Wednesday, February 15, 2012

மேலும் நான்கு புதிய அணு ஆராய்ச்சி நிலையங்கள் அமைக்க ஈரான் அதிபர் உத்தரவு!


ஈரானில் புதிதாக நான்கு அணு ஆராய்ச்சி நிலையங்களை அந்நாட்டு அதிபர் அதிபர் மொஹ்மட் அஹ்மதினெஜட் அனுமதி வழங்கியுள்ளார்.தேசிய தொலைக்காட்சியில் அவர் விடுத்துள்ள அறிவிப்பில், நான்கு முக்கிய நகரங்களில் அமைக்கப்படவுள்ள குறித்த அணு ஆராய்ச்சி நிலையங்கள் மூலம், நாட்டுக்கு தேவைப்படும் கதிரியக்க மருந்துவகைகளை உற்பத்தி செய்ய முடியுமென தெரிவித்துள்ளார்.


இவற்றுடன் தெஹ்ரானில் தனியாக ஒரு அணு உலை இயக்க கட்டுப்பாட்டு நிலையமும் அமைக்கப்படவிருக்கிறது. 1967ம் ஆண்டு அமெரிக்காவினால், தெஹ்ரானில் அமைக்கப்பட்ட அணு ஆராய்ச்சி நிலையத்திலும் பார்க்க, அதிக திறன் வாய்ந்த நீர் வழங்கல் வசதிகளுடன் இப்புதிய கட்டுப்பாட்டு நிலையம் உருவாக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, மின்வழங்கலுக்காக மேலதிகமாக 20 மின் நிலையங்களும் அமைக்கப்படவிருக்கிறது.ஈரானின் அணு ஆராய்ச்சி நிலையங்கள் யாவும், போர் நடவடிக்கைகளுக்கு தேவையான அபாயகரமான ஆயுத உற்பத்திக்கு பயன்படுவதாக அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகள் குற்றம் சுமத்தி வரும் நிலையில், அமைதியான முறையில் நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காகவே, தாம் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருவதாக ஈரானிய அரசு தொடர்ந்து கூறிவருகிறது.எனினும், ஈரான் இராணுவ தேவைகளுக்காக அணு ஆராய்ச்சி நிலையங்களை பயன்படுத்துவதாக சில ஆதாரங்களை சர்வதேச அணுசக்தி முகவர் நிலையம் கடந்த நவம்பர் மாதம் ஐ.நாவுக்கு சமர்ப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.இதேவேளை, யுரேனியம் செறிவூட்டும் பணியில் ஈரானிய அணு ஆராய்ச்சியாளர்கள் அடைந்துள்ள தேர்ச்சியை காண்பிக்கும் முகமாக ஈரானின் தேசிய தொலைக்காட்சி அண்மையில் வெளியிட்ட வீடியோ காட்சிகள் மேற்குலக நாடுகளிடையே மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF