Tuesday, February 14, 2012

NEW OF THE DAY.

தென் ஆசியாவில் எரிபொருள் விலை உயர்ந்த நாடு இலங்கையாகும் - கரு ஜயசூரிய.
தென் ஆசியாவில் எரிபொருள் விலை மிகவும் அதிகமான நாடாக இலங்கை காணப்படுகின்றது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.ஆசியாவின் ஆச்சரியமாக மாற்றும் முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ள போதிலும், தென் ஆசியாவிலேயே அதிக விலைக்கு எரிபொருள் விற்பனை செய்யப்படும் நாடாக இலங்கை மாறியுள்ளது.அரசாங்கத்திற்கு இது அதிசயமாக இருந்த போதிலும் பொதுமக்களுக்கு பெரும் துன்பமாக அமைந்துள்ளது.
வீண் விரயம், ஊழல் மோசடி போன்றவற்றினால் ஏற்படும் நட்டத்தை மக்கள் பொறுப்பேற்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.இந்தநிலையில், அரசாங்கத்தின் நடவடிக்கைகள் வேடிக்கை பார்ப்பதனை விடவும் ஜனநாயக வழிமுறைகளில் போராட்டங்களை நடத்துவதே மிகவும் உசிதமான நடவடிக்கையாகும் என கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
உலக சந்தையில் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்படவில்லை!- ஐக்கிய தேசியக் கட்சி.
உலக சந்தையில் எரிபொருட்களின் விலை அதிகரிக்காத நிலையில் அரசாங்கம் எரிபொருட்களின் விலையை உயர்த்தியிருப்பதானது முறையற்ற செயல் என தெரிவிக்கும் கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளருமான தயா கமகே உடனடியாக எரிபொருட்களின் விலைகளை குறைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
அரசாங்கத்தின் இவ்வாறான முறையற்ற செயற்பாடுகளினால் நாட்டின் பொருளாதாரம் பாரிய வீழ்ச்சியடைவதுடன் பொதுமக்கள் மீதான சுமை மேலும் அதிகரிக்கும் என அவர் வீரகேசரிக்குத் தெரிவித்தார்.
"உலக சந்தையில் தற்போது நிலவுகின்ற எரிபொருளின் விலைக்கேற்ப அரசாங்கம் 1 லீற்றர் டீசலினை 99 ரூபாவுக்கும், மண்ணெண்ணெயை 89 ரூபாவுக்கும் பெற்றோலினை 110 ரூபாவுக்கும் வழங்க முடியும். இந்த விலையானது 30 சதவீத இலாபத்தினை உள்ளடக்கியது.
முறையான பொருளாதார கொள்கையின்றி பல்வேறு திட்டங்களையும் செயற்பாடுகளையும் முன்னெடுப்பதால் அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுகிறது. அத்தோடு அரசாங்கத்தில் அங்கம் வகிப்பவர்கள் மக்கள் சொத்தை சூறையாடுகின்றனர்.இறுதியில் இவற்றையெல்லாம் ஈடு செய்வதற்கு அத்தியாவசிய பொருட்களின் விலைகளை நினைத்த விதத்தில் அதிகரித்து மக்கள் மீது மேலும் மேலும் சுமையேற்றுகின்றது.
தேசத்துக்கு மகுடம் நிகழ்வின் மூலம் அரசாங்கத்திற்கு 2 ஆயிரம் மில்லியன் ரூபா செலவு ஏற்பட்டுள்ளது. மிஹின் லங்கா நிறுவனம் தொடர்ந்தும் நட்டத்தில் இயங்குகிறது. அத்தோடு அரசாங்கம் ஆரம்பித்துள்ள பல்வேறு வேலைத்திட்டங்கள் இவ்வாறு நட்டத்திலேயே இயங்குகின்றன.இந்த நிலைமை தொடருமானால் நாட்டின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
மின்சாரக் கட்டணமும் அதிகரிக்கிறது!- மக்கள் போராட்டங்களை ஒடுக்க இராணுவம் தயார் நிலையில்!
பெற்றோலிய பொருட்களின் விலையேற்றத்தால், இலங்கையில் போராட்டங்கள் வெடித்துள்ளன. மலையக மக்களை அணிதிரட்டிப் போராட முன்வருமாறு ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் அவர்கள் அறைகூவல் விடுத்துள்ளார்.இந்த விலையேற்றத்தால் அதிகம் பாதிப்படையப் போவது யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வட-கிழக்கு மக்களும், மலையகத் தமிழ் மக்களுமே. இந்தச் சுமையோடு, இன்னுமொரு பெரும்சுமையையும் மக்கள் மீது திணிக்கப்போகிறது சிங்களப் பேரினவாத அரசு.
அதுதான் மின்சாரக் கட்டண உயர்வு. அதிகரிக்கும் இழப்பினை ஈடு செய்ய, மின்சாரக் கட்டணத்தை உயர்த்தும்படி , அதன் கட்டுப்பாட்டாளர்களை நச்சரித்துக் கொண்டிருக்கிறது இலங்கை மின்சார சபை.சபையின் இந்த ஆண்டிற்கான உத்தேச வரவு-செலவு திட்டத்தில், செலவு 179 .05 பில்லியன் ரூபாய் எனவும், வரவு 146 .61 பில்லியன் ரூபாயாகவும் இருக்குமெனக் குறிப்பிடப்பட்டதோடு, மொத்த நட்டம் 23 பில்லியன் ரூபாய் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பெட்ரோல் விலை உயர்வால், மின்சார சபையின் மொத்த செலவு 218 பில்லியன் ரூபாவாக மாற்றமடைவதோடு, 79 பில்லியன் ரூபாய் நட்டம் ஏற்படுமென்று அதன் செயலாளர் எம்.எம்.சி. பெர்னாண்டோ தெரிவிக்கின்றார்.
உதாரணமாக, ஒரு லீட்டர் டீசலின் விலை 76 ரூபாயிலிருந்து 115 ரூபாவாக அதிகரிப்பதால், டீசலை மட்டும் பயன்படுத்தும் 'களனி திஸ்ஸ' மின்னுற்பத்தி நிலையத்திற்கு நட்டம் அதிகம்.அத்தோடு 40 ரூபாவிலிருந்து 65 ரூபாவாக உயரும் உலை எண்ணெயின் விலை, 'கெரவலபிட்டிய' மின் உற்பத்தி மையத்தையும் பாதிக்கும்.
ஆகவே சபைக்கு ஏற்படும் நட்டத்தைக் குறைக்க, மின்சாரக் கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலைக்குள் அரசு தள்ளப்படுகிறது. இருந்தாலும் எல்லாச் சுமைகளும் இறுதியில் மக்கள் மீதே இறக்கிவைக்கப்படும் என்பதை சொல்லத் தேவையில்லை.ரூபாவின் மதிப்பு இறங்கியுள்ள நிலையில், இன்னும் பல அதிரடியான கட்டண உயர்வுகள் வரப்போகின்றன. அதற்கு எதிராகப் போராட மக்கள் தயாரா?. அப்போராட்டங்களை, தம்பி கோத்தபாயவின் இராணுவத்தின் துணையோடு ஒடுக்க முற்படுவார் மகிந்தர்.
பிரித்தானியாவில் கல்வி கற்க புதிய ஒழுங்கு விதிகள் அறிமுகம்! தங்கியிருந்து தொழில் புரிய தடை!
பிரித்தானியாவில் கல்வி கற்பதற்காக செல்லும் மாணவர்களுக்கு, மாணவர் விசாவுக்கான புதிய ஒழுங்கு விதிகள் எதிர்வரும் ஏப்ரல் மாதத்திலிருந்து அறிமுகப்படுத்தப்படுமென பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம் இன்று விடுத்த ஊடக அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அறிமுகப்படுத்தப்படும் புதிய விதிகள் மூலம் பிரித்தானியாவில் கல்வி கற்ற பின் 2 வருடங்கள் தங்கியிருந்து தொழில் புரிவதற்கான வாய்ப்புக்கள் நிறுத்தப்படும் எனவும் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெறும் சிறந்த மாணவர்களுக்கு மாத்திரமே தங்கியிருப்பதற்கான வாய்ப்புக்கள் வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஏப்ரல் 6 ஆம் திகதியின் பின் பட்டம் பெறும் மாணவர்கள் பிரித்தானிய எல்லை முகவரகத்தினால் அங்கீகரிக்கப்படும் நிறுவனமொன்றினால் 20,000 ஸ்ரேலிங் பவுண் அல்லது அதற்கு அதிகமான சம்பளத்தில் தொழில்வாய்ப்பை பெற வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த ஒழுங்குவிதிகள் மூலம் துஷ்பிரயோகங்கள் குறைக்கப்படும் எனவும் புத்திசாலித்தனமான சிறந்த மாணவர்கள் மாத்திரம் பிரிட்டனில் தங்கியிருப்பதையும் வேலை செய்வதையும் இது உறுதிப்படுத்தும் எனவும் பிரித்தானிய குடிவரவு அமைச்சர் டேனியன் கிறீன் தெரிவித்துள்ளார்.
தனியார் பேருந்து பகிஷ்கரிப்பினால் மக்களை வாகனங்களில் ஏற்றிய இராணுவத்தினர்.
தனியார் பஸ் சேவை புறக்கணிப்பு காரணமாக நேற்று நாடு தழுவிய ரீதியில் போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்திருந்தது. அலுவலகங்கள் மற்றும் வேலைத் தளங்களுக்கு பல மணி நேரம் கால்கடுக்க காத்திருந்து வருகை தந்தவர்கள் மீண்டும் வீடுபோய்ச் சேர முடியாது நேற்று மாலை பெரும் அவலப்பட்டனர்.கொழும்பு உட்பட முக்கிய நகரங்களில் ஒவ்வொரு பிரதான பஸ் நிலையங்களிலும் இராணுவத்தினரும், பொலிஸாரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டு அப்பாதையால் செல்லும் பஸ் மற்றும் லொறிகள், வாகனங்கள் மறிக்கப்பட்டு அவற்றில் பயணிகள் ஏற்றி அனுப்பப்பட்டனர்.
கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக பெருந்திரளான மக்கள் வீடுகளுக்கும் ஏனைய பணிகளுக்கும் செல்ல முடியாது பல மணி நேரம் திண்டாடினார்கள்.வரும் அரசு போக்குவரத்து பஸ்களிலும் பெருந்தொகையான பயணிகள் மிதிபலகையில் தொங்கிய வண்ணமே பயணித்தனர். இவ்வாறான பஸ்களை கூட நிறுத்தி கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக நின்று கொண்டிருந்த பயணிகளை ஏற்றி இராணுவத்தினர் அனுப்பி வைத்தனர்.
அத்தோடு கோட்டை புகையிரத நிலையம் பொது மக்களால் நிரம்பி வழிகையில் குணசிங்கபுர, தனியார் பஸ் தரிப்பிடம் வெறிச்சோடிக் காணப்பட்டது.மருதானை புகையிரத நிலையத்தில் வீடுகளுக்கு செல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருந்த மக்களை பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து லொறிகளிலும் ஏனைய பிரத்தியேக வாகனங்களில் அனுப்பி வைத்துள்ளனர்.
இந்தியா, சீனா தொழிலாளர்கள் வேண்டாம்: ஒபாமா.
அமெரிக்க நிறுவனங்களுக்கு இந்தியா, சீனாவிலிருந்து திற‌மையான தொழிலாளர்கள் வேண்டாம் என அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா தெரிவித்துள்ளார்.அதாவது பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் விஞ்ஞானம் போன்ற துறைகளுக்கு தேவையான திறமையான ‌தொழிலாளர்கள் இந்தியா, சீனா உட்பட நாடுகளிலிருந்து வேண்டாம் ‌என்றும் அமெரிக்க மாணவர்களுக்கு சிறந்த பள்ளிகள் மற்றும் ஆசிரியர்கள் தேவை என்றும் ஒபாமா தெரிவித்துள்ளார்.
2013ஆம் நிதி ஆண்டு பட்ஜெட் திட்ட அறிக்கையை காங்கிரசுக்கு அனுப்பிய பின் இவ்வாறு ஒபாமா தெரிவித்தார்.
தாய்லாந்தில் காதலர் தினப் போட்டி: கின்னஸ் சாதனைக்கு முயற்சி.
தாய்லாந்து நாட்டில் உள்ள பட்டாயா பீச்சில் 2 நாட்களாக காதலர் தினத்தை முன்னிட்டு கின்னஸ் சாதனைக்காக முத்தம் கொடுக்கும் போட்டி நடந்து வருகின்றது.தாய்லாந்து நாட்டில் பாங்காக் நகரில் இருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ளது பட்டாயா பீச். இங்கு 7 ஜோடிகள் கின்னஸ் சாதனைக்காக முத்தம் கொடுக்கும் போட்டியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த போட்டி நேற்று ஆரம்பித்து இன்று காதலர் தினம் வரை நடக்கும். ஒவ்வொரு ஜோடிக்கும் தனித்தனியே ஒரு சதுரமீட்டர் இடம் ஒதுக்கப்பட்டு இந்தப்போட்டி நடக்கிறது. திட உணவு மற்றும் திரவ ஆகாரம் ஆகியவற்றை ஸ்டிரா மூலம் தான் உட்கொள்ளவேண்டும். போட்டி ஆரம்பித்த முதல் 3 மணி நேரத்திற்கு கழிப்பறைக்கு செல்ல போட்டிக்கு இடைவேளை அனுமதிக்கப்படும்.இந்த போட்டியில் வெற்றி பெறும் ஜோடிக்கு 3,333 அமெரிக்க டொலர் மதிப்பு வைர மோதிரமும், சொகுசு ஓட்டலில் தங்குவதற்கான 6,666 அமெரிக்க டொலர் மதிப்புள்ள கூப்பன்களும் பரிசாக அறிவித்துள்ளனர்.
கடந்த வருடம் நடந்த போட்டியில் 46 மணிகள், 24 நிமிடங்கள், 9 நொடிகள் என்ற கால அளவில் கின்னஸ் சாதனை செய்த லக்கானா திரனரத்(வயது 31) என்ற பெண் தனது கணவருடன் மீண்டும் இந்த முறையும் போட்டியில் கலந்து கொண்டுள்ளார்.இதுகுறித்து லக்கானா திரனரத் கூறுகையில், இந்த முறை மற்ற போட்டியாளர்களுடன் போட்டியிடுகிறோம். இந்தமுறை போட்டி எவ்வளவு கடினமானதாக இருக்கப்போகிறது என்பதை பார்போம். எனினும் தங்கள் சாதனையை முறியடிக்க முயற்சி செய்வோம் என்று கூறினார்.
இஸ்ரேலியத் தூதரக அதிகாரிகள் மீது தாக்குதல்: கனடா கண்டனம்.
இந்தியாவிலும், ஜியார்ஜியாவிலும் இஸ்ரேலிய அதிகாரிகள் மீது நடந்த தாக்குதல் முட்டாள்தனமானது என்று கனடாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் பெயர்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.இந்தியா தலைநகர் புதுடெல்லியில் இஸ்ரேல் நாட்டுத் தூதரக வாகனத்தின் மீது இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் காந்த வெடிகுண்டை ஒட்ட வைத்து விட்டு சென்று விட்டார். அந்த வெடிகுண்டு வெடித்ததில் நால்வர் காயமடைந்தனர்.இதையடுத்து ஜியார்ஜியாவின் தலைநகரமான டிபிலிசியில், இஸ்ரேலிய தூதரின் கார் ஒன்றில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருந்தது. இதனைக் கண்டுபிடித்து செயலிழக்கச் செய்ததால், தூதரக அதிகாரிகள் உயிர்தப்பினர்.
இதுகுறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமீன் நெதன்யாஹு, இத்தாக்குதல்களை ஈரான் திட்டமிட்டு நடத்தியதாக குற்றம்சாட்டியுள்ளார். ஆனால் ஈரான் அரசோ இத்தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்க மறுத்துவிட்டது.இந்நிலையில் இத்தாக்குதல்களுக்கு கனடாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் பெயர்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.
அரசு பணத்தில் ஊர் சுற்றுகிறார் சர்கோசி: சோசலிஸ்ட் கட்சி புகார்.
பிரான்ஸ் ஜனாதிபதி சர்கோஸி, அரசு பணத்தை தேர்தல் பிரசாரத்திற்கு செலவிடுவதாக சோசலிஸ்ட் கட்சி புகார் செய்துள்ளது.பிரான்ஸ் ஜனாதிபதி சர்கோசி அரசுப்பணத்தில் ஊர்வலங்களை நடத்தி தனக்கு தேர்தலில் ஆதரவு தேடுகிறார் என்று தேசீயக் குழுவிடம் புகார் அளிக்கப்போவதாக மேனுவேல் வேல்ஸ், யூரோப்–1 வானொலிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
சர்கோசி சட்டத்தை மதிப்பதில்லை. பொதுப் பணத்தில் பேரணி நடத்துகிறார் என்று கடந்த வாரம் ஃபெஸ்ஸென்ஹீம் அணுசக்தி நிலையத்துக்கு வருகை தந்ததைக் கண்டுபிடித்து வேல்ஸ் தெரிவித்துள்ளார்.ஃபீஸ்ஸென்ஹீம் அணுசக்தி நிலையத்துக்கு வந்ததைப் போலவே சர்கோசி, இன்னும் பல இடங்களுக்கும் அரசுச் செலவில் சென்று வருகிறார்.இவ்வாறு பல இடங்களில், சர்கோசி மக்களைச் சந்தித்துப் பேசுவதற்கு அரசாங்கக் காரணம் எதுவும் கிடையாது என்றும் எதிர்வரும் தேர்தலில் மக்கள் தனக்கு வாக்களிக்க வேண்டும் என்பதற்காகவே இவர் இப்படி ஊர் சுற்றி வருகிறார் எனவும் எதிர்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
ஏற்கெனவே கடந்த டிசம்பர் மாதத்தில் ஒருமுறை புகார் அளித்ததைப் போலவே இப்பொழுது இன்னொரு புகார் அளிக்கத் சோசலிஸ்ட் கட்சி தயாராக உள்ளது.பிரான்சில் முதல் சுற்றுத் தேர்தல் வருகிற ஏப்ரல் 22ம் திகதியும், இரண்டாம் சுற்றுத் தேர்தல் வருகிற மே 6ம் திகதியும் நடைபெறுகின்றது.
தாய்லாந்தில் தொடர் குண்டுவெடிப்பு: 5 பேர் படுகாயம்.
தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காங்கில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள 3 இடங்களில் ஒரே நேரத்தில் குண்டு வெடித்தது. இதில் 5 க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர்.குண்டு வெடிப்பு நடந்த விதம் மற்றும் எத்தனை பேர் காயமுற்றனர் என்ற விபரங்கள் இன்னும் வெளிவரவில்லை.
இன்று தாய்லாந்தின் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், அடுக்குமாடி பள்ளிக்கூடம் உள்ள பகுதியில் 3 இடங்களில் குண்டு வெடித்தது.இதில் ஒருவர் காயமுற்ற நிலையில் இவரது பையில் இருந்து கைப்பற்றப்பட்ட அடையாள அட்டையில் லெபனான் நாட்டை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.
மேலும் சில இடங்களில் பொலிசார் மீது வெடிகுண்டுகள் வீசப்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கின்றன. இதுகுறித்து முழு விவரம் இன்னும் கிடைக்கப்பெறவில்லை. தற்கொலை படையினர் தாக்குதலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்காவும், இஸ்ரேலும் தாய்லாந்தில் வசிக்கும் தமது நாட்டவர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
ஜேர்மனியில் கிராமமே புற்றுநோயால் பாதிப்பு.
தொழில்வளத்தில் முன்னணி நாடாக திகழும் ஜேர்மனியில் ஒரு கிராமமே புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.அந்த கிராமத்தின் பெயர் வெவல்ஸ் பிளத். இதன் மக்கள் தொகை வெறும் 1500 பேர் தான். இங்கு வசிக்கும் மக்கள் அடிக்கடி பல்வேறு பாதிப்புக்கு உள்ளானார்கள்.
இதனையடுத்து லுபெக் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு அங்கு சென்று ஆய்வு நடத்தியது. இதில் அங்கு வசிக்கும் பெரும்பாலானவர்களுக்கு புற்று நோய் தாக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து ரத்தம் மற்றும் திசு மாதிரிகள் எடுத்து சோதனை நடத்தப்பட்டதில் வீட்டுக்கு ஒருவருக்கு புற்று நோய் இருப்பது தெரியவந்தது. மார்பகம், நுரையீரல், வயிறு, கல்லீரல் ஆகியவற்றை புற்றுநோய் தாக்கியுள்ளது. ஆனால் கிராம மக்கள் தங்களை கொடிய புற்று நோய் தாக்கி இருப்பதைகூட தெரிந்து கொள்ளாமல் இவ்வளவு காலம் வாழ்க்கை நடத்தியுள்ளனர்.ஆய்வில் வெளியான தகவலை தொடர்ந்து அங்கு சிகிச்சை மற்றும் நோய் தடுப்பு பணிகள் மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
ஆசிய பசிபிக் கண்டத்தில் அமெரிக்கா இராணுவம் குவிப்பு: சீனா கடும் எச்சரிக்கை.
ஆசிய பசிபிக் மண்டலத்தில் அமெரிக்காவின் படைக் குவிப்பு குறித்து சீன துணை ஜனாதிபதி ஷி ஜின்பிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.சீனாவின் அடுத்த ஜனாதிபதியாக பொறுப்பேற்க உள்ள தற்போதைய துணை ஜனாதிபதி ஷி ஜின்பிங் நான்கு நாள் சுற்றுப் பயணமாக நேற்று அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன் சென்றார்.
தனது பயணம் குறித்து தி வாஷிங்டன் போஸ்ட் என்ற பத்திரிகையில் அவர் எழுதியுள்ள கட்டுரையில், ஆசிய பசிபிக் மண்டலத்தில் சீனா, அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்குத் தேவையான இடம் உள்ளது.ஆனால் அமைதி, பொருளாதார வளர்ச்சியை விரும்பும் நாடுகள் அந்த மண்டலத்தில் படையைக் குவிப்பதை அப்பகுதி நாடுகள் நம்பிக்கையுடன் பார்க்கவில்லை. இருப்பினும் அமெரிக்காவுடன் சீனா பல்வேறு தரப்புகளிலும் தனது ஒத்துழைப்பை முழுமையாக அளிக்கும் என தெரிவித்துள்ளார்.
வாஷிங்டனில் இன்று ஷி, அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா சந்திப்பு நடக்க உள்ளது. தொடர்ந்து அவர் அமெரிக்க இராணுவ தலைமையகமான பென்டகனில் அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சு நடத்துகிறார்.அதையடுத்து அயோவா மாகாணம் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர் ஆகிய இடங்களுக்குச் செல்கிறார். ஷியின் இந்த சுற்றுப் பயணம் உலகளவில் மிக முக்கியத்துவம் வாய்ந்த பயணமாக பார்க்கப்படுகிறது.
நீதிமன்றம் அவமதிப்பு வழக்கு உறுதியானால் கிலானிக்கு 6மாதம் சிறை: நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி மீதான ஊழல் வழக்குகளை மீண்டும் தோண்டி எடுத்து நடத்த, இரண்டு ஆண்டுகளாக பிரதமர் யூசுப் ரசா கிலானி மறுப்பு தெரிவித்து வந்ததற்காக, அவர் மீது நீதிமன்றம் அவமதிப்புக் குற்றத்தை, அந்நாட்டு உச்ச நீதிமன்றம் சுமத்தியுள்ளது.
அவசர சட்டம் பாகிஸ்தானில், 2007ல் பர்வேஸ் முஷாரப் அதிபராக இருந்த போது, ஊழலில் சிக்கிய சர்தாரி உட்பட எட்டாயிரம் பேர் பலனடையும் விதத்தில், தேசிய நல்லிணக்க அவசர சட்டத்தைக் கொண்டு வந்தார்.ஆனால், 2009ல் இதுகுறித்து தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், அச்சட்டம், அரசியல் சாசனத்திற்கு விரோதமானது எனக் கூறி ரத்து செய்தது. அதோடு, சர்தாரி உள்ளிட்டோர் மீதான ஊழல் வழக்குகளைத் தோண்டி எடுப்பது குறித்து, சுவிட்சர்லாந்து அதிகாரிகளுக்கு கடிதம் எழுதும்படி, அப்போதைய பிரதமர் கிலானிக்கு அறிவுறுத்தியது.
சர்தாரி இவ்வழக்கில் ஏற்கனவே சிறை தண்டனை அனுபவித்து விட்டதாலும், அவர் அதிபராகி விட்டதால், உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளிலும் அவருக்கு சட்டப்பூர்வ பாதுகாப்பு இருப்பதாலும், அவ்வழக்குகளை கிலானி மீண்டும் துவக்கவில்லை.இதுகுறித்து எதிர்க்கட்சிகள் தொடுத்த வழக்கில், கடந்த ஜனவரி 19ம் திகதி, பிரதமர் கிலானி கோர்ட்டில் தன் வழக்கறிஞருடன் ஆஜரானார். தொடர்ந்து, பிப்ரவரி 13திகதிக்குள் (நேற்று) பிரதமர் வழக்குகளை துவக்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்படி அறிவுறுத்திய நீதிமன்றத் தவறினால், பிரதமர் மற்றும் அதிபரை பதவி நீக்கம் செய்யப் போவதாகவும் எச்சரித்தது.
கிலானி சட்டப்பூர்வ காரணங்களைக் காட்டி, வழக்குகளைத் துவக்கவில்லை. இந்நிலையில், நேற்று மீண்டும் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. வழக்கில், கிலானி நேரில் ஆஜரானார்.நீதிபதி நசீர் உல் முல்க், கிலானி மீதான குற்றப்பத்திரிகையை வாசித்தார். அவர் கிலானியை நோக்கி,"உங்கள் மீதான குற்றப்பத்திரிகையை வாசித்து உணர்ந்திருக்கிறீர்களா? என வினவினார். அதற்குப் பதிலளித்த கிலானி, "ஆம். குற்றப்பத்திரிகையை வாசித்தேன் புரிந்து கொண்டேன் என்றார்."நீங்கள் குற்றம் செய்ததாக ஒப்புக் கொள்கிறீர்களா?' என்ற நீதிபதியின் கேள்விக்கு, "இல்லை' என பதிலளித்தார் கிலானி.
கடைசி வாய்ப்புதொடர்ந்து அறிக்கையை வாசித்த நீதிபதி, கிலானியின் வழக்கறிஞர் இம்மாதம் 22ம் தி திகதி தனது தரப்பு வாதங்களை முன்வைக்கலாம் என்றும், 27ம் திகதிக்குள், கிலானி தனது தரப்பு ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.இதுகுறித்து நீதிமன்றத்திற்க்கு வெளியில் பேட்டியளித்த கிலானியிடம், குற்றம் உறுதிப்படுத்தப்பட்டால், அவர் பதவி நீக்கம் செய்யப்படுவாரா என நிருபர்கள் கேட்ட கேள்விக்கு குற்றம் உறுதியானால், எனது எம்.பி., பதவி தன்னிச்சையாக ரத்தாகும். நான் நிச்சயம் பதவியிறக்கம் செய்யப்படுவேன் என, கிலானி தெரிவித்தார்.
5 ஆண்டுகளுக்கு ஆப்புகுற்றச்சாட்டு உறுதியாகும்பட்சத்தில், பிரதமர் பதவியில் இருந்து விலக்கப்பட்டு, ஆறு மாதங்கள் கிலானி சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். அடுத்த ஐந்தாண்டுகள் அவர் தேர்தலில் நிற்க முடியாது.பாகிஸ்தான் வரலாற்றில்,உச்ச நீதிமன்றம் அவமதிப்புக் குற்றத்துக்கு ஆளான மூன்றாவது பிரதமர் கிலானி. இவர் தவிர, 1974ல் அப்போதைய பிரதமர் ஜூல்பிகர் அலி புட்டோ, 1997ல் அப்போதைய பிரதமர் நவாஸ் ஷெரீப் ஆகியோர நீதிமன்றத்தை அவமதிப்புக் குற்றத்துக்கு ஆளாகியுள்ளனர்.
இணையத்தில் குழந்தையின் உடல் உறுப்புகள் விற்பனை.
அழகான குழந்தை விற்பனைக்கு உள்ளது, அதன் உறுப்புகள் தேவைப்படுவோர் வாங்கிக் கொள்ளலாம் என்று மெக்சிகன் இணையத்தளத்தில் வெளியான விளம்பரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த விளம்பரத்திற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டதை அடுத்து விளம்பரம் நீக்கப்பட்டுவிட்டது.
விளம்பரத்தை பதிவு செய்தவர் பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த செயலை அடுத்து இணையத்தளத்தில் மனிதர்களை உடல் உறுப்புகள் விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது என்ற விதிமுறை பதிவு செய்யப்பட்டுள்ளது.
கிரீசில் சிக்கன நடவடிக்கைகளை எதிர்த்து கலவரம்: நாடு முழுவதும் பரவும் அபாயம்.
பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் கிரீஸ் நாடு பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு கிரீஸ் நாடாளுமன்றம் நேற்று அங்கீகாரம் அளித்தது.இதையடுத்து தலைநகர் ஏதென்சில் நேற்று முன்தினம் மக்கள் தீவைப்பு உட்பட பல்வேறு வன்முறை போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்த வன்முறை தற்போது நாட்டின் பிற பகுதிகளுக்கும் பரவி வருகிறது.
ஐரோப்பாவில் அயர்லாந்து, போர்ச்சுக்கல் நாடுகளை அடுத்து கிரீஸ் பொருளாதார நெருக்கடியில் சிக்கியது. கடந்த இரு ஆண்டுகளில் இதுகுறித்து நடந்த பல்வேறு கூட்டங்களில் கிரீசுக்கு கடன் உதவி வழங்குவதென ஐரோப்பிய கூட்டமைப்பு முடிவெடுத்தது.இதன் ஒரு பகுதியாக கடந்த 2010ம் ஆண்டு மே மாதம் முதல் தவணையாக 110 பில்லியன் யூரோ கடன் வழங்கப்பட்டது. 2011ம் ஆண்டு ஜூலை மாதத்திலும் மேலும் 109 பில்லியன் யூரோ வழங்குவதாக முடிவெடுக்கப்பட்டது.
ஆனால் அந்தத் தொகை குறைவானது என்பதால் 130 பில்லியன் யூரோவாக அதிகரிக்கப்பட்டது. ஆனால் இத்தொகையை வாங்க வேண்டும் என்றால் வேலைக் குறைப்பு, சம்பளம், ஓய்வூதியம் இவற்றில் குறைப்பு போன்ற சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சர்வதேச நாணய நிதியமைப்பும்(ஐ.எம்.எப்), ஐரோப்பிய யூனியனும்(இ.யு) வலியுறுத்தின.இதனையடுத்து இந்த சிக்கன நடவடிக்கைகள் நேற்று முன்தினம் கிரீஸ் நாடாளுமன்றத்தில் மசோதாக்களாக முன்வைக்கப்பட்டன. பெரும்பான்மையான வாக்குகளுடன் இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
இவற்றின்படி 2015ம் ஆண்டுக்குள் பொதுத் துறையில் பணியாற்றும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் வீட்டுக்கு அனுப்பப்படுவர். ஊழியர்களின் சம்பளத்தில் 22 சதவீதம் குறைக்கப்படும்.இந்த நடவடிக்கைகளை எதிர்த்து நேற்று முன்தினம் கிரீஸ் தலைநகர் ஏதென்சில் மக்கள் வன்முறையில் ஈடுபட்டனர். திரையரங்குகள், கடைகள், விடுதிகள், வங்கிகள் ஆகியவை தீக்கிரையாக்கப்பட்டன. 150 கடைகள் கொள்ளையடிக்கப்பட்டன, 48 கட்டடங்கள் தீக்கிரையாக்கப்பட்டன, 68 பொலிசார் உட்பட, 100 பேர் காயம் அடைந்தனர், 130 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தற்போது இக்கலவரம் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான தெஸ்ஸலொனிகி மற்றும் சுற்றுலாத் தீவுகளான கிரீட், கோர்பு ஆகியவற்றிற்கும், நாட்டின் மத்திய பகுதிகளில் உள்ள சிறு நகரங்களுக்கும் பரவி வருகிறது.இதுகுறித்து பிரதமர் லூக்காஸ் பப்பதிமோஸ் விடுத்துள்ள அறிக்கையில், இது போன்ற வன்முறைகளுக்கு ஜனநாயக நாட்டில் இடமில்லை. மீறி ஈடுபடுவோர் தண்டிக்கப்படுவர் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆணாக இருந்து பெண்ணாக மாறியவர் குழந்தை பெற்ற அதிசயம்.
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 30 வயது ஆண் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் பெண்ணாக மாறினார்.இதைத் தொடர்ந்து ஹார்மோன் சிகிச்சை மூலம் கருப்பையை செயல்பட செய்தார். பின்னர் திருமணம் நடந்தையடுத்து 10 மாதங்களுக்கு பிறகு அறுவை சிகிச்சை மூலம் அவருக்கு அழகான குழந்தை பிறந்தது.
அதன் மூலம் ஆணாக இருந்து பெண்ணாக மாறி குழந்தை பெற்ற முதல் இங்கிலாந்து நபர் என்ற பெருமையை பெற்றுள்ளார். ஆனால் அவரது பெயர் வெளியிடப்படவில்லை.இவருக்கு முன்பு 2007ம் ஆண்டில் 38 வயது தாமஸ் பிட்டி என்ற அமெரிக்கர் உலகிலேயே முதன் முறையாக சூசன், ஆஸ்டின், ஜென்சன் என 3 குழந்தைகளை பெற்றார்.இவருக்கு அடுத்தப்படியாக ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ஆணுக்கு குழந்தை பிறந்தது. தற்போது மூன்றாவதாக இவர் ஆணாக இருந்து பெண்ணாக மாறி குழந்தை பெற்றுள்ளார்.
சிரியாவுக்கு சர்வதேச அமைதிப் படை விரைவு: ரஷ்யா மீண்டும் எச்சரிக்கை.
சிரியாவில் பொதுமக்களுக்கு எதிராக இராணுவம் நடத்தி வரும் வன்முறையை தடுப்பதற்காக ஐ.நா - அரபு லீக் இணைந்த சர்வதேச அமைதிப் படையை சிரியாவுக்கு அனுப்ப வேண்டும் என அரபு லீக் கேட்டுக் கொண்டுள்ளது.
சிரியாவில் கடந்த 11 மாதங்களாக ஜனாதிபதி அசாத்திற்கு எதிராக, மக்கள் போராடி வருகின்றனர். அவர்களை இராணுவம் மூலம் அடக்கி வருகிறார் அசாத். இப்போராட்டத்தில் இதுவரை 7,000 பேர் பலியாகியுள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.இந்நிலையில் நேற்று முன்தினம் எகிப்து தலைநகர் கெய்ரோவில் கூடிய அரபு லீக் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் ஐ.நா. வின் பாதுகாப்பு கவுன்சில் மற்றும் அரபு லீக் இணைந்து சர்வதேச அமைதிப் படை ஒன்றை சிரியாவுக்கு அனுப்ப வேண்டும் எனவும், எதிர்க்கட்சிகளுக்கு அரசியல் மற்றும் இராணுவத் தளவாடங்கள் ரீதியாக உதவி செய்யத் தயார் எனவும் முடிவு எடுக்கப்பட்டது.
சிரியாவின் பிரதிநிதி இல்லாமல் எடுக்கப்பட்ட இந்த முடிவை நிராகரிப்பதாக அந்நாடு தெரிவித்துள்ளது. அரபு லீக்கின் இந்த முடிவை ரஷ்யா மீண்டும் எதிர்த்துள்ளது. இதுகுறித்து ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லேவ்ரோவ் அளித்த பேட்டியில், சர்வதேச அமைதிப் படை சிரியாவுக்குள் நுழைவதற்கு முன் அங்கு இருதரப்பும் போர் நிறுத்தம் செய்ய வேண்டும். ஆனால் அங்கு அரசை எதிர்த்து வரும் ஆயுதக் குழு யார் கட்டுப்பாட்டிலும் இல்லை என தெரிவித்தார்.சீன வெளியுறவு அமைச்சர் லியு வெய்மின் நேற்று இதுகுறித்துக் கூறுகையில், அரபு லீக்கின் இந்த முடிவு சிரியா விவகாரத்தில் சாதகமான சூழலைத் தோற்றுவிக்க வேண்டும் என்று மட்டும் தெரிவித்தார்.
அரபு லீக்கின் திட்டத்திற்கு சீனா ஆதரவா, எதிர்ப்பா என்பதைத் தெளிவாகத் தெரிவிக்கவில்லை. இதற்கிடையில் ஹோம்ஸ் மாவட்டத்தின் பல்வேறு நகரங்களில் நேற்று சிரியா இராணுவம் கடும் தாக்குதல் நடத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.லிபியாவைப் போல சிரியாவிலும் நேட்டோ படைகளை அனுப்பி அமைதியைக் கொண்டு வருவதில் பல்வேறு அரசியல் ரீதியிலான சிக்கல்கள் இருப்பதால் அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியனும் அதில் தயக்கம் காட்டி வருகின்றன.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF