Monday, February 13, 2012

NEWS OF THE DAY.

தனியார் போக்குவரத்து பேரூந்துகள் மீது தாக்குதல் மேற்கொண்ட 49 பேர் கைது.
எரிபொருள் விலையேற்றத்தினை ஆட்சேபித்து இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கம் நாடளாவிய ரீதியாக போரட்டம் முன்னெடுத்துள்ளது. இதன் காரணமாக நாட்டின் பல பாகங்களில் போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.இந்த நிலையில் இவ்வாறு தனியார் போக்குவரத்து பேரூந்துகள் சேவை பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ள வேளையில், சேவையில் ஈடுப்பட்டிருந்த ஏனைய பேரூந்துகள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இவ்வாறு இன்றைய தினம் சேவையில் ஈடுப்பட்ட பேரூந்துகள் மீது தாக்குதல் மேற்கொண்ட 49 பேர் கைது செய்யப்பட்டுள்ளர்.இவ்வாறான சம்பவங்கள் பாணந்துறை, நாரஹென்பிட்டிய உள்ளிட்ட பல பகுதிகளில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் மேற்கொண்டுள்ள இந்த போராட்டம் காரணமாக பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பயணிகள் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையின் மீது சர்வதேச அழுத்தங்கள் அதிகரிக்கின்றன?
அமெரிக்க அதிகாரிகள் இலங்கையின் பொறுப்புக்கூறல் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தும் நிலையில், ஐரோப்பிய நாடாளுமன்றம் இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை பொறிமுறையை ஸ்தாபிக்க வேண்டும் என்று கோரியுள்ளது.இது தொடர்பான தீர்மானம் ஒன்று ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதன்படி, இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் அமைக்கப்பட்ட நிபுணர்கள் குழு பரிந்துரைத்த பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகளிடம் கோரப்பட்டுள்ளது.கடந்த 9 ஆம் திகதியன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணையின்படி மியன்மார், ஈரான், சிரியா மற்றும் இலங்கை ஆகியவை தொடர்பில் விவாதங்கள் நடத்தப்படவேண்டும் என்பதற்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் தமது ஆதரவை வெளியிட்டுள்ளது.
இதற்கிடையில் இலங்கையில் இருந்து அதிகரித்து வரும் சட்டவிரோத குடியேறிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஐரோப்பிய பொலிஸ் அமைப்பான யூரோபோல் அறிவித்துள்ளது.
இலங்கை படையினரின் மிக் 27 ரக ஜெட் விமானம் விபத்து!- புத்தளத்தில் சம்பவம்.
புத்தளம் நாத்தாண்டிய தும்மலசூரிய பகுதியில்  இலங்கை விமான படையினருக்கு சொந்தமான ஜெட் விமானம் ஒன்று சற்றுமுன்னர் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த தகவலை இலங்கை விமானப்படை பேச்சாளர் உறுதி செய்துள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற மிக் 27 ரக ஜெட் விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்துக்குள்ளான ஜெட் விமானம் மிக் 27 என்று ரக போர் விமானமாகும்.
இந்த விபத்துக்கான காரணம் குறித்து உடனடியாக தகவல்கள் எவையும் வெளியாகவில்லை.விமானி உயிர் தப்பினார்.புத்தளம் நாத்தாண்டிய தும்மலசூரிய பகுதயில் இடம்பெற்ற விமான விபத்தில் விமானி உயிர் தப்பியுள்ளார்.கட்டுநாயக விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற இந்த ஜெட் விமானம் 1.35 மணிக்கு விபத்துக்குள்ளாகியது.இந்த நிலையில் விமானத்தை செலுத்திய விமானி உயிர் தப்பியுள்ளதாக  இலங்கை விமானப்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இலங்கை - இந்திய கப்பல் சேவைகளை ஆரம்பிக்க முயற்சிகள்.
இலங்கை இந்திய கப்பல் சேவை நிறுத்தப்பட்டுள்ள நிலையில், மீண்டும் ஆரம்பிக்கும் முகமாக இந்திய கப்பல்துறை அதிகாரிகள் நேற்று அரிச்சல்முனை கடற்பிரதேசத்துக்கு பயணம் செய்துள்ளனர்.இராமேஸ்வரத்துக்கும் தலைமன்னாருக்கும் இடையிலான கப்பல் சேவை,1980 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நிறுத்தப்பட்டது. அதேநேரம் தூத்துக்குடி கொழும்பு கப்பல் சேவையும் பொருளாதார மற்றும் சட்டப்பிரச்சினை காரணமாக கடந்த ஜூனில் இருந்து நிறுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில் கொழும்பு – தூத்துக்குடி கப்பல் சேவையை புதியவர்களை கொண்டு இயக்க இலங்கை அதிகாரிகள் முயற்சித்து வருவதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.எனினும், தமிழ்நாட்டு அரசாங்கம் புதிய துறைமுகக் கட்டுமாணப் பணிகளை மேற்கொள்ளும் வரை, இராமேஸ்வரம் தலைமன்னார் கப்பல் சேவைகளை ஆரம்பிக்க முடியாதிருக்கும் என்று இந்திய கப்பல்துறை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
எனவே, தமிழக அதிகாரிகள் இலங்கையுடன் இது தொடர்பில் பேச்சு நடத்தவேண்டும் என்றும் இந்திய கப்பல்துறை அதிகாரிகள் கோரியுள்ளனர்.இதேவேளை சேது சமுத்திர திட்டம் தொடர்பான நீதிமன்ற வழக்கும், இந்தக்கப்பல் சேவை தாமததிற்கான மற்றுமொரு காரணம் என்று கூறப்படுகிறது.
பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டால் வீதி அனுமதிப்பத்திரங்கள் ரத்து செய்யப்படும் - சீ.பி. ரத்நாயக்க.
தனியார் பஸ் உரிமையாளர்கள் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டால் வீதி அனுமதிப்பத்திரம் ரத்து செய்யப்படும் என தனியார் போக்குவரத்து அமைச்சர் சீ.பி. ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க பாதுகாப்புச் செயலாளரின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்படும்.
எரிபொருள் விலையேற்றத்திற்கு அமைவாக தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்படுகின்றன.குழப்பம் விளைவிக்கும் நோக்கில் சில சக்திகள் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டங்களை நடத்த முயற்சிக்கின்றன. தேவையற்ற அச்சுறுத்தல்களை விடுக்கும் தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சீ.பி. ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
மேலும், எரிபொருள் விலையேற்றம் பொதுப் போக்குவரத்து சேவைகளை பாதிக்காது என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.இந்நிலையில்,எரிபொருள் விலையேற்றத்தினைக் கண்டித்து, அரசாங்கம் எரிபொருளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் அல்லது பஸ் கட்டணங்களை உயர்த்த அனுமதி அளிக்க வேண்டும் என தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தினை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தனியார் பஸ் உரிமையாளர்கள் நடத்திய பணிப் பகிஷ்கரிப்பு போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.
இலங்கையில் தனியார் பஸ் உரிமையாளர்களினால் நடத்தப்பட்ட பணிப் பகிஷ்கரிப்பு போராட்டம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விலையேற்றத்தைத் தொடர்ந்து தனியார் பஸ் உரிமையாளர்கள் நாடு தழுவிய ரீதியில் போராட்டமொன்றை நடத்தியிருந்தனர்.எரிபொருளுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் அல்லது கட்டணங்களை அதிகரிக்க வேண்டுமென தனியார் பஸ் உரிமையாளர்கள் கோரியிருந்தனர்.அரசாங்கத்திற்கும் தனியார் பஸ் உரிமையாளர்களுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர், போராட்டம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.
இதன்படி, பஸ் கட்டணங்கள் 20 வீதத்தினால் உயர்த்தப்பட உள்ளது. குறைந்தபட்ச கட்டணம் 7 ரூபாவிலிருந்து 9 ரூபாவாக உயர்த்தப்படவுள்ளது.தனியார் பஸ் உரிமையாளர்கள் நடத்திய பணிப் பகிஷ்கரிப்பு போராட்டம் காரணமாக இன்று நாடு முழுவதிலும் பெரும் நெருக்கடி நிலைமை ஏற்பட்டது.
குறிப்பாக பாடசாலை மாணவர்கள் மற்றும் தொழிலுக்கு செல்வோர் கடும் அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தனர்.இதேவேளை, தனியார் பஸ் உரிமையாளர்கள் 17 வீத கட்டண அதிகரிப்பை கோரியதாகவும் அரசாங்கம் 20 வீத கட்டண அதிகரிப்பிற்கு அனுமதி அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வெளிநாடுகளுக்கான தொலைபேசி கட்டணங்கள் அதிகரிப்பு.
எதிர்வரும் மார்ச் மாதம் முடிவில் வெளிநாட்டு தொலைபேசி அழைப்புக்களில் இருந்து பெறப்படும் வருமானம் 2 பில்லியன் ரூபாய்களாக இருக்க வேண்டும் என்று அரசாங்கம் எதிர்ப்பார்க்கிறது.இந்த தகவலை இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
இதன் அடிப்படையில் எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் வெளிநாடுகளுக்கான தொலைபேசிக்கட்டணங்கள் மீளமைக்கப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் அநுஸ பெல்பிட்ட தெரிவித்துள்ளார்.சீரமைப்பின்படி, கட்டணங்கள் கடந்த ஜனவரி மாதம் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படவுள்ளன ஒவ்வொரு 1000 நிமிடத்துக்கும் 1.50 டொலர் என்ற அடிப்படையில் இந்த கட்டண அதிகரிப்புகள் மீளமைக்கப்படவுள்ளதாக பெல்பிட்ட குறிப்பிட்டார்.
விமான விபத்தில் காங்கோ நிதியமைச்சர் படுகாயம்.
காங்கோ நாட்டில் நள்ளிரவில் நடந்த விமான விபத்தில் அந்நாட்டின் அதிபரின் ஆலோசகர் மற்றும் நிதியமைச்சர் மட்டடா போன்யோ மாபோன் விபத்தில் சிக்கினர்.இதில் அதிபரின் ஆல‌ோசகர் சம்பவ இடத்தில் பலியானார். நிதியமைச்சர் படுகாயத்துடன் மீட்கப்பட்டுள்ளார். மேலும் அரசின் உயர் அதிகாரிகள் மற்றும் பயணிகள் விபத்தில் சிக்கியுள்ளதாக அஞ்சப்படுகிறது.
இவ்விபத்து குறித்து அந்நாட்டு உடனடி தகவல் ஏதும் வெளியிடவில்லை. சீன இணையதளம் இது குறித்து தகவல் தெரிவித்துள்ளது.முறையான தொழில்நுட்ப மில்லாதது மற்றும் பராமரிப்பற்ற விமான நிலையங்கள் கொண்டுள்ளதே இவ்விபத்திற்கு காரணம் எனத் தெரிகிறது.இவ்விபத்து புக்காவ் என்ற இடத்தின் அருகே நடந்தது.
கிரீஸ்சில் போராட்டக்காரர்கள் நடத்திய கலவரத்தில் பாரிய கட்டிடம் பலியானது.
கிரீஸ் தலைநகரம் ஏதென்ஸில் சிவில் சர்விஸ் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வயது, மற்றும் எதிர்கால வைப்பு தொகை உள்ளி‌ட்ட கோரிக்கை வலியுறுத்தி அந்நாட்டு அரசிற்கு எதிராக பார்லிமென்ட் நோக்கி லட்சம் பேர் பேரணி நடத்தினர். ‌
இப்பேரணியில் பொலிசார் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்தும் போது, நடந்த கலவரத்தில் பெரிய வளாகம் ஒன்று கட்டுப்பாடின்றி தீப்பற்றி எரிய ஆரம்பித்தது.இந்த வளாகத்தில் தியேட்டர், வங்கி மற்றும் மொபைல் போன் டீலர்ஸ் உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட வணிக வளாகங்கள் உள்ளன. இதில் 37 ‌பேருக்கும் மேல் போராட்டக்காரர்கள் காயமைடந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
கிலானியின் எதிர்காலம் இன்று தெரியவரும்.
பாகிஸ்தான் பிரதமர் பதவியில் யூசுப் ரசா கிலானி நீடிப்பாரா, இல்லையா என்பது நீதிமன்றம் இன்று வழங்க உள்ள தீர்ப்பில் தெரியவரும்.நீதிமன்றத்தை அவமதிப்பு வழக்கில் பாகிஸ்தானின் உச்ச நீதிமன்றத்தில் இன்று பிரதமர் யூசுப் ரசா கிலானி ஆஜராக உள்ளார்.
அதிபர் ஜர்தாரி மீதான ஊழல் வழக்குகள் குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்றம், பிரதமர் கிலானிக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது.இதுகுறித்த விசாரணையை கிலானி தாமதப்படுத்துவதாக குற்றம் சாட்டியிருந்தது. அதன்படி அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF