Friday, February 17, 2012

NEWS OF THE DAY.

45 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் கடத்திய பிலிப்பைன்ஸ் பெண் விமானநிலையத்தில் கைது.
45 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கெய்ன் ரக போதைப்பொருள் கடத்தி வந்த பிலிப்பைன்ஸ் நாட்டு பெண்ணொருவரை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.நேற்று காலை 8.30 மணியளவில் கைது செய்யப்பட்ட குறித்த பெண்ணிடமிருந்து 45 மில்லியன் ரூபா பெறுமதியுடைய மூன்று கிலோவிற்கு அதிகமான கொக்கெய்ன் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.
கட்டாரிலிருந்து வந்த விமானத்திலேயே குறித்த பெண் இந்த போதைப் பொருளினை கடத்தி வந்துள்ளார்.46 வயதுடைய குறித்த பிலிப்பைன்ஸ் பெண்ணின் பயணப் பையினை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டபோது அதில் மிகவும் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்ட குறித்த பெண்ணை சுங்கப் பணிப்பாளர் ரஞ்சன் தலைமையிலான விசேட குழுவினர் விசாரணைக்குட்படுத்தி வருகின்றனர்.
உலக சந்தையில் எரிபொருள் விலை குறைந்தால் மட்டுமே இலங்கையிலும் குறைப்போம்!- அமைச்சர் பிரியதர்ஷன யாப்பா.
உலக சந்தையில் எரிபொருள் விலை குறைவடைந்தால் மட்டுமே, இலங்கையிலும் எரிபொருள் விலையை குறைப்போம் என அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, உலக சந்தையில் எரிபொருளின் விலை குறைவடைந்த பல சந்தர்ப்பங்களில் அவற்றின் விலையைக் குறைத்து மக்களுக்கு நிவாரணம் பெற்றுக்கொடுத்துள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
உலக சந்தையில் எரிபொருள் விலையேற்றம் தொடர்ந்து இடம்பெற்றுக் கொண்டிருப்பதாலேயே இலங்கையிலும் எரிபொருள் விலையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.எனினும், டீசல் ஒரு லீற்றருக்கு 26. 00 ரூபாயும், மண்ணெண்ணெய் ஒரு லீற்றருக்கு 38.00 ரூபாயுமென மானியம் வழங்கிக் கொண்டிருக்கின்றோம் என அமைச்சர் யாப்பா தெரிவித்துள்ளார்.
உலக சந்தையில் எரிபொருள் விலை உயர்வதும் குறைவடைவதும் சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப அவ்வப்போது இடம்பெறுகின்றன. அதற்கு அமைய நாமும் எரிபொருளின் விலையை கூட்டியும் குறைத்தும் வருகின்றோம்.உலக சந்தையில் எரிபொருளின் விலை குறைந்த வெவ்வேறு சந்தர்ப்பங்களில் நாமும் அதன் விலையை குறைத்து அதன் நன்மைகளை ஏற்கனவே மக்களுக்குப் பெற்றுக் கொடுத்துள்ளோம் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் விலையேற்றத்தால் அரசாங்கத்திற்கு மகிழ்ச்சியில்லை: மைத்திரிபால சிறிசேன.
அரசாங்கம் விருப்பத்துடன் பொருட்கள் சேவைகளுக்காக விலைகளை உயர்த்தவில்லை என சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் ஏற்படும் பிரச்சினைகளினால் இவ்வாறான தீர்மானங்கள் எடுக்க நேரிட்டுள்ளது.
எதிர்க்கட்சிகள் எந்த விடயத்தையும் விமர்சனம் செய்கின்றன. பொறுப்பு வாய்ந்த அரசாங்கம் என்ற ரீதியில் பல்வேறு சவால்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளது.இதேவேளை, எரிபொருள் மற்றும் மின்சாரக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டமை அரசாங்கத்திற்கு மகிழ்ச்சியில்லை என அமைச்சர் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
பாணின் விலையேற்றம் தொடர்பில் இன்று இறுதி முடிவு?
இலங்கையில் எரிபொருள் விலை ஏற்றத்தைத் தொடர்ந்து பாணின் விலையை அதிகரிப்பது குறித்து இன்று மாலைக்குள் இறுதி முடிவு எடுக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.பேக்கரி உற்பத்திகள் பலவற்றுக்கு எரிபொருள் அதிகம் தேவைப்படுவதால், பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலையையும் அதிகரிக்க நேர்ந்துள்ளதாக அச் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்று மாலை கூடவுள்ள பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் விலை உயர்வு குறித்து இறுதி முடிவு எடுப்பர் என என்.கே.ஜயரத்ன குறிப்பிட்டார்.எரிபொருள் விலையேற்றத்தைத் தொடர்ந்து, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் போக்குவரத்துக் கட்டணங்கள் படிப்படியாக உயர்ந்து செல்வதால் பாரிய நெருக்கடிகளைச் சந்தித்து வருவதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
சிரியா ஜனாதிபதி பதவி விலக கோரும் தீர்மானம் ஐ.நாவில் நிறைவேற்றம்.
இராணுவத்தின் அடக்குமுறை மூலம் பொதுமக்களை கொன்று குவிக்கும் சிரியா ஜனாதிபதி பஷார் அசாத் பதவி விலக கோரும் தீர்மானம் ஐ.நா சபையில் நிறைவேற்றப்பட்டது.சிரியாவில் அந்நாட்டு ஜனாதிபதி பஷார் அசாத்திற்கு எதிராக போராட்டம் கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் நடந்து வருகிறது.இந்நிலையில் அரபு லீக் சார்பில் ஐ.நா சபையில் ஜனாதிபதி அசாத் பதவி விலக தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
193 நாடுகளின் உறுப்பினர்களை உடைய ஐ.நா.சபையில் 137-17 என்ற கணக்கில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.17 நாடுகள் ஜனாதிபதி பஷார் அசாத்திற்கு ஆதரவாக செயற்படும் நோக்கில் இந்த தீர்மானத்தை புறக்கணித்தன. சில நாடுகள் ஐ.நா சபையில் அமைக்கப்பட்ட வாக்கு இயந்திரத்தில் பிரச்சினை இருப்பதாக புகார் கூறின.இந்த தீர்மானத்தில் சிரியா ஜனாதிபதி பதவி விலக வலியுறுத்தியதுடன், அங்கு மனித உரிமை மீறப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்தியாவில் பயங்கரவாதிகள்: இஸ்ரேல் தகவல்.
பயங்கரவாதிகள் இந்தியாவில் மிக தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.இஸ்ரேலிய எரிசக்தித் துறை அமைச்சர் உசி லாண்டவ் அடுத்த வாரம் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்கிறார்.
டெல் அவிவ் நகரில் அவர் குறிப்பிடுகையில், டெல்லியில் இஸ்ரேலிய தூதரக அதிகாரி காரில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளதன் மூலம், இந்தியாவில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் தீவிரமாக உள்ளது தெரிகிறது.பயங்கரவாத ஒழிப்பில் இந்தியாவும், இஸ்ரேலும் தொடர்ந்து பேச்சு நடத்தி வருகின்றன. இனி இந்த பேச்சு தீவிரமடைய வேண்டும்.
இருநாடுகளும் ஒன்றிணைந்து பயங்கரவாத ஒழிப்பு முயற்சியில் ஈடுபட வேண்டும். பயங்கரவாதத்தை எதிர்கொள்வது இரு நாடுகளுக்கும் புதிதல்ல. எனினும் வளர்ந்து வரும் பயங்கரவாதத்தால் நமது பொருளாதாரம் பாதிக்கப்படும் என்றார்.
பின்லேடன் மனைவியை விடுவிக்க கோரி மனுத்தாக்கல்.
சிறை வைக்கப்பட்டுள்ள ஒசாமா பின்லேடனின் மனைவி அமல் அகமதில் சதாவை விடுவிக்கக் கோரி பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் அவரது சகோதரர் மனுத் தாக்கல் செய்துள்ளார்.பாகிஸ்தானின் அபோதாபாத்தில் பதுங்கியிருந்த ஒசாமா பின்லேடன் அமெரிக்க படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அப்போது அவரது மனைவியருள் ஒருவரான சதாவும் உடன் இருந்தார்.
பின்லேடனைக் காப்பதற்காக மனிதக் கேடயமாக செயல்பட்ட அவரை, காலில் சுட்டு வீழ்த்திவிட்டு அமெரிக்கப் படையினர் பின்லேடனை கொன்றனர்.
இப்போது சதாவும் அவரது 5 குழந்தைகளும் பாகிஸ்தானில் ரகசிய இடத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். சதாவுக்கு இப்போது 31 வயதாகிறது. யேமன் நாட்டைச் சேர்ந்த சதாவை கடந்த 2000ம் ஆண்டில் பின்லேடன் திருமணம் செய்து கொண்டார்.சதா தவிர பின்லேடனுடன் தங்கியிருந்த அவரது வேறு இரு மனைவியரும், அவர்களது குழந்தைகளும் ரகசிய இடத்தில்தான் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சதாவின் சகோதரர் ஒருவர் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, எனது சகோதரி சதா, காலில் குண்டு பாய்ந்து நடக்க முடியாத நிலையில் உள்ளார். அவருக்கு சரியான சிகிச்சை அளிக்கப்படுகிறதா என்று தெரியவில்லை.அதேபோல அவரது குழந்தைகளுக்கு கல்வி உட்பட எந்த வசதியும் அளிக்கப்படவில்லை. இதனால் அக்குழந்தைகள் மனதளவில் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின்படி, ஒருவரை இப்படி யாருக்கும் தெரியாத இடத்தில் போதிய வசதிகள் இன்றி சிறைவைப்பது தவறு. எனவே சதாவையும் அவரது குழந்தைகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டுமென்று கூறப்பட்டுள்ளது.
9 வயதில் பட்டம் பெற்று சிறுவன் சாதனை.
அமெரிக்காவைச் சேர்ந்த சிறுவன் மோஷே காய் கவலின் 9 வயதில் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளான்.இவன் தனது 8 வயதில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள கம்யூனிட்டி கல்லூரியில் சேர்ந்தான். ஒரே ஆண்டில் பட்டப்படிப்பை முடித்து சாதனை படைத்துள்ளான்.
இதுமட்டுமல்லாமல் இளம் வயதிலேயே வி கேன் டு(We Can Do) என்ற பெயரில் ஆங்கிலத்தில் ஒரு புத்தகம் வெளியிட்டுள்ளான். 100 பக்கங்களைக் கொண்ட அதில் மற்ற சிறுவர்களும் தன்னை போல் குறுகிய காலத்தில் சாதனை படைக்க என்ன செய்ய வேண்டும் என்று எழுதியுள்ளான்.அறிவாற்றல் நிறைந்தவர்களை ஜீனியஸ் என சொல்வார்கள். இந்த சிறுவனையும் அப்படித்தான் எல்லோரும் சொன்னார்கள். ஆனால் அதை அவன் ஏற்க மறுக்கிறான்.
கடுமையாக உழைத்தால் எல்லோருமே ஜீனியஸ் என புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளான். இதுபோல் மாணவர்கள் தொலைக்காட்சி பார்ப்பதை குறைத்து கொள்ள வேண்டும் என்றும் கூறுகிறான்.மேலும் அவன் புத்தகத்தில் கூறியுள்ளதாவது: ஜாக்கிசான் திரைப்படங்கள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனாலும் ஒரு வாரத்துக்கு 4 மணி நேரம் மட்டுமே தொலைக்காட்சி பார்ப்பேன். மற்ற நேரங்களில் படிப்பில் கவனம் செலுத்துவேன்.
அதேநேரம் பொழுதுபோக்கு அம்சங்களிலும்தான் எனக்கு ஆர்வம் உண்டு. கால்பந்தாட்டம் எனக்கு பிடித்த விளையாட்டு என்று கூறியுள்ளார்.தற்போது 14 வயதாகும் இந்த மாணவன் மேலும் ஒரு பட்டத்தையும் பெற்று சாதனை நிகழ்த்தியுள்ளான்.
359 கைதிகளை பலி கொண்ட விபத்திற்கு காரணம் என்ன? அதிர்ச்சித் தகவல் வெளியீடு.
மத்திய அமெரிக்க நாடான ஹாண்டுரசில் உள்ள சிறைச்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 359 கைதிகள் பலியானார்கள். இந்த விபத்து ஏற்பட்டதற்கு என்ன காரணம் என்பது குறித்த அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மத்திய அமெரிக்க நாடான ஹாண்டுரசில் கோமயாகுவா நகரில் சிறைச்சாலை ஒன்று உள்ளது. இதில் 500 கைதிகளை அடைப்பதற்கான இடவசதி மட்டுமே உள்ளது. ஆனால் இங்கு 850 கைதிகள் அடைக்கப்பட்டு இருந்தனர்.அங்கு ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 359 கைதிகள் பலியாகி உள்ளனர். ஏராளமானோர் காயம் அடைந்தனர். தீப்பிடித்த போது அறைக்குள் இருந்த கைதிகள் வெளியேற வழி தெரியாமல், உதவி கேட்டு அலறித் துடித்தனர். ஆனால் சிறைக் காவலாளிகளோ கைதிகள் கலவரத்தில் ஈடுபடுவதாக கருதி வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
இந்த கலவரத்திற்கு இடையே கைதிகள் அறை கூரை வழியாக வெளியேறி தப்பினர். பெரும்பாலான கைதிகள் தீயில் சிக்கியதாலும், புகை மூட்டத்தில் மூச்சு திணறியும் பலர் பலியானார்கள்.சிறைச்சாலை நிர்வாகம் மட்டுமின்றி, செஞ்சிலுவை சங்கத்தினரும் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். ஆனால உடல்களை தூக்க முயன்றபோது அவை கரிக்கட்டைகளாக கிடந்ததால் உடைந்து நொறுங்கின.
இது மீட்புப்பணியில் ஈடுபட்டவர்களையும் அதிர வைத்தது. மரபணு சோதனை மற்றும் பல் மாதிரியை வைத்துத்தான் கைதிகளை அடையாளம் காண முடியும் என்ற நிலைமை காணப்படுகிறது.மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதலில் கூறப்பட்டது. இந்த நிலையில் சிறைச்சாலையில் இருந்த ஒரு தண்டனை கைதிதான் இதற்கு காரணம் என்று கோமயாகுவா மாநில பெண் கவர்னர் பவோலா காஸ்ட்ரோ தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது: அந்த சிறைச்சாலைக்கு நான் முன்பு சென்றிருந்தபோது, ஒரு கைதியுடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த கைதி நள்ளிரவு நேரத்தில் எனக்கு போன் செய்தார்.மற்றொரு தண்டனை கைதி ஆறாம் எண் பிளாக்குக்கு தீ வைப்பதாக அவர் கூறினார். தனது படுக்கைக்கு அந்த தண்டனை கைதி தீ வைத்ததால் இந்த பயங்கர தீ விபத்து நடந்துள்ளது என்றார்.சிறைச்சாலை அதிகாரிகளும இந்த காரணத்தை மறுக்கவில்லை. இருப்பினும் தீ விபத்துக்கான காரணம் பற்றி முழுமையான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.அந்த விசாரணை நேர்மையாக நடைபெறுவதற்காக சிறைத்துறை டைரக்டர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.
ஒபாமா சென்ற விமானத்தை சுற்றி வளைத்த மர்ம விமானம்.
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா சென்ற ஹெலிகொப்டர் விமானம் அருகில் மர்ம விமானம் பறந்ததால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.பின் அந்த விமானத்தை எப்.16 போர் விமானங்கள் சுற்றிவளைத்தன. இதுகுறித்து விமானியிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா வசிக்கும் வெள்ளை மாளிகை மீது சமீபத்தில் மர்ம ஆசாமி நாட்டு வெடிகுண்டுகள் வீசி சென்றான். இதில் மாளிகையின் ஜன்னல்கள் நொறுங்கியதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.இந்நிலையில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று நடந்த நிதி திரட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒபாமா, மீண்டும் வெள்ளை மாளிகைக்கு ஏர் போர்ஸ் ஹெலிகாப்டரில் சென்றார். அவருக்கு பாதுகாப்பாக மற்றொரு ஹெலிகாப்டரும் சென்றது.
ஒபாமா பயணித்த வான்வெளி பகுதியில் வேறு விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதை மீறி சிறிய ரக மர்ம விமானம் திடீரென பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து உடனடியாக எப்.16 ரக போர் விமானங்கள் அந்த மர்ம விமானத்தை சுற்றிவளைத்தன.உடனடியாக விமானத்தை லாங் பீச் விமானநிலையத்தில் தரையிறக்கும்படி பாதுகாப்புப் படை அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து அந்த விமானம் தரையிறங்கியது.
இராணுவ வீரர்கள் விரைந்து சென்று விமானத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அதில் சோதனை செய்த போது பல கிலோ எடையுள்ள கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.விசாரணையில் அந்த விமானம், செஸ்னா 182 என்ற ஒரே இன்ஜின் கொண்ட சிறிய ரக விமானம் என்று தெரிய வந்தது. அதில் இருந்த விமானியிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. அவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டதா என்ற தகவல் வெளியாகவில்லை.
அமெரிக்கா- ஆப்கான்- தலிபான்கள் இடையே ரகசிய பேச்சுவார்த்தை.
அமெரிக்கா- ஆப்கான்- தலிபான்கள் இடையே முத்தரப்பு ரகசிய பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என ஆப்கான் ஜனாதிபதி ஹமீத் கர்சாய் தெரிவித்துள்ளார்.காபூலில் அமெரிக்க பத்திரிகைக்கு ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, தலிபான்களும், ஆப்கானில் வசிக்கும் மக்களும் அமைதியை விரும்புகின்றனர். எனவே தான் இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. விரைவில் முழு அளவிலான பேச்சுவார்த்தை தொடங்கும் என தெரிவித்தார்.
ஆனால் எந்த இடத்தில் ரகசிய பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என்ற தகவலை அவர் தெரிவிக்க மறுத்து விட்டார்.
மூழ்கி கொண்டிருந்த கப்பல் மீது மற்றொரு கப்பல் மோதி விபத்து: தேடும் பணி தீவிரம்.
சீனாவில் கடலில் மூழ்கி கொண்டிருந்த கப்பல் மீது மற்றொரு சரக்கு கப்பல் மோதியதில் பெரும் விபத்து ஏற்பட்டது.சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் தெற்கு சீன கடலில் இரண்டு நாட்களுக்கு முன் ஒரு சரக்கு கப்பல் கடல் சீற்றத்தின் காரணமாக விபத்துக்குள்ளாகி மூழ்கி கொண்டிருக்கிறது.
இந்த கப்பலில் இருந்த எட்டு பேர் கடலில் அடித்து செல்லப்பட்டனர். இவர்களில் ஐந்து பேர் மீட்கப்பட்டுள்ளனர். இந்த பகுதியில் பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது.இந்நிலையில் இதே வழியாக வந்த மற்றொரு சரக்கு கப்பல் மூழ்கி கொண்டிருந்த கப்பல் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த கப்பலில் இருந்த 14 பேர் மீட்கப்பட்டுள்ளனர். காணாமல் போன மூன்று பேரை தேடும் பணி நடக்கிறது.
நாம் இணைந்தே இருப்போம்: ஸ்காட்லாந்து மக்களை அழைக்கும் டேவிட் கேமரூன்.
பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் எடின்பரோவில் நடந்த கூட்டத்தில் பேசியபோது, ஸ்காட்லாந்து பிரிட்டனுடன் இணைந்திருக்க வேண்டும் என்று தான் விரும்புவதாகக் கூறினார்.உலகமயமாதலால் ஏற்பட்டுள்ள பல்வேறு இடர்களும், உலகெங்கும் முகிழ்த்துவரும் புதிய பொருளாதார சக்திகளும் நமக்கு சவாலாக இருக்கும் நேரத்தில் நாம் பிளவுபட்டுக் கிடந்தால் அது மற்றவர்களுக்கு ஆதாயமாகிவிடும். எனவே இணைந்திருப்போம், சவால்களைச் சேர்ந்து சந்திப்போம் என்றார்.
உலகமயமாதலால் மக்கள் நாட்டுக்கு நாடு இடம்பெயர்கின்றார்கள். பண்பாட்டு மோதல்கள் வெடிக்கின்றன. பொருள்சேர்க்க புதிய வழிகளை ஆராய்கின்றார்கள் என்றார்.மேலும் புதிய பொருளாதார சக்திகள் உருவாவதால் நமக்கு பொருளாதார ரீதியான போட்டிகள் கடுமையாகி வருகின்றது என்றும் விளக்கிக் கூறினார்.பிரதமர் பேசிக்கொண்டிருந்த பொது, வெளியே பிரிவினைக்கு எதிரானவர்கள் கோஷம் போட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களைக் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர்.
விமான நிலைய அதிகாரிகளின் போராட்டம் தொடர்கிறது: விமான சேவைகள் ரத்து.
ஜேர்மனியின் பிராங்க்பர்ட் விமானநிலையம் ஐரோப்பாவின் மூன்றாவது மிகப்பெரிய விமான நிலையமாகும்.இங்கு சம்பளப் பிரச்னை காரணமாக வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறுவதால் பல விமான சேவைகள் ரத்தானது, சில விமானங்கள் காலதாமதமாகக் கிளம்பிற்று.
விமான நிறுத்துமிடப் பொறுப்பாளர்கள் 200 பேர் நேற்று மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரை விமான ஓடு தளத்தில் கூடி நின்று போராட்டம் நடத்தினர்.இப்பணியாளர்களின் GDF தொழிற்சங்கம் கூறுகையில், இப்போராட்டம் எதிர்பார்த்த விளைவை அன்றைக்குப் பெறவில்லை, எனவே மீண்டும் வெள்ளியன்று காலை 8 முதல் 9 வரை திரும்பவும் போராட்டம் நடக்கும் என்று தெரிவித்தது.
இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தினால் ஐரோப்பா முழுக்க இருந்து வரும் தொழிலதிபர்கள் சரியான நேரத்தில் விமானத்தில் போய்ச்சேர முடியாமலும், வந்து சேர இயலாமலும் தவித்தனர்.அவர்கள் தொழில் நடவடிக்கைகளும் இதனால் பாதிப்படைந்தன. ஏறத்தாழ 400 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டது. இது மொத்த விமான சேவையில் 30-40 சதவீதம் ஆகும்.
ஜேர்மனியின் அரசு விமான சேவையான லுப்தான்ஸா, சுமார் 100 விமானங்கள் பிராங்க்பர்ட்டிலிருந்து புறப்படுவதையும், அங்கு வந்து சேர்வதையும் மாற்றியமைத்தது.இந்த விமான நிலையம் பிராட்போர்ட் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் செயல்படுவது குறிப்பிடத்தக்கது.
ஈரான் மீது போர் தொடுக்க வேண்டாம்: இஸ்ரேலுக்கு ஜப்பான் வேண்டுகோள்.
அணு ஆயுத தயாரிப்பில் ஈரான் ஈடுபட்டுள்ளதாக கூறி அமெரிக்கா, இஸ்ரேல் உட்பட பல நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளன.சமீபத்தில் இந்தியாவின் தலைநகர் டெல்லியில் இஸ்ரேல் தூதரக கார் மீது தாக்குதல் நடந்தது. இதற்கு மறுநாளே தாய்லாந்தில் வெடிகுண்டு தாக்குதல் நடந்தது. இந்த 2 தாக்குதலுக்கும் காரணம் ஈரான் தான் என்று இஸ்ரேல் புகார் கூறிவருகிறது.
தீவிரவாத நடவடிக்கைகளை நிறுத்தாவிட்டால் ஈரான் மீது போர் தொடுப்போம் என்று இஸ்ரேல் பகிரங்கமாக மிரட்டல் விடுத்தது. இந்நிலையில் ஈரான் மீது இராணுவ நடவடிக்கை எதுவும் எடுக்க வேண்டாம், பொறுமையாக இருங்கள் என்று இஸ்ரேல் ஜனாதிபதி, பிரதமரை ஜப்பான் பிரதமர் நோடா கேட்டுக் கொண்டுள்ளார்.
ஐந்து நாள் பயணமாக ஜப்பான் வந்துள்ள இஸ்ரேல் இராணுவ அமைச்சர் ஹெளத் பராக்கிடம், நோடோ இதை வலியுறுத்தினார்.ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் பயங்கர பின்விளைவுகள் ஏற்படும், தற்போதுள்ள பிரச்னையும் பெரிதாகி விடும். எனவே பொறுமையாக இருங்கள். இராணுவ நடவடிக்கை வேண்டாம் என்று பராக்கிடம் நோடா கூறியுள்ளார்.
டைட்டானிக் கப்பல் மூழ்கியதன் நூற்றாண்டு நினைவு நாளை அனுசரிக்க கனடா முடிவு.
கனடாவின் நோவாஸ்கோட்டியா மாகாணத்தின் தலைநகர் ஹேலிபாக்சில் டைட்டானிக் கப்பல் அட்லாண்டிக் கடலில் மூழ்கியதன் நூறாவது நினைவுநாள் அனுசரிக்கப்படுகிறது.டைட்டானிக் கப்பல் அட்லாண்டிக் கடலில் மூழ்கியதன் நினைவுநாள் அன்று மெழுகுவர்த்தி ஏந்தி மக்கள் ஊர்வலமாகச் செல்கின்றனர். மறுநாள் சர்வசமயப் பிரார்த்தனை நடத்தப்படுகிறது.
இந்த நினைவுநாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்புவோர் ஹேலிபாக்சில் வந்து சேருமாறு கனடாவின் சுற்றுலாத்துறை அமைச்சர் பெர்சி பாரிஸ் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.இந்த ஊர்வலம் நகரின் டைட்டானிக் தொடர்பான இடங்களைக் கடந்து ஹேலிஃபாக்ஸ் சிட்டி ஹாலுக்கு முன்பு உள்ள பெரிய மைதானத்தை வந்தடையும்.
நினைவு நாள் பேருரைகள் ஆற்றியபின்பு பல நிகழ்ச்சிகள் நடைபெறும். இதன்பிறகு நள்ளிரவு 12.20 மணிக்கு கப்பல் விபத்தில் இறந்தவருக்கு மௌன அஞ்சலி செலுத்தும் வகையில் அமைதி காக்கப்படும், அப்போது தேவாலயத்தில் மணிகள் ஒலிக்கும்.ஏப்ரல் 15ம் திகதி அன்று மாலை மூன்று மணியளவில் ஃபேர்வியூ கல்லறைத் தோட்டத்தில் உள்ள புல்வெளியில் இசை நிகழ்ச்சி நடைபெறும். 120 பேருக்கு மேல் புதைக்கப்பட்ட இந்தக் கல்லறைத் தோட்டத்தில் இறந்து போனவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் மலர் வளையம் வைக்கப்படும்.
இன்று முதல் பிராங்க் நாணயத்தை கைவிட்டது பிரான்ஸ்.
பிரான்சில் தற்போது உபயோகிக்கப்படும் நாணயமான பிராங்க் இன்று முதல் புழக்கத்திலிருந்து அகற்றப்படுகிறது.2002ம் ஆண்டில் ஐரோப்பாவின் பொது நாணயமாக யூரோ அறிமுகமானதும் பிரெஞ்சு மத்திய வங்கி, பிராங்கின் பயன்பாட்டைக் குறைத்து விட்டது.
எனவே இன்று முதல் பிராங்க் நாணயப் புழக்கம் நடைமுறையிலிருந்து அகற்றப்படுகிறது. அதன் பின்பு பிராங்கை யாரும் பயன்படுத்தக் கூடாது, பயன்படுத்தவும் இயலாது என்று அரசு அறிவித்து விட்டது.இதனால் பிராங்க் நாணயங்களை வைத்துள்ள மக்கள் வங்கிகளில் கொடுத்து யூரோவாக மாற்றிக் கொள்ளலாம். பெரிய நகரங்களில் உள்ள மத்திய வங்கியில் மட்டுமே யூரோக்களாக பிராங்குகளை மாற்றலாம்.
ஒருவர் 2000 பிராங்க் நாணயத்திற்கு 7 யூரோவும் 62 சென்ட்டும் பெற்றார். ஜார்ஜ் டிபே என்ற 63 வயது முதியவர் 7000 பிராங்கைக் கொடுத்து 1567 யூரோவைப் பெற்றார்.20 பிராங்கின் இன்றைய மதிப்பு 3.05 யூரோவாகும். இந்தப் பணத்தாள் மாற்றத்தில் தனிநபருக்கு 3000 யூரோ வரையிலும், தொழில்துறைக்கு 15000 யூரோ வரையிலும் மாற்றிக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF