குற்றம் சுமத்தப்பட்டுள்ள அதிகாரிகள் சொத்து விபரங்கள் தொடர்பில் ஏற்கனவே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அதிகாரிகளிடம் தரவுகள் திரட்டப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மது போதையில் வண்டி செலுத்திய புத்த பிக்கு! பன்றி இறைச்சிப் பொதிகள் வண்டியினுள் இருந்து மீட்பு!
இவ் விபத்து தொடர்பாக சூட் தியாகராஜ கருத்து தெரிவிக்கையில்,கடந்த 21ஆம் திகதி இரவு 11மணியளவில், கொட்டாவாவில் இருந்து மகரகாமாவிற்கு தனது ஜீப்பில் வந்துகொண்டிருந்த போது, எதிரே காரைச் செலுத்தி வந்த பிக்கு ஜீப்பின் மீது மோதியுள்ளார். அவர் அதிக மது போதையில் இருந்த காரணத்தினாலேயே மேற்படி விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பொருட்களின் விலையுயர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் போராட்டங்களை தடுக்கும் நடவடிக்கையாகவே அமெரிக்காவிற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது என்று ஐஎச்ஆர் அமைப்பின் ஊடகச்செயலாளர் சட்டத்தரணி சமிந்த குணசேகர குற்றம் சுமத்தியுள்ளார்.இலங்கையின் ஜனநாயகத்துக்கு ஏற்பட்டுள்ள கட்டுப்படுத்தப்பட்ட தன்மையே இன்று நாடு சர்வதேச ரீதியாக அழுத்தங்களை எதிர்நோக்க காரணமாக அமைந்துள்ளது.இந்த கருத்தை இலங்கையின் ஐஎச்ஆர் என்ற மனித உரிமைகளுக்கான புத்திஜீவிகள் அமைப்பு வெளியிட்டுள்ளது.இந்தநிலையில், 2009 ஆம் இடம்பெற்ற இறுதிப்போரின் போது போர்க்குற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு இலங்கை அரசாங்கம் உரிய வகையில் பதிலளிக்கவேண்டும்.
மக்களை திசை திருப்பும் நோக்கில் அரசாங்கம் போராட்டங்களை நடத்தி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக நாட்டு மக்கள் எதிர்நோக்கிவரும் அழுத்தங்களுக்கு பதிலளிக்க முடியாத அரசாங்கம், இவ்வாறு போராட்டங்களை ஒழுங்கு செய்துள்ளதாகக் சுஜீவ சேனசிங்க குறிப்பிட்டுள்ளார். இதனால் நாட்டில் சட்டம் ஒழுங்கு நாளுக்கு நாள் மோசமடைந்து செல்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
மேலும், புத்த பிக்குதன்னைப் போக அனுமதிக்கும்படியும் எவ்வளவு பணம் வேண்டுமென்றாலும் தருவதாக தெரிவித்துள்ளதுடன் அவர் செலுத்தி வந்த காரிற்குள் மது போத்தல்களும், பன்றி இறைச்சிப் பொதிகள் இருந்ததாகவும் கூறினார்.இதன்காரணமாக அவர் பலத்த காயங்களுக்குள்ளாகிய நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கச் சென்ற போது, அவர் அதிக மது போதையில் இருந்ததால், அவருக்கென தனி சிகிச்சையறை ஒதுக்கப்பட விலை எனவும் பொது சிகிச்சைப் பிரிவிலேயே சேர்க்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பிக்குவின் கையில் எலும்பு முறிந்திருந்ததால் கடந்த வெள்ளிக்கிழமை அன்று அறுவை சிகிச்சை நடைபெற்றதாக கொழும்பில் தெற்கு பொது மருத்துவமனை தெரிவித்துள்ளது.மேற்படி மது போதையில் காரைச் செலுத்தியவர் நுகேகோடாவில் உள்ள ஜம்புகஸ்முல்லா மாவாத்தாகம கோதாமி விஹாரையின் தலைமை பிக்கு திரிபலகாமா பன்னஜீவா என்பது குறிப்பிடத்தக்கது.அவர் விருந்தொன்றிற்குச் சென்று, விகாரைக்குத் திரும்பிக் கொண்டிருக்கையிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
விலையுயர்வுகளை மறைக்கவே அமெரிக்காவுக்கு எதிரான போராட்டம்!- இலங்கையின் புத்திஜீவிகள் அமைப்பு.
இதனைவிடு;த்து குற்றவாளிகளை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடும் போது சர்வதேச அழுத்தங்களை தவிர்க்கமுடியாது என்று ஐஎச்ஆர் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.இதேவேளை உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாது அமெரிக்காவுக்கு எதிராகவும் ஐக்கிய நாடுகள் சபைக்கு எதிராகவும் மக்களை வீதிகளில் இறக்கி போராடச்செய்வது, பிழையான வழிநடத்தலாகும் என்றும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.அத்துடன் நாட்டில் மனித உரிமைகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும் அதன் மூலமே நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்ட முடியும் என்றும் அந்த அமைப்பு கோரியுள்ளது.
2009 ஆம் ஆண்டு இறுதிப்போரின் போது இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் இன்று நாட்டின் வரலாற்றில் பதிவாகியுள்ளது.அத்துடன் ஊடக அடக்குமுறை, பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிரான அடக்குமுறை, தொழிலாளர்களுக்கு எதிரான அடக்குமுறை என்று பல்வேறு மனித உரிமை மீறல்கள் இன்று நாட்டில் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.
இது நாளுக்கு நாள் அதிகரித்து செல்கின்றது. ஜனநாயக வழிகளில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வோரின் மீது படையினர் தாக்குதல்களை நடத்தி மரணங்களும் சம்பவித்து வருகின்றன.இந்த சூழ்நிலையில் அமெரிக்காவுக்கும் ஐக்கிய நாடுகளுக்கும் எதிராக போராட்டங்களை மேற்கொள்ளசெய்து, இலங்கையில் பொருட்களின் விலையுயர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் போராட்டங்களை அரசாங்கம் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்று ஐஎச்ஆர் அமைப்பின் ஊடகச்செயலாளர் சட்டத்தரணி சமிந்த குணசேகர குற்றம் சுமத்தியுள்ளார்.
சர்வதேசத்திற்கு எதிரான பேராட்டமென மக்களை அரச திசை திருப்புகின்றது!- ஐ.தே.க.
கடத்தல்கள் மற்றும் காணாமல் போதல் சம்பவங்கள் உயர்வடைந்துள்ளதுடன், வாழ்க்கைச் செலவு வானளவு அதிகரித்துள்ளதாகத் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.மனித உரிமை விவகாரங்களின் அடிப்படை தேவைகளையேனும் பூர்த்தி செய்யமுடியாத அரசாங்கம் அழுத்தங்களை எதிர்நோக்கி வருவதாகக் சுஜீவ சேனசிங்க குறிப்பிட்டுள்ளார்.குறிப்பாக மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அரசாங்கம் உரிய கவனம்செலுத்தத் தவறியுள்ளமையே, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றும் அளவிற்கு பூதாகாரமாகியுள்ளது என சுஜீவ சேனசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் அறிக்கை ஐக்கிய நாடுகள் அமைப்பினால் தயாரிக்கப்படவில்லை, அந்த அறிக்கை இலங்கையர்களினால் தயாரிக்கப்பட்டது என சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார். எனவே, அந்த அறிக்கையின் பரிந்துரைகளை அமுல்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை தீர்மானத்திற்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டுமென அரசாங்கத்தின் கோரிக்கைக்கு பொதுமக்கள் ஆதரவளிக்கவில்லை எனவும் சுஜீவ சேனசிங்க குற்றம் சுமத்தியுள்ளார். மேலும், அரசாங்கத்தினால் பணம் கொடுத்து தருவிக்கப்பட்ட கூட்டமே போராட்டங்களில் கலந்து கொண்டிருக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்க உளவு நிறுவனம் குறித்த ரகசிய தகவல்கள் வெளியீடு: விக்கிலீக்ஸ் அதிரடி.
அமெரிக்காவின் உளவு நிறுவனத்தின் 50 லட்சம் ரகசிய மின்னஞ்சல்களை வெளியிட்டு விக்கிலீக்ஸ் நிறுவனம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அவுஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல பத்திரிகையாளர் ஜூலியன் அசாஞ்ச்(40) நடத்திவரும் இணைய இதழ் விக்கிலீக்ஸ்.ஈராக் போர், ஆப்கான் போர் தொடர்பாக அமெரிக்க அரசு மிக மிக ரகசியமாக வைத்திருந்த முக்கிய ஆவணங்களை இந்நிறுவனம் 2010-ம் ஆண்டு வெளியிட்டது.
கியூபாவின் குவான்டனாமோ சிறையில் நடக்கும் கொடுமைகள் தொடர்பான ரகசிய ஆவணங்களையும் வெளியிட்டது. இவ்வாறு லட்சக்கணக்கான ரகசிய தகவல்கள், மின்னஞ்சல்கள், அரசு உத்தரவுகள், ரகசிய பேச்சுகள் ஆகியவற்றை விக்கிலீக்ஸ் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.இந்நிலையில் ஸ்வீடனில் அவர் மீது பாலியல் பலாத்காரம், பாலியல் முறைகேடு போன்ற புகார்களும் சுமத்தப்பட்டன. இங்கிலாந்தில் அசாஞ்ச் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.இங்கிலாந்தில் இருந்து அவரை நாடுகடத்துமாறு ஸ்வீடன் பொலிசார் கூறிவருகின்றனர். இதை எதிர்த்து அசாஞ்ச் வழக்கு தொடர்ந்துள்ளார்.ரகசிய தகவல்கள் வெளியிடுவதை சிறிது காலம் நிறுத்தியிருந்த விக்கிலீக்ஸ் தற்போது அமெரிக்காவின் ஸ்டிராட்ஃபோர் உளவு நிறுவனத்தின் 50 லட்சம் மின்னஞ்சல்களை வெளியிட்டு மீண்டும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் ஆஸ்டின் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சர்வதேச உளவு நிறுவனம் ஸ்டிராட்ஃபோர். பிரபல நிறுவனங்கள், விஐபிக்கள் பற்றிய தகவல்களை உளவு பார்த்து அரசு மற்றும் பிற அமைப்புகளுக்கு கான்ட்ராக்ட் அடிப்படையில் வழங்கி வருகிறது.இந்த நிறுவனத்தின் மின்னஞ்சல்களை தான் விக்கிலீக்ஸ் தற்போது வெளியிட்டுள்ளது. இவை 2004-ம் ஆண்டு ஜூலை முதல் கடந்த டிசம்பர் வரை பரிமாறப்பட்ட மின்னஞ்சல்கள்.
ஸ்டிராட்ஃபோர் நிறுவனம் யார் யார் மூலம் ரகசிய தகவல்களை திரட்டுகிறது, இதற்காக அவர்களுக்கு தரப்படும் சம்பள விவரம், தகவல் சேகரிக்க ஸ்டிராட்ஃபோர் பயன்படுத்தும் வழிகள் ஆகியவை இதன்மூலம் அம்பலமாகியுள்ளன.போபால் விஷவாயு கசிவு சம்பவம் நடந்த யூனியன் கார்பைடு நிறுவனத்தின் துணை நிறுவனமான டவ் கெமிக்கல் நிறுவனம் மற்றும் அரசு உளவு ஏஜென்சிகள், அமெரிக்க உள்துறை அமைச்சகம், அமெரிக்க கடற்படை உட்பட பல்வேறு அமைப்புகளுக்கும் ஸ்டிராட்ஃபோருக்கும் உள்ள தொடர்பு பற்றிய தகவல்களையும் விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.
கிரீஸ் யூரோ மண்டலத்தை விட்டு வெளியேற வேண்டும்: ஜேர்மனி.
கிரீசின் நிதிநிலை வலுப்பெற வேண்டும் என்றால், அந்நாடு யூரோ மண்டலத்தை விட்டு வெளியேற வேண்டும் என ஜேர்மனியின் உள்துறை அமைச்சர் ஹேன்ஸ் பீட்டர் பிரெட்ரீக் கருத்து தெரிவித்துள்ளார்.யூரோ மண்டலத்தை விட்டு கிரீஸ் விலகக் கூடாது என்று கருதிய ஜேர்மனியின் பிரதமர் ஏஞ்சலா மெர்கல்(Angela Merkel), பிரான்ஸ் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசியுடன்(Nicolas Sarkozy) இணைந்து கிரீசுக்கு பிணையநிதி அளிக்கும் முடிவுக்கு வந்தார்.
இதனைத் தொடா்ந்து பிரதமர் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்த நிலையில், உள்துறை அமைச்சர் ஹேன்ஸ் பீட்டர் பிரெட்ரீக்(Hans-Peter Friedrich) கிரீஸை யூரோமண்டலத்தை விட்டு வெளியேற சொல்வது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.மேலும் கிரீஸ் 17 நாடுகளின் ஒன்றியத்தை விட்டு வெளியேற வழங்கப்படும் தொகை எதுவும் திரும்ப கிடைக்காது என்றும் உள்துறை அமைச்சர் டெர் ஸ்பீகெல்(Der Spiegel) என்ற ஆங்கில பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே மெக்சிகோ நகரில் நடந்த ஜி20 நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கியாளர் கலந்து கொண்ட கூட்டத்தில் ஜேர்மனியின் நிதியமைச்சர் கிரீசுக்கு திரும்பத் திரும்ப நிதியுதவி வழங்குவதில் பலன்ஏதுமில்லை என்று தெரிவித்துள்ளார்.இந்த பிரச்சினை குறித்து அடுத்த வாரம் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி இ.எப்.எஸ்.எப் பிணையநிதியை நிரந்தர நிதியான ESM உடன் இணைந்து எதிர்வரும் ஜீலை மாதத்தில் ஒரே நிதியாக 1 டிரில்லியன் டொலரை ரொக்கமாக அளிக்கலாம் என்றும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இங்கிலாந்தில் ஆடு, மாடுகளை தாக்கிய புதிய வகை வைரஸ்.
இங்கிலாந்தில் உள்ள ஆடு, மாடுகள் புதிய வகை வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளன.இங்கிலாந்தில் உள்ள 74 பண்ணைகளில் ஆடு, மாடுகளை ஸ்க்மாலென்பெர்க்(Schmallenberg) என்னும் வைரஸ் தாக்கியுள்ளது. இதனால் குறைப்பிரசவமும், கருச்சிதைவும் ஏற்பட்டுள்ளது.இந்த வைரஸ் தாக்கப்பட்ட மாடுகளிடம் 5 முறையும், ஆடுகளிடம் 69 முறையும் சோதித்து இந்த நோயை கண்டறிந்துள்ளனர். இத்தகவலை டெஃப்ரா என்று அழைக்கப்படும் சுற்றுப்புறச்சூழல் துறை தெரிவித்தது.
தேசிய விவசாயப் பேரவை கடந்த ஆண்டு நெதர்லாந்து மற்றும் ஜேர்மனியில் இந்த நோய்த்தொற்று ஏற்பட்டதாகவும், அப்போது இந்நோய் குறித்து விரிவாக அறியப்படவில்லை என்றும் கூறியது.இந்த நோய்த்தொற்று கொசு, உண்ணி போன்றவை மூலமாக பரவுகிறது. ஆனால் இதனால் மனிதருக்கு எவ்வித பாதிப்பும் இல்லை.இன்னும் இரண்டுவாரத்தில் ஆடுகள் குட்டி ஈனும் பருவ காலம் வருவதால் இந்நோய்த் தொற்றை முற்றிலுமாக அதற்குள் அழித்து விட வேண்டும்.
சில பண்ணைகளில் கால்வாசிக்கும் அதிகமான ஆட்டுக்குட்டிகள் பிறக்கும் போது இறந்து விட்டதாக தேசிய விவசாயப் பேரவையின் தலைவர் பீட்டர் கெண்டால் தெரிவித்தார்.கடந்தாண்டில் தென்கிழக்கு இங்கிலாந்தில் போவின் காச நோய் தாக்கியதில் சுமார் 25000 மாடுகளை வெட்டிக்கொன்றனர். அதுபோலவே, தற்போது இந்த வைரஸ் உயிர் கொல்லி நோயாக பரவியுள்ளது.
சிரியா விவகாரம்: அதியுச்சதிமிர் என்று சீனாவை விமர்சித்த அமெரிக்கா.
சிரியா விவகாரம் தொடர்பாக சீனாவின் நிலைப்பாட்டை விமர்சித்து அமெரிக்கா “அதியுச்சதிமிர்” என்று கருத்து தெரிவித்திருந்தது. இக்கருத்துக்கு சீனா மறுப்பு தெரிவித்துள்ளது.சிரியா விவகாரம் தொடர்பாக சீனாவின் நிலைப்பாட்டை விமர்சித்து அமெரிக்க வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன்(Hilary Clinton) வெளியிட்டுள்ள அறிக்கையில், சிரியா குறித்த ஐ.நா.வின் தீர்மானத்துக்கு எதிராக ரஷ்யாவும், சீனாவும் வீட்டோவை பயன்படுத்தியது வெறுக்கத்தக்க ஒன்று என்று தெரிவித்திருந்தார்.
இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரபூர்வ செய்தித்தாளில், ஈராக்கில் ஏற்பட்ட அனுபவங்களுக்குப் பிறகு அரபு மக்களுக்காகப் பேச அமெரிக்காவுக்கு உரிமை கிடையாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.மேலும் இந்த விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு சிரிய ஜனாதிபதி அசாத்துக்கு மறுசீரமைப்புக்களை செய்ய வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று சீனா விரும்புவது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேலை வென்றது ஈரான்.
சர்வதேச திரைப்பட விருதான ஓஸ்கர் விருது சர்வதேச அரசியல் விவகாரங்களையும் எதிரொலித்திருப்பது ஆச்சரியப்படக்கூடிய ஒன்று.84வது ஓஸ்கர் விருதுகளில் சிறந்த வெளிநாட்டுப் படத்துக்கான ஓஸ்கர் விருதை வென்றிருக்கிறது ஈரான் திரைப்படமான "தி செபரேஷன்".
ஓஸ்கர் விருதைவிட ஈரானியர்களுக்கு இதில் அளவில்லா மகிழ்ச்சி புதைந்திருக்கிறது. அது என்னவென்றால் ஈரானின் தி செப்பரேசன் படம் போட்டியிட்டது இஸ்ரேலின் திரைப்படமான “புட்நோட்டு”டன்.ஏற்கெனவே அரசியல் அரங்கத்தில் இருநாடுகளுக்கும் இடையே எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் நிலையில் இந்த விருது பெற்றிருப்பது ஈரான் மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஈரானின் ஓஸ்கர் விருதை குறிப்பிடும் அந்நாட்டு ஊடகங்கள் அனைத்துமே "இஸ்ரேலை வென்றது ஈரான்" என்கின்றன. ஈரான் நாட்டு அரசு தொலைக்காட்சியும் இப்படித்தான் சொல்லி வருகிறது.
சிரியாவின் மீது கடுமையான தடைகள்: பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரிப்பு.
சிரியாவின் மீது ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள் மேலும் பல கடுமையான தடைகளை விதித்துள்ளதால், பொதுமக்களின் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளது.சிரியாவில் ஜனாதிபதி பஷர் அல் அசாத்துக்கு எதிரான போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது.
இந்நிலையில் பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்சில் நேற்று கூடிய ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளின் வெளிவிவகாரத்துறை அமைச்சர்களின் மாநாட்டில் சிரியா மீது மேலும் பல தடைகள் விதிக்க முடிவு செய்யப்பட்டது.அதன்படி ஜனாதிபதி அசாத்தின் நெருங்கிய உதவியாளர்கள் வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளத் தடை, சிரியாவில் இருந்து புறப்படும் சரக்கு விமானங்கள் ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளுக்குள் நுழையத் தடை, தங்கம் உட்பட விலையுயர்ந்த பொருட்களின் வர்த்தகத்திற்கு கடுமையான விதிகள் ஆகியவை விதிக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில் சிரியாவின் வடமேற்கு மாகாணமான இத்லிப்பின் சர்மின், மாரத் அல் நுமான், பின்னிஷ் ஆகிய சிறு நகரங்களில் இராணுவம் கடும் தாக்குதல் நடத்தியது. இப்பகுதிகள் அனைத்தும் எதிர்த் தரப்பின் வசம் இருப்பதால் இவற்றை மீட்பதில் இராணுவம் தீவிரம் காட்டி வருகிறது.சிரியாவின் எதிர்த் தரப்புக்கு எவ்விதத்தில் ஆதரவளிப்பது என்பது குறித்து சிரியா எதிர்ப்பு நாடுகள் மத்தியில் குழப்பம் நீடித்து வருகிறது. சில நாடுகள் எதிர்த் தரப்புக்கு ஆயுதம் அளித்து உதவலாம் எனத் தெரிவித்து வருகின்றன. அமெரிக்காவின் முக்கிய பிரமுகர்கள் கூட இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த முடிவை வரவேற்பதாக அல்கொய்தாவும், ஹமாசும் அறிவித்துள்ளன.
முற்றிலுமாக அழிந்து விடும் நிலையில் கடல் வளங்கள்.
உலகின் பல்வேறு கடல்களில், கடல் வளங்கள் அழியும் அபாயத்தில் இருப்பதாக உலக வங்கி கவலை தெரிவித்துள்ளது.
மேலும் நாடுகளின் அரசுகள், தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளும் சேர்ந்து கடல் வளங்களை பாதுகாப்பதில் இணைந்து செயல்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது.இதுகுறித்து உலக வங்கி தலைவர் ராபர்ட் ஜோயெல்லிக் கூறியதாவது: அதிகளவில் மீன் பிடித்தல், கடல்வாழ் உயிரினங்களின் எண்ணிக்கை குறைதல் உட்பட பல்வேறு காரணங்களால் கடல் வளங்கள் அழியும் அபாயம் உள்ளது. கடலின் மீன்பிடி இடங்களில் 85 சதவிகித இடங்கள் முழுவதும் அதிகமாக சுரண்டப்பட்டு விட்டன அல்லது காலியாகி விட்டன.
இப்படி அழிந்து போன உயிரினங்களில் முதல் 10 இடங்களில் இருந்தவையும் அடங்கும். உலகின் பாதியளவு மீன்களையாவது காப்பாற்றுவது உட்பட பணிகளை அடுத்த 10 ஆண்டுகளில் நாடுகள் இணைந்து பணியாற்றுவதற்கான பல்வேறு இலக்குகளை உலக வங்கி முன்வைத்துள்ளது.பாதுகாக்கப்பட வேண்டிய கடல் பகுதிகளை இரு மடங்காக அதிகரிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
ஈரானை யார் தாக்கினாலும் நாங்கள் எதிர்ப்போம்: ரஷ்யா.
ஈரான் மற்றும் சிரியா மீது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பல்வேறு தடைகளை விதித்துள்ள நிலையில், ரஷ்யா இருநாடுகளுக்கு ஆதரவு அளித்துள்ளது.இதுகுறித்து ரஷிய பிரதமர் விளாடிமிர் புடின் ரஷியாவின் வெளிநாட்டு கொள்கை பற்றி ஒரு கட்டுரையில் கூறியிருப்பதாவது: ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருப்பதாக கூறி அந்த நாட்டுக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள். இது தேவையற்ற செயல்.
ஈரான் நாட்டின் மீது யார் தாக்குதல் நடத்தினாலும் நாங்கள் எதிர்ப்போம். அதன் விளைவுகள் கடுமையாக இருக்கும்.அதேபோன்று சிரியாவுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் சில அரபு நாடுகளும் நெருக்கடி கொடுத்து வருகின்றன. ஐக்கிய நாட்டு சபையின் அனுமதின்றி எந்த ஒரு நாடும் சிரியா மீது தாக்குதல் நடத்தக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவிடம் மன்னிப்பு கோரியது ஆப்கானிஸ்தான்.
ஆப்கானிஸ்தானில் தற்போது தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் அமெரிக்காவிடம் ஆப்கானிஸ்தான் மன்னிப்பு கோரியுள்ளது.ஆப்கானிஸ்தானில் குர்ஆன் எரிக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு தொடர் கலவரங்கள் நடந்து வருகிறது.இந்நிலையில் அமெரிக்காவுக்கு எதிராக ஆப்கானிஸ்தானில் காபூலில் உள்ள உள்துறை அமைச்சக அலுவலகத்தில் தீவிரவாதி ஒருவர் சனிக்கிழமை நுழைந்து அமெரிக்கப் படை வீரர்களைச் சுட்டுக் கொன்றார்.
இதுகுறித்து அமெரிக்க இராணுவத் தலைமையக ஊடகச் செயலர் ஜார்ஜ் லிட்டில் தெரிவிக்கையில், தீவிரவாதிகளின் இச்செயல் ஏற்றுக் கொள்ள முடியாதது, இச்சம்பவத்துக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.எனவே இச்சம்பவத்துக்கு அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லியோன் பனெட்டாவிடம், ஆப்கான் பாதுகாப்பு அமைச்சர் வார்டக் தொலைபேசியில் மன்னிப்பு கோரியதாக அமெரிக்க இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.
ஒசாமாவின் வீடு முற்றிலுமாக இடித்து தரைமட்டம்.
பாகிஸ்தானின் அபோதாபாத்தில் ஒசாமா பின்லேடன் தங்கியிருந்த வீடு முற்றிலுமாக இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.அல்கொய்தா இயக்கத்தின் தலைவர் ஒசாமா பின்லேடன் கடந்தாண்டு மே மாதம் அமெரிக்கா படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.பின் அவரது உடல் புதைக்கப்பட்டால் அந்த இடத்தை தீவிரவாதிகள் புனித இடமாக மாற்றி விடுவர் என்று கருதிய கடலில் வீசி விட்டனர்.
சுட்டுக் கொல்லப்பட்ட பின், பின்லேடன் தங்கியிருந்த வீட்டுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. அந்த வீட்டைப் பார்வையிட வேண்டும் என்று பத்திரிகையாளர் மற்றும் வேறு நாட்டு தூதரக அதிகாரிகள் பலர் கோரிக்கை விடுத்தனர்.பின்லேடனின் வீடு இடிக்கப்படாமல் இருந்தால் தீவிரவாதிகள் அதனையும் நினைவுச் சின்னமாக்கி விடுவர் என்று கருதி வீட்டை இடிக்க உத்தரவிட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்த உத்தரவு யாரால் பிறப்பிக்கப்பட்டது எனத் தெரியவில்லை. எனவே பலத்த பாதுகாப்புடன் சனிக்கிழமை இரவு வீட்டை இடிக்கும் பணி தொடங்கி, நேற்று முற்றிலுமாக முடிவடைந்து விட்டது.இதுகுறித்து பாகிஸ்தான் அதிகாரிகள் கருத்து ஏதும் தெரிவிக்க மறுத்துவிட்டனர். இந்த வீட்டில் பின்லேடன், பின்லேடனின் 3 மனைவிகள், 16 குழந்தைகள் உட்பட 27 பேர் தங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவை தோற்கடிக்கும் வகையில் விமான நிலையத்தை அமைக்க சீனா முடிவு.
அமெரிக்காவின் அட்லாண்டா சர்வதேச விமான நிலையத்தை தோற்கடிக்கும் வகையில், உலகின் மிகப் பெரிய விமான நிலையத்தை நிர்மாணிக்க சீனா முடிவு செய்துள்ளது.அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தின் அட்லாண்டா நகரில் உள்ள ஹார்ட்ஸ்பீல்டு - ஜாக்சன் சர்வதேச விமான நிலையம் தான், விமானப் போக்குவரத்தில் உலகின் மிகப் பெரிய விமான நிலையமாக கருதப்படுகிறது.இந்நிலையில் அதை தோற்கடிக்கும் வகையில் பீஜிங்கின் தென் கிழக்கில் உலகின் மிகப் பெரிய சர்வதேச பயணிகள் விமானப் போக்குவரத்து நிலையம் ஒன்றை அமைக்க சீனா முடிவு செய்துள்ளது.
மொத்தம் 15 பில்லியன் டொலர் செலவில் அமையக் கூடிய இந்த நிலையம் பீஜிங்கிற்கும், ஹேபெய் மாகாணத்தின் லாங்பாங் நகருக்கும் இடையில் உள்ள பகுதியில் நிறுவப்படலாம் எனத் தெரிகிறது.இந்த விமான நிலையத்தில் மொத்தம் ஒன்பது ஓடுபாதைகள் அமைக்கப்படும். ஆண்டுக்கு 13 கோடி பயணிகள் வந்து செல்வர். 55 லட்சம் டன் சரக்குகள் கையாளப்படும்.
அதேநேரம் இந்த புதிய விமான நிலையம், நெடுஞ்சாலைகள், சரக்குப் போக்குவரத்து சாலைகள், கிராமப்புறச் சாலைகள் ஆகியவற்றை இணைக்கும் மையமாகவும் திகழும்.பீஜிங்கில் ஏற்கனவே நான்யுவான் விமான நிலையம் மற்றும் பீஜிங் சர்வதேச விமான நிலையம் என இரண்டு நிலையங்கள் உள்ளன. இவற்றில் பீஜிங் விமான நிலையத்தில் ஆண்டுக்கு ஏழரைக் கோடி பயணிகள் வந்து செல்கின்றனர்.
அமெரிக்க விமானம் பாகிஸ்தானில் சுட்டு வீழ்த்தப்பட்டது.
பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள வஜிரிஸ்தானின் வடக்குப் பகுதியில் அமெரிக்காவின் ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.வஜிரிஸ்தானின் மலைப் பகுதியில் பதுங்கியுள்ள தலிபான், அல்கொய்தா தீவிரவாதிகள் வன்முறையில் ஈடுபட்டு வருகிறார்கள்.இவர்கள் அவ்வப்போது ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் அத்துமீறி அங்குள்ள தீவிரவாதிகளுக்கு எதிராகப் போரிட்டு வரும் அமெரிக்கப் படையினரைத் தாக்கி வருகின்றனர்.
இதனால் இப்பகுதியில் பதுங்கியுள்ள தீவிரவாதிகளைக் கடந்த சில ஆண்டுகளாக ஆளில்லா விமானம் மூலம் அமெரிக்கா தாக்கி வருகிறது.இந்நிலையில் மிரான்ஷா பகுதியில் பறந்து கொண்டிருந்த ஆளில்லா விமானம் சில நாள்களுக்கு முன் விழுந்து நொறுங்கியது. அப்பகுதியை முற்றுகையிட்ட தலிபான் தீவிரவாதிகள் விமானத்தின் பாகங்களை தூக்கிச் சென்று விட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விமானம் தலிபான் தீவிரவாதிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக வந்த தகவலை அமெரிக்க அலுவலகம் மறுத்துள்ளது.கடந்த வாரம் அமெரிக்க இராணுவ வீரர்கள் நடத்திய தாக்குதலில் 13 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தாலி சொகுசு கப்பலில் தீ விபத்து: மீட்பு பணிகள் தீவிரம்.
இந்திய பெருங்கடலில் உள்ள மடாகாஸ்கர் என்ற தீவிலிருந்து செசெல்ஸ் தீவுக்கு “தி கோஸ்டா அல்லீக்ரா” என்ற இத்தாலி சொகுசு கப்பல் பயணமானது.இக்கப்பலில் 1050 பேர் பயணம் செய்தனர். அவர்களில் 636 பேர் பயணிகள், 413 பேர் கப்பல் ஊழியர்கள் ஆவர்.தி கோஸ்டா அல்லீக்ரா, செசெல்ஸ் தீவு அருகே சென்றபோது கப்பலில் உள்ள ஜெனரேட்டர் அறையில் திடீரென தீப்பிடித்தது. இதையடுத்து மின் விளக்குகள், குளிர்சாதன கருவிகள், அவசர தேவைக்கு பயன்படுத்தப்படும் மின்சாதனங்கள் அனைத்தும் செயலிழந்தன.
இதனால் கப்பல் இருளில் மூழ்கியது. தகவல் தொடர்பும் துண்டிக்கப்படும் நிலை ஏற்பட்டது.இதைத் தொடர்ந்து பயணிகளும் ஊழியர்களும் தவிப்புக்குள்ளானார்கள். மறுபக்கம் அந்த பகுதியில் சோமாலியா கடற்கொள்ளையர்களின் நடமாட்டமும் உள்ளது.எனவே இந்த விபத்து குறித்து இத்தாலி கடற்பாதுகாப்பு படைக்கு கப்பல் கப்டன் தகவல் கொடுத்தார்.இதையடுத்து மீன்பிடி படகுகளும், கடற்படை ரோந்து கப்பல்களும் அங்கு விரைந்துள்ளன. இதற்கிடையே கப்பல் ஜெனரேட்டர் அறையில் பிடித்த தீ மேலும் பரவாமல் அணைக்கப்பட்டது.
பயணிகளுக்கு தேவையான உணவு பொத்தலங்கள் ஹெலிகொப்டர் மூலம் வழங்கப்பட்டுள்ளன. தற்போது, கப்பலில் பயணிகள் பத்திரமாக இருப்பதாகவும் மீட்பு பணிகள் விரைவில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த ஜனவரி மாதம் இத்தாலியின் கோஸ்டாகன்கார்டியா என்ற பயணிகள் சொகுசு கப்பல் விபத்துக்குள்ளாகி 32 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.
நோபல் பரிசு 2012: அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி கிளிண்டன் பெயர் சிபாரிசு.
இந்த ஆண்டிற்கான நோபல் பரிசுக்கு அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி கிளிண்டன் சிபாரிசு செய்யப்பட்டுள்ளார்.நோபல் பரிசு என்பது அறிவியலில் ஒப்பற்ற ஆய்வு மேற்கொண்டு வெற்றி பெற்றவர்கள், சமூகத்திற்காக தொண்டாற்றியவர்களுக்கு வழங்கப்படும் உலகில் மதிக்கத் தகுந்த விருதுகளுள் ஒன்றாகும்.
இந்நிலையில் 2012ம் ஆண்டிற்கான உலக அமைதிக்கு பாடுபட்டவர்களுக்கான நோபல் பரிசுக்குரியவர்கள் தெரிவுசெய்யப்பட உள்ளனர்.அதற்காக 231 பெயர்கள் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. அவர்களில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி கிளிண்டனும் ஒருவர். இவர் தவிர, ஜேர்மனியின் முன்னாள் ஜனாதிபதி ஹெல்மட் கோல், உக்ரைன் முன்னாள் ஜனாதிபதி யூலியா டிமோ சன்கோ, அமெரிக்க ராணுவ வீரர் பிரட்லி மேன்னிங்கும் அடங்குவர்.
இவர்களில் ஒருவருக்கு உலக அமைதிக்கு பாடுபட்டவர்களுக்கான நோபல் பரிசு வருகிற ஒக்ரோபர் மாதம் வழங்கப்படுகிறது. இந்த தகவலை நோபல் நிறுவன தலைவர் லகர் லங்டெஸ்டர்டு தெரிவித்துள்ளார்.கடந்த ஆண்டு 241 பெயர்கள் சிபாரிசு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
செயற்கை கரு முறைக்கு போப் ஆண்டவர் எதிர்ப்பு.
செயற்கையான முறையில் கருவை உருவாக்கும் முறைக்கு தடை ஏற்படுத்த வேண்டும் என்று போப் ஆண்டவர் 16ம் பெனடிக்ட் கருத்து தெரிவித்துள்ளார்.மலட்டுத்தன்மை குறித்து ரோமிலுள்ள வாடிகன் நகரில் மூன்ற நாள் மாநாடு நடைபெற்றது. இறுதி நாளான சனிக்கிழமை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போப்பாண்டவர் மேற்கண்ட கருத்தை தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியது: செயற்கை முறையில் கரு உருவாக்குதலைத் தடை செய்ய வேண்டும். தம்பதிகளின் இயற்கையான இணைவின் மூலமே மனித உயிர்கள் உருவாக வேண்டும்.செயற்கை முறையில் கரு உருவாதல் வியாபாரமயமானது. மோசமான ஒன்று. படைப்புத் தொழிலை அது எடுத்துக் கொள்கிறது. இயற்கையான முறையிலான கருத்தரித்தலில் தம்பதிகளுக்கிடையே உயிரியல் ரீதியாக மட்டுமல்லாது, ஆன்மிக ரீதியாகவும் அன்பு பரிமாறிக் கொள்ளப்படும். அதே சமயம் மலட்டுத் தன்மை குறித்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார்.