Wednesday, February 29, 2012

NEWS OF THE DAY.

இலங்கையில் சமாதானத்தை நிலைநாட்ட மக்களின் ஆசீர்வாதம் உண்டு!- ஜனாதிபதி மகிந்த.
இலங்கை படைகள் இறுதிக்கட்ட யுத்தத்தில் பாரியளவிலான படுகொலைகளையோ, சட்டத்திற்குப் புறம்பான கொலைகளையோ மேற்கொள்ளவில்லை என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். பண்டாரநாயக்க ஞாபகாரத்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் 'ராவய' பத்திரிகையின் வெள்ளிவிழா, நேற்றிரவு நடைபெற்றது. இந்நிகழ்வில், பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்நாட்டில் ஜனநாயகம் முழுமையாக நிலைநாட்டப்பட்டுள்ளது இனவாதத்தை நாம் ஒருபோதும் தூண்டவில்லை.இலங்கையில் ஏற்பட்ட கிளர்ச்சிகள் மற்றும் 30 வருடகால பயங்கரவாதத்தினால் இந்நாட்டில் இரத்தத்தையும் கண்ணீரையுமே ஏற்படுத்தின. இந்நிலையில், நாம் பயங்கரவாதத்தை ஒழித்துவிட்டோம் என திருப்தியடைய முடியாது என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.நாட்டில் பயங்கரவாதமும் பிரிவினைவாதமும் மீண்டும் தலைதூக்க இடமளிக்கக் கூடாது. இவ்வாறான சூழ்நிலையொன்றை நாம் ஏற்படுத்த உறுதிபூண வேண்டும் என ஜனாதிபதி மகிந்த வலியுறுத்தினார்.
ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமைககள் பேரவைக் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக தீர்மானமொன்றை கொண்டுவருவதற்கு ஒரு பகுதியினர் முயற்சிக்கின்ற நிலையில், நேற்று முன்தினம் மக்கள் அரசாங்கத்துக்கு ஆதரவை வெளிப்படுத்துவதற்காக வீதியில் இறங்கினார்கள்.இச்சம்பவமானது, சமாதானத்தையும் ஐக்கியத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்கான மக்களின் ஆசிர்வாதத்தை இலங்கை கொண்டுள்ளமையை வெளிப்படுத்துகிறது எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
நாட்டுக்காக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் குரல்கொடுக்கத் தயார்: சரத் பொன்சேகா.
நாட்டுக்காக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் குரல் கொடுக்கத் தயார் என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா அறிவித்துள்ளார்.பொருத்தமற்ற நபர்களைப் பயன்படுத்தி நாட்டைப் பாதுகாக்க முடியாது. ஜெனீவா மானித உரிமைகள் பேரவை அமர்வுகள் நாட்டுக்கு எதிரானதல்ல.
எனினும், இந்த நாட்டின் ஊழல் மோசடி மிக்க ஆட்சியாளர்களுக்கு எதிராகவே தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. இவ்வாறான ஓர் நிலைமைக்கு இந்த ஆட்சியாளர்கள் தள்ளப்படுவார்கள் என்பதனை நாம் முன்கூட்டியே அறிந்திருந்தோம் என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.படைவீரர்களை கண்டு கொள்ளாத இந்த ஆட்சியாளாகள் ஜெனீவா மாநாட்டில் நெருக்கடிகளை எதிர்நோக்குகின்றனர் என சரத் பொன்சேகா சுட்டிக்காட்டியுள்ளார்.
முஸ்லீம் காங்கிரஸ் எம்.பிக்களை பதவிநீக்க முடிவு!- ஐ.தே.க. செயற்குழுவிற்கு நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க உள்ளிட்ட கட்சியின் செயற்குழுவிற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் உட்பட அந்த கட்சியின் 7 நாடாளுமன்ற உறுப்பினர்களை பதவியில் இருந்து நீக்க ஐக்கிய தேசியக் கட்சி எடுத்துள்ள தீர்மானத்தை தடுத்து, கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நிரந்தர தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தீர்மானத்திற்கு எதிராக ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாக்கல் செய்திருந்த மனுவை விரிவாக ஆராய்ந்த பின்னர் மாவட்ட நீதிமன்றம் இந்த தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.அரசாங்கத்தின் 18வது அரசியல் அமைப்புச் சட்டத்திருத்திற்கு ஆதரவாக தாம் நாடாளுமன்றத்தில் வாக்களித்திருந்தாக மனுதார்கள் கூறியுள்ளனர். இதன் பின்னர் தாம் அரசாங்கத்தில் இணைந்து கொண்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் பின்னர், எந்த விசாரணைகளும் இன்றி ஐக்கிய தேசியக் கட்சி தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பறிக்க தயாராகி வந்தாகவும், ஐக்கிய தேசியக் கட்சியை சாராத குறித்த ஏழு பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்வதற்கான சட்டரீதியான அதிகாரம் அந்தக் கட்சிக்கு இல்லை எனவும் தெரிவித்து கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில்   மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.இந்த விடயத்தை விரிவாக ஆராய்ந்த கொழும்பு மாவட்ட நீதிமன்றம் மனு மீதான விசாரணை முடியும் வரை சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிகள் பறிக்கப்படக் கூடாது என்ற தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.
பாகிஸ்தான் விமான படைக்கு புதிய தளபதி நியமனம்.
பாகிஸ்தானில் விமான படைக்கு புதிய தளபதியாக தாஹிர் ரபிக் பட் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.பிரதமர் யூசுப் ரசா கிலானியின் ஆ‌லோசனையின் அடிப்படையில் ஜனாதிபதி புதிய தளபதியை நியமித்துள்ளதாக பிரதமர் அலுவலக செய்தி குறிப்பு தெரிவித்துள்ளது.
மேலும் அதில் தெரிவித்திருப்பதாவது: பாகிஸ்தான் விமானப்படை தளபதி இருக்கும் ராவ் குவாமர் சுலைமான் வரும் 17ம் திகதியுடன் ஓய்வு பெறுகிறார்.மேலும் ஓய்வு வயதை நீட்டித்து பதவியல் தொடர விருப்பம் இல்லை என தெரிவித்துள்ளதால் புதிய தளபதியாக பட் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.சுலைமான் கடந்த 1977-ம் ஆண்டு பாகிஸ்தான் விமானபடையில் சேர்ந்தார். பல்‌வேறு ரக போர்‌ விமானங்களையும் கையாண்டுள்ளார். இவர் ஏர் மார்ஷலாக கடந்த 2009ம் ஆண்டு பதவியேற்றார்.
பிரிட்டன் பொருட்கள் எங்களுக்கு வேண்டாம்: அர்ஜென்டினா திடீர் அறிவிப்பு..
தங்களுக்கு சொந்தமான பாக்லாந்து தீவை பிரிட்டன் கைப்பற்றி வைத்துள்ளது என அர்ஜென்டினா தொடர்ந்து பிரிட்டன் அரசுடன் போரிட்டு வருகிறது.ஆனால் பிரிட்டன் அந்த தீவை கைப்பற்றியதன் 30வது ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது.இந்நிலையில் அர்ஜென்டினா அரசு தனது 20 பெரிய வர்த்தக நிறுவனங்களிடம் பிரிட்டனிலிருந்து எந்தப் பொருளையும் இறக்குமதி செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தியதாக அந்நாட்டு அரசு ஊடகமான Telam செய்தி வெளியிட்டுள்ளது.
அர்ஜென்டினாவின் தொழில்துறை அமைச்சரான டெபோரா கியோரி வர்த்தக நிறுவன முதலாளிகளிடம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.மேலும் உள்ளூர் ஆதரவைப் பெறும் முயற்சியில் இறங்கியுள்ள அர்ஜென்டினா ஜனாதிபதி கிறிஸ்டினா ஃபெர்னாண்டெஸ், பிரசாரக் கூட்டத்தை நடத்தி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.கிறிஸ்டினா ஃபெர்னாண்டெஸ் தனது பிரசாரத்தில், பிரிட்டன் இறக்குமதியைக் குறைப்பதால் நாட்டின் அதிகமான செலாவணி அந்நாட்டுக்குப் போகாமல் தடுப்பதாக தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, அர்ஜென்டினாவின் துறைமுகப் பட்டினமான உஷுவாவியாவுக்கு வந்த இரண்டு கப்பல்கள், பாக்லாந்துக்குப் போய் வந்ததனால் உடனே திருப்பி விடப்பட்டன.துறைமுகத்தில் நிறுத்த இந்தக் கப்பல்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதைக் கேள்விப்பட்ட பிரிட்டனின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜெரேமிபிரௌனி இச்சம்பவம் தனக்கு வருத்தமும் விரக்தியும் அளிப்பதாகக் கூறினார்.
நாங்கள் அர்ஜென்டினாவுடன் நட்பாக இருக்க விரும்புகிறோம். அவர்களோ எங்களை வெறுக்கிறார்கள் என்று பிரிட்டன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.வருகிற ஏப்ரல் மாதத்தின் இரண்டாம் நாள் பிரிட்டனும், அர்ஜென்டினாவும் பாக்லாந்து போர் நடந்ததன் 30தாவது நினைவு நாளைக் கொண்டாடத் திட்டமிட்டுள்ளன.ஆனால் பிரிட்டன் அரசு, பாக்லாந்தில் வாழும் 3000 குடிமக்களும் விரும்புகின்றவரை அந்தத் தீவு தங்களின் ஆட்சியதிகாரத்தின் கீழ் செயற்படும் என்று உறுதியாகத் தெரிவித்து விட்டது.
ஈரான் மீதான தாக்குதல் குறித்து அமெரிக்காவுக்கு தெரிவிக்கப்பட மாட்டாது: இஸ்ரேல்.
ஈரான் அணு உலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த தீர்மானித்தால், அது குறித்து அமெரிக்காவுக்கு தகவல் தெரிவிக்கப்படமாட்டாது என இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.அமெரிக்காவின் கூட்டு படையதிகாரிகளின் பிரதானிகளின் தலைவர், வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், தேசிய புலனாய்வு பணிப்பாளர், அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட இஸ்ரேலுக்கு அமெரிக்காவின் உயர் அதிகாரிகள் விஜயம் மேற்கொண்டனர்.
இவர்கள் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹு மற்றும் பாதுகாப்பு அமைச்சர் எஹுட் பராக்கை சந்தித்து பேசினர்.அப்போதே இஸ்ரேலிய அதிகாரிகள் மேற்குறிப்பிட்ட கருத்தை தெரிவித்ததாக அமெரிக்க புலனாய்வு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.ஏனெனில் தாக்குதல் நடத்தும் திட்டத்தை அமெரிக்கா தடுக்கலாம் என்ற கருதியே, முன் அறிவிப்பு எதுவும் வழங்கப்படமாட்டாது என இஸ்ரேலிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதால் ஈரானிய அணுசக்தி திட்டங்களுக்கு தற்காலிக பின்னடைவு மாத்திரமே ஏற்படும் என இஸ்ரேலை சமாதானப்படுத்தும் முயற்சியல் அமெரிக்கா பல மாதங்களாக முயற்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹு அடுத்தவாரம் வாஷிங்டனுக்கு செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சிரியா ஜனாதிபதி அசாத்தின் செயல்கள் மீது நம்பிக்கை இல்லை: ஐ.நா.
சிரியாவின் மீது பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டுள்ளதால் இராணுவத்தின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளது.ஹோம்ஸ் நகரின் பல பகுதிகளில் சிரியா இராணுவம் நேற்று கடுமையான தாக்குதல் நடத்தியது. இதில் 20 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில் புதிய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கான பொது வாக்கெடுப்பில், சட்டத்தை அங்கீகரித்து 89.4 சதவிகிதம் பேர் வாக்களித்துள்ளதாக சிரியா உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.இப்புதிய சட்டம் 2028ம் ஆண்டு வரையில் அசாத் பதவியில் இருக்க வழிவகுக்கும். ஆனால் இன்னும் மூன்று மாதங்களில் அனைத்துக் கட்சிகளும் பங்கேற்கும் பொதுத் தேர்தலை நடத்த புதிய சட்டம் வழிவகுப்பதாக அசாத் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் சிரியாவில் அதிகரித்து வரும் வன்முறையை கட்டுப்படுத்துவதற்கு வழி செய்யும் தீர்மானம் ஒன்றைத் தயாரிப்பதில் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் ஈடுபட்டுள்ளதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது.பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்சில் நேற்று சிரியா மற்றும் எகிப்து நிலவரம் குறித்து ஆலோசிப்பதற்காக கூட்டப்பட்ட அவசரக் கூட்டத்தில் அசாத்தின் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள ஏழு அமைச்சர்கள் மீது தடைகள் விதிக்கப்பட்டன.
ஆண்களின் கழிவறையை கைப்பற்ற பெண்கள் போராட்டம்.
சீனாவில் ஆண்களுக்கு அதிக அளவில் பொது கழிவறைகள் உள்ளன. பெண்களுக்கு போதுமான அளவில் இல்லை எனக்கூறி போராட்டம் நடந்தது.சீன தலைநகர் பீஜிங்கில் பெண்களுக்கான பொது கழிவறை போதுமான அளவு இல்லை என்று கூறி பெண்கள் போராட்டம் நடத்தினர்.
கழிவறைக்கு வெளியே பேனர்களை ஏந்தியபடி கோஷமிட்டனர். கல்லூரி மாணவிகள் இந்த போராட்டத்தில் அதிகளவில் பங்கேற்றனர்.இந்த போராட்டத்திற்கு தலைமையேற்ற கல்லூரி மாணவி லி டிங்டிங் கூறுகையில், பெண்களுக்கான பொது கழிவறைகள் சீனாவில் போதுமானதாக இல்லை.கழிவறையின் முன்பு நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டி உள்ளது. பெண்களுக்கு கூடுதலாக பொது கழிவறைகள் அமைக்க வேண்டும். உயரதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கவே இந்த போராட்டம் நடைபெற்றது என்று கூறினார்.
பாகிஸ்தானில் ஷியா முஸ்லிம்கள் 18 பேர் படுகொலை: தொடரும் இனவாதம்.
பாகிஸ்தானின் வடக்குப் பகுதியில் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த ஷியா முஸ்லிம்கள் 18 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.பாகிஸ்தானின் வடக்குப் பகுதியில் சென்று கொண்டிருந்த நான்கு பேருந்துகளை, அந்நாட்டு இராணுவ உடை அணிந்த சில துப்பாக்கித் தாரிகள் வழிமறித்துள்ளனர்.பின்பு பயணிகளில் ஷியா இனத்தவர் 18 பேரை மட்டும் தனிமைப்படுத்தி சுட்டுக் கொன்றுள்ளனர்.
அந்தப் பேருந்துகளில் பயணம் செய்து கொண்டிருந்தவர்களின் அடையாள ஆவணங்களை சோதித்த பின்னரே, அந்த ஆயுததாரிகள் ஷியா இனத்தவரை மட்டும் சுட்டுகொன்றுள்ளது தெரியவந்தது.கடந்த காலங்களில் பாகிஸ்தானில் ஏற்பட்ட இன மோதல்களின் போது, ஷியா இனத்தவர்கள் இலக்கு வைத்து தாக்கப்பட்டுள்ளனர் என்றும், பாகிஸ்தான் அரசாங்கம் இப்படியான வன்முறைகளை தடுக்க சிறிதளவே நடவடிக்கைகளை எடுக்கின்றன எனவும் பிரித்தானியா ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சீனாவின் பொருளாதார வளர்ச்சி குறையும்: உலக வங்கி.
சீனாவின் தற்போதைய பொருளாதார நிலை படிப்படியாக குறையும் என உலக வங்கி எச்சரித்துள்ளது.கடந்த 2011ம் ஆண்டு வரை சீனாவின் பொருளாதார வளர்ச்சி 9.2 சதவிகிதமாக உள்ளது. இந்தாண்டின் தொடக்கத்தில் இதுகுறித்து ஆய்வு செய்த உலக வங்கி, இந்தாண்டில் பொருளாதார வளர்ச்சி 8.4 சதவிகிதம் என்ற அளவிற்கு குறையும் என கூறியுள்ளது.
இந்நிலையில் சீன அமைச்சகங்களுடன் கலந்து ஆலோசித்து சமீபத்திய பொருளாதார வளர்ச்சி முடிவுகளையும் கருத்தில் கொண்டு உலக வங்கி நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 30 ஆண்டுகளாக சீன பொருளாதார வளர்ச்சியின் ஆண்டு சராசரி 10 சதவிகிதம் என்ற அளவில் இருந்தது.
கடந்த 2011ம் ஆண்டில் 8.5 சதவிகிதம் என்ற அளவில் இருந்தது. இது 2026 - 2030ம் ஆண்டுக்குள் 5 சதவிகிதம் என்ற அளவிற்கு குறையும். இந்த வீழ்ச்சி விகிதத்தை தாமதப்படுத்துவது தான் சீனாவின் மிகப் பெரிய சவால்.இதற்காக தற்போதைய பொருளாதார கொள்கைகளில் இருந்து மாறி, விரைவில் புதிய கொள்கைகளை அமல்படுத்த வேண்டும். குறிப்பாக அனைத்து துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தி வரும் அரசு நிறுவனங்களை விலக்கிவிட்டு தனியார் மயமாக்கலுக்குத் தயாராக வேண்டும்.
சந்தை அடிப்படையிலான பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும். வங்கிகளை வர்த்தகமயமாக்கல், விவசாயிகளின் உரிமைகளைப் பாதுகாத்தல், நில வருவாயில் உள்ளூர் அரசுகளைச் சார்ந்திருத்தலைக் குறைத்தல், புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவித்தல், அனைவருக்கும் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்தல் போன்றவற்றை சீனா மேற்கொள்ள வேண்டும். இந்த மாற்றங்கள் தான் சீன சமூகத்தை நிலையாக வைத்திருக்க உதவும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.இதற்குப் பதிலளித்த துணைப் பிரதமர் லீ கீகியாங் கூறுகையில், பொருளாதார மாற்றத்தை சீனா ஏற்கனவே தொடங்கி விட்டது. நீண்ட கால நிலையான பொருளாதார வளர்ச்சி, சமூக பொருளாதார மேம்பாடு இவற்றில் சீனா கவனம் செலுத்தி வருகிறது என்றார்.
அப்பாவி பொதுமக்களை அடித்து கொன்ற இராணுவம்: ஒரே இடத்தில் 62 உடல்கள்.
சிரியா ஜனாதிபதி பஷர் அல் அசாத்துக்கு எதிரான போராட்டம் வலுவடைந்து வரும் நிலையில், பொதுமக்கள் மீதான இராணுவத்தின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளது.போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் மீது ஜனாதிபதியின் தூண்டுதலால் இராணுவம் துப்பாக்கி, பீரங்கி தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில் ஒரே இடத்தில் 62 பேர் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அரசின் தாக்குதலுக்கு பயந்து ஊரை விட்டு சென்ற அவர்களை கடத்தி சென்ற இராணுவத்தினர், 62 பேரையும் அடித்து துன்புறுத்தி கொன்றுள்ளதாக அப்பகுதியினர் தெரிவித்தனர்.
யூரோ மண்டலப் பேச்சுவார்த்தை நிறுத்தம்.
கிரீசின் கடனை அடைப்பதற்காக ஜேர்மனி பிணைய நிதி வழங்க மறுத்ததால் யூரோ மண்டலத்தின் நிதியமைச்சர்கள் கலந்து கொண்ட கூட்டம் இரண்டாம் நாள் நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.ஐரோப்பிய நிதி நிலைப்பாட்டு வசதிக்கான(EFSF) தொகை நிர்ணயிக்கப்பட்ட நிலையில் ஜேர்மனி தனது பங்கான 1 டிரில்லியன் டொலரை கொடுக்க மறுத்துவிட்டது.
இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவரான ஹெர்மன் வான் ரோம்புய், பெரும்பங்கை வழங்க வேண்டிய ஜேர்மனி எதிர்ப்பு தெரிவிப்பதால் இனி இந்தக் கூட்டத்தை இப்போது நடத்துவதில் பயனில்லை என்று கூறி அடுத்த மாதம் நடத்தலாம் என்று ஒத்திவைத்தார்.இந்தக் கூட்டத்தில் சர்வதேச நாணய நிதியத்துக்கு தனது பங்களிப்பை உறுதி செய்வதற்கு முன்பாக தங்களது நிதி உதவித் திட்டம் குறித்து G20 நாடுகளின் நிதியமைச்சர்களும் முடிவாகத் தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
இத்தாலியும், போர்ச்சுக்கல்லும் தங்களது கடன் நெருக்கடியிலிருந்து மீளும் வகையில் இத்தாலி 6 பில்லியன் யூரோவுக்கும் அதிகமாகத் தர ஒப்புக்கொண்டது. போர்ச்சுக்கல் நாடு தன் வங்கிற்கு சில தணிக்கை சீர்திருத்தங்களை அறிமுகம் செய்தது.Standard and Poor என்ற கருத்துக்கணிப்பு நிறுவனம் கிரீஸை திவாலாகிவிட்டதாக அறிவித்ததனால் கிரேக்க அரசின் நிதிப்பத்திரங்களை அடமானமாக பெற ஐரோப்பிய மத்திய வங்கி மறுத்துவிட்டது.
மார்ச் மாதம் 12ஆம் நாள் தனியாரிடம் உள்ள கிரேக்க நிதிப் பத்திரிங்கள் குறைக்கப்படும் போது கிரீசின் திவாலான நிலையில் மாற்றம் ஏற்படும் என்றும் Standard and Poor கருத்துக்கணிப்பு நிறுவனம் ஊகிக்கின்றது.பிரிட்டிஷ் பிரதமரான டேவிட் கேமரூனும், இவரையடுத்த செக் குடியரசும் ஜி20 நாடுகளின் யூரோ மண்டல நிதிநெருக்கடிக்கான தீர்வுகளை ஏற்க மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் ஒபாமாவுக்கு அமோக ஆதரவு: கருத்துக் கணிப்பில் தகவல்.
அமெரிக்காவில் இந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஒபாமா தான் வெற்றி பெறுவார் என்று கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.தற்போதைய ஜனாதிபதி பராக் ஒபாமாவின் பதவி காலம் முடிவடைவதையொட்டி, இந்தாண்டு நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ளது.
அதில் ஆளும் ஜனநாயகக் கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி பராக் ஒபாமா வேட்பாளராக நிற்கிறார். எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சி சார்பில் மிட் ரோம்னி, ரோன் பால் மற்றும் ரிக் சான்டோரம் ஆகியோருக்கு இடையில் பலத்த போட்டி நிலவுகிறது.இந்நிலையில் பாஸ்டன் நகரில் இயங்கி வரும் ஐ.என்.இ மீடியா என்ற நிறுவனம், சமீபத்தில் தேசிய அளவில் கடந்த 22 முதல் 26 வரையிலான திகதிகளில் ஓன்லைனில் ஒரு கருத்துக் கணிப்பை நடத்தியது.
இதன்பின் இந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, மாசாசூசெட்ஸ் முன்னாள் மாகாணத்தலைவர் மிட் ரோம்னி தனது போட்டியாளர்களான ரோன் பாலை விட 24.1 புள்ளிகள் வீதமும், ரிக் சான்டோரமை விட 33.4 புள்ளிகள் வீதமும் முன்னிலையில் உள்ளார்.அதே நேரம் இன்றே ஜனாதிபதி தேர்தல் நடக்குமானால் 80 சதவீத அமெரிக்க இந்தியர்கள், ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்குத் தான் வாக்களிப்பர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக் கணிப்பில் மொத்தத்தில் 80 சதவிகிதம் பேர் ஒபாமாவிற்கு ஆதரவாகவும், 14.7 சதவிகிதம் பேர் ரோம்னிக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.அதே நேரம் குடியரசுக் கட்சி வேட்பாளர்களில் ரோம்னிக்கு 51.9 சதவிகிதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
கிரீசிற்கு நிதியுதவி: ஜேர்மன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமோக ஆதரவு.
ஜேர்மனியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திவாலான கிரீஸ் நாட்டிற்கு இரண்டாம் கட்டமாக பல பில்லியன் யூரோவை வழங்க அமோக ஆதரவு தெரிவித்துள்ளனர்.கிரீசிற்கு நிதியுதவி வழங்கப்படுவது குறித்து நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், 496 பேர் பணம் கொடுக்க ஆதரவாகவும், 90 பேர் எதிர்த்தும் வாக்களித்துள்ளனர், 5 பேர் வாக்களிக்கவில்லை. எனவே 130 பில்லியன் யூரோ கிரீசுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இப்போது நிதி வழங்குவதில் ஜேர்மனியின் பொருளாதார நிலையில் எத்தகைய மாற்றங்கள் ஏற்படும் என்பதையும், இதன் மூலம் திவாலான கிரீஸ் நூறு சதவிகிதம் மீட்கப்படும் என்றும் யாராலும் கணிக்க இயலாது.மெக்ஸிகோ நகரத்தில் கடந்த வார இறுதியின் போது நடைபெற்ற ஜி20 நாடுகளின் நிதியமைச்சர்களின் கூட்டத்தில் ஜேர்மனி, கிரீசுக்கு பிணையநிதி வழங்குவதாக ஒப்புக்கொண்டது.ஆனால் கிரீஸ் நாடு தனது நிதி நெருக்கடியிலிருந்து மீள வேண்டும் என்றால் முதலில் அதன் கடனில் மூன்றில் ஒரு பங்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று ஜோ்மன் பிரதமர் மார்க்கெல் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மார்க்கெல், தன்னுடைய நிதி நடவடிக்கைகளுக்கு இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவையும் எதிர்பார்த்து உள்ளார். தன்னுடைய மைய வலது நாடாளுமன்ற கூட்டணிக் கட்சிகளிடம் உள்ள 311 உறுப்பினர்களில் 304 பேரிடம் மட்டுமே ஆதரவு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.இதுகுறித்து எம்னிட் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில், 62 சதவிகித மக்கள் இதற்கு நாடாளுமன்றம் அனுமதி வழங்கக் கூடாது என்றும், மீதமுள்ள 33 சதவிகித மக்கள் அனுமதி வழங்கலாம் என்றும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த தகவலை பில்டு செய்தித்தாளின் முதல் பக்கத்தில் “கிரேக்கர்களுக்கு பில்லியனா நிறுத்து” என்ற பெரிய அளவில் எதிர்ப்பு தெரிவித்து செய்தி வெளியிட்டுள்ளது.ஜி20 நாடுகளின் நிதியமைச்சர்கள் நடத்திய கூட்டத்தின்படி கிரீஸ் நாடு 2014ம் ஆண்டுக்குள் 130 பில்லியன் யூரோவை கடனாகப் பெறும் என்றும், இதுதவிர தனியார் கடன் பத்திரமாக 107 பில்லியன் யூரோ கடன் விலக்கிக் கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நயாகரா நீர்வீழ்ச்சியின் அருகே பயணிகளை அழைத்து செல்வதற்கு புதிய நிறுவனம் ஒப்புதல்.
நயாகரா நீர்வீழ்ச்சியின் அருகே பயணிகளை அழைத்துச் செல்லும் படகுச் சேவையை வழங்கிய Maid of the Mist என்ற நிறுவனம் வழங்கி வருகிறது.Maid of the Mist என்ற நிறுவனம் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக, உல்லாச பயணிகளை நீர்வீழ்ச்சியின் அருகே அழைத்துச் சென்றது.ஆனால் தற்போது அந்த நிறுவனத்திற்குப் பதிலாக கலிஃபோர்னியாவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றிடம் அந்தச் சேவையை நடத்தும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
கலிஃபோர்னிய நிறுவனம், எதிர்வரும் 2014 ஆம் ஆண்டில் இருந்து சேவையை வழங்குமெனத் தெரிவிக்கப்படுகிறது.புதிய நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள ஒப்பந்தம் காரணமாக, மேலதிகமாக 300 மில்லியன் டொலர் வருமானம் கிடைக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிரியா விவகாரத்தில் லிபியா போன்று நேட்டோ தலையிடாது: தலைவர் அறிவிப்பு.
சிரியாவில் ஜனாதிபதி பஷர் அல் அசாத்துக்கு எதிராக கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் போராட்டம் நடந்து வருகிறது.இந்நிலையில் அங்கு நடந்து வரும் கலவரத்தில் இதுவரைக்கும் 7500 கொல்லப்பட்டதாக ஐ.நா அறிவித்துள்ளது.
லிபியாவில் புரட்சி படையினருக்கு ஆதரவாக களமிறங்கியது போல சிரியாவில் தலையிடும் எண்ணம் இல்லை என்று நேட்டோ படை தலைவர் கூறியுள்ளார்.அமெரிக்க தலைமையிலான நேட்டோ படையின் தலைவர் ஆண்டர்ஸ் போக் ராஸ்முசன் வாஷிங்டனில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: சிரியாவில் நிலவும் சூழ்நிலையை நேட்டோ படை கூர்ந்து கவனித்து வருகிறது.ஜனாதிபதி பஷர் அல் அசாத்துக்கு எதிராக போராடும் மக்களை இராணுவ தாக்குதல் நடத்தி கொல்வது கண்டனத்துக்கு உரியது.
லிபியாவில் ஜனாதிபதி கடாபியின் ஆட்சிக்கு எதிராக போராடியவர்களுக்கு ஆதரவாக நேட்டோ வான்வழி தாக்குதல் நடத்தியது.ஐ.நா முடிவு மற்றும் அந்த பிராந்தியத்தில் உள்ள நாடுகள் ஆதரவின் பேரிலேயே நேட்டோ தலையிட்டது. அதுபோன்ற நிலை சிரியாவில் இல்லை. எனவே லிபியா விடயத்தில் நேட்டோ படை தலையிடாது என்று தெரிவித்துள்ளார்.
பிரிட்டனில் குடியேற்ற விதிமுறைகளில் மாற்றம்.
பிரிட்டனில் குடியேற்ற விதிமுறைகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.சட்டவிரோதக் குடியேற்றத்தைத் தடுப்பதற்காக மட்டுமே இந்த விதிமுறை கொண்டு வரப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.பல ஆண்டுகளுக்கு முன்பாக பிரிட்டனில் குடியேறியவர்களில் பெரும்பாலானவர்கள், அந்நாட்டு குடியுரிமையைப் பெறுவதற்குப் பதிலாக நிரந்தரமாக வாழும் உரிமையை மட்டும் பெற்றுக் கொண்டனர்.
ஆனால் தற்போது அறிமுகமான “பயோமெட்ரிக் குடியிருப்பு உரிமம்” என்பது ஒரு மின்னணு அடையாள அட்டையைப் போன்றதாகும். சம்பந்தப்பட்டவரின் பெயர், பிறந்ததினம், பிறந்த இடம் உட்பட சுயவிவரங்களுடன் கைரேகை, முகப் பதிவு ஆகியவை அதில் அடங்கியிருக்கும்.குடியேற்ற நிலை, பிரிட்டனில் அவர் பெற்றிருக்கும் உரிமைகள் போன்றவை பற்றிய விவரங்களையும் இந்த அட்டையின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
அனுமதியில்லாமல் பிரிட்டனில் பணிபுரிந்து வரும் பிற நாட்டவர்களை குடியேற்றத்துறை அதிகாரிகள் கைது செய்யும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது.புதிய அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்பட்டால் இதுபோன்ற சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை உடனடியாக கண்டுபிடிக்க முடியும் என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF