Monday, February 13, 2012
ஸ்டீவ் தொடர்பில் கசிந்த அதிர்ச்சித் தகவல்கள்!
தொழில்நுட்ப உலகின் தந்தை என பலரால் வர்ணிக்கப்படும் அப்பிள் நிறுவனத்தின் ஸ்தாபர் ஸ்டீவ் ஜொப்ஸ் தொடர்பில் அதிர்ச்சிகரமான தகவல்கள் சில அமெரிக்க புலனாய்வுத் துறையின் அறிக்கையில் இருந்து தெரியவந்துள்ளதுஅமெரிக்காவில் ஜோர்ஜ். எச்.டபிள்யூ. புஷ்ஷின் அரசாங்கத்தில் ஸ்டீவ் ஜொப்ஸிற்கு முக்கிய பதவியொன்றை வழங்க உத்தேசிக்கப்பட்டிருந்தது.இதற்காக எப்.பி.ஐ. உளவுப் பிரிவினரால் ஜொப்ஸ் தொடர்பில் விசாரணைகள் சில மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கென ஆவணங்கள் பலவும் திரட்டப்பட்டுள்ளன.
இவற்றில் ஜொப்ஸின் நண்பர்கள், அவரிடம் வேலைபார்த்த ஊழியர்கள் அவர் தொடர்பில் வழங்கிய செய்திகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன. எனினும் அவர்களுடைய பெயர்கள் வெளியிடப்படவில்லை. கடந்த 1991 ஆம் ஆண்டுப்பகுதியில் தயாரிக்கப்பட்ட 191 பக்கங்களைக் கொண்ட இவ்வறிக்கை தற்போது எப்.பி.ஐ. இன் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது.
தகவல்களுக்கான சுதந்திரம் (Freedom of Information Act) என்ற சட்டத்தின் அடிப்படையில் பலரின் வேண்டுகோளுக்கிணங்க இவ் அறிக்கையானது வெளியிடப்பட்டுள்ளது. இதிலிருந்து ஸ்டீவ் ஜொப்ஸ் தொடர்பில் பல அரிய வெளியுலகினர் அறிந்திராத தகவல்கள் வெளியாகியுள்ளன.
http://www.washingtonpost.com/business/technology/fbis-steve-jobs-file-he-will-distort-reality--to-achieve-his-goals/2012/02/09/gIQAWJfU1Q_story.html
ஜொப்ஸ் தொடர்பில் ......
ஜொப்ஸ் நம்பத்தகுந்தவரோ, நாணயமானவரோ இல்லையென அவரின் நீண்டகால நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார். தனது இலக்குகளை எட்டுவதற்காக எதனையும் செய்யவார். நிஜத்தினைக்கூட மாற்றிவிடும் தன்மை கொண்டவர். தலைக்கனம் கொண்டவர் என்பதுடன் மற்றையோரை இலகுவில் மதிக்கும் தன்மை அற்றவர்.
ஜொப்ஸ் சட்டவிரோத போதைப் பொருட்களை உபயோகித்ததாகவும் சிலர் தெரிவித்துள்ளனர். கடந்த 1985 ஆம் ஆண்டு ஜொப்ஸ் அப்பிள் நிறுவனத்தில் பணிபுரியும் போது குண்டுத்தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தனது உறவினர்கள் சிலருக்கு இவர் உதவிசெய்யவில்லை. இவ்வாறான பல தகவல்கள் ஜொப்ஸ் தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள போதிலும் இவற்றில் சில தகவல்கள் ஏற்கனவே தொழில்நுட்ப உலகில் பரவலாகப் பேசப்பட்டன. அவர் போதைப்பொருள் உபயோகித்ததனை அவரே ஒத்துக்கொண்டுள்ளார்.
குறிப்பாக ஜொப்ஸ் கடும் போக்குடையவர் எனவும் அவர் தனது ஊழியர்களின் கருத்துக்கு முன்னுரிமை அளிப்பதில்லையெனவும் குற்றஞ்சாட்டப்பட்டது.இதுமட்டுமன்றி அப்பிளின் பொருட்களைத் தயாரிக்கும் சீனாவில் உள்ள 'பொக்ஸ்கோன்' நிறுவனத்தில் ஊழியர்களின் நலனில் ஸ்டீவ் மற்றும் அப்பிள் நிர்வாகம் சிறிதும் அக்கறை காட்டவில்லையென பல சர்ச்சைகள் எழுந்தன. அந்நிறுவனத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்கள், மன உளைச்சலால் ஊழியர்கள் தற்கொலை செய்துகொண்டமை தொடர்பில் ஸ்டீவுக்கு பலமுறை அறிவித்த போதிலும் அவர் அது தொடர்பில் அக்கறை செலுத்தவில்லை என அந்நிறுவனத்தின் ஊழியர்களும் மனித உரிமை அமைப்புகளும் கவலை தெரிவித்திருந்தன.
இவ்வாறான பல குற்றச்சாட்டுக்கள் ஜொப்ஸ் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும் தொழில்நுட்ப உலகில் ஜொப்ஸிற்கு நிகர் என்றுமே ஜொப்ஸ்தான் என வாதாடும் ஒரு சாராரும் இருக்கவே செய்கின்றனர். ஜொப்ஸின் விடாமுயற்சி மற்றும் உழைப்பினாலேயே அப்பிளின் ஐ பொட் முதல் ஐ போன் வரை உருவாகியமை யாரும் மறுக்கமுடியாது. அவர் ஒரு கடும் உழைப்பாளி. புற்றுநோயால் போராடிக்கொண்டிருந்த தருணத்திலும் தனது நிறுவனத்தின் நலனிலேயே அக்கறை கொண்டிருந்தார்.
அவர் தொழில்நுட்ப பொறியியலாளராக இல்லாத போதிலும் பலருக்கு இல்லாத அசாத்திய அறிவுத் திறமை ஜொப்ஸிற்கு இருந்தாக அவரது நண்பர்களில் சிலர் தெரிவிக்கின்றனர். ஜொப்ஸ் தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள அறிக்கையிலிருந்து கசிந்துள்ள தகவல்களில் பல அவரைச் சேர்ந்தவர்களால் வழங்கப்பட்டவையே. இதில் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளும் ஆதிக்கம் செலுத்தியிருக்கலாம்.
எனவே ஒரு சிலரின் கருத்துக்களை வைத்து அவரைக் கெட்டவர் என முத்திரை குத்திவிட முடியாது. எது எவ்வாறு இருப்பினும் தொழில்நுட்ப உலகில் ஸ்டீவ் ஜொப்ஸ் மற்றும் அப்பிளின் பெயரை அவ்வளவு இலகுவாக மறந்து விட முடியாது. இசை முதல் ஸ்மார்ட் போன் வரை அனைத்துக்கும் முன்னோடியாகத் திகழும் அப்பிள் பொருட்களை உலகுக்குத் தந்த ஜொப்ஸை அவ்வளவு இலகுவாக மறக்கமுடியுமா என்ன?
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF