Sunday, February 26, 2012

NEWS OF THE DAY.

மிஹின் லங்கா விமான சேவை நட்டத்தில்!
அரசாங்கத்தின் வரவுசெலவுத்திட்டத்தின் கீழ் இயங்கிவரும் மிஹின் லங்கா விமான சேவை, 2007 ஆம் ஆண்டு முதல் இன்று வரை 6600 மில்லியன் ரூபாய்கள் நட்டத்தை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2011 ஆம் ஆண்டு மார்ச் 31 முதல் 2012 ஜனவரி 31 வரை மாத்திரம் மிஹின் லங்கா 1700 மில்லியன் ரூபாய் நட்டத்தை அடைந்துள்ளதாக அதன் மேலதிகாரி கபில சந்திரசேன தெரிவித்துள்ளார்.
எனினும், தமது விமான சேவை இன்னும் சிறப்பாக இயங்கிக்கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.மிஹின் லங்காவினால் இலாபத்தை ஈட்டமுடியவில்லை என்ற போதிலும், அதன் சேவை சிறப்பாக மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.ஏனைய விமான சேவைகளை காட்டிலும் மிஹின் லங்கா குறைந்த பயணக்கட்டணங்களையே அறவிட்டு வருவதாகவும் கபில குறிப்பிட்டுள்ளார்.
அத்தியாவசிய பொருட்களின் விலைகள் மேலும் உயரலாம்! அரசாங்கம் எதிர்ப்பார்க்கும் வருமானம் கிடைக்குமா?
அத்தியாவசிய பொருட்கள் மற்றும் ஆடம்பரப்பொருட்களின் விலைகளின் அதிகரிப்பை அடுத்து, அரசாங்கத்தின் வருமானங்கள் மற்றும் செலவுக்கட்டுப்பாடு குறித்து கவனம் செலுத்தப்படுகிறது.ஏற்கனவே, எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டமையை அடுத்து பாணின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.அத்துடன் 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு 200 ரூபாவாலும், 400 கிராம் பால்மாக்களின் விலைகள் 15 ரூபாவாலும் அதிகரிக்கப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில், அரசாங்கம் இராணுத்துக்கு கடந்த வரவுசெலவுத்திட்டத்தில் ஒதுக்கியுள்ள பலகோடி ரூபாய்கள் காரணமாக அதனை ஈடுசெய்வதற்காக மேலும் வருமானங்களை அதிகரிக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும், தேவையற்ற செலவீனங்களையும் குறைக்கவேண்டிய நிலையில் உள்ளது. எனினும், பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் போது பொதுமக்களின் நுகர்வில் குறைவுகள் ஏற்படும் போது அதனால் அரசாங்கம் எதிர்ப்பார்த்த வருமானத்தை பெறமுடியாமல் போகலாம் என்று பொருளியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
புலனாய்வுப் பிரிவினரால் பத்திரிகை ஆசிரியர்கள் உட்பட 887 பேரின் உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்படுகின்றன: மங்கள சமரவீர.
இலங்கை அதிகாரிகளால் ஒட்டுக்கேட்கப்படும் தொலைபேசி மற்றும் கண்காணிக்கப்படும் மின்னஞ்சல் ஆகியவற்றின் விபரங்களை விரைவில் வெளியிடப்போவதாக ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கல சமரவீர தெரிவித்துள்ளார்.இலங்கையின் புலனாய்வு அதிகாரிகளால், 887 பேரின் கையடக்க தொலைபேசிகள் மற்றும் மின்னஞ்சல்கள் இடைமறிக்கப்பட்டு ஒட்டுகேட்கப்பட்டும் கண்காணிப்பட்டும் வருவதாக கடந்த வாரம் அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், சீன நிபுணர்களின் உதவியுடன், 27 அமைச்சரவை அமைச்சர்கள், 3 முதலமைச்சர்கள், செய்திதாள்களின் ஆசிரியர்கள் உட்பட்ட 102 பேரின் கையடக்க தொலைபேசிகளும் ஒட்டுக்கேட்கப்படுவதாக அவர் செய்திதாள் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.இதனை தவிர சிலரின் பேஸ்புக் வலையமைப்பும் புலனாய்வு அதிகாரிகளால் கண்காணிக்கப்படுகின்றன. இது ஜனநாயகத்துக்கு விரோதமான செயற்பாடாகும் என்று மங்கல சமரவீர குற்றம் சுமத்தியுள்ளார்.
ஐ.நாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் வெற்றியளிக்காது: லக்பிம.
சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நாளை ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சில் அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற அமெரிக்க முயற்சித்து வருகின்றது.இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் இந்த முயற்சி வெற்றியளிக்காது. பெரும்பான்மை வாக்குகளினால் இந்த தீர்மானம் தொடர்பான பிரேரணையை இலங்கை அரசாங்கம் தோற்கடிக்கும் என குறிப்பிடப்படுகிறது.
அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளினால் இலங்கை மீது பிரயோகிக்கப்பட்டு வரும் அழுத்தங்கள் தொடர்பில், இலங்கைப் பிரதிநிதிகள் உறுப்பு நாடுகளுக்கு விளக்கம் அளித்துள்ளனர்.
சீனா, ரஸ்யா உள்ளிட்ட பல நாடுகள் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளன என லக்பிம சிங்கள பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை, இலங்கைக்கு எதிரான தீர்மானம் தொடர்பான விவகாரத்தில் இந்தியா இதுவரையில் எவ்வித கருத்தையும் வெளியிடவில்லை. ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சில் விவகாரம் தொடர்பில் இந்தியா தொடர்ந்தும் மௌனம் காத்து வருவதாக அச்செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஜீ.எல்.பீரிஸ் மீண்டும் ஆபிரிக்காவிற்கு விசேட விஜயம்.
ஜெனீவா நகரிற்கு சென்றிருந்த வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இன்று ஆபிரிக்க நாடுகளுக்கான விசேட விஜயம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.நாளை ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைகள் அமர்வை பிரதிநிதித்துவப்படுத்தும் 4 ஆபிரிக்க நாடுகளுடன் கலந்துரையாடுவதற்காகவே அவர் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
மனிதவுரிமைகள் அமர்வில் அமெரிக்காவினால் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள பிரேரணையை முறியடிக்கும் வகையில் தமக்கு ஆதரவாக ஆபிரிக்க நாடுகள் செயற்பட வேண்டும் என அவர் கோருவதே இதன் நோக்கமாகும்,இந்தநிலையில், நாளையதினம் மனிதவுரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க இலங்கை நேரப்படி, பிற்பகல் 3 .00 மணியளவில் நாட்டின் மனிதவுரிமைகள் தொடர்பான விளங்கங்களை ஆணைக்குழு அமர்வில் முன்வைக்கவுள்ளார்.
இலங்கையில் ஆர்ப்பாட்டம்! அமெரிக்கா தமது பிரஜைகளுக்கு எச்சரிக்கை.
இலங்கையின் அரசாங்க சார்பு குழுக்கள் மேற்கொள்ளவுள்ள வெளிநாட்டு சக்திகளுக்கு எதிரான போராட்டம் குறித்து அவதானமாக இருக்குமாறு இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் தமது பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகள் நாளை திங்கட்கிழமை ஆரம்பமாவதை முன்னிட்டு குறிப்பாக அமெரிக்காவை இலக்கு வைத்து இந்த ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறவுள்ளன.
இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள பிரேரணைக்கு அமெரிக்கா ஆதரவு வழங்குவதே இதற்கான காரணமாகும். இந்தநிலையில் நாளை நடத்தப்படும் போராட்டங்கள் அமைதியாக மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..
வெளிநாட்டு சக்திகளிடம் இருந்து இலங்கை மக்களை காப்பாற்றவேண்டும் என்று கோரியே இந்தப் போராட்டங்கள் நாளை முதல் நாடு முழுவதும் 150 நகரங்களில் நடத்தப்படவுள்ளன.இந்த ஆர்ப்பாட்டங்கள், யாழ்ப்பாணம்,வவுனியா, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய இடங்களில் மார்ச் 2 ஆம் திகதி வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
ஏமன் நாட்டின் ஜனாதிபதியாக ஹாடி பதவியேற்பு.
ஏமன் நாட்டின் புதிய ஜனாதிபதியாக அப்துர் அபு மன்சூர் ஹாடி பதவியேற்றார். அதன்பின் ஜனாதிபதி மாளிகைக்கு வெளியே நடந்த தாக்குதலில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 26 வீரர்கள் பலியாயினர்.எகிப்து புரட்சியை அடுத்து ஏமனிலும் புரட்சி ஏற்பட்டது. 10 மாதங்களுக்கும் மேலாக நீடித்த இப்புரட்சி வளைகுடா நாடுகள் கூட்டுறவு கவுன்சில் மூலம் ஒரு முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.அதன்படி கடந்த மாதம் அப்போதைய ஜனாதிபதி அலி அப்துல்லா சலே தனது பதவியை துணை ஜனாதிபதி அப்துர் அபு மன்சூர் ஹாடியிடம் ஒப்படைத்தார்.
இதனைத் தொடர்ந்து சிகிச்சைக்காக அமெரிக்காவிற்குச் சென்றார். கடந்த வாரம் ஏமனில் ஜனாதிபதி தேர்தல் நடந்தது. இதில் வேட்பாளராக ஹாடி மட்டுமே போட்டியிட்டார்.இத்தேர்தலில் 66 லட்சம் வாக்குகள் அதாவது 65 சதவீதம் வாக்குகள் பதிவாயின. இதையடுத்து தலைநகர் சனா அருகில் ஹத்ராமவுத் என்ற இடத்தில் உள்ள முகல்லா என்ற ஜனாதிபதி மாளிகையில் நேற்று ஹாடி புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்றார்.
தனது உரையில் அவர், நாட்டின் ஒற்றுமை, சுதந்திரம் மற்றும் இறையாண்மையை காப்பதற்கு உறுதி பூண்டிருப்பதாகத் தெரிவித்தார்.பதவியேற்பு முடிந்த சில மணி நேரம் கழித்து ஜனாதிபதி மாளிகை வாசலில் மனித வெடிகுண்டு நபர் ஒருவர் வாகனத்துடன் வந்து மோதியதில் குண்டு வெடித்து பாதுகாப்புப் படை வீரர்கள் 26 பேர் பலியாயினர். இதற்கிடையில் அமெரிக்காவில் சிகிச்சை பெற்ற முன்னாள் ஜனாதிபதி சலே நாடு திரும்பினார்.
ஜனாதிபதியுடன் கருத்து மோதல்: ஹைதி பிரதமர் திடீர் ராஜினாமா.
ஹைதி நாட்டு ஜனாதிபதியுடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக பிரதமர் கேரி கோனிலி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.இவர் அளித்த ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி மைக்கேல் மார்டெல்லே ஏற்றுக் கொண்டார். ஆனால் இதற்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
ஜனாதிபதி-பிரதமர் இடையே ஏற்பட்ட அதிகாரப் போட்டி மற்றும் கருத்து வேறுபாடு தான் ராஜினாமாவுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இல்லாததால் பதவியேற்ற 5 மாதங்களில் அவர் ராஜினாமா முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது.
ஆப்கானில் தொடரும் போராட்டம்: அதிகாரிகளை வெளியேற்ற நேட்டோ முடிவு.
ஆப்கானிஸ்தானில் ஐந்தாவது நாளாக போராட்டம் வலுத்து வரும் நிலையில், தலைநகர் காபூலில் இருந்து அதிகாரிகளை வெளியேற்ற நேட்டோ படை முடிவு செய்துள்ளது.ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள அமெரிக்க ஆதரவு நேட்டோ படையினர் இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆன் புத்தகங்களை எரித்ததை அடுத்து அங்கு நாடு முழுவதும் கலவரம் வெடித்துள்ளது.
போராட்டக்காரர்களுக்கும், நேட்டோ படையினருக்கும் நடைபெற்ற மோதலில் இதுவரை 27 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதைக் கண்டித்து ஆப்கானிஸ்தான் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.தலைநகரம் காபூல் மற்றும் நாடு முழுவதும் தற்போது கலவரம் பரவி உள்ளது. வெள்ளிக்கிழமை நடந்த கலவரத்தில் மட்டும் 12 பேர் பலியானார்கள். தொடர்ந்து நிலைமை மோசமாக உள்ளது. சனிக்கிழமையன்று வடக்கு ஆப்கனிஸ்தானில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை கட்டிடத்தின் மீது கலவரக்காரர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
குர்ஆன் எரிப்பு சம்பவத்திற்கு அமெரிக்க  ஜனாதிபதி ஒபாமா மன்னிப்பு கேட்ட பின்னரும் நிலைமை கட்டுக்குள் வரவில்லை. குர்ஆன் எரிப்பு சம்பவத்தினால் ஆப்கானிஸ்தானில் மட்டும் அல்லாமல் பாகிஸ்தான் மற்றும் மலேசியா நாடுகளிலும் போராட்டங்கள் வெடித்துள்ளன.இந்நிலையில் காபூலில் உள்ள அதிகாரிகளை வெளியேற்ற நேட்டோ படைகள் முடிவு செய்துள்ளன.
ஏமன் ஜனாதிபதி மாளிகை வளாகம் அருகே குண்டு வெடிப்பு: 26 பேர் பலி.
ஏமன் ஜனாதிபதி மாளிகை வளாகம் அருகே நடந்த கார் குண்டு தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.அரேபிய வளைகுடா நாடுகளில் ஒன்றான ஏமன் நாட்டின் ஹர்டாமவுட் மகாணத்தில் அந்நாட்டு அதிபர் அபத்-ராபு மன்சூர் ஹாதியின் மாளிகை உள்ளது.
இங்கு மர்மநபர் ஒருவர் கார் குண்டு மூலம் தாக்குதல் நடத்தியதில் 26 பாதுகாப்புப்படையினர் கொல்லப்பட்டனர். 12 பேர் காயமடைந்தனர்.ஏற்கனவே ஏமன் ஜனாதிபதிக்கு எதிராக மக்கள் புரட்சி ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த கார் குண்டு தாக்குதல் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.இத்தாக்குதலுக்கு அல்‌கொய்தா பொறுப்பேற்றிருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளன.மேலும் சம்பவம் நடப்பதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு தான் அபத்-ராபு மன்சூர் ஹாதி, புதிய ஜனாதிபதியாக பதவியேற்றார்.
புலனாய்விற்காக மின்னஞ்சல்களை ஆராயும் ஜேர்மன் அதிகாரிகள்.
ஜேர்மனியில் தீவிரவாதத்தைக் கண்டுபிடிக்க நடத்தும் புலனாய்வின்போது அதிகாரிகள், இணையதளத்தில் வெளியாகும் மின்னஞ்சல்களை ஆராயத் தொடங்கியுள்ளனர்.ஜேர்மனியில் கடந்த 2009ம் ஆண்டில் இருந்ததை விட தற்போது 5 மடங்காக இணையதள ஆய்வு அதிகரித்துள்ளது. அண்மையில் வெளிவந்த அறிக்கையில், புலனாய்விற்காக ஜேர்மன் அதிகாரிகள் 37 கோடி மின்னஞ்சல்களை படித்துப் பார்த்ததாக தெரிய வந்துள்ளது.
கடந்த ஆண்டு மட்டும் ஜேர்மன் புலனாய்வாளர்கள் 37,292,862 மின்னஞ்சல்களைப் படித்திருக்கின்றனர் என்று Bild என்ற நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த எண்ணிக்கையை நாடாளுமன்ற கட்டுப்பாட்டு ஆணையம் தெரிவித்தது.தீவிரவாதம், ஆயுத விற்பனை மற்றும் ஆட்கடத்தலில் ஈடுபடுவோரைக் கண்டுபிடிக்க வெர்ஃபாசுங்ஸ்ஹுட்சு என்ற உள்ளூர் புலனாய்வு அமைப்பும், BND என்ற அந்நியநாட்டு உளவாளி அமைப்பும் ராணுவ புலனாய்வு துறையும் இணையதளப் புலனாய்வில் ஈடுபட்டு வருகிறது.
இதுவரை, இந்தப் புலனாய்வில் தீவிரவாதம் தொடர்பான மின்னஞ்சல்களைத் திறக்க 2000 திறவுச்சொற்களும், ஆயுத பேரத்தில் ஈடுபட்டோர் அஞ்சல்களுக்கு 13,000 திறவுச் சொற்களும் ஆட்கடத்தல் தொடர்பான மின்னஞ்சல்களைப் படிக்க முந்நூறு திறவுச் சொற்களும் பயன்பட்டுள்ளன.இவ்வளவு சிரமப்பட்டும் இதுவரை 213 வழக்குகளில் மட்டும் புலனாய்வுப் படையினரால் உண்மையை வெளியே கொண்டு வர முடிந்தது.
கணணிப் பயனாளியின் கடவுச் சொற்களைப் புலனாய்வு துறையினர் பயன்படுத்தும் பொருட்டு சட்டத்தில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்று ஜேர்மனியின் அரசியலமைப்புச் சட்ட நீதிமன்றம் தெரிவித்தது.எதிர்வரும் 2013ஆம் ஆண்டு யூன் மாதம் வரை புதிய சட்டம் உருவாவதற்கு நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது.
குர்ஆன் எரிப்பு விவகாரம்: பிரிட்டிஷ் பணியாளர்கள் நாடு திரும்பினர்.
குர்ஆன் எரிப்பு விவகாரம் தொடர்பான போராட்டத்தைத் தொடர்ந்து, பிரிட்டன் தன்னுடைய ஆலோசகர்களை ஆப்கானிஸ்தானிலிருந்து திரும்ப அழைத்துக் கொண்டது.ஆப்கானிஸ்தானில் குர்ஆனை எரித்தததானால் ஏற்பட்ட போராட்டத்தில் தாலிபான்களால் இரண்டு அமெரிக்க அதிகாரிகள் சுட்டுக்கொல்லப்பட்டார்கள்.
இதைதொடர்ந்து பிரிட்டன், தன்னுடைய ஆலோசகர்களை தலைநகர் காபூலிலிருந்து திரும்ப அழைத்துக் கொண்டது. மேலும் ஆப்கானிஸ்தானில் நிலவிவருகிற நிலைமைகளை கண்காணித்து வருவதாகவும் அந்நாட்டு வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவும், நேட்டோ படைத்தலைவர்களை திரும்ப அழைத்துக் கொண்டது. அமெரிக்காவின் உயர் அதிகாரியான ஜெனரல் ஜான் ஆலன், அதிகாரிகள் படுகொலை குறித்து புலனாய்வு நடைபெறுவதாகவும், இந்த கொலையில் ஈடுபட்டவரை விரைவில் பிடித்துவிடுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் போராட்டக்காரர்கள் நடத்திவருகிற தொடர் வன்முறையால் பலர் உயிரிழந்தனர். அமெரிக்க வீரர் ஒருவரும், இந்த கலவரத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார்.நாட்டின் மற்ற பகுதிகளான, வடக்கு குண்டூஸ் பகுதியில் போராட்டக்காரர்கள் மூவர் சுட்டுக்கொல்லப்பட்டனர். 50 பேர் காயமடைந்தனர்.அமெரிக்க ஜனாதிபதி பாராக் ஒபாமா மன்னிப்பு கேட்ட பிறகும் கூட இந்த பிரச்சினை தொடர்ந்து வருகிறது. இதனால் நேட்டோவின் முயற்சிகளுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.
உலகின் பணக்கார நாடுகளின் பட்டியல்: கத்தார் முதலிடம்.
உலகின் பணக்கார நாடுகளின் பட்டியலில் கத்தார் முதலிடம் பிடித்துள்ளதாக அமெரிக்காவின் போர்பஸ் பத்திரிக்கை தகவல் வெளியிட்டுள்ளது.அமெரிக்காவின் முன்னணி பத்திரிகையான போர்பஸ் பத்திரிகை உலகின் பணக்கார நாடுகள் என 15 நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இவற்றில் மொத்த உள்நாட்டு உற்பத்தி திறன்(ஜி.டி.பி), கச்சா எண்ணெய் ‌உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் முன்னிலை வகிக்கும் நாடுகளில் ஒன்றான கத்தார் முதலிடம் பிடித்துள்ளது.இந்நாட்டின் மக்கள்தொகை வெறும் 1.7 மில்லியனே ஆகும். இந்நாட்டின் ஜி.டிபி.யானது கடந்த 2010ம் ஆண்டில் 88, 000 மில்லியன் டொலராக உயர்ந்துள்ளது. இந்நாடு எண்ணெய் ஏற்றுமதியில் முதலிடம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.தொடர்ந்து லக்சம்ப‌ர்க் இரண்டாவது இடத்திலும், சிங்கப்பூர் மூன்றாம் இடத்திலும், யு.ஏ.இ மற்றும் குவைத் உள்ளிட்ட நாடுகள் முறையே நான்காம், ஐந்தாம் இடத்திலும் உள்ளன.
ஆய்வுக்கூடத்தில் பயங்கர தீ விபத்து: முழுவதுமாக எரிந்து நாசம்.
அண்டார்டிகாவில் உள்ள பிரேசிலின் ஆய்வுக்கூடம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், ஆய்வுக்கூடமே முழுவதுமாக எரிந்து சாம்பலானது.அண்டார்டிகா கண்டத்தில் உள்ள கிங்ஜார்ஜ் தீவில் 1984ம் ஆண்டு பிரேசில் நாட்டிற்கு சொந்தமான ஆய்வுக்கூடம் ஒன்று அமைக்கப்பட்டது. இதில் 54 விஞ்ஞானிகள் தங்கியிருந்து ஆய்வுகளை மேற்கொண்டனர்.
நேற்று ஆய்வு கூடத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் ஆய்வு கூடம் முழுவதுமாக எரிந்து நாசமானது. இந்த விபத்தில் சிக்கி 2 விஞ்ஞானிகள் உயிரிழந்தனர், ஒருவர் படுகாயமடைந்தார். ஆய்வு கூடத்தில் இருந்த ஏராளமான கருவிகள், ஆவணங்கள் அனைத்தும் எரிந்து நாசமாகி விட்டன.மற்றவர்கள் அனைவரும் ஹெலிகொப்டர் மூலம் சிலி நாட்டில் உள்ள பின்டே எரனஸ் நகருக்கு கொண்டு வரப்பட்டனர்.இந்த விபத்திற்கு மின்சாரத்தை உற்பத்தி செய்யும் ஜெனரேட்டர் அறையில் தீப்பிடித்ததே காரணம் என தெரியவந்துள்ளது.
செனெகல் நாட்டின் ஜனாதிபதிக்கு பிரான்ஸ் எதிர்ப்பு.
செனெகல் நாட்டின் தற்போதைய ஜனாதிபதியாக இருக்கும் அப்துலாயி வாடெக்கு அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட எதிர்ப்பு கிளம்பியுள்ளது.இது குறித்து பிரான்சின் வெளிவிவகாரத்துறை அமைச்சரான அலைன் ஜுப்பே(Alain Juppe) கூறுகையில், 85 வயதான ஜனாதிபதி அப்துலாயி வாடெ(Abdoulaye Wade), ஏற்கனவே இரண்டு முறை பதவியில் இருந்து விட்டார்.
மேலும் அவரது ஆட்சிக்காலத்தில் வேலையில்லாத் திண்டாட்டமும், மின்சாரத் தட்டுப்பாடும் அதிகரித்து இருப்பதால் இனி அவர் பதவிக்கு வரவேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.ஆனால் செனெகல் நாட்டின் ஜனாதிபதி வாடெ கூறுகையில், தான் இன்னும் சில திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்பதால் பதவியில் தொடர விரும்புவதாகக் கூறினார்.ஆப்பிரிக்க நாட்டின் தூதுவர் ஒருவர், இந்த முறை வாடெ வெற்றி பெற்றாலும் எதிர்வரும் இரண்டு ஆண்டுகளில் ஓய்வு பெற்று விடக் கூடும் என்று தெரிவித்துள்ளார்.
ஒரு சிலர் ஜனாதிபதி வாடெ, தன் மகன் கரீம் வாடெயை(Karim Wade) அரசியலுக்குக் கொண்டுவர விரும்புவதாகவும் தெரிவித்துள்ளனர்.ஆனால் நைஜீரியாவின் முன்னாள் ஜனாதிபதியான ஒலுசேகுன் ஒபாசாஞ்சோ(Olusegun Obasanjo), நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் சுதந்திரமாகச் செயல்படும் புதிய அரசியலமைப்பு உருவாக வேண்டும் என்று கூறினார்.
ஈரான் மீது தாக்குதல் நடத்த தயார் நிலையில் அமெரிக்கா.
ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடும் பட்சத்தில், தாக்குதல் நடத்த அமெரிக்க படைகள் எல்லையில் தயாராக உள்ளன. இதற்கான சிறப்பு பயிற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றது.தன் மீதான உலக நாடுகளின் நெருக்கடி அதிகரிக்கும் பட்சத்தில் உலகின் 20 சதவீத எண்ணெய் போக்குவரத்து நடக்கும் ஹோர்முஸ் நீரிணையை மூடி விட ஈரான் முடிவு செய்துள்ளது. அது நிகழ்ந்தால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும்.
ஹோர்முஸ் நீரிணையை மூடுவதைத் தடுப்பதற்காக அந்நாட்டை மிரட்டும் வகையில் அப்பகுதியில் அமெரிக்கா தனது தரை மற்றும் கடற்படைகளைக் குவிப்பதிலும், வியூகங்கள் வகுப்பதிலும் தீவிரம் காட்டி வருவதாக அமெரிக்காவில் இருந்து வெளியாகும் வால்ஸ்ட்ரீட் ஜர்னல் என்ற பத்திரிக்கை தகவல் வெளியிட்டுள்ளது.
இதற்காக பெர்ஷிய வளைகுடாவில் நிறுத்தப்பட்டிருக்கும் அமெரிக்கப் போர்க் கப்பல்களில் உள்ள ஆயுதங்கள் நவீனப்படுத்தப்பட்டு வருகின்றன. கரையில் உள்ள இலக்குகளைத் தாக்கும் ஏவுகணைகள், பூமிக்கு அடியில் உள்ள சுரங்கங்களைக் கண்காணிக்கும் நவீன கருவிகள் பொருத்தப்பட்டு வருகின்றன.மேலும் ஹோர்முஸ் நீரிணையைச் சுற்றிலும் அமெரிக்க இராணுவம் தனது கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளது. அத்துடன் ஐக்கிய அரபு நாடுகளில் அமெரிக்காவின் சிறப்பு அதிரடிப் படைக் குழுக்கள் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
ஆபத்துக்கு உதவுவதற்காக ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் பஹ்ரைன் படைகளுக்கு இந்த சிறப்பு குழுக்கள் பயிற்சி அளித்து வருகின்றன.ஹோர்முஸ் நீரிணையில் ஈரானின் அதிவேக தாக்குதல் படகுகள் சுற்றி வருவதால் அவற்றைத் தாக்கும் விதத்தில், அமெரிக்க போர்க் கப்பல்களில் ஆயுதங்கள் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன.
ஈரானின் அணு சக்தி குறித்து அமெரிக்க உளவு நிறுவனம் தகவல் வெளியீடு.
ஐ.நா.வின் சர்வதேச அணுசக்தி ஏஜென்சியின் பிரதிநிதிகள் குழு ஈரானின் அணுசக்தி திட்டங்கள் குறித்து இரு முறை ஆய்வுகள் நடத்திய பின் வெளியிட்ட அறிக்கைகளுக்கு மாறாக அமெரிக்க உளவு நிறுவனங்கள் வேறு விதமான தகவல்களை அளித்துள்ளன.
அவற்றின்படி அணு ஆயுதங்கள் தயாரிப்பை ஈரான் கைவிட்டு விட்டது. அணு ஆயுதத் தயாரிப்பிற்கான உறுதியான ஆதாரங்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.அதேநேரம் யுரேனியம் செறிவூட்டலை ஈரான் அதிகரித்திருப்பதில் அமெரிக்கா, இஸ்ரேலிய மற்றும் ஐரோப்பிய உளவு நிறுவனங்களுக்கு இடையில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.
ஆனால் யுரேனியச் செறிவூட்டலை அதிகரித்த கையோடு அணு ஆயுதத் தயாரிப்பை மேற்கொள்வது குறித்து ஈரான் இன்னும் முடிவெடுக்கவில்லை எனவும், அண்டை நாடுகளை ஒருவித பீதியிலேயே வைத்திருப்பதற்காக ஈரான் இதுபோன்ற தகவல்களைக் கசிய விடுவதாக அமெரிக்க உளவு நிறுவனங்கள் கருதுகின்றன.
ஐ.ஏ.இ.ஏ அறிக்கை: ஈரானின் அணுசக்தி திட்டங்கள் மற்றும் அவற்றின் இராணுவ ரீதியிலான பரிமாணங்கள் குறித்து இதுவரை சர்வதேச அணுசக்தி ஏஜென்சி(ஐ.ஏ.இ.ஏ) பிரதிநிதிகள் குழு இரு முறை ஈரானில் ஆய்வுகள் மேற்கொண்டது.இரு முறையும் கோம் நகரின் போர்டோ பகுதியில் உள்ள அணுசக்தி நிலையத்திற்குள் சென்று ஆய்வு மேற்கொள்ள ஈரான் அக்குழுவை அனுமதிக்கவில்லை என ஐ.ஏ.இ.ஏ குற்றம்சாட்டியுள்ளது. அங்கு தான் அணு ஆயுதத் தயாரிப்பிற்கான சில குண்டுவெடிப்புகள் நடந்ததாக ஐ.ஏ.இ.ஏ ஏற்கனவே கூறியிருந்தது.
இந்த இரு ஆய்வுகள் குறித்து ஐ.ஏ.இ.ஏ வெளியிட்ட 11 பக்க அறிக்கையின் சாராம்சம்:
1. அணுசக்தி திட்டங்களின் இராணுவப் பரிமாணங்கள் குறித்து ஏஜென்சி கவலை கொண்டிருக்கிறது.
2. போர்டோ அணுசக்தி நிலையத்தில் உள்ள 696 மையவிலக்கு விசை கருவிகள் மூலம், 20 சதவீத யுரேனியச் செறிவூட்டலை ஈரான் மும்மடங்கு அதிகரித்துள்ளது.
3. அதேநேரம் அணு ஆயுதத் தயாரிப்பிற்கு உதவும் வகையில் 90 சதவீதம் வரை யுரேனியத்தை ஈரான் செறிவூட்டி வருகிறது.
4. கடந்தாண்டு ஆகஸ்டில் மேற்கொண்ட ஆய்வின்படி, 19.8 கிலோ யுரேனியம், டெஹ்ரானின் ஜாபர் இபின் ஹயான் ஆய்வகத்தில் இருந்தது. ஆனால் அதை விடக் குறைவான யுரேனியம் தான் கணக்கில் காட்டப்பட்டிருந்தது.
இதை வைத்து அணு ஆயுதம் தயாரிக்க முடியாது என்றாலும் இவை ஆயுதப் பரிசோதனைகளுக்குப் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது. இந்த முரண்பாடுகள் குறித்து ஈரான் விளக்கம் அளிக்கவில்லை.
5. 1995 - 2002 காலகட்டத்தில் யுரேனிய செறிவூட்டலில் இந்த ஆய்வகத்தில் பணியாற்றிய ஊழியர்கள் பற்றிய விவரங்களை ஈரான் தரவில்லை.
சமையலுக்கு பயன்படுத்திய எண்ணெயை விற்றால் மரண தண்டனை.
சமையலுக்கு பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் சுத்திகரித்தோ அல்லது வடிகட்டியோ விற்றால் மரண தண்டனை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.சமையலுக்கு ஒரு முறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது பெரும்பாலான நாடுகளில் வழக்கத்தில் உள்ளது.
இதனால் பல வகையில் உடல்நலக் கோளாறு ஏற்படுகிறது. சீனாவில் பெரிய பெரிய ரெஸ்டாரன்டுகளில் சமையலுக்கு பயன்படுத்திய எண்ணெயை வியாபாரிகள் குறைந்த விலைக்கு வாங்கி செல்கின்றனர்.அந்த எண்ணெயை சுத்திகரித்தோ அல்லது பில்டர் செய்தோ மீண்டும் விற்கின்றனர். சுகாதாரமற்ற இந்த எண்ணெயால் பொதுமக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதாக ஏராளமான புகார்கள் எழுந்தன.
இந்நிலையில் சமையல் எண்ணெயில் மோசடி செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிப்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்று சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்த மோசடி தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் போது, இதில் நீதிமன்றங்கள் முழு கவனம் செலுத்த வேண்டும் என்று அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
மாயன் நாகரிகம் அழிந்ததற்கு காரணம் என்ன? புதிய தகவல்கள் வெளியீடு.
உலகின் மிகத் தொன்மையான மாயன் நாகரிகம், எவ்வாறு அழிந்தது என்பது குறித்து மெக்சிகோ மற்றும் பிரிட்டனை சேர்ந்த விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர்.கி.மு 2500ம் ஆண்டு முதல் கி.பி 950ம் ஆண்டு வரை இன்றைய மத்திய அமெரிக்காவை சேர்ந்த மெக்சிகோ, கவுதமாலா, ஹோண்டுராஸ் ஆகிய நாடுகளில் மாயன் நாகரிகம் பரவியிருந்தது.
வானியல், கணிதம், கட்டடக் கலை உட்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய இந்நாகரிகம், கி.பி 950ம் ஆண்டுகளில் சுவடே இல்லாமல் அழிந்துவிட்டது. இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும கொடும் பஞ்சம், எல்லைச் சண்டைகள், ஸ்பெயின் நாட்டவரால் கொண்டு வரப்பட்ட அம்மை நோய் என சில குறிப்பிட்டு பேசப்படுகின்றன.இந்நிலையில் மெக்சிகோவின் அறிவியல் ஆய்வுக்கான யுகடான் மையம் மற்றும் பிரிட்டனை சேர்ந்த சவுதாம்ப்டன் பல்கலைக் கழகம் ஆகிய இரண்டும் சேர்ந்து சமீபத்தில் யுகடான் தீபகற்பம் என அழைக்கப்படும் மெக்சிகோவின் தென் பகுதியில் ஆய்வுகளை நடத்தின.
இப்பகுதி தான் மாயன் நாகரிகத்தின் மையமாகத் திகழ்ந்த இடம். இங்கு ஏற்பட்ட கொடுமையான பஞ்சம் தான் மாயன் நாகரிகத்தின் அழிவிற்கு வித்திட்டது என இதுவரை விஞ்ஞானிகள் கூறி வந்தனர்.ஆனால் சமீபத்தில் இப்பகுதியில் கி.பி 800ம் ஆண்டு முதல் கி.பி 950ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் நீர் நிலைகளில் நிகழ்ந்த ஆவியாதல் குறித்து கணக்கீடுகள் எடுக்கப்பட்டன.
அதன்படி இப்பகுதியில் ஆண்டுதோறும் பெய்யும் மழையளவில் 25 முதல் 40 சதவிகிதம் அளவிற்கு மழை வளம் குறைந்ததே அதாவது மிகச் சிறிய அளவிலான பஞ்சமே மாயன் நாகரிக அழிவிற்குக் காரணம் எனத் தெரியவந்தது.இதுகுறித்து சவுதாம்ப்டன் பல்கலைக்கழகத்தின் எல்கோ ரோலிங் கூறுகையில், இப்பகுதியில் உள்ள திறந்த வெளி நீர் நிலைகளில் அதிகளவு ஆவியாதல் நிகழ்ந்ததால் அதிகளவில் மழை பெய்துள்ளது.
அதேநேரம் திறந்த வெளி நீர் நிலைகளில் நீர் மட்டம் வெகுவாக குறைய ஆரம்பித்தது. இதனால் நீர்ப் பஞ்சம் உருவானது. அதன் விளைவாக மக்கள் நகரங்களை விட்டுச் செல்ல தொடங்கினார் என்றார்.அத்துடன் எங்கெல்லாம் அதிகளவில் நீர் ஆவியாதல் நிகழ்கிறதோ, அங்கெல்லாம் இதுபோன்று மிகச் சிறிய அளவிலான பஞ்சங்கள் ஏற்பட வாய்ப்புண்டு என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
போர் விமானம் வாங்குவது குறித்து கனடா ரகசிய பேச்சுவார்த்தை.
F35 என்ற ஜெட் போர் விமானம் வாங்குவது குறித்து கனடா ஏனைய நாடுகளுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்து வருகின்றது.வாஷிங்டன் மாநகரில் எதிர்வரும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை நடக்கவிருக்கும் இரண்டு நாள் சர்வதேச கருத்தரங்கில் கனடாவும் கலந்து கொள்கின்றது.இந்த சர்வதேச கருத்தரங்கில் கனடாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட்டர் மெக்கேயும்(Peter MacKay), ஜெனரல் வால்ட் நாதின்ஸிக்கும்(Walt Natynczyk) பங்கேற்க உள்ளனர்.
அமெரிக்காவின் ஆயுத உற்பத்தியில் பிரபலமாக விளங்கும் லாக்ஹீடு மார்ட்டினும்(Lockheed Martin), பென்டகன் அலுவலகமும் இணைந்து இந்தக் கூட்டத்தை நடத்துகின்றது.கனடா இந்த F35 விமானங்களை வாங்குவதில் பிரிட்டன், நோர்வே, டென்மார்க், ஹாலந்து, இத்தாலி, துருக்கி மற்றும் அவுஸ்திரேலியாவுடன் கூட்டுச் சேர்கிறது.
இப்போது உள்ள CF-18 ஜெட் போர்விமானங்களுக்குப் பதிலாக F-35 என்ற ஜெட் போர்விமானங்களை வாங்குவது குறித்து இந்த நாடுகள் கலந்தாலோசிக்கும் என்று தெரிகின்றது.இதுகுறித்து நாதின்சிக் பேசும்போது, நேட்டோ படையில் சேர்ந்து லிபியாவுக்கு போய் போர் நடத்தி வந்த போர் விமானிகள் F35 விமானங்களை செலுத்தி பார்க்க இருப்பதாகவும் தெரிவித்தார்.
தற்போது வாங்கப் போகும் இந்த போர் விமானங்கள் கனடாவின் விமானப்படையில் உள்ள மிகச்சிறந்த போர் விமானமாகும் என்றும் தெரிவித்தார்.இது தவிர புதிதாக போர்க்கப்பலை உருவாக்கும் முயற்சி குறித்தும் கனடா சிந்தித்து வருகிறது. நோவா ஸ்கோஷியா மற்றும் பிரிட்டிஷ் கொலம்பிய மாநிலங்களில் இன்னும் சில பத்தாண்டுகளில் கப்பல் கட்டும் தளங்களைத் தொடங்கவும் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் இஸ்ரேல் சிதைந்துவிடும்: பாதுகாப்புத் துறை அமைச்சர் எச்சரிக்கை.
இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் சிதைந்து விடும் என ஈரான் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜெனரல் அகமது வாஹிதி எச்சரித்துள்ளார்.ஈரான் அணு ஆயுதங்களை தயாரிப்பதாகவும், தங்கள் நாட்டு பிரஜைகள் மீது தொடந்து ஈரான் தாக்குதல் நடத்தி வருவதாகவும் இஸ்ரேல் புகார் கூறி வருகிறது.மேலும் அணு ஆயுத விவகாரத்தில் ஈரான் மீது இராணுவ நடவடிக்கை எடுக்கவும் நாங்கள் தயங்க மாட்டோம் என்று இஸ்ரேல் மிரட்டி வருகிறது.
இந்நிலையில் தாக்குதல் நடத்தினால் இஸ்ரேல் சிதைந்து விடும் என்று ஈரான் பாதுகாப்புத் துறை அமைச்சர் அகமது எச்சரித்துள்ளார்.இதுகுறித்து ஈரான் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின் போது அவர் கூறுகையில், ஈரான் அணுசக்தி திட்டங்களை நிறைவேற்றுவதில் உறுதியாக இருக்கிறது.
அணு உலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் அதற்கான பின் விளைவுகளை அந்த நாடு நிச்சயம் சந்திக்கும். தாக்குதல் நடத்தினால் இஸ்ரேல் சிதைந்துவிடும் என்று எச்சரித்தார்.ஆனால் இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் எந்த வகையான நடவடிக்கையை ஈரான் எடுக்கும் என்பதை அவர் தெளிவாக கூறவில்லை.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF