Saturday, February 18, 2012

NEWS OF THE DAY.

மக்களுக்காக நடத்திய போராட்டத்தின் மீது அரசாங்கம் அடாவடித்தனம்: திஸ்ஸ அத்தநாயக்க.
மக்களுக்காக நடத்திய போராட்டத்தின் மீது அரசாங்கம் தாக்குதல் நடத்தியதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். இத்தாக்குதல் சம்பவம் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டும்.
மக்களின் அவலங்களை புரிந்து கொள்ள முடியாத அரசாங்கத்திற்கு போராட்டங்களின் மூலமே அவற்றை தெளிவுபடுத்த முடியும். மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்படும் வரையில் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தப்படும் என திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.இதேவேளை, எதிர்க்கட்சிகளினால் நேற்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் மிகவும் அமைதியான முறையில் நடத்தப்பட்டது. அதிகாரத்தைப் பயன்படுத்தி அரசாங்கம் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தியது.
எரிபொருளுக்கான விலை மிகவும் அநீதியான முறையில் உயர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்றைய ஆர்ப்பாட்டத்தில் 15 பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயம்.
எதிர்கட்சியினால் கொழும்பு புறக்கோட்டையில் நடத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக சிரேஷ்ட அதிகாரிகள் மூவர் உள்ளிட்ட 15 பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்துள்ளனர்.இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இரண்டு பேரும் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண குறிப்பிட்டார்.
முன்னதாக பொலிஸாரின் கண்ணீர்ப்புகைத் தாக்குதலின்போது ஐக்கிய தேசியக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்த்தன தலையில் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடையும்!- பொருளியல் ஆய்வாளர்கள் தெரிவிப்பு.
இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடையக் கூடுமென பொருளியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.ஒரு அமெரிக்க டொலரைக் கொள்வனவு செய்ய 125 முதல் 130 இலங்கை ரூபாய் தேவைப்படலாம் என சிரேஷ்ட பொருளியல் ஆய்வாளர் டாக்டர் நிமால் சந்தரட்ன தெரிவித்துள்ளார்.ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி நாட்டின் ஏற்றுமதி இறக்குமதி வர்த்த கங்களை பாரியளவில் பாதிக்கும் என சுட்டிக்காட்டியுள்ளார்.குறிப்பாக இறக்குமதியாளர்கள் பெருமளவு பணத்தை செலவிட்டு இறக்குமதி செய்ய நேரிடும் என தெரிவித்துள்ளனர்.
ரூபாயின் பெறுமதியை பாதுகாத்துக் கொள்வதற்காக இலங்கை மத்திய வங்கி கடந்த யூலை மாதம் முதல் இது வரையில் 2.7 பில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை ரூபாயின் பெறுமதி இறக்கம் தொடர்பான தீர்மானத்திற்கு ஆளும் கட்சி அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.ரூபாயின் பெறுமதியிறக்கமே நாட்டின் பொருட்கள் சேவைகள் விலை கூடியமைக்கான பிரதான ஏதுவென அவர் குறிப்பிட்டுள்ளார்.
தங்க பிஸ்கட் வியாபாரிகள் இருவரை யாழ்.நகரில் கைது செய்த இரகசிய பொலிஸார்.
தங்க பிஸ்கட்டுக்கள் விற்பனை செய்த வியாபாரிகள் இருவரை நேற்று யாழ்.நகரில் வைத்து இரகசியப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இதனையடுத்து நகரிலிருந்த சில நகை வியாபார நிலையங்கள் மூடப்பட்டிருந்தது.யாழ்.குடநாட்டில் பவுண் பிஸ்கட்டுக்களை கொள்வனவு செய்து கொள்வதற்கு உரிய வசதிகளைச் செய்து கொடுக்காத அரசாங்கம், வெளிநாட்டிலிருந்து வருவோரிடம் பவுண் பிஸ்கட்டுக்களை வாங்கும் நகை வியாபரிகளை குறிவைத்துச் செயற்படுகின்றது. என யாழ். நகை வியாபாரிகள் சிலர் தெரிவிக்கின்றனர்.
பவுண் பிஸ்கட்டுக்களை விற்பனை செய்த வியாபாரிகள் இருவர் நேற்று யாழ்.நகரில் வைத்து இரகசியப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இதனையடுத்து நகரிலிருந்த சில நகை வியாபார நிலையங்கள் மூடப்பட்டிருந்தது.இந்த நிலையில் விடயம் குறித்து வர்த்தகர்கள் சிலருடன் தொடர்பு கொண்டுகேட்டபோதே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள் குறிப்பிடுகையில், பவுண் பிஸ்கட்டுக்களை விற்பனை செய்த குற்றத்திற்காக இரு வியாபாரிகள் யாழ்.நகரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பவுண் பிஸ்க்கட்டுக்களை விற்பனை செய்யக் கூடாது என்ற சட்டமொன்று உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் மத்திய வங்கிக் கூடாக பவுண் பிஸ்கட்டுக்கள் ஏனைய வங்கிகளுக்கு வழங்கப்பட்டு அவற்றிலிருந்து வியாபாரிகள் வாங்கிக் கொள்ளவேண்டும்.ஆனால் இந்த நடைமுறை யாழ்ப்பாணத்தில் இல்லை, இதனை இதுவரை ஏற்படுத்திக் கொடுக்க யாரும் முயற்சிக்கவும் இல்லை. இந்த நிலையில் நகை செய்வதற்கான பவுணை வெளிநாடுகளிலிருந்து வருபவர்களிடமும், வெளிமாவட்ட வியாபாரிகளிடமுமே கொள்வனவு செய்து நகை செய்யப்படுகின்றது.
இந்த நிலையில் திடீரென வந்த இரகசியப் பொலிஸார் வர்த்தகர்கள் இருவரை கைது செய்து விசாரணைகளுக்காக கொண்டு சென்றிருக்கின்றனர். எனவே இது முறையற்றதொரு செயற்பாடாகும்,அரசாங்கம் எமக்கான வசதியை இங்கு செய்து தரப்படாமையினாலேயே இந்த தவறு நடந்ததாகவும் நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிரதமருக்காக காத்திருக்காது கொழும்பு திரும்பிய ஹெலிகொப்டர்.
அனுராதபுரத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றிற்காக பிரதமர் டி.எம். ஜயரட்ன ஹெலிகொப்டரில் பயணம் செய்திருந்தார். எனினும், பிரதமருக்காக காத்திருக்காது குறித்த ஹெலிகொப்டர் கொழும்பு திரும்பியதாகத் தெரிவிக்கப்படுகிறது.பிரதமரின் பாதுகாப்புப் பிரிவினரிடம் அறிவிக்காமல் திடீரென குறித்த ஹெலிகொப்டர் கொழும்பு திரும்பியுள்ளது. இதனால் பிரதமர் டி.எம். ஜயரட்ன அசௌகரியங்களை எதிர்நோக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பிலிருந்து கிடைக்கப் பெற்ற அவசர அழைப்பை அடுத்து இவ்வாறு ஹெலிகொப்டர் அவசரமாக திரும்பியுள்ளது. குறித்த நிகழ்வின் பின்னர் ஹெலிகொப்டர் மூலம் கம்பளைக்கு செல்லவிருப்பதாக பிரதமர் ஏற்கனவே விமானப்படையினருக்கு அறிவித்திருந்தார்.எனினும், பிரதமரின் அறிவுறுத்தல்களை உதாசீனம் செய்து, குறித்த விமானி ஹெலிகொப்டரை கொழும்புக்கு செலுத்தியுள்ளார். இதனால், பிரதமர் தரை வழியாக கம்பளைக்கு சென்றார் என இலங்கையின் முக்கிய சிங்கள பத்திரிகைகளில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.இதேவேளை அந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது,
சில சக்திகள் சர்வதேச சமூகத்துடன் இணைந்து நாட்டுக்கு எதிராக செயற்படுகின்றனசில சக்திகள் சர்வதேச சமூகத்துடன் இணைந்து நாட்டுக்கு எதிராக செயற்பட்டு வருவதாக பிரதமர் டி.எம். ஜயரட்ன தெரிவித்துள்ளார்.மீண்டும் இந்த நாட்டு ஆக்கிரமிப்பு ஏற்படுவதனை சிலர் விரும்புகின்றனர். நாட்டின் சுயாதீனத் தன்மையையும், கலாசாரத்தையும் பாதுகாக்க வேண்டியது அனைவரினதும் கடமையாகும். எனினும், சிலர் சர்வதேச சமூகத்துடன் இணைந்து நாட்டுக்கு எதிராக சூழ்ச்சி செய்து வருகின்றனர் என பிரதமர் தெரிவித்துள்ளார்.
தலிபான் பயங்கவரவாதிகளை கொண்டு வாருங்கள்: பாகிஸ்தானிடம் ஹர்சாய் ஆவேசம்.
தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பாகிஸ்தான் தன் நாட்டில் பதுங்கியுள்ள தீவிரவாதிகளை கொண்டு வரவேண்டும் என்று ஆப்கான் ஜனாதிபதி ஹர்சாய் கோபமாக கூறியதாகவும், அதனால் பாகிஸ்தான் அதிர்ந்து போயுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.ஆப்கானில் தலிபானுக்கு எதிரான நேட்டோ படைகளின் தாக்குதல் பெரிய அளவில் பலனைத் தராத நிலையில் தலிபானுடன் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது தான் சிறந்தது என ஆப்கான், அமெரிக்க நாடுகள் முடிவெடுத்துள்ளன. இதற்கு பாகிஸ்தான் ஒத்துழைப்பும் அவசியம் என அவை கூறி வருகின்றன.
ஆப்கானின் முன்னேற்றம் குறித்து நேற்று முன்தினம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில், ஆப்கான், பாகிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளின் முத்தரப்பு சந்திப்பு தொடங்கியது.இதில் முதல் நாள் பேசிய ஆப்கான் ஜனாதிபதி ஹமீத் கர்சாய், ஆப்கான், தலிபான் மற்றும் அமெரிக்கா இடையே முறையான தகவல் தொடர்பு பேணப்பட்டு வருவதாகவும், பேச்சுவார்த்தைக்கு வர தலிபான் விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார்.
ஆனால் இதற்கு தலிபான் தரப்பு நேற்று மறுப்பு தெரிவித்தது. அதே நேரம் பேச்சு நடப்பதாக ஆப்கான் ஒப்புக் கொண்டிருப்பதை அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சர் லியோன் பனெட்டா வரவேற்றுள்ளார்.ஆப்கானுக்குப் பதிலாக, அமெரிக்கா தலிபானுடன் பேச்சு நடத்த முடியாது என்பதையும் கர்சாய் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.இந்நிலையில் கர்சாய், பாகிஸ்தான் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஹினா ரப்பானி கர் ஆகிய இருவரின் தலைமையிலான உயர்மட்டக் குழுக்களிடையே நேற்று பேச்சு நடந்தது.
தலிபான் தலைவர் முல்லா முகமது ஒமர் உட்பட பல்வேறு முக்கிய தலிபான் பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் ஒளிந்திருப்பதாக ஆப்கான் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. ஆனால் பாகிஸ்தான் அதை மறுத்து வருகிறது.இதைச் சுட்டிக் காட்டிப் பேசிய கர்சாய், பாகிஸ்தானில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் பெண் குழந்தைகளைப் படிக்க விடாமல் நீங்கள் தடுப்பீர்களா? பாகிஸ்தானில் உள்ள தலிபான் அமைப்பினரை பேச்சில் கலந்து கொள்ள வைக்க முயற்சி மேற்கொள்ளுங்கள் என கடும் கோபத்துடன் பேசினார்.
அவரது ஆவேசம் கண்டு பாகிஸ்தான் தரப்பு அதிர்ச்சியில் ஆழ்ந்தது. இதுகுறித்து பின்னர் கர் அளித்த பேட்டியில், உங்களுக்கு(ஆப்கான்) என்ன தேவையோ அதற்கான விளக்கத்தைப் பெறலாம் எனக் கூறினோம்.நல்லிணக்க வாழ்விற்குத் தடையாக பாகிஸ்தான் இருக்காது. இந்தப் பேச்சு சற்றே காரசாரமாகவும் தீவிரமாகவும் இருந்தது. பேச்சில் கலந்து கொள்ள வைக்க எங்களிடம் முல்லா ஒமர் இல்லை. அவர் பாகிஸ்தானில் இருப்பதாகக் கூறப்படுவது கேலிக் கூத்தானது என்றார்.
மீண்டும் பயங்கரவாத தாக்குதல்கள் எச்சரிக்கை: பதட்டத்தில் தாய்லாந்து.
தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளோடு தொடர்புடைய ஈரான் நாட்டைச் சேர்ந்த மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்நிலையில் மேலும் இருவரைத் தேடும் பணியில் அந்நாட்டு காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
பாங்காக் நகரில் கடந்த 14ம் திகதி மூன்று குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. இதில் ஈரான் நாட்டினர் மூவர் சம்பந்தப்பட்டிருந்தனர். ஒருவர் சம்பவ இடத்தில் குண்டு வீச்சில் கால்களை இழந்த நிலையில் கைதானார்.மற்றொருவர் சுவர்ண பூமி விமான நிலையத்தில் கைதானார். மலேசியாவிற்கு தப்பிச் சென்ற மூன்றாம் நபர் அங்கிருந்து ஈரான் செல்ல முயலும் போது கைதானார். அவரை தாய்லாந்திற்கு கொண்டு வரும் முயற்சியில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையில் தாய்லாந்தின் ஆறு சர்வதேச விமான நிலையங்கள் மீண்டும் பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஆளாவதற்கு வாய்ப்பிருப்பதாக வந்த தகவல்களை அடுத்து அவற்றின் பாதுகாப்பு பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் கைதான மூவரைத் தவிர மேலும் இருவரைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இதுகுறித்து பாங்காக் நகர பொலிஸ் உயர் அதிகாரி வினய் தாங்சன் கூறுகையில்,அந்த இருவரில் 52 வயதான நிக்காஹ்பர்த் ஜாவேத் என்ற ஈரானிய நபர் தான் மூவருக்கும் வெடிபொருள் பயிற்சி கொடுத்திருக்க வேண்டும். சி.சி.டி.வி கமெராவில் மூவரும் தங்கியிருந்த வீட்டில் இருந்து ஜாவேத் வெளியேறும் காட்சி பதிவாகியுள்ளது என்றார்.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன்: சர்கோசி.
பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடுவேன் என்று தற்போதைய ஜனாதிபதி நிகோலஸ் சர்கோசி அறிவித்துள்ளார்.பிரான்சில் வரும் ஏப்ரல் மாதம் 22ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது. அத்தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி நிகோலஸ் சர்கோசி மீண்டும் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதிகாரப்பூர்வமாக இதுகுறித்து அவர் எந்த முடிவும் அறிவிக்கவில்லை.
இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடுவேன் என்று தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் சர்கோசி பகிரங்கமாக அறிவித்தார்.இவரை எதிர்த்து சோஷலிச கட்சி வேட்பாளர் பிரான்கோயிஸ் ஹலான்டே போட்டியிடுகிறார். இவர்கள் இருவருக்கும் இடையில் கடும் போட்டி இருக்கும் என்று தெரிகிறது.அரசு பணத்தை வீணாக சர்கோசி செலவிடுகிறார் என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. கருத்துக் கணிப்புகளும் பிரான்கோயிசுக்கு சாதகமாகவே வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதனால் சர்கோசி வெற்றி பெறுவது கடினம் தான் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜப்பான் அரசருக்கு இருதய அறுவை சிகிச்சை.
ஜப்பான் அரசர் அகி ஹிட்டோவுக்கு டோக்கியோவில் உள்ள மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.‌ஐந்து மணி நேரம் நடைபெற்ற இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாக அரண்மனை செய்தி குறிப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும் இரண்ட வார காலம் மருத்துவமனையில் தொடர் சிகிச்சைக்கு பின்னர் அரண்மனைக்கு திரும்புவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.78 வயதாகும் அரசருக்கு கடந்த சனிக்கிழமை ஆஞ்சியோகிராம் ஆபரேஷன் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
ஐ.நா தீர்மானத்தின் எதிரொலி: நிமிடத்திற்கு 4 ராக்கெட்டுகளை வீசி தாக்குதல்.
சிரியா ஜனாதிபதிக்கு எதிராக ஐ.நா சபையில் தீர்மானம் நிறைவேற்றிய நிலையில் அந்நாட்டு பொதுமக்கள் மீது நிமிடத்திற்கு 4 ராக்கெட்டுகளை வீசி இராணுவம் கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது.சிரியா ஜனாதிபதி பசீர் அல் அசாத் பதவியிலிருந்து விலக கோரி கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் கலவரம் நடந்து வருகிறது. இந்த தாக்குதலில் இதுவரை 7000க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
எனவே பொதுமக்களுக்கு எதிரான தாக்குதலை முடிவுக்கு கொண்டு வர அரபு நாடுகள் பல்வேறு சமரச திட்டங்களை கொண்டு வந்தன. ஜனாதிபதி அசாத்தை பதவி நீக்கம் செய்து அங்கு விரைவில் தேர்தல் நடத்த வலியுறுத்தப்பட்டது. ஆனால் ரஷியா, சீனா ஒத்துழைப்புடன் இவை முறியடிக்கப்பட்டன.
இதனையடுத்து சிரியாவில் மனித உரிமைகள் மீறுதல் போக்கு மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடைபெறுவதை கண்டிக்கும் தீர்மானம் ஐ.நா பொதுசபையில் கொண்டு வரப்பட்டது.பின்னர் அது வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. மொத்தம் உள்ள 193 நாட்டு பிரதிநிதிகளில் தீர்மானத்தை ஆதரித்து 137 நாடுகள் வாக்களித்தன. 17 நாடுகள் கலந்து கொள்ளவில்லை. தீர்மானத்துக்கு எதிராக சீனா, ரஷியா, ஈரான், வெனிசூலா, வடகொரியா உள்பட 12 நாடுகள் வாக்களித்தன.
சிரியாவுக்கு எதிராக ஐ.நா சபையில் தீர்மானம் நிறைவேற்றிய நிலையிலும் இராணுவ தாக்குதல் நிறுத்தப்படவில்லை. மாறாக நேற்று சிரியா இராணுவத்தினர் கடுமையான தாக்குதலை தொடுத்தனர்.ஜனாதிபதி அசாத்துக்கு எதிர்ப்பு நிலவும் ஹோம்ஸ் மாகாணத்தில் பொதுமக்கள் மீது இராணுவத்தினர் கண்மூடித்தனமாக ராக்கெட்டு குண்டுகளை வீசினார்கள். அங்குள்ள கால்டியா, பாய்யாடா ஆகிய இடங்களில் உள்ள வீடுகள் மீது குண்டுகள் விழுந்தன. இதுவரையில் இல்லாத வகையில் இராணுவத்தினர் தாக்குவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
இது பற்றி சிரியா கிளர்ச்சி இயக்க தளபதி ஹாதி அப்துல்லா கூறுகையில், கடந்த 14 நாட்களில் இல்லாத அளவில் கலவரம் வெடித்துள்ளது. இதுவரையில் இப்படியொரு தாக்குதலை பார்க்கவில்லை. நிமிடத்துக்கு 4 ராக்கெட்டுகள் வீசப்படுகிறது என்றார்.மேலும் பாபா அம்ரி, இன்ஷாத் ஆகிய மாவட்டங்களிலும் இராணுவத்தினர் தாக்குதல் நடத்துவதாக அங்கு வசிக்கும் மக்கள் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளனர்.
இத்துடன் ஹோம்ஸ் நகர் மீது வழக்கத்துக்கு மாறாக ஏராளமான போர் விமானங்களும், உளவு விமானங்களும் பறந்தபடி இருந்தன என்று ஒருவர் தெரிவித்தார். இராணுவத்தின் இந்த தாக்குதலில் எவ்வளவு பேர் உயிர் இழந்தனர் என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை.நேற்று முன்தினம் ஹோம்ஸ் நகரில் நடந்த தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் உள்பட மொத்தம் 41 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவுக்கு போட்டியாக செயற்கைகோளை அனுப்ப சீனா முடிவு.
சீனா எதிர்வரும் ஜுன் அல்லது ஆகஸ்டு மாதத்தில் வான்வெளி வீரருடன் புதிய செயற்கைகோளை அனுப்ப திட்டமிட்டுள்ளது.ஏற்கனவே சீனா கடந்த 2003ம் ஆண்டில் இருந்து 3 தடவை வான்வெளி வீரர்களுடன் செயற்கைகோளை அனுப்பியுள்ளது.
இந்த செயற்கைகோளை செலுத்தியவுடன் இதற்கு அடுத்த கட்டமாக வான்வெளியில் ஆய்வு மையத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக 3 வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.எதிர்வரும் 2020ம் ஆண்டில் வின்வெளியில் முழுமையாக இயங்கும் ஆய்வு கூடம் ஒன்றை அமைக்கவும் திட்டமிட்டுள்ளது. இந்த ஆய்வு மையம் அமைக்கப்பட்டால் அமெரிக்கா, ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக விண்வெளி ஆராய்ச்சியில் சீனா மிகச்சிறந்த ஒரு நாடாக மாறி விடும் என்பதில் சந்தேகமில்லை.
பொது இடங்களில் சிகரெட்டுக்கு தடை: வீட்டுக்குள் புகை பிடிப்பது அதிகரிப்பு.
புகை, மது கெடுதல் என்று தெரிந்தாலும் பிரசாரம் செய்யப்பட்டாலும் விற்பனை எவ்வித குறைவும் இல்லாமல் தான் நடைபெறுகின்றது.பொது இடங்களில் புகை பிடிக்க சில நாடுகளில் தடை உள்ளது. ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் இந்த தடையால் மக்களிடம் புகை பழக்கம் குறைந்துள்ளதா என்று சர்வதேச புகையிலை கட்டுப்பாடு வாரியம் சமீபத்தில் ஆய்வு நடத்தியது.
தடை விதிக்கப்படும் முன்பு கருத்துக் கணிப்புகளில் கிடைத்த விவரங்களும் ஆராயப்பட்டன. இதில் தெரியவந்த தகவல்கள் பற்றி வாரிய அதிகாரிகள் கூறியதாவது: பொது இடங்களில் புகைபிடிக்க தடை விதிப்பது நேர் மற்றும் எதிர்மறை விளைவுகளை சம அளவில் ஏற்படுத்துகிறது.பொது இடங்களில் புகை பிடிக்க தடை இருப்பதால், வீடுகளில் புகை பிடிப்பது அதிகரித்திருக்கிறதா என்றும் ஆய்வு நடத்தப்பட்டது. தடைக்கு பிறகு வீட்டில் புகை பிடிப்போரின் எண்ணிக்கை அயர்லாந்தில் 25 சதவீதமும், பிரான்சில் 17 சதவீதமும், ஜேர்மனியில் 38 சதவீதமும், நெதர்லாந்தில் 28 சதவீதமும் அதிகரித்துள்ளது.
இது இங்கிலாந்தில் 22 சதவீதமாக உள்ளது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இது குறைவு. பொது இடத்தில் புகை பிடிக்க முடியாது என்பதால், வீட்டில் அதிகம் சிகரெட் பிடிக்கின்றனர். இதனால் வீட்டில் இருக்கும் குழந்தைகள், பெரியவர்கள், பெண்கள் ஆகியோர் சிகரெட் புகையை சுவாசிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.அதே நேரம் பொது இடத்தில் புகை பிடிக்க தடை விதிக்கப்படுவதால், இது தீய பழக்கம்தான் என்ற எண்ணம் பலருக்கு ஏற்படுகிறது. விட முடியாவிட்டாலும் குறைத்துக் கொள்ளவாவது வேண்டும் என்ற முடிவுக்கு பலர் வருகிறார்கள். பொது இடம் போலவே வீட்டிலும் பலர் சிகரெட் எண்ணிக்கையை குறைக்கின்றனர்.
பிரான்ஸ்- பிரிட்டனின் புதிய அணுசக்தி ஒப்பந்தம்.
பிரிட்டனில் தொடங்கப்படவுள்ள புதிய அணுசக்தி நிறுவனத்தினால் பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என பிரிட்டன் பிரதமர் கமரூன் மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார்.பிரான்ஸ் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசியை, பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன் சந்தித்து புதிய அணுசக்தி தொடங்குவது தொடர்பான ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.இந்த ஒப்பந்தத்தால் 1500க்கும் அதிகமானவர்கள் வேலைவாய்ப்புக்களை பெறுவார்கள் என்று கமரூன் மகிழ்ச்சியோடு தெரிவித்தார்.
மாபெரும் சக்தி வாய்ந்த இரண்டு நாடுகள் இணைந்து தன் திறமையையும், தொழில்நுட்பத்தையும் ஒரு சேரப் பயன்படுத்துவதால் தொழிற்பங்கு, அணுசக்தி பாதுகாப்பு, புதிய வேலைவாய்ப்புகள் போன்றவை பெருகும் என்று கமரூன் தெரிவித்தார்.EPR Reactor மேம்பாட்டில் முன்னோடியாகத் திகழ்வது அரெவா என்ற பிரெஞ்சு அணுசக்தி நிலையம் ஆகும். இப்போது பிரிட்டனின் ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனம் தனது பங்காக 400 மில்லியன் பவுண்டை கொடுத்து தனது நாட்டின் முதல் EPR Reactor அணுசத்தி நிலையத்தை உருவாக்க இவ்வரசுடன் ஒத்துழைத்து வருகின்றது.
இந்த அணு மின் நிலையம் இங்கிலாந்தின் தென்பகுதியில் ஹிங்க்லி பாயிண்ட்டில் தொடங்கப்படவுள்ளது. பிரிட்டனில் இன்னும் பல இடங்களிலும் இத்தகைய அணு மின் நிலையங்களை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது.ஹிங்க்கில் பாயிண்ட்டில் தொடங்கப்படும் அணுசக்தி நிலையத்திற்கான ஆரம்பகட்டப் பணிகளுக்கென்று கேர்பாம் நுட்டால் நிறுவனம் 100 மில்லியன் பவுண்டுள் மதிப்பிலான ஒப்பந்தத்தில் பிரான்சின் ஈடி எஃப் நிறுவனத்துடன் கையெழுத்திட்டது.
இதில் ஈடி எஃப் தனது பங்காக 15 மில்லியன் பவுண்டுகள் முதலீடு செய்து அருகிலேயே ஒரு பயிற்சி மையத்தையும் தொடங்குகிறது. இதுகுறித்து கமரூன், இந்த இனிய ஆரம்பத்தால் விரைவில் சுமார் 30,000 பேர் வேலைவாய்ப்புக்களைப் பெறுவார்கள் என்று கூறியுள்ளார்.பிரான்ஸ் நாட்டின் 75% மின்தேவையை அணுசக்தி நிலையங்களே நிறைவு செய்கின்றன. கடந்தாண்டில் ஜரோப்பாவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை சமாளிக்க பிரிட்டனும், பிரான்சும் அணுசக்தியை ஆதரித்தன.
ஆனால் ஜேர்மனி இவ்விரு நாடுகளுடன் முரண்பட்டு நிற்கின்றது. ஜப்பானில் ஃபுகுஷிமா நகரத்தில் ஏற்பட்ட அணுசக்தி பேரழிவுக்குப் பின்பு ஜேர்மனி தனது அணுசக்தி நிலையங்களை மூடிவிட தீர்மானித்துள்ளது.பிரான்ஸின் ஜனாதிபதி தேர்தலில் சர்கோசியை எதிர்த்து போட்டியிடும் ஹோலாண்ட, அணுசக்தியை எதிர்த்துப் பிரசாரம் செய்து வருகிறார். ஆனால் சர்கோசி அதனை ஆதரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிராங்க்பர்ட் விமானநிலையத்தில் நீடிக்கும் போராட்டம்: 300 விமானங்கள் ரத்து.
ஜேர்மனியில் தொடரும் விமானநிலையப் போராட்டத்தின் காரணமாக 300க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.ஜேர்மனியில் பிராங்க்பர்ட் விமானநிலையத்தில் GDF என்ற தொழிற்சங்கத்தைச் சேர்ந்த பணியாளர்களின் வேலைநிறுத்தம் தொடர்ந்து நீடித்து வருகிறது.
இதனால் விமானங்கள் தரையிரங்கவும், மேலே பறப்பதிலும் பல சிரமமும் காலதாமதமும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பறக்க வேண்டிய ஆயிரக்கணக்கான விமானங்களில் 300 விமானங்கள் நேற்று ரத்து செய்யப்பட்டது.சம்பள உயர்வு மற்றும் பணிச் சூழ்நிலை மேம்பாடு கோரி சுமார் 200 பணியாளர்கள் இவ்வேலைநிறுத்தப் போராட்டத்தில் நேற்று முன்தினம் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தினால் விமான நிலைய நடவடிக்கைகள் முடங்கிவிட்டன. இதனால் அந்நாட்டு விமான நிறுவனங்களான லுப்தான்சாவும் ஏர்பெல்ஸினும் தனது பயணிகளுக்கு ரயில் பயண ஏற்பாட்டை செய்து கொடுத்துள்ளது.மீண்டும் நேற்று காலை 8 முதல் 10 மணி வரை இப்போராட்டம் தொடர்ந்தது. விமான நிலையத்தை நடத்தி வரும் பிராப்போட் நிறுவனமும், வெர்டி என்ற தொழிற்சங்கமும் இப்போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன் மாற்றுப் பணியாளர்களைத் தயார் செய்துவருகிறது.
பிராப்போர்ட்டின் நிர்வாகக்குழுத் தலைவரான பீட்டர் ஷ்மித் கூறுகையில், 50 சதவீதத்துக்கும் மேலாக இப்பிரச்சினையைக் கையாள தேவையான பணியாளர்களை வைத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் விமான நிலையத்தின் செய்தித் தொடர்பாளரான மைக் ஷ்வைட்சர், இவ்விமானப் பயணத்தின் பாதுகாப்பைத் தாம் உறுதிப்படுத்துவதாகத் தெரிவித்தார்.பயணிகள் நிறுவனத்துடன் நேரடியாகத் தொடர்புகொண்டு தகவல்களைப் பெறுமாறும் மைக் ஷ்வைட்சர் பயணிகளுக்கு அறிவுறுத்தினார்.சில பயணிகள் இப்போராட்டத்திற்காக அனுதாபம் தெரிவித்து தங்கள் பயணத்தை ரத்து செய்தனர்.
இதுகுறித்து பிடிஐ தொழில் குழுமத்தைச் சேர்ந்த பீட்டெர் ஷ்வீர், இந்த வேலைநிறுத்தத்தால் மொத்தப் பொருளாதாரமும் பாதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.தேசிய ரயில்வேயைச் சேர்ந்த டியூஷேபான், கூடுதல் ரயில்களையும், பணியாளர்களையும் ஒதுக்கீடு செய்துள்ளதால் தான் இந்தப் பிரச்சினையை ஓரளவு சமாளிக்க முடியும் என்று கூறியுள்ளார்.
இஸ்ரேலியரை நிச்சயம் கொல்வோம்: ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர் ஆவேசம்.
கடந்த சில நாட்களுக்கு முன் இந்தியாவின் தலைநகர் டெல்லியிலும், தாய்லாந்தின் தலைநகர் பாங்காங்கிலும் நடந்த தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்களுக்கு ஈரான் தான் காரணம் என இஸ்ரேல் குற்றம்சாட்டி வருகிறது.மேலும் லெபனான் ஹிஸ்புல்லா தீவிரவாத இயக்கம் தான் காரணம் என்றும் இஸ்ரேல் குற்றம் சாட்டி வருகிறது. இதை ஹிஸ்புல் தலைவர் ஹசன் நஸ்ரல்லா மறுத்துள்ளார்.
ஹிஸ்புல் கமாண்டர் இமாத் முக்னியே, சிரியாவில் 2008ம் ஆண்டு காரில் சென்ற போது வெடிகுண்டு தாக்குதலில் பலியானார். அதன் 4ம் ஆண்டு நினைவு ஊர்வலம் பெய்ரூட்டில் நேற்று நடந்தது.இதில் பங்கேற்ற ஹிஸ்புல் தலைவர் ஹாசன் நஸ்ரல்லா பேசுகையில், இஸ்ரேலுக்கு எதிராக நாங்கள் தாக்குதல் நடத்தவில்லை என்பதை உறுதியாக கூறுகிறேன்.எனினும் சிரியாவில் 2008ம் ஆண்டு எங்கள் தலைவர் இமாத் முக்னியே மர்மமான முறையில் கொல்லப்பட்டதற்கு பழிக்கு பழி வாங்குவோம். அவரை கொன்ற இஸ்ரேலியர்களை கொல்வோம் என்று ஆவேசமாக கூறினார்.
அமெரிக்க நாடாளுமன்றத்தை தகர்க்க சதி.
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நாடாளுமன்றத்தை தகர்க்க சதித் திட்டம் தீட்டிய மர்ம ஆசாமி கைது செய்யப்பட்டார்.மொராக்கோவை சேர்ந்தவர் அமின் எல் கலீப்பி(29). இவர் வாஷிங்டன் நாடாளுமன்றத்தை தகர்க்க சதித்திட்டம் தீட்டி மனித வெடிகுண்டாக அங்கு வந்தார். சரியான நேரத்தில் இவரை காவல்துறையினர் கைது செய்ததால் பெரும் விபத்து தகர்க்கப்பட்டது.
இவர் அமெரிக்காவின் விர்ஜினியா மாநிலத்தில் ஆர்லிங்டன் பகுதியில் தீவிரவாதிகளுடன் சேர்ந்து பல சதி திட்டங்களை தீட்டியதும், பல இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.இதுகுறித்து இவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கடந்த ஓராண்டாக இவரது நடமாட்டத்தை காவல்துறையினர் கண்காணித்து வந்தனர். இந்நிலையில் வாஷிங்டன் கேபிட்டால் ஹில்ஸ் பகுதியில் நாடாளுமன்ற கட்டிடத்தை தகர்க்க அமின் சதி திட்டம் தீட்டியது நேற்று கண்டுபிடிக்கப்பட்டது.
உடலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை கட்டிக் கொண்டு கட்டிடத்தின் அருகில் சுற்றிய போது, எப்.பி.ஐ அதிகாரிகளும் காவல்துறையினரும் அவரை சுற்றிவளைத்து கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.இதுகுறித்து எப்.பி.ஐ உதவி இயக்குனர் மெக்ஜன்கின் கூறுகையில், அமினுக்கும் அல்கொய்தா தீவிரவாதி இயக்கத்துக்கும் தொடர்பு இருக்கும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து தீவிர விசாரணை நடக்கிறது என்றார்.
பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு: 21 பேர் பலி, 45 பேர் படுகாயம்.
பாகிஸ்தானில் மசூதிக்கு வெளியே தற்கொலைப் படையை சேர்ந்த நபர் ஒருவர் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 21 பேர் பலியாகினர். மேலும் 45 பேர் காயமடைந்தனர்.பாகிஸ்தானின் வடமேற்கில் குர்ராம் என்ற மலைப்பிரதேசம் உள்ளது. அங்குள்ள பராஷினர் என்ற மக்கள் அதிகம் கூடும் சந்தை பகுதியின் அருகே மசூதி ஒன்று உள்ளது.
வெள்ளிக்கிழமை தொழுகையை முடித்து மசூதியில் இருந்து அனைவரும் வெளியே வந்து கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த தற்கொலைப் படையை சேர்ந்த மர்ம நபர், உடலில் சுமந்து வந்த வெடிகுண்டை வெடிக்க செய்தார்.இதில் விறுவிறுப்பான சந்தை பகுதியி்ல் இருந்த வாகனங்களும், கடைப் பகுதிகளும் சேதமடைந்தன. 21 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 45 பேர் படுகாயம் அடைந்தனர்.
காயமடைந்தவர்களில் பலரது நிலை பரிதாபமாக இருப்பதால் பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது.காயமடைந்தவர்களை அப்பகுதியினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இத்தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்புகளும் பொறுப்பேற்கவில்லை.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF