Sunday, February 19, 2012

உலக அறிவியலின் உச்சம் - ஒரு கற்பனைக் கதை!


கிபி 2551 அறிவியல் உலகம் தன் உயரத்தை எட்டி இருந்தது, யாரும் வேலைக்குச் செல்லத் தேவை இல்லாமல், அனைத்தையும் ரோபோக்களே கவனித்துக் கொண்டிருந்தன, விவசாயம் முதல் வாகனங்கள் ஓட்டுவது வரை ரோபோக்கள் செய்து கொண்டிருந்தன, அரசு அமைப்புகள் பல்வேறு இனங்களையும் மனிதர்களையும் போதிய அளவு பாதுகாத்தால் போதும் என்ற எண்ணத்தில் அதற்கேற்ற உற்பத்தையை மட்டும் அனுமதித்து அல்லது செய்து வந்தன, முன்பெல்லாம் அலுவலகம் சென்றுவருவார்கள் என்பதை ஆவணங்கள் பார்த்து மக்கள் தெரிந்து கொண்டனர். உண்ணுவதும், உறங்குவதும் விரும்பிய இடங்களுக்குச் சென்றுவருவதும் தான் பொழுது போக்கு, திரைப்படங்களும் ரோபாக்களால் உருவாக்கப்பட்டு அதில் மனிதர்கள் நடிப்பது போன்றும் பல்வேறு கதைகளாக நகைச்சுவை, சண்டை, பாரம்பரிய படங்கள் எடுக்கப்பட்டன, அனைத்தும் இலவசம் தான்.


ஒரு படத்தைப் பற்றிய முன்னோட்டங்களும், அதனைப் பார்த்தவர்களின் விமர்சனம் வைத்து படம் பார்க்க விரும்புவர்கள் தேர்ந்தெடுக்கலாம், அவற்றை திரையிட்டும் பார்க்கத் தேவையில்லை, படத்தின் சில்லை கண்ணியில் பொருத்தி அதன் முன் அமர்ந்தாலே படத்திற்கு ஏற்றவாறு முப்பரிமானம் மற்றும் நான்கு பரிமாண முறையில் பார்த்துவிட்டதாக மூளைக்குள் உணரவைக்கப்படும், ஒரு படம் பார்க சில வினாடிகளே என்ற வகையில் அசதியாக இல்லை என்றால் ஒருவர் மூளையின் திறனுக்கு ஏற்ப ஒரு நாளைக்கு ஐம்பது படங்களைக் கூட பார்த்துவிடும் திறன் பெற்றிருந்தனர். திரைப்படம் மட்டுமின்றி கலைநிகழ்ச்சிகள், இசை ஆகியவையும் கூட கணிணிகளால் தானியக்கமாக உருவாக்கப்பட்டு அவை மெய் நிகராக விரும்பியவர்கள் சில விநாடிகளில் நேரிடையாக பார்த்த அனுபவங்கள் கிடைக்கும் படியான அறிவியல் வளர்ச்சிகளில் வாழ்ந்தனர்.

மனித உற்பத்திக்கு திருமணம் தேவை இல்லை என்ற அடிப்படையில் எவரும் திருமணம் செய்தி கொள்ளாமல் பெற்றோர்களே இல்லாமல் உற்பத்தி செய்யப்பட்டவர்களாகவும் தனித்து வாழ்பவர்களாகவும் இருந்தனர், ஓரளவு மன வளர்ச்சி எட்டியவுடன் உருவ இன அமைப்பிற்கேற்ற மொழிகள் அவர்கள் மூளைக்குள் திணிக்கப்பட்டு வெளியே அனுப்பட்டு அங்கங்கே வாழ்ந்து வந்தனர், தகவல் பரிமாற்றம் மற்றும் பேசிக் கொள்ள மொழிகளின் இணைப்பு தேவையின்றி ஒருவர் ஒரு மொழியில் தேவையான போது பேச மற்றவர் தாம் அறிந்துள்ள மொழியில் அதனை புரிந்து கொள்ளும் வகையில் அவர்களின் காதுகளின் பொருத்தி இருந்த கருவிகள் உள்வாங்கி மொழி மாற்றி கேட்கும் படி உதவி செய்தன.


மனித உடலின் அடிப்படை உந்துதலான தேவைக் கூட தேவையின் போது அதை அடைந்துவிட்டதாக மூளையில் உணரவைக்கபப்டும் கைக்கடிகாரங்கள் எல்லோரிடமும் இருந்தது, அழகு ஈர்ப்பு என்ற சொல்களெல்லாம் மறைந்து போக எவரும் எவரையும் சார்ந்து வாழாத நிலைதான்.ஒருவரின் அன்றாட வேளைகள் என்பது காலை எழுந்து காலைகடன் உள்ளிட்டவைகளை முடித்து உணவு உண்பது மற்றும் முழுக்க முழுக்க பொழுது போக்கு பின்பு உடல் அசந்தால் தூங்குவது என்பது மட்டுமே. இதைத் தவிர்த்து மனிதர்கள் செய்ய வேண்டிய வேலைகள் என்பற்கு வேறு வேலைகள் இல்லாமல் அனைத்தையும் ரோபோக்கள் தான் செய்து வந்தன. மனிதர்களுக்கு நேரங்கள் மிகுதியாகவே கிடைத்தன, ஜீன்கள் சரிசெய்யப்பட்டு எழும்புத் தேய்மானத்தில் உடல் தளர்வுரும் வரை ஆயுள் 120 ஆண்டுகள் என்று வாழ்ந்தனர். அவர்கள் இறந்த பின்னும் கூட அவர்களின் மூளையை செயல்படுத்தி அவர்களின் அறிவுக்கூறுகள், அனுபவங்கள் ஆகியவைகள் ஆவணங்களாக சேமிக்கப்பட்டன

மனித வாழ்க்கை என்பது உண்ணுவது ஊர் சுற்றுவது, ஓய்வெடுப்பது மற்றும் பொழுது போக்குவது என்பதாக மட்டுமே இருந்தது, வெளியே செல்வது என்பது சுற்றிப் பார்க்க மட்டுமே என்ற நிலையில் விரும்பியவர்கள் சென்றுவந்தனர், விரும்பாதவர்கள் மெய்நிகராக அந்தக் காட்சிகளை சில்லுகள் மூலமாக உள்வாங்கிக் கொண்டிருந்தனர், சிலர் விலங்குகளை வளர்த்து பொழுது போக்கினர். மனிதர்களும் எந்திர மனிதர்களுக்கும் மன அளவில் வேறுபாடு இல்லாமல் இருந்தது, பணம் ஈட்டுவதற்கான தேவை என்பதே அன்று இல்லை. உள்நாட்டு, வெளிநாட்டு போர் மற்றும் அதற்கான தேவை எதுவுமே இல்லை. வேற்றுகிரகவாசிகள் ஊடுறுவினால் அதை அழிப்பதற்கு ஏராளமான கருவிகளின் தாயார் நிலையில் அவைகள் இருந்தன. சூரிய குடும்பக் கோள்கள் அனைத்திற்கும் ரோபக்கள் அனுப்பப்பட்டு கோள்களையும் வேற்று கிரகவாசிகளின் ஊடுறுவல் கூறுகள் பற்றி ஆராய்ந்து கொண்டிருந்தனர்.


மாசுக்கட்டுப்பாடு, புவிவெப்பங்கள் கூட கட்டுக்குள் தான் இருந்தன, ஆனாலும் இயற்கைச் சீற்றம், நில அதிர்வு ஆகியவற்றை ஒன்றும் செய்யமுடியவில்லை. எதோ ஒரு நாள் தொடர்ச்சியான விண் கற்கள் மற்றும் சூரிய தீப்பிழம்பு பொழிவால் அனைத்து மின்னனு கருவிகளும் செயல் இழக்க, புவி எங்கும் நெருப்புப் பிழம்புகள் அதன் கட்டுக்கடங்காத வெப்பம் மனிதர் உட்பட அனைத்தும் மடிந்தன, அழிந்தன, எரிந்து சாம்பல் ஆகின அடுத்து தொடர்சியாக மழை பொழிந்தது.

மீண்டும் கற்காலம் துவங்கியது........

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF