Thursday, February 16, 2012

NEWS OF THE DAY.

மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! நீர் கட்டணம் உயரும்! அரசாங்கம் அறிவிப்பு.
எரிபொருள்,  மின்சாரம்,  போக்குவரத்து,  உணவுப் பொருட்கள்,  உள்ளிட்டவற்றின் விலையுயர்வுகளை அடுத்து இன்னுமொரு அதிர்ச்சி  காத்திருக்கிறது. நீர் விநியோக கட்டணமும் அதிகரிக்கப்படப் போவதாக நீர்வடிகால் அமைப்பு சபைத் தலைவர் தெரிவித்துள்ளார்.எரிபொருள் விலை உயர்வால் நீர் விநியோக செலவு அதிகரிகத்துள்ளதாக காரணம் காட்டி இந்த அதிகரிப்பு மேற்கொள்ளப்படுகிறது.இதுதவிர, நாட்டின் பல விதமான பொருட்களின் விலை பட்டியல் தற்சமயம் இமயமலை போல வானைத் தொட்டுள்ளன.
போர் வெற்றியீட்டிய காரணத்திற்காக படையினரின் அனைத்து நடவடிக்கைகளையும் ஏற்றுக்கொள்ள முடியாது!– திவயின.
போரில் வெற்றியீட்டிக் கொடுத்த காரணத்திற்காக படையினரின் அனைத்து நடவடிக்கைகளையும் ஏற்றுக்கொள்ள முடியாது என திவயின ஆசிரியர் தலைங்கத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து சிலாபத்தில் மீனவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் மீது படையினர் நடத்தப்பட்ட தாக்குதல் கண்டனத்திற்குரியது.போர் வெற்றியினால் மக்கள் மத்தியில் ஏற்பட்ட மரியாதையை காப்பாற்றிக் கொள்ளும் வகையில் அரசாங்கம் செயற்படுவதாக தெரியவில்லை.கலகம் ஏற்படுத்தியவர்கள் மீது கண்ணீர்ப் புகைக் குண்டு பிரயோகம் நடத்தியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கண்ணீர் புகைக் குண்டுத் தாக்குதலில் ஒருவரது தலையில் துளை ஏற்பட்டு மரணம் சம்பவிக்காது.சிலாபம் பகுதியில் இடம்பெற்ற போராட்டத்தில் உயிரிழந்த மீனவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியே உயிரிழந்தார்.
கண்ணீர்ப் புகைக் குண்டு துப்பாக்கி ரவையாக மாறியதா?எரிபொருள் விலையேற்றத்தினால் ஏற்பட்ட பாரிய பிரச்சினைகள் பற்றி வெளிப்படுத்தும் நோக்கில் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட எந்தவொரு மீனவரும் துப்பாக்கி ஏந்தி போராட்டம் நடத்தவில்லை.
கோஷங்களை எழுப்புவதனால் எவருக்கும் காயங்கள் ஏற்படப் போவதில்லை என்பதனைக் கூட நேற்று கடமையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மாடுகளுக்கு தெரியவில்லை.ஜனநாயக நாடொன்றில் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபடுபவர்கள்; மீது துப்பாக்கிச் சூடு நடத்துவது ஆரோக்கியமான விடயமல்ல.இவ்வாறான நடவடிக்கைகளே சர்வதேச அரங்கில் இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவதாக சுட்டிக்காட்ட வாய்ப்பாக அமைகின்றது.எரிபொருள் விலையை குறைக்க முடியும் என்பதனை ஐ.தே.க ஆதாரபூர்வமாக நிரூபித்துள்ளது.இந்தநிலையில் பாதுகாப்புப் படையினர் பொறுப்புணர்ச்சியுடன் செயற்படுவதனை ஜனாதிபதி உறுதிப்படுத்த வேண்டும்.
பாதுகாப்புத் தரப்பினர் போரின் போது ஆற்றிய சேவையை ஒருபோதும் குறைவாக மதிப்பீடு செய்யவில்லை.எனினும், அநிநாயமாக படுகொலைகளை செய்யும் சம்பவங்களை போர் வெற்றிக்காக பொறுத்துக் கொள்ளவும் தேவையில்லை என திவயின பத்திரிகையின் நீண்ட ஆசிரியர் தலையங்கத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அமெரிக்காவிற்கு ஆப்பு வைக்கப்போகும் மகிந்தர்!
இறுதிப் போரில் நடந்த குற்றங்களை விசாரிக்க இராணுவ நீதிமன்றமொன்றினை அமைப்பதாக, இலங்கையின் இராணுவத் தளபதி ஜெகத் ஜெயசூரியா அறிவித்திருந்தார்.
தற்போது கிளிநொச்சி மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர். ஜெனரல் கிரிஷாந்த டி சில்வாவை தலைவராகக் கொண்ட ஐந்து பேரடங்கிய குழு, விசாரணைகளை மேற்கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இப்போது விடயத்திற்கு வருவோம்.சென்ற வாரம் இலங்கைக்கு சென்ற ரொபர்ட் ஒ பிளேக் அவர்கள், நல்லிணக்க ஆணைக்குழுவில் சொல்லப்பட்ட பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதன் அடிப்படையில், ஐ.நா.மனித உரிமைப் பேரவையில் தீர்மானமொன்றினைக் கொண்டு வரப்போவதாக அறிவித்திருந்தார்.
அதேவேளை, சுயாதீன விசாரணையொன்று அவசியமென்று ஐரோப்பிய ஒன்றியமும், பிரித்தானியாவும், அவுஸ்திரேலியாவும் வலியுறுத்தின.தீர்மானத்தைக் காட்டி, சரத் பொன்சேக்காவை விடுதலை செய்ய வேண்டுமென அமெரிக்க பேரம்பேச முயல்வதை மகிந்தர் தெரிந்து கொண்டார்.
இதற்கு மகிந்தர் வைக்கும் ஆப்புத்தான் இராணுவ நீதிமன்றம். ஏனென்றால், உள்ளூரில் விசாரணை மேற்கொள்வதற்கு ஆதரவு தெரிவித்த மேற்குலகம் இதனை எதிர்க்க முடியாது.நல்லிணக்க ஆணைகுழுப் பரிந்துரையில் சொல்லப்பட்ட விடயத்தை நிறைவேற்றவே நீதிமன்றத்தை அமைத்துள்ளேன் என்று மகிந்தர் வியாக்கியானம் செய்தால், அமெரிக்காவால் அந்தத் தீர்மானத்தை கொண்டுவர முடியாது. புதிதாகக் காரணத்தையும் கூற முடியாது.
அடுத்ததாக, இந்த நீதிமன்றத்தில், போர்க்கால இராணுவத்தளபதியாக இருந்த சரத் பொன்சேகாவை நிறுத்தி, எல்லாவற்றிக்கும் இவர்தான் பொறுப்பு என்று அவரை தண்டித்தால், மேற்குலகின் ஆட்சி மாற்றக் கனவு சிதறிப் போய்விடும்.அத்தோடு மகிந்தரைப் பொறுத்தவரை, போர்வெற்றியில் சமபங்கு கேட்கும் ஒரே நபரான பொன்சேகா என்ற ஜன்மச்சனியும் அகன்று விடும்.
மகிந்தரை எதிர்க்கும் சமபலம் கொண்ட ஆள் கிடைக்காவிட்டால், மாட்டு வண்டிச் சவாரிப் போராட்டம் செய்யும் ரணிலை வைத்து ஒன்றுமே பண்ண முடியாது.ஆகவே, பரிந்துரையை நிறைவேற்ற வேண்டுமென்ற தீர்மானத்தை விடுத்து, சுயாதீன சர்வதேச போர்க்குற்ற விசாரணை ஒன்று தேவை என்ற தீர்மானத்தை அமெரிக்க முன்வைத்தால், மகிந்தரின் ஆப்பு உடைபடும். இல்லையேல், மகிந்தர் அமெரிக்காவிற்கு வைக்கப்போகும் ஆப்பு, பெரிய ஆப்பாகத்தான் இருக்கப்போகிறது.
உலக சந்தையில் எரிபொருள் விலை குறைந்த போது அரசாங்கம் விலையை அதிகரித்துள்ளது: ஐ.தே.க குற்றச்சாட்டு.
உலக சந்தையில் எரிபொருள் விலை குறைந்த போது, அரசாங்கம் எரிபொருள் விலையை உயர்த்தியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பா.உ மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகளினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. அநீதியே நாட்டின் நீதியாக மாற்றமடைந்துள்ளதாக பா.உ மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமையில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும். இதற்காக அனைவரும் கட்சி, இன, மத பேதங்களை மறந்து ஒன்றிணைந்து போராட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.நாட்டு மக்கள் எதிர்நோக்கி வரும் நெருக்கடிகளுக்கு அரசாங்கத்தின் நிர்வாகத் திறன் இன்மையே பிரதான காரணம் என மங்கள சமரவீர குற்றம் சுமத்தியுள்ளார்.
ஈரானுக்கு எதிராக ஐ.நாவில் இஸ்ரேல் முறைப்பாடு.
இஸ்ரேலியாவிற்கு எதிரான பயங்கரவாத செயல்களில் ஈரான் ஈடுபடுவதாக ஐ.நா.வில் இஸ்ரேல் முறைப்பாடு செய்துள்ளது.
ஈரான் அணு ஆயுதங்களை தயாரித்து வருவது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உட்பட உலக நாடுகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் சமீபத்தில் டெல்லியில் இஸ்ரேலிய தூதரக அதிகாரி மீது நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதல் மற்றும் தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் நடந்த தொடரட் குண்டுவெடிப்பு தாக்குதல்கள் போன்றவற்றை குறிப்பிட்டு இஸ்ரேல் ஈரான் மீது ஐ.நாவில் முறைப்பாடு செய்துள்ளது.
ஒசாமாவை பாதுகாப்பாக தங்கவைத்திருந்தார் முஷாரப்: ஐ.எஸ்.ஐ
பாகிஸ்தானின் அபோதாபாத்தில் ஒசாமா பின்லேடன் பதுங்கியிருந்தது, அப்போதைய ஜனாதிபதி பர்வேஷ் முஷாரப்புக்கு நன்றாகவே தெரியும் என ஐ.எஸ்.ஐ முன்னாள் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.பாகிஸ்தானின் அபோதாபாத்தில் தங்கியிருந்த ஒசாமா பின்லேடன் கடந்தாண்டு மே மாதம் அமெரிக்க படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஒசாமா தங்கியிருந்தது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என பர்வேஷ் முஷாரப் தெரிவித்தார். இந்நிலையில் அமெரிக்க உளவு நிறுவனத்தின்(சி.ஐ.ஏ) முன்னாள் தலைவர் ப்ரூஸ் ரிடல் ஒசாமா ஒளிந்திருந்தது முஷாரப்புக்குத் தெரியும் என ஐ.எஸ்.ஐ முன்னாள் தலைவர் ஜியாவுதீன் க்வாஜா என்ற ஜியாவுதீன் பட் கூறியதாக “தி டெய்லி பீஸ்ட்” இணையத்தளத்தில் எழுதியுள்ள கட்டுரையில் கூறியுள்ளார்.ஐ.எஸ்.ஐ.யின் முன்னாள் தலைவரான இஜாஸ் ஷாவின் உத்தரவின் பேரில் தான், அபோதாபாத்தில் ஒசாமாவுக்காக மிகவும் பாதுகாப்பான முறையில் அந்த வீடு கட்டப்பட்டதாக ஜியாவுதீன் தெரிவித்ததாக எழுதியுள்ளார்.
மேலும் ஒசாமாவை அபோதாபாத்தில் பாதுகாப்பாகவும், பத்திரமாகவும் தங்க வைத்ததற்கு இஜாஸ் ஷா தான் பொறுப்பு எனவும், இவை எல்லாம் முஷாரப்பிற்குத் தெரியும் எனவும், ஜியாவுதீன் கூறியதாகவும், ரிடல் எழுதியுள்ளார்.ஜியோ செய்தி நிறுவனத்திற்கு இதுகுறித்து பதில் அளித்த ஜியாவுதீன் பட், தான் தவறாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளதாக மட்டும் தெரிவித்தார். வேறு எந்த விவரங்களையும் அவர் அளிக்கவில்லை.
புதிய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு விரைவில் பொது வாக்கெடுப்பு: ஜனாதிபதி.
புதிய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கான பொது வாக்கெடுப்பு இம்மாதம் 26ம் திகதி நடத்தப்படும் என சிரியா ஜனாதிபதி பஷர் அல் அசாத் அறிவித்துள்ளார்.சிரியாவில் ஜனாதிபதி அசாத்திற்கு எதிரான போராட்டங்கள் தொடர்கின்றன. ஹோம்ஸ் நகரின் பல்வேறு பகுதிகளில் இராணுவம் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந்நிலையில் கடந்த நான்கு மாத காலமாகத் தயாரிக்கப்பட்டு வந்த புதிய அரசியலமைப்புச் சட்டத்திற்கான பொது வாக்கெடுப்பு இம்மாதம் 26ம் திகதி நடத்தப்படும் என ஜனாதிபதி அசாத் அறிவித்துள்ளார்.பழைய அரசியலமைப்புச் சட்டத்தின் 8 வது பிரிவின்படி, ஜனாதிபதியின் பாத் கட்சிக்கு மட்டுமே அரசியல் அங்கீகாரம் அளிக்கப்பட்டிருந்தது. பிற கட்சிகள் தடை செய்யப்பட்டிருந்தன.இந்த 8 வது பிரிவு புதிய அரசியல் அமைப்புச் சட்டத்தில் நீக்கப்பட்டுள்ளது, அத்துடன் மதம், தொழில், இன மற்றும் மண்டல நலன்கள் அடிப்படையில் கட்சிகள் தொடங்க புதிய அரசியலமைப்புச் சட்டம் தடை விதிக்கிறது.இதனால் நாட்டின் வடபகுதியில் இயங்கி வரும் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம், குர்திஷ் இன மக்கள் ஆகியோர் கட்சிகளைத் துவங்க முடியாது.
இதுகுறித்து எதிர்க்கட்சிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தற்போது நடந்து வரும் மனிதப் படுகொலைகளில் இருந்து கவனத்தைத் திருப்ப சிரியா அரசு இதுபோன்று வாக்குறுதிகளை அளிக்கிறது.இதுபோன்ற வாக்குறுதிகளை அளிக்க இந்த அரசுக்கு தார்மீக மற்றும் அரசியல் ரீதியில் எவ்வித உரிமையும் கிடையாது. நாடு முழுவதும் இராணுவத்தின் பிடியில் இருக்கும் போது இந்த வாக்குறுதிகள் வெறும் வெத்து வேட்டாக முடியும். புதிய அரசியல் அமைப்பும், இந்த அரசை தொடர்ந்து பதவியில் இருத்தவே வழிவகுக்கும்.இதற்கிடையில் சவுதி அரேபியா, கத்தார் நாடுகள் கொண்டு வந்துள்ள சிரியாவுக்கு எதிரான தீர்மானம் மீது ஐ.நா பொதுச் சபையில் இன்று வாக்கெடுப்பு நடக்கிறது. இதற்கும் சீனாவும், ரஷ்யாவும் எதிர்ப்பு தெரிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தானில் துப்பாக்கி குண்டுகளுடன் அமெரிக்க ஊழியர்.
பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத் விமான நிலையத்தில் துப்பாக்கி குண்டுகளுடன் வந்த அமெரிக்காவைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டார்.இஸ்லாமாபாத்துக்கு விமானத்தில் செல்ல பெஷாவர் விமான நிலையத்துக்கு பாகிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரக ஊழியர் வில்லியம் ஆர்தர் சார்லஸ் வருகை புரிந்தார்.
பாதுகாப்பு ஊழியர்கள் அவரது உடைமைகளை பரிசோதித்த போது அவற்றில் 17 துப்பாக்கி குண்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு காவல்நிலையத்துக்கு நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டார். அதன் பின் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.அதற்குள் அமெரிக்க தூதரக அதிகாரிகள் சார்லஸ் தூதரக ஊழியர் என்பதற்கான ஆவணங்களை சமர்ப்பித்தனர். இதனால் கைதான 4 மணி நேரத்தில் சார்லஸ் விடுதலை செய்யப்பட்டார்.
விமான கழிவறையில் அமர்ந்து கொண்டு பயணம்.
விமானத்தில் இடம் இல்லாததால் 2 பயணிகள் விமான கழிப்பறையில் அமர்ந்து பயணம் செய்துள்ளனர்.லாகூர்-கராச்சி இடையிலான பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் விமானத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.
விமானத்தின் அனைத்து இருக்கைகளும் நிரம்பி விட்டதால் 2 பயணிகளை மட்டும் உட்கார வைக்க முடியவில்லை. இதையடுத்து என்ன செய்வது என்று யோசித்த விமானிக்கு வித்தியாசமான யோசனை தோன்றியுள்ளது.அந்த இரண்டு பேரையும் விமான கழிவறையில் அமர்ந்து வருமாறு கேட்டுக் கொண்டார். அவர்களும் சரி என்று கூறி உள்ளே போய் உட்கார்ந்து கொண்டனராம்.
நஷ்டத்தில் இயங்கி கொண்டிருக்கும் பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ நிறுவனத்தை சரிசெய்ய பாகிஸ்தான் அரசு கடுமையாக முயன்று வருகிறது.வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை அளிக்குமாறு விமான நிறுவனத்தை அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
கூட்டுக் கொலையாளியின் தந்தையுடன் ஒரு பேட்டி.
பிரெஞ்சு காவல்துறையினர், நார்வேயின் தலைநகரான ஆஸ்லோவில் ஒரு கூட்டத்தினரைக் கொலை செய்த ஆண்டெர்ஸ் பெஹ்ரிங் பிரீவிக் என்பவனின் தந்தை ஜென்ஸ் பிரீவிக்கை பேட்டியெடுக்கத் திட்டமிட்டுள்ளனர்.
பாரிஸ் நகரத்தில் ஆண்டெர்ஸ் பிரீவிக்கின் கொலை வழக்கு நடைபெற்று வருகிறது. இந்தக் கொலையாளியின் மனநல ஆய்விற்கு அவனது குடும்பப் பின்னணியும் குடும்ப உறுப்பினர்களின் வாக்குமூலமும் தேவைப்படுகிறது.இவனது தந்தையான ஜென்ஸ் பிரீவிக் முன்னாள் அரசு அதிகாரி. இப்போது தெற்கு ஃபிரான்சில் வசித்து வருகிறார்.
இவர் தன் மகன் ஒரு வயது குழந்தையாக இருக்கும்போதே அவனை விட்டுப் பிரிந்துவிட்டார். இதனால் இவருடைய சாட்சி இந்த வழக்கில் முக்கியமாக கருதப்படுகிறது.தந்தையைப் பிரிந்து தனியாக வளர்ந்ததற்கும், கூட்டுக்கொலையில் ஈடுபட்டதற்கும் தொடர்புண்டா என்று நார்வே காவல்துறையினர் அறிய விரும்புகின்றனர்.
இதுவரை தன் மகன் தொடர்பான விடயங்களில் தலையிட விரும்பாத ஜென்ஸ் பிரீவிக் நார்வே திரும்பவோ பிரான்சில் உள்ள அதன் தூதரகத்திற்குச் செல்லவோ மறுத்துவந்தார்.அதனால் நார்வே அதிகாரிகள் முன்னிலையில் பிரான்சில் வைத்தே அவரைப் பேட்டியெடுக்கத் திட்டமிட்டுள்ளனர்.
ஜேர்மனியில் நிலவும் பனியால் ஏற்பட்ட பாதிப்புகள்.
ஜேர்மனியின் வடபகுதியில் உறைபனியும் பனிப்பொழிவும் குளிர்காற்றும் ஓரளவு குறைந்திருந்தாலும், அதன் தென்பகுதியிலும் மேற்குப்பகுதியிலும் அளவுக்கு அதிகமாக காணப்படுகிறது.இந்த குளிரும் பனிப்பொழிவும் மேலும் அதிகரிக்கும் என்று ஜேர்மனி வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த பனிப்பொழிவினாலும் கடுமையான குளிரினாலும் கடந்த புதன்கிழமை சேக்ஸனி மாநிலத்தில் நடந்த சாலை விபத்தில் இரண்டுபேர் உயிரிழந்தனர்.ஹைனிசென் நகரின் அருகேயுள்ள A4 நெடுஞ்சாலையில் போலந்து நாட்டுப் பேருந்து ஒரு பாலத்தில் மோதியதால் 61 வயது முதியவர் உயிரிழந்தார், ஆறு பேர் படுகாயமுற்றனர்.
மேலும் செம்னிட்ஸ் அருகில் உள்ள A72 சாலையில் நடந்த விபத்தொன்றில் ஒரு கார், குறுக்குத்தடுப்பில் மோதியதால் ஒருவர் உயிரிழந்தார்.இந்தப் பனிப்பொழிவும், புயல்காற்றும் 120 விமானசேவையை மியூனிச் விமான தளத்தில் ரத்துச் செய்தன.காற்றழுத்தம் குறைவதால் காற்றும், பனியும் அதிகமாவதாக ஜேர்மனியின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் பவேரியாவில் பத்து சென்டிமீற்றர் உயரத்துக்கு பனி உறைந்துள்ளது. இந்த உறைபனியும், பனிப்பொழிவும் ரைன்லாந்து–பலாட்டினேட் பகுதியில் பெரிய அளவில் போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்தியது.கடந்த புதன்கிழமை அன்று நாடு முழுக்க பகல் வெப்பநிலை 0 டிகிரிக்குக் கூடுதலாக இருந்தது. ஹேம்பர்கில் அதிகபட்சமாக 6 டிகரியும், பிராங்க்ஃபர்ட்டில் 5 டிகிரியும் இருந்தன.
பால்டிக் கடலிலும், போலந்திலும் இருந்து வீசும் குளிர்காற்று ஜேர்மனியின் வடபகுதியில் இன்னும் சில நாட்களில் பனிபடர்ந்த சாலைகளை உருவாக்கும்.இங்கு வெப்பநிலை 6 டிகிரியிலிருந்து -6 டிகிரி வரை வரலாம். இந்த வார இறுதியில், பனியும், மழையும் இருந்தாலும் தென்பகுதியில் 7 டிகிரியும் வடமேற்கில் 9 டிகிரியும் வெப்பம் இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஸ்காட்லாந்து பிரிந்தால் பிரிட்டனின் வலிமை குறையும்: கமரூன் கருத்து.
பிரிட்டனை விட்டு ஸ்காட்லாந்து பிரிந்தால் பிரிட்டனின் வலிமையும், தெம்பும் குறையும் என்று அந்நாட்டின் பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார்.மேலும் டேவிட் கமரூன் கூறியதாவது, பிரிட்டனின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டே ஸ்காட்லாந்துடன் இணைந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.இது ஒரு அரசியல் கணக்கு அல்ல, ஆத்மார்த்தமான தொடர்பு என்றும் உணர்ச்சிப்பூர்வமாக கூறியுள்ளார்.
இதற்கு முன்பாக கேமரூன், ஸ்காட்லாந்தின் பிரதமரான அலெக்ஸ் சால்மண்டுடன் பேசினார்.இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகியவை இணைந்திருப்பதால் ஐ.நா.வின் பாதுகாப்புக் குழுவில் தனக்கென்று ஒரு நிரந்தர இடம் கிடைக்கும்.
மேலும் நேட்டோவிலும், ஐரோப்பாவிலும் பிடி இறுகும் என்றும் உலக நாடுகளோடு நல்ல உறுதியான உறவு கொள்ள முடியும் எனவும் தனது பேச்சுவார்த்தையில் தெரிவித்தார்.ஆனால் ஸ்காட்லாந்தின் பிரதமர் சால்மண்ட், தனது நாடு விடுதலை பெற்றால் மட்டும் அதன் பொருளாதாரம் உயர்நிலையை அடையும். அந்த வகையில் பிரிட்டனும், ஸ்காட்லாந்து நட்பால் நல்ல பலனைப் பெறும் என்று உறுதியாகத் தெரிவித்தார்.
அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே போர் மூளும் அபாயம்.
ஈரான் அணு ஆயுதங்களை தயாரித்து வருகிறது என அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் குற்றம் சாட்டியுள்ளதுடன், பல்வேறு தடைகளையும் விதித்துள்ளன.இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அரபு நாடுகளில் இருந்து புறப்படும் எண்ணெய் கப்பல்கள் ஸ்ரெய்ட் ஆப் ஹோர்மீஸ் துறைமுகம் வழியாக செல்ல ஈரான் மறைமுக தடைவிதித்துள்ளது
மேலும் இங்கு அடிக்கடி கடலில் போர் ஒத்திகையையும் நடத்தி வருவதால், அமெரிக்காவின் கோபம் இன்னும் அதிகமாகி உள்ளது.இதன் காரணமாக விமானம் தாங்கி போர்க்கப்பலை அரபு வளைகுடா பகுதிக்கு அமெரிக்கா அனுப்பியுள்ளது. சமீபத்தில் அமெரிக்காவின் நட்பு நாடான இஸ்ரேல் தூதரகங்கள் டெல்லி, பாங்காங்க் உட்பட 3 இடங்களில் வெடிகுண்டு தாக்குதலுக்குள்ளானது.
இந்த தாக்குதல்களுக்கு ஈரான் தான் காரணம் என இஸ்ரேல் குற்றம்சாட்டி வருகிறது. ஆனால் ஈரான் அதை மறுத்துள்ளது.மேலும் பல்வேறு ஐரோப்பிய நாடுகளுக்கு ஈரானில் இருந்து தான் எண்ணெய் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இற்கிடையே போர்ச்சுக்கல், இத்தாலி, கிரீஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய 6 நாடுகளுக்கு வழங்கப்படும் கச்சா எண்ணெய் விநியோகத்தை நிறுத்தப் போவதாக ஈரான் மிரட்டல் விடுத்துள்ளதுடன், விரைவில் இதை அமுல்படுத்தப்பட உள்ளது.
இவை அனைத்திற்கும் மேலாக அதிநவீன அணு தொழில்நுட்பத்தை ஈரான் அறிவித்துள்ளது. இந்த தொழில்நுட்பத்தின் மூலம் தனது நட்பு நாடான இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா கருதுகிறது.
எனவே இஸ்ரேலின் பாதுகாப்புக்காக தனது ஆபிரகாம்லிங்கன் என்ற விமானம் தாங்கி போர்க் கப்பலை ஸ்ரெய்ட் ஆப் ஹோர்ம்ஸ் துறைமுகப் பகுதியிலிருந்து 21 கடல் மைல் தொலைவில் நிலைநிறுத்தியுள்ளது. இதில் அணு ஆயுதங்கள் உள்ளன.இதன் அருகே 2 கடல் மைல் தூரத்தில் தான் ஈரான் கப்பற்படை படகுகள் ரோந்து சுற்றி வருகின்றன. இதனால் எந்த சூழ்நிலையிலும் அமெரிக்காவும், ஈரானுக்கும் இடையே போர் நடைபெறும் சூழ்நிலை இருப்பதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் 50 கோடி குழந்தைகள் உணவுக்காக அலையும் அவலநிலை ஏற்படும்: ஆய்வில் தகவல்.
இனிவரும் காலங்களில் குழந்தைகள் ஏற்படும் பாதிப்புகள் குறித்து சர்வதேச குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு உலக அளவில் ஆய்வு ஒன்றை நடத்தியது.குறிப்பாக இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், பெரு, நைஜீரியா உட்பட வறுமை அதிகம் நிறைந்த நாடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
அந்த ஆய்வில் இன்னும் 15 ஆண்டுகளில் 50 கோடி குழந்தைகள் பட்டினி கிடக்க நேரிடும் என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.ஏனெனில் விலைவாசி உயர்வு காரணமாக போதிய உணவு பொருட்களை குழந்தைகளுக்கு பெற்றோர்களால் வாங்கி கொடுக்க முடியாத நிலை உருவாகும்.
குறிப்பாக பால், இறைச்சி, காய்கறி போன்ற சத்தான உணவுகளை வாங்கி கொடுக்க முடியாது. இதன் மூலம் அவர்கள் உடல் நலம் பாதிக்கப்படுவதுடன், மனநிலையும் பாதிக்ககூடும் என்று அந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.இதனால் வீட்டில் உள்ளவர்கள் உணவுக்காக குழந்தைகளை வேலைக்கு அனுப்புவதும் அதிகரிக்கும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
முட்டாள் எனத் திட்டிய தனது எஜமானியை கழுத்தை நெறித்துக் கொலை செய்த பணிப்பெண்.
இந்தோனேஷியாவை சேர்ந்த விட்ரியா(19) என்ற இளம்பெண் சிங்கப்பூரில் உள்ள கெக் என்ற 87 வயதான விதவையின் வீட்டில் பணிப்பெண்ணாக பணியாற்றி வந்தார்.வேலைக்கு சேர்ந்து 5 நாட்களே ஆன நிலையில் விட்ரியாவை, முட்டாள் என்று கெக் திட்டியுள்ளார். இதனால் மிகவும் கோபமடைந்த விட்ரியா வயது முதிர்ந்த தனது எஜமானியை கழுத்தை நெறித்தும், பூக்கள் வைக்கத்திருக்கும் அழங்கார ஜாடியால் அடித்தும் கொலை செய்துள்ளார்.
இது குறித்து அருகில் உள்ள வீடுகளில் பொலிசார் விசாரித்தபோது, கெக் எப்போதும் பணிப்பெண்களை திட்டும் பழக்கம் உள்ளவர் என தெரிவித்துள்ளனர். இது குறித்து கெக்கின் மகளும் மருமகளும் கூறுகையில் இவர் மிகவும் பாசமுள்ளவர், ஆனால் சில நேரங்களில் பொறுமை இழந்துவிடுவார் என்றனர்.கொலை செய்த குற்றத்தை ஒப்புக்கொண்ட விட்ரியாவை சிங்கப்பூர் பொலிசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு மீதான தீர்ப்பு வருகின்ற மார்ச் 7-ந் திகதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேஷியாவை சேர்ந்த 2 லட்சத்திற்கும் மேலான பணிப்பெண்கள் சிங்கப்பூரில் பணிபுரிகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF