Friday, February 10, 2012

NEWS OF THE DAY.

கல்பிட்டியில் ஐந்து மில்லியன் பெறுமதியான ஹெரோயின் மீட்பு.
கல்பிட்டியில் ஐந்து மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. 1180 கிராம் எடையுடைய போதைப் பொருட்களை மீட்டுள்ளதாகவும் , போதைப் பொருள் கடத்தலுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் கல்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோதமாக தொழில் புரிந்து வந்த இந்தியப் பிரஜைகள் நால்வர் வாகரையில் கைது.
சுற்றுலா விசாவில் வந்து மட்டு. வாகரைப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக தொழில்புரிந்து வந்த இந்தியப் பிரஜைகள் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த இந்தப் பிரஜைகள் நால்வரில்  மூவர் வாகரை சுற்றுலா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் 22ஆம் திகதி வரை அவர்கள் மூவரையும்  விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.
மற்றைய நான்காவது நபருக்கு 50ஆயிரம் ரூபா அபராதத்துடன் ஒருவருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சுதந்திர தினத்தன்று கிடைத்த வாய்ப்பை தவறவிட்டார் ஜனாதிபதி மகிந்த: ஜெஹான் பெரேரா.
இலங்கையின் சுதந்திர தின நிகழ்வு அன்று தமிழர்களுக்கும் சர்வதேசத்துக்கும் நல்லெணத்தை காட்டுவதற்கு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தவறிவிட்டார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளதுஅநுரதப்புரத்தில் இம்முறை இடம்பெற்ற சுதந்திரதின நிகழ்வுகளில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஜனாதிபதி தேசியவாதிகளுக்கு உரமூட்டும் வகையிலேயே கருத்துக்களை வெளியிட்டார் என்று சமூக அமைப்பின் தலைவரான ஜெஹான் பெரேரா தெரிவித்துள்ளார்.
கடந்த 50 வருடங்களில் காணாத சுதந்திரம் கடந்த மூன்று வருடங்களில் பெற்றுக் கொடுக்கப்பட்டது. தமது அரசாங்கத்தினால், பல அபிவிருத்திதிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன போன்ற ஜனாதிபதியின் கருத்துக்கள் முன்னர் இருந்த அரசாங்கங்களின் அபிவிருத்தி மற்றும் நாட்டை கட்டியெழுப்பிய திட்டங்களை மழுங்கடிப்பது போல அமைந்திருந்தன.
கல் ஓயா திட்டம், மஹாவலி திட்டம் ஆர். பிரேமதாஸவின் 10 லட்சம் வீடடைம்பு போன்ற இலங்கையில் முன்னைய அரசாங்கங்களினால் மேற்கொள்ளப்பட்ட பாரிய அபிவிருத்தி திட்டங்களாகும்
எனினும், மஹிந்த ராஜபக்சவின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு இன்னும் பெரிய கப்பல்கள் வரமுடியாமல் உள்ளன.
நுரைச்சோலை அனல் மின்சார மையத்தில் தொடர்ந்தும் தீவிபத்துக்கள் மாத்திரமே நிகழ்கின்றன. தென் அதிவேகப் பாதையும் கொழும்பை அழகுப்படுத்தும் திட்டமும் மாத்திரம் ஓரளவு முன்னெடுக்கப்படுகிறது என்று ஜெஹான் பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, நல்லிணக்கம் என்ற அடிப்படையில் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சில பரிந்துரைகளை சர்வதேசம் எதிர்ப்பார்ப்பதை போல சுதந்திர தின நிகழ்வு அன்று ஜனாதிபதி நடைமுறைப் படுத்தியிருக்கலாம்.இதன்மூலம் சர்வதேசம் எதிர்ப்பார்க்கின்றபடி அந்த ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும் திட்டத்தை ஆரம்பித்திருக்கலாம்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் 9277 வது பரிந்துரையின்படி இலங்கையின் தேசியக்கீதம் தமிழ் சிங்களம் என்ற இரண்டு மொழிகளில் சுருதி மாறாமல் பாடப்படவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனை ஜனாதிபதி சுதந்திர தின நிகழ்வு அன்று நடைமுறைப்படுத்தியிருக்கலாம் அதன்மூலம் சர்வதேசத்துக்கு கற்றுக்கொண்ட பாடங்கள் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதாக ஒரு செய்தியை அறிவித்திருக்க முடியும்.
இது எதிர்வரும் மார்ச்சில் ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு பாரிய நன்மைகளை ஏற்படுத்தியிருக்கும் என்று ஜெஹான் பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.எனினும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இந்த வாய்ப்பை தவறவிட்டமை துரதிஸ்டவசமே என்று ஜெஹான் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச உதவியை கோரி நிற்கும் மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி நஷீட்.
தமது ஆட்சியை சிறிய பொலிஸ் குழுவே கைப்பற்றியதாக தெரிவித்துள்ள மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட், தமக்கும் தமது குடும்பத்துக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். வெளிப்படுத்தப்படாத இடம் ஒன்றில் இருந்து இந்திய தொலைக்காட்சி ஒன்றுக்கு தகவல் அளித்த போதே அவர் தமது சர்வதேச உதவி தேவைப்படுவதாக குறிப்பிட்டார்.
மாலைதீவின் உயர் நீதிபதி ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் பின்னர் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் காரணமாக நஷீட் கடந்த வாரம் பதவி விலகினார்.இதனையடுத்து அவர் தற்போது யாருக்கும் தெரியாத இடம் ஒன்றில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, அவரின் மனைவி உட்பட்ட குடும்பத்தினர் இலங்கையில் தஞ்சம் கோரியுள்ளனர்.இந்தநிலையில் நஷீட்டை கைதுசெய்யுமாறு மாலைதீவின் நீதிமன்றம் நேற்று பிடியாணையை பிறப்பித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 
இலங்கை மக்கள் கட்சியில் இணையுமாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவிற்கு அழைப்பு!
இலங்கை மக்கள் கட்சியில் இணைந்து கொள்ளுமாறு முன்னாள் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சித் தலைவியும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்கவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அவரது கணவரான விஜய குமாரணதுங்கவினால் ஆரம்பிக்கப்பட்ட இலங்கை மக்கள் கட்சியின் தலைவராக சந்திரிக்கா பணியாற்றியிருந்தார்.
இந்த கட்சி தற்போதைய ஆளும் கட்சியின் பங்காளி கட்சி என்ற போதிலும் தற்போதைய ஆட்சியாளர்களினால், மக்கள் கட்சிக்கு முக்கியத்துவம் கொடுக்காத நிலையில், கட்சியின் தலைவர்கள் பெரும் அதிருப்தியடைந்துள்ளனர்.இந்த நிலையில், இலங்கை மக்கள் கட்சியின் தலைவர்கள், அந்த கட்சியின் முன்னாள் உறுப்பினரான பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரவின் மகளான ஷிருணிகாவை கட்சியில் இணைத்து கொண்டதுடன் அவருக்கு உப செயலாளர் பதவியை வழங்கினர்.இவ்வாறான சூழ்நிலையில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுக்கு கட்சியில் இணையுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள போதிலும் அவர் அதற்கு இதுவரை எந்த பதிலையும் வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது.
மக்களின் எதிர்பார்ப்பு பூர்த்தி செய்யப்படவில்லை: ஐக்கிய பிக்குகள் முன்னணி.
இலங்கையின் 64ம் சுதந்திர தினத்திலாவது முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா விடுதலை செய்யப்படுவார் என மக்கள் பெரிதும் எதிர்பார்த்ததாக ஐக்கிய பிக்குகள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் வலப்பனே சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.இந்நிலையில், மக்களின் எதிர்பார்ப்பு பூர்த்தி செய்யப்படவில்லை என வலப்பனே சுமங்கல தேரர் குற்றம் தெரிவித்துள்ளார்.
சுதந்திரத்தின் முன்னணி வழிகாட்டியான சரத் பொன்சேகா தொடர்ந்தும் சிறையில் வாடுகின்றார். கடந்த 30 ஆண்டுகளாக சுதந்திரத்தைப் பறித்து நாட்டை அழிவுப் பாதையில் இட்டுச் சென்ற விடுதலைப் புலி தலைவர்கள் சுகபோகங்களை அனுபவிக்கின்றனர் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றனர்.இந்த நாட்டுக்காக பல்வேறு தியாகங்களைச் செய்த சரத் பொன்சேகாவை விடுதலை செய்ய வேண்டும் என்ற கருணை எண்ணம் இன்னமும் இந்த அரசாங்கத்திற்கு ஏற்படவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
நாடாளுமன்றில் ரணில் இன்று விசேட உரை.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றில் இன்றைய தினம் விசேட உரையாற்றவுள்ளதாக இக்கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் ஊடகங்களுக்கு தகவல் வழங்கியுள்ளார்.
அரசாங்கத்தின் ஊழல் மோசடிகளை விமர்சனம் செய்யும் வகையில் இந்த உரை அமையவுள்ளதாகவும் நாட்டில் நல்லாட்சியை எவ்வாறு நிலைநாட்ட வேண்டும் என்பது தொடர்பிலும் ரணில் விக்ரமசிங்க உரையாற்றுவார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
துருக்கியில் இராணுவத்திற்கும், தீவிரவாதிகளுக்கும் மோதல்.
துருக்கி நாட்டின் ஈராக் எல்லைப் பகுதியில் தீவிரவாதிகளுக்கும், இராணுவத்திற்கும் இடையே கடும் மோதல் நடந்து வருகின்றது.துருக்கி நாட்டின் தென்கிழக்கு பகுதியான ஹக்காரி, பின்கோல் ஆகிய பிராந்தியங்களில்  குர்ஷித்தான் தொழிலாளர் கட்சியை சேர்ந்தவர்கள் கிளர்ச்சி செய்து வருகிறார்கள். இவர்கள் இராணுவத்துக்கு எதிராக கொரிலா முறையில் தாக்குதல் நடத்துகிறார்கள். இப்பகுதி ஈராக் எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவில் பாதுகாப்பு படையினர் தங்கி இருந்த 10 முகாம்கள் மீது திடீரென்று தாக்குதல் நடத்தினர். இதற்கு இராணுவத்தினரும் பதிலடி கொடுத்தனர்.இதில் ஒரு இராணுவ வீரர், 13 தீவிரவாதிகள் பலியானார்கள். 3 தீவிரவாதிகளை இராணுவத்தினர் சிறை பிடித்தனர். இது பற்றி ராணுவ அதிகாரி கூறுகையில், பலியான தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசிய போது தவறுதலாக வெடித்து அவர்களே அதற்கு இலக்காகி பலியாகி விட்டனர் என்று கூறினார்.
கிறிஸ்துவ மதத் தலைவர் போப் பெனடிக்ட்டுக்கு ஈரான் அழைப்பு.
கத்தோலிக்க கிறிஸ்தவ மதத் தலைவர் போப் பெனடிக்ட்டுக்கு ஈரான் அழைப்பு விடுத்துள்ளது.ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதாக அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. அணு ஆயுத திட்டங்களை நிறுத்தாவிட்டால் ஈரான் மீது இஸ்ரேல் இராணுவ தாக்குதல் நடத்தும் என்று பகிரங்கமாக மிரட்டல் விடுத்தது.இதற்கு ரஷ்யா உட்பட பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதற்கிடையில் ஈரான் விஞ்ஞானிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இதுவரை 4 பேர் பலியாகி உள்ளனர்.
இதற்கு அமெரிக்காவும் இஸ்ரேலும் தான் காரணம் என்று ஈரான் குற்றம் சாட்டியது. மேலும் ஈரான் ஜனாதிபதி முகமது அகமதி நிஜாத் கூறுகையில், உலக வரைபடத்தில் இருந்து இஸ்ரேலை அழித்துவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்நிலையில் ஈரானுக்கு வர வேண்டும் என்று போப் பெனடிக்ட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து வாடிகனுக்கான ஈரான் தூதர் அலி அக்பர் நசரி நேற்று நிருபர்களிடம் கூறுகையில், போப்பின் வருகையை ஈரான் ஜனாதிபதி முகமது மிக ஆவலுடன் எதிர்பார்க்கிறார். ஈரானுக்கு போப் வருகை தந்தால் அவருக்கு மிகச் சிறப்பான வரவேற்பு அளிப்போம் என்றார். ஆனால் போப் முடிவெடுக்கவில்லை என்று வாடிகன் அதிகாரிகள் கூறினர்.
தொடர்ந்து 23 மணி நேரம் கணணியில் கேம் விளையாடியவர் பரிதாப மரணம்.
தாய்வானில் தொடர்ந்து 23 மணி நேரம் கணணி கேம் விளையாடிய வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.தாய்வான் தலைநகர் தைபேயில் பல கணணி விளையாட்டு மையங்கள் உள்ளன. ஒரு மையத்தில் சென் ரோங்யூ என்ற 21 வயது வாலிபர் அடிக்கடி கணணி கேம் விளையாடி வந்துள்ளார்.
இந்நிலையில் கணணி மையத்தில் கேம் விளையாடி கொண்டிருந்த சென் ரோங்யூ, இருக்கையில் சரிந்தபடி இறந்து கிடந்தார். அவருடைய கைகள் கணணியின் கீ போர்டையும் மவுசையும் இறுக்கமாக பிடித்தபடி இருந்தன அவரது உடலை கைப்பற்றி காவல்துறை அதிகாரிகள் விசாரித்தனர்.விசாரணையில் அவர் தொடர்ந்து 23 மணி நேரமாக கேம் ஆடியது தெரியவந்தது. இதுகுறித்து அந்த மையத்தின் ஊழியர்கள் கூறுகையில், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு ரோங்யூ இங்கு வந்து விளையாட தொடங்கினார்.
இங்கு வரும் பலரும் தொடர்ந்து பல மணி நேரம் விளையாடுவார்கள். அதனால் அவர் இருக்கையில் இறந்தது தெரியவில்லை. தூங்குகிறார் என்று நினைத்தோம். ஆனால் நீண்ட நேரம் ஆகிவிட்டார், அவரை எழுப்ப சென்றோம். அவரது உடல் சில்லிட்டு இருந்தது. உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தோம் என்றனர்.
முன்னாள் ஜனாதிபதியை கைது செய்து நடுரோட்டில் இழுத்து சென்ற இராணுவம்.
பதவி விலகிய மாலைதீவு ஜனாதிபதி முகமது நஷீத்தை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததால், அவரை கண்டுபிடித்த இராணுவம் நடுரோட்டம் தரதரவென இழுத்துச் சென்றது.மாலைதீவில் கடந்த 2008ம் ஆண்டு வரை 30 ஜனாதிபதியாக இருந்தவர் மக்மூம் அப்துல் கயூம். அவரது சர்வாதிகார ஆட்சி முடிந்த பின் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடந்ததில் முகமது நஷீத் ஜனாதிபதியானார். துணை ஜனாதிபதியாக முகமது வாகீத் ஹசன் பொறுப்பேற்றார்.
இந்நிலையில் கயூமுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி குற்றவியல் நீதிமன்ற தலைமை நீதிபதி அப்துல்லா முகமதுவை பதவி நீக்கம் செய்ததுடன் கைது செய்து ஜனாதிபதி நஷீத் சிறையில் அடைத்தார்.இதையடுத்து எதிர்க்கட்சியினர் தலைநகர் மாலியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக காவல்துறையினரும் கிளர்ச்சியில் ஈடுபடவே இராணுவம் களத்தில் இறங்கியது.
இராணுவத்திற்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதனால் கடும் குழப்பம் ஏற்பட்டது. பிறகு இராணுவமும் நஷீத்துக்கு எதிராக திரும்பியது.இதனால் நஷீத் நேற்று முன்தினம் ராஜினாமா செய்தார். இதன் பின் துணை ஜனாதிபதி முகமது வாகீத் ஹசன் புதிய ஜனாதிபதியானார். அவர் உடனடியாக நீதிபதி அப்துல்லா முகமதுவை விடுதலை செய்தார்.இந்நிலையில் பல்வேறு குற்றச்சாட்டுகள் அடிப்படையில் நஷீத்தை கைது செய்ய மாலி நீதிமன்றம் நேற்று அதிரடியாக வாரன்ட் பிறப்பித்தது. இதற்கிடையே அவரது குடும்பத்தினர் இலங்கைக்கு தப்பியோடினர்.
அவரது ஆதரவாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். நஷீத்தை கைது செய்ய இராணுவம் தேடியது. வணிக வளாகத்தில் பதுங்கியிருந்த அவரை பிடித்த இராணுவத்தினர் அவரை நடுரோட்டில் தரதரவென இழுத்து சென்றனர்.அவரை கைது செய்ய ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் மீது இராணுவம் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியது. அப்போது தடுமாறி கீழே விழுந்த நஷீத்தை அப்படியே இழுத்து சென்றனர். இந்த காட்சிகளை தொலைக்காட்சியில் பார்த்த அவரது ஆதரவாளர்கள் பல இடங்களில் வன்முறையில் ஈடுபட்டதால், மாலைதீவில் பயங்கர கலவரம் வெடித்துள்ளது.
முன்னதாக நஷீத் நேற்று காலை அளித்த பேட்டியில், கயூமின் தூண்டுதலின் பேரில் இராணுவம் செயல்பட்டுள்ளது. என்னை துப்பாக்கி முனையில் மிரட்டியதால்தான் ராஜினாமா செய்தேன். உலக நாடுகள் உடனடியாக தலையிடாவிட்டால், நிலைமை விபரீதமாகும் என்றார்.மனித உரிமை அமைப்புகள் இதுபற்றி விளக்கம் அளிக்குமாறு புதிய அரசை வலியுறுத்தியுள்ளன.
புதிதாக அணு மின் நிலையங்கள் அமைக்க அமெரிக்கா ஒப்புதல்.
அமெரிக்காவில் 26 ஆண்டுகளுக்கு பின் முதன் முறையாக அந்நாட்டில் புதிய அணு மின் நிலையங்கள் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக அமெரிக்க அணு சக்தி ஒழுங்குமுறை கமிஷன் வெளியிட்டுள்ள செய்தியில், அமெரிக்காவில் ஜியார்ஜியா நாட்டின் ‌சதர்ன்கோ வொக்டைல் நிறுவனத்தின் தொழில்நுட்பத்துடன் இரண்டு அணு மின் நிலையம் தொடங்கப்படவுள்ளது.
இதற்கான முறையான அனுமதி கடந்தாண்டு டிசம்பர் மாதமே அணுசக்தி ஒழுங்குமுறை கமிஷனுக்கு அமெரிக்கா அரசு வழங்கிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 1986ம் ஆண்டு அமெரிக்கா புதிய அணு மின் நிலையத்தை தொடங்கியது. அதன்பிறகு எந்த அணு மின் நிலையமும் தொடங்கவில்லை.
26 ஆண்டுகளுக்கு பின் புதிய அணு மின் நிலையம் தொடங்க தற்போது பச்சைகொடி காட்டப்பட்டுள்ளது. ஆயினும் அந்நாட்டு அணுசக்தி ஒழுங்குமுறை கமிஷன் தலைவர் கிரிகோரி ஜாக்ஸோ எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், புதிய அணு மின் நிலையத்திற்கு அமெரிக்கா உரிமம் வழங்க கூடாது. கடந்தாண்டு மார்ச் மாதம் ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுனாமி தாக்கியதில் புகுஷிமா அணு மின் நிலைய பாதிப்பினை உலகம் அறியும். அது போன்ற நிலைமை வரக்கூடாது என தான் கருதுவதாக கூறினார்.
ஊழல் புகார்: தென்கொரிய நாடாளுமன்ற தலைவர் பதவி விலகல்.
லஞ்சப் புகாரை அடுத்து தென்கொரியா நாடாளுமன்றத் தலைவர் பார்க் ஹீடி(74) தனது பதவியை ராஜினாமா செய்தார்.இவர் பழமைவாத கொள்கையுடைய கிரான்ட் நேஷனல் கட்சியைச் சேர்ந்தவர். கடந்த 2008ம் ஆண்டில் கட்சியின் தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில் தனக்கு ஆதரவாக வாக்கு அளிக்குமாறு கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு லஞ்சமாக பணம் வழங்கினார் என குற்றச்சாட்டு எழுந்தது.
இதனிடையே கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஹீ டியின் உதவியாளர் 2685 டொலரை கவரில் போட்டு தனக்கு கொடுத்ததாகக் கூறி அதை திருப்பிக் கொடுத்தார். இதையடுத்து சர்ச்சை எழவே விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.இதையடுத்து நாடாளுமன்ற தலைவர் பதவி விலகினார். மேலும் ஹீ டி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தக் குற்றச்சாட்டுக்கு முழுப் பொறுப்பேற்பதாகவும், என்னை மக்கள் மன்னிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த புகார் இவரது கட்சிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் ஏப்ரலில் நடக்க இருக்கும் பொதுத் தேர்தலில் இதன் பாதிப்பு இருக்கும் என்றும் அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.தற்போது மொத்தமுள்ள 299 நாடாளுமன்ற தொகுதிகளில் 166 தொகுதிகள் ஆளும் கட்சி வசம் உள்ளது. இப்போதைய கருத்துக்கணிப்புப்படி ஆளும் கட்சியைவிட எதிர்கட்சியான ஜனநாயக ஐக்கிய கட்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
பிரதமர் கிலானி மீதான அவமதிப்பு வழக்கு ரத்தாக வாய்ப்பு.
பாகிஸ்தான் பிரதமர் கிலானி மீதான அவமதிப்பு வழக்கு ரத்தாக வாய்ப்புள்ளது என உச்சநீதிமன்ற நீதிபதி சவுத்ரி தெரிவித்துள்ளார்.பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி ஸர்தாரி மீதான ஊழல் புகார்களை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.இதனை செயல்படுத்தவில்லை எனக் கூறி பிரதமா் கிலானி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டது. இது தொடர்பாக கடந்த ஜனவரி மாதம் அவர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
எனினும் வரும் 13ம் திகதி மீண்டும் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதை ரத்து செய்ய வேண்டும் என பிரதமா் கிலானி உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார்.இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இப்திகார் சவுத்ரி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது ஜனாதிபதி ஸர்தாரி மீதான ஊழல் வழக்கை விசாரிக்குமாறு சுவிட்சர்லாந்து அரசுக்கு கடிதம் எழுதினால் பிரதமர் கிலானி மீதான அவமதிப்பு வழக்கு ரத்தாகிவிடும் என நீதிபதி சவுத்ரி தெரிவித்தார். மேலும் கிலானியின் மேல் முறையீட்டு மனுவில் இடம்பெற்றுள்ள சில பத்திகளை நீக்க வேண்டும் என்றும் கூறினார்.
நேட்டோ தாக்குதலில் 8 குழந்தைகள் பலி.
ஆப்கானிஸ்தானில் நேட்டோ படையினர் நடத்திய வான்வழித் தாக்குதலில் 8 குழந்தைகள் பலியாயினர். இதற்கு அந்நாட்டின் ஜனாதிபதி ஹர்சாய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.ஆப்கானிஸ்தானில் தலிபான்களை ஒடுக்க அமெரிக்காவின் நேட்டோ படைகள் முகாமிட்டு வருகின்றன. இதனால் அடிக்கடி பாகிஸ்தான் எல்லையில் வான்வழித் தாக்குதலையும் நடத்தி வருகின்றன.
இந்நிலையில் நேற்று ஆப்கானிஸ்தானின் கபீஸா மாகாணத்தின் நெஜ்ராப் மாவட்டத்தில் கியாவாலா கிராமப்பகுதியில் நேட்டோப் படையினர் திடீர் வான் தாக்குதல் நடத்தியதாகவும், இதில் எட்டு குழந்தைகள் பலியானதாகவும் கபீஸா மாகாண கவர்னரின் செய்தி தொடர்பாளர்  ஜனாதிபதி ஹமீத் கர்சாயிடம் ‌தெரிவித்தார்.இது போன்ற தாக்குதல்கள் பல முறை நடந்துள்ளது வருந்தத்தக்கது கண்டனத்திற்குரியது என கர்சாய் தெரிவித்தார். மேலும் இதுவரை நேட்டோ படையினர் நடத்திய வான்வழித் தாக்குதல் குறித்து விசாரிக்க குழு ஒன்றை அனுப்பி நேட்டோவிடம் விளக்கம்‌ கேட்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க வெளிவிவகாரத்துறை இணை அமைச்சர் மாலைதீவுக்கு விஜயம்.
மாலைதீவுகளில் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தை தொடர்ந்து அமெரிக்க வெளிவிவகாரத்துறை இணை அமைச்சர் மாலைதீவுகளுக்கு விஜயம் செய்யவுள்ளார்.இத்தகவலை அமெரிக்க வெளிவிவகாரத்துறையின் செய்தித்தொடர்பாளர் விக்டோரியா நியூலாண்ட் தெரிவித்துள்ளார்.
தலைநகர் வாஷிங்டனில் பத்திரிகையாளர்களை சந்தித்த விக்டோரியா நியூலாண்ட் கூறியதாவது, மாலைதீவுகளில் துப்பாக்கி முனையில் முகமது நஷீத் ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்திருப்பது சர்வதேச நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதற்கிடையே இலங்கை மற்றும் வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள ராபர்ட் பிளேக், மாலைதீவுகளுக்கும் செல்ல உள்ளதாக விக்டோரியா நியூலாண்ட் தெரிவித்துள்ளார்.இந்த பயணத்தில் மாலைத்தீவுகள் புதிய ஜனாதிபதி முகமது வாஹீத்துடன் பிளேக் தற்போதைய சூழ்நிலை குறித்து விவாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
பத்திரிகையாளர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்: ஜ.நா.
தலிபான் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் பத்திரிகையாளர் ஒருவர்  படுகொலை செய்யப்பட்டுள்ளார்.இச்செயலை ஐக்கிய நாடுகள் அமைப்பு கடுமையாக கண்டித்ததுடன் அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.இதுகுறித்து ஐ.நா அமைப்பின் ஏஜென்சி மூலம் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பாகிஸ்தானில் சமீபகாலமாக பத்திரிகை சுதந்திரம் பாதிக்கப்பட்டு வருகின்றது.
அங்கு பத்திரிகையாளர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை என்பதை நடந்த சம்பவம் காட்டுகிறது. மேலும் இவர் பாகிஸ்தானில் செயற்பட்டு வரும் வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா பிராட்கேஸ்டிங் சேவை நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.இவர் தொழுகைக்காக, ஆடிப் பெஷாவர் நகரில் உள்ள மசூதிக்கு சென்றிருந்த போது, தலிபான் இயக்க பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜேர்மனியில் கொண்டாடப்படவுள்ள உறைபனி ஏரித்திருவிழா.
ஜேர்மனியில் 15 ஆண்டுகளுக்குப் பின்பு Alstervergnuegen  என்று அழைக்கப்படுகின்ற உறைபனி ஏரித்திருவிழா இந்தவார இறுதியில் நடைபெறவுள்ளது.ஆர்டிக் பகுதியின் உறைபனியால் ஜேர்மனி நாட்டில் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் பரவிக்கிடக்கின்ற பனிக்கட்டிகளை அகற்ற பெரிய பெரிய இயந்திரங்களை ஜேர்மானிய அரசு பயன்படுத்தி வருகின்றது.
இங்குள்ள பென்குயின் பறவைகள் குளிர் தாங்காமல் குளத்தை விட்டு கரைக்கு வருகின்றன. இதனால் வெப்பம் நிரம்பிய குகைகளுக்குள் அவைகள் அனுப்பி வைக்கப்படுகின்றன. இருப்பினும் ஜேர்மனி நாட்டின் பாரம்பரியமான ஹேம்பாக் உறைபனி ஏரித் திருவிழாவிற்கு வடபகுதியில் வாழும் மக்கள் தயாராகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த ஏரித்திருவிழா பதினைந்து ஆண்டுகளுக்குப் பின்பு இந்த வார இறுதியில் நடைபெறவுள்ளது. வருகின்ற வெள்ளி, சனிக்கிழமைகளில் உணவுகளும், குளிர்பானங்களும் ஏரியின் உறைபனிப் பரப்பின் மீது வைக்கப்பட்டு இருக்கும்.உணவுகளையும் குளிர்பானங்களையும் ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டு உறைபனி ஏரித்திருவிழாவைக் கொண்டாடுவார்கள்.
மேலும் இந்த ஆண்டு பனி கடுமையாக இருப்பதால் குழாய்களில் தண்ணீர் உறைந்து கிடக்கின்றன. லோயர் சேக்ஸனி மாநிலத்தில் உள்ள ஓஸ்னாபுருக் என்ற ஊரில் உள்ள ஐஸ்கிரீம் தயாரிப்பு நிலையத்தில், தண்ணீர் உறைந்துவிட்டதால் ஐஸ்கிரீமை தயாரிக்க முடியவில்லை.ஆனால் விரைவில் குழாயில் இருக்கும் தண்ணீரை உருக்கி ஓடவிடும் முயற்சிகள் எடுக்கப்பட்டு, ஐஸ்கிரீம் தயாரிப்பு தொடங்கும் என்ற நம்பிக்கையுடன் இந்த நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் பில்டு பத்திரிகைக்குப் பேட்டியளித்துள்ளார்.
மிகவும் பரிதாப நிலையில் பழங்குடி குழந்தைகளின் கல்வி.
கனடாவின் பூர்வீக பழங்குடி மக்களுடைய குழந்தைகளின் கல்வித்தரம் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது.புதிய அறிக்கையின் படி தேசிய அளவில் பழங்குடியினக் குழந்தைகளின் கல்விமுறை முறையா இல்லை எனவும், இவர்களின் கல்வியை மேற்பார்வையிட ஒரு அறிஞர் குழுவை உருவாக்க வேண்டும் என்றும் இந்த அறிக்கை மத்திய அரசைக் கேட்டுக் கொண்டுள்ளது.
பூர்வீகக் குடிமக்களின் கல்வித்தரத்தை மதிப்பீடு செய்த ஸ்காட் ஹால்டானே, சட்டப்படி பூர்வீக குடிமக்கள் நல்ல கல்வியைப் பெறுவது அவர்களின் பிறப்புரிமையாகும் என தெரிவித்தார்.கல்வி அமைச்சர் டங்கன் தெரிவிக்கையில், நிதி ஒதுக்கீடு இவர்களின் கல்வித்துறையில் பெரிய மாற்றத்தைக் ஏற்படுத்தாது எனவும் இவர்களின் கல்விக்குத் தேவை அமைப்பு ரீதியான மாற்றங்களும் வேறு சில விடயங்களும் தான் என்றார்.
இதனை தேசியத் தலைமை நன்கு உணர்ந்திருக்கிறது. இதை தேசியக் குழுவும் அங்கீகரித்துள்ளது என அவர் தெரிவித்தார். பழமைவாதிகள் இவர்களின் கல்வித்திட்டத்தில் புதிய முறைகளைப் புகுத்துவதில் காலதாமதம் செய்யக்கூடாது எனவும் இவர்கள் தாராளமாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் விடுதலைக்கட்சியினர் தெரிவித்தனர். இதற்கு புதிய குடியரசுக் கட்சியினரும் சம்மதம் தெரிவித்தனர்.நாடாளுமன்ற உறுப்பினரான கரோலின் பெனெட், இந்த அறிக்கையில் தெரிவித்த செய்திகள் அனைத்தும் நாங்கள் ஏற்கனவே அறிந்திருந்தவை. எனினும் இத்துறையில் புகுத்தப்படும் மாற்றங்களில் படிக்கும் குழந்தை முதன்மை பெற வேண்டுமே தவிர அதற்கு செலவழிக்கும் தொகை முதன்மை பெறக்கூடாது என்றார்.
தேசிய குடியரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லிண்டா டங்கன், இந்த அறிக்கை எந்த ஆச்சரியத்தையும் தரவில்லை என்றார். எத்தனையோ அறிக்கைகள் வந்த பிறகும் கூட பிள்ளைகளின் கல்வித்தரம் அப்படியே தான் இருக்கிறது என்று சுட்டிக்காட்டினார்.பழங்குடியினரின் குழந்தைகளுக்கும், மற்ற குழந்தைகளுக்கும் இடையிலான கல்வியின் இடைவெளி அதிகமாகிக் கொண்டே போகிறது. பழங்குடி மக்களின் குழந்தைகள் தங்களுக்கு உரிய கல்வியைப் பெறக் காத்துக்கிடக்கக் கூடாது என்றும் அவர்களே முன்வர வேண்டும் எனவும் அவர் கூறினார்.
சிரியாவின் வாக்குறுதிகள் அனைத்தும் பொய்யானவை.
சிரியா ஜனாதிபதியின் வார்த்தைகள் அனைத்தும் பொய்யானவை என்றும், அவை காரியவாத வார்த்தை எனவும் பிரான்சின் வெளியுறவுத்துறை அமைச்சர் அலைன் ஜூப்பே தெரிவித்தார்.சிரியாவின் ஜனாதிபதி, ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் இனி இரத்தம் வழியும் கொடுமைகள் சிரியாவில் நடக்காது என்று தெரிவித்திருந்தார்.
ஆனால் அவ்வாக்குறுதிகள் அனைத்தும் பொய்யானது, போலியானது என பிரான்சின் வெளியுறவுத்துறை அமைச்சர் அலைன் ஜுப்பே தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில் அந்த வாக்குறுதி ”காரியவாதம்“ என்று கூறிப்பிட்டார்.சிரியாவின் வார்த்தைகளைத் தான் நம்பத் தயாராக இல்லை எனவும், தான் நினைத்ததை முடித்துக் கொள்ளவே சிரியா இது போன்ற வாக்குறுதிகளை தாராளமாக அள்ளித் தூவுகின்றது என்று ஜுப்பே பிரான்ஸ் வானொலி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார்.
மேலும் பிரிட்டிஷ் பிரதமரும் ஜுப்பேயைப் போலவே கருத்துக் கூறியிருக்கிறார். ஆசாத் ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சரிடம் செவ்வாய்கிழமை மேற்கண்ட வாக்குறுதி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.ஆனால் அடுத்த நாளே ஹோம்ஸ் நகரத்தில் பயங்கரமான வன்முறைத்தாக்குதல் நிகழ்ந்தது. சமீப காலங்களில் நடந்த தாக்குதல்களில் இதுவே கொடூரமானதும் கொடுமையானதும் ஆகும்.
சிரியாவின் இந்த வன்முறைப் போக்கு மாறாமல் இருப்பதைக் கண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்கள் சிரியாவுக்குத் தங்கள் நாடுகளிலிருந்து விமானம் ஏதும் செல்லாமலும் வராமலும் இருக்க தடை விதித்துள்ளனர்.தங்கள் மக்கள் சிரியாவிலிருந்து தாய்நாடு திரும்புவதற்கு மட்டும் சலுகைக் கட்டணத்தில், விமானப் போக்குவரத்தை அனுமதித்துள்ளனர். சிரியாவிலிருந்து ஐரோப்பாவிற்கு வந்திருந்த கடவுச் சீட்டை, ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 27 நாடுகளும் தடைசெய்துவிட்டன. சிரியாவின் மத்திய வங்கிக் கணக்கையும் இந்நாடுகள் முடக்கிவிட்டன.
பிரான்ஸ் நாட்டைப் போலவே நெதர்லாந்து, இத்தாலி, ஸ்பெயின், பெல்ஜியம் மற்றும் அமெரிக்காவும் தங்களின் தூதர்களைத் திரும்ப அழைத்துக் கொண்டனர்.இவ்வாறு வளைகுட கூட்டுறவுக் குழுவின் உறுப்பினர்களான பெஹ்ரைன், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட் என்ற ஆறு நாடுகளும் தங்கள் தூதர்களைத் தம்மிடமே அழைத்துக் கொண்டன.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF