Sunday, February 12, 2012

NEWS OF THE DAY.

மாலைதீவு உள்விவகாரங்களில் சர்வதேசம் தலையீடு செய்யக் கூடாது: இலங்கை.
மாலைதீவு உள்விவகாரங்களில் சர்வதேச சமூகம் தலையீடு செய்யக் கூடாது என இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. மாலைதீவுப் பிரச்சினைக்கு உள்நாட்டு ரீதியில் தீர்வு காணப்பட வேண்டுமென தெரிவித்துள்ளது.
அங்கு இடம்பெற்ற கலவரம் தொடர்பில், அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளதாக பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேரா தெரிவித்துள்ளார்.இதேவேளை, மாலைதீவில் ஜனநாயகத்தை நிலைநாட்டும் முயற்சிகளுக்கு இலங்கை ஆதரவளிக்க வேண்டுமென அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி முஹமட் நசீட் கோரியுள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தமது நெருங்கிய நண்பர் எனவும் இலங்கையுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.மாலைதீவில் மீண்டும் ஜனநாயக ஆட்சியை நிலைநாட்ட இலங்கை அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கும் என எதிர்பார்ப்பதாக நசீட் தெரிவித்துள்ளார்.
காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கினால் நாடு துண்டாடுவதாக அமையாது!- முன்னாள் நீதியரசர் சரத் என் சில்வா.
காணி, பொலிஸ் அதிகாரங்களுடனான 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை இனப்பிரச்சினைக்குத் தீர்வாக வழங்கினால் அது நாட்டைத் துண்டாடுவதாக இருக்காது. இதையிட்டு சிங்கள மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.அரசியலமைப்புத் திருத்தம் சிறந்த தீர்வாக இருக்கும். இதில் குறைபாடுகள் இருப்பதாக அரசோ அல்லது கட்சிகளோ கருதினால் அதை 13 பிளஸ் மூலம் நிவர்த்தி செய்யலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பில் கொழும்பில் வீரகேசரி நாளிதழின் வாரவெளியீட்டிற்கு வழங்கிய பேட்டியின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் கூறியதாவது;
இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் 13வது அரசியலமைப்பு திருத்தம் கொண்டு வரப்பட்டது. இத்திட்டம் இந்தியாவில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.அமெரிக்கா, கனடா, பிரிட்டன் போன்ற நாடுகளிலும் இலங்கையை விட சிறிய நாடான சுவிட்சர்லாந்திலும் இதேபோன்று அதிகாரப் பகிர்வு அமுல்படுத்தப்பட்டுள்ளது. அந்த நாடுகள் பிரிந்து விடவில்லை.காணி, பொலிஸ் அதிகாரங்கள் 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின்படி மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டாலும் அதனால் ஒரு பிரச்சினையும் ஏற்படாது.
அப்படி பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அதை சட்டப்படி கட்டுப்படுத்தும் வழிமுறைகளும் 13ஆவது அரசியலமைப்பு சட்டத்தின் மூலம் மத்திய அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது.காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்குவதால் நாடு துண்டாடப்பட்டுவிடுமென பேரினவாத சிங்களக் கட்சிகள் தெரிவிப்பதில் உண்மையில்லை என்றும் அவர் தெரிவித்தார். 
கொழும்பு மாநகரசபையின் சொத்துக்களை கோத்தபாயவின் நகர அபிவிருத்தி சபை பொறுப்பேற்பு!
ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியில் உள்ள கொழும்பு மாநகரசபையின் கீழ் இருந்த விஹாரமா தேவி பூங்கா நோமட்ஸ் மைதானம் உட்பட்ட சொத்துக்களை பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் தலைமையில் இயங்கும் நகர அபிவிருத்தி சபை பொறுப்பேற்றுள்ளது.தமது மாநகரசபைக்கு 40 வீத வருமானங்களை பெற்றுக் கொடுத்த சொத்துக்களையே நகர அபிவிருத்தி சபை பொறுப்பேற்றுள்ளதாக கொழும்பு மாநகரசபை முதல்வர் ஏ.ஜே.எம் முஸம்மில் குற்றம் சுமத்தியுள்ளார்.இந்த வருமானங்களின் மூலமே கொழும்பு மாநகரசபை, பாதை சீரமைப்பில் ஈடுபட்டு வரும் 9000 பணியாளர்களுக்கு மேலதிக கொடுப்பனவுகளை செலுத்தி வந்தது.
40 வைத்தியசாலைகளில் வருடாந்தம் சிசிக்சை பெற்று வரும் எட்டு இலட்சம் பேருக்கு இலவச மருந்துகள், 54 மைதானங்களின் பராமரிப்பு, 36 சனசமூக நிலையங்களின் பராமரிப்பு, மயான பராமரிப்புகள் போன்றவற்றுக்கும் இந்த வருமானங்களை பயன்படுத்தப்பட்டன.அத்துடன், வருமானம் குறைந்த 13 ஆயிரம் குடும்பங்களுக்கு நிதியுதவிகளும் இந்த வருமானங்களின் கீழ் வழங்கப்பட்டு வந்தன. இந்தநிலையில், கொழும்பு மாநகரசபையின் சொத்துக்களை பொறுப்பேற்றதன் மூலம் 13 வது அரசியலமைப்பின் சரத்துக்கள் மீறப்பட்டுள்ளதாகவும் முஸம்மில் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதேவேளை, ராஜகிரியவில் உள்ள காணி ஒன்றை கடந்த வாரம் கோத்தபாய ராஜபக்சவின் தலைமையிலான நகர அபிவிருத்தி சபை பொறுப்பேற்றது. இது கோட்டே மாநகரசபைக்கு உட்பட்ட சொத்தாகும்.இந்தநிலையில், இந்த காணியை தாம் கல்விகற்ற ஆனந்தா கல்லூரிக்கு கோத்தபாய ராஜபக்ச அன்பளிப்பாக வழங்கவுள்ளதாக சண்டேலீடர் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
யாழில் நேற்றிரவே எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருட்கள் இல்லையென கைவிரிப்பு!
இலங்கையில் பெற்றோலின் விலை 11ம் திகதி நள்ளிரவு முதல் 12 ரூபாவினால் அதிகரித்துள்ள நிலையில், யாழ்.குடாநாட்டில் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் இரவு 10மணிக்கே எரிபொருள் கையிருப்பில் இல்லை என கைவிரிதுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,நேற்று நள்ளிரவு முதல் யாழ்.குடாநாட்டில் பெற்றோல் ஒரு லீற்றர் 12 ரூபாவாலும், டீசல் ஒரு லீற்றர் 31ரூபாவாலும், மண்ணெண்ணை ஒரு லீற்றர் 35ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், பெற்றோல் ஒரு லீற்றர் 167ரூபாவாகவும், டீசல் ஒரு லீற்றர் 115ரூபாவாகவும், மண்ணெண்ணை ஒரு லீற்றர் 106ரூபாவாகவும் தற்போது விற்பனை செய்யப்படுகின்றது.
இவ்விலை அதிகரிப்பிற்கான கால எல்லை நேற்று நள்ளிரவு 12மணியுடன் நிறைவடையவிருந்த நிலையில், இரவு 9மணிக்கே யாழ்.குடநாட்டிலுள்ள பெரும்பாலான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டன.மேலும் திறக்கப்பட்டிருந்த எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் 200ரூபா தொடக்கம் 300ருபாவுக்கே பெற்றோல் விற்பனை செய்யப்பட்டது.
இவ்விற்பனைகளும் இரவு 10மணிவரைக்குமே நடைபெற்றது. 24மணிநேர சேவையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும், 10மணியின் பின்னர் வந்த வடிக்கையாளர்களுக்கு எரிபொருள் தம்மிடம் கையிருப்பில் இல்லை என நிலையங்கள் கைவிரித்துள்ளன.இது விலை அதிகரிப்பை காண்பித்து அதிக விலைக்கு விற்பதற்கான ஒரு வழி என மக்கள் குற்றம் சாட்டியுள்ளதுடன், எரிபொருள் நிரப்பு நிலையங்கள் எரிபொருளை பதுக்கி வைத்து விட்டதாகவும் குற்றம் சாட்டினர்.
இதேவேளை நேற்று நள்ளிரவு வரை தெற்கிலிருந்து வந்த வாகனங்கள் முதல் பெருமளவு வாகனங்கள் எரிபொருள் கிடைக்காததால் நகரில் தரித்து நின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.மொத்தத்தில் இந்த எரிபொருட்களின் விலையேற்றம் அனைத்து துறைகளிலும் உள்ள மக்களை பாதிக்கவே செய்யும். எனவே அரசாங்கத்தின் இது போன்ற நடவடிக்கை குறித்து எதிர்காலத்தில் மக்களே தீர்மானிப்பர் என தெரிவித்தார்.
சிரியாவில் இராணுவம் தாக்குதல்: செய்மதி புகைப்படங்கள் வெளியீடு.
சிரியாவில் பொதுமக்கள் மீது இராணுவம் வான்வெளி தாக்குதல் நடத்தும் புகைப்படங்களின் செய்மதி படங்களை சிரியாவுக்கான அமெரிக்க தூதர் ரொபேர்ட் ஃபோர்ட் வெளியிட்டுள்ளார்.இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில், இப்புகைப்படங்கள் பொதுமக்கள் குடியிருப்புக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை அப்படியே படம்பிடித்துள்ளது.
ஆயுதமேந்திய குழுக்களே இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்க வேண்டும் என சிரியா அரசு தெரிவித்துள்ளது. ஆனால் யார் இந்த தாக்குதல்களை நடத்துவது என்பதும், அத்தாக்குதல்களை மறைப்பதற்கு அவர்கள் செய்யும் முயற்சிகளும் எமக்கு நன்றாகவே தெரியும் என்றார்.கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் சிரியாவில் நடைபெற்று வரும் இத்தாக்குதல்களில் 7000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இக்கொடூர தாக்குதல்கள் உடனடியாக இடைநிறுத்தப்பட வேண்டும் என ஐ.நா.வின் பொதுச்செயலாளர் பான் கீ மூன் கண்டனம் விடுத்துள்ளார்.
உலகின் மிக மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் வெளியீடு.
உலகின் மிக பணக்கார நாடுகளாக திகழும் அமெரிக்கா, கனடா, பிரிட்டன் போன்ற நாடுகள் சந்தோஷத்தில் இன்னமும் ஏழைகளாகவே திகழ்கின்றனர் என்பது சமீபத்தில் நடத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.பொருளாதார நெருக்கடி, போர், இயற்கை பேரிடர் என பல்வேறு பிரச்னைகளுக்கு நடுவில் உலக மக்களின் மகிழ்ச்சி குறித்து இப்சஸ் குளோபல் நிறுவனம் ஆய்வொன்றை நடத்தியது.
24 நாடுகளில் 18,000 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அதன் விவரம்: சர்வதேச அளவில் மகிழ்ச்சியானவர்களின் எண்ணிக்கை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட இப்போது அதிகரித்துள்ளது.அதாவது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 4ல் 3 பேர் வாழ்வில் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், 4ல் ஒருவர் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
உலகிலேயே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளவர்களில் இந்தியர்கள், இந்தோனேசியர்கள் மற்றும் மெக்சிகோ நாட்டினர் முக்கிய இடம் பிடித்துள்ளனர். ஹங்கேரி, தென்கொரியா, ரஷ்யா, ஸ்பெயின் மற்றும் இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர்களில் மிகவும் குறைவானவர்களே மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.மண்டலவாரியாக பார்த்தால் லத்தீன் அமெரிக்காவில் அதிகம் பேர் மகிழ்ச்சியாக உள்ளனர். வட அமெரிக்கா, ஆசியா-பசிபிக், மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆப்ரிக்கா ஆகியவை அடுத்தடுத்த இடங்கள் பிடித்தன. ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்களில் 15 சதவீதம் பேர் மட்டுமே மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து இப்சஸ் குளோபல் நிறுவனத்தின் துணைத்தலைவர் ஜான் ரைட் கூறுகையில், மக்களின் மகிழ்ச்சியை கணக்கிடுவதில் கவனமாக இருக்க வேண்டும். பொருளாதார ரீதியாக வசதியாக இருப்பவர்களிடம் மகிழ்ச்சி அதிகமாக இருக்கும் என்று கூற முடியாது.ஒருவர் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு பணத்தைத் தாண்டி பல்வேறு காரணங்கள் உள்ளன. குறிப்பாக உறவுமுறைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கலாசாரம் உள்ள மக்கள் அதிக மகிழ்ச்சியுடன் உள்ளனர் என்றார்.
சிரியாவில் கலவரம்: இராணுவத் தளபதி சுட்டுக்கொலை.
சிரியாவின் ஜனாதிபதி பஷார் அல் அசாத்துக்கு எதிரான பொதுமக்கள் போராட்டம் நாடு முழுவதும் பரவியதில் இராணுவத் தளபதி சுட்டுக் கொல்லப்பட்டார். 
சிரியா நாட்டின் ஜனாதிபதி பஷார் அல் அசாத்துக்கு எதிரான பொதுமக்கள் போராட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு காலப்போ நகரில் போராட்டக்காரர்கள் மீது இராணுவம் நடத்திய தாக்குதலில் 60 பேர் கொல்லப்பட்டனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் இரண்டு இடங்களில் நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 28 பேர் பலியாகியுள்ளனர், மேலும் 235 பேர் காயம் அடைந்துள்ளனர். இதனால் நாடு முழுவதும் கலவரம் பரவியதில் நேற்று மட்டும் 25 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையே சிரியாவின் தலைநகர் டமாஸ்கசில் இராணுவ தளபதி இசா அல்- காவ்லி வீட்டிற்கு நேற்று காலை துப்பாக்கியுடன் வந்த தீவிரவாதிகள் அவரை சரமாரியாக சுட்டதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படடார். சிகிச்சை அளித்தும் பலனில்லாமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.சிரியாவில் கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் போராட்டம் நடந்து வருகின்றது. இருப்பினும் இராணுவ தளபதி ஒருவர் சுட்டு கொல்லப்பட்டது இதுவே முதல் முறையாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உறைபனியால் பிரான்சில் பெருகிவரும் பிரச்னைகள்.
பிரான்ஸ் நாட்டில் கடும் குளிரும், பனிப்புயலும் தாக்கி வருகிறது. இதனால் பல்வேறு பிரச்னைகள் உருவாகுகின்றன.இந்த பனிக்கு ஐரோப்பா முழுவதும் 400 பேர் உயிரிழந்து விட்டனர். பிரான்சில் குறிப்பாக அதன் கிழக்குப் பகுதியில் இதுவரை 14 பேர் பனியின் கொடுமைக்குப் பலியாகிவிட்டனர்.வெள்ளிக்கிழமை ஓர் ஏரிக்கரையில் 60 வயது மதிக்கத்தக்க வயதான தம்பதியர் இறந்துகிடந்தனர். படகில் இருவரும் அந்த ஏரியில் பயணித்த போது அந்த முதியவர் ஏரிக்குள் விழுந்துவிட்டார்.
கணவனைத் தொடர்ந்து அவரது மனைவியும் ஏரியில் குதித்தார். ஏரித் தண்ணீர் ஐஸ் போல ஜில்லிட்டிருந்ததால் கணவரால் நீந்த முடியவில்லை. எனவே மனைவி அவரை இழுத்துக் கொண்டே கரைக்கு வந்து சேர்ந்தார். கரை சேர்ந்த இருவரையும் கடுங்குளிர் வாட்டியதால் இறந்து போயினர்.மத்தியதரைக் கடல் பகுதியில் உள்ள கோர்ஸிகா தீவில் சனிக்கிழமை பனி காரணமாக அனைத்து விமான சேவையும் ரத்தாயிற்று. 600 வீடுகளுக்கு மின்சாரம் இல்லை.
பிரான்சில் தெற்கே உள்ள வார், கோர்ரெசெ மற்றும் டோர்டொக்னே பகுதிகளில் சாலைகளில் பனிபடர்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நாடு முழுக்க வீடுகளில் தண்ணீர் குழாய்களில் உள்ள தண்ணீர் உறைந்து போனதால் மக்கள் தவித்துப் போயினர்.மின்சாரத் தட்டுப்பாடு கடுமையாகி உள்ளது, எதிர்வரும் புதன்கிழமை வரை வழக்கமாகத் தேவைப்படும் 107.700 மெகா வாட் மின்சாரம் கிடைக்குமா என்பது தெரியவில்லை என்றும் மின் உற்பத்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
ஸ்டீபன் ஹார்ப்பர் சீனாவுக்கு பயணம்.
முக்கிய விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக கனடிய பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.ஆனால் சீனாவில் அரசியல் குறித்து இவர் பேசவில்லை. சீனாவின் பொதுவுடமைக் கட்சியின் நகர்ச் செயலாளராகவும், பிரபல அரசியல்வாதியாகவும் விளங்கும் போ ஸிலாய் என்ற இளம் அரசியல் நட்சத்திரத்தை ஸ்டீபன் ஹார்ப்பர் சந்தித்துப் பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் அவ்வாறு எந்தவொரு நிகழ்வும் நடைபெறவில்லை. இந்தப் பயணம் அரசியல் சார்ந்ததோ, வர்த்தக தொடர்பானதோ கிடையாது என்று ஸ்டீபன் ஹார்ப்பர் தெரிவித்தார்.
இந்த பயணத்தின் போது சீனாவில் உள்ள பாண்டா கரடிகளை பத்தாண்டு கடன் முறையில் வாங்கி கனடாவுக்கு கொண்டு வந்தார். இந்த கரடிக் குட்டிகளுக்கான நீண்ட கடன் இன்னும் பல முக்கியத் தொடர்புகளை இரு நாடுகளுக்கிடையே ஏற்படுத்தப் போவதாக பிரதமர் ஹார்ப்பர் தெரிவித்தார்.பிரதமர் குறிப்பிட்ட முக்கியத்தொடர்புகள் என்பது யுரேனியம் ஏற்றுமதியிலிருந்து அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் தொடர்புகள் வரை குறிக்கின்றது. 18 ஆண்டுகளாக இரு நாடுகளுக்கும் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.
இந்த ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து விரைவில் கையெழுத்திட்டு உறுதிப்படுத்த வேண்டும். சீனாவுக்கும் கனடாவுக்கும் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் உருவாகும் முயற்சிகளும் நடைபெறுகின்றன. ஆனால் அதைப் பற்றி இப்போது பேசக்கூடாது, இன்னும் அதற்கு காலம் கனியவில்லை என்றார்.எங்களின் பொருளாதார வர்த்தகத் தொடர்புகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதே இப்போதைய முயற்சியாகும் என்று தெரிவித்த ஹார்ப்பர் மனித உரிமை பற்றி உரையாடல் நிகழ்த்தப் போவதாகவும் குறிப்பிட்டார்.
ஹேம்பர்க் ஏரி திருவிழா கோலாகலம்.
ஜேர்மனியின் ஹேம்பர்க் ஏரித்திருவிழாவில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு இவ்விழாவைக் கொண்டாடி வருகின்றனர்.ஜேர்மனியில் ஹேம்பர்க் நகரில் இரண்டு ஏரிகளில் ஒன்றான ஆல்ஸ்ட்டெர் ஏரி உறைந்து கிடப்பதால் அரசு அனுமதியுடன் மக்கள் தங்கள் குளிர்கால கொண்டாட்டங்களைத் தொடங்கியுள்ளனர்.இக்கொண்டாட்டத்தில் லட்சக்கணக்கான பனிச்சறுக்கு ரசிகர்கள் கலந்து கொண்டு பனிச்சறுக்கு விளையாடி மகிழ்ந்தனர்.
நேற்று முன்தினம் வெள்ளியன்று தொடங்கிய இந்த விளையாட்டு இன்றுவரை கோலாகலமாக, கொண்டாடப்பட்டு வருகிறது.இது ஜேர்மனியின் மிகப்பெரிய குளிர்காலக் கொண்டாட்டம் என்பது குறிப்படத்தக்கது.நேற்று மதியம் உறைந்த ஏரியில் சிறுவர்கள் ஹொக்கி விளையாடினர். ஹேம்பக் நகரத்து மக்கள் மட்டுமே கலந்து கொண்ட இந்த உறைபனி திருவிழாவிற்கு சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை முதன் முதலாக அழைத்து வந்தனர்.
ஜேர்மனியின் ஹேன்னோவர் ஊரில் உள்ள இன்னொரு செயற்கை ஏரியான மாஷ் ஏரியும் உறைந்து கிடப்பதால் வாரக்கடைசியில் அங்கும் மக்கள் பனிச்சறுக்கு விளையாட்டுக்குத் தயாராகி வருகின்றனர்.இந்நிலையில் அடுத்த வாரம் ஜேர்மனியில் வெப்பம் அதிகரிக்கக்கூடும் என்றும் இதன் காரணமாக இந்த வார இறுதியுடன் இந்தக் கொண்டாட்டங்கள் நிறைவு பெற்றுவிடும்எனவும் வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
தென் ஆப்ரிக்கா ரூபாய் தாள்களில் நெல்சன் மண்டேலா.
தென் ஆப்ரிக்கா நாட்டின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலோவின் உருவப்படம், அந்நாட்டு ரூபாய் தாள்களில் அச்சிடப்பட்டு வெளிவரவுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.இது அவருக்கு கொடுக்கும் உயரிய கௌரவம் என்று அந்நாட்டு ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இனவெறிக்கு எதிராக போராடிய ஆப்ரிக்க காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முன்னாள் தென் ஆப்ரிக்க ஜனாதிபதியான நெல்சன் மண்டேலோ(வயது 94) 27 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர்.
கடந்த 1990-ம் ஆண்டு விடுதலையானார். பின்னர் தென்ஆப்ரிக்க அதிபராகவும் பதவியேற்றார். இந்நிலையில் மண்டலோ தனது இனவெறிக்கு எதிராக போராடியதன் 22ம் ஆண்டு தினத்தையொட்டி அவரது இனவெறிக்கு எதிராக கொள்கையை கௌரவிக்கும் வகையில், அந்நாட்டு மத்திய வங்கி மண்டேலா உருவம் பொறித்த ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து ஜனாதிபதி ‌ஜேக்கப் ஜூமா கூறுகையில், தென் ஆப்ரிக்காவில் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட முதல் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவுக்கு பெருமை சேர்க்கும் விதமாக அமையும் என்று கூறியுள்ளார்.தென் ஆப்ரிக்க ரிசர்வ் வங்கியின் கவர்னர் கில்மார்க்கெஸ் கூறுகையில், முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் உருவம் பொறித்த 10, 20, 50 மற்றும் 100, 200 நோட்டுகள் பல்வேறு வண்ணங்களில் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மார்க்கெலுடன் நட்பு பாராட்டும் சர்கோசி.
பிரான்ஸ் நாட்டில் ஏப்ரல் மாதம் நடைபெறப்போகும் ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடப் போவதை விரைவிலேயே சர்கோசி அறிவிக்க உள்ளார்.சர்கோசி தனது பிரச்சார உத்தியாக இப்போது ஜேர்மனியைப் புகழ்ந்து வருகிறார். பிரான்சுக்கும், ஜேர்மனிக்கும் இடையிலான உறவு சிறப்பாக இருப்பதாக அனைவரும் நம்பினால் அந்த நம்பிக்கை வாக்குகளாக மலரும் என்று நம்புகிறார்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு தேசிய அளவில் சர்கோசி ஒரு தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் ஜேர்மனியை தனது முன்மாதிரியாகக் கருதுவதாகவும், அதுபோல தனது நாட்டை முன்னிலைப்படுத்த விரும்புவதாகவும் குறிப்பிட்டார்.இந்த வாரம் பாரிசில் நடந்த பிராங்கோ ஜேர்மன் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்திருந்த ஜேர்மனியின் பிரதமர் ஏஞ்சலா மார்க்கெல்லுடன், சர்கோசியும் இணைந்து ஒருவரை ஒருவர் பாராட்டியவாறு பேட்டி அளித்தனர்.
மார்க்கெல் தனது கட்சியும், சர்கோசியின் UMP கட்சியின் ஒத்த சிந்தனை உள்ள கட்சியாக இருப்பதால் தான் சர்கோசிக்கு நிலைத்த ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார்.அண்மையில் ஜரோப்பிய ஒன்றியத்தின் நிதிநிலைக் கட்டுப்பாடுகளுக்காக பல மாற்றங்களை சர்கோசி புகுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
வன்முறை செயல்களில் ஈடுபட வேண்டாம்: ஒசாமா பின்லேடன் அறிவுரை.
தனது குழந்தைகளும், பேரக் குழந்தைகளும் மேற்கத்திய பல்கலைகழகங்களில் கல்வி கற்று, மிக அமைதியான வாழ்க்கை வாழ ஒசாமா பின்லேடன் விரும்பியுள்ளார்.இத்தகவலை உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதுபற்றி ஒசாமாவின் 5வது மனைவியின் சகோதரி ஒருவர் அளித்த பேட்டியில், ஒசாமா தனது குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளை அமெரிக்காவுக்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்று நல்ல கல்வி கற்க கூறினார்.
மேலும் அவர், தனது குழந்தைகளிடம் நீங்கள் அமைதியாக வாழ வேண்டும். நான் என்ன செய்தேனோ மற்றும் செய்து கொண்டிருக்கின்றேனோ அதனை நீங்கள் செய்ய வேண்டாம் என கூறியதாக லண்டன் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
மருத்துவமனையில் ஜப்பான் மன்னர்.
இரத்த ஓட்டம் குறைந்ததை அடுத்து ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக ஜப்பான் மன்னர் அகிடோ டோக்கியோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.78 வயதான அகிடோவிற்கு மருத்துவமனையில் ஆஞ்ஜியோகிராம் உட்பட பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.கடந்தாண்டு நவம்பர் மாதம் மன்னருக்கு நிமோனியா தாக்கு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மாலைதீவில் அமைதி நிலை திரும்பியது.
ஆட்சிமாற்றம் காரணமாக கடந்த சில நாள்களாக மாலைதீவுகளில் போராட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மாலைதீவு தலைநகர் மாலேயில் அமைதி திரும்பியது.மாலைதீவில் ஜனநாயக முறைப்படி தெரிவு செய்யப்பட்ட முதல் ஜனாதிபதியான முகமது நஷீத் கடந்த வாரம் தனது பதவியை ராஜிநாமா செய்தார். இதையடுத்து தலைநகர் மாலேயில் கடந்த 4 நாள்களாக போராட்டங்கள் வெடித்தன. இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
கடைகளும், வணிக நிறுவனங்களும் சனிக்கிழமை காலையில் திறக்கப்பட்டன. தேசிய பாதுகாப்புப் படையின் தலைமையகம் மற்றும் காவல் தலைமையகம் ஆகியவற்றைச் சுற்றிலும் இயல்பு நிலை காணப்பட்டது. நாடாளுமன்றத்தைச் சுற்றியுள்ள பகுதியில் போக்குவரத்து எவ்வித இடையூறுமின்றி சகஜமாகக் காணப்பட்டது.புதிய ஜனாதிபதி முகமது வாஹித் ஹசனின் அலுவலகத்தின் அருகிலும் நிலைமை இயல்பாகக் காணப்பட்டது. அதேபோலவே முன்னாள் ஜனாதிபதி நஷீத்தின் அலுவலகம் அருகிலும் இயல்பு நிலை காணப்பட்டது.
நஷீத் அதிகாலை 4 மணிக்கே எழுந்துவிடுவதாக அவரது அலுவலக ஊழியர் தெரிவித்தார். ஆனால் நிலைமையில் மாற்றமில்லை என்று நஷீத்தின் தந்தை செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அரசு விஷயங்களிலிருந்து தான் தள்ளியே இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.நஷீத்தும் வெள்ளிக்கிழமை மாலை தனது ஆதரவாளர்களுடன் பேரணி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அப்போது ஜனாதிபதி ஹசன் தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு தேர்தலுக்கு வழிவிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அமெரிக்காவை அழிக்க சீனாவுடன் கைகோர்க்கும் பாகிஸ்தான்.
சீனாவுடனான உறவை பலப்படுத்த பாகிஸ்தான் தீவிர ஆர்வம் காட்டி வருகிறது. இதற்காக கில்ஜித்-பல்திஸ்தான் பகுதியை சீனாவுக்கு குத்தகைக்குவிட பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது.இப்பகுதியை 50 ஆண்டுகளுக்கு சீனாவுக்குக் குத்தகைக்கு விடுவதன் மூலம் அந்த நாட்டுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்று பாகிஸ்தான் நம்புகிறது.இத்தகவலை வாஷிங்டனில் உள்ள அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இவர்களது கருத்துகள் உள்ளூர் பத்திரிகையில் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவுடன் பாகிஸ்தான் நெருக்கமான உறவை தொடர்ந்து மேற்கொள்ள முடியவில்லை. அமெரிக்காவின் இரட்டைக் கோபுர தகர்ப்பு வழக்கில் பிரதான குற்றவாளியான சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் 6 ஆண்டுகளுக்கும் மேலாக பதுங்கியிருந்தது பாகிஸ்தான் மீது அமெரிக்காவுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.இதைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு அளிக்கும் உதவிகளை நிறுத்தும்படி அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் பாகிஸ்தானுக்கான ரூ. 2,000 கோடி உதவியை நிறுத்தி வைப்பதாக அமெரிக்கா அறிவித்தது.
இது தவிர பாகிஸ்தான் எல்லையில் இருந்த இராணுவ வீரர்கள் மீது அமெரிக்க விமானம் நடத்திய தாக்குதலில் 24 பேர் உயிரிழந்தனர். இது தற்செயலாக நடந்த தவறு என்றும், திட்டமிட்டு இத்தாக்குதல் நடத்தப்படவில்லை என்று அமெரிக்கா கூறியபோதிலும், பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் சமாதானமடையவில்லை. இச்சம்பவம் இரு நாடுகளிடையிலான உறவில் பெரும் விரிசலை ஏற்படுத்தியது.அமெரிக்க வல்லரசுக்கு மாற்றாக சீனாவுடன் கை கோர்த்து செயல்பட பாகிஸ்தான் முடிவு செய்துள்ளதாக ஆய்வாளர்கள் வெளியிட்ட கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த மாதம் சீனாவில் பாகிஸ்தான் இராணுவ தளபதி ஜெனரல் அஷ்பக் பர்வேஸ் கயானி சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அப்போது கில்ஜித்-பால்திஸ்தான் பகுதியை சீனாவுக்குக் குத்தகைக்கு விட முடிவு செய்யப்பட்டதாகத் தெரிகிறது. ஜனவரி 4ம் திகதி முதல் 8ம் திகதி வரை சீனாவில் இருந்தபோது பிரதமர் வென் ஜியாபோவுடன் கயானி பேச்சு நடத்தினார்.அப்போது சீன மக்கள் இராணுவம், பாகிஸ்தானுக்குத் தேவையான அனைத்து இராணுவ உதவிகளையும் செய்யும் என்று வென் ஜியாபோ தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இரு நாட்டு இராணுவமும் பரஸ்பரம் பகிர்ந்து கொள்ளவும் அப்போது ஒப்புக் கொள்ளப்பட்டது.
“அமெரிக்காவுடன் தேய்ந்து வரும் பாகிஸ்தானின் உறவு, சீனாவுடன் கைகோர்க்க புதிய உத்தி” என்ற தலைப்பில் வெளியான கட்டுரையில் 50 ஆண்டுகளுக்கு நிலத்தை குத்தகைக்கு விட முடிவு செய்துள்ளதாக ரோஸ்னமாக பாங்-இ-ஷார் எனும் உருது நாளேடு செய்தி வெளியிட்டதாக ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.பாகிஸ்தானின் இந்த முடிவை சீன அதிகாரிகளும் ஏற்றுக் கொண்டு சம்மதித்துள்ளனர். முதல் கட்டமாக கில்ஜிஸ்தான் பகுதியில் சீன அரசு சில மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளும். பிறகு படிப்படியாக இப்பகுதியை தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வரும்.
உருது நாளேட்டில் வெளியான செய்தியின்படி இரு நாட்டு இராணுவமும் இணைந்து பணியாற்ற முடிவு செய்துள்ளதாக அமெரிக்க நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.இரு நாட்டு இராணுவ வீரர்களும் இணைந்து செயல்படும் இராணுவ ஒத்திகை இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் செயல்பாட்டுக்கு வரும் என்று அமெரிக்க நிபுணர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
ஒபாமாவை கொலை செய்ய திட்டமிட்டிருந்தேன்: மாணவன் பரபரப்பு தகவல்.
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை கொலை செய்ய திட்டமிட்டிருந்த உஸ்பெகிஸ்தானை சேர்ந்த மாணவன் கைது செய்யப்பட்டார்.அமெரிக்காவில் அலபமா மாகாணத்தில் உள்ள ஒரு ஓட்டலில் உஸ்பெகிஸ்தானை சேர்ந்த உலுக்பெக் என்ற இளைஞன் கடந்தாண்டு ஜூலை மாதத்தில் தங்கியிருந்தான்.
அப்போது அவன் இயந்திர துப்பாக்கி ஒன்றை வாங்கியதாக அமெரிக்க உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து அங்கு விரைந்த காவல்துறை அதிகாரிகள் உலுக்பெக்கை கைது செய்தனர். அதன் பின் அவனிடம் நடந்த விசாரணையில், ஜனாதிபதிஒபாமாவை கொல்ல துப்பாக்கி வாங்கியதாகவும், சரியான நேரத்துக்கு காத்திருந்ததாகவும் தெரிவித்தான்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF