரே மீது எந்த குற்ற வழக்கும் இல்லை. இவற்றை நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக் கொண்டது. எனவே மனைவிக்கு பிறந்த நாள் வாழ்த்து அட்டை, பூக்களை வாங்கிக் கொண்டு இரவு உணவு சாப்பிட ஹோட்டலுக்கு அவரை அழைத்து செல்ல வேண்டும்.
மேலும் இருவரும் திருமண கவுன்சலிங் அளிப்பவரை உடனடியாக சந்தித்து ஆலோசனை பெற வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பளித்தார். விசாரணையின் போது, கணவனை பார்த்து எனக்கு பயமில்லை என்று மனைவியும் நீதிபதியிடம் கூறினார். இதையடுத்து பிரேவை சிறையில் இருந்து விடுவிக்க உத்தரவிட்டார்.
தீவிரவாதிகளின் பதுங்கு குழிகள் மீது இராணுவம் தாக்குதல்: 11 பேர் பலி.
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள குர்ராம் மலைப்பிரதேசத்தில் தலிபான் மற்றும் அல்கொய்தா இயக்கங்களை சேர்ந்த தீவிரவாதிகள் முகாம்கள் அமைத்து தங்கியிருக்கின்றனர்.இவர்கள் பாகிஸ்தான் இராணுவத்திற்கு எதிரான தாக்குதல்களை நடத்தி வருகிறார்கள். மேலும் இராணுவ வீரர்களை கடத்திச் சென்று படுகொலை செய்கிறார்கள்.
எனவே இராணுவம் இவர்கள் ஒடுக்க முடிவு செய்தனர். இதன் காரணமாக கடந்த சில நாட்களாக அந்த பகுதியில் ஹெலிகொப்டர் மற்றும் பீரங்கி மூலம் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் இராணுவத்தினர் பீரங்கிகள் மூலம் குண்டுகளை வீசி திடீர் தாக்குதல் நடத்தியதில் தீவிரவாதிகளின் 3 பதுங்கு குழிகள் அழிக்கப்பட்டது. இதில் மொத்தமாக 11 தீவிரவாதிகள் பலியாயினர், 19 பேர் காயம் அடைந்தனர்.
இதுகுறித்து பாகிஸ்தான் அதிகாரிகள் கூறுகையில், பலி எண்ணிக்கை குறித்து முறையான தகவல் ஏதும் கிடைக்கப்பெறவில்லை. இது பற்றி ஆய்வு செய்து வருகிறோம் என்றனர்.
பிரான்சில் குடியேற மாறுபட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்: அரசு அறிவிப்பு.
பிரான்ஸ் நாட்டில் குடியேற விரும்புபவர்கள் மாறுபட்ட சோதனைக்கு தயாராக வேண்டும் என்று பிரான்ஸ் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து டெய்லி ஸ்டார் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பாரீசில் உள்ள ஈபிள் கோபுரம் தொலைக்காட்சி கோபுரமா? உள்ளிட்ட கேள்விகளுக்கு பதிலளித்தால் மட்டுமே பிரான்ஸ் குடியுரிமையை பெற முடியும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த கேள்விகள் கடினமாக இருக்காது என்று எதிர்பார்ப்பதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
கனடாவில் புலம்பெயர்ந்த மாணவர்களே சிறந்து விளங்குகின்றனர்: ஆய்வில் தகவல்.
கனடாவில் மூன்றில் இரு பங்கினர் புலம்பெயர்ந்த மக்களே ஆவர். எனவே இவர்கள் வருங்காலத்தின் படித்த சமுதாயமாக மலர்கின்றனர்.பிலிப்பைன்ஸ், இந்தியா மற்றும் சீனாவில் இருந்து கனடாவிற்குக் குடிபெயர்ந்தவர்கள் மூன்றில் ஒரு பங்காக இருக்கின்றனர். இவர்களின் குழந்தைகள் சிறந்த மாணவர்களாகத் திகழ்கின்றனர்.
கடந்த 2010ஆம் ஆண்டில் டொரொண்டோ மாகாணத்தின் பள்ளிக்கல்வி வாரியம் தன் மாணவர்களில் கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த 72 சதவீதம் பேரும், தெற்கு ஆசியாவைச் சேர்ந்த 50 சதவீதம் பேரும் மேற்படிப்புக்குப் பல்கலைக்கழகங்களுக்குச் சென்றதாகத் தெரிவித்தது. கனடா மாணவர்களில் 42 சதவீதம் பேர் மட்டுமே மேற்படிப்பை நாடினர்.
வான்கூவர் மாநிலத்தில் 21 சதவீதம் பேர் கிழக்கு ஆசியாவைச் சேர்ந்தவர்கள் ஆவர். பிரிட்டிஷ் கொலம்பியாவின் பல்கலைக்கழகத்தில் இந்த மாணவர்களின் எண்ணிக்கை இன்னும் இரட்டிப்பாயிற்று.ஜோனாதன் கே என்பவர் பள்ளிக்கல்வியை பற்றிக் குறிப்பிடும்போது, மாண்ட்ரியலில் உள்ள SHS என்ற செல்வின் ஹவுஸ் ஸ்கூலில் கடந்த 1970-80ஆம் ஆண்டுகளில் மூன்று ஆசிய மாணவரே படித்தனர். இப்போது உலகமே மாறிவிட்டது போல் ஏராளமான ஆசியமாணவர்கள் படிப்பதாகத் தெரிவித்தார்.டொரொண்டோவிலும் மிகச்சிறந்த மாணவர்கள் ஆசிய நாட்டினரே, மற்ற சிறந்த பள்ளிகளிலும் இவர்களே சிறப்பிடம் பெறுகின்றனர்.
ஜேர்மனியில் புகைப் பிடிக்கும் பழக்கும் குறைவு.
ஜேர்மனியில் பதின்வயதினரிடம் புகைப் பிடிக்கும் பழக்கும் பாதியாக குறைந்து விட்டதாக FCDF நடத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.கடந்த பத்தாண்டுகளில் 12 வயது முதல் 17 வயதுடைய நபர்களிடம் புகைப் பிடிக்கும் பழக்கம் குறைந்து கொண்டே வருகின்றது. ஏறத்தாழ 12 சதவீதத்திற்கும் குறைவான நபர்களே புகை பிடிக்கின்றனர்.
புகைப்பழக்கம் குறைந்ததற்குப் பல்வேறு காரணங்களை சுகாதார அமைப்பு எடுத்துக் காட்டுகின்றது. கடந்த 2003ம் ஆண்டில் நடத்தப்பட்ட புகைப்பழக்கத்தின் தீமைகுறித்த பிரச்சாரம், புகையிலைக்கான வரியை உயர்த்தியது, பல பள்ளிக்கூடங்களில் புகை பிடிப்பதற்காக இடைவேளை விடாதது போன்றவற்றால் பதின் வயது இளஞர்களிடம் புகைப்பழக்கம் குறைந்து விட்டது.மேலும் அதிகரித்துவரும் மதுக்கூடங்களிலும் புகைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2001ம் ஆண்டில் கணக்கெடுத்த போது 40.5% பேர் தாங்கள் ஒரு முறை கூட புகை பிடித்ததே இல்லை என்றனர். 2010ல் இதே கணக்கெடுப்பை நடத்திய போது இந்த எண்ணிக்கை 70.8% ஆக அதிகரித்து விட்டது.
அரசாங்கத்தின் சுகாதாரத்துறையின் செய்தித் தொடர்பாளரான ஜென்ஸ் ஸ்பான் கூறுகையில், இப்போது புகை பிடித்தல் செலவு மிக்கதாகவும், தொந்தரவு தருவதாகவும் கருதப்படுகிறது என்றார்.
பிரேசிலில் போராட்டம்: கேளிக்கை திருவிழா பாதிக்கப்படும் அபாயம்.
பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் வருடந்தோறும் கேளிக்கை திருவிழா சிறப்பாக நடைபெறும். இதில் இடம்பெறும் பெண்களின் சம்பா நடனம் மிகவும் புகழ்பெற்றது.அடுத்த வாரம் நடைபெறவுள்ள இந்த திருவிழாவை காண உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தரவுள்ளார்கள்.
இந்நிலையில் இந்நகரில் சம்பள உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி தீயணைப்பு படையினர், காவல்துறை அதிகாரிகள் மற்றும் கைதிகளின் பாதுகாப்பு படையினர் ஆகியோர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதுதவிர நாட்டின் மூன்றாவது பெரிய நகரமான சால்வாடோரில் காவல்துறையினர் ஏற்கனவே போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதன் காரணமாக தலைநகர் மற்றும் சால்வாடோர் ஆகிய இடங்களில் குற்றச் செயல்கள் அதிகரிக்க வாய்ப்பு ஏற்படலாம் என்றும், அடுத்த வாரம் நடக்க இருக்கும் கேளிக்கை திருவிழாவின் போது பாதுகாப்பு பிரச்சனை ஏற்படலாம் என்றும் அஞ்சப்படுகிறது.எனவே பாதுகாப்பு பணியில் 14 ஆயிரம் இராணுவ வீரர்களை ஈடுபடுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF