Sunday, February 26, 2012

இஸ்ரேல் போர் தொடுத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்!


தம்மீது போர் தொடுத்தால் இஸ்ரேல் பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. அணு ஆயுதங்கள் தயாரிப்பதற்காகவே ஈரான் அணு சக்தி திட்டத்தை முன்னெடுத்து வருவதாக அமெரிக்கா, இஸ்ரேல் உட்பட பல நாடுகள் ஈரானுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளன.இந்நிலையில், ஈரான் மீது போர் தொடுத்தால், இஸ்ரேல் கடும் சேதத்தை சந்திக்க நேரிடும் என ஈரான் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் அஹ்மட் வாஹிதி எச்சரித்துள்ளார்.  சர்வதேச அணு சக்தி முகவர் நிலையம் இறுதியாக விடுத்திருந்த அறிக்கையின் படி, அண்மைய மாதங்களில் ஈரானின் யூரேனிய செறிவூட்டல் அளவு அதிகரித்துள்ளதாக தெரிவித்திருந்தது. 


இதையடுத்து நேற்று சனிக்கிழமை, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நட்டன் யாஜூ விடுத்த அறிக்கையில், ஆத்திரமூட்டும் ஈரானின் அண்மைய நடவடிக்கைகள் தொடர்பில் இஸ்ரேலின் மதிப்பீடுகள் சரியானதாக இருப்பதற்கு கூடுதல் ஆதரமாக குறித்த அறிக்கை இருப்பதாக தெரிவித்திருந்தார். கடந்த 1981ம் ஆண்டு இஸ்ரேலிய விமான படை தாக்குதலா, ஈராக்கின் முற்றுப்பெறதாக அணுசக்தி திட்ட நிலையமொன்று முற்றாக தாக்கி அழிக்கப்பட்டிருந்தது. கடந்த 2007ம் ஆண்டு சிரியாவின் அணு உலை ஒன்றையும் இஸ்ரேலிய போர் விமானங்கள் தாக்கி அழித்திருந்தன. இதே போன்று ஒரு நடவடிக்கையை ஈரான் மீதும் மேற்கொள்ள இஸ்ரேல் தயாராகுமானால், நிச்சயம் பழிவாங்கல் நடவடிக்கையை ஈரான் மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.


எனினும், இஸ்ரேலின் வான் வெளி தாக்குதலால், ஈரானின் அணு உலைகளை முற்றாக தகர்ப்பதற்கு சாத்தியமில்லை எனவும், ஈரானின்பெரும்பாலான அணு சக்தி திட்டங்களை நிலத்தின் கீழ் பாதுகாப்பான முறையில் இயங்கி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.  இந்நிலையில், சுமார் 1,250 மைல் தூரம் சென்று, கோல்ஃப் குடாவில் உள்ள இஸ்ரேல், அமெரிக்க படை முகாம்களை தாக்கி அழிக்க கூடிய சக்தி வாய்ந்த எறிகணைகள் தம்மிடம் இருப்பதாக ஈரானிய ராணுவ தகவல்கள் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. இதேவேளை அமெரிக்கா தனது படைகளை ஹோர்மூஸ் ஜலசந்தி மற்றும் பாரசீக வளைகுடா பகுதியில் அதிகமாக குவிக்க தொடங்கியதால், ஈரான் - அமெரிக்கா இடையேயான பதற்ற நிலையும் மேலும் அதிகரித்துள்ளது. 


அண்மையில் ஈரான் தனது படைகளை பெருமளவில் இப்பகுதிகளில் நிறுத்தி, போர் ஒத்திகை பயிற்சிகளை மேற்கொண்டிருந்தது. இதையடுத்து ஈரான் தாக்குதல் தொடுத்தால் பதில் தாக்குததல் நடத்தும் வகையில், அமெரிக்கா தனது கடல்வழி மற்றும் தரைவழி படைகளை குவிக்க தொடங்கியுள்ளது. ஈரானின் அதிவேக படகுகள், ஏவுகணை தாங்கி கப்பல் ஆகியவற்றுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்க படைகள் இங்கு குவிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF