Monday, February 20, 2012

NEWS OF THE DAY.

இலங்கை இராணுவத்திற்கு தண்டனை வழங்க அமெரிக்காவினால் இயலாது!- இனவாத அமைச்சர் சம்பிக்க.
இலங்கை இராணுவத்திற்கு தண்டனை வழங்க எந்தவொரு சர்வதேச சக்தியாலும் இயலாது. நாட்டிற்கு எதிரான தீர்மானங்களுக்கு தலைமை தாங்கும் அமெரிக்காவிற்கு எதிராக அனைத்து இன மக்களும் இணைந்து போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். மாலைதீவின் சூழலை இலங்கையிலும் நடத்தி விடலாம் என்று நினைப்பது மேற்குலக நாடுகளின் பகல்கனவாகும். வலய நாடுகள் எதிர்கொள்கின்ற ஆபத்துகளுக்கு ஆசிய நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தொடர்ந்தும் கூறுகையில்,அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகள் இலங்கைக்கு எதிராக செயற்படுவது இது முதற்தடவையல்ல.எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கை இராணுவத்தை சர்வதேச விசாரணைகளுக்குள் உட்படுத்த இடமளிக்கப் போவதில்லை.ஆசிய வலயத்தின் மீது குறி வைத்த மேற்குலக நாடுகள் காய் நகர்த்தி வருகின்றன. ஆசிய வலய நாடுகளின் பொருளாதாரத்தை சீரழிப்பதே அவர்களின் நோக்கமாகும்.
நாட்டை பாதுகாப்பது அனைத்து மக்களினதும் பொறுப்பாகும். அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களை விட அமெரிக்க தூதரகம் முன்பதாகவே கூடுதலான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.அரசையும் இராணுவத்தையும் பாதுகாக்க வேண்டியது இந்நாட்டு அனைத்து இன மக்களினதும் கடமையாகும். இதற்காக ஓரணியில் திரள வேண்டும் எனக் கூறினார்.
இலங்கையில் பாணின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கும்?
இந்த வாரம் அரசாங்கத்துடன் சுமுகமான இணக்கப்பாடொன்று காணப்படாதுவிடின் பாணின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்படுமென அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.அரசாங்கத்தையோ அல்லது அமைச்சர்களையோ நாம் சந்திக்காதுவிடின், அவர்களால் எங்களுக்கு வரிச்சலுகை வழங்கமுடியாதெனின் பாணின் விலையை 5 ரூபாவால் அதிகரிப்பதற்கான நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்படுவோம் என அவர் கூறினார்.
இது தொடர்பில் வர்த்தக அமைச்சரை சந்திப்பதற்கு அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் முயற்சித்து வருவதாகவும் பாணிற்கான வரியை நீக்கத் தவறின் இது வெள்ளிக்கிழமையிலிருந்து பாணின் விலையை அதிகரிப்பதற்கு நிச்சயமாக இட்டுச் செல்லுமென அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கு பாடம் புகட்டப்போகிறது ஹெல உறுமய.
அமெரிக்காவின் அழுத்தங்கள், குற்றச்சாட்டுக்கள் இலங்கைக்கு எதிராக நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், இதற்கு எதிராக போராடும் காலம் வந்து விட்டதாகவும் ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகச் செயலாளர் நிசாந்த சிறி வர்ணசிங்க தெரிவித்துள்ளார்.இதேவேளை, சிங்களக் கடும் போக்காளர்களை ஒன்றிணைத்து, அமெரிக்காவுக்குப் பாடம் புகட்ட வேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமயவின் மத்திய குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் பத்தரமுல்லையில் உள்ள ஜாதிக ஹெல உறுமயவின் தலைமையகத்தில், கட்சியின் தலைவர் ஓமல்பே சோபித தேரர் தலைமையில் நடைபெற்ற மத்திய செயற்குழு கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.வியட்நாமில் அமெரிக்கா கற்றுக் கொண்ட பாடத்தை இலங்கையிலும் அவர்களுக்கு கற்பிக்க வேண்டும். அத்துடன் இலங்கைக்கு எதிராக, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதை தடுக்க வேண்டும்.
மக்களின் எதிர்ப்பை மீறி இந்தப் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தப்பட்டால் நாட்டில் பிரச்சினைகள் தலைதூக்கும், என்பன போன்ற விடயங்கள் அக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளன.
நாமல் ராஜபக்சவிற்கும் பாலஸ்தீன ஜனாதிபதிக்கும் இடையில் பேச்சுவார்த்தை.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிற்கும், பாலஸ்தீன ஜனாதிபதி முஹமட் அப்பாஸிக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.பாலஸ்தீனத்திற்னுச் சென்றுள்ள நாமல் ராஜபக்ச தலைமையிலான இலங்கைப் பிரதிநிதிகள் குழுவினரை, பலஸ்தீன ஜனாதிபதி முஹமட் அப்பாஸ் வரவேற்றுள்ளார்.
மேலும், அவர்களுக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது, இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் அனுப்பி வைக்கப்பட்ட விசேட கடிதமொன்றை நாமல் ராஜபக்ச, அந்நாட்டு ஜனாதிபதியிடம் ஒப்படைத்துள்ளார்.இதேவேளை, அண்மைக்கால சமாதான முயற்சிகள் தொடர்பில் ஜனாதிபதி அப்பாஸ், இலங்கைப் பிரதிநிதிகளுக்கு விளக்கமளித்துள்ளார்.பாலஸ்தீன பிரதமர் சலாம் பய்யாட்டையும் இலங்கைப் பிரதிநிதிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
அமைச்சர்களின் எண்ணிக்கையை குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்!- ஐ.தே.க கோரிக்கை.
எதிர்க்கட்சிகளின் போராட்டங்களை முடக்கும் முயற்சி கண்டனத்திற்குரியது என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.மக்களை பாரிய அளவில் நெருக்கடிக்குள் ஆழ்த்தும் வகையில் அரசாங்கம் எரிபொருளுக்கான விலையை உயர்த்தியுள்ளது.
இந்த நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு வெளியிடும் நோக்கில் ஐக்கிய தேசியக் கட்சியினால் அமைதியான முறையில் நடத்தப்பட்ட போராட்டம் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தினர்.வாழும் உரிமை நாளுக்கு நாள் பறிக்கப்பட்டு வரும் நிலையில் அரசியல் அமைப்பின் பிரகாரம் ஜனநாயக ரீதியில் எதிர்ப்பை வெளியிடக்கூட மக்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
நல்ல வழியிலோ அல்லது வேறும் வழிகளிலோ மக்கள் போராட்டங்கள் தடுக்கப்படுகின்றன.
விவசாயிகள், தொழிலாளிகள், மீனவர்கள் உள்ளிட்ட பலரும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளினால் அதிருப்தி அடைந்துள்ளனர்.மக்களின் எதிர்ப்பை தடுத்து நிறுத்தும் நோக்கிலேயே நாடு முழுவதிலும் பாதுகாப்பு தரப்பினர் ஆயத்த நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.அரசாங்கத்தின் அடக்குமுறைகளை மீறி மக்கள் எதிர்ப்பு நாளுக்கு நாள் வலுவடைந்து செல்கின்றது என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அமைச்சர்களின் எண்ணிக்கையை குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியும்: தயாசிறி
அமைச்சர்களின் எண்ணிக்கையை குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.வெளிநாட்டு விஜயங்கள், வாகனத் தொடரணிகள் மற்றும் அமைச்சரவை எண்ணிக்கையை குறைப்பதனால் மக்களுக்கு நிவாரணங்களை வழங்க முடியும். அரசாங்கத்தன் வீண் விரய செலவுகளை மக்களே ஈடு செய்கின்றனர்.
மக்கள் மீது உண்மையிலேயே அக்கறை இருந்தால் தேவையற்ற செலவுகள் குறைக்கப்பட வேண்டும். அமைதியை நிலைநாட்டும் பொறுப்பு பொலிஸாரிடமிருந்து இராணுவத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய நேரம் உருகாவியுள்ளது. போட்டி பொறாமைகளை கைவிட்டு அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து அரசாங்கத்திற்கு எதிராக போராட வேண்டும். போர் வெற்றியினால் அரசாங்கம் மீது மக்கள் கொண்டிருந்த நன்மதிப்பு தற்போது பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி குறிப்பிட்டுள்ளார்.
ஜனநாயக ரீதியாக நடத்தப்படும் போராட்டங்கள் தடுக்கப்படவில்லை: கோத்தபாய.
இலங்கையில் ஜனநாயக ரீதியாக நடத்தப்படும் போராட்டங்கள் தடுக்கப்படவில்லை என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.எனினும், எந்தவொரு தரப்பினரும் ஜனநாயக நெறிகளுக்கு அமையவே போராட்டங்களை நடத்த வேண்டும். சட்ட மீறல்களில் ஈடுபடுவதனை அனுமதிக்க முடியாது.எந்தவொரு போராட்டத்தையும் தடுத்து நிறுத்த பாதுகாப்புத் தரப்பினர் முயற்சிக்கவில்லை. ஐக்கிய தேசியக் கட்சியோ, ஜே.வி.பியோ அல்லது வேறும் அரசியல் கட்சியோ ஜனநாயக ரீதியில் நடத்தும் போராட்டங்களை பொலிஸார் தடுக்கவில்லை.
எனினும், போராட்டம் நடத்துவோர் பொலிஸார் மற்றும் பாதுகாப்பு தரப்பினருடன் மோதும் நோக்கில் செயற்படுகின்றனர். கொழும்பு கோட்டே ரயில் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்ட போது, அந்தப் பகுதிக்குச் செல்ல வேண்டாம் என பொலிஸாருக்கு உத்தரவிட்டேன்.எனினும், ஆர்ப்பாட்டக்காரர்கள் அலரி மாளிகை நோக்கிச் செல்ல முற்பட்ட போது பொலிஸார் அவர்களை தடுத்தனர். பொலிஸார் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்களை வீசி எறிந்து எதிர்ப்பை வெளியிட்டனர்.
நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதே பொலிஸாரின் முதன்மைக் கடமையாகும் போராட்டங்களை தடுக்கும் அவசியம் கிடையாது. எனினும், எந்தவொரு நடவடிக்கைக்கும் ஓர் எல்லையுண்டு. எல்லை மீறிச் செயற்படும் போது அதனை தடுக்க வேண்டியது எமது கடமையாகும்.சிலாபம் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் பூரண விசாரணை நடத்தப்படும். பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் இராணுவத்தினர் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்திய பல சந்தர்ப்பங்களை சுட்டிக்காட்ட முடியும்.
பாரிய தியாகங்களுக்கு மத்தியில் தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டனர். மீண்டும் நாட்டை பின்நோக்கி நகர்த்த அனுமதியளிக்க முடியாது என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சூழ்ச்சிகாரர்களிடம் நாட்டை காட்டிக் கொடுக்கமாட்டேன் - ஜனாதிபதி.
சூழ்ச்சிக்காரர்களிடம் நாட்டை காட்டிக்கொடுக்க மாட்டேன் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.மக்கள் என்னை பதவி நீக்கவோ அல்லது விரட்டவோ முடியும். அது மக்களின் விருப்பம்.எனினும், அரச சார்பற்ற நிறுவனங்கள், வெளிநாட்டு அடிவருடிகள் மற்றும் சூழ்ச்சிக்காரர்களுக்கு இந்த நாட்டை காட்டிக் கொடுக்கத் தயாரில்லை.
பலவந்தமான முறையில் அரசாங்கங்களை கவிழ்க்க முடியாது. ஜனாதிபதி பதவியிலிருந்து விரட்டியடிப்பது சுலபமான காரியமல்ல.மக்களினால் வழங்கப்பட்டுள்ள பொறுப்புக்கள் நிறைவேற்றப்பட்டதன் பின்னரே நான் செல்வேன் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மெக்சிகோ சிறையில் திடீர் கலவரம்: 44 கைதிகள் பலி.
மெக்சிகோவின் வடக்கில் உள்ள மான்டரே நகரத்தில் உள்ள அபோடகா சிறையில் ஏற்பட்ட திடீர் கலவரத்தில் 44 கைதிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.இதுகுறித்து சிறை அதிகாரிகள் கூறுகையில், போதை கடத்தல் கோஷ்டிகளுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதில் 44 கைதிகள் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.அவர்களை அடையாளம் காணும் பணியில் தடயவியல் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர். சிறையில் இப்போது கலவரம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
மெக்சிகோவில் போதை கடத்தல் பெரும் பிரச்னையாக உள்ளது. போதை கடத்தல் தொடர்பாக ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.சிறையில் இட நெருக்கடியால் அவர்களுக்குள் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. கடந்த அக்டோபரில் கேடெரேடா சிறையில் ஏற்பட்ட கலவரத்தில் 7 பேர் பலியாயினர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமைதி பேச்சுவார்த்தையில் ஆர்வம் காட்டிய தலிபான்கள் கொலை: கர்சாய்.
ஆப்கான் அரசுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த ஆர்வம் காட்டிய தலிபான்கள் பாகிஸ்தானில் கொல்லப்பட்டதாகவும், கைது செய்யப்பட்டதாகவும் ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீத் கர்சாய் தெரிவித்துள்ளார்.பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடந்த பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளின் முத்தரப்பு சந்திப்பு நிகழ்ந்தது. இதில் கலந்து கொண்ட ஆப்கான் ஜனாதிபதி கர்சாய் பாகிஸ்தான் தரப்பில் முக்கிய அதிகாரிகள், பிரமுகர்களைத் தனித் தனியாகச் சந்தித்துப் பேசினார்.
இதுகுறித்து நேற்று பேட்டியளித்த ஜாமியத் உலேமா இ இஸ்லாம்(எஸ்) அமைப்பின் தலைவர் மவுலானா சமியுல் ஹக் கூறியதாவது: ஆப்கான் அரசுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த விரும்பிய ஆர்வம் கொண்ட தலிபான்கள் சில அதிகார சக்திகளால் பாகிஸ்தானில் வைத்துக் கொல்லப்பட்டதாகவும், கைது செய்யப்பட்டதாகவும் கர்சாய் என்னிடம் தெரிவித்தார். இம்முறை தனது சந்திப்பில் பாகிஸ்தானில் தரப்பின் அணுகு முறைகளில் மாற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.அமெரிக்க ஆதரவு நிலைப்பாட்டை பாகிஸ்தான் கைவிட்டால் மட்டுமே, ஆப்கான் அமைதி மற்றும் நல்லிணக்க நடவடிக்கைகளில் பாகிஸ்தானால் உதவ முடியும் என்று நான் பதிலளித்தேன் என்றார்.
யூரோ மண்டலத்திற்கு உதவி செய்யத் தயார்: சீனா, ஜப்பான் அறிவிப்பு.
யூரோ மண்டல பொருளாதார நெருக்கடியில் சர்வதேச நாணய நிதியமைப்பு(ஐ.எம்.எப்) உதவி கோரும் பட்சத்தில், அதற்கு நிதியுதவி அளிக்க தயாராக இருப்பதாக சீனாவும், ஜப்பானும் தெரிவித்துள்ளன.சீனத் தலைநகர் பீஜிங்கில் நேற்று சீன துணை பிரதமர் வாங் கிஷன் மற்றும் ஜப்பான் நிதியமைச்சர் ஜுன் அஜுமி இருவரும் சந்தித்துப் பேசினர்.இதுகுறித்து கிஷன் கூறியதாவது: இரு நாடுகளின் பொருளாதார ஒத்துழைப்பில் நிதி தொடர்பான ஒத்துழைப்பு மிக முக்கியமானது. நிதி ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக இருதரப்பும், தங்கள் தொடர்புகளையும் கூட்டுறவையும் அதிகப்படுத்தும்.
மேலும் தங்கள் நிதி சந்தைகளை வலுப்படுத்துவதற்காக உள்ளூர் நாணயங்களில் முதலீடு மற்றும் வர்த்தகம் செய்வதை குறித்து ஆய்வு செய்யும்.இந்தாண்டின் இறுதியில் ஜப்பானில் இரு நாடுகளின் உயர்மட்ட அளவிலான பொருளாதார பேச்சுவார்த்தை நடக்கும் என்றார்.
ஜப்பான் நிதியமைச்சர் அஜுமி கூறுகையில், யூரோ மண்டல பொருளாதார நெருக்கடி தொடர்பாக ஐ.எம்.எப்.பில் இருந்து சில கோரிக்கைகள் வரலாம் என எதிர்பார்க்கிறோம்.அவ்விதம் வந்தால் இரு நாடுகளும் இணைந்து அதில் உதவி செய்ய வேண்டும் எனத் தீர்மானித்துள்ளோம். அதேநேரம் ஐரோப்பிய நாடுகளும் இதில் இன்னும் பல நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றார்.
காடுகளில் ஏற்படும் தீ விபத்தால் ஆண்டுக்கு 3.39 லட்சம் பேர் பலி.
காடுகள் மற்றும் விலைநிலங்களில் ஏற்படும் தீ விபத்துகளில் சிக்கி வருடத்திற்கு உலகம் முழுவதும் 3.39 லட்சம் பேர் பலியாவதாக ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.அறிவியல் முன்னேற்றத்துக்கான அமெரிக்க அமைப்பின் ஆண்டுக் கூட்டம் கனடாவின் வான்கூவரில் நடந்தது.
அதில் தீ விபத்துகள் குறித்த ஆய்வு கட்டுரையை ஜான்ஸ்டன் என்பவர் சமர்ப்பித்தார். அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது, காடுகள் மற்றும் விளைநிலங்களில் எதிர்பாராதவிதமாக தீ பரவுகிறது.இதனால் ஏற்படும் விபத்துகள் மற்றும் தீயை அணைக்கும் முயற்சியில் தோல்வியடைந்து இறப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 3.39 லட்சமாக உள்ளது.அதில அதிகபட்சமாக ஆப்ரிக்காவின் சஹாராவில் 1.57 லட்சம் பேரும், தெற்கு ஆசியாவில் 1.10 லட்சம் பேரும் பலியாகின்றனர்.மேலும் உலக இறப்பு விகிதத்தில் தீயால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது.
ரஷ்யாவில் புடினை ஆதரித்து பிரம்மாண்ட பேரணி.
ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடினை ஆதரித்து அவரது ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் மாஸ்கோவில் பிரமாண்ட பேரணி நடத்தினர்.தற்போது ரஷ்யாவின் பிரதமராக பதவி வகிக்கும் புடின் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளார்.அவரது ஆதரவாளராக உள்ள ஜனாதிபதி டிமிட்ரி மெத்வதேவ் பிரதமர் பதவிக்கு போட்டியிட போவதாகவும் செய்திகள் வெளியாயின.
இரண்டு முறை பதவி வகித்து விட்டதால் இனிமேல் பிரதமர் பதவிக்கு புடின் போட்டியிட முடியாது. அதற்காக ஜனாதிபதி பதவியை கைப்பற்ற திட்டமிட்டுள்ளார்.இதற்கு ரஷ்யாவில் எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தினர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் புடினுக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மாஸ்கோ உட்பட பல நகரங்களில் நேற்று பிரமாண்ட பேரணி நடத்தினர்.இதில் ஒவ்வொரு நகரிலும் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர். ஆசிரியர்கள், ஓட்டப் பந்தய வீரர்கள், இராணுவ வீரர்கள், தொழிலாளர்கள், புடினை ஆதரித்தும் தற்போதுள்ள அரசின் கொள்கைகளை ஆதரித்தும் உணர்ச்சிகரமாக பேசினர்.
பெனாசீரை கொலை செய்ய முஷாரப் சதித் திட்டம் தீட்டியது அம்பலம்.
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசீரை கொலை செய்ய முன்னாள் ஜனாதிபதி முஷாரப் இருமுறை சதித் திட்டம் தீட்டியது அம்பலமாகியுள்ளது.இதுகுறித்து தொலைக்காட்சி ஒன்றில் வெளியிடப்பட்ட செய்தியில், பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி முஷாரப் கடந்த 2007ம் ஆண்டு நாடு திரும்ப முயன்ற அந்நாட்டு முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோவை கொலை செய்ய சதி திட்டம் தீட்டினார்.
இதற்காக நம்பிக்கைக்கு உரிய இரு காவல்துறை அதிகாரிகள் மற்றும் தக்ரீக் இ தலிபான் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த பைத்துல்லா மசூத் ஆகியோரின் துணையுடன் இதற்கான சதிதிட்டம் தீட்டியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து விசாரணை அறிக்கை அந்நாட்டு சிந்துமாகாண சட்டசபையில் தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரான்சில் சூடுபிடிக்கும் தேர்தல் பிரச்சாரம்.
பிரான்சின் தீவிர வலதுசாரி இயக்கமான தேசிய முன்னணிக் கட்சியின் வேட்பாளரான மரீனா லீ பென்(Marina Le Pen)உலகமயமாதலையும் புலம்பெயர்தலையும் கடுமையாக விமர்சித்ததுடன் பிரான்சின் பொருளாதாரமும் தேசிய அடையாளமும் ஆபத்துக்குள்ளாவதாகவும் எச்சரித்துள்ளார்.
நேற்று பிரான்சின் வடபகுதியில் உள்ள லில்லி நகரத்தில் ஒரு மணிநேரம் நடந்த பிராச்சாரக் கூட்டத்தில் சுமார் 1500 பேர் கூடியிருந்து மரீனா லீ பென்னின்(Marina Le Pen) பேச்சைக்கேட்டனர்.மரீனா லீ பென் (Marina Le Pen), தன்னுடன் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களான சர்கோசியையும் (Sarkozy), ஹோலாண்டேயையும் (Hollande) வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் கைக்கூலிகள் என குற்றம் சாட்டினார்.
சர்கோசியும் ஹோலாண்டும் நிதிச்சந்தை மற்றும் வங்கிகளில் மட்டுமே ஆர்வம் காட்டுகின்றனரே தவிர நாட்டின் நன்மையிலும் மக்கள் மீதும் ஆர்வம் காட்டுவதில்லை என்று மரீனா லீ பென்(Marina Le Pen)அவர்களை விமர்சித்தார்.முன்னாள் வழக்கறிஞரும் வேட்பாளருமான 43 வயதுடைய மரீனா லீ பென்னுக்கு 15 சதவீதம் மட்டுமே வாக்காளர்களின் ஆதரவு இருப்பதாக கருத்துக்கணிப்பு தெரிவிக்கின்றது. இதனால், இவரது தேசிய முன்னணிக் கட்சி மூன்றாம் இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
நிதி மற்றும் வங்கி உலகத்தின் முடிசூடா மன்னர்களாக விளங்குவோர்கள் மாஃபியா கொள்ளைக்காராகள் எனக் குறிப்பிட்ட மரீனா லீ பென்(Marina Le Pen) இவ்வாறான கொள்ளைக் காரர்களுக்கு சர்கோசியும் ஹோலாண்டும் ஆதவளித்து வருகின்றார்கள் என குற்றம் சுமத்தியுள்ளர்.
உலக தேசியவாதிகளே ஒன்று கூடுங்கள் என்று அழைப்பு விடுத்த மரீனா லீ பென்(Marina Le Pen) அனைத்து பொருளாதார வசதிகளும் மனிதனுக்கு கிடைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.அந்நிய நாட்டவரைக் காட்டிலும் பிரெஞ்சு குடிமக்களுக்கே வேலைகளில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்றார்.
மத்திய வங்கியை கடன் கொடுக்கும் வங்கியாக இருப்பதையும் தற்போது நடைமுறையில் உள்ள நிதிக்கொள்கைகளையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.யூரோவுக்கு எதிரான கொள்கையும், தன் தாய் நாட்டுக்குத் தரும் முக்கியத்துவமும் உலகின் பல்வேறு பொருளாதார நெருக்கடியுமே உழைப்பாளர்களிடையே பிரான்சின் தீவிர வலதுசாரி இயக்கமான தேசிய முன்னணிக் கட்சியின் வேட்பாளரான மரீனா லீ பென்னுக்கு(Marina Le Pen) பெரும் ஆதரவைக் பெற்றுத் தந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகின் மிக உயரமான சிகரத்தின் உயரத்தில் சர்ச்சை.
உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் எவ்வளவு என்பதில் நாடுகளிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.சீனா - நேபாள எல்லையில் உள்ளது எவரெஸ்ட் சிகரம். இதுதான் உலகிலேயே மிக உயரமானது. இந்தியாவை சேர்ந்த பி.எல்.குலாடி என்ற சர்வேயர் தலைமையிலான குழுவினர் கடந்த 1954ம் ஆண்டு எவரெஸ்டின் உயரத்தை கணக்கிட்டனர்.
அதற்கு முன்னதாகவே 1852ம் ஆண்டு ராதாநாத் சிக்தர் என்பவர் அதன் உயரத்தை அளந்துள்ளார். அதன்பின் எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 8,848 மீட்டர் என்று நிர்ணயிக்கப்பட்டது.இந்நிலையில் மலைகளின் உயரத்தை அளக்கும் போது அதன் மீது படர்ந்திருக்கும் பனியை கணக்கில் கொள்ள கூடாது. வெறும் மலையின் உயரத்தை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.எனவே 8,844.43 மீட்டர் உயரம்தான் எவரெஸ்ட் உள்ளது. இந்த உயரத்தை அங்கீகரிக்க வேண்டும் என்று நேபாளத்தை சீனா நிர்பந்தப்படுத்தி உள்ளது. அதன்படி எவரெஸ்ட் சிகரம் 3.57 மீட்டர் உயரம் குறைத்து கணக்கிடப்படும்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், சீனா - நேபாள எல்லை பிரச்னைகள் தொடர்பாக இந்த மாதம் பேச்சு நடப்பதாக இருந்தது. அதில் எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் என்ன என்ற சர்ச்சை உட்பட பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட இருந்தது. ஆனால் நேபாளம் கேட்டுக் கொண்டதால் இருதரப்பு பேச்சு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றனர்.கடந்த 1975ம் ஆண்டு நேபாள - சீனா எல்லை வரைபடம் குறித்த ஒப்பந்தம் ஏற்பட்டது. அதில் எவரெஸ்டின் உயரம் 8,848.13 மீட்டர் என்று அப்போது சீனா ஒப்புக் கொண்டது. இப்போது சிகரத்தின் உயரத்தில் சர்ச்சை எழுப்பி உள்ளது.
இந்த பிரச்னையை மேலும் பெரிதாக்கும் வகையில் அமெரிக்க தேசிய புவியியல் சொசைட்டி ஒரு கணக்கை கடந்த 1999ம் ஆண்டு வெளியிட்டது.இந்த சொசைட்டி கூறுகையில், ஜி.பி.எஸ். தொழில்நுட்பம் மூலம் எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை அளந்த போது 8,850 மீட்டர் உள்ளது. இந்திய சர்வேயர்கள் டிரிக்னோ மெட்ரிக் முறையில் அளந்துள்ளனர். ஜி.பி.எஸ்.தான் நவீன முறை என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அபு கொத்தடாவை சித்ரவதை செய்யக்கூடாது: பிரிட்டன் கோரிக்கை.
ஐரோப்பாவின் ஒசாமா என்றழைக்கப்படும் அபு கொத்தடா கடந்த வாரம் விடுதலை செய்யப்பட்டார். எனவே இவரை ஜோர்டான் நாட்டுக்கு அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் அவர் ஜோர்டானுக்கு சென்றவுடன் விசாரணை என்ற பேரில் அவரை சித்ரவதைக்கு ஆளாக்க கூடாது என்பதை வலியுறுத்தும் விதமாக பிரிட்டனின் உள்துறை அமைச்சர் தெரெசா மே அங்குள்ள அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
சித்ரவதை நடைபெறாது என்ற வாக்குறுதி அளித்தால் மட்டுமே அபு கொத்தடா பிரிட்டனிலிருந்து ஜோர்டானுக்கு அனுப்பப்படுவார் என்ற நிபந்தனையை ஜோர்டான் அதிகாரிகள் ஏற்றுக்கொண்டனர். இல்லையென்றால் இவரை திரும்பவும் கைது செய்து பிரிட்டனின் சிறைச்சாலையிலேயே அடைக்கப்போவதாகவும் தெரேசா மே தெரிவித்தார்.
இவர் கடந்த வாரம் ஐரோப்பாவின் மனித உரிமை நீதிமன்றத்தின்படி நிபந்தனை பிணையில் வெளிவந்துள்ளார். ஆனால் தீவிரவாதக் குற்றங்களுக்காக அபுவை ஜோர்டான் தன்னிடம் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொண்டதால் ஜோர்டானுக்கு அனுப்புகின்றனர்.
பிரெஞ்ச் மக்களின் தலைவன் நான்: தன்னைத் தானே புகழும் சர்கோசி.
பிரான்சின் தற்போதைய ஜனாதிபதியான நிக்கோலஸ் சர்கோசி, தன்னுடைய பிரசாரக் கூட்டத்தில் தன்னை மக்களின் தலைவர் என பிரகடனப்படுத்திக் கொண்டார்.பிரான்சின் தென்பகுதியிலுள்ள துறைமுகப்பட்டினமான மார்செயலியில் ஏழாயிரம் பேர் கூடியிருந்த கூட்டத்தில் சர்கோசி சுமார் ஒரு மணி நேரம் உரையாற்றினார்.
இதில், நான் படித்த மக்களின் சிறு கூட்டத்தின் வேட்பாளராக இருப்பதை விட பிரெஞ்சு மக்களின் வேட்பாளராக இருப்பதையே விரும்புகிறேன் என்றார். புலம்பெயர்தல், நிதிநெருக்கடி, வேலையில்லாத் திண்டாட்டம், சட்டசபையில் விகிதாச்சார பிரதிநிதித்துவத்தை அறிமுகம் செய்வது குறித்துப் பேசினார்.விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறை நாட்டின் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் என்றும், ஜனநாயகத்தில் எல்லாத் தரப்பினருக்கும் கருத்துச் சொல்ல ஒருவழி இருந்தால் அது ஜனநாயக முறையை உறுதி செய்யும் என்றும் தெரிவித்தார்.
மேலும் தன்னை “பிரெஞ்சு மக்களின் காவலன்” என்றும், தனது சிறப்பான கொள்கைகளே தனது நாட்டை பேரழிவில் இருந்து காப்பாற்றியதாகவும் புகழ்ந்து கூறினார்.பிரான்சின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலன் ஜுப்பே, UMP கட்சியின் தலைவர் ஜுன் பிராங்கோய்ஸ் கோப் மற்றும் பிரதமர் பிராங்கோய்ஸ் பில்லோன் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
தொடரும் வேலைநிறுத்தப் போராட்டம்: விமான சேவைகள் பாதிப்பு.
ஜேர்மனியின் மிகப்பெரிய விமான நிலையமான பிராங்க்பர்ட் விமானநிலையத்தில் பணியாளர்களின் போராட்டம் தொடர்வதால் 200 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது.இந்த விமானநிலையத்தில் Gdf தொழிற்சங்க உறுப்பினர்கள் திங்களன்று அதிகாலை முதல் 24 மணிநேரத்திற்கு பணிக்கு வர மறுத்துவிட்டனர். இந்தப் பணிநிறுத்தத்தால் 50 சதவீத விமானசேவை பாதிக்கப்பட்டது.
நீண்டதூர சேவை தொடர்ந்தது என்றாலும் குறைந்த தூரப் பயணத்திற்கு கட்டணம் செலுத்தியவர்கள் ரயிலில் போக வேண்டிய நிலை ஏற்பட்டது.இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் 50 சதவீதப் பணி உயர்வும், குறைந்த பணிநாளும், கூடுதல் ஊக்கத்தொகையும் கேட்கின்றனர். ஆனால் பிராப்போர்ட் நிறுவனம் இவர்களின் கோரிக்கைகளை கருத்தில் கொள்ளவில்லை. இதனால் Gdf தொழிங்சங்கம் தனது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருகிறது.
Gdf தொழிற்சங்கம் கடந்தாண்டு ஒக்டோபரில் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவிப்பு வெளியிட்டது. அப்போது இந்த விவகாரம் நீதிமன்றத்துக்குப் போனதால் போராட்டம் நடைபெறவில்லை.பாரிஸ் மற்றும் லண்டனின் ஹீத்ரு விமானநிலையங்களுக்கு அடுத்தபடியாக பிராங்க்பர்ட் விமான நிலையம் தான் மிகப் பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.
பாலஸ்தீனத்துக்கு உறுப்பினர் அந்தஸ்து வழங்கக்கூடாது: கனடா.
பாலஸ்தீனத்துக்கு ஐ.நாவில் நிரந்தர உறுப்பினர் நாடு என்ற அந்தஸ்து வழங்கக்கூடாது என கனடாவின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜான் பெயர்டு தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில், பாலஸ்தீனத்துக்கு கனடா முதலில் ஆதரவளித்தது. ஆனால் தற்போது இஸ்ரேலில் வாழும் யூதர்கள் தங்களின் நாட்டையும், மக்களையும் பாதுகாக்க அனுபவிக்கின்ற அவலங்களைப் பொறுத்து கொள்ள இயலவில்லை. எனவே பாலஸ்தீனத்துக்கு ஐ.நா.வில் உறுப்பினர் அந்தஸ்து வழங்கக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.
கனடா பாலஸ்தீனத்தை ஆதரித்த போது, பாலஸ்தீனத்தின் பொருளாதார வளர்ச்சி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்த கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் 300 மில்லியன் டொலரை வழங்கியது.மேலும் வெஸ்ட் பேங்க் மற்றும் காஸா பகுதியில் வாழ்ந்த பாலஸ்தீனருக்கும், அகதிகளுக்கும் ஏராளமான மனிதநேய உதவிகளை செய்தது. கடந்த 2009-2010 ஆம் ஆண்டில் மட்டும் 64.61 மில்லியன் டொலரை பாலஸ்தீனத்தின் மேம்பாட்டுக்காக கொடுத்து உதவியது குறிப்பிடத்தக்கது.
இந்த உதவிகள் மூலமாக பாலஸ்தீனம் இஸ்ரேலுடன் அமைதியும், பாதுகாப்பும் நிறைந்த நாடாக விளங்கவும், பாலஸ்தீன மக்கள் சுதந்திரமாக ஜனநாயக முறையில் சமாதானமாக வாழவும் தேவையான அடிப்படைகளை உருவாக்க கனடா விரும்பியது என்றார்.கடந்த மாதம் பெயர்டு இஸ்ரேலுக்குச் சென்ற போது கனடாவை இஸ்ரேலின் மிகச் சிறந்த நட்பு நாடு என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து வெளிவிவகாரத்துறை செய்தித் தொடர்பாளர் ஜோசப் லாவோயி வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறப்பான சொற்பொழிவுத் திறன் பெற்ற பெயர்டு தனது உரையில் ஹார்ப்பர், தாட்சர், வின்ஸ்டன் சர்ச்சில் ஆகியோரின் கருத்துகளை சுட்டிக் காட்டியதுடன், கனடாவின் வெளிவிவகாரக் கொள்கையை நன்கு விளக்கினார் என்றார்.மேலும் பாலஸ்தீனம், இஸ்ரேல் தவிர வேறு பல நாடுகள் குறித்த தங்களின் கருத்தையும் பெயர்டு தனது உரையில் தெரிவித்தார். சீனாவில் கத்தோலிக்க மதத்தின் போதகர் அரசுக்குப் பயந்து மறைமுக வாழ்க்கை நடத்துவதைச் சுட்டிக் காட்டினார். பர்மாவில் பௌத்தருக்கும், முஸ்லீம்களுக்கும் இடையே வேறுபாடுகள் காட்டப்படுவதையும் எடுத்துரைத்தார்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF