Saturday, February 25, 2012

NEWS OF THE DAY.

கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது!- கடற்படைக் கட்டளைத் தளபதி.
கச்சதீவு இலங்கைக்கு சொத்தமானது என்பதனை நிரூபிக்க எழுத்து மூல ஆவணங்கள் காணப்படுவதாக வடக்கு கடற்படைக் கட்டளைத் தளபதி ரவி விஜேகுணவர்தன தெரிவித்துள்ளார். கச்சதீவை மீளவும் இந்தியா பெற்றுக் கொள்ள வேண்டும் என தமிழக அரசியல்வாதிகள் விடுத்து வரும் கோரிக்கைக்கை அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
குறுகிய அரசியல் இலாபங்களுக்காக தமிழக அரசியல்வாதிகள் இவ்வாறான கோரிக்கைகளை விடுத்து வருகின்றனர். ஆனால் கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதனை நிரூபிப்பதற்கு தேவையான எழுத்து மூலமான ஆதாரங்கள் காணப்படுகின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார்.கச்சதீவு தேவாலயம் யாழ்ப்பாண பேராயரினால் நிர்வாகம் செய்யப்பட்டு வருகின்றமை மூலம் இது மேலும் உறுதியாகின்றது. கச்சதீவு இலங்கை கடற்பரப்பில் அமைந்துள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கையைக் காப்பாற்ற பிரார்த்தனை செய்யுங்கள்!- பிரதிமைச்சர் ஏ.ஆர். எம். அப்துல் காதர்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவை குற்றவாளிக் கூண்டில் ஏற்றும் நோக்காக கொண்டு, ஜெனீவா ஐ.நா மனித உரிமைச் சபையில் கொண்டு வரப்படும் எத்தகையை பிரேரணையையும் முழுமையாக தோல்வி அடைய, நாட்டில் வாழும் சகல மக்களும் பிரார்த்தனை புரியவேண்டும் என சுற்றாடல்துறை பிரதிமைச்சர்.
ஏ.ஆர். எம். அப்துல் காதர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.ஐ.நா மனித உரிமைச் சபைக் கூட்டத் தொடர், தொடங்குகின்ற நாளான பெப்ரவரி 27ஆம் திகதி அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பிரார்த்தனையை மேற்கொள்ளுமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
இலங்கை தொடர்பில் ஒரு சர்வதேச சுயாதீன விசாரணைப் பொறிமுறை ஒன்றினை உருவாக்குமாறு, புலம்பெயர் தமிழர்கள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமையில் ஜெனீவா ஐ.நா மனித உரிமைச் சபையின் முன்னால் பெப்ரவரி27ம் நாள் ஒன்றுகூட உள்ளனர்.இந்நாளில் அரசாங்கம் கொழும்பிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் ஐ.நாவுக்கு எதிரான மக்கள் போராட்டங்களை மேற்கொள்ளுமாறு ஏற்கனவே அழைப்பு விடுத்திருந்த நிலையில், தற்போது பிராந்தனைக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மகிந்தவின் வழிகாட்டடிலில், இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதாரம் துரித வளர்ச்சியைக் கண்டு பொறுத்துக் கொள்ள முடியாத சக்திகளே, அரசுக்கு எதிராக சதி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.இந்நிலையில்இலங்கையையம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவையும் காக்க பௌத்தர்கள், இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் இப்பிரார்த்தனையை தங்கள் தங்கள் வழிபாட்டுத்தலங்களில் 27ம் திகதி காலையிலோ மாலையிலோ மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மக்களுக்கு நிவாரணம் வழங்கினால் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கத் தயார்: ரணில்.
மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கினால் அரசாங்கத்தின் போராட்டத்திற்கு ஆதரவளிக்கத் தயார் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சில் அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் திட்டத்திற்கு எதிர்ப்பை வெளியிடும் நோக்கில் நாளை மறுதினம் நாடு முழுவதிலும் அரசாங்கம் போராட்டங்களை நடத்த உள்ளது.
நாட்டு மக்கள் பாரிய பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர். இந்நிலையில், நாட்டு மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கப்பட்டால், அரசாங்கத்தின் போராட்டங்களில் பங்கேற்கத் தயார் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விகிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு புறக்கோட்டையில் இரு வர்த்தக நிலையங்கள் தீக்கிரை!
கொழும்பு புறக்கோட்டை பகுதியில் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் திடீரென ஏற்பட்ட மின் ஒழுக்கு காரணமாக வெவ்வேறு பகுதிகளில் இரு வர்த்தக நிலையங்கள் தீக்கிரையாகி உள்ளன.இது பற்றி மேலும் தெரியவருவதாவது, கெய்சர் வீதியில் புடவை கடை ஒன்றும்இ சைனா வீதியில் பலசரக்கு கடை என இரு வர்த்தக நிலையங்கள் மின் ஒழுங்கு காரணமாக தீக்கிரையாகின.பெரும் முயற்சியின் பின்னர் வர்த்தக நிலையங்களில் தீயணைக்கப்பட்டாலும், அங்கிருந்த பெருமளவான பொருட்கள் தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேரடி பேச்சுவார்த்தைக்கு தலிபான்களுக்கு அழைப்பு விடுக்கும் பாகிஸ்தான்.
ஆப்கான் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வருமாறு தலிபான் உட்பட பல்வேறு பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளது.சமீபத்தில் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடந்த ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ஈரான் நாடுகளின் முத்தரப்பு பேச்சில் கலந்து கொண்ட ஆப்கான் ஜனாதிபதி ஹமீத் கர்சாய் அமைதிப் பேச்சுவார்த்தையில் தலிபான் கலந்து கொள்வதற்கு பாகிஸ்தான் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனக் கோரினார்.
இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானி வெளியிட்ட அறிக்கையில், ஆப்கான் அரசுடனான அமைதிப் பேச்சுவார்த்தையில் தலிபானும், பிற ஆப்கான் அமைப்புகளும் கலந்து கொள்ள வேண்டும் என்றார்.தலிபான் தலைவர் முல்லா ஒமர் பாகிஸ்தானில் தான் பதுங்கியுள்ளார் என ஆப்கான் குற்றம்சாட்டி வரும் நிலையில், பாகிஸ்தான் தலிபானுக்கு முதன் முதலாக இந்த அழைப்பை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முஷாரப்புக்கு மீண்டும் அழைப்பாணை.
பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி பர்வேஷ் முஷாரப்புக்கு நீதிமன்றம் மீண்டும் அழைப்பாணை அனுப்பியுள்ளது. இதனால் முஷாரப்புக்கு நெருக்கடி முற்றுகிறது.பாகிஸ்தானில் ஜனாதிபதியாக இருந்த முன்னாள் இராணுவ தளபதி முஷாரப், கடந்த 2008ம் ஆண்டில் அங்கிருந்து வெளியேறினார்.
தற்போது அவர் லண்டனில் வசித்து வருகிறார். ஜனநாயக ஆட்சி ஏற்பட்டதும் முஷாரப் மீது பல வழக்குகள் தொடரப்பட்டன. முன்னாள் பிரதமர் பெனசிர் புட்டோ கொலை வழக்கில் ஏற்கனவே முஷாரப் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். அவரை விரைவில் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்துவோம் என்று பாகிஸ்தான் அரசு கூறி வருகிறது.அதற்காக சர்வதேச பொலிசான இன்டர்போல் உதவியை நாடியுள்ளது. இந்நிலையில் கடந்த 2007ம் ஆண்டில் முஷாரப் ஜனாதிபதியாக இருந்த போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இப்திகார் சவுத்ரியை பதவி நீக்கம் செய்தார்.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இப்திகாருக்கு ஆதரவாக கராச்சியில் மக்கள் கலவரம் நடத்தியதில் 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். முஷாரப் உத்தரவின் பேரில் கலவரம் மூண்டதாக அவர் பதவி விலகிய பிறகு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.அதை விசாரித்து வரும் நீதிபதிகள், குற்றம்சாட்டப்பட்டுள்ள முஷாரப் ஏப்ரல் 7ம் திகதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும், அவருக்கு அழைப்பாணை அனுப்பவும் நேற்று உத்தரவிட்டனர்.
எகிப்து ஜனாதிபதி தேர்தல்: வேட்பாளர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்.
எகிப்து நாட்டில் ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக்கின் ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் நடந்தது. இதன் பின் முபாரக் பதவி விலகினார்.இதனையடுத்து இராணுவ கவுன்சில் ஆட்சி நிர்வாகத்தை ஏற்று நடத்துகிறது. எதிர்வரும் ஜுன் மாதத்திற்குள் ஜனாதிபதி தேர்தலை நடத்தி ஆட்சி பொறுப்பை ஒப்படைக்க இருக்கிறார்கள்.
இந்த தேர்தலுக்கான வேட்பாளர் மனு தாக்கல் 2 வாரத்தில் தொடங்க இருக்கிறது. இதில் இஸ்லாமிஸ்டு அமைப்பு சார்பில் அப்துல் மொனிம் அபோல் பாதோக்(வயது 60) வேட்பாளராக நிறுத்தப்படுகிறார்.இதற்காக இவர் ஆதரவு திரட்டி வருகிறார். இந்நிலையில் அவர் முனுபியா என்ற இடத்தில் ஆதரவு திரட்டி விட்டு காரில் வீட்டிற்கு புறப்பட்ட போது, முகமூடி அணிந்த 3 மர்ம மனிதர்கள் துப்பாக்கிகளுடன் வந்து அவரை வழிமறித்தனர். பின்னர் அவரது தலையில் தாக்கி விட்டு தப்பி ஓடி விட்டனர்.
இதில் பலத்த காயம் அடைந்த அவர் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பிரசார குழு உறுப்பினர் அகமது ஒசாமா தெரிவித்தார்.
மாலியில் அரசுக்கு எதிராக உள்நாட்டு கலவரம் வெடித்தது: ஒரு லட்சம் பேர் அகதிகளாக ஓட்டம்.
ஆப்பிரிக்க நாடான மாலியில் வடக்கு பகுதியில் வாழும் தாரக் என்ற பழங்குடி மக்கள் அரசுக்கு எதிராக போராட தொடங்கியுள்ளனர்.ஆப்பிரிக்க நாடான மாலியில் வடக்குப் பகுதியில் தாரக் என்ற பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் வடக்கு பகுதியை பிரித்து தங்களுக்கு தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக அந்நாட்டு அரசிடம் முறையிட்டு வந்தனர்.
இந்நிலையில் அவர்கள், அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராட தொடங்கியுள்ளனர்.இதற்கு முன்பு தாரக் பழங்குடி மக்களில் பலர், லிபியாவுக்கு சென்று ஜனாதிபதி கடாபி இராணுவத்தில் கூலிப்படை வீரர்களாக பணியாற்றினர்.
ஜனாதிபதி கடாபி கொல்லப்பட்டதையடுத்து அவர்கள் சொந்த நாடு திரும்பி விட்டனர். வரும்போது தாங்கள் வைத்திருந்த ஆயுதங்களையும் கையோடு கொண்டு வந்தனர். தற்போது அந்த ஆயுதங்கள் இவர்களுக்கு உதவியாக உள்ளது.இந்த ஆயுதங்களை வைத்து அரசுக்கு எதிராக தங்களுடைய போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இவர்களைத் தொடர்ந்து அந்நாட்டு அரசும் இராணுவ விமானங்கள் மூலம் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மாலியில் உள்நாட்டு கலவரம் வெடித்துள்ளது.
இந்த கலவரத்தில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இதனால் அந்த பகுதி மக்கள் உயிர் பிழைக்க அகதிகளாக வேறு இடங்களுக்கு செல்கிறார்கள்.இதுவரை 1 லட்சத்து 60 ஆயிரம் பேர் அகதிகளாக சென்றுள்ளனர். அவர்களில் 60 ஆயிரம் பேர் மாலியிலேயே வேறு இடங்களுக்கு அகதிகளாக சென்றுள்ளனர்.மற்றவர்கள் முரிட்டானியா, நைஜர், புர்கினாபாசோ ஆகிய நாடுகளுக்கு அகதிகளாக சென்றுள்ளனர்.
சவுதியில் இளைஞருக்கு தலையை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றம்.
சவுதி அரேபியாவில் போதை மருந்தை கடத்திய இளைஞர் ஒருவரின் தலையை துண்டித்து மரண தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.சவுதி அரேபியாவில் போதை கடத்தல், கொலை, உடல் ரீதியாக பெண்களை துன்புறுத்துதல் மற்றும் சிறு குற்றங்களுக்கு கூட மரண தண்டனை அளிக்கப்படுகிறது.கடந்த ஆண்டு மட்டும் 79 பேருக்கு சவுதி அரசு மரண தண்டனை நிறைவேற்றி உள்ளது என்று சர்வதேச பொது மன்னிப்பு கழகம் புள்ளிவிவரம் வெளியிட்டுள்ளது.
மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் போதை பொருள் கடத்திய குற்றத்துக்காக சவுதி அரேபியாவை சேர்ந்த வாகித் அடாவி என்பவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.இதுகுறித்து சவுதி உள்துறை அதிகாரிகள் கூறுகையில், ஆஷிஷ் போதை பொருளை கடத்தியதாக வாகித் ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவருடைய தலை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது என்று தெரிவித்தனர். இதன்மூலம் இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 9 பேருக்கு சவுதியில் மரண தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமல்லாமல் பெண்களுக்கும் கடும் கட்டுப்பாடுகள் உள்ளது. இதில் பெண்கள் கார் ஓட்டுவது, ஆண் துணையில்லாமல் பொது இடங்களுக்கு செல்வது உள்ளடங்கும், வாக்களிக்கவும் உரிமை மறுக்கப்பட்டது.அதன்பின் கடும் போராட்டத்துக்கு பின்னர் தேர்தலில் போட்டியிடவும், வாக்களிக்கவும் சமீபத்தில் பெண்களுக்கு உரிமை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கேமரூனில் 458 யானைகளின் சடலங்கள் கண்டுபிடிப்பு.
ஆப்ரிக்க நாடான கேமரூனில் 458 யானைகளின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு தேசிய வனவிலங்கு சரணாலயத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.மத்திய ஆப்ரிக்க நாடுகளில் உள்ள வேட்டைக்காரர்கள் தந்தங்களுக்காக யானைகளை கொல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.யானைகளின் தந்தங்கள் கிழக்காசிய நாடுகளில் குறிப்பாக சீனாவில் அதிகமான விலைக்கு போகும் என்பதால் வேட்டைக்காரர்கள் யானைகளை அழித்து வருகின்றனர்.
ஆப்ரிக்கா நாடான கேமரூனில், கடந்த சில வாரங்களில் மட்டும் 458 யானைகளின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அங்குள்ள பௌபா இன்ஜெடா தேசிய வனவிலங்கு சரணாலயத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.தற்போது கேமரூனின் வடபகுதியில் வறண்ட வானிலை நிலவுவதால், யானை வேட்டையர்களுக்கு சரியான நேரமாக அமைந்துள்ளது.
மேலும் அண்டை நாடுகளில் இருக்கும் யானைகளின் எண்ணிக்கை கடந்த சில வருடங்களாக குறிப்பிடத்தகுந்த அளவுக்கு குறைந்துள்ளதால், வேட்டைக்காரர்களின் கவனம் கேமரூன் நாட்டிலுள்ள இந்த இன்ஜெடா சரணாலயத்தின் பக்கம் திரும்பியுள்ளது.இதற்கு சூடான் மற்றும் சாட் நாட்டிலுள்ள வேட்டைக்காரர்கள் மீதே உயிரினங்கள் நல ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.இவர்கள் குதிரைகளில் வந்து சிறு குழுக்களாக பிரிந்து யானைகளை வேட்டையாடிவிட்டு விரைவாக சென்று விடுகிறார்கள்.
குட்டியானைகள் உட்பட தற்போது 458 யானைகளின் சடலங்களை தாங்கள் கண்டுபிடித்திருந்தாலும், யானைகள் உலாவும் பகுதி மிகப் பெரிய அளவிலானது என்பதால், மேலும் கூடுதலான யானைகள் கொல்லப்பட்டிருக்கக் கூடும் எனவும் கேமரூன் நாட்டு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.கேமரூனின் வடபகுதி முழுவதிலும் ஆயிரத்துக்கும் குறைவான யானைகளே இருப்பதாக கருதப்படும் நிலையில், இந்தப் பகுதியில் உள்ள யானைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF