Thursday, February 9, 2012

NEWS OF THE DAY.

கைத் தொலைபேசியில் பேசிக் கொண்டு பாதையைக் கடப்போருக்கு தண்டனை.
பாதையை கடக்கும் போது கையடக்க தொலைபேசிகளில் கதைத்துக்கொண்டு செல்வோருக்கு அபராதம் விதிக்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்படவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது. அத்துடன் வீதி ஒழுங்குகளை பேணும் வகையில் புதிய பல சட்டங்களையும் கொண்டு வர தமது திணைக்களம் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.வீதி விபத்துக்களை தடுக்கும் முகமாகவே இந்த சட்டங்கள் கொண்டு வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒழுக்காற்று விசாரணைகளுக்கு விளக்கமளிக்க கால அவகாசம் தேவை என்கிறார் மேர்வின்.
தன்மீதான ஒழுக்காற்று விசாரணைகள் தொடர்பில் விளக்கம் அளிப்பதற்கு கால அவகாசம் தேவைப்படுவதாக அமைச்சர் மேர்வின் சில்வா கோரியுள்ளார்.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒழுக்காற்று குழுவினால் நடத்தப்பட்டு வரும் விசாரணைகளின் போது, மேர்வின் சில்வா இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.விசாரணைக்கு தேவையான ஆவணங்களைத் தயாரிப்பதற்கு கால அவகாசம் தேவைப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.அத்துடன், தமக்கு எதிராக குற்றம் சுமத்திய பிரதேச சபை உறுப்பினர்கள் குரோத உணர்வுடன் செயற்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஒழுக்காற்று விசாரணைகளுக்கு மிகுந்த தயார் நிலையில் அமைச்சர் சென்றிருந்ததாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், அமைச்சர் மேர்வின் சில்வா எந்தவிதமான பதிலையும் அளிக்காது கால அவகாசம் கோரியதாகக் குறிப்பிடப்படுகிறது.இதேவேளை, தாம் செய்த முறைப்பாடு தொடர்பில் விளக்கம் அளிக்கும் நோக்கில் ஒழுக்காற்று குழுவின் முன்னிலையில் ஆஜரானதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஒன்பது ஆவணங்களை சமர்ப்பித்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மகிந்தவுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்காத பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மஹியங்கணைப் பிரதேசத்திற்கு விஜயம் செய்த போது ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக, மஹியங்கனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் இட மாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்கக்கோனால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதன்படி மஹியங்கனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய 120 உத்தியோகத்தர்களுக்கு உடனடி இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஒரே தடவையில் 120 பேருக்கு இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட முதல் சந்தர்ப்பமாக இது கருதப்படுகின்றது.நீண்ட காலம் ஒரே பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றியமை, ஒழுக்காற்று நடவடிக்கை போன்ற காரணிகளுக்காகவும் இடமாற்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.120 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் ஊவா மாகாணத்திற்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாகூ நிறுவனத்தின் தலைவர் பதவி ராஜினாமா.
கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்களுக்கு இடையேயான போட்டியின் காரணமாக, தனது பதவியை ராஜினாமா செய்வதாக யாகூ நிறுவன தலைவர் ராய் போஸ்டோக் தெரிவித்துள்ளார்.இணையத்தள சேவைகள் வழங்குவதில் கூகுள், பேஸ்புக் நிறுவனங்களிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்த களத்தில் யாகூவும் உள்ளது.
இந்நிலையில் கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்களுக்கிடையேயான போட்டியில், தங்களால் சிறப்புற செயல்பட முடியவில்லை என்று யாகூ நிறுவன தலைவர் ராய் போஸ்டோக் மற்றும் அதன் இயக்குனர்கள் யோமேஷ் ஜோஷி, ஆர்தர் கெர்ன் மற்றும் கேரி வில்சன் ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மக்கள் ஆர்ப்பாட்டத்தின் எதிரொலி: எகிப்தில் முன்கூட்டியே தேர்தல்.
ஏப்ரல் மாதத்தின் மத்தியில் தேர்தல் நடத்துவதாக அறிவித்த இராணுவம் மக்களின் ஆர்ப்பாட்டத்திற்குப் பிறகு மார்ச் மாதத்தில் நடத்த முடிவு செய்துள்ளது.ஜனாதிபதி முபாரக் ஆட்சி எகிப்து நாட்டில் வீழ்த்தப்பட்ட பின்பு நிர்வாகப் பொறுப்பை இராணுவம் ஏற்றுக்கொண்டு நடத்தியது. இதனால் இவ்வாட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.
மேலும் ஆயிரக்கணக்கானோர் தலைநகர் கெய்ரோவிலும், வேறு சில நகரங்களிலும் திரண்டு ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் வெகு விரைவில் ஜனாதிபதி தேர்தலை நடத்தி ஆட்சிப் பொறுப்பை பொதுமக்களான பிரதிநிதிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் இராணுவ ஆட்சியாளர்களின் உயர்நிலைக் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் தேர்தலை வருகின்ற மார்ச் மாதம் 15ம் திகதி மனு தாக்கல் செய்து தொடங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது.இதற்கு முன்பு இராணுவம் ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்திலேயே தேர்தல் நடைபெறும் என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மாலைத்தீவில் தொடரும் போராட்டம்.
மாலைத்தீவில் ஏற்பட்ட போராட்டத்தை தொடர்ந்து அந்நாட்டின் ஜனாதிபதி மொஹமட் நஷீத் நேற்று பதவி விலகினார்.இதனையடுத்து நஷீத்தின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அங்கு தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது.
இவர்கள் மாலே நகரின் முக்கிய வீதிகளில் தடைகளை ஏற்படுத்தியுள்ளனர். இதனால் அங்கு இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.சில இடங்களில் காவல்துறை அதிகாரிகளுக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும் என புதிதாக பொறுப்பேற்றுள்ள ஜனாதிபதி வாகித் ஹூசைன் தெரிவித்துள்ளார்.
ஈரானில் பிபிசி செய்தி நிறுவனத்தின் நிருபர்கள் கைது.
சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபட்டதா லண்டன் பிபிசி செய்தி நிறுவனத்தின் நிருபர்களை ஈரான் அரசு கைது செய்துள்ளது.லண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பி.பி.சி நிறுவனம் உலகம் முழுவதும் மக்கள் பேசும் மொழிகளில் செய்திகளை வழங்கி வருகிறது.
அதே போல் ஈரானில் பேசும் மொழியான பார்ஷி மொழியிலும் செய்திகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் பார்ஷி மொழியில் செய்திகள‌ை வழங்கி வரும் நிருபர்கள் சிலர் சட்ட வி‌ரோத செயல்களில் ஈடுபட்டுள்ளதாக கூறி ஈரான் அரசு கைது செய்துள்ளது என அரசுக்கு சொந்தமான செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பகுதி நேர நிருபர்களின் நடவடிக்கைகள் கவனிக்கப்பட்டு வந்ததாகவும், அவர்களின் நடவடிக்கைகள் சட்டவி‌‌ரோதமாக இருந்ததால் ‌கைது செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.இருப்பினும் எந்த வகையான குற்றம், கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் விபரம் போன்றவற்றை வெளியிடவில்லை. முன்னதாக சட்டவி‌ரோத குற்றத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட இரண்டு பி.பி.சி நிருபர்களை கடந்த அக்டோபர் மாதத்தில்‌ ‌தான் ஈரான் அரசு விடுவித்தது குறிப்பிடத்தக்கது.
நஷீத்தை பழிவாங்க மாட்டோம்: புதிய ஜனாதிபதி.
மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி முகமது நஷீத் மீது பழிவாங்கும் போக்கை கடைபிடிக்க மாட்டோம் என புதிதாக பதவியேற்றுள்ள ஜனாதிபதி வாகித் ஹூசைன் தெரிவித்துள்ளார்.மாலைதீவில் கடந்த 2009ம் ஆண்டு நடந்த தேர்தலில் இளம் தலைவர் முகமது நஷீத் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.ஜமீல் அகமது என்பவர் சமீபத்தில் தொலைக்காட்சியில் அரசுக்கு எதிராக பேட்டி கொடுத்தார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
வாரன்ட் ஏதும் இல்லாமல் அவரை சிறையில் அடைத்தது செல்லாது என கிரிமினல் நீதிமன்ற நீதிபதி அப்துல்லா முகமது தீர்ப்பு கூறினார். இதனால் கோபமடைந்த நஷீத் நீதிபதி மீது லஞ்ச வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்ய இராணுவத்துக்கு உத்தரவிட்டார். இதனால் மக்கள் கடந்த மூன்று வாரங்களாக நஷீத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி வந்தனர்.
இதற்கிடையே நேற்று முன்தினம் காவல்துறையினர் பலர் அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டனர். அவர்கள் அரசு தொலைக்காட்சி மற்றும் வானொலி நிலையங்களை கைப்பற்றியதாக கூறப்பட்டது.எனவே காவல்துறையினரை ஒடுக்க இராணுவம் களம் இறங்கியது. நிலைமையை சமாளிக்கும் பொருட்டு ஜனாதிபதி பதவியை நஷீத் நேற்று முன்தினம் ராஜினாமா செய்தார். இதையடுத்து துணை ஜனாதிபதி வாகித் ஹூசைன் ஜனாதிபதியாக பொறுப்பேற்றார்.
இந்நிலையில் பதவி விலகிய முன்னாள் ஜனாதிபதி நஷீத் அடையாளம் தெரியாத இடத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வெளியே மது அருந்துவது சட்டப்படி குற்றமாகும்.நஷீத் வீட்டுக்கு வெளியே நூற்றுக்கணக்கான மதுபாட்டில்கள் இருந்ததாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதை காரணம் காட்டி அவர் மீது வழக்கு பதிவு செய்யலாம் என்ற நிலை உள்ளது. இந்த வழக்கின் கீழ் அவருக்கு மூன்றாண்டுகள் வரை தண்டனை அளிக்க முடியும்.
இந்நிலையில் நஷீத் ஆதரவாளர்கள் மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதை கவனித்து வரும் சர்வதேச பொது மன்னிப்பு நிறுவனம், நஷீத்தை பழிவாங்கும் நடவடிக்கையில் புதிய அரசு ஈடுபடக்கூடாது என எச்சரித்துள்ளது.இதுகுறித்து புதிய ஜனாதிபதி வாகீத் ஹூசைன் நிருபர்களிடம் குறிப்பிடுகையில், நஷீத்தை பழிவாங்கும் நடவடிக்கையில் ஒருபோதும் ஈடுபட மாட்டேன். அவர் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப்படுவார்.
ஆனால் நஷீத் மீது இராணுவமோ, நீதிமன்றமோ எடுக்கும் நடவடிக்கையில் நான் தலையிட முடியாது. மாலைத்தீவில் அனைத்து கட்சிகளும் பங்கேற்கும் வகையில் ஜனநாயக அரசை நடத்த விரும்புகிறேன் என்றார்.காவல்துறை உயரதிகாரி அகமது ஷயாம் குறிப்பிடுகையில், நஷீத்தை வீட்டு சிறையில் அடைக்கவில்லை. அவருக்கு எதிர்ப்பாளர்கள் மூலம் ஆபத்து ஏற்படும் என்பதால், இரகசிய இடத்தில் வைத்து அவரை பாதுகாத்து வருகிறோம் என்றார்.
பாகிஸ்தானில் அமெரிக்க விமானங்கள் திடீர் தாக்குதல்: 8 பேர் பலி.
பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் எல்லையையொட்டி அமைந்துள்ள வடக்கு வசிரிஸ்தான் பழங்குடியின பகுதி தீவிரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த பகுதியாகும்.
அங்குள்ள மிரான்ஷா நகரில் தாப்பி பகுதியில், தீவிரவாதிகள் பதுங்கியிருந்த கட்டிடத்தின் மீது அமெரிக்க ஆளில்லா விமானங்கள் இன்று அதிகாலை திடீரென ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தின.இதில் 8 தீவிரவாதிகள் பலியாயினர், 2 பேர் காயம் அடைந்தனர். தீவிரவாதிகளில் சிலர் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் என்று இராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
வழக்கை ரத்து செய்யக் கோரி கிலானி மேல்முறையீடு.
பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்தவில்லை எனக் கூறி பிரதமர் கிலானி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டது.இது தொடர்பாக கடந்த ஜனவரி மாதம் அவர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
எனினும் எதிர்வரும் 13ம் திகதி மீண்டும் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதை ரத்து செய்ய வேண்டும் என தனது வழக்கறிஞர் அயிட்சஸ் ஆசன் மூலம் உச்சநீதிமன்றத்தில் கிலானி மேல் முறையீடு செய்துள்ளார்.200 பக்கங்களைக் கொண்ட அந்த மேல் முறையீட்டு மனுவில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 50 வழக்குகளை மேற்கோள் காட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிரியாவில் இராணுவத் தாக்குதல்: 47 பேர் பலி.
சிரியாவில் போராட்டக்காரர்கள் மீது இராணுவம் தாக்குதல் நடத்தியதில் 47 பேர் உயிரிழந்துள்ளனர்.ஹோம்ஸ் நகரில் இராணுவத்தினர் போராட்டக்காரர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில் பல கட்டிடங்கள் தரைமட்டமாயின. மின்சாரக் கம்பங்கள் ஆகியவை குறிவைத்து தாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால் அங்குள்ள மக்கள் அடிப்படை வசதிகளுக்கு கூட சிரமத்திற்கு உள்ளாகும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 47 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.இந்நிலையில் மருத்துவ வசதிகள் முழுவதுமாக தடைபட்டிருப்பதால் தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இதுவரை இராணுவத்தினரால் 6000க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீனாவிற்கு உதவ தயார்: இந்தியா.
திபெத்தின் மீதான சீனாவின் ஆக்கிரமிப்பை கண்டித்து புத்த மத துறவிகள் தீக்குளிப்பது அதிகரித்து வருகிறது.இப்பிரச்னையில் சீனாவுக்கு உதவ தயாராக இருப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது. சீனா சென்றுள்ள இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, அங்கு முக்கிய தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் திபெத்தில் சீன அரசுக்கு எதிராக புத்த பிட்சுகள் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.அதற்கு பதிலளித்த கிருஷ்ணா, திபெத் பிரச்னை சீனாவின் உள்நாட்டு பிரச்னை என்று தெரிவித்தார். எனினும் இப்பிரச்னையில் சீனாவுக்கு உதவ இந்தியா தயாராக இருப்பதாகவும் கிருஷ்ணா கூறினார்.
சீக்கியர்கள் கோவில் மீது விஷமிகள் தாக்குதல்.
அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலம், ஸ்டெர்லிங் ஹைட்ஸ் என்ற இடத்தில் கட்டப்பட்டு வரும் குருத்வாரா எனப்படும் சீக்கியர் கோயில் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இங்கு குருத்வாரா என்ற சீக்கியர் கோவிலின் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த 5ம் திகதி கோயில் மீது விஷமிகள் சிலர் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க சீக்கிய அமைப்பின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.
இதுகுறித்து காவல்துறை அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் இனவெறியைத் தூண்டும் வகையிலும், ஆபாச வார்த்தைகளாலும் திட்டியதாக கூறப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.
ரஷ்யாவில் இங்கிலாந்தின் வங்கி கணக்கு விபரங்கள் விற்பனை.
ரஷ்ய இணையத்தளங்களில் இங்கிலாந்து நாட்டின் வங்கி கணக்கின் ரகசிய எண்கள், வங்கி கணக்கு எண்கள் மற்றும் விபரங்கள் விற்பனைக்கு வந்திருக்கின்றன.இவற்றின் விலை வெறும் 19 டொலர் மட்டுமே. விற்பனைக்கு தயார் என இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.இதுகுறித்து காவல்துறை உயரதிகாரி கூறுகையில், இங்கிலாந்து நாட்டில் போலி கடனட்டை மற்றும் முறைகேடுகள் மூலம் ஆண்டுக்கு 308 கோடி டொலருக்கு மேல் மோசடி நடக்கிறது.
வங்கி கணக்கு விபரத்தை சில குறிப்பிட்ட கும்பலை சேர்ந்தவர்கள் திருடி அவற்றை ரஷ்ய இணையத்தளத்தில் விற்பனை என்ற பெயரில் வெளியிட்டு இருக்கிறார்கள். இதுபற்றி நாங்கள் தீவிரமாக துப்பு துலக்கி வருகிறோம் என்றார்.ஒரு கும்பலை சேர்ந்தவர்கள் ஸ்கிம்மர் என்ற சிறிய கருவியை கடனட்டை எந்திரத்தில் இணைத்து, அந்த எந்திரத்தில் நடைபெறும் பண பரிமாற்றம், அதில் பணம் எடுக்கப்பட்ட வங்கிக் கணக்கு எண்கள், ரகசிய குறியீட்டு எண்கள் போன்றவற்றை திருடி விடுகிறார்கள் என்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
ஒபாமாவை எதிர்த்து போட்டியிடுபவர் யார்?
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் பதவி காலம் முடிவடைவதையொட்டி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது.இதில் ஒபாமாவுக்கு போட்டியாக குடியரசுக் கட்சி சார்பில் யாரை நிறுத்தலாம் என்று அமெரிக்காவில் உள்ள ஒவ்வொரு மாநிலங்களிலும் கட்சி அளவில் தேர்தல் நடந்து வருகிறது. இதில் மிட் ரோம்னி, ரிக் சந்தோரம் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
மச்சா சூசெட்ஸ் மாநில முன்னாள் தலைவரான ரோம்னி 3 மாநிலங்களில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று இருக்கிறார். மொத்தம் அவர் 4 மாநிலங்களில் வெற்றி பெற்று முன்னிலையில் இருக்கிறார்.இதுபற்றி ரிக் சந்தோரம் கூறுகையில், இந்த வெற்றி எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்றாலும் இன்னும் பல மாநிலங்களில் கட்சி அளவில் நடக்க இருக்கும் தேர்தல்களில் வெற்றி பெற்று ஒபாமாவை எதிர்க்கும் வேட்பாளராக தெரிவாக வேண்டும். அதன் பின் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்றார்.குடியரசு கட்சி சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு மேலும் இருவர் கட்சி அளவில் மனுத்தாக்கல் செய்து உள்ளார்கள்.
இதில் ஒருவரான நியுட் ஜிங்ரிச் முன்னாள் சபாநாயகர் ஆவார். இவர் தெற்கு கரோலினா மாநிலத்தில் கட்சி அளவில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று இருக்கிறார்.மற்றொருவரான ரான் பால் டெக்சாஸ் மாநிலத்தை சேர்ந்தவர். கட்சி அளவில் மிகுந்த செல்வாக்கு பெற்றவர். இவர் இன்னும் ஒரு மாநிலத்தில் கூட வெற்றிபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உலகின் மிக பழமையான ஓவியம் கண்டுபிடிப்பு.
42 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஓவியம் ஒன்று தற்போது ஸ்பெயின் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.ஸ்பெயின் நாட்டின் கார்டோபா பல்கலைகழக குழுவினர் பேராசிரியர் ‌‌‌ஜோஸ் லூயிஸ் சான்சிட்ரியன் என்பவர் தலைமையின் கீழ் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது தெற்கு பகுதியை சேர்ந்த அண்டாலுசியாவில் உள்ள குகை ஒன்றில் ஒவியங்கள் சிலவற்றை கண்டுபிடித்தனர்.தொடர்ந்து அந்த ஓவியத்தை ஆராய்ந்த போது அவை சுமார் குறைந்தபட்சம் 42 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவையாக இருக்க கூடும் என தெரிவித்தனர்.
மருத்துவமனையில் மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி.
மாலைதீவு அரசுக்கு எதிரான போராட்டத்தில் தனது ஆதரவாளர்களுடன் கலந்து கொண்ட மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதியை காவல்துறையினர் தாக்கியதில் பலத்த காயமடைந்தார்.மாலைதீவில் முன்னாள் ஜனாதிபதி முகமது நஷீத் பதவி விலகியதையடுத்து புதிய ஜனாதிபதியாக வாகித் ஹூசைன் பதவியேற்றார்.
இந்நிலையில் தான் வலுக்கட்டாயமாக பதவி விலக்கப்பட்டதாக நஷீத் தெரிவித்ததையடுத்து அவரது ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் இன்று அப்போராட்டத்தில் தனது ஆதரவாளர்களுடன் கலந்து கொண்ட நஷீத்தை காவல்துறையினர் தாக்கினர். இதில் அவர் காயமடைந்தார்.எனினும் மருத்துவமனையில் சிகிச்சைக்குப்பின் அவர் வீடு திரும்பியதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
ஈரான் அரசின் சொத்துக்களை முடக்குங்கள்: ஒபாமா உத்தரவு.
ஈரான் அரசுக்கு சொந்தமாக அமெரிக்காவில் உள்ள சொத்துக்களை முடக்குமாறு ஜனாதிபதி ஒபாமா உத்தரவிட்டுள்ளார்.ஈரானின் அணு ஆயுதங்களை தயாரித்து வருகிறது என அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் குற்றம் சுமத்தியுள்ளதுடன், பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடான இஸ்ரேல் ஈரான் மீது போர் தொடுக்கும் முனைப்புடன் உள்ளது.ஈரான் மீதான இஸ்ரேலின் போர் நிச்சயமாக அமெரிக்காவின் பொருளாதாரத்தில் கடும் எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஒபாமா கருதுகிறார்.
இதனால் ஈரானை முடக்கி வைக்கும் நடவடிக்கைகளை அவர் தீவிரப்படுத்தியுள்ளார். அதன் ஒரு படியாக அமெரிக்காவில் இயங்கும் ஈரானின் மத்திய வங்கியின் செயல்பாட்டை முடக்க உத்தரவிட்டுள்ளார்.திங்கள்கிழமை முதல் இத்தடை அமுலுக்கு வந்துள்ளது. ஈரானின் எண்ணைய் ஏற்றுமதி வர்த்தகத்தை தடை செய்வதன் மூலம் அந்நாட்டை பணிய வைக்க முடியும் என்று அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் கருதி வருகின்றன.
ஈராக் போர் வீரர்களுக்கு வெள்ளை மாளிகையில் விருந்து: ஒபாமா.
ஈராக் போரில் பங்கேற்று நாடு திரும்பிய வீரர்களுக்கு ஒபாமா தனது வெள்ளை மாளிகையில் விருந்தளிக்க முடிவு செய்துள்ளார்.எதிர்வரும் 29ம் திகதி ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிஷேல் ஆகியோர் ஈராக் போரில் வீரச்செயல் புரிந்த வீரர்களுக்கு விருந்தளிக்க உள்ளனர்.இது குறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜே கார்னே செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில், ஈராக் போரில் ஈடுபட்ட வீரர்களுக்கும் அவர்களை ஊக்குவித்த குடும்பத்தினருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த விருந்து அளிக்கப்படுகிறது என்று கூறினார்.
இது குறித்து கருத்து தெரிவித்த முப்படைகளின் கூட்டுத் தளபதி மார்டின் டெம்ப்ஸ் விருந்தில் பங்கேற்கும் வீரர்கள் சீருடையிலேயே கலந்து கொள்வார்கள் என்றும், ஈராக்கின் விடுதலைக்காக நடத்தப்பட்ட 'புதிய விடியல்' என்ற போரில் கலந்து கொண்ட வீரர்கள் மற்றும் அவர்களை ஆதரித்த குடும்பத்தினரை அங்கீகரிக்கும் வகையிலும் நடைபெறும் என்றும், ஜனாதிபதியும், அவரது மனைவியும் தேசத்தின் சார்பாக எங்களைக் கௌரவிக்கத் தரும் விருந்து இது என குறிப்பிட்டார்.
இந்த போரில் கலந்து கொண்ட ஈராக் வீரர்கள் அமெரிக்காவுக்கு சுதந்திரமான, அமைதியான எதிர்காலத்தை உருவாக்க உதவியுள்ளார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.மேலும் அவர் கூறுகையில், அவர்களின் வீரத்தையும், சேவையையும் குறித்து தான் பெருமைப்படுவதாகவும் தெரிவித்தார். ஈராக் போரில் 4,500க்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் உயிரிழந்தனர் என்றும், 1000க்கும் மேற்பட்ட வீரர்கள் ஊனமடைந்தார்கள் என்றும் அவர் கூறினார்.
அவுஸ்திரேலியாவில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட எரிமலை.
ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த உயிரனங்கள் கூடிய எரிமலை ஆவுஸ்திரேலிய கடல் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக ஆவுஸ்திரேலிய ஆய்வு விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.கிரேட் ஆவுஸ்திரேலியன் பியட் மரைன் பார்க் பெனடிக் படுகப்பு என்னும் கடல் பகுதியில் சுமார் 100 மைல் தொலைவில் 2000 மீட்டர் ஆழத்தில் ஓர் எரிமலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது கடலுக்கடியிலிருந்து 200 மீட்டர் மேல் எழும்பி உள்ளதாகவும், தற்போது செயல்பாட்டில் இல்லை என்றும் ஆனால் இதில் உயிர் வாழ் பொருட்கள் நிறைந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.சுமார் 1000 ஆண்டுகள் முன்னர் எரிமலையின் மேக்மா மேலே வர தொடங்கிய முயற்சியால் இந்த எரிமலை உருவாகிருக்கலாம் என்றும், இந்த கடல் பகுதியில் வாழும் அனைத்து உயிரிகளும் தனி சிறப்பு வாய்ந்தது எனவும் கூறப்படுகின்றது.
இப்பகுதியில் எரிமலைகள் நிறைந்து இருந்த போதிலும் இந்த எரிமலை எந்த வித தொந்தரவுகளும் இல்லாமல் காணப்படுவதே இதன் தனி சிறப்பாகும். இதனாலேயே இதன் உயிர்த்தன்மை பாதுகாக்கப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளனர்.இப்பகுதியில் மீண்டும் பயணம் செய்து அங்கு உயிர் வாழும் உயிரிகள், தாவரங்கள் மற்றும் உயிர் பொருட்களின் மாதிரிகளை சேகரித்து மேலும் பல ஆராய்சிகள் மேற்கொண்டு இப்பகுதியின் உயிர்பரவல் எத்தகையது என்பதை கண்டறிவோம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதியின் குடும்பம் இலங்கையில் தஞ்சம்?
மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி முஹமட் நசீடீன் கிளர்ச்சி காரணமாக பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, அவரது குடும்ப உறுப்பினர்கள் இலங்கையில் தஞ்சம் புகுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி நசீடீன் மனைவி மற்றும் பிள்ளைகள் இன்று காலை, கொழும்பை வந்தடைந்துள்ளதாக, ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு பொறுப்பாளர் பந்துல ஜயசேகர தெரிவித்துள்ளார்.
எனினும், நசீடீன் குடும்ப உறுப்பினர்கள் எங்கு தங்க வைக்கப்படுவார்கள், அரசாங்கம் இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுமா என்பது தொடர்பில் எந்தவித கருத்துக்களும் வெளியிடப்படவில்லை.மாலைதீவின் புதிய ஜனாதிபதியாக தற்போது பதவியேற்றுள்ள முகம்மத் வஹீத் ஹஸனிடம், முன்னாள் ஜனாதிபதி நசீடீன் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, தனது பதவியை இராஜினாமா செய்யுமாறு துப்பாக்கி முனையில் கிளர்ச்சியாளர்கள் மிரட்டியதாக முன்னாள் ஜனாதிபதி நசீட் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF