Thursday, February 23, 2012

NEWS OF THE DAY.

பெப்ரவரி 27 ஆம் திகதி முதல் மார்ச் 21 ஆம் திகதிவரை இலங்கையில் சனத்தொகை கணக்கெடுப்பு! சரியான தகவல் வழங்குமாறு கோரிக்கை.
இலங்கையில் பெப்ரவரி 27 ஆம் திகதி முதல் மார்ச் 21 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள சனத்தொகை கணக்கெடுப்பில், தாம் கணக்கெடுக்கப்படுவதை மக்கள் உறுதிசெய்ய வேண்டுமென தொகைமதிப்பு, புள்ளிவிபரத் திணைக்களம் மக்களிடம் கோரியுள்ளது. சகல பிரஜைகளும் சரியான தகவல்களை வழங்குவதும். மக்கள் வழங்கிய தகவல்களை திணைக்கள ஊழியர்கள் இரகசியமாக வைத்திருப்பதும் சட்டப்படி கட்டாயமானதாகும் என திணைக்களப் பணிப்பாளர் நாயகம் டி.பீ.பி. வித்தியாரட்ன தெரிவித்துள்ளார்.
வீடுகளுக்கு வரும் கணக்கெடுப்பு உத்தியோகஸ்தர்களை, திணைக்களத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டை, அணிந்திருக்கும் தொப்பி, அவர்கள் வைத்திருக்கும் சனத்தொகை, வீடுகள் தொகைமதிப்பு இலச்சினையுடன் கூடிய கோவை என்பவற்றின் மூலம் அடையாளம் காண முடியும் என அவர் தெரிவித்தார்.குடியிருப்பதற்கு வீடில்லாமல் இருப்பவர்கள் மார்ச் 19 ஆம் திகதி அவர்கள் இரவில் படுத்துறங்கும் இடத்தில் வைத்து கணக்கெடுக்கப்படுவர் எனவும் இவர்கள் கணக்கெடுக்கப்பட்டவர்கள் என்பதை உறுதிசெய்யும் அடையாள அட்டையொன்றும் இவர்களுக்கு வழங்கப்படும்.
தேசிய அடையாள அட்டை இலக்கம், பிறந்த திகதி, மாவட்டம், கல்வித் தகைமைகள், தொழிற்பயிற்சி, தொழில்வாண்மை, கணினி அறிவு, தொழில், பொருளாதார செயற்பாடுகள் பற்றிய விபரங்கள் திரட்டப்படவுள்ளதால் மக்கள இவற்றை ஆயத்தமாக வைத்திருப்பது வேலையை இலகுவாக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.இச்சனத்தொகைக் கணக்கெடுப்பின் மூலம், தேவையானோருக்கு வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கவும் சனத்தொகை, வீடமைப்பு தொடர்பில் சரியான தரவுதளத்தைப் பேணவும் இத் தரவுகள் உதவும் என வித்தியாரட்ன தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலிருந்து தங்கக் கட்டிகளை கொண்டு வந்த தம்பதியினர் கைது.
சட்டவிரோதமான முறையில் இந்தியாவிலிருந்து தங்கக் கட்டிகளை கொண்டு வந்த தம்பதியினரை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளதாக சுங்கப் பிரதி பணிப்பாளர் சட்டத்தரணி ராஜ்மோகன் தெரிவித்தார்.
நேற்று கைது செய்யப்பட்ட குறித்த தம்பதியினரிடம் 11 இலட்சத்து 41 ஆயிரம் ரூபாய் பெறுமதியான மூன்று தங்கக் கட்டிகள் இருந்ததாகவும் அவர் கூறினார்.
சென்னையிலிருந்து நேற்று காலை 9.35 மணியளவில் இலங்கை வந்த ஐ.எக்ஸ் 672 எயார் இந்தியா விமானத்திலேயே குறித்த தம்பதியினர் வந்துள்ளனர்.கணவன், மனைவியரின் குறித்த பயணப் பொதிகளை சோதனையிட்ட சுங்க அதிகாரிகள் பெண்ணின் உள்ளங்கையில் ஏதோவொன்றை மறைத்து வைத்திருப்பதை அவதானித்துள்ளனர்.
அதன் பின்னர் அப்பெண்ணின் கையிலிருந்த பொதிகளை சோதனையிட்ட போது காபன் கடதாசியில் சுற்றிய நிலையில் மூன்று தங்கக் கட்டிகள் இருந்துள்ளன.சுங்க அதிகாரிகளின் பிடியில் சிக்கிய அத்தம்பதியினர் கண்டிப் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுவதுடன் மேலதிக விசாரணையை பிரதிப் பணிப்பாளர் தலைமையிலான குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். 
ஜனாதிபதி மகிந்த போன்று விநோத உடை போட்டிகளில் வேடமணிய தடை- புதிய சுற்று நிருபம் தயாராகின்றது.
இலங்கையின் மத்திய மாகாண முஸ்லீம் பாடசாலை ஒன்றில் மாணவர் ஒருவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவை போல் வேடமிட்டு, நகைச்சுவை பாத்திரத்தில் நடித்த சம்பவம் காரணமாக, மத்திய மாகாண முதலமைச்சர் கடுப்பாகிப் போனதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இவ்வாறான நிகழ்வுகள் அரச தலைவருக்கும், அரசாங்கத்தின் கௌவரவத்திற்கும் பாதிப்பு ஏற்படும் என்பதால், இனிவரும் காலங்களில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் தோற்றத்திற்கு ஈடான வகையில் உடையணிந்து, நாடகங்களையோ நிகழ்ச்சிகளையோ பாடசாலை மாணவர்களை கொண்டு நடத்த வேண்டாம் என பாடசாலை அதிபர்களுக்கு உத்தரவிடுமாறு, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க மாகாண கல்விப் பணிப்பாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இது தொடர்பான சுற்றுநிருபம் அடுத்த சில தினங்களில் மத்திய மாகாணத்தில் உள்ள பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.தற்போது பாடசாலைகளில் விளையாட்டு போட்டிகள், நிகழ்ச்சிகள் என்பன நடைபெற்று வருகின்றன. இதற்கமைய மத்திய மாகாண முஸ்லீம் பாடசாலை ஒன்றில் மாணவர் ஒருவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவை போல் வேடமிட்டு, நகைச்சுவை பாத்திரத்தில் நடித்த சம்பவம் காரணமாகவே, முதலமைச்சர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார் என மாகாண தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐ.நா மனித உரிமைகள் கூட்டத் தொடரில் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக ரஸ்யா அறிவிப்பு!
இலங்கை மனித உரிமை விவகாரங்களில் வெளிச்சக்திகள் தலையீடு செய்ய வேண்டியதில்லை என ரஸ்யா அறிவித்துள்ளது.இறையாண்மையுடைய நாடொன்றின் உள்விவகாரங்களில் எவரும் தலையீடு செய்ய வேண்டியதில்லை என இலங்கைக்கான ரஸ்ய தூதுவர் விளாடிமீர் பீ மிகொய்லா தெரிவித்துள்ளார்.
ஒரு நாட்டில் ஆட்சி செய்யும் அரசாங்கத்தை தீர்மானிக்கும் பொறுப்பு பலம்பொருந்திய நாடுகளுக்கு கிடையாது. நாட்டு மக்களே இவ்வாறான தீர்மானங்களை எடுக்க வேண்டும்.ஜனநாயாக ரீதியாக நிமமிக்கப்பட்ட அரசாங்கமொன்றின் நடவடிக்கைகளை எவரும்விமர்சனம் செய்யக் கூடாது.இலங்கையில் பாரியளவில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருக்கும் என நம்பவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.இலங்கை அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு ரஸ்யா தொடர்ச்சியாக ஆதரவளிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஊழல் மோசடி மிக்க ஆட்சி இலங்கையில் நடைபெறுகின்றது!- ரணில்.
பிராந்தியத்தில் ஊழல் மோசடி மிக்க ஆட்சி இலங்கையில் நடைபெறுவதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.பாகிஸ்தான், பங்களாதேஸ் மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் பாரியளவில் ஊழல் மோசடிகள் இடம்பெறுகின்றன. அந்த நாடுகளை தோற்கடிக்கும் அளவிற்கு இலங்கையில் அதிகளவில் ஊழல் மோசடிகள் இடம்பெறுகின்றன.
இந்த ஊழல் தீவில் மூன்று பிரதான பீடங்கள் காணப்படுகின்றன. விரயம், வஞ்சகம் மற்றம் ஊழல் ஆகியனவே இந்த பீடங்களாகும்.இந்த மூன்று பீடங்களினதும் விஹாரதிபதிகளை உங்களால் அனுமானிக்க முடியும். அவர்கள் யார் என்பதனை நான் குறிப்பிடப் போவதில்லை என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பொன்சேகா தொடர்பில் அமெரிக்கா அவதானிக்கிறது.
இலங்கையின் முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா தொடர்பில் இலங்கையில் எடுக்கப்படும்; சட்ட நடவடிக்கைகளை அமெரிக்கா தொடர்ந்து அவதானித்து வருகிறது.அமெரிக்காவின் ஜனநாயக செயற்பாடுகள் திணைக்களத்தின் மேலதிக செயலாளர் மைக்கல் எச். பொஸ்னர் இதனை நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்தார்.சரத் பொன்சேகாவை விடுதலை செய்ய வேண்டும் என்று அமெரிக்க வெள்ளை மாளிகையின் இணையத்தளத்தில் செய்தி ஒன்று வெளியாகியிருந்தது.
இந்த அறிக்கை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே மைக்கல் எச். பொஸ்னர் அமெரிக்காவின் நிலைப்பாட்டை விளக்கியுள்ளார்.சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டமை மற்றும் அவருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் என்பன, இலங்கையின் நீதிக் கட்டமைப்புக்கு சவாலை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமியலர்களின் புனித நூல் எரிப்பு: மக்களிடம் ஒபாமா மன்னிப்பு கோரினார்.
ஆப்கானில் உள்ள அமெரிக்க இராணுவத் தளத்தில் குர்ஆனின் பிரதிகள் எரிக்கப்பட்டதற்காக ஆப்கான் மக்களிடம் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா மன்னிப்பு கோரியுள்ளார்.ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் அருகே பக்ராம் என்ற இடத்தில் அமெரிக்காவின் விமானப் படைத்தளம் உள்ளது.
இப்பகுதியில் உள்ள குப்பைத் தொட்டியில் இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆன் புத்தகங்கள் எரிந்த நிலையில் கிடந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையே நடந்த சம்பவத்துக்கு ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள அமெரிக்க இராணுவ கொமாண்டர் ஜெனரல் ஜான் ஆலென் வருத்தம் தெரிவித்து நேற்று மன்னிப்பு கோரினார்.இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, அந்த எரிப்புச் சம்பவம் தவறுதலாக நடந்து விட்டது என்றும், அதற்காக தான் மிகவும் வருந்துவதாகவும் ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீத் கர்சாயுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இதனிடையே ஆப்கானிஸ்தானின் பல பகுதிகளில் மூன்றாவது நாளாக நடைபெற்று வரும் போராட்டங்களில் இன்று இரண்டு அமெரிக்கப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.ஆப்கானிஸ்தானின் வடக்கு கிழக்கு பகுதிகளில் ஏழு மாகாணங்களில் குர்ஆன் எரிப்பு தொடர்பில் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், அப்பகுதிகளில் இதுவரை குறைந்தது நான்கு பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இஸ்ரேலுக்காக ஜேர்மனி தயாரித்துள்ள புதிய நவீன ரக நீர்மூழ்கிக் கப்பல்.
புதிய நவீன ரக நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றை இஸ்ரேலுக்காக ஜேர்மனி தயாரித்துள்ளது.ஜேர்மனி புதிய நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றை தயாரித்து அதனை இஸ்ரேலுக்கு விற்பனை செய்ய உள்ளது.இரண்டாம் உலகப்போருக்குப் பின்பு தயாரிக்கப்பட்ட நீர்மூழ்கிக் கப்பல்களுள் இது மிகவும் நவீனமானது என்பது குறிப்பிடத்தக்கது.
68 மீற்றர் நீளமுள்ள இந்த நீர்மூழ்கிக் கப்பலை HDW என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது தண்ணீருக்கு அடியில் நடத்தப்படும் சோதனைகள் நடந்து கொண்டிருக்கிறது.எல்லாவித சோதனைகளும் நடத்திய பின்னர் இந்த நவீனரக நீர்மூழ்கிக் கப்பல் இஸ்ரேலுக்கு வழங்கப்படும் என்று ஜேர்மனி ஊடகங்கள் அறிவித்துள்ளது.உயர் தொழில் நுட்பங்களை கொண்ட இந்தக் கப்பல், நவீன டால்ஃபின் வகையைச் சேர்ந்தது. அணு ஆயுதங்களைத் தாங்கிச் செல்லக் கூடியது.
ஏற்கெனவே இஸ்ரேல், இந்த டால்ஃபின் ரகத்தைச் சேர்ந்த மூன்று நீர்மூழ்கி கப்பல்களை ஜேர்மனியிடமிருந்து பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து எதிர்வருகிற 2013ம் ஆண்டிற்குள் குறைந்த பட்சம் இன்னும் இரண்டு கப்பலாவது ஜேர்மனியிலிருந்து இஸ்ரேலுக்கு விற்கப்படும் எனவும் தெரிகிறது.இந்த விற்பனைக்கு ஜேர்மனியின் வரி கட்டுவோர், மானியம் வழங்கியுள்ளனர்.
கடந்த ஆண்டு, இஸ்ரேலுக்கு இனி நீர்மூழ்கிக்கப்பல்களை விற்பதில்லை என்று ஜேர்மனி முடிவு செய்திருந்தது. இதையடுத்து இரண்டு நாடுகளின் அரசு அதிகாரிகளுக்குள் ஏற்பட்ட மோதலால் கருத்து வேறுபாடுகள் தோன்றின.இந்நிலையில் இஸ்ரேல், பாலஸ்தீனியரை எதிர்த்து வந்த நிலையிலும், யூதர்களின் குடியிருப்புகளுக்கு அனுமதி அளித்து வந்த நிலையிலும் இந்த கருத்து வேறுபாடுகள் தகர்க்கப்பட்டு இஸ்ரேல் மீது ஜேர்மனிக்கு நல்லெண்ணமும், நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது.
ஈரான் மீது போர் தொடுக்க இஸ்ரேலுக்கு பல சிக்கல்: அமெரிக்க அதிகாரிகள் விளக்கம்.
அணு ஆயுத விவகாரம் தொடர்பாக ஈரான் மீது போர் தொடுக்க இஸ்ரேலுக்கு பல சிக்கல் உள்ளது என அமெரிக்க முன்னாள் இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.அணு ஆயுதங்களை ஈரான் தயாரித்து வருவதாக குற்றம் சாட்டி ஐ.நா மற்றும் அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட பல நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளன.இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இங்கிலாந்து, பிரான்சுக்கு கச்சா எண்ணெய் விநியோகத்தை ஈரான் அதிரடியாக நிறுத்தியது.
மேலும் அணு ஆயுத திட்டங்களை கைவிட வேண்டும், தங்கள் நாட்டு பிரஜைகள் மீது தாக்குதல் நடத்தி வருவதை நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் ஈரான் மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று இஸ்ரேல் கூறிவருகிறது.அவ்வாறு ஈரான் மீது இஸ்ரேல் போர் தொடுப்பது அவ்வளவு எளிதானது அல்ல என்று அமெரிக்க இராணுவ அதிகாரிகள் கணக்கிட்டுள்ளனர்.
இஸ்ரேலில் இருந்து ஈரானை சென்றடைய ஆயிரம் கிலோ மீட்டருக்கு மேல் பயணம் செல்ல வேண்டும். இதற்கு விமான எரிபொருள் நிறைய தேவைப்படும். இடையில் வானிலேயே விமானத்துக்கு எரிபொருள் நிரப்ப வேண்டி இருக்கும்.அத்துடன் 100க்கும் அதிகமான விமானங்கள் இருந்தால் தான் ஈரானில் உள்ள பல பதுங்கு குழிகள், அணு சக்தி திட்டங்கள் நடக்கும் இடங்களில் தாக்குதல் நடத்த முடியும். இதற்கு அதிக செலவாகும், சிக்கலானது என்று அமெரிக்க முன்னாள் இராணுவ அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சீனாவில் உருக்காலையில் வெடி விபத்து: 13 பேர் பலி.
சீனாவில் உள்ள லியோனிங் மாகாணத்தில் உருக்காலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 13 பேர் பலியாயினர், 17 பேர் படுகாயமடைந்தனர்.சீனாவின் லியோனிங் மாகாணம் ஆன்ஷான் நகரில் நேற்று முன்தினம் இரவு ஆங் அங் உருக்காலையில் வெடிவிபத்து ஏற்பட்டது.10 மீட்டர் சுற்றளவு கொண்ட வார்ப்பு இரும்பு திடீரென வெடித்ததால் அங்கிருந்த மணல் மூட்டைகளும், சுவரும் தகர்ந்தன. இந்த விபத்தில் 13 பேர் பலியாயினர், 17 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளில் இருந்து இதுவரை 10 பேர் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளனர்.வட்ட வடிவ இரும்பை உருவாக்குவதற்காக அச்சு வார்க்கும் போது இந்த விபத்து ஏற்பட்டதாக தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.ஆங் அங் உருக்காலை சீனாவில் மிகப்பெரிய இயந்திரங்களை உருவாக்கும் தொழிற்சாலைகளுள் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
வேலைக்கார பெண்ணை கார் ஏற்றி கொலை செய்த தம்பதிக்கு மரண தண்டனை.
பிலிப்பைன்சை சேர்ந்த வேலைக்கார பெண்ணை சித்ரவதை செய்து கார் ஏற்றி கொலை செய்த வழக்கில் கணவன், மனைவிக்கு குவைத் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் குவைத்தில் ஒரு வீட்டில் வேலை செய்து வந்தார். அந்த வீட்டின் உரிமையாளர் மாற்று திறனாளி.
அவரும், அவரது மனைவியும் சேர்ந்து வேலைக்கார பெண்ணை கொடுமை செய்து வந்துள்ளனர். திடீரென ஒருநாள் வேலைக்கார பெண் மர்மமான முறையில் மாயமானார். அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்காததால், அந்த தம்பதியின் மகன் அதிர்ச்சி அடைந்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
என் அப்பாவும் அம்மாவும் சேர்ந்து வேலைக்கார பெண்ணை கொடுமைப்படுத்தினர். தினமும் அடித்து உதைத்து சித்ரவதை செய்தனர். இதில் அவளது உடல்நலம் பாதிக்கப்பட்டது. அவளை மருத்துவமனையில் சேர்ப்பதாக கூறி காரில் அழைத்து சென்றார்கள். அந்த பெண் என்ன ஆனார் என்று தெரியவில்லை என காவல்துறை அதிகாரிகளிடம் அவர் தெரிவித்தார்.
இதையடுத்து பொலிசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அதில் காரில் அந்த பெண்ணை ஏற்றிக் கொண்டு ஆள் நடமாட்டம் இல்லாத பாலைவன பகுதிக்கு தம்பதி சென்றுள்ளனர் அங்கு போனதும், ஓடும் காரில் இருந்து அந்த பெண்ணை உதைத்து கீழே தள்ளினர். பின்னர் உயிருக்கு போராடிய அவர் மீது பலமுறை காரை ஏற்றி கொலை செய்துள்ளனர் என்று தெரியவந்தது.சித்ரவதை செய்து கொடூரமாக ஒரு பெண்ணை கொலை செய்த தம்பதிக்கு குவைத் குற்றவியல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
பிரான்சில் பெட்ரோல் விலை உயர்வு.
பிரான்சில் தொடர்ந்து மூன்றாவது வாரமாக பெட்ரோல் விலை உயர்ந்திருக்கிறது.கடந்த 2008ஆம் ஆண்டில் பிரான்சில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் உயர்வு காணப்பட்டது. அதேபோல தற்போதும் பெட்ரோல், டீசல் விலையில் உயர்வு ஏற்பட்டுள்ளது.சாதாரண பெட்ரோல் லீற்றர் 1.58 யூரோவாகவும், சூப்பர் பெட்ரோலுக்கு லீற்றர் 1.62 யூரோவாகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.கடந்த 2008ஆம் ஆண்டில் இதன் விலை 1.45 யூரோவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2011ஆம் ஆண்டின் இறுதியிலிருந்து எண்ணெய் விலை உயர்ந்து கொண்டே போகிறது. டொலருக்கு எதிராக யூரோவின் போராட்டமும் நைஜீரியா, ஈரான் போன்ற எண்ணெய் உற்பத்தி நாடுகளின் நிலையற்ற தன்மையும் இந்த விலை உயர்வுக்குக் காரணங்களாகும்.கடந்த ஞாயிறு அன்று ஈரான் அரசு, இனி பிரான்சுக்கும், பிரிட்டனுக்கும் எண்ணெய் விற்பதில்லை என்று அறிவித்துவிட்டது. கடந்த 2011ஆம் ஆண்டின் இறுதியிலிருந்து இவ்விரு நாடுகளும் ஈரானில் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிட்டது.ஒரு நாளைக்கு 15 மில்லியன் பேரல் எண்ணெய் கொண்டு போக உதவும் ஹோர்முஸ் நீர்ச்சந்திப்புப் பகுதியில் அச்சம் அதிகமாவதால் எண்ணெய் விலை இன்னும் அதிகமாகும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
அவுஸ்திரேலிய வெளிவிவகாரத்துறை அமைச்சர் பதவி ராஜினாமா.
அவுஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லார்ட்டுடன் ஏற்பட்ட அரசியல் மோதல் காரணமாக வெளிவிவகாரத்துறை அமைச்சர் கெவின் ரூட் தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார்.அமெரிக்காவின் வாஷிங்டன் நகரத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் இத்தகவலை அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், என்னால் பிரதமருடன் இணைந்து எனது பணியை சிறப்பாக செய்ய இயலாது என நினைக்கின்றேன்.எனது பதவியை ராஜினாமா செய்வதையே மிகவும் கௌரவமாக நினைக்கின்றேன்.என்னுடைய எதிர்காலம் குறித்து எனது குடும்பத்தார் மற்றும் சமூகத்தினருடன் கலந்தாலோசித்து முடிவை எடுப்பேன் என்று தெரிவித்தார்.இவருடைய பதவி விலகல் குறித்து பிரதமர் கருத்து தெரிவிக்கையில், இவரது ராஜினாமா சற்று ஏமாற்றம் அளிப்பதாகவே உள்ளது. பதவி விலகல் குறித்து என்னிடம் கலந்தாலோசிக்கவில்லை என்றார்.
போருக்கு தயாராகிறது ஈரான்.
ஈரானின் அணு ஆயுத திட்டங்கள் குறித்து ஆராய்வதற்காக சர்வதேச அணு சக்தி ஏஜென்சியின்(ஐ.ஏ.இ.ஏ) பிரதிநிதிகள் குழு இரண்டாவது முறையாக ஈரான் சென்றுள்ளது.மேலும் தற்போது அணு சக்தி திட்டங்கள் குறித்த ஈரானுடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளதாக அக்குழு தெரிவித்துள்ளது.இந்நிலையில் இஸ்ரேல் ஜனாதிபதி பெஞ்சமின் நெதான்யாகுவை அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா சந்தித்து பேசவுள்ளார்.
எனினும் ஈரான் விமான பாதுகாப்பு படை ஒத்திகை நடத்த தயாராகி வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.இதேபோல் அணு சக்தி நிலையங்களின் பாதுகாப்பை அதிகரிக்கவும், பொதுமக்களுக்கும் அணுசக்தி நிலையங்களுக்குமான அச்சுறுத்தல்களை முறியடிக்கும் முகமாக தென் ஈரானில் பெருமளவில் இராணுவ பயிற்சிகள் நடத்தப்படவுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.
கிலானிக்கு எதிரான ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பு.
பாகிஸ்தான் பிரதமர் கிலானி மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்வரும் 28ம் திகதிக்கு ஒத்திவைத்து அந்நாட்டு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தான் ஜனாதிபதி ஸர்தாரி மீதான ஊழல் வழக்குகளை மீண்டும் விசாரிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இந்த உத்தரவை பிரதமர் கிலானி செயல்படுத்தவில்லை.எனவே நீதிமன்றத்தை அவமதித்ததாக கிலானி மீது குற்றம் சுமத்தப்பட்டது. இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் எனக் கோரிய கிலானியின் மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்தது.
இதனையடுத்து நேற்று நடந்த விசாரணையில் கிலானிக்கு எதிரான ஆதாரங்களை அரசுத் தரப்பு சட்டத்தரணியான அட்டர்னி ஜெனரல் அன்வர் உல் ஹக் சமர்ப்பித்தார்.இந்நிலையில் இந்த வழக்கை எதிர்வரும் 28ம் திகதிக்கு ஒத்தி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
எதிர்வரும் 27ம் திகதி தலைமை பதவிக்கான தேர்தல்: அவுஸ்திரேலியா பிரதமர்.
அவுஸ்திரேலிய வெளிவிவகாரத்துறை அமைச்சர் கெவின் ரூட் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.இந்நிலையில் இவரது கட்சியான தொழிலாளர் கட்சியின் தலைமை பதவிக்கு எதிர்வரும் 27ம் திகதி வாக்குப்பதிவு நடைபெறும் என பிரதமர் ஜூலியா கில்லார்டு அறிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில் தொழிலாளர் கட்சித் தலைவராக 2006ம் ஆண்டில் பொறுப்பேற்ற கெவின் ரூட் கடந்த 2007ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரையில் பிரதமராக பதவி வகித்தார்.இதற்கிடையில் கட்சிக்குள் ஏற்பட்ட மோதலில் அதிக வாக்குகளைப் பெற்று 2010ம் ஆண்டு கில்லார்டு பிரதமரானார். அதே ஆண்டு செப்டம்பரில் ரூட் வெளிவிவகாரத்துறை அமைச்சராக பதவியேற்றார்.
இந்நிலையில் சமீப காலமாக கட்சியின் தலைவர் மற்றும் பிரதமர் பதவிக்கான போட்டியில் ரூட் ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் வெளியாயின. கில்லார்டுக்கும், கெவினுக்கும் தேசியக் கொள்கைகளில் பெரிய அளவில் கருத்து வேறுபாடுகள் எழவில்லை.அதேநேரம் கில்லார்டின் ஆதரவு அமைச்சர்கள் ரூத்தைக் கடுமையாக விமர்சித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் வெளிவிவாகரத்துறை அமைச்சர் பதவி விலகியதை அடுத்து, கட்சியின் தலைமை பதவிக்கு எதிர்வரும் 27ம் திகதி வாக்குப்பதிவு நடைபெறும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து பிரதமர் கூறுகையில், இதில் கெவின் ரூட்டையும் நாங்கள் ஒரு வேட்பாளராக கருதுகிறோம். அவ்வாறு அவர் பங்குபெற்றால் வெற்றி பெற வாய்ப்புகள் அதிகம் என்றார்.
தாய்லாந்தில் அகதிகள் முகாமில் பயங்கர தீ விபத்து.
தாய்லாந்தின் உம்பெய்ம் மாய் பகுதியில் உள்ள மியான்மர் அகதிகள் முகாமில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.இந்த தீ விபத்தில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சேதமடைந்தன.
தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், உயிர்ச்சேதம் குறித்த தகவல் இல்லை என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட அகதிகளுக்கு உணவு மற்றும் உறைவிடங்களை வழங்கும் பணியில் தன்னார்வ அமைப்புகள் ஈடுபட்டுள்ளன.
ஏஞ்சலா மெர்கெலை பாராட்டிய ஒபாமா.
யூரோ மண்டல நெருக்கடியைத் தீர்க்க சிறப்பான முயற்சிகளை எடுத்ததற்காக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா(Barack Obama), ஜேர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கெலைப்(Angela Merkel) பாராட்டினார்.கிரீஸ் நாட்டின் கடனைத் தீர்க்க பிணையநிதி திரட்டும் புதிய மீட்புத் திட்டத்தை மெர்கெல் அறிமுகப்படுத்தினார்.
இதுகுறித்து வெள்ளை மாளிகையின் செய்தித்தொடர்பாளர் ஜே கார்னே(Jay Carney) கூறுகையில், ஐரோப்பிய மத்திய வங்கியின் சமீபத்திய நடவடிக்கைகளும் ஸ்பெயின், இத்தாலி நாடுகளின் சீர்திருத்த நடவடிக்கைகளும் யூரோ மண்டல நிதி நெருக்கடியைத் தீர்க்கும் என்பதில் மெர்கெலும், ஒபாமாவும் ஒருமித்த கருத்துடையவர்களாக இருக்கின்றனர்.
ஆனால் ஜேர்மனியில் மெர்கெலின் திட்டங்களுக்கு அவரது கூட்டணிக் கட்சியின் பாராளுமன்றத் துணைத்தலைவரான உல்ஃப்கங்க் போஸ்பக்(Wolfgang Bosbach) எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.போஸ்பக், கடந்த ஆண்டும் EFSF என்று அழைக்கப்படும் ஐரோப்பிய நிதி நிலைத்தன்மை வசதிக்கு எதிராக வாக்களித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.கிரீஸ் நாட்டைக் கடனில் இருந்து காப்பாற்ற பிணையநிதி உருவாக்கும் திட்டத்திற்கு எதிராக ஜேர்மனின் வரிகட்டுவோர் அமைப்பு செயல்படுகிறது.
கிரீஸின் இந்தப் புதிய திட்டத்தினால் வரிகட்டுவோர் தான் நஷ்டப்படப் போகின்றனர் என்று வரிகட்டுவோர் அமைப்பின் தலைவரான கார்ல் ஹீன்ஸ் டேக்(Karl-Heinz Däke) ஆங்கிலப் பத்திரிக்கையான Neue Osnabrucker Zeitungக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.எதிர்வரும் திங்கட்கிழமையன்று ஜேர்மனியின் பாராளுமன்றத்தில் இந்தப் பிணையநிதி ஒப்பந்தம் வாக்கெடுப்புக்கு விடப்படுவது குறிப்பிடத்தக்கது.
இத்தாலி கப்பல் விபத்து: ஒரே இடத்தில் 8 பேரின் உடல்கள் கண்டுபிடிப்பு.
இத்தாலியின் தலைநகர் ரோம் அருகே உள்ளே சிஜிலியோ தீவு அருகே கடந்த ஜனவரி மாதம் 13ம் திகதி கோஸ்டா கான்கார்டியா என்ற பயணிகள் கப்பல் பாறையில் மோதி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் கப்பலில் பயணம் செய்த ஆயிரக்கணக்கான நபர்களில் 32 பேர் உயிரிழந்தனர், மற்றவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.உயிரிழந்த நபர்களில் 17 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. மூழ்கிய கப்பல் மேலும் நகர்ந்து கொண்டே இருந்ததால் மீட்பு பணிகள் கைவிடப்பட்டது.எனவே சில நாட்கள் கழித்து பணிகள் மீண்டும் தொடங்கியதில், தற்போது ஒரே இடத்தில் 8 பேரின் உடல்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.மீட்புப் படையினர் அவர்களை மீட்டனர். கப்பலை முழுவதுமாக மீட்பதற்கு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
லண்டன் கூட்டத்தில் சோமாலியாவின் எதிர்காலத் தீர்வு.
சோமாலியாவின் தீவிரவாதம் மற்றும் கடற்கொள்ளை பிரச்னைகளுக்கான தீர்வு காணும் நோக்கில் இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.இந்த கூட்டத்தில் 40 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். இந்தக் கூட்டத்தில் பல வருடங்களாக சோமாலியாவில் தொடர்ந்து நடந்துவரும் உள்ளூர் போர் மற்றும் பஞ்சம் குறித்து விவாதிக்கப்படும்.மேலும் தலைவர்கள் சோமாலியாவில் உள்ள பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் மற்றும் வளர்ச்சிக்கு நிதி வழங்குவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இது குறித்து சோமாலியாவின் பிரதமர் அப்திவெலி மொஹமது அலி(Abdiweli Mohamed Ali) கூறுகையில், தனது நாடு மிகவும் இக்கட்டான நிலையில் இருப்பதாகவும், சர்வதேச உதவி தனது நாட்டிற்கு அதிகமாகத் தேவைப்படுவதாகவும் தெரிவித்தார்.இந்தக் கூட்டத்தில் அமெரிக்காவின் வெளிவிவகாரத்துறை அமைச்சரான ஹிலாரி கிளிண்டன்(Hilary Clinton), நைஜீரியாவின் ஜனாதிபதி குட்லக் ஜோனாதன்(Goodluck Jonathan), எத்தியோப்பிய தலைவர் மெலெஸ் ஸெனாவி(Meles Zenawi) மற்றும் ஐ.நா.வின் பொதுச் செயலர் பான் கி மூன்(Ban Ki-moon) ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.
இஸ்லாமியத் தீவிரவாதிகள், இந்த லண்டன் கூட்டத்தை சோமாலியாவை அடிமைப்படுத்தும் மற்றொரு முயற்சியாகக் கருதுகின்றனர். எனவே சோமாலியக் கடல்கொள்ளையைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் இந்தியப்பெருங்கடலில் ரோந்துக் கப்பலை பிரிட்டனும், மற்ற நாடுகளும் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.இந்த ரோந்து படைகள் சோமாலியர்களின் ஆள்கடத்தல் நடவடிக்கைகளை ஓரளவு கட்டுப்படுத்தியுள்ளன.இது குறித்து பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், பாராளுமன்றத்தில் பேசிய போது, அனைத்து நாட்டினரின் ஒன்றிணைந்த முயற்சியால் மட்டுமே சோமாலியா சந்திக்கும் பல்வேறு சவால்களை சமாளிக்க முடியும் என்று கூறினார்.
மேலும் சோமாலியாவை பாதுகாப்பான, வலிமையான நாடாக உருவாக்கவும் சர்வதேச சமூகம் அனைத்து உதவிகளையும் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.பிரிட்டனின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் வில்லியம் ஹேக்(William Hague), பிப்ரவரி மாதத்தின் தொடக்கத்தில் சோமாலியா சென்று வந்தார். இவரிடம் சோமாலியாவின் தலைவர்கள், படைகளின் உதவிகொண்டு மட்டுமே சோமாலியாவில் அமைதியை வரவழைக்க முடியாது எனவும் கல்வி, சட்டம் ஒழுங்கு போன்றவற்றில் மனிதநேய அடிப்படையிலான உதவிகளை வழங்க வேண்டும் என்று கூறினார்கள்.
இதுகுறித்து சோமாலிய பிரதமர் கூறுகையில், இந்தக் காலகட்டம் சோமாலியாவின் வரலாற்றில் மிகவும் முக்கியமானது. தீவிரவாதம், கடற்கொள்ளை காலத்திலிருந்து அமைதி, நிலைக்கு மாறப்போகிறோம் என்று தெரிவித்துள்ளார்.
11 நகரங்களை உலுக்கிய பயங்கரவாத தாக்குதல்.
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இன்று நடந்த தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்களில் ஒரே நாளில் மட்டும் 50 பேர் உயிரிழந்துள்ளனர், 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.சுமார் இரண்டரை மணி நேரம் தொடர்ச்சியாக நடந்த இந்த குண்டுவெடிப்பு தாக்குதல்கள் 11 நகரை பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது.
இந்த தாக்குதல்களுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. கடந்த பத்து வருடங்களாக நடந்த போருக்கு பின் அமெரிக்க படைகள் கடந்தாண்டு டிசம்பர் மாதம் தாய்நாடு திரும்பின.இதன் பிறகு ஈராக்கில் பெரும் அரசியல் நெருக்கடி ஏற்பட்டது. மேலும் சன்னி இனத்தவரான துணை ஜனாதிபதி தரிக் அல்-கஷெமி கைது செய்யப்பட்டார்.இதன் தொடர்ச்சியாக பல்வேறு பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை நடந்த தாக்குதல்களில் இதுவே மிக பயங்கரமான தாக்குதலாக கருதப்படுகிறது.
இத்தாலிய கப்பல் இந்தியாவிலிருந்து செல்ல தடை.
இந்திய மீனவர்களை சுட்டுக் கொன்ற வழக்கில், இத்தாலிய கப்பல் இந்திய எல்லையிலிருந்து செல்ல முடியாது என கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.இத்தாலிய கடற்படையினர் இந்திய மீனவர்களை சுட்டுக் கொன்ற விவகாரத்தில் ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு மீனவர் குடும்பத்தினர் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
இன்று விசாரணைக்கு வந்த இவ்வழக்கில் ரூ.25 லட்சத்திற்கு வங்கி உத்தரவாதம் அளிக்க வேண்டுமென கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, மேலும் இது தவறும் பட்சத்தில் இத்தாலிய கப்பல் இந்திய எல்லையிலிருந்து செல்ல முடியாது என தீர்பளிக்கப்பட்டுள்ளது.அதேநேரம் இச்சம்பவம் சர்வதேச கடல் எல்லையில் நிகழ்ந்துள்ளது. இந்திய கடல் எல்லையில் நடக்கவில்லை என்று இத்தாலி தரப்பில் விவாதிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.
அர்ஜென்டினாவில் ரயில் விபத்து: 50 பேர் பலி.
தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவின் தலைநகரில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 50 பேர் உயிரிழந்தனர், மேலும் 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.ரயில் நிலையத்தின் கடைசியாக உள்ள தடுப்பு பகுதிக்கு முன்பாக நிற்க வேண்டிய ரயில், அதையும் தாண்டி சென்று தடுப்புச்சுவரில் மோதியதால் இந்த விபத்து நடந்துள்ளது.
விபத்தை நேரில் கண்டவர்கள் கூறுகையில், ரயில் மிகவும் வேகமாக வந்து கொண்டிருந்தது. மேலும் ரயிலில் அதிகம் பேர் பயணம் செய்தனர். இதனால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிவித்தனர்.விபத்தில் சிக்கியவர்கள் ரயிலின் யன்னல்களை உடைத்து வெளியே வர முயன்றனர். விபத்து நடந்த இடத்திற்கு காவல்துறை அதிகாரிகள், மீட்புப் படையினர் சென்று பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பெனாசீரை கொலை செய்தது யார் என்பது ஸர்தாரிக்கு தெரியும்: முஷாரப்.
பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி பெனாசீர் பூட்டோவை கொலை செய்தது யார் என்பது அவரது கணவரும், தற்போதைய ஜனாதிபதியுமான ஸர்தாரிக்கு தெரியும் என பர்வேஷ் முஷாரப் தெரிவித்துள்ளார்.கடந்த 2007ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27ம் திகதி ராவல்பிண்டியில் நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற போது பெனாசீர் பூட்டோ படுகொலை செய்யப்பட்டார்.இந்த கொலை விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரெஹ்மான் மாலிக் கூறுகையில், பெனாசீர் கொல்லப்பட்டதில் பர்வேஷ் முஷாரபுக்குத் தொடர்பிருப்பதாகத் தெரிவித்திருந்தார்.
பாகிஸ்தான் மக்கள் கட்சி(பிபிபி) சர்வதேச பொலிசார்(இன்டர்போல்) உதவியுடன் முஷாரப்பை பாகிஸ்தானுக்குக் கொண்டு வந்து அவரிடம் விசாரணை நடத்தப்படும் என்று கூறினார். பெனாசீர் பூட்டோக்கு உரிய பாதுகாப்பு அளிக்கத் தவறியது குறித்து அவரிடம் விசாரணை நடத்தப்படும் என்று கூறினார்.இரண்டு முறை பாகிஸ்தான் பிரதமராக இருந்த பெனாசீருக்கு மிக மிக முக்கிய பிரமுகர்களுக்கு(விவிஐபி) அளிக்கப்படும் பாதுகாப்பு அளிக்கப்படவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் உள்ளூர் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் முஷாரப், இந்த கொலையில் தொடர்புள்ளவர்கள் யார் என்ற விவரம் அவரது கணவர் ஆசிப் அலி ஸர்தாரிக்குத் தெரியும் என்று தெரிவித்துள்ளார்.அரசியல்வாதிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டியது அந்தந்த மாகாண அரசுகளின் பொறுப்பு. இதில் பெடரல் அரசு ஒருபோதும் தலையிட்டது கிடையாது என்று அவர் கூறினார். பெனாசீர் பூட்டோவுக்கு பாதுகாப்புப் பணிகளை அவரது பாகிஸ்தான் மக்கள் கட்சிதான் அளித்தது.
இந்நிலையில் அவரைக் கொன்றவர்கள் யார் என்பது அவரது கணவரான ஆசிப் அலி ஸர்தாரிக்கு நன்கு தெரியும் என்று கூறினார்.பல ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் திரும்பிய பெனாசீரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக 2007ம் ஆண்டு தாம் அவரிடம் தெரிவித்ததாக கூறிய அவர், அவருக்கு தான் ஒருபோதும் அச்சுறுத்தலாக இருந்ததில்லை என்று குறிப்பிட்டார்.
இந்த விடயத்தில் இன்டர்போல் எந்த வகையில் தன்னை தொடர்புப்படுத்திக் கொண்டதில்லை என்று குறிப்பிட்டார். இந்த கொலை சம்பவத்துக்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என அரசு அறிக்கை தெரிவிப்பதையும் முஷாரப் சுட்டிக்காட்டினார்.2007ம் ஆண்டு கராச்சி விமான நிலையத்துக்கு வருவதற்கு முன்பே அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகத் தெரிவித்த அவர், பெனாசீர் கராச்சி விமான நிலையத்தை வந்தடைந்தவுடன் குண்டு வெடித்தது.
மேலும் காரின் மேற்கூரை உள்ள காரில் பயணம் செய்யும்படி பெனாசீரிடம் கூறியது யார், குண்டு துளைக்காத காருக்குப் பதிலாக இந்தக் காரில் பயணம் செய்யும்படி அவரிடம் கூறியது யார் என்பது தெரியவில்லை.தன்மீது சுமத்தப்பட்ட வழக்குளை சந்திக்கத் தயாராக இருக்கிறேன் என்று முஷாரப் தெரிவித்தார்.
மேற்கத்திய ஆதிக்கத்தை ஒழிப்பதே எங்கள் நோக்கம்: ஈரான்.
ஈரான் அணு ஆயுதம் தயாரித்து வருகிறது என அமெரிக்கா, இஸ்ரேல் உட்பட மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.அதற்கேற்ப ஈரான் அணு சக்தி நாடு என்று அதன் தலைவர் அயதுல்லா அலி காமினே பகிரங்கமாக அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து ஈரானை தனிமைப்படுத்த வேண்டும் என மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தின. மேலும் பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்தன.இஸ்ரேல், ஈரான் இடையே போர் பதற்றம் அதிகரித்தது. இந்நிலையில் ஈரானில் சோதனையிட ஐ.நா அணுசக்தி ஏஜென்சி குழு இரண்டாவது முறையாக அனுப்பப்பட்டது.
ஈரான் அணு விஞ்ஞானிகளுடன் தீவிர ஆலோசனை நடத்திய ஐ.நா குழு, அணு ஆயுத தயாரிப்புக்கான எந்த ஆதாரமும் கிடைக்காத நிலையில் தோல்வியுடன் திரும்பியது.இதையடுத்து ஈரான் தலைவர் காமினே கூறுகையில், அணு ஆயுதத்தை தேடி நாங்கள் அலையவில்லை. மேற்கத்திய ஆதிக்கத்தை ஒழிப்பதே எங்கள் நோக்கம். அதில் ஈரான் விரைவில் வெற்றி பெறும். எதிரிகள் என்ன கூறினாலும் அணுசக்தி எங்கள் தேசிய தேவை. அதை விஞ்ஞானிகள் தொடர வேண்டும் என்று தெரிவித்தார்.
உளவாளிகளின் தலையை துண்டித்து படுகொலை செய்த தலிபான்கள்.
ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் பயங்கரவாதிகள் அரசுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.ஹேமந்த் மாகாணத்தில் அரசுக்கு ஆதரவாக தகவல்கள திரட்டி தர உளவு பார்த்ததாக குற்றம்சாட்டி 4 பேரை அவர்கள் தலையை துண்டித்து படுகொலை செய்தனர்.
இவர்கள் அனைவரும் செயற்கைகோளுடன் நேரடியாக தொடர்பு கொண்டு தகவல்களை பரிமாறக்கூடிய கைபேசிகைள வைத்திருந்ததால், உளவாளிகள் என்ற சந்தேகத்தில் 4 பேரும் கொலை செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF