Wednesday, February 29, 2012

NEWS OF THE DAY.

இலங்கையில் சமாதானத்தை நிலைநாட்ட மக்களின் ஆசீர்வாதம் உண்டு!- ஜனாதிபதி மகிந்த.
இலங்கை படைகள் இறுதிக்கட்ட யுத்தத்தில் பாரியளவிலான படுகொலைகளையோ, சட்டத்திற்குப் புறம்பான கொலைகளையோ மேற்கொள்ளவில்லை என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். பண்டாரநாயக்க ஞாபகாரத்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் 'ராவய' பத்திரிகையின் வெள்ளிவிழா, நேற்றிரவு நடைபெற்றது. இந்நிகழ்வில், பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்நாட்டில் ஜனநாயகம் முழுமையாக நிலைநாட்டப்பட்டுள்ளது இனவாதத்தை நாம் ஒருபோதும் தூண்டவில்லை.இலங்கையில் ஏற்பட்ட கிளர்ச்சிகள் மற்றும் 30 வருடகால பயங்கரவாதத்தினால் இந்நாட்டில் இரத்தத்தையும் கண்ணீரையுமே ஏற்படுத்தின. இந்நிலையில், நாம் பயங்கரவாதத்தை ஒழித்துவிட்டோம் என திருப்தியடைய முடியாது என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.நாட்டில் பயங்கரவாதமும் பிரிவினைவாதமும் மீண்டும் தலைதூக்க இடமளிக்கக் கூடாது. இவ்வாறான சூழ்நிலையொன்றை நாம் ஏற்படுத்த உறுதிபூண வேண்டும் என ஜனாதிபதி மகிந்த வலியுறுத்தினார்.
ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமைககள் பேரவைக் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக தீர்மானமொன்றை கொண்டுவருவதற்கு ஒரு பகுதியினர் முயற்சிக்கின்ற நிலையில், நேற்று முன்தினம் மக்கள் அரசாங்கத்துக்கு ஆதரவை வெளிப்படுத்துவதற்காக வீதியில் இறங்கினார்கள்.இச்சம்பவமானது, சமாதானத்தையும் ஐக்கியத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்கான மக்களின் ஆசிர்வாதத்தை இலங்கை கொண்டுள்ளமையை வெளிப்படுத்துகிறது எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
நாட்டுக்காக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் குரல்கொடுக்கத் தயார்: சரத் பொன்சேகா.
நாட்டுக்காக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் குரல் கொடுக்கத் தயார் என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா அறிவித்துள்ளார்.பொருத்தமற்ற நபர்களைப் பயன்படுத்தி நாட்டைப் பாதுகாக்க முடியாது. ஜெனீவா மானித உரிமைகள் பேரவை அமர்வுகள் நாட்டுக்கு எதிரானதல்ல.
எனினும், இந்த நாட்டின் ஊழல் மோசடி மிக்க ஆட்சியாளர்களுக்கு எதிராகவே தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. இவ்வாறான ஓர் நிலைமைக்கு இந்த ஆட்சியாளர்கள் தள்ளப்படுவார்கள் என்பதனை நாம் முன்கூட்டியே அறிந்திருந்தோம் என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.படைவீரர்களை கண்டு கொள்ளாத இந்த ஆட்சியாளாகள் ஜெனீவா மாநாட்டில் நெருக்கடிகளை எதிர்நோக்குகின்றனர் என சரத் பொன்சேகா சுட்டிக்காட்டியுள்ளார்.
முஸ்லீம் காங்கிரஸ் எம்.பிக்களை பதவிநீக்க முடிவு!- ஐ.தே.க. செயற்குழுவிற்கு நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க உள்ளிட்ட கட்சியின் செயற்குழுவிற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் உட்பட அந்த கட்சியின் 7 நாடாளுமன்ற உறுப்பினர்களை பதவியில் இருந்து நீக்க ஐக்கிய தேசியக் கட்சி எடுத்துள்ள தீர்மானத்தை தடுத்து, கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நிரந்தர தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தீர்மானத்திற்கு எதிராக ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாக்கல் செய்திருந்த மனுவை விரிவாக ஆராய்ந்த பின்னர் மாவட்ட நீதிமன்றம் இந்த தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.அரசாங்கத்தின் 18வது அரசியல் அமைப்புச் சட்டத்திருத்திற்கு ஆதரவாக தாம் நாடாளுமன்றத்தில் வாக்களித்திருந்தாக மனுதார்கள் கூறியுள்ளனர். இதன் பின்னர் தாம் அரசாங்கத்தில் இணைந்து கொண்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் பின்னர், எந்த விசாரணைகளும் இன்றி ஐக்கிய தேசியக் கட்சி தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பறிக்க தயாராகி வந்தாகவும், ஐக்கிய தேசியக் கட்சியை சாராத குறித்த ஏழு பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்வதற்கான சட்டரீதியான அதிகாரம் அந்தக் கட்சிக்கு இல்லை எனவும் தெரிவித்து கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில்   மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.இந்த விடயத்தை விரிவாக ஆராய்ந்த கொழும்பு மாவட்ட நீதிமன்றம் மனு மீதான விசாரணை முடியும் வரை சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிகள் பறிக்கப்படக் கூடாது என்ற தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.
பாகிஸ்தான் விமான படைக்கு புதிய தளபதி நியமனம்.
பாகிஸ்தானில் விமான படைக்கு புதிய தளபதியாக தாஹிர் ரபிக் பட் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.பிரதமர் யூசுப் ரசா கிலானியின் ஆ‌லோசனையின் அடிப்படையில் ஜனாதிபதி புதிய தளபதியை நியமித்துள்ளதாக பிரதமர் அலுவலக செய்தி குறிப்பு தெரிவித்துள்ளது.
மேலும் அதில் தெரிவித்திருப்பதாவது: பாகிஸ்தான் விமானப்படை தளபதி இருக்கும் ராவ் குவாமர் சுலைமான் வரும் 17ம் திகதியுடன் ஓய்வு பெறுகிறார்.மேலும் ஓய்வு வயதை நீட்டித்து பதவியல் தொடர விருப்பம் இல்லை என தெரிவித்துள்ளதால் புதிய தளபதியாக பட் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.சுலைமான் கடந்த 1977-ம் ஆண்டு பாகிஸ்தான் விமானபடையில் சேர்ந்தார். பல்‌வேறு ரக போர்‌ விமானங்களையும் கையாண்டுள்ளார். இவர் ஏர் மார்ஷலாக கடந்த 2009ம் ஆண்டு பதவியேற்றார்.
பிரிட்டன் பொருட்கள் எங்களுக்கு வேண்டாம்: அர்ஜென்டினா திடீர் அறிவிப்பு..
தங்களுக்கு சொந்தமான பாக்லாந்து தீவை பிரிட்டன் கைப்பற்றி வைத்துள்ளது என அர்ஜென்டினா தொடர்ந்து பிரிட்டன் அரசுடன் போரிட்டு வருகிறது.ஆனால் பிரிட்டன் அந்த தீவை கைப்பற்றியதன் 30வது ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது.இந்நிலையில் அர்ஜென்டினா அரசு தனது 20 பெரிய வர்த்தக நிறுவனங்களிடம் பிரிட்டனிலிருந்து எந்தப் பொருளையும் இறக்குமதி செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தியதாக அந்நாட்டு அரசு ஊடகமான Telam செய்தி வெளியிட்டுள்ளது.
அர்ஜென்டினாவின் தொழில்துறை அமைச்சரான டெபோரா கியோரி வர்த்தக நிறுவன முதலாளிகளிடம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.மேலும் உள்ளூர் ஆதரவைப் பெறும் முயற்சியில் இறங்கியுள்ள அர்ஜென்டினா ஜனாதிபதி கிறிஸ்டினா ஃபெர்னாண்டெஸ், பிரசாரக் கூட்டத்தை நடத்தி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.கிறிஸ்டினா ஃபெர்னாண்டெஸ் தனது பிரசாரத்தில், பிரிட்டன் இறக்குமதியைக் குறைப்பதால் நாட்டின் அதிகமான செலாவணி அந்நாட்டுக்குப் போகாமல் தடுப்பதாக தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, அர்ஜென்டினாவின் துறைமுகப் பட்டினமான உஷுவாவியாவுக்கு வந்த இரண்டு கப்பல்கள், பாக்லாந்துக்குப் போய் வந்ததனால் உடனே திருப்பி விடப்பட்டன.துறைமுகத்தில் நிறுத்த இந்தக் கப்பல்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதைக் கேள்விப்பட்ட பிரிட்டனின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜெரேமிபிரௌனி இச்சம்பவம் தனக்கு வருத்தமும் விரக்தியும் அளிப்பதாகக் கூறினார்.
நாங்கள் அர்ஜென்டினாவுடன் நட்பாக இருக்க விரும்புகிறோம். அவர்களோ எங்களை வெறுக்கிறார்கள் என்று பிரிட்டன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.வருகிற ஏப்ரல் மாதத்தின் இரண்டாம் நாள் பிரிட்டனும், அர்ஜென்டினாவும் பாக்லாந்து போர் நடந்ததன் 30தாவது நினைவு நாளைக் கொண்டாடத் திட்டமிட்டுள்ளன.ஆனால் பிரிட்டன் அரசு, பாக்லாந்தில் வாழும் 3000 குடிமக்களும் விரும்புகின்றவரை அந்தத் தீவு தங்களின் ஆட்சியதிகாரத்தின் கீழ் செயற்படும் என்று உறுதியாகத் தெரிவித்து விட்டது.
ஈரான் மீதான தாக்குதல் குறித்து அமெரிக்காவுக்கு தெரிவிக்கப்பட மாட்டாது: இஸ்ரேல்.
ஈரான் அணு உலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த தீர்மானித்தால், அது குறித்து அமெரிக்காவுக்கு தகவல் தெரிவிக்கப்படமாட்டாது என இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.அமெரிக்காவின் கூட்டு படையதிகாரிகளின் பிரதானிகளின் தலைவர், வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், தேசிய புலனாய்வு பணிப்பாளர், அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட இஸ்ரேலுக்கு அமெரிக்காவின் உயர் அதிகாரிகள் விஜயம் மேற்கொண்டனர்.
இவர்கள் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹு மற்றும் பாதுகாப்பு அமைச்சர் எஹுட் பராக்கை சந்தித்து பேசினர்.அப்போதே இஸ்ரேலிய அதிகாரிகள் மேற்குறிப்பிட்ட கருத்தை தெரிவித்ததாக அமெரிக்க புலனாய்வு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.ஏனெனில் தாக்குதல் நடத்தும் திட்டத்தை அமெரிக்கா தடுக்கலாம் என்ற கருதியே, முன் அறிவிப்பு எதுவும் வழங்கப்படமாட்டாது என இஸ்ரேலிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதால் ஈரானிய அணுசக்தி திட்டங்களுக்கு தற்காலிக பின்னடைவு மாத்திரமே ஏற்படும் என இஸ்ரேலை சமாதானப்படுத்தும் முயற்சியல் அமெரிக்கா பல மாதங்களாக முயற்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹு அடுத்தவாரம் வாஷிங்டனுக்கு செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சிரியா ஜனாதிபதி அசாத்தின் செயல்கள் மீது நம்பிக்கை இல்லை: ஐ.நா.
சிரியாவின் மீது பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டுள்ளதால் இராணுவத்தின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளது.ஹோம்ஸ் நகரின் பல பகுதிகளில் சிரியா இராணுவம் நேற்று கடுமையான தாக்குதல் நடத்தியது. இதில் 20 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில் புதிய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கான பொது வாக்கெடுப்பில், சட்டத்தை அங்கீகரித்து 89.4 சதவிகிதம் பேர் வாக்களித்துள்ளதாக சிரியா உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.இப்புதிய சட்டம் 2028ம் ஆண்டு வரையில் அசாத் பதவியில் இருக்க வழிவகுக்கும். ஆனால் இன்னும் மூன்று மாதங்களில் அனைத்துக் கட்சிகளும் பங்கேற்கும் பொதுத் தேர்தலை நடத்த புதிய சட்டம் வழிவகுப்பதாக அசாத் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் சிரியாவில் அதிகரித்து வரும் வன்முறையை கட்டுப்படுத்துவதற்கு வழி செய்யும் தீர்மானம் ஒன்றைத் தயாரிப்பதில் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் ஈடுபட்டுள்ளதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது.பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்சில் நேற்று சிரியா மற்றும் எகிப்து நிலவரம் குறித்து ஆலோசிப்பதற்காக கூட்டப்பட்ட அவசரக் கூட்டத்தில் அசாத்தின் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள ஏழு அமைச்சர்கள் மீது தடைகள் விதிக்கப்பட்டன.
ஆண்களின் கழிவறையை கைப்பற்ற பெண்கள் போராட்டம்.
சீனாவில் ஆண்களுக்கு அதிக அளவில் பொது கழிவறைகள் உள்ளன. பெண்களுக்கு போதுமான அளவில் இல்லை எனக்கூறி போராட்டம் நடந்தது.சீன தலைநகர் பீஜிங்கில் பெண்களுக்கான பொது கழிவறை போதுமான அளவு இல்லை என்று கூறி பெண்கள் போராட்டம் நடத்தினர்.
கழிவறைக்கு வெளியே பேனர்களை ஏந்தியபடி கோஷமிட்டனர். கல்லூரி மாணவிகள் இந்த போராட்டத்தில் அதிகளவில் பங்கேற்றனர்.இந்த போராட்டத்திற்கு தலைமையேற்ற கல்லூரி மாணவி லி டிங்டிங் கூறுகையில், பெண்களுக்கான பொது கழிவறைகள் சீனாவில் போதுமானதாக இல்லை.கழிவறையின் முன்பு நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டி உள்ளது. பெண்களுக்கு கூடுதலாக பொது கழிவறைகள் அமைக்க வேண்டும். உயரதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கவே இந்த போராட்டம் நடைபெற்றது என்று கூறினார்.
பாகிஸ்தானில் ஷியா முஸ்லிம்கள் 18 பேர் படுகொலை: தொடரும் இனவாதம்.
பாகிஸ்தானின் வடக்குப் பகுதியில் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த ஷியா முஸ்லிம்கள் 18 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.பாகிஸ்தானின் வடக்குப் பகுதியில் சென்று கொண்டிருந்த நான்கு பேருந்துகளை, அந்நாட்டு இராணுவ உடை அணிந்த சில துப்பாக்கித் தாரிகள் வழிமறித்துள்ளனர்.பின்பு பயணிகளில் ஷியா இனத்தவர் 18 பேரை மட்டும் தனிமைப்படுத்தி சுட்டுக் கொன்றுள்ளனர்.
அந்தப் பேருந்துகளில் பயணம் செய்து கொண்டிருந்தவர்களின் அடையாள ஆவணங்களை சோதித்த பின்னரே, அந்த ஆயுததாரிகள் ஷியா இனத்தவரை மட்டும் சுட்டுகொன்றுள்ளது தெரியவந்தது.கடந்த காலங்களில் பாகிஸ்தானில் ஏற்பட்ட இன மோதல்களின் போது, ஷியா இனத்தவர்கள் இலக்கு வைத்து தாக்கப்பட்டுள்ளனர் என்றும், பாகிஸ்தான் அரசாங்கம் இப்படியான வன்முறைகளை தடுக்க சிறிதளவே நடவடிக்கைகளை எடுக்கின்றன எனவும் பிரித்தானியா ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சீனாவின் பொருளாதார வளர்ச்சி குறையும்: உலக வங்கி.
சீனாவின் தற்போதைய பொருளாதார நிலை படிப்படியாக குறையும் என உலக வங்கி எச்சரித்துள்ளது.கடந்த 2011ம் ஆண்டு வரை சீனாவின் பொருளாதார வளர்ச்சி 9.2 சதவிகிதமாக உள்ளது. இந்தாண்டின் தொடக்கத்தில் இதுகுறித்து ஆய்வு செய்த உலக வங்கி, இந்தாண்டில் பொருளாதார வளர்ச்சி 8.4 சதவிகிதம் என்ற அளவிற்கு குறையும் என கூறியுள்ளது.
இந்நிலையில் சீன அமைச்சகங்களுடன் கலந்து ஆலோசித்து சமீபத்திய பொருளாதார வளர்ச்சி முடிவுகளையும் கருத்தில் கொண்டு உலக வங்கி நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 30 ஆண்டுகளாக சீன பொருளாதார வளர்ச்சியின் ஆண்டு சராசரி 10 சதவிகிதம் என்ற அளவில் இருந்தது.
கடந்த 2011ம் ஆண்டில் 8.5 சதவிகிதம் என்ற அளவில் இருந்தது. இது 2026 - 2030ம் ஆண்டுக்குள் 5 சதவிகிதம் என்ற அளவிற்கு குறையும். இந்த வீழ்ச்சி விகிதத்தை தாமதப்படுத்துவது தான் சீனாவின் மிகப் பெரிய சவால்.இதற்காக தற்போதைய பொருளாதார கொள்கைகளில் இருந்து மாறி, விரைவில் புதிய கொள்கைகளை அமல்படுத்த வேண்டும். குறிப்பாக அனைத்து துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தி வரும் அரசு நிறுவனங்களை விலக்கிவிட்டு தனியார் மயமாக்கலுக்குத் தயாராக வேண்டும்.
சந்தை அடிப்படையிலான பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும். வங்கிகளை வர்த்தகமயமாக்கல், விவசாயிகளின் உரிமைகளைப் பாதுகாத்தல், நில வருவாயில் உள்ளூர் அரசுகளைச் சார்ந்திருத்தலைக் குறைத்தல், புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவித்தல், அனைவருக்கும் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்தல் போன்றவற்றை சீனா மேற்கொள்ள வேண்டும். இந்த மாற்றங்கள் தான் சீன சமூகத்தை நிலையாக வைத்திருக்க உதவும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.இதற்குப் பதிலளித்த துணைப் பிரதமர் லீ கீகியாங் கூறுகையில், பொருளாதார மாற்றத்தை சீனா ஏற்கனவே தொடங்கி விட்டது. நீண்ட கால நிலையான பொருளாதார வளர்ச்சி, சமூக பொருளாதார மேம்பாடு இவற்றில் சீனா கவனம் செலுத்தி வருகிறது என்றார்.
அப்பாவி பொதுமக்களை அடித்து கொன்ற இராணுவம்: ஒரே இடத்தில் 62 உடல்கள்.
சிரியா ஜனாதிபதி பஷர் அல் அசாத்துக்கு எதிரான போராட்டம் வலுவடைந்து வரும் நிலையில், பொதுமக்கள் மீதான இராணுவத்தின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளது.போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் மீது ஜனாதிபதியின் தூண்டுதலால் இராணுவம் துப்பாக்கி, பீரங்கி தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில் ஒரே இடத்தில் 62 பேர் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அரசின் தாக்குதலுக்கு பயந்து ஊரை விட்டு சென்ற அவர்களை கடத்தி சென்ற இராணுவத்தினர், 62 பேரையும் அடித்து துன்புறுத்தி கொன்றுள்ளதாக அப்பகுதியினர் தெரிவித்தனர்.
யூரோ மண்டலப் பேச்சுவார்த்தை நிறுத்தம்.
கிரீசின் கடனை அடைப்பதற்காக ஜேர்மனி பிணைய நிதி வழங்க மறுத்ததால் யூரோ மண்டலத்தின் நிதியமைச்சர்கள் கலந்து கொண்ட கூட்டம் இரண்டாம் நாள் நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.ஐரோப்பிய நிதி நிலைப்பாட்டு வசதிக்கான(EFSF) தொகை நிர்ணயிக்கப்பட்ட நிலையில் ஜேர்மனி தனது பங்கான 1 டிரில்லியன் டொலரை கொடுக்க மறுத்துவிட்டது.
இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவரான ஹெர்மன் வான் ரோம்புய், பெரும்பங்கை வழங்க வேண்டிய ஜேர்மனி எதிர்ப்பு தெரிவிப்பதால் இனி இந்தக் கூட்டத்தை இப்போது நடத்துவதில் பயனில்லை என்று கூறி அடுத்த மாதம் நடத்தலாம் என்று ஒத்திவைத்தார்.இந்தக் கூட்டத்தில் சர்வதேச நாணய நிதியத்துக்கு தனது பங்களிப்பை உறுதி செய்வதற்கு முன்பாக தங்களது நிதி உதவித் திட்டம் குறித்து G20 நாடுகளின் நிதியமைச்சர்களும் முடிவாகத் தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
இத்தாலியும், போர்ச்சுக்கல்லும் தங்களது கடன் நெருக்கடியிலிருந்து மீளும் வகையில் இத்தாலி 6 பில்லியன் யூரோவுக்கும் அதிகமாகத் தர ஒப்புக்கொண்டது. போர்ச்சுக்கல் நாடு தன் வங்கிற்கு சில தணிக்கை சீர்திருத்தங்களை அறிமுகம் செய்தது.Standard and Poor என்ற கருத்துக்கணிப்பு நிறுவனம் கிரீஸை திவாலாகிவிட்டதாக அறிவித்ததனால் கிரேக்க அரசின் நிதிப்பத்திரங்களை அடமானமாக பெற ஐரோப்பிய மத்திய வங்கி மறுத்துவிட்டது.
மார்ச் மாதம் 12ஆம் நாள் தனியாரிடம் உள்ள கிரேக்க நிதிப் பத்திரிங்கள் குறைக்கப்படும் போது கிரீசின் திவாலான நிலையில் மாற்றம் ஏற்படும் என்றும் Standard and Poor கருத்துக்கணிப்பு நிறுவனம் ஊகிக்கின்றது.பிரிட்டிஷ் பிரதமரான டேவிட் கேமரூனும், இவரையடுத்த செக் குடியரசும் ஜி20 நாடுகளின் யூரோ மண்டல நிதிநெருக்கடிக்கான தீர்வுகளை ஏற்க மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் ஒபாமாவுக்கு அமோக ஆதரவு: கருத்துக் கணிப்பில் தகவல்.
அமெரிக்காவில் இந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஒபாமா தான் வெற்றி பெறுவார் என்று கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.தற்போதைய ஜனாதிபதி பராக் ஒபாமாவின் பதவி காலம் முடிவடைவதையொட்டி, இந்தாண்டு நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ளது.
அதில் ஆளும் ஜனநாயகக் கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி பராக் ஒபாமா வேட்பாளராக நிற்கிறார். எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சி சார்பில் மிட் ரோம்னி, ரோன் பால் மற்றும் ரிக் சான்டோரம் ஆகியோருக்கு இடையில் பலத்த போட்டி நிலவுகிறது.இந்நிலையில் பாஸ்டன் நகரில் இயங்கி வரும் ஐ.என்.இ மீடியா என்ற நிறுவனம், சமீபத்தில் தேசிய அளவில் கடந்த 22 முதல் 26 வரையிலான திகதிகளில் ஓன்லைனில் ஒரு கருத்துக் கணிப்பை நடத்தியது.
இதன்பின் இந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, மாசாசூசெட்ஸ் முன்னாள் மாகாணத்தலைவர் மிட் ரோம்னி தனது போட்டியாளர்களான ரோன் பாலை விட 24.1 புள்ளிகள் வீதமும், ரிக் சான்டோரமை விட 33.4 புள்ளிகள் வீதமும் முன்னிலையில் உள்ளார்.அதே நேரம் இன்றே ஜனாதிபதி தேர்தல் நடக்குமானால் 80 சதவீத அமெரிக்க இந்தியர்கள், ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்குத் தான் வாக்களிப்பர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக் கணிப்பில் மொத்தத்தில் 80 சதவிகிதம் பேர் ஒபாமாவிற்கு ஆதரவாகவும், 14.7 சதவிகிதம் பேர் ரோம்னிக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.அதே நேரம் குடியரசுக் கட்சி வேட்பாளர்களில் ரோம்னிக்கு 51.9 சதவிகிதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
கிரீசிற்கு நிதியுதவி: ஜேர்மன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமோக ஆதரவு.
ஜேர்மனியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திவாலான கிரீஸ் நாட்டிற்கு இரண்டாம் கட்டமாக பல பில்லியன் யூரோவை வழங்க அமோக ஆதரவு தெரிவித்துள்ளனர்.கிரீசிற்கு நிதியுதவி வழங்கப்படுவது குறித்து நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், 496 பேர் பணம் கொடுக்க ஆதரவாகவும், 90 பேர் எதிர்த்தும் வாக்களித்துள்ளனர், 5 பேர் வாக்களிக்கவில்லை. எனவே 130 பில்லியன் யூரோ கிரீசுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இப்போது நிதி வழங்குவதில் ஜேர்மனியின் பொருளாதார நிலையில் எத்தகைய மாற்றங்கள் ஏற்படும் என்பதையும், இதன் மூலம் திவாலான கிரீஸ் நூறு சதவிகிதம் மீட்கப்படும் என்றும் யாராலும் கணிக்க இயலாது.மெக்ஸிகோ நகரத்தில் கடந்த வார இறுதியின் போது நடைபெற்ற ஜி20 நாடுகளின் நிதியமைச்சர்களின் கூட்டத்தில் ஜேர்மனி, கிரீசுக்கு பிணையநிதி வழங்குவதாக ஒப்புக்கொண்டது.ஆனால் கிரீஸ் நாடு தனது நிதி நெருக்கடியிலிருந்து மீள வேண்டும் என்றால் முதலில் அதன் கடனில் மூன்றில் ஒரு பங்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று ஜோ்மன் பிரதமர் மார்க்கெல் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மார்க்கெல், தன்னுடைய நிதி நடவடிக்கைகளுக்கு இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவையும் எதிர்பார்த்து உள்ளார். தன்னுடைய மைய வலது நாடாளுமன்ற கூட்டணிக் கட்சிகளிடம் உள்ள 311 உறுப்பினர்களில் 304 பேரிடம் மட்டுமே ஆதரவு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.இதுகுறித்து எம்னிட் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில், 62 சதவிகித மக்கள் இதற்கு நாடாளுமன்றம் அனுமதி வழங்கக் கூடாது என்றும், மீதமுள்ள 33 சதவிகித மக்கள் அனுமதி வழங்கலாம் என்றும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த தகவலை பில்டு செய்தித்தாளின் முதல் பக்கத்தில் “கிரேக்கர்களுக்கு பில்லியனா நிறுத்து” என்ற பெரிய அளவில் எதிர்ப்பு தெரிவித்து செய்தி வெளியிட்டுள்ளது.ஜி20 நாடுகளின் நிதியமைச்சர்கள் நடத்திய கூட்டத்தின்படி கிரீஸ் நாடு 2014ம் ஆண்டுக்குள் 130 பில்லியன் யூரோவை கடனாகப் பெறும் என்றும், இதுதவிர தனியார் கடன் பத்திரமாக 107 பில்லியன் யூரோ கடன் விலக்கிக் கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நயாகரா நீர்வீழ்ச்சியின் அருகே பயணிகளை அழைத்து செல்வதற்கு புதிய நிறுவனம் ஒப்புதல்.
நயாகரா நீர்வீழ்ச்சியின் அருகே பயணிகளை அழைத்துச் செல்லும் படகுச் சேவையை வழங்கிய Maid of the Mist என்ற நிறுவனம் வழங்கி வருகிறது.Maid of the Mist என்ற நிறுவனம் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக, உல்லாச பயணிகளை நீர்வீழ்ச்சியின் அருகே அழைத்துச் சென்றது.ஆனால் தற்போது அந்த நிறுவனத்திற்குப் பதிலாக கலிஃபோர்னியாவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றிடம் அந்தச் சேவையை நடத்தும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
கலிஃபோர்னிய நிறுவனம், எதிர்வரும் 2014 ஆம் ஆண்டில் இருந்து சேவையை வழங்குமெனத் தெரிவிக்கப்படுகிறது.புதிய நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள ஒப்பந்தம் காரணமாக, மேலதிகமாக 300 மில்லியன் டொலர் வருமானம் கிடைக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிரியா விவகாரத்தில் லிபியா போன்று நேட்டோ தலையிடாது: தலைவர் அறிவிப்பு.
சிரியாவில் ஜனாதிபதி பஷர் அல் அசாத்துக்கு எதிராக கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் போராட்டம் நடந்து வருகிறது.இந்நிலையில் அங்கு நடந்து வரும் கலவரத்தில் இதுவரைக்கும் 7500 கொல்லப்பட்டதாக ஐ.நா அறிவித்துள்ளது.
லிபியாவில் புரட்சி படையினருக்கு ஆதரவாக களமிறங்கியது போல சிரியாவில் தலையிடும் எண்ணம் இல்லை என்று நேட்டோ படை தலைவர் கூறியுள்ளார்.அமெரிக்க தலைமையிலான நேட்டோ படையின் தலைவர் ஆண்டர்ஸ் போக் ராஸ்முசன் வாஷிங்டனில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: சிரியாவில் நிலவும் சூழ்நிலையை நேட்டோ படை கூர்ந்து கவனித்து வருகிறது.ஜனாதிபதி பஷர் அல் அசாத்துக்கு எதிராக போராடும் மக்களை இராணுவ தாக்குதல் நடத்தி கொல்வது கண்டனத்துக்கு உரியது.
லிபியாவில் ஜனாதிபதி கடாபியின் ஆட்சிக்கு எதிராக போராடியவர்களுக்கு ஆதரவாக நேட்டோ வான்வழி தாக்குதல் நடத்தியது.ஐ.நா முடிவு மற்றும் அந்த பிராந்தியத்தில் உள்ள நாடுகள் ஆதரவின் பேரிலேயே நேட்டோ தலையிட்டது. அதுபோன்ற நிலை சிரியாவில் இல்லை. எனவே லிபியா விடயத்தில் நேட்டோ படை தலையிடாது என்று தெரிவித்துள்ளார்.
பிரிட்டனில் குடியேற்ற விதிமுறைகளில் மாற்றம்.
பிரிட்டனில் குடியேற்ற விதிமுறைகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.சட்டவிரோதக் குடியேற்றத்தைத் தடுப்பதற்காக மட்டுமே இந்த விதிமுறை கொண்டு வரப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.பல ஆண்டுகளுக்கு முன்பாக பிரிட்டனில் குடியேறியவர்களில் பெரும்பாலானவர்கள், அந்நாட்டு குடியுரிமையைப் பெறுவதற்குப் பதிலாக நிரந்தரமாக வாழும் உரிமையை மட்டும் பெற்றுக் கொண்டனர்.
ஆனால் தற்போது அறிமுகமான “பயோமெட்ரிக் குடியிருப்பு உரிமம்” என்பது ஒரு மின்னணு அடையாள அட்டையைப் போன்றதாகும். சம்பந்தப்பட்டவரின் பெயர், பிறந்ததினம், பிறந்த இடம் உட்பட சுயவிவரங்களுடன் கைரேகை, முகப் பதிவு ஆகியவை அதில் அடங்கியிருக்கும்.குடியேற்ற நிலை, பிரிட்டனில் அவர் பெற்றிருக்கும் உரிமைகள் போன்றவை பற்றிய விவரங்களையும் இந்த அட்டையின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
அனுமதியில்லாமல் பிரிட்டனில் பணிபுரிந்து வரும் பிற நாட்டவர்களை குடியேற்றத்துறை அதிகாரிகள் கைது செய்யும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது.புதிய அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்பட்டால் இதுபோன்ற சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை உடனடியாக கண்டுபிடிக்க முடியும் என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Tuesday, February 28, 2012

ஈரானுக்கு முழு ஆதரவு - ரஷ்யா!



ஈரான் மீது போர் தொடுக்கும் எந்த நாடாக இருந்தாலும் அவற்றை ரஷ்யாவும் எதிர்க்கும் என ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.அணு ஆயுதங்கள் இருப்பதாக கூறி ஈரான் மீது அழுத்தங்கள் தருவது தேவையற்றது எனவும் கூறப்பட்டுள்ளது.வெளிநாட்டு கொள்கை பற்றிய புட்டின் வெளியிட்ட கட்டுரையொன்றில் ஈரான் மீது போர்த்தொடுக்கும் நாடுகள் கடுமையான விளைவை எதிர்நோக்க வேண்டி இருக்கும் எனவும் ஐநாவின் அனுமதியின்றி சிரியா மீது தாக்குதல் நடத்தவும் கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

சிறிலங்கா நாணயத்தின் மதிப்பு படுவீழ்ச்சி!


அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு இன்று முன்னெப்போதும் இல்லாதளவில் கடுமையாகவீழ்ச்சியடைந்துள்ளது.அமெரிக்க டொலர் ஒன்றுக்கான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு இன்று காலை 123.20 ரூபாவாக இருந்தது. நேற்றுமாலை 121.30 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலரின் மதிப்பு இன்று மேலும் 2 ரூபாவினால் அதிகரித்தது. 


கடந்த வெள்ளிக்கிழமை, அமெரிக்க டொலர் ஒன்று 120 ரூபாவாக இருந்தது குறிப்பிடத்தக்கது. முன்னெப்போதும் இல்லாதளவுக்கு சிறிலங்கா ரூபாவின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதால், எரிபொருள் உள்ளிட்ட இறக்குமதிப் பண்டங்களின் விலைகள் மேலும் அதிகரிக்கும் வாய்ப்புகள் இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் காலிஃப்ளவர்!


நாம் சமையலுக்கு பயன்படுத்தும் காலிஃப்ளவர் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.இந்த பூக்களில் மாவுச்சத்து, உயிர்ச்சத்து, சிறிதளவு கால்சியம், சோடியம், கொழுப்பு ஆகியவை காணப்படுகின்றன.இந்த பூவில் கண்பார்வைக்குத் தேவையான கரோட்டின் சத்து அதிகம் உள்ளது. இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


இதில் ஆண்டி ஆக்ஸிடேசன் அதிகம் உள்ளது. வைட்டமின் சி, மாங்கனீஸ் உட்பட பல்வேறு சத்துக்களும் காணப்படுகின்றன. மேலும் பீட்டா கரோட்டீன் போன்றவையும் உள்ள சத்தான உணவாகும்.இதன் மூலம் மன அழுத்தம், இதய நோய்களும் குணமாகும். புற்றுநோய் செல்களையும் கட்டுப்படுத்துகிறது. காலிஃப்ளவரில் வைட்டமின் கே, மற்றும் ஒமேகா 3 சத்துக்கள் உள்ளன. இதை தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும். ஒபிசிட்டி குணமடையும்.


இதில் நார்ச்சத்து காணப்படுவதால் ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. வயிறுக்கு இதமளித்து வயிறு தொடர்புடைய நோய்களை குணமாக்குகிறது. அல்சர் மற்றும் குடல் புற்றுநோயையும் கட்டுப்படுத்துகிறது.இது சூட்டை தணிக்கும் தன்மையுடையது, மூலத்தை கட்டுப்படுத்துகிறது, மலச்சிக்கலைப் போக்கும்.


உடல் இளைத்தவர்களுக்கு இது சத்தானது. தினம் காலிஃப்ளவரை சமையலில் சேர்த்துக் கொண்டால் கண்டிப்பாக குண்டாகலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.வைட்டமின் பி1, 2, 3, 5, 6 மற்றும் பி9 வைட்டமின்கள் காணப்படுகின்றன. மேலும் புரதச்சத்து, பொட்டாசியம் போன்றவையும் காணப்படுகின்றன. சத்தான காலிஃப்ளவர் வாரம் இருமுறை உட்கொண்டால் உடல் நலம் பெறும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

இரத்தக்குழா​ய் கட்டிகளை நீக்க புதிய சாதனம்!


இரத்தக்குழாய்களான நாடி, நாளம் என்பனவற்றில் உண்டாகும் கட்டிகள் காரணமாக இரத்த ஓட்டம் தடைப்படுவதனால் "ஸ்ரோக்" போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. இதனால் சில சந்தர்ப்பங்களில் இறப்புகளும் ஏற்படலாம்.
தற்போது இவ்வாறான நோய்களுக்கு இலகுவாக சிகிச்சை அளிப்பதற்கென டொக்டர்.ஜெப்ரி சேவர் என்பவரின் தலமையில் இயங்கும் குழுவினால் விசேட உபகரணமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


இக்கருவிகள் மிக மெலிதாக காணப்படும் இரத்தக்குழாய்களுள் செலுத்தக்கூடியவாறு மெல்லிய தடிப்பம் உடையனவாகவும், அதன் முனைகள் இரத்தக்குழாய்களை சேதப்படுத்தாத வண்ணமும் அமைக்கப்பட்டுள்ளது.





பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

சிறந்த புரொஜெக்ரர் வசதியை கொண்ட புதிய சம்சுங் கலெக்ஸி போன்கள்!


செல்போன் உற்பத்தி துறையில் நொக்கியாவிற்கு நிகராக புரட்சியை ஏற்படுத்திவரும் சம்சுங் நிறுவனமானது தனது புதிய வெளியீடாக புரொஜெக்ரர் வசதியை கொண்ட கலக்ஸி போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது.இதில் காணப்படும் புரொஜெக்ரர் மூலம் 50 இன்ச் வரையான அகலத்திற்கு விம்பங்களை உருவாக்க முடியும்.2010ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட போன்களின் புதிய பதிப்பாக உருவாக்கப்பட்டுள்ள இந்த போன்கள் அன்ரோயிட் 2.3 பதிப்புடைய இயங்குதளத்தில் தொழிற்படுவதுடன் 4 இன்ச் அளவுடைய திரையையும் கொண்டுள்ளது.


2010ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட போன்கள் 2.1 பதிப்புடைய அன்ரோயிட் இயங்குதளத்தில் தொழிற்பட்டதுடன், அதன் திரையின் அளவு 3.7 இன்ச் ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.இவைதவிர 5 மெகா பிக்சல் உடைய கமெரா, 1GHz dual-core processor, 8GB உள்ளக நினைவகம், 2000mAh மின்கலம் என்பற்றை கொண்டுள்ளது.எனினும் சம்சுங் நிறுவனமானது இதுவரையில் இந்த செல்போனிற்கான பெறுமதியை நிர்ணயிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.



பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

தொட்டாற்சிணுங்கியின் மருத்துவ குணங்கள்!


தொட்டாற்சிணுங்கியின் தாவரவியல் பெயர் மிமோசா புடிகா. இது வெப்ப மற்றும் மித வெப்ப மண்டல பகுதிகளில் காணப்படுகிறது.இது ஒரு மீட்டர் உயரம் வரை வளரும், தண்டு மற்றும் இலைக்காம்புகள் முட்களால் மூடி காணப்படும். இலைகள் இறகு வடிவ கூட்டிலையைச் சேர்ந்தது. இதன் சிற்றிலைகளுக்கு உணர்வு அதிகம்.


இதைத் தொட்டால் அவை மூடிக் கொள்ளும். அதனால் தான் இதுக்கு தொட்டாற்சிணுங்கின்னு பெயர் வந்தது. இதன் மலர்கள் பஞ்சு போன்று இளஞ்சிவப்பு நிறத்தில் காணப்படும். கனிகள் தட்டையாக இருக்கும். இதன் இலைகள் மற்றும் வேர் மருந்தாகப் பயன்படுகிறது.இலைகளின் சாறு சைனஸ், மூல நோய், காயங்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. இதன் வேர் சிறுநீரக கோளாறுகளைப் போக்கும் மருந்துகள் தயாரிக்க பயன்படுகிறது.இதில் இருந்து நார்எபிநெப்ரைன், மிமோலைன், டேனின் போன்ற வேதிப்பொருட்கள் பிரித்தெடுக்கப்படுகிறது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

விண்டோஸ் 8ல் Safe Mode-ஐ ஏற்படுத்துவதற்கு!


மற்ற இயங்குதளங்கள் போன்று அல்லாமல் விண்டோஸ் 8 இயங்குதளத்தில் Safe Modeஆனது Defaultஆக DISABLE செய்யப்பட்டு இருக்கும்.உங்களுக்கு Safe Mode பயன்படுத்த வேண்டிய சந்தர்ப்பம் ஏற்படும் போது அதனை விண்டோஸ் 8ல் மேற்கொள்ளும் வழிமுறைகளை இங்கு காணலாம்.இதற்கு முதலிலே Windows Key உடன் R ஐ( Windows+R ) அழுத்தி அல்லது START இனுள் சென்று RUNஐத் திறந்து கொள்ளுங்கள்.பின்னர் இதனுள் msconfig என்று type செய்து ENTER பண்ணிக்கொள்ளவும். இப்போ System Configuration ஆனது திறக்கும். இதிலே BOOT ஐக் கிளிக் செய்யவும்.


இப்போது Safe boot என்பதை தெரிவு செய்து OK பண்ணவும். அதன் பின் தோன்றும் விண்டோவில் உள்ள RESTART என்பதைக் கொடுக்கவும்.தற்போது உங்கள் கணணியானது மீள இயக்கப்பட்டு Safe Mode இனுள் காணப்படும். மீண்டும் பழைய நிலையை அடைய வேண்டுமானால் மீண்டும் அதே ஒழுங்கில் சென்று தெரிவு செய்துள்ள Safe boot என்பதை கொடுத்து சேமிக்கவும்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

NEWS OF THE DAY.

சட்டவிரோத சொத்துக் குவிப்பு! அரச அதிகாரிகளுக்கெதிராக விசாரணைகள் ஆரம்பம்.
இலங்கையில் சட்ட விரோதமான முறையில் சொத்துக்களை குவித்ததாக 40 அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதில் பதினாறு பேர் அரசியல்வாதிகள் எனத் தெரிவிக்கப்படுகிறது. இவ் அரசியல்வாதிகளில் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் அடங்குவதாகக் குறிப்பிடப்படுகிறது.
குற்றம் சுமத்தப்பட்டுள்ள அதிகாரிகள் சொத்து விபரங்கள் தொடர்பில் ஏற்கனவே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அதிகாரிகளிடம் தரவுகள் திரட்டப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மது போதையில் வண்டி செலுத்திய புத்த பிக்கு! பன்றி இறைச்சிப் பொதிகள் வண்டியினுள் இருந்து மீட்பு!
கொழும்பு பன்னிப்பிட்டி நெடுஞ்சாலையில் காரில் வந்துகொண்டிருந்த புத்த பிக்கு, எதிரே வந்த சூட் தியாகராஜ என்பவரின் வண்டியுடன் மோதியதில், பிக்கு படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இவ் விபத்து தொடர்பாக சூட் தியாகராஜ கருத்து தெரிவிக்கையில்,கடந்த 21ஆம் திகதி இரவு 11மணியளவில், கொட்டாவாவில் இருந்து மகரகாமாவிற்கு தனது ஜீப்பில் வந்துகொண்டிருந்த போது, எதிரே காரைச் செலுத்தி வந்த பிக்கு ஜீப்பின் மீது மோதியுள்ளார். அவர் அதிக மது போதையில் இருந்த காரணத்தினாலேயே மேற்படி விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், புத்த பிக்குதன்னைப் போக அனுமதிக்கும்படியும் எவ்வளவு பணம் வேண்டுமென்றாலும் தருவதாக தெரிவித்துள்ளதுடன் அவர் செலுத்தி வந்த காரிற்குள் மது போத்தல்களும், பன்றி இறைச்சிப் பொதிகள் இருந்ததாகவும் கூறினார்.இதன்காரணமாக அவர் பலத்த காயங்களுக்குள்ளாகிய நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கச் சென்ற போது, அவர் அதிக மது போதையில் இருந்ததால், அவருக்கென தனி சிகிச்சையறை ஒதுக்கப்பட விலை எனவும் பொது சிகிச்சைப் பிரிவிலேயே சேர்க்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பிக்குவின் கையில் எலும்பு முறிந்திருந்ததால் கடந்த வெள்ளிக்கிழமை அன்று அறுவை சிகிச்சை நடைபெற்றதாக கொழும்பில் தெற்கு பொது மருத்துவமனை தெரிவித்துள்ளது.மேற்படி மது போதையில் காரைச் செலுத்தியவர் நுகேகோடாவில் உள்ள ஜம்புகஸ்முல்லா மாவாத்தாகம கோதாமி விஹாரையின் தலைமை பிக்கு திரிபலகாமா பன்னஜீவா என்பது குறிப்பிடத்தக்கது.அவர் விருந்தொன்றிற்குச் சென்று, விகாரைக்குத் திரும்பிக் கொண்டிருக்கையிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
விலையுயர்வுகளை மறைக்கவே அமெரிக்காவுக்கு எதிரான போராட்டம்!- இலங்கையின் புத்திஜீவிகள் அமைப்பு.
இலங்கையில் பொருட்களின் விலையுயர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் போராட்டங்களை தடுக்கும் நடவடிக்கையாகவே அமெரிக்காவிற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை அரசாங்கம்  மேற்கொண்டுள்ளது என்று ஐஎச்ஆர் அமைப்பின் ஊடகச்செயலாளர் சட்டத்தரணி சமிந்த குணசேகர குற்றம் சுமத்தியுள்ளார்.இலங்கையின் ஜனநாயகத்துக்கு ஏற்பட்டுள்ள கட்டுப்படுத்தப்பட்ட தன்மையே இன்று நாடு சர்வதேச ரீதியாக அழுத்தங்களை எதிர்நோக்க காரணமாக அமைந்துள்ளது.இந்த கருத்தை இலங்கையின் ஐஎச்ஆர் என்ற மனித உரிமைகளுக்கான புத்திஜீவிகள் அமைப்பு வெளியிட்டுள்ளது.இந்தநிலையில், 2009 ஆம் இடம்பெற்ற இறுதிப்போரின் போது போர்க்குற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு இலங்கை அரசாங்கம் உரிய வகையில் பதிலளிக்கவேண்டும்.
இதனைவிடு;த்து குற்றவாளிகளை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடும் போது சர்வதேச அழுத்தங்களை தவிர்க்கமுடியாது என்று ஐஎச்ஆர் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.இதேவேளை உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாது அமெரிக்காவுக்கு எதிராகவும் ஐக்கிய நாடுகள் சபைக்கு எதிராகவும் மக்களை வீதிகளில் இறக்கி போராடச்செய்வது, பிழையான வழிநடத்தலாகும் என்றும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.அத்துடன் நாட்டில் மனித உரிமைகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும் அதன் மூலமே நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்ட முடியும் என்றும் அந்த அமைப்பு கோரியுள்ளது.
2009 ஆம் ஆண்டு இறுதிப்போரின் போது இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் இன்று நாட்டின் வரலாற்றில் பதிவாகியுள்ளது.அத்துடன் ஊடக அடக்குமுறை, பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிரான அடக்குமுறை, தொழிலாளர்களுக்கு எதிரான அடக்குமுறை என்று பல்வேறு மனித உரிமை மீறல்கள் இன்று நாட்டில் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.
இது நாளுக்கு நாள் அதிகரித்து செல்கின்றது.  ஜனநாயக வழிகளில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வோரின் மீது படையினர் தாக்குதல்களை நடத்தி மரணங்களும் சம்பவித்து வருகின்றன.இந்த சூழ்நிலையில் அமெரிக்காவுக்கும் ஐக்கிய நாடுகளுக்கும் எதிராக போராட்டங்களை மேற்கொள்ளசெய்து, இலங்கையில் பொருட்களின் விலையுயர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் போராட்டங்களை அரசாங்கம் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்று ஐஎச்ஆர் அமைப்பின் ஊடகச்செயலாளர் சட்டத்தரணி சமிந்த குணசேகர குற்றம் சுமத்தியுள்ளார்.
சர்வதேசத்திற்கு எதிரான பேராட்டமென மக்களை அரச திசை திருப்புகின்றது!- ஐ.தே.க.
மக்களை திசை திருப்பும் நோக்கில் அரசாங்கம் போராட்டங்களை நடத்தி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக நாட்டு மக்கள் எதிர்நோக்கிவரும் அழுத்தங்களுக்கு பதிலளிக்க முடியாத அரசாங்கம், இவ்வாறு போராட்டங்களை ஒழுங்கு செய்துள்ளதாகக் சுஜீவ சேனசிங்க குறிப்பிட்டுள்ளார். இதனால் நாட்டில் சட்டம் ஒழுங்கு நாளுக்கு நாள் மோசமடைந்து செல்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கடத்தல்கள் மற்றும் காணாமல் போதல் சம்பவங்கள் உயர்வடைந்துள்ளதுடன், வாழ்க்கைச் செலவு வானளவு அதிகரித்துள்ளதாகத் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.மனித உரிமை விவகாரங்களின் அடிப்படை தேவைகளையேனும் பூர்த்தி செய்யமுடியாத அரசாங்கம் அழுத்தங்களை எதிர்நோக்கி வருவதாகக் சுஜீவ சேனசிங்க குறிப்பிட்டுள்ளார்.குறிப்பாக மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அரசாங்கம் உரிய கவனம்செலுத்தத் தவறியுள்ளமையே, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றும் அளவிற்கு பூதாகாரமாகியுள்ளது என சுஜீவ சேனசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் அறிக்கை ஐக்கிய நாடுகள் அமைப்பினால் தயாரிக்கப்படவில்லை, அந்த அறிக்கை இலங்கையர்களினால் தயாரிக்கப்பட்டது என சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார். எனவே, அந்த அறிக்கையின் பரிந்துரைகளை அமுல்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை தீர்மானத்திற்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டுமென அரசாங்கத்தின் கோரிக்கைக்கு பொதுமக்கள் ஆதரவளிக்கவில்லை எனவும் சுஜீவ சேனசிங்க குற்றம் சுமத்தியுள்ளார். மேலும், அரசாங்கத்தினால் பணம் கொடுத்து தருவிக்கப்பட்ட கூட்டமே போராட்டங்களில் கலந்து கொண்டிருக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்க உளவு நிறுவனம் குறித்த ரகசிய தகவல்கள் வெளியீடு: விக்கிலீக்ஸ் அதிரடி.
அமெரிக்காவின் உளவு நிறுவனத்தின் 50 லட்சம் ரகசிய மின்னஞ்சல்களை வெளியிட்டு விக்கிலீக்ஸ் நிறுவனம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அவுஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல பத்திரிகையாளர் ஜூலியன் அசாஞ்ச்(40) நடத்திவரும் இணைய இதழ் விக்கிலீக்ஸ்.ஈராக் போர், ஆப்கான் போர் தொடர்பாக அமெரிக்க அரசு மிக மிக ரகசியமாக வைத்திருந்த முக்கிய ஆவணங்களை இந்நிறுவனம் 2010-ம் ஆண்டு வெளியிட்டது.
கியூபாவின் குவான்டனாமோ சிறையில் நடக்கும் கொடுமைகள் தொடர்பான ரகசிய ஆவணங்களையும் வெளியிட்டது. இவ்வாறு லட்சக்கணக்கான ரகசிய தகவல்கள், மின்னஞ்சல்கள், அரசு உத்தரவுகள், ரகசிய பேச்சுகள் ஆகியவற்றை விக்கிலீக்ஸ் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.இந்நிலையில் ஸ்வீடனில் அவர் மீது பாலியல் பலாத்காரம், பாலியல் முறைகேடு போன்ற புகார்களும் சுமத்தப்பட்டன. இங்கிலாந்தில் அசாஞ்ச் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.இங்கிலாந்தில் இருந்து அவரை நாடுகடத்துமாறு ஸ்வீடன் பொலிசார் கூறிவருகின்றனர். இதை எதிர்த்து அசாஞ்ச் வழக்கு தொடர்ந்துள்ளார்.ரகசிய தகவல்கள் வெளியிடுவதை சிறிது காலம் நிறுத்தியிருந்த விக்கிலீக்ஸ் தற்போது அமெரிக்காவின் ஸ்டிராட்ஃபோர் உளவு நிறுவனத்தின் 50 லட்சம் மின்னஞ்சல்களை வெளியிட்டு மீண்டும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் ஆஸ்டின் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சர்வதேச உளவு நிறுவனம் ஸ்டிராட்ஃபோர். பிரபல நிறுவனங்கள், விஐபிக்கள் பற்றிய தகவல்களை உளவு பார்த்து அரசு மற்றும் பிற அமைப்புகளுக்கு கான்ட்ராக்ட் அடிப்படையில் வழங்கி வருகிறது.இந்த நிறுவனத்தின் மின்னஞ்சல்களை தான் விக்கிலீக்ஸ் தற்போது வெளியிட்டுள்ளது. இவை 2004-ம் ஆண்டு ஜூலை முதல் கடந்த டிசம்பர் வரை பரிமாறப்பட்ட மின்னஞ்சல்கள்.
ஸ்டிராட்ஃபோர் நிறுவனம் யார் யார் மூலம் ரகசிய தகவல்களை திரட்டுகிறது, இதற்காக அவர்களுக்கு தரப்படும் சம்பள விவரம், தகவல் சேகரிக்க ஸ்டிராட்ஃபோர் பயன்படுத்தும் வழிகள் ஆகியவை இதன்மூலம் அம்பலமாகியுள்ளன.போபால் விஷவாயு கசிவு சம்பவம் நடந்த யூனியன் கார்பைடு நிறுவனத்தின் துணை நிறுவனமான டவ் கெமிக்கல் நிறுவனம் மற்றும் அரசு உளவு ஏஜென்சிகள், அமெரிக்க உள்துறை அமைச்சகம், அமெரிக்க கடற்படை உட்பட பல்வேறு அமைப்புகளுக்கும் ஸ்டிராட்ஃபோருக்கும் உள்ள தொடர்பு பற்றிய தகவல்களையும் விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.
கிரீஸ் யூரோ மண்டலத்தை விட்டு வெளியேற வேண்டும்: ஜேர்மனி.
கிரீசின் நிதிநிலை வலுப்பெற வேண்டும் என்றால், அந்நாடு யூரோ மண்டலத்தை விட்டு வெளியேற வேண்டும் என ஜேர்மனியின் உள்துறை அமைச்சர் ஹேன்ஸ் பீட்டர் பிரெட்ரீக் கருத்து தெரிவித்துள்ளார்.யூரோ மண்டலத்தை விட்டு கிரீஸ் விலகக் கூடாது என்று கருதிய ஜேர்மனியின் பிரதமர் ஏஞ்சலா மெர்கல்(Angela Merkel), பிரான்ஸ் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசியுடன்(Nicolas Sarkozy) இணைந்து கிரீசுக்கு பிணையநிதி அளிக்கும் முடிவுக்கு வந்தார்.
இதனைத் தொடா்ந்து பிரதமர் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்த நிலையில், உள்துறை அமைச்சர் ஹேன்ஸ் பீட்டர் பிரெட்ரீக்(Hans-Peter Friedrich) கிரீஸை யூரோமண்டலத்தை விட்டு வெளியேற சொல்வது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.மேலும் கிரீஸ் 17 நாடுகளின் ஒன்றியத்தை விட்டு வெளியேற வழங்கப்படும் தொகை எதுவும் திரும்ப கிடைக்காது என்றும் உள்துறை அமைச்சர் டெர் ஸ்பீகெல்(Der Spiegel) என்ற ஆங்கில பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே மெக்சிகோ நகரில் நடந்த ஜி20 நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கியாளர் கலந்து கொண்ட கூட்டத்தில் ஜேர்மனியின் நிதியமைச்சர் கிரீசுக்கு திரும்பத் திரும்ப நிதியுதவி வழங்குவதில் பலன்ஏதுமில்லை என்று தெரிவித்துள்ளார்.இந்த பிரச்சினை குறித்து அடுத்த வாரம் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி இ.எப்.எஸ்.எப் பிணையநிதியை நிரந்தர நிதியான ESM உடன் இணைந்து எதிர்வரும் ஜீலை மாதத்தில் ஒரே நிதியாக 1 டிரில்லியன் டொலரை ரொக்கமாக அளிக்கலாம் என்றும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இங்கிலாந்தில் ஆடு, மாடுகளை தாக்கிய புதிய வகை வைரஸ்.
இங்கிலாந்தில் உள்ள ஆடு, மாடுகள் புதிய வகை வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளன.இங்கிலாந்தில் உள்ள 74 பண்ணைகளில் ஆடு, மாடுகளை ஸ்க்மாலென்பெர்க்(Schmallenberg) என்னும் வைரஸ் தாக்கியுள்ளது. இதனால் குறைப்பிரசவமும், கருச்சிதைவும் ஏற்பட்டுள்ளது.இந்த வைரஸ் தாக்கப்பட்ட மாடுகளிடம் 5 முறையும், ஆடுகளிடம் 69 முறையும் சோதித்து இந்த நோயை கண்டறிந்துள்ளனர். இத்தகவலை டெஃப்ரா என்று அழைக்கப்படும் சுற்றுப்புறச்சூழல் துறை தெரிவித்தது.
தேசிய விவசாயப் பேரவை கடந்த ஆண்டு நெதர்லாந்து மற்றும் ஜேர்மனியில் இந்த நோய்த்தொற்று ஏற்பட்டதாகவும், அப்போது இந்நோய் குறித்து விரிவாக அறியப்படவில்லை என்றும் கூறியது.இந்த நோய்த்தொற்று கொசு, உண்ணி போன்றவை மூலமாக பரவுகிறது. ஆனால் இதனால் மனிதருக்கு எவ்வித பாதிப்பும் இல்லை.இன்னும் இரண்டுவாரத்தில் ஆடுகள் குட்டி ஈனும் பருவ காலம் வருவதால் இந்நோய்த் தொற்றை முற்றிலுமாக அதற்குள் அழித்து விட வேண்டும்.
சில பண்ணைகளில் கால்வாசிக்கும் அதிகமான ஆட்டுக்குட்டிகள் பிறக்கும் போது இறந்து விட்டதாக தேசிய விவசாயப் பேரவையின் தலைவர் பீட்டர் கெண்டால் தெரிவித்தார்.கடந்தாண்டில் தென்கிழக்கு இங்கிலாந்தில் போவின் காச நோய் தாக்கியதில் சுமார் 25000 மாடுகளை வெட்டிக்கொன்றனர். அதுபோலவே, தற்போது இந்த வைரஸ் உயிர் கொல்லி நோயாக பரவியுள்ளது.
சிரியா விவகாரம்: அதியுச்சதிமிர் என்று சீனாவை விமர்சித்த அமெரிக்கா.
சிரியா விவகாரம் தொடர்பாக சீனாவின் நிலைப்பாட்டை விமர்சித்து அமெரிக்கா “அதியுச்சதிமிர்” என்று கருத்து தெரிவித்திருந்தது. இக்கருத்துக்கு சீனா மறுப்பு தெரிவித்துள்ளது.சிரியா விவகாரம் தொடர்பாக சீனாவின் நிலைப்பாட்டை விமர்சித்து அமெரிக்க வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன்(Hilary Clinton) வெளியிட்டுள்ள அறிக்கையில், சிரியா குறித்த ஐ.நா.வின் தீர்மானத்துக்கு எதிராக ரஷ்யாவும், சீனாவும் வீட்டோவை பயன்படுத்தியது வெறுக்கத்தக்க ஒன்று என்று தெரிவித்திருந்தார்.
இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரபூர்வ செய்தித்தாளில், ஈராக்கில் ஏற்பட்ட அனுபவங்களுக்குப் பிறகு அரபு மக்களுக்காகப் பேச அமெரிக்காவுக்கு உரிமை கிடையாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.மேலும் இந்த விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு சிரிய ஜனாதிபதி அசாத்துக்கு மறுசீரமைப்புக்களை செய்ய வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று சீனா விரும்புவது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேலை வென்றது ஈரான்.
சர்வதேச திரைப்பட விருதான ஓஸ்கர் விருது சர்வதேச அரசியல் விவகாரங்களையும் எதிரொலித்திருப்பது ஆச்சரியப்படக்கூடிய ஒன்று.84வது ஓஸ்கர் விருதுகளில் சிறந்த வெளிநாட்டுப் படத்துக்கான ஓஸ்கர் விருதை வென்றிருக்கிறது ஈரான் திரைப்படமான "தி செபரேஷன்".
ஓஸ்கர் விருதைவிட ஈரானியர்களுக்கு இதில் அளவில்லா மகிழ்ச்சி புதைந்திருக்கிறது. அது என்னவென்றால் ஈரானின் தி செப்பரேசன் படம் போட்டியிட்டது இஸ்ரேலின் திரைப்படமான “புட்நோட்டு”டன்.ஏற்கெனவே அரசியல் அரங்கத்தில் இருநாடுகளுக்கும் இடையே எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் நிலையில் இந்த விருது பெற்றிருப்பது ஈரான் மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஈரானின் ஓஸ்கர் விருதை குறிப்பிடும் அந்நாட்டு ஊடகங்கள் அனைத்துமே "இஸ்ரேலை வென்றது ஈரான்" என்கின்றன. ஈரான் நாட்டு அரசு தொலைக்காட்சியும் இப்படித்தான் சொல்லி வருகிறது.
சிரியாவின் மீது கடுமையான தடைகள்: பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரிப்பு.
சிரியாவின் மீது ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள் மேலும் பல கடுமையான தடைகளை விதித்துள்ளதால், பொதுமக்களின் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளது.சிரியாவில் ஜனாதிபதி பஷர் அல் அசாத்துக்கு எதிரான போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது.
இந்நிலையில் பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்சில் நேற்று கூடிய ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளின் வெளிவிவகாரத்துறை அமைச்சர்களின் மாநாட்டில் சிரியா மீது மேலும் பல தடைகள் விதிக்க முடிவு செய்யப்பட்டது.அதன்படி ஜனாதிபதி அசாத்தின் நெருங்கிய உதவியாளர்கள் வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளத் தடை, சிரியாவில் இருந்து புறப்படும் சரக்கு விமானங்கள் ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளுக்குள் நுழையத் தடை, தங்கம் உட்பட விலையுயர்ந்த பொருட்களின் வர்த்தகத்திற்கு கடுமையான விதிகள் ஆகியவை விதிக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில் சிரியாவின் வடமேற்கு மாகாணமான இத்லிப்பின் சர்மின், மாரத் அல் நுமான், பின்னிஷ் ஆகிய சிறு நகரங்களில் இராணுவம் கடும் தாக்குதல் நடத்தியது. இப்பகுதிகள் அனைத்தும் எதிர்த் தரப்பின் வசம் இருப்பதால் இவற்றை மீட்பதில் இராணுவம் தீவிரம் காட்டி வருகிறது.சிரியாவின் எதிர்த் தரப்புக்கு எவ்விதத்தில் ஆதரவளிப்பது என்பது குறித்து சிரியா எதிர்ப்பு நாடுகள் மத்தியில் குழப்பம் நீடித்து வருகிறது. சில நாடுகள் எதிர்த் தரப்புக்கு ஆயுதம் அளித்து உதவலாம் எனத் தெரிவித்து வருகின்றன. அமெரிக்காவின் முக்கிய பிரமுகர்கள் கூட இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த முடிவை வரவேற்பதாக அல்கொய்தாவும், ஹமாசும் அறிவித்துள்ளன.
முற்றிலுமாக அழிந்து விடும் நிலையில் கடல் வளங்கள்.
உலகின் பல்வேறு கடல்களில், கடல் வளங்கள் அழியும் அபாயத்தில் இருப்பதாக உலக வங்கி கவலை தெரிவித்துள்ளது.
மேலும் நாடுகளின் அரசுகள், தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளும் சேர்ந்து கடல் வளங்களை பாதுகாப்பதில் இணைந்து செயல்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது.இதுகுறித்து உலக வங்கி தலைவர் ராபர்ட் ஜோயெல்லிக் கூறியதாவது: அதிகளவில் மீன் பிடித்தல், கடல்வாழ் உயிரினங்களின் எண்ணிக்கை குறைதல் உட்பட பல்வேறு காரணங்களால் கடல் வளங்கள் அழியும் அபாயம் உள்ளது. கடலின் மீன்பிடி இடங்களில் 85 சதவிகித இடங்கள் முழுவதும் அதிகமாக சுரண்டப்பட்டு விட்டன அல்லது காலியாகி விட்டன.
இப்படி அழிந்து போன உயிரினங்களில் முதல் 10 இடங்களில் இருந்தவையும் அடங்கும். உலகின் பாதியளவு மீன்களையாவது காப்பாற்றுவது உட்பட பணிகளை அடுத்த 10 ஆண்டுகளில் நாடுகள் இணைந்து பணியாற்றுவதற்கான பல்வேறு இலக்குகளை உலக வங்கி முன்வைத்துள்ளது.பாதுகாக்கப்பட வேண்டிய கடல் பகுதிகளை இரு மடங்காக அதிகரிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
ஈரானை யார் தாக்கினாலும் நாங்கள் எதிர்ப்போம்: ரஷ்யா.
ஈரான் மற்றும் சிரியா மீது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பல்வேறு தடைகளை விதித்துள்ள நிலையில், ரஷ்யா இருநாடுகளுக்கு ஆதரவு அளித்துள்ளது.இதுகுறித்து ரஷிய பிரதமர் விளாடிமிர் புடின் ரஷியாவின் வெளிநாட்டு கொள்கை பற்றி ஒரு கட்டுரையில் கூறியிருப்பதாவது: ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருப்பதாக கூறி அந்த நாட்டுக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள். இது தேவையற்ற செயல்.
ஈரான் நாட்டின் மீது யார் தாக்குதல் நடத்தினாலும் நாங்கள் எதிர்ப்போம். அதன் விளைவுகள் கடுமையாக இருக்கும்.அதேபோன்று சிரியாவுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் சில அரபு நாடுகளும் நெருக்கடி கொடுத்து வருகின்றன. ஐக்கிய நாட்டு சபையின் அனுமதின்றி எந்த ஒரு நாடும் சிரியா மீது தாக்குதல் நடத்தக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவிடம் மன்னிப்பு கோரியது ஆப்கானிஸ்தான்.
ஆப்கானிஸ்தானில் தற்போது தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் அமெரிக்காவிடம் ஆப்கானிஸ்தான் மன்னிப்பு கோரியுள்ளது.ஆப்கானிஸ்தானில் குர்ஆன் எரிக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு தொடர் கலவரங்கள் நடந்து வருகிறது.இந்நிலையில் அமெரிக்காவுக்கு எதிராக ஆப்கானிஸ்தானில் காபூலில் உள்ள உள்துறை அமைச்சக அலுவலகத்தில் தீவிரவாதி ஒருவர் சனிக்கிழமை நுழைந்து அமெரிக்கப் படை வீரர்களைச் சுட்டுக் கொன்றார்.
இதுகுறித்து அமெரிக்க இராணுவத் தலைமையக ஊடகச் செயலர் ஜார்ஜ் லிட்டில் தெரிவிக்கையில், தீவிரவாதிகளின் இச்செயல் ஏற்றுக் கொள்ள முடியாதது, இச்சம்பவத்துக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.எனவே இச்சம்பவத்துக்கு அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லியோன் பனெட்டாவிடம், ஆப்கான் பாதுகாப்பு அமைச்சர் வார்டக் தொலைபேசியில் மன்னிப்பு கோரியதாக அமெரிக்க இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.
ஒசாமாவின் வீடு முற்றிலுமாக இடித்து தரைமட்டம்.
பாகிஸ்தானின் அபோதாபாத்தில் ஒசாமா பின்லேடன் தங்கியிருந்த வீடு முற்றிலுமாக இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.அல்கொய்தா இயக்கத்தின் தலைவர் ஒசாமா பின்லேடன் கடந்தாண்டு மே மாதம் அமெரிக்கா படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.பின் அவரது உடல் புதைக்கப்பட்டால் அந்த இடத்தை தீவிரவாதிகள் புனித இடமாக மாற்றி விடுவர் என்று கருதிய கடலில் வீசி விட்டனர்.
சுட்டுக் கொல்லப்பட்ட பின், பின்லேடன் தங்கியிருந்த வீட்டுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. அந்த வீட்டைப் பார்வையிட வேண்டும் என்று பத்திரிகையாளர் மற்றும் வேறு நாட்டு தூதரக அதிகாரிகள் பலர் கோரிக்கை விடுத்தனர்.பின்லேடனின் வீடு இடிக்கப்படாமல் இருந்தால் தீவிரவாதிகள் அதனையும் நினைவுச் சின்னமாக்கி விடுவர் என்று கருதி வீட்டை இடிக்க உத்தரவிட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்த உத்தரவு யாரால் பிறப்பிக்கப்பட்டது எனத் தெரியவில்லை. எனவே பலத்த பாதுகாப்புடன் சனிக்கிழமை இரவு வீட்டை இடிக்கும் பணி தொடங்கி, நேற்று முற்றிலுமாக முடிவடைந்து விட்டது.இதுகுறித்து பாகிஸ்தான் அதிகாரிகள் கருத்து ஏதும் தெரிவிக்க மறுத்துவிட்டனர். இந்த வீட்டில் பின்லேடன், பின்லேடனின் 3 மனைவிகள், 16 குழந்தைகள் உட்பட 27 பேர் தங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவை தோற்கடிக்கும் வகையில் விமான நிலையத்தை அமைக்க சீனா முடிவு.
அமெரிக்காவின் அட்லாண்டா சர்வதேச விமான நிலையத்தை தோற்கடிக்கும் வகையில், உலகின் மிகப் பெரிய விமான நிலையத்தை நிர்மாணிக்க சீனா முடிவு செய்துள்ளது.அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தின் அட்லாண்டா நகரில் உள்ள ஹார்ட்ஸ்பீல்டு - ஜாக்சன் சர்வதேச விமான நிலையம் தான், விமானப் போக்குவரத்தில் உலகின் மிகப் பெரிய விமான நிலையமாக கருதப்படுகிறது.இந்நிலையில் அதை தோற்கடிக்கும் வகையில் பீஜிங்கின் தென் கிழக்கில் உலகின் மிகப் பெரிய சர்வதேச பயணிகள் விமானப் போக்குவரத்து நிலையம் ஒன்றை அமைக்க சீனா முடிவு செய்துள்ளது.
மொத்தம் 15 பில்லியன் டொலர் செலவில் அமையக் கூடிய இந்த நிலையம் பீஜிங்கிற்கும், ஹேபெய் மாகாணத்தின் லாங்பாங் நகருக்கும் இடையில் உள்ள பகுதியில் நிறுவப்படலாம் எனத் தெரிகிறது.இந்த விமான நிலையத்தில் மொத்தம் ஒன்பது ஓடுபாதைகள் அமைக்கப்படும். ஆண்டுக்கு 13 கோடி பயணிகள் வந்து செல்வர். 55 லட்சம் டன் சரக்குகள் கையாளப்படும்.
அதேநேரம் இந்த புதிய விமான நிலையம், நெடுஞ்சாலைகள், சரக்குப் போக்குவரத்து சாலைகள், கிராமப்புறச் சாலைகள் ஆகியவற்றை இணைக்கும் மையமாகவும் திகழும்.பீஜிங்கில் ஏற்கனவே நான்யுவான் விமான நிலையம் மற்றும் பீஜிங் சர்வதேச விமான நிலையம் என இரண்டு நிலையங்கள் உள்ளன. இவற்றில் பீஜிங் விமான நிலையத்தில் ஆண்டுக்கு ஏழரைக் கோடி பயணிகள் வந்து செல்கின்றனர்.
அமெரிக்க விமானம் பாகிஸ்தானில் சுட்டு வீழ்த்தப்பட்டது.
பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள வஜிரிஸ்தானின் வடக்குப் பகுதியில் அமெரிக்காவின் ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.வஜிரிஸ்தானின் மலைப் பகுதியில் பதுங்கியுள்ள தலிபான், அல்கொய்தா தீவிரவாதிகள் வன்முறையில் ஈடுபட்டு வருகிறார்கள்.இவர்கள் அவ்வப்போது ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் அத்துமீறி அங்குள்ள தீவிரவாதிகளுக்கு எதிராகப் போரிட்டு வரும் அமெரிக்கப் படையினரைத் தாக்கி வருகின்றனர்.
இதனால் இப்பகுதியில் பதுங்கியுள்ள தீவிரவாதிகளைக் கடந்த சில ஆண்டுகளாக ஆளில்லா விமானம் மூலம் அமெரிக்கா தாக்கி வருகிறது.இந்நிலையில் மிரான்ஷா பகுதியில் பறந்து கொண்டிருந்த ஆளில்லா விமானம் சில நாள்களுக்கு முன் விழுந்து நொறுங்கியது. அப்பகுதியை முற்றுகையிட்ட தலிபான் தீவிரவாதிகள் விமானத்தின் பாகங்களை தூக்கிச் சென்று விட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விமானம் தலிபான் தீவிரவாதிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக வந்த தகவலை அமெரிக்க அலுவலகம் மறுத்துள்ளது.கடந்த வாரம் அமெரிக்க இராணுவ வீரர்கள் நடத்திய தாக்குதலில் 13 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தாலி சொகுசு கப்பலில் தீ விபத்து: மீட்பு பணிகள் தீவிரம்.
இந்திய பெருங்கடலில் உள்ள மடாகாஸ்கர் என்ற தீவிலிருந்து செசெல்ஸ் தீவுக்கு “தி கோஸ்டா அல்லீக்ரா” என்ற இத்தாலி சொகுசு கப்பல் பயணமானது.இக்கப்பலில் 1050 பேர் பயணம் செய்தனர். அவர்களில் 636 பேர் பயணிகள், 413 பேர் கப்பல் ஊழியர்கள் ஆவர்.தி கோஸ்டா அல்லீக்ரா, செசெல்ஸ் தீவு அருகே சென்றபோது கப்பலில் உள்ள ஜெனரேட்டர் அறையில் திடீரென தீப்பிடித்தது. இதையடுத்து மின் விளக்குகள், குளிர்சாதன கருவிகள், அவசர தேவைக்கு பயன்படுத்தப்படும் மின்சாதனங்கள் அனைத்தும் செயலிழந்தன.
இதனால் கப்பல் இருளில் மூழ்கியது. தகவல் தொடர்பும் துண்டிக்கப்படும் நிலை ஏற்பட்டது.இதைத் தொடர்ந்து பயணிகளும் ஊழியர்களும் தவிப்புக்குள்ளானார்கள். மறுபக்கம் அந்த பகுதியில் சோமாலியா கடற்கொள்ளையர்களின் நடமாட்டமும் உள்ளது.எனவே இந்த விபத்து குறித்து இத்தாலி கடற்பாதுகாப்பு படைக்கு கப்பல் கப்டன் தகவல் கொடுத்தார்.இதையடுத்து மீன்பிடி படகுகளும், கடற்படை ரோந்து கப்பல்களும் அங்கு விரைந்துள்ளன. இதற்கிடையே கப்பல் ஜெனரேட்டர் அறையில் பிடித்த தீ மேலும் பரவாமல் அணைக்கப்பட்டது.
பயணிகளுக்கு தேவையான உணவு பொத்தலங்கள் ஹெலிகொப்டர் மூலம் வழங்கப்பட்டுள்ளன. தற்போது, கப்பலில் பயணிகள் பத்திரமாக இருப்பதாகவும் மீட்பு பணிகள் விரைவில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த ஜனவரி மாதம் இத்தாலியின் கோஸ்டாகன்கார்டியா என்ற பயணிகள் சொகுசு கப்பல் விபத்துக்குள்ளாகி 32 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.
நோபல் பரிசு 2012: அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி கிளிண்டன் பெயர் சிபாரிசு.
இந்த ஆண்டிற்கான நோபல் பரிசுக்கு அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி கிளிண்டன் சிபாரிசு செய்யப்பட்டுள்ளார்.நோபல் பரிசு என்பது அறிவியலில் ஒப்பற்ற ஆய்வு மேற்கொண்டு வெற்றி பெற்றவர்கள், சமூகத்திற்காக தொண்டாற்றியவர்களுக்கு வழங்கப்படும் உலகில் மதிக்கத் தகுந்த விருதுகளுள் ஒன்றாகும்.
இந்நிலையில் 2012ம் ஆண்டிற்கான உலக அமைதிக்கு பாடுபட்டவர்களுக்கான நோபல் பரிசுக்குரியவர்கள் தெரிவுசெய்யப்பட உள்ளனர்.அதற்காக 231 பெயர்கள் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. அவர்களில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி கிளிண்டனும் ஒருவர். இவர் தவிர, ஜேர்மனியின் முன்னாள் ஜனாதிபதி ஹெல்மட் கோல், உக்ரைன் முன்னாள் ஜனாதிபதி யூலியா டிமோ சன்கோ, அமெரிக்க ராணுவ வீரர் பிரட்லி மேன்னிங்கும் அடங்குவர்.
இவர்களில் ஒருவருக்கு உலக அமைதிக்கு பாடுபட்டவர்களுக்கான நோபல் பரிசு வருகிற ஒக்ரோபர் மாதம் வழங்கப்படுகிறது. இந்த தகவலை நோபல் நிறுவன தலைவர் லகர் லங்டெஸ்டர்டு தெரிவித்துள்ளார்.கடந்த ஆண்டு 241 பெயர்கள் சிபாரிசு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
செயற்கை கரு முறைக்கு போப் ஆண்டவர் எதிர்ப்பு.
செயற்கையான முறையில் கருவை உருவாக்கும் முறைக்கு தடை ஏற்படுத்த வேண்டும் என்று போப் ஆண்டவர் 16ம் பெனடிக்ட் கருத்து தெரிவித்துள்ளார்.மலட்டுத்தன்மை குறித்து ரோமிலுள்ள வாடிகன் நகரில் மூன்ற நாள் மாநாடு நடைபெற்றது. இறுதி நாளான சனிக்கிழமை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போப்பாண்டவர் மேற்கண்ட கருத்தை தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியது: செயற்கை முறையில் கரு உருவாக்குதலைத் தடை செய்ய வேண்டும். தம்பதிகளின் இயற்கையான இணைவின் மூலமே மனித உயிர்கள் உருவாக வேண்டும்.செயற்கை முறையில் கரு உருவாதல் வியாபாரமயமானது. மோசமான ஒன்று. படைப்புத் தொழிலை அது எடுத்துக் கொள்கிறது. இயற்கையான முறையிலான கருத்தரித்தலில் தம்பதிகளுக்கிடையே உயிரியல் ரீதியாக மட்டுமல்லாது, ஆன்மிக ரீதியாகவும் அன்பு பரிமாறிக் கொள்ளப்படும். அதே சமயம் மலட்டுத் தன்மை குறித்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF