Tuesday, February 21, 2012

NEWS OF THE DAY.

குவைத் வர்த்தகரிடம் 67ஆயிரம் தினார் மோசடி செய்த இலங்கையர் மீது புகார்.
குவைத்தில் பிரபல வர்த்தகர் ஒருவரை இலங்கையரான ஒப்பந்தக்காரர் ஒருவர் ஏமாற்றி மோசடி செய்ததாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.மேற்படி இலங்கையர் குவைத் வர்த்தகருடன் இணைந்து 2 இலட்சம் குவைத் தினார் முதலீட்டில் கூட்டு வர்த்தக நடவடிக்கையொன்றை ஆரம்பிக்க இணங்கியதையடுத்து, அதற்காக வர்த்தகர் 67,000 தினார்களை இலங்கையரிடம் முற்பணமாக கொடுத்துள்ளார்.
இவ்வாறு இதமாக பேசி வர்த்தகரை ஏமாற்றிய மேற்படி இலங்கையரைக் காணவில்லை என குறித்த வர்த்தகர் குவைத் பஹாஹீல் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.சந்தேக நபர் தாயகத்திற்குச் செல்வதற்காக ஏற்கனவே குவைத்திலிருந்து வெளியேறி விட்டதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியினர் நாடாளுமன்றில் போராட்டம்- மக்களுக்காக போராட வேண்டியது தமது கடமை என்கிறார் ரணில்.
ஐக்கிய தேசிய கட்சியினர் இன்று நாடாளுமன்ற நுழைவாயிலை முற்றுகையிட்டு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில் மக்களுக்காக போரட வேண்டியது எமது கடமையாகும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.எரிபொருள் விலையேற்றம், அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் உள்ளிட்ட பல விடயங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பதாகைகளை ஏந்திய வண்ணம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர்கள் சிலர் இன்று காலை சைக்கிள் மூலமாக சபைக்குச் சென்று எரிபொருள் விலையை குறைக்குமாறு வலியுறுத்தி போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.
மக்களுக்காக போரட வேண்டியது எமது கடமை ரணில் விக்கிரமசிங்க
மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில் மக்களுக்காக போரட வேண்டியது எமது கடமையாகும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்
இன்று பாராளுமன்றத்திற்கு முன்னால் எரிபொருள் விலையேற்றத்தினை கண்டித்து ஜக்கிய தேசியக் கட்சியினர் நடத்திய ஆர்பாட்டத்தின் போது இதனைத் தெரிவித்துள்ளார்.அரசாங்கத்தில் தொடர்ந்து இடம்பெறும் மோசடிகள் ஊழல்கள்,நேர்மையில்லாத ஆட்சி என்பவற்றின் காரணமாக மக்களை பொருளாதார சிக்கலில் கொண்டு சென்று நிறத்தியுள்ளதாகவும்
திடீரென மகிந்த அரசாங்கம் எரிபொருள் விலையினை அதிகரித்துள்ளது. இதற்கான காரணம் பற்றிக் கலந்துரையாடுவதற்கு பாரளுமன்றத்தினைக் கூட்டுங்கள் என்றோம். ஆனால் அரசாங்கம் அதற்கு ஒரு பதில் கூட தரவில்லை. இது பெறுப்புள்ள அரசாங்கத்தின் செயற்பாடில்லை.மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதி என்ற வகையில் மக்களுக்காக போரட வேண்டியது எமது கடமையாகும் என்றார்.
மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட்டின் பாதுகாப்புக்காக இலங்கை படை இன்று விரைகின்றது!
மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட்டின் பாதுகாப்புக்காக, இலங்கை அரசாங்கம் இலங்கை பாதுகாப்பு படையினரை இன்று இரவு மாலைத்தீவுக்கு அனுப்பி வைக்க உள்ளது.பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபயவின் ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனத்தில் பணியாற்றும் 20 படையினர் , உதவி காவற்துறை அத்தியட்சகர் ஒருவர் தலைமையிலான 10 அதிரடிப்படையினர் மற்றும் 15 இராணுவத்தினர் இவ்வாறு மாலைத்தீவுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.
ஜனாதிபதி மகிந்தவின் நண்பர் மொஹமட் நஷீட்டின் பாதுகாப்புக்காக இவ்வாறு இலங்கை பாதுகாப்பு படையினரை அனுப்பி வைப்பது சர்வதேச சட்டங்களை மீறும் நடவடிக்கை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.தற்போது சட்டரீதியாக செயற்படும் மாலைத்தீவு அரசாங்கத்துடன் தொடர்புகளை பேணுவதற்கு பதிலாக கிளர்ச்சிகள் மூலம் பதவியில் இருந்து இறக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட்டின் பாதுகாப்புக்காக இலங்கை அரசாங்கம் செயற்படுவது சர்வதேச சட்டங்களை மீறும் நடவடிக்கை எனவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
இதனால் இந்த நடவடிக்கையை மூடி மறைப்பதற்காக மாலைத்தீவில் உள்ள இலங்கை தூதரகத்தின் பாதுகாப்புக்காக என தெரிவித்து, இலங்கை படையினர் அங்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.
இதற்காக மாலைத்தீவில் உள்ள இலங்கை தூதுவர் தேல பண்டாரவிடம் இருந்து கடிதம் ஒன்றும் பெறப்பட்டுள்ளது.
மாலைத்தீவுக்கான இலங்கை தூதுவர், மகிந்த ராஜபக்ஸவின், பாடசாலை கால நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.
மின்சார பொறியியலாளர்கள் தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயார்.
தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் எதிர்வரும் வாரங்களில் வேலை நிறுத்தம் உட்பட்ட தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக மின்சார சபை பொறியியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.தற்போதும் தாம் தேவையற்ற மற்றும் ஆபத்தான பணிகளைில் ஈடுபடுவதை தவிர்த்துக்கொண்டுள்ளதாக பொறியியலாளர் சங்கத்தின் பேச்சாளர் அஜித் விதானஹே தெரிவித்துள்ளார்.இதன்படி, மின்சார துண்டிப்பு எதுவும் ஏற்பட்டால் அதனை சீர்செய்வதற்கு நீண்ட நேரத்தை எடுத்துக்கொள்ளும் தொழிற்சங்க நடவடிக்கையில் தாம் ஈடுபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளாவிய ரீதியில் தமக்கு 800 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் கடந்த வாரம் ஒன்றுகூடி தொழிற்சங்க நடவடிக்கை குறித்த தீர்மானத்தை மேற்கொண்டனர் என்றும் அஜித் விதானஹே குறிப்பிட்டுள்ளார்.ஏற்கனவே, இலங்கை மின்சார சபை பாரிய நட்டத்தில் இயங்கிக் கொண்டிருப்பதாக அரசாங்கம் கூறிவரும் நிலையிலேயே பொறியியலாளர்களின் புதிய கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பெற்றோலிய விலையேற்றதால் அரசு நெருக்கடிக்கள்: அல்ஜசீரா.
இலங்கையின் ரூபாயில் ஏற்பட்ட வீழ்ச்சி பெற்றோலிய விலையில் 49 வீத அதிகரிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இலங்கையில் பாரிய போராட்டங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தேயிலை ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள தடையும் இலங்கையில் இருதரப்பு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அல்ஜசீரா தொலைக்காட்சியின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பெற்றோலிய விலையேற்றத்தினையடுத்து அரிசி விலையும் உயர்த்தப்படக் கூடிய அபாயம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கிலோ ஒன்றுக்கு நான்கு ரூபா வீதம் அரசியின் விலை உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசி விலையை உயர்த்துவதனைத் தவிர வேறு வழியில்லை என அரிசி உற்பத்தியாளர்களும், அரிசி ஆலை உரிமையாளர்களும் தெரிவித்துள்ளனர்.அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டால் உற்பத்தியை வரையறுக்க நேரிடும் என குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை, அரிசி ஆலை உரிமையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் விலையை அதிகரிக்க அனுமதிக்க முடியாது என நுகர்வோர் விவகார அமைச்சு அறிவித்துள்ளது.
3 நாள் பயணமாக இஸ்ரவேல் பிரதமருக்கு அழைப்பு விடுத்துள்ள அமெரிக்க ஜனாதிபதி.
ஈரான்-இஸ்ரேல் விவகாரம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகூ மூன்று நாள் பயணமாக அமெரிக்க செல்கிறார்.இது குறித்து வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகூ அடுத்த மாதம் 5-ம் திகதி மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக அமெரிக்க வருமாறு அதிபர் மாளிகை அழைப்பு விடுத்துள்ளனர்.
அதன்படி அதிபர் ஒபாமாவை சந்தி்த்து பல்வேறு விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். மேலும் அவருடன் இஸ்ரேல் ராணுவ அமைச்சர் இகுட்பாரக் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.அமெரிக்காவில், ‌அமெரிக்கன், இஸ்ரேல் பொதுவிவகாரக்குழு (ஏ.ஐ.பி.ஏ.சி.) மாநாடு நடக்கிறது. இதில் நெட்டன்யாகூ கலந்து கொண்டு பேசுகிறார். இந்த சந்திப்புக்குப்பின்னர் ஈரான் விவகாரம் குறித்து ஒபாமா, அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் டாம் ‌டோனிலன் ஆகியோ‌ரிடம் ஆலோசனை நடத்துவதால் இதில் கூறப்பட்டுள்ளது.மேலும் இஸ்ரேல் பிரதமரின் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
பாகிஸ்தானில் புதுபிக்கப்பட்டு வரும் இந்துக் கோவில்.
பாகிஸ்தானின் கராச்சி நகரில் நீண்ட காலப் போராட்டத்துக்குப் பின் ஓர் இந்துக் கோவில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.கராச்சியின் ஜாம்ஷெட் டவுன் அருகிலுள்ள "சோல்ஜர் பஜார்” என்ற இடத்தில், 1,500 ஆண்டுகள் பழமையான பஞ்சமுகி அனுமான் மந்திர் என்ற கோவில் உள்ளது.
இக்கோவிலின் மூலஸ்தானத்தில் எட்டு அடி உயரம் கொண்ட சுயம்பு அனுமான் விக்கிரகம் இருக்கிறது. அதனால் அப்பகுதி இந்துக்கள் மத்தியில், இக்கோவில் மிகவும் புகழ் பெற்று விளங்குகிறது.கராச்சியின் பல கோவில்களின் நிலைமையைப் போலவே, இக்கோவிலைச் சுற்றியிருந்த நிலங்களும் ஆக்கிரமிக்கப்பட்டன. இவற்றில் ஒரு பாதியை கோவில் நிர்வாகம் மீட்டிருக்கிறது. இன்னும் அது தொடர்பான வழக்குகளும் நடந்து வருகின்றன.அதேநேரம் கோவிலைப் புதுப்பிக்கும் பணிகளும் பல்வேறு இடையூறுகளுக்கிடையில் நடந்து வருகின்றன. மொத்தம், 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான இப்பணிகள், இடையில் நன்கொடைகள் வராததால் தேங்கிக் கிடந்தன.
எனினும், சிந்து மாகாணத்தின் சிறுபான்மை அமைச்சகம் அளிக்கும் நிதியுதவியைப் பெறாமல் ஏழை இந்துக்கள் மற்றும் முட்டாகிதா குவாமி இயக்கம் ஆகியோரின் உதவியால், நன்கொடைகள் திரட்டப்பட்டு வருகின்றன.மொத்த மதிப்பீட்டில் பாதியளவு நன்கொடைகள் திரட்டப்பட்ட நிலையில், கோவிலின் மூலஸ்தானம் தவிர மடைப்பள்ளி உள்ளிட்ட பல பகுதிகள், புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. பழைய கற்கள் அகற்றப்பட்டு புதிய கற்களால் சுவர் எழுப்பப்பட்டு வருகின்றன.
இந்தியா-ஈரான் விவகாரம் அமெரிக்காவிற்கு ஏமாற்றத்தை தருகிறது: நிக்கோலஸ் பர்ன்ஸ்.
ஈரானிடம் இருந்து தொடர்ந்து எண்ணெய் இறக்குமதி செய்வதாக இந்தியா எடுத்த முடிவு அமெரிக்காவை அவமானப்படுத்துவதற்கு சமம் என அமெரிக்க முன்னாள் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.ஈரானின் அணுசக்தி திட்டங்கள் மீது சந்தேகம் கொண்டுள்ள அமெரிக்கா, அந்நாட்டின் மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு, ஐரோப்பிய யூனியன் தடை விதித்திருந்தது. அதேநேரம், சர்வதேச அளவில் ஈரானைத் தனிமைப்படுத்துவதற்காக, ஈரானின் எண்ணெயை வாங்க வேண்டாம் என அமெரிக்கா தனது நட்பு நாடுகளிடம் கூறி வருகிறது.இந்தியா அதைப் புறக்கணித்து விட்டு தொடர்ந்து ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது. இதுகுறித்து, அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் முன்னாள் சார்புச் செயலர் நிக்கோலஸ் பர்ன்ஸ் இது குறித்து கருத்து தெரிவிக்கையில் ஈரானிடம் இருந்து தொடர்ந்து எண்ணெய் இறக்குமதி செய்யவுள்ள இந்தியாவின் முடிவு, அந்நாட்டோடு நெருங்கிப் பழகி வரும் அமெரிக்காவுக்கு மிகப் பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் விவகாரத்தில் சர்வதேச சமூகத்தினுடன் இணைந்து செல்லாமல் தனித்துச் செல்வதாக இந்தியா எடுத்த முடிவு, அதன் தலைமைத்துவம் பற்றிய சந்தேகங்களை ஏற்படுத்துவதாக பர்ன்ஸ் தெரிவித்துள்ளார்.சமீபத்தில் "தி பாஸ்டன் க்ளோப்'” பத்திரிகையில், பர்ன்ஸ் எழுதியிருந்த ஒரு கட்டுரையில் இந்தியாவுடன் நீண்ட கால அடிப்படையிலான உறவுகளை அமெரிக்கா காப்பாற்ற வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
ஏமனில் இன்று அதிபர் தேர்தல்.
ஏமனில் அதிபர் அலி அப்துல்லா சலேயின் 33 ஆண்டுக் கால ஆட்சி முடிந்ததன் அறிகுறியாக அங்கு இன்று அதிபர் தேர்தல் நடக்கிறது.துணை அதிபர் அப்துர் அபு மன்சூர் ஹாடி மட்டுமே வேட்பாளராக நிற்கும் இத்தேர்தலுக்கு அமெரிக்கா வரவேற்பு தெரிவித்துள்ளது. ஏமனில் கடந்த 33 ஆண்டுக் காலமாக அலி அப்துல்லா சலே அதிபராக இருந்து வந்தார். எகிப்தில் ஏற்பட்ட மக்கள் புரட்சி அரபு நாடுகளுக்கும் பரவியதை தொடர்ந்து ஏமனில் சலேயை எதிர்த்து மக்கள் போராடத் துவங்கினர்.
அதன் முடிவில் கடந்தாண்டு நவம்பரில், வளைகுடா நாடுகள் கூட்டுறவு கவுன்சில் முன்வைத்த ஒப்பந்தம் ஒன்றில், சலே கையெழுத்திட்டார். அதன்படி அதிபரின் அதிகாரங்கள் யாவும் துணை அதிபர் ஹாடிக்கு வழங்கப்பட்டன.தற்போது அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுவரும் சலே, தனது கட்சியின் தலைவர் என்ற நிலையில் தான் நாடு திரும்பப் போவதாக தெரிவித்தார். இந்நிலையில் வளைகுடா நாடுகளின் ஒப்பந்தப்படி இன்று அங்கு இடைக்கால அதிபர் தேர்தல் நடக்கிறது.
இத்தேர்தலில், வேட்பாளராக துணை அதிபர் ஹாடி மட்டுமே போட்டியிடுகின்றார். அதேநேரம், ஏமனின் தெற்குப் பகுதியை பிரிக்கக் கோரும் தென்பகுதி பிரிவினை இயக்கமும், வடபகுதியில் இயங்கி வரும் ஜைதி புரட்சியாளர்களும் இத்தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சிகள் தோல்வி அடைந்தன. எனினும், இத்தேர்தலுக்குப் பின் ஏமனில் நிலையான அரசு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தேர்தலுக்கு ஆதரவு தெரிவித்து, ஹாடிக்கு கடிதம் எழுதியுள்ள அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, ஏமனின் உறுதியான நண்பனாக அமெரிக்கா தொடர்ந்து செயல்படும் என தெரிவித்துள்ளார்.
பாலுசிஸ்தான் தனிநாடு விவகாரத்தில் அமெரிக்காவிற்கு கண்டனம் தெரிவித்த பாகிஸ்தான்.
பாகிஸ்தானின் பாலுசிஸ்தான் மாகாணத்தை தனி நாடாக அறிவிக்கும் தீர்மானம் அமெரிக்க பார்லிமென்டில் கொண்டுவரப்பட்டதற்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க தூதருக்கு, பாக். வெளியுறவு அமைச்சகம் சம்மன் அனுப்பி கண்டனத்தை தெரிவித்தது. பாகிஸ்தானிற்குட்பட்ட ‌தென்மேற்கு மாகாணமான பாலுசிஸ்தான் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் தாங்‌களே சுயமாக முடிவு வெடுக்கவும் தனி நாடு கோரவும் உரிமை உண்டு என தீர்மானம் அமெரிக்க பார்லிமென்டின், பிரதிநிதிகள் சபையில் கடந்த 18-ம் திகதி, டானா ரோக்ராபச்சர், லூயி்ஸ் கோஹர்மெட், ஸ்டீவ்கிங் ஆகிய மூன்று எம்.பி.க்கள் கொண்டு வந்தனர்.அதில் பலுசிஸ்தான் வாழ் மக்கள் தங்களே சுயமாக முடிவு எடுக்க வரலாற்று பூர்வமான உரிமை உண்டு என கூறினர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது குறித்து பாக்.பிரதமர் யுசுப்ராஸா கிலானி கூறுகையில், நாட்டின் இறையான்மைக்கு எதிரான செயல் என கூறினார்.
வெளியுறவு அமைச்சர் ஹீனா ரப்பானி கூறுகையில், எங்கள் நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள இயற்கை வளங்களை ‌அபகரிக்கும் நோக்குடன் தான் அமெரிக்கா இப்படி தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது என்றார்.இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம், பாகிஸ்தானுக்கான அமெரி்க்க தற்காலிக தூதர் ரிச்சர்ட்டு ஹோக்லாண்டை நேரில் அழைத்தது.அதி்ல் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில், எம்.பி.க்கள் மூவர், பாலுசிஸ்தான் குறித்து தீர்மானம் கொண்டுவர எந்த வகையிலும் உரிமையில்லை, இது இருநாடுகளிடையே நட்புறவை சிதைக்கும் செயல், ஐ.நா.வின் விதிகளை மீறிய செயல் என தனது கண்டனத்தை தெரிவித்தது. பாகிஸ்தானைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் சிலரும் இத்தீர்மானத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ராணுவத்தை வலுப்படுத்தும் தென்கொரியா.
வடகொரியாவின் மிரட்டல்களுக்கிடையில், தென் கொரிய ராணுவம் தனது போர்ப் பயிற்சியை நேற்று துவக்கியது. கடந்த 2010ம் ஆண்டு தென் கொரியாவுக்குச் சொந்தமான இயான்பியாங் தீவு மீது வடகொரியா நடத்திய தாக்குதலில் நான்கு பேர் இறந்தனர்.இதையடுத்து இரு நாடுகளும் பரஸ்பரம் எச்சரிக்கை விடுத்துக் கொண்டன. இந்நிலையில், தென் கொரியா தனது ராணுவத்தின் மாதாந்திர போர்ப் பயிற்சியை, இயான்பியாங் தீவு அருகில் மேற்கொள்ள உள்ளதாக அறிவித்தது.
இதனால் கோபமடைந்த வடகொரியா, தனது எல்லைக்குள் ஏதாவது ஒரு குண்டு வந்து விழுந்தாலும் அதற்குப் பதிலடி கொடுக்கப் போவதாக எச்சரித்தது. ஆனால் அதையும் மீறி, தென் கொரிய ராணுவம் திட்டமிட்டபடி, தனது போர்ப் பயிற்சியை நேற்று துவக்கியது.இரண்டு மணிநேரம் நீடித்த இந்த பயிற்சிக்கு முன்னதாக அப்பகுதி வாழ் மக்கள் அனைவரும், பூமிக்கடியில் உள்ள பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டனர். தென் கொரிய ராணுவப் பயிற்சியை அடுத்து வடகொரியா தனது ராணுவத்தை உஷார் நிலையில் இருக்கும்படி உத்தரவிட்டது.
அணுசக்தி திட்டங்களை ஆராய ஈரான் சென்ற ஐ.நா குழு.
ஈரானின் அணுசக்தித் திட்டங்களின் ராணுவ ரீதியிலான பரிமாணங்கள் குறித்து ஆராய, சர்வதேச அணுசக்தி ஏஜென்சி(ஐ.ஏ.இ.ஏ.,) பிரதிநிதிகள் குழு நேற்று இரண்டாவது முறையாக ஈரானுக்குச் சென்றது.
இந்நிலையில், பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கான எண்ணெய் ஏற்றுமதியை நிறுத்தி வைத்தது குறித்து ஈரானுக்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது. ஈரானின் அணுசக்தி திட்டங்கள் குறித்து அமெரிக்காவும், மேற்குலகும் சந்தேகம் கொண்டுள்ள நிலையில், சமீபத்தில், ஐ.ஏ.இ.ஏ., பிரதிநிதிகள் குழு, ஈரானுக்குச் சென்று அணுசக்தி நிலையங்களை ஆய்வு செய்தன.அப்போது சில நிலையங்களில் ஆய்வு செய்ய ஈரான் அனுமதிக்கவில்லை எனக் கூறப்பட்டது. எனினும் அந்த ஆய்வு திருப்திகரமாக இருந்ததாக குழு தெரிவித்தது. இதற்கிடையில், அணுசக்தி தயாரிப்பில் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, நவீன ரக கருவிகளை தயாரித்திருப்பதாக ஈரான் சமீபத்தில் அறிவித்திருந்தது.
இதையடுத்து, நேற்று ஐ.ஏ.இ.ஏ.,யின் ஐந்து பேர் கொண்ட பிரதிநிதிகள் குழு, தலைநகர் டெஹ்ரானுக்குச் சென்றது. இரண்டு நாட்கள் ஈரானில் தங்கும் இக்குழு முக்கியமான அணுசக்தி நிலையங்களுக்குச் சென்று ஆய்வில் ஈடுபடும் என, எதிர்பார்க்கப்படுகிறது. குழுவின் தலைவர் ஹெர்மன் நக்கர்ட்ஸ் இது குறித்துக் கூறுகையில்,"தற்போதுள்ள பிரச்னைகள் அனைத்தையும் தீர்ப்பதற்கு ஈரான் தயாராக உள்ளது.இந்தப் பயணத்தின் மிக முக்கிய முன்னுரிமை, ஈரானின் அணுசக்தி திட்டங்களின் ராணுவ ரீதியிலான பரிமாணங்கள் குறித்து ஆராய்வது தான். இதில் குறிப்பிடத் தக்க பலன் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். இது மிகவும் சிக்கலானது என்பதால், சில காலம் ஆகலாம். எனினும் உருப்படியாக நடக்கும் என நம்புகிறோம் என்றார்.
ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி ஜூலை 1ம் திகதி முதல் தடை செய்யப்படும் என, ஐரோப்பிய யூனியன் கடந்த மாதம் அறிவித்திருந்தது. அதற்குப் பதிலடியாக நேற்று முன்தினம் பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கான எண்ணெய் ஏற்றுமதியை நிறுத்தி விட்டதாக ஈரான் எண்ணெய் அமைச்சகம் அறிவித்தது.இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹோங் லீ நேற்று அளித்த பேட்டியில்,"பேச்சுவார்த்தை மட்டுமே நாடுகளுக்கிடையிலான பிரச்னைகளுக்குத் தீர்வு. அழுத்தம் கொடுப்பதாலோ, மோதலில் ஈடுபடுவதாலோ பிரச்னைகளைத் தீர்க்க முடியாது. இவ்விவகாரத்தில் அனைத்து தரப்பும் பேச்சுவார்த்தைக்கான சரியான பாதைக்கு வருவர் என, சீனா நம்புகிறது என்றார்.
இந்நிலையில், மத்திய தரைக் கடலுக்குச் சென்ற ஈரானின் இரு போர்க் கப்பல்கள், இரு நாட்களுக்கு முன் சிரியாவின் டார்டஸ் துறைமுகத்திற்குச் சென்று விட்டதாக தெரிவித்துள்ளது ஈரான் தேசிய தொலைக்காட்சி.மேலும், ஓராண்டுக்கு முன் சிரியாவும், ஈரானும் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, இப்போது அக்கப்பல்கள், சிரியாவின் கடற்படைக்கு பயிற்சிகள் அளிக்கும் எனவும் அந்த தொலைக்காட்சி கூறியுள்ளது.
சீனாவுடன் மோத அமெரிக்காவிற்கு விருப்பமில்லை: பென்டகன்.
சீனாவுடன் எவ்வித ஆயுதப் போட்டியிலோ அல்லது மோதலிலோ ஈடுபட அமெரிக்கா விரும்பவில்லை என, அந்நாட்டின் ராணுவத் தலைமையகமான பென்டகன் அறிவித்துள்ளது.ஆசிய பசிபிக் மண்டலத்தில் அமெரிக்கா தனது படைகளைக் குவிப்பதில் கவனம் செலுத்தி வருகிறது. அப்பகுதி நாடுகளின் விருப்பத்திற்கேற்ப இந்நடவடிக்கைகளை மேற்கொள்வதாக சமாதானமும் கூறி வருகிறது. ஆசியாவில் வல்லரசாக உருவாகி வரும் சீனாவுக்கு இந்நடவடிக்கைகள் எரிச்சலையும், கோபத்தையும் கிளப்பியுள்ளன.
இந்நிலையில், பென்டகன் உயரதிகாரி மார்டின் டெம்ப்சி இதுகுறித்து நேற்று கூறுகையில் சீனாவுடன், அமெரிக்கா தனது உறவுகளை மேம்படுத்திக் கொள்ள இன்னும் நிறைய வாய்ப்புகள் உள்ளன. இந்த உறவுகளின் விளைவு, சீனாவுடன் ஆயுதப் போட்டியாகவோ அல்லது வேறு வகையிலோ மோதுவதாக இருக்காது.அதேநேரம் பசிபிக் மண்டலத்தில், அமெரிக்கா தனது வலிமையைத் தக்க வைத்துக் கொள்ளும். அங்கிருந்து விலக அமெரிக்கா எப்போதும் விரும்பாது என டெம்ப்சி தெரிவித்தார்.
பிரிட்டனில் புதிதாக அறிமுகமாகும் எல்லை முககை பணி: தெரெசா மே.
பிரிட்டனின் எல்லை முகமையை பணியினை(Border Agency) இரண்டாக பிரிப்பதன் மூலம் நாட்டிற்குள் வருபவர்களை முறையாக சோதனையிட, இந்த முறை வசதியாக இருக்குமென பிரிட்டனின் உள்துறை அமைச்சர் தெரெசா மே(Theresa May) தெரிவித்துள்ளார்.பாராளுமன்ற உறுப்பினர்களிடம் தெரெசா மே எல்லை பிரச்சனை குறித்து பேசுகையில், தமக்கென்று ஒரு புதிய சட்டத்தை உருவாக்குவதன் மூலம் இதற்கு ஒரு நல்ல தீர்வை காணமுடியும் என தெரிவித்தார்.தற்போது இருக்கும் அமைச்சகம் முறையான சோதனையின்றி புலம்பெயர்ந்து வருவோரை பிரிட்டனுக்குள் அனுமதித்ததால் விதிமீறல் பிரச்சனை ஏற்பட்டது. இதன் காரணமாக தற்போதைய எல்லை முகாமின் தலைவரான புரோடீ கிளார்க் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
பிரிட்டனின் இந்த எல்லை முகமை கடந்த 2008 ஆம் அண்டில் உருவாக்கப்பட்டது. உள்துறையின் புலம்பெயர்ந்தோர் இயக்குநர்கள், சோதனைச்சாவடிப் பணிகளை சரிவரச் செய்யாத காரணத்தினால் புதிதாக “எல்லை முகமை” என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.இந்த எல்லை முகமை பிரிட்டனுக்குள் வரும் விமானம், ரயில், கப்பல் ஆகியவற்றில் வருபவர்களையும், வெளிநாட்டிலிருந்து அனுமதிச்சீட்டு(விசா) பெற்று வருபவர்களையும் சோதனை செய்து நாட்டிற்குள் அனுமதிக்கும்.
இச்சோதனைப்பணிகளை இதற்கு முன் புலம்பெயர்வு முகமையும், வெளியுறவுத் துறையும், வருவாய் மற்றும் சுங்க இலாகாவும் நடத்தி வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.ஆனால் தற்போது புலம்பெயர்வுப் பணிகளை தனியாகப் பிரித்துள்ளனர். பிரிட்டனின் எல்லை முகமையின்(UKBA) ஒரு பிரிவாக இருந்த பிரிட்டனின் எல்லைப்படை(UK Border Force) இனி தனியாக இயங்கத் தொடங்கும். இத்துடன் தேசிய குற்றவியல் முகமையும் இணைந்து செயல்படும். இனிமேல் இவையிரண்டும் எல்லையோரக் குற்றங்களையும் விதிமீறல்களையும் விசாரிக்கும்.
ஜேர்மனி முதல்முறையாக முகநூலை ஆதாரமாக மாற்றிய நீதிமன்றம்.
ஜேர்மனி நீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக ரூட்லிங்கென்(Reutlingen) என்ற நீதிமன்றத்தின் நீதிபதி குற்றவாளியின் குற்றத்தை நிரூபிக்க முகநூலை(Facebook) ஆதாரமாக கொண்டுவர முயற்சி மேற்கொண்டுவருகின்றார்.இந்த வழக்கில் ஓர் இருபது வயது இளைஞர் மற்றொருவரின் மின்னஞ்சலை இரகசியமாகப் படித்துப்பார்க்க முயன்றார் என குற்றம் சாட்டப்பட்டது. இதை நிரூபிக்க அவரது முகநூலைப் பறிமுதல் செய்து பார்த்தால் உண்மை தெரிந்துவிடும்.
எனவே அவரது முகநூல் இடம்பெற்றுள்ள இணையதள சேவை இயக்குனரிடம் அதனைத் திறந்து படித்துப் பார்க்க ஆணைப்பிறப்பிக்க வேண்டும் என்று நீதிபதி கூறினார்.இதற்கு அந்த இணையதள நிறுவனம், ஜேர்மனியின் தனிநபர் முகநூல்கள் தலமையகம் அயர்லாந்தில் செயல்பட்டு வருகின்றது. எனவே அயர்லாந்தில் உள்ள தலைமையகத்தை அணுகுமாறு நீதிமன்றத்திற்கு பதிலளித்துள்ளனர்.
எனவே ரூட்லிங்கென் நீதிமன்றம் அயர்லாந்து தலைமையத்திடம் குற்றம் சாட்டப்பட்டவரின் முகநூலைத் திறந்து பார்க்க உதவி செய்யுமாறு கேட்டுக் கொண்டது. அமெரிக்காவில் இதுபோன்று முகநூலை திறக்கும் இந்த முறை சாதாரணமாக பின்பற்றப்படுகிறது. ஆனால் ஜேர்மனிக்கு இது மிகவும் புதிய அனுபவம் என்று வழக்கறிஞர் கார்ஸ்டென் உல்பிரிக்ட்டின் கருத்து தெரிவித்துள்ளார்.
கனடிய பள்ளி பேராசிரியர் 2 வயது மகனுடன் தற்கொலை.
கனடாவின் ஒட்டாவாவைச் சேர்ந்த பள்ளி பேராசிரியர் ஜேசன் லீஸ் 40, அவுஸ்திரேலியாவில் பிரிஸ்பேன் நகரில் தனது 2 வயது மகனுடன் பாலத்திலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.கனடா தலைநகர் ஒட்டாவாவைச் சேர்ந்த ஜேசன் லீஸ் அங்குள்ள ரிட்ஜ்மாண்ட் உயர்நிலைப்பள்ளியில் 1990ல் படித்தவர் என்றும் கார்லெட்டன் பல்கலைக்கழகத்தில் கணிதம் மற்றும் உளவியலில் இளங்களைப் பட்டம் பெற்றவர் என்றும் அவுஸ்திரேலியா ஊடகங்கள் தெரிவித்துள்ளது.
மேலும் ஜேசன் லீஸ், அவுஸ்திரேலியாவின் தெற்கு வீனஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் கல்வித்துறையில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். கடந்த 2007 முதல் ஏங்கிலிக்கன் சர்ச் கிராமர் பள்ளிக்கூடத்தில் ஆசிரியராகப் பணியாற்றி வந்த இவர், 2009 ஆம் ஆண்டு முதல் துணை முதல்வராக பணியாற்றியுள்ளார்.இந்நிலையில் ஜேசன் லீஸ் தன் மிதிவண்டியில் அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் தனது 2வயது மகனை பாலத்திலிருந்து தூக்கி எறிந்து விட்டு தானும் விழுந்து தற்கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து ஜேசன் லீஸ்ஸின் பள்ளி தலைமையாசிரியர் ஜோனாத்தென் ஹென்ஸ்மன், ஜேசன் லீஸ் மிகுந்த அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய ஆசிரியர் என்று தெரிவித்துள்ளார்.ஜேசன் லீஸின் தற்கொலை குறித்து அவுஸ்திரேலியா பொலிஸ் விசாரணை நடத்தி வருகிறது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF