Wednesday, February 15, 2012

NEWS OF THE DAY.

பொய் வாக்குறுதி அளித்த அரசாங்கத்தை கவிழ்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ரணில்.
போர் முடிவின் பின்னர் நிவாரணங்களை வழங்குவதாக அரசாங்கம் பொய் வாக்குறுதிகளை அளித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
வறியவர்களுக்கு உச்சளவில் சலுகை வழங்குவதாக போலி வாக்குறுதி அளித்த இந்த அரசாங்கம், மக்களை பெரும் நெருக்கடிக்குள் ஆழ்த்தியுள்ளது.1956 மற்றும் 1977 களில் ஆட்சி நடத்திய அரசாங்கங்களை கவிழ்த்ததனைப் போன்று 2012 இலும் அரசாங்கத்தை கவிழ்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசாங்கத்தின் ஊழல் மோசடிகளினால் நாட்டில் பொருட்களுக்கான விலைகள் உயர்வடைந்துள்ளன. அரசாங்கப் பிரமுகர்கள் மாதாந்தம் வெளிநாட்டு விஜயங்களை மேற்கொள்கின்றனர்.
பெரும் எண்ணிக்கையிலான பிரதிநிதிகள் இந்தக் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.
இவ்வாறான விஜயங்களுக்காக பெருந்தொகை மக்கள் பணம் செலவிடப்படுகின்றது. திருடர்கள், சட்டவிரோத வர்த்தகர்களுடன் அரசாங்கம் கொடுக்கல் வாங்கல் செய்கின்றது என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் உலக சந்தையை பயன்படுத்தி நாட்டு மக்களை சுரண்டுகிறது: ஜே.வி.பி
மக்களுக்கு துரோகம் இழைக்கும் இந்த அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் அணி திரள வேண்டுமென ஜே.வி.பி. கிளர்ச்சிக்குழு உறுப்பினர் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலையேற்றத்திற்கு நிகராக பஸ் கட்டணங்கள் உயர்த்தப்பட்டமை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. எரிபொருளுக்கு விலை உயர்த்தப்பட்டால் ஏனைய அனைத்து பொருட்களுக்கும் விலை உயரும் என்பது வெளிப்படையான உண்மையாகும்.
உலக சந்தையில் எரிபொருளின் விலை 10 வீதத்தினால் உயர்த்தப்பட்டால், இலங்கையில் 25 வீதத்தினால் விலை உயர்த்தப்படுகின்றது.இந்த அரசாங்கம் உலக சந்தை விலையை பயன்படுத்தி நாட்டு மக்களை சுரண்டுகின்றது. தேசப்பற்று என்பது மக்களை நேசிக்கும் பழக்கத்தையே குறிக்கின்றது என புபுது ஜாகொட சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடளாவிய ரீதியில் பலத்த காற்றுடன் மழை பெய்யலாம்!- வானிலை அவதான நிலையம்.
நாடளாவிய ரீதியில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்வதற்காக சாத்தியக் கூறுகள் காணப்படுவதாகவும் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் வானிலை அவதான நிலையத்தின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
வடக்கு மற்றும் தென் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் இது குறித்து, மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் எரிபொருள் விலையேற்றத்தை தொடர்ந்து மின்சாரக் கட்டணம் உயர்வு.
இலங்கையில் எரிபொருள் விலையேற்றத்தைத் தொடர்ந்து, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மின்சாரக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.இதன்படி, 01 முதல் 30 வரையிலான அலகுகளுக்கு 25 வீதம் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், 31 முதல் 60 வரையிலான அலகுகளுக்கு 35 வீதம் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.60திற்கும் அதிகமான அலகுகளைப் பயன்படுத்தும் நுகர்வோரின் மின்சாரக் கட்டணம் 40 வீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக பொது பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதனிடையே, விடுதிகள், தொழிற்சாலைகள் போன்ற வர்த்தக பாவனையாளர்களுக்கு 15 வீத எரிபொருள் கட்டணமும் மின்சாரக் கட்டணத்துடன் சேர்க்கப்பட்டுள்ளது.அத்துடன், பொது சேவைகள் மற்றும் அரசாங்க பல்கலைக் கழகங்கள், தொழில் பயிற்சி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு 25 வீதமும் மேலதிக எரிபொருள் கட்டணம் அறவிடப்படும்.
இதேவேளை வணக்கஸ்தலங்கள், அரச வைத்தியசாலைகள், அரசாங்க பாடசாலைகள் மற்றும் வீதி விளக்கு மின்சாரப் பாவனைக்கு இந்தக் கட்டணம் அறிவிடப்படமாட்டாது என்று இன்று பிற்பகல் இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது ஆணைக்குழுவின்   தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார்இதேவேளை, எரிபொருள் விலையேற்றத்தை எதிர்த்து இன்று நாடு தழுவிய ரீதியில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.ஜே.வி.பி கட்சி தற்போது மருதானையில் ஆர்ப்பாட்டமொன்றை தற்போது நடத்தி வருகின்றது.
ஆப்கானிஸ்தானுக்கு புதுப்படை கிளம்புகிறது.
ஆப்கானிஸ்தானின் தீவிரவாதிகளை ஒடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள கனடா இராணுவப் படை மேலும் நூறு வீரர்களை ஆப்கானுக்கு அனுப்புகின்றது.கனடாவிலிருந்து ஆப்கானிஸ்தானத்துக்கு எதிர்வரும் திங்கள்கிழமை இரவு மேலும் நூறு வீரர்கள் புறப்படுகின்றனர். இதற்கு முன்பாக வீரர்கள் அனைவரும் நியு பிரன்ஸ்விக்கில் அமைந்துள்ள இராணுவத் தளத்தில் தனது குடும்பத்தாருடன் கூடி மகிழ்கின்றனர்.
காபூல் நகரைச் சுற்றி ஏற்கனவே சுமார் 950 கனடா வீரர்கள் கடந்த ஜீலை மாதம் முதல் தங்கியுள்ளனர். ஆப்கான் காவல்துறை மற்றும் தேசிய இராணுவப் படைக்குப் பயிற்சி அளிப்பதோடு மட்டுமில்லாமல் அங்குள்ள மருத்துவமனைப் பணியாளர்களுக்கும் பயிற்சி அளிக்கின்றனர்.
ஈரானுக்கு அருகில் உள்ள ஆப்கான் எல்லைப்பகுதியில் தங்கியுள்ள வீரர்கள் வடக்கே மஸார் இ ஷரீஃப் நகரிலும், மேற்கே ஹீராத் நகரிலும் முகாம் அமைத்துள்ளனர். இங்கு சுழல் முறையில் வரும் கனடா வீரர்கள் எட்டு மாதம் தங்கி பயிற்சி அளிக்க உள்ளனர்.இதற்கு முன்பு நடந்த வன்முறைத் தாக்குதலில் பைரன் கிராஃப் என்பவரும் மற்றும் ஒரு படைவீரரும் பலியாயினர், நியு புரன்ஸ்விக் பல்கலைக்கழகத்தின் துணை இயக்குநரான லீ விண்டசார், கனடா வீரர்களின் உயிர்த்தியாகங்கள் ஆப்கான் இராணுவ வீரர்களிடையே பெருமதிப்பைப் பெற்றிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானுடன் கனடா பயிற்சியில் ஈடுபட்டிருந்தாலும் தலிபான்களுடன் பேச்சவார்த்தையும் நடத்திக் கொண்டிருக்கின்றது. ஆப்கானிஸ்தானில் வாழும் பொதுமக்கள் 3021 பேர் கடந்த வருடம் தலிபான்களால் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வு முந்தைய வருடத்தை விட 8 சதவீதம் அதிகமாகும்.கனடா தனது பயிற்சியை முடித்துக் கொண்டு எதிர்வரும் 2014ஆம் ஆண்டு முழுமையாக ஆப்கானிஸ்தானத்தை விட்டு வெளியேறும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐரோப்பிய நாடுகளுக்கு நிச்சயம் உதவி செய்வோம்: சீனா.
ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதில் நிச்சயம் உதவி செய்வோம் என சீனா உறுதியளித்துள்ளது. ஆனால் அது எந்த வகையான உதவி என்பதை தெளிவுபடுத்தவில்லை.
இந்நிலையில் இத்தாலி, ஸ்பெயின், போர்ச்சுக்கல் நாடுகளின் கடன் மதிப்பீட்டுக் குறியீடுகளை குறைத்துள்ள மூடிஸ் நிறுவனம் பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் ஆஸ்திரியா நாடுகளின் குறியீடுகளைக் குறைக்கப் போவதாக அறிவித்துள்ளதால், யூரோ மண்டலம் மேலும் சிக்கலில் ஆழ்ந்துள்ளது.யூரோ பொருளாதார நெருக்கடியில் சீனா 500 பில்லியன் யூரோ(665 பில்லியன் டொலர்) நிதியுதவி செய்ய வேண்டும் என ஐரோப்பிய கூட்டமைப்பு கோரிக்கை விடுத்தது.
இந்நிலையில் நேற்று சீன தலைநகர் பீஜிங்கில், ஐரோப்பிய கூட்டமைப்பின் ஒரு செயற்குழுவான ஐரோப்பிய கமிஷன் தலைவர் ஜோஸ் மேனுவல் பராசோ மற்றும் கூட்டமைப்பின் ஒரு நிறுவனமான ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் ஹெர்மன் வேன் ரோம்பி இருவரும் சீன பிரதமர் வென் ஜியாபோவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.பேச்சு முடிந்த பின் மூவரும் கூட்டாக அளித்த பேட்டியில், யூரோ பொருளாதார நெருக்கடிக்கு சீனா நிச்சயம் உதவி செய்யும். ஐரோப்பிய கூட்டமைப்புடன் தனது ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதை சீனா விரும்புகிறது என்றார்.
வெளிநாடுகளில் 3 டிரில்லியன் டொலர் அளவிற்கு முதலீடு செய்துள்ள சீனா, ஐரோப்பாவுடன் மட்டும் 560 பில்லியன் யூரோ அளவுக்கு வர்த்தகத் தொடர்பு மேற்கொண்டுள்ளது.இதற்கு முன்பு நடந்த கூட்டங்களில் தனது மிகப் பெரிய சந்தையான ஐரோப்பா நெருக்கடியில் சிக்குவதை சீனா விரும்பவில்லை என்பதை அந்நாடு சுட்டிக் காட்டியுள்ளது.
ஆனால் அன்று தொடங்கி நேற்று நடந்த பேச்சு வரை யூரோ நெருக்கடிக்கு எவ்விதத்தில் உதவி செய்யப் போகிறது என்பதைப் பற்றி சீனா தெளிவாக சொல்லவில்லை.மேலும் கணணி ஊடுவலில் இருந்து பாதுகாப்பு முதல் நகர்ப் புற மேம்பாடு வரை 31 விஷயங்களில் சீனாவும், ஐரோப்பாவும் ஒப்பந்தம் மேற்கொண்டதாக குறிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த 31 விஷயங்களில் கடன் நெருக்கடி குறிப்பிடப்படவில்லை.
உணவுப் பொருட்களை கொண்டு செல்ல பாகிஸ்தான் அனுமதி.
வான்வெளி மூலமாகவும், தரைவழி மூலமாகவும், எல்லைவழியாகவும் ஆப்கானில் உள்ள நேட்டோ படைகளுக்கு உணவுப் பொருட்களை கொண்டு செல்ல பாகிஸ்தான் அனுமதி அளித்துள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் சவுத்ரி அகமது முக்தார் கூறுகையில், ஆப்கானிஸ்தானில் உள்ள நேட்டோ படைகளுக்கு உணவு பொருட்களை கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.உணவு பொருட்கள், அழுகும் தன்மையுள்ள பொருட்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க வான்வெளி மற்றும் தரைவழியில் டிரக் மூலம் கொண்டு செல்ல இந்த அனுமதி வழங்கப்பட்டது என கூறினார்.
இந்த அனுமதி எப்போது வழங்கப்பட்டது என்ற தகவலை அவர் கூற மறுத்து விட்டார். கடந்தாண்டு நவம்பர் மாதம் 26ம் திகதி நேட்டோ படை தாக்குதலில் பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் 24 பேர் பலியானதை தொடர்ந்து தனது எல்லையை பாகிஸ்தான் அடைத்தது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானுக்கு ரூ.11 ஆயிரம் கோடி நிதியுதவி: அமெரிக்கா திட்டம்.
2013ம் ஆண்டிற்கான அமெரிக்காவின் நிதிநிலை அறிக்கையை ஜனாதிபதி ஒபாமா தயாரித்துள்ளார்.இதில் வெளிநாடுகளுக்கு மொத்தமாக ரூ.41 ஆயிரம் கோடியை ஒதுக்கீடு செய்ய தீர்மானித்துள்ளார், பாகிஸ்தானுக்கு ரூ.11 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.
தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை மற்றும் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்காக இந்த நிதியுதவி வழங்கப்படுகிறது.இந்த திட்ட மதிப்பீடு விரைவில் நாடாளுமன்ற பிரதிநிதிகளின் ஒப்புதல் பெற அனுப்பி வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிரியாவின் பொது மக்களை துன்புறுத்தும் கனடிய பிரதமர்.
கனடாவின் பொருளாதாரத் தடை குறித்து சிரியாவின் உயரதிகாரி பஷார் அக்விக் கண்டனம் தெரிவித்துள்ளார். சிரியாவின் உயர்மட்ட அதிகாரிகளுள் ஒருவரான பஷார் அக்விக் கூறுகையில், கனடாவின் பிரதமர் ஹார்ப்பர் சிரியா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்துப் பொது மக்களைத் துன்புறுத்துவதாக தெரிவித்துள்ளார்.இதற்கிடையில் ஐ.நா.வின் மனித உரிமை தலைவரான நவி பிள்ளை, சிரியாவின் இராணுவம் மனித நேயத்துக்கு எதிரான பல கொலைக்குற்றங்களில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிவித்தார்.
ஆனால் நவிபிள்ளையின் இந்த குற்றச்சாட்டை பஷார் அக்விக் வன்மையாக மறுத்துள்ளார்.அவர் கூறியதாவது, பொதுமக்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்கொடுமை பற்றிய ஒளிப்பேழைகள் சிரியாவின் எதிரிகளால் புனையப்பட்ட ஹாலிவுட் சித்திரங்கள் என்று தெரிவித்துள்ளார்.
சர்கோசியின் அறிவிப்பு குறித்து சோசலிஸ்ட் கட்சி கிண்டல்.
பிரான்சின் தற்போதைய ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியிடுவதில் தங்களுக்கு ஆர்வம் ஏதும் இல்லை என்று சோசலிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.மேலும் எந்த முக்கியத்துவமும் கிடையாது என தெரிவித்துள்ளது. தனது அறிவிப்பை அடுத்த மாதம் அறிவிக்கப் போவதாகச் சொன்ன சர்கோசி, தற்போது இந்த வாரமே அறிவிக்கப் போவதாகக் கூறியுள்ளார்.
இவரது அறிவிப்பை ஊடகங்கள் ஆவலோடு எதிர்பார்த்துள்ளன. ஆனால் இதுபற்றி தங்களுக்கு எந்தவித ஆவலும் இல்லை என்று சோசலிசக்கட்சி தெரிவித்துள்ளது.சோசலிசக் கட்சியின் செய்தித்தொடர்பாளரான பெனோய்ட் ஹெமோன் கூறுகையில், தங்கள் கட்சி சர்கோசியின் அறிவிப்பை அமைதியாக எவ்விதப் பதற்றமின்றி ஏற்கத் தயாராக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.மேலும் இது ஒரு வழக்கமான அறிவிப்பு தான் என்றும், சர்கோசி இந்த அறிவிப்பை வெளியிடும்போது அவரைச் சுற்றி ஒளிவட்டம் எதுவும் தெரியப்போவதில்லை எனவும் கிண்டலாக கூறியுள்ளார்.
சிரியாவுக்கு எதிராக மேலும் பல தடைகள்: ஜேர்மன் பிரதமர் ஆதரவு.
ஐரோப்பிய ஒன்றியம், சிரியா மீது அரபுக்கூட்டமைப்பு எடுத்திருக்கும் நடவடிக்கைகளை முழுமையாக ஆதரிக்கின்றது என்று ஜேர்மானியப் பிரதமர் ஏஞ்செலா மெர்கெல் தெரிவித்துள்ளார்.சிரியாவில் நடந்து வரும் வன்கொடுமைகளை ஒரு முடிவுக்குக் கொண்டு வர அரபுக் கூட்டமைப்பு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தன் முழு ஆதரவைத் தரவேண்டும் என ஜேர்மனி கேட்டுக் கொண்டுள்ளது.
சிரியாவுக்கு ஒரு சமாதானப் படையை அனுப்புமாறு அரபுக் கூட்டமைப்பில் உள்ள 22 உறுப்பினர்களும் ஐ.நா.விடம் கோரிக்கை அளிக்க சம்மதித்துள்ளனர்.கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரை 6000 பேர் கொல்லப்பட்டிருப்பதால் இனியும் இந்நிலை நீடிப்பதை அரபு கூட்டமைப்பு விரும்பவில்லை.சிரியா மீது அரபு கூட்டமைப்பு எடுத்திருக்கும் நடவடிக்கைகளை ஐரோப்பிய ஒன்றியம் ஆதரிப்பதாக ஜேர்மானிய பிரதமர் ஏஞ்செலா மெர்கெல் தெரிவித்துள்ளார்.
மேலும் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைத் துறையின் தலைவராக உள்ள கேத்தரீன் அஷ்டோனின் செய்தித் தொடர்பாளரான மிக்கேல் மேன், வருகிற 27ம் திகதி முதல் சிரியாவின் இராணுவத்திற்கு எதிராக புதிய தடைகளை விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்டிருப்பதாகக் கூறியுள்ளார்.கடந்த வாரம் ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசுப் பிரதிநிதிகள், சிரியாவின் மத்திய வங்கிக் கணக்கு, தங்கம் மற்றும் நவரத்தின விற்பனைகளுக்கு தடை விதித்ததாக தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
என்னை கொல்ல சதித் திட்டம் தீட்டினர்: முகமது நஷீத் தகவல்.
மாலைதீவில் திடீரென ஏற்பட்ட மக்கள் புரட்சியின் காரணமாக ஜனாதிபதியாக இருந்த முகமது நஷீத் பதவி விலகினார்.இதையடுத்து துணை ஜனாதிபதியாக பதவி வகித்து வந்த முகமது வாகீத் ஹசன் புதிய ஜனாதிபதியாக பொறுப்பேற்றார்.இந்நிலையில் நான் தானாக முன்வந்து பதவியில் இருந்து விலகவில்லை என்றும், பதவி விலகவில்லை என்றால் என்னை கொலை செய்ய இராணுவம் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் சதித் திட்டம் தீட்டினர் என்றும், எனவே எனது உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காகவே பதவி விலகினேன் எனவும் முகமது நஷீத் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து தற்போது ஜனாதிபதி பதவி வகிக்கும் முகமது வாகீத் ஹசன் பதவி விலக கோரியும், உடனடியாக ஜனாதிபதி தேர்தல் நடத்த கோரியும் தலைநகர் மாலேவில் முகமது நஷீத் பேரணி நடத்தினார். அதில் அவரது மால் தொலைக்காட்சியின் ஜனநாயக கட்சியை சேர்ந்த சுமார் 5 ஆயிரம் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.மேலும் துரோகிகளின் கையில் என் நாட்டு மக்களை ஒப்படைக்க ஒரு போதும் நான் அனுமதிக்க மாட்டேன், உடனே தேர்தல் நடத்தும் வரை பொதுமக்கள் ஓயக்கூடாது. அரசை எதிர்த்து போராட்டம் நடத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
ஹோண்டுரா சிறையில் தீ விபத்து: 272 பேர் பலி.
மத்திய அமெரிக்காவின் ஹோண்டுரா நாட்டில் உள்ள சிறையில் ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரை 272 பேர் உடல் கருகியும், தீ விபத்தால் ஏற்பட்ட புகைமூட்டத்தால் மூச்சுத்திணறியும் பலியாயினர்.உடனே விரைந்த தீயணைப்பு படையினர் பல மணி நேரங்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
பலியான நபர்களில் பெரும்பாலானோர் கடும் புகைமூட்டத்தால் மூச்சுத்திணறியும், தீயில் கருகியும் இறந்துள்ளதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.விபத்தின் போது சில பேர் சிறையின் கூரை மீது ஏறி வெளியே குதித்து, காயத்துடன் உயிர் தப்பியுள்ளனர்.இந்நிலையில் சிறையில் கலவரம் ஏற்பட்டு அதனால் தீ வைக்கப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கின்றனர்.
யுரேனியம் செறிவூட்டலின் நேரடிக் காட்சிகள் வெளியீடு: உலக நாடுகள் அதிர்ச்சி.
யுரேனியம் செறிவூட்டும் பணியில் ஈரான் நாடு அடைந்துள்ள முன்னேற்றம் குறித்த காட்சிகளை நேரடியாக ஒளிபரப்பியதால் உலக நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.ஈரான் தலைநகர் டெஹ்ரான் அருகில் போர்டோ பகுதியில் பூமிக்கடியில் மிக மிக பாதுகாப்பான முறையில் அணு ஆயுதங்கள் தயாரிக்க உதவும் யுரேனியம் செறிவூட்டும் பணியை ரகசியமான மலைப்பகுதியில் ஈரான் நடத்தி வந்தது.
இதற்கு அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில் யுரேனியம் செறிவூட்டும் பணியில் தங்கள் நாடு அடைந்துள்ள முன்னேற்றம் குறித்தும், செறிவூட்டுதலுக்கு பயன்படும் யுரேனிய பிளேட்டுகளை பொருத்தும் காட்சிகளையும் ஈரான் நாட்டின் தேசிய தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.
இப்பணிகளை அந்நாட்டின் ஜனாதிபதி அகமதின்ஜாட் பார்வையிட்டார். அவருடன் ஈரான் அணு விஞ்ஞானிகள் உடன் இருந்தனர். ஈரானின் இந்த செயல் உலக நாடுகளை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.ஈரான் யுரேனியம் செறிவூட்டும் பணியை வெளிப்படையாக ஆரம்பித்திருப்பது அமெரிக்காவிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரானை உலக நாடுகள் தனிமைப்படுத்த வேண்டும் என ஒபாமா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே மற்றொரு அதிர்ச்சியாக, 6 ஐரோப்பிய நாடுகளுக்கு பெட்ரோலிய சப்ளையை ஈரான் நிறுத்தியுள்ளது. ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதால் அந்நாட்டிலிருந்து பெட்ரோல் இறக்குமதியை நிறுத்தப் போவதாக ஐரோப்பிய யூனியன் நாடுகள் அறிவித்திருந்தன.இந்நிலையில் அதற்கு முன்பாகவே ஈரான் தனது பெட்ரோல் சப்ளையை நிறுத்தி ஐரோப்பிய நாடுகளுக்கு அதிர்ச்சியளித்துள்ளது.

வேற்று கிரகவாசிகளை ரகசியமாக சந்தித்தார் அமெரிக்க ஜனாதிபதி.
வேற்று கிரகவாசிகளை அமெரிக்க ஜனாதிபதி சந்தித்துள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.உலகம் முழுவதும் உள்ள அனைவரின் சந்தேகம் வேற்று கிரகவாசிகள் இருக்கின்றனரா? இல்லையா? என்பது தான்.
இந்நிலையில் உலகின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே வேற்று கிரக மனிதர்களோ அல்லது அவர்கள் பறந்து செல்ல பயன்படுத்தும் தட்டு தென்பட்டதாகவோ செய்திகள் வரும். ஆனால் இதுவரை அந்த தகவல்கள் உறுதிப்படுத்தப்படவில்லை.இந்நிலையில் பிபிசி 2 கரண்ட் அபையர்ஸில் பங்கேற்ற அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினரும், பென்டகனின் ஆலேசாகருமான பணிபுரிந்த குட் பேசுகையில், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டிவைட் டி ஐசனோவர் வேற்று கிரக மனிதர்களை மூன்று முறை சந்தித்தார் என்று கூறினார்.
மேலும் எப்பிஐ அதிகாரிகள் டெலிபதி தகவல் பரிமாற்ற முறை மூலம் வேற்று கிரக மனிதர்களை தொடர்பு கொண்டதாகவும், அதனை ஏற்ற வேற்று கிரக மனிதர்கள் அமெரிக்காவின் அன்றைய ஜனாதிபதி டிவைட் டி ஐசனோவரை கடந்த 1954ம் ஆண்டு அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ மாகாணத்தில் உள்ள ஹோல்மென் இராணுவ விமான தளத்தில் மூன்று முறை சந்தித்தனர் எனவும் கூறினார். இந்த சந்திப்பை கண்டதற்கான பல சாட்சிகள் உள்ளன எனவும் கூறியுள்ளார்.ஆனால் குட்டின் இந்த பேச்சை அமெரிக்க அதிகாரிகள் இதுவரை மறுக்கவில்லை. இதன் மூலம் வேற்று கிரகவாசிகள் உள்ளனர் என்ற செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF