Monday, February 6, 2012

NEWS OF THE DAY.

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் அமைச்சர் சம்பிக்க ரணவக்க.
நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிற்காக ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பிரதிநிதியாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவுசெய்யப்பட்டுள்ளார். தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டம் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவின் ஊடாக எட்டப்பட வேண்டுமென ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
சர்வதேசத்திடம் சென்று முறைப்பாடு சொல்வதனை விடவும், நாட்டின் அதி உயர் நிர்வாக பீடமான நாடாளுமன்றில் கருத்துக்களை முன்வைப்பது முக்கியமானது என ஜாதிக ஹெல உறுமய கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு கலந்து கொள்ளாமை தொடர்பில் இந்த கருத்து வெளியிடப்பட்டுள்ளது.அனைத்துக் கட்சிப் பேரவை அமர்வுகள் போர் இடம்பெற்ற காலத்திலேயே முன்னெடுக்கப்பட்டன, தற்போது யுத்தம் நிறைவடைந்துள்ளது என கட்சி குறிப்பிட்டுள்ளது.போர் இடம்பெற்ற சூழ்நிலைகள் வேறு தற்போதைய நிலைமைகள் வேறு என்பதனை அரசியல் கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளது.தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு நாட்டின் மொத்த சனத்தொகையில் 4 வீதமான மக்களை மட்டும் பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும் ஹெல உறுமய குறிப்பிட்டுள்ளது.
ஒருபோதும் மன்னிப்பு கோர மாட்டோம் - அனோமா உறுதி.
சரத் பொன்சேகாவை விடுவித்துக் கொள்ள ஜனாதிபதி மன்னிப்புக் கோர தாம் தயாரில்லை, ஜனாதிபதி மன்னிப்புக் கோரும் அளவிற்கு அவர் எவ்வித தவறும் செய்யவில்லை என அனோமா பொன்சேகா தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அனோமா பொன்சேகா இவ்வாறு குறிப்பிட்டார்.
சரத் பொன்சேகாவை விடுவிக்க ஜனநாயக தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ் ஜனாதிபதியுடன் தொடர்ச்சியாக பேசி வருவதாகவும் பேச்சுவார்த்தையில் இணக்கப்படக்கூடிய விடயங்கள் இருக்குமாயின் அது குறித்து ஆராய தயார் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
ஆனால் ஒருபோதும் மன்னிப்புக் கோர தயாரில்லை என அவர் தெரிவித்தார். ஜனாதிபதியுடனான சந்திப்பில் இரு பக்கம் இருந்தும் நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.நிபந்தனைகள் என்னவென்பது குறித்து ஊடகங்களுக்கு இப்போது கருத்து வெளியிடுவது உகந்ததாக அமையாதென அனோமா பொன்சேகா குறிப்பிட்டுள்ளார். 
ஜனாதிபதி மகிந்த பாகிஸ்தானுக்கு விஜயம்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஒருநாள் விஜயமொன்றை மேற்கொண்டு இன்றிரவு ஜனாதிபதி பாகிஸ்தான் செல்ல உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் மேம்படுத்திக் கொள்ளும் வகையில், ஜனாதிபதி மகிந்தவுக்கு இந்த விஜயம் அமையும் என தெரிவிக்கப்படுகிறது.
பாகிஸ்தான் ஜனாதிபதி அசீப் அல் சர்தாரி மற்றும் பிரதமர் யூசுப் கிலாணி ஆகியோரை ஜனாதிபதி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.ஜனாதிபதி மஹிந்தவுடன், வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோர் பாகிஸ்தான் விஜயம் செய்ய உள்ளனர்.இதேவேளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சில் அமர்வுகளுக்கு முன்னதாக ஜனாதிபதி சில நாடுகளிடம் ஆதரவு திரட்டும் நோக்கில் விஜயங்களை மேற்கொள்ளவுள்ளதாக இராஜதந்திரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடக்கில் மீள்குடியேறுவோருக்கு இலவச மின்சார இணைப்பு.
வடக்கில் போர் இடம்பெற்ற பிரதேசங்களில் மீள்குடியேறும் மக்களுக்கு இலவசமாக மின்சார விநியோகம் வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.அதாவது, சொந்தப் பிரதேசங்களில் மீள்குடியேறும் நபர்களுக்கே இலவச மின்சார இணைப்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
வடக்கில் புதிதாக மின்சார இணைப்பைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் 4000 பேர் விண்ணப்பம் செய்துள்ளதாகவும் நாட்டில் அதிகளவில் மின்சாரத்தை மோசடியாக பயன்படுத்தும் மாவட்டம் வவுனியா எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாம் மாயாஜாலக்காரர்கள் அல்ல: ஜனாதிபதி.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற அபிவிருத்திக் கூட்டத்தில் கலந்து கொண்ட போது, நாம் மாயாஜாலக்காரர்கள் கிடையாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாம் மாயாஜால வித்தைகளை செய்யவில்லை, எனினும் வடக்கிற்கும் தெற்கிற்கும் ஒரே மாதிரி வேலை செய்கின்றோம். முழு நாட்டையும் ஒரேவிதமாகவே பார்க்கின்றோம்.வென்றெடுக்கப்பட்ட சமாதானத்தை தக்க வைத்துக் கொள்ள சகல இன மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இன, மத மற்றும் ஜாதி பேதங்களை மறந்து அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும்.சில ஊடகங்கள் போலியான தகவல்களை வெளியிடுகின்றன, அவ்வாறு கீழ்த்தரமான செயல்களை ஊடகங்கள் செய்யக் கூடாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
50 ஆண்டுகளுக்கு பிறகு எதிர்க்கட்சி அபார வெற்றி.
பின்லாந்து நாட்டின் ஜனாதிபதியாக 50 ஆண்டுகளுக்கு பிறகு கன்சர்வேடிவ் கட்சியின் வேட்பாளர் சாலி நீனிஸ்டோ தெரிவு செய்யப்பட்டுள்ளார்.பின்லாந்து நாட்டில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஆளும் கிரீன்ஸ் கட்சி சார்பில் பெக்கா ஹாவிஸ்டோ மற்றும் எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சி சார்பில் சாலி நீனிஸ்டோ (63) ஆகியோர் போட்டியிட்டனர்.
தேர்தல் முடிந்த பின் வாக்குகள் எண்ணப்பட்டதில் கன்சர்வேடிவ் கட்சி வேட்பாளர் சாலி நீனிஸ்டோ 63 சதவிகித வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றார். பெக்கா ஹாவிஸ்மோவுக்கு 37 சதவிகித வாக்குகளே கிடைத்தன.அதன் பின் ஜனாதிபதி சாலி நீனிஸ்டோ பொறுப்பு ஏற்கவுள்ளார். 50 ஆண்டுகளுக்கு பிறகு கன்சர்வேடிவ் கட்சி வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
அல்கொய்தாவின் தற்கொலைப்படையில் பெண்கள்.
பிரிட்டனில் உள்ள அல்கொய்தா தீவிரவாத படையினர் தனது படைகளுக்கு பெண்களை நியமிக்க திட்டமிட்டுள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.இத்தற்கொலைத் தாக்குதலில் ஈடுபடும் பெண்களை அல்கொய்தாவினர் மரண தேவதைகள் என்று புகழ்மாலை சூட்டி மகிழ்கின்றனர்.
அல்கொய்தா தனது வன்முறை நடவடிக்கைகளுக்காக பெண்களைக் குறிவைத்துப் பிடிப்பதாக உள்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.இவ்வாறு பெண்களை கொடுமைப்படுத்தும் நிகழ்வுகள் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து தான் உருவாகியது. இஸ்ரேலுக்கு எதிரான தற்கொலைத் தாக்குதல்களில் பாலஸ்தீனியப் பெண்கள் ஈடுபடுத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இங்கிலாந்திலும் இந்த முறை அறிமுகமாக உள்ளது. கடந்தாண்டு அமெரிக்காவால் கொல்லப்பட்ட அல்கொய்தா இயக்கத் தலைவரான அன்வர் அல் அல்லாகி என்பவரின் திட்டத்திற்கு இரையாகிப் போன தற்கொலைப் படையில் உள்ளனர்.இவரின் முயற்சியால் பிரிட்டனில் வாழும் இஸ்லாமிய இளைஞர்கள் அல்கொய்தாவில் இணைவதை The Sun என்ற செய்தித்தாள் அம்பலப்படுத்தியது.
உள்துறை அமைச்சகக் குழுவின் தலைவரான உழைப்பாளர் கட்சியைச் சேர்ந்த கீத் வாஸ் கூறுகையில், இந்தத் தற்கொலைப்படை உருவாக்கத்தால் நம்முடைய புலனாய்வுக் குழுவினர் இன்னும் சுறுசுறுப்படைந்திருப்பதாகத் தெரிவித்தனர்.இணையத்தளம் மூலமாகவும், தனிநபர் மூலமாகவும் அல்கொய்தாவினரின் தமது வன்முறைத் தாக்குதல்களை நியாயப்படுத்துவதைத் தடுக்கவும் இவர்களின் அச்சுறுத்தலை ஒடுக்கவும், நாம் பல நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டி உள்ளது என்றும் கீத் வாஸ் கூறினார்.
பிரான்சில் கடும் குளிர்: பலர் உயிரிழப்பு.
பிரான்ஸ் நாட்டில் மட்டும் குளிருக்கு 7 பேர் உயிரிழந்துள்ளனர், இதனால் சாலைப் போக்குவரத்து மட்டுமல்லாமல் விமானப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.12 வயதுப் பையன் உறைந்து போன குளத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது உறைபனி உடைந்ததில் பரிதாபமாக உயிரிழந்தான். பாரிஸ் அருகே ஒரு 46 வயதுப் பெண் குளிரால் விறைத்துக் கிடந்தாள்.
அல்சீமர் வியாதியால் அவதிப்பட்ட முதியவர் இருவர் இறந்துவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜுரா மலைப்பகுதியில் தொலைதூர நடைப்பயிற்சி மேற்கொண்ட ஐவர் குழு -15 டிகிரி செல்சியஸ் என்ற நிலையில் குளிரால் நடுங்கியவாறு அவசர சேவையிடம் உதவி கோரியதால் அதிர்ஷ்டவசமாகக் காப்பாற்றப்பட்டனர்.
பாரிஸ் மற்றும் ஓர்லே விமான நிலையங்களில் இருந்து விமானங்கள் காலதாமதமாகப் புறப்பட்டுச் சென்றன. இங்கு வந்த விமானங்களும் தாமதமாகவே வந்து சேர்ந்தன. சாலைப் போக்குவரத்து பனியின் காரணமாக ஆங்காங்கே துண்டிக்கப்பட்டுள்ளது.வருகிற 8ம் திகதி வரும் பனிகொட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, நேற்று மதியம் முதல் நாட்டின் பல பகுதிகளில் பனிவிழுவது குறைந்திருக்கிறது.
கப்பலில் வைரஸ் பரவியதால் 500க்கும் மேற்பட்டோர் பாதிப்பு.
அமெரிக்க கப்பல் ஒன்றில் வைரஸ் கிருமி பரவியதால் 500க்கும் அதிகமான பயணிகள் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ளது போர்ட் லாடர்டேல் துறைமுகம். கரீபியன் பகுதியில் இருந்து கடந்த 4ம் திகதி கிரவுன் பிரின்சஸ் என்ற கப்பல் துறைமுகத்தை வந்தடைந்தது.அதில் ஊழியர்கள், பயணிகள் என 3,100 பேர் இருந்தனர். அவர்களில் 364 பயணிகளும், 30 ஊழியர்களும் தொற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
அதன்பின் 5ம் திகதி ரூபி பிரின்சஸ் என்ற கப்பல் வந்தது. அதில் 3,000 பேர் இருந்தனர். அவர்களில் நூற்றுக்கும் அதிகமான பயணிகள் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் துறைமுகத்தில் வந்திறங்கினர்.இதுகுறித்து பயணிகள் கப்பல் போக்குவரத்து துறை செய்தித் தொடர்பாளர் ஜூலி பென்சன் கூறுகையில், பயணிகள், ஊழியர்கள் உடல்நலம் பாதிப்புக்கு என்ன காரணம் என்று ஆராய்ந்து வருகிறோம்.
இந்த விடயத்தில் மருத்துவ குழுவினருக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறோம். கப்பல்களில் வைரஸ் கிருமி பரவியதாக தெரியவந்தது. உடனடியாக 2 கப்பல்களையும் முழுமையாக சுத்தம் செய்து விட்டோம். கிருமி பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.சம்பந்தப்பட்ட பயணிகள், ஊழியர்களை மருத்துவ பரிசோதனை செய்த போது, அவர்கள் நோரோ வைரஸ் என்ற கிருமியால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இந்த வைரஸ் கிருமி கெட்டுப் போன உணவு, மாசடைந்த தண்ணீர் மூலம் பரவுகிறது.
ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு எளிதில் தொற்றி கொள்ளும். கிருமி படிந்த பொருளை தொட்டாலும் தொற்றிக் கொள்ளும். காற்றில் வேகமாக பரவுகிறது.வழக்கமாக இதுபோன்ற வைரஸ்கள், காற்றோட்டம், வெளிச்சம் இல்லாத இடங்களிலேயே அதிகமாக பரவுகிறது. குறிப்பாக சிறை, மருத்துவமனைகள், முகாம்கள், விடுதிகள், கப்பல்கள், விமானங்கள், ரயில்களில் இந்த கிருமி எளிதில் தொற்றிக் கொள்ளும். இதனால் வயிற்றுப் போக்கு, வாந்தி, வயிற்று வலி போன்ற பிரச்னைகள் ஏற்படும் என்று வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
அரசியின் வைரவிழா: கனடா மக்கள் உற்சாக கொண்டாட்டம்.
இங்கிலாந்தின் அரசி எலிசபெத் பதவியேற்று 60 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி கனடா இதனை சிறப்பாக கொண்டாட முடிவு செய்துள்ளது.பிரிட்டன், கனடா மற்றும் காமன்வெல்த் நாடுகள் அனைத்திற்கும் எலிசபெத் அரசியே ஆட்சித்தலைவர் ஆவார். எனவே கனடா இவர் பெயரில் 60 விருதுகளை 60 சிறந்த கனடா குடிமக்களுக்கு வழங்கவும், தபால் தலைகளை வெளியிடவும் திட்டமிட்டுள்ளது.
1952ம் ஆண்டில் 6ம் ஜார்ஜ் மன்னர் பிப்ரவரி மாதம் 6ம் திகதி அன்று மரணத்தைத் தழுவியவுடன், அவரது மகளான எலிசபெத் அரசியாக அறிவிக்கப்பட்டார். இந்த நாளில் அரசிக்கு தன் தந்தையாரின் மரணம் நினைவுக்கு வருவதால் அவர் அரண்மனையை விட்டு வெளியே வருவதில்லை.ஆறாம் ஜார்ஜ் மன்னர் இறந்து ஒரு வருடம் துக்கம் அனுசரித்து முடித்த பின்பு 1953ம் ஆண்டில் ஜூன் மாதம் 2ம் நாளன்று எலிசபெத்துக்கு பட்டம் சூட்டு விழா வெகு சிறப்பாக இலண்டன் மாநகரில் நடந்தது.இதை நினைவுகூரும் வகையில் உலகமெங்கும் நான்கு மாதங்கள் விழாக்கள் கொண்டாட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. எனினும் அரசியார் பிரிட்டனுக்கு வெளியே நடக்கும் விழாக்களில் கலந்துகொள்ளமாட்டார்.
அரச குடும்பத்தினர் அவ்விழாக்களில் கலந்துகொண்டு கௌரவிக்கின்றனர். அந்த வகையில் இளவரசர் சார்லசும், அவர் மனைவி கமீலாவும் கனடாவில் நடக்கும் விழாவிற்கு மே மாதம் வருகை தந்து சிறப்பிக்கின்றனர்.இந்நிகழ்வின் சிறப்பாக ஒட்டாவா மாநிலத்தில் விழா முத்திரைகள் பனிக்கட்டியால் பொறிக்கப்படுகிறது. நாடாளுமன்றக் கட்டிடத்தில் விழா எடுக்கப்படுகிறது. கவர்னர் ஜெனரல் டேவிட் ஜான்ஸ்ட்டன் ரிடியு ஹாலில் சிறப்பான அறுபது பேருக்கு விழாப்பதக்கங்களை அளித்து கௌரவிக்கப்படவுள்ளார்.
இவரது இணையத்தளத்தில் இந்த விழாப்பதக்கம் அரசியார் தமது நாட்டிற்கு அளித்த சேவையை நினைவுபடுத்தும் கௌரவம் உடையது என்று அதன் பெருமையைப் பறைசாற்றியுள்ளார்.கனடா அரசு 7.5 மில்லியன் டொலரை இவ்விழா செலவுகளுக்காக ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 6 உடல் உறுப்புகள் மாற்றம்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அலனா ஷெவனெல் என்ற 9 வயது சிறுமிக்கு 6 உடல் உறுப்புகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.அமெரிக்காவின் மெய்ன் மாகாணத்தை சேர்ந்த சிறுமி அலனா ஷெவனெல்(9). புற்றுநோயால் பாதிக்கப்பட்டதால், அவளது பல உறுப்புகளுக்கும் நோய் பரவியது.
குடல், கல்லீரல், கணையம், உணவுக் குழாய் உட்பட 6 உறுப்புகளில் புற்றுநோய் பரவியதை மசாசூசட்ஸ் மாகாணத்தின் பாஸ்டன் நகர குழந்தைகள் மருத்துவமனை டாக்டர்கள் கண்டுபிடித்தனர். சிறுமியை காப்பாற்ற மருத்துவ குழு தீவிர ஆலோசனை நடத்தியது. பின்னர் 6 உறுப்புகளை மாற்றி அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி சிறுமியுடன் அவளது பாட்டி மருத்துவமனையில் தங்கியிருந்தார். மூன்று மாதங்களுக்கு மேல் தொடர்ந்து தீவிர சிகிச்சையில் இருந்த சிறுமி அலனாவுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை 6 உறுப்புகள் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.இப்போது சிறுமி உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. இது மருத்துவ உலகில் ஒரு அதிசயம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து குழந்தைகள் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் ஹியூங் பே கிம் கூறுகையில், சிறுமிக்கு அளித்த எல்லா வித சிகிச்சைகளும் தோல்வி அடைந்த நிலையில், 6 உறுப்புகளை மாற்றுவது என்ற முடிவுக்கு வந்தோம்.அதிர்ஷ்டவசமாக சிறுமிக்கு தேவைப்பட்ட 6 உறுப்புகளும் தானமாக கிடைத்தது. அதனால் உடனடியாக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து முடித்தோம். அவள் வழக்கம் போல் இருக்கலாம் என்று கூறியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியாக மீண்டும் பதவியேற்பேன்: ஒபாமா.
அமெரிக்காவின் ஜனாதிபதியாக மீண்டும் நான் தான் பதவியேற்பேன் என தற்போதைய ஜனாதிபதி ஒபாமா கூறியுள்ளார்.இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது, பெரும் சரிவை சந்தித்த அமெரிக்காவின் பொருளாதாரம் தற்போது இயல்புநிலைக்கு திரும்பி வருகிறது.
அதற்கான நடவடிக்கைகளில் தனது தலைமையிலான அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ஒருமுறை ஜனாதிபதியாக இருப்பதால் மட்டுமே, நாட்டின் பொருளதாரத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டுவர முடியாது.எனவே அடுத்த தேர்தலிலும் மக்கள் தன்னை தேர்ந்தெடுக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்வதாக அவர் கூறியுள்ளார்.
காஸ் சிலிண்டர் வெடித்ததில் கட்டிடம் இடிந்து விழுந்தது: 100 பேர் பலி.
பாகிஸ்தானின் லாகூர் நகரத்தில் தொழிற்சாலைக் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.முல்தான் சாலையில் விலங்குகளுக்கான ஊசி மருந்து தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று இயங்கி வந்தது. இந்த கட்டிடத்தில் இன்று காலை சிலிண்டர் வெடித்ததில் கட்டிடமே நொறுங்கி விழுந்தது.
விபத்து நடந்த நேரத்தில் அந்த கட்டிடத்தில் 150க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள்.பெண்கள், சிறார்கள் என ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்திருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது, மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.
பிலிப்பைன்சில் கடும் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
பிலிப்பைன்சில் அந்நாட்டு நேரப்படி இன்று காலை 11.39 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.இந்நிலநடுக்கம் நெக்ராஸ் தீவில் உள்ள துமாகுயட் நகரில் 6.8 ரிக்டர் என்ற அளவில் ஏற்பட்டது.
அதில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. நெக்ராஸ் நகரில் வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் ஒரு குழந்தை பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.கடலில் அலைகள் அதிவேகமாக எழுந்ததால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
ஜேர்மனியில் புதிய ஏவுகணைத் தடுப்பு மையம்.
நேட்டோ படைகள் தனக்கென்று தனியாக ஏவுகணைத் தடுப்பு மையம் ஒன்றை ஜேர்மனியில் அமைக்கிறது. இச்செயல்பாட்டு மையம் ரேம்ஸ்ட்டீன் விமானத்தளத்தில் அமைக்கப்படுகிறது.அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் உள்ள அரசியல்வாதிகளும், இராணுவ நிபுணர்களும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.ஜேர்மனியில் அமையவிருக்கும் இந்த இராணுவத் தளத்திற்கு பல பில்லியன் டொலர் செலவாகும். ரைன்லாந்து – பாலட்டினேட் மாநிலத்தில் இந்த ஏவுகணைத் தடுப்பு தலைமையகம் அமைக்கப்படுகின்றது. இதன் மூலமாக அமெரிக்கா, ஐரோப்பிய நிலப்பகுதிகளைப் பாதுகாக்க முடியும்.
அமெரிக்கா தனது இராணுவச் செலவுகளைக் குறைக்கப் போவதாக அறிவித்திருந்த வேளையில், புதிதாக ஒரு இராணுவத் தளத்தை ஆரம்பிக்கப் போவதாக தெரிவித்திருப்பது வியப்பான தகவலாகும்.ஐரோப்பாவில் தங்க வைக்கப்பட்டுள்ள இரண்டு அமெரிக்கப் படைகள் அடுத்த இரண்டாண்டுகளில் தன் தாய்நாட்டிற்குத் திரும்பிவிடுவர். இதில் ஆயிரக்கணக்கான வீரர்கள் ஜேர்மனியை விட்டுக் கிளம்பி விடுவார்கள்.
மொத்தத்தில் உலகம் முழுக்க 90,000 அமெரிக்க இராணுவ வீரர்கள், இராணுவப் பணியிலிருந்து விடுவிக்கப்படுவர். இதனால் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் திட்டப்படி அடுத்த பத்தாண்டுகளில் 480 பில்லியன் டொலர் வரை இராணுவச் செலவு குறையலாம்.இந்த மாற்றங்களுக்கிடையே ஏவுகணைத் தடுப்பு இராணுவத் தலைமையகத்தை ஜேர்மனியில் நிறுவுவது இன்னும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இதனால் இராணுவச் செலவைக் குறைக்கும் முயற்சியிலிருந்து விலகி புதிய இராணுவப்பணி வாய்ப்புகள் உருவாகும் நிலை தோன்றும்.
சிரியா தூதரகங்கள் மீது தாக்குதல்.
ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் சிரிய ஜனாதிபதி அசாத்திக்கு எதிரான தீர்மானத்தை ரஷ்யாவும், சீனாவும் தங்கள் தடையாணையை பயன்படுத்தி எதிர்த்தன.இதனால் சிரியாவுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்படாததால் சிரியா எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் ஆவேசம் அடைந்துள்ளனர்.
இதன் விளைவாக அவுஸ்திரேலியா தலைநகர் கேன்பெரா, பிரிட்டன் தலைநகர் லண்டன், கிரீஸ் தலைநகர் ஏதென்ஸ், ஜேர்மனி தலைநகர் பெர்லின், எகிப்து தலைநகர் கெய்ரோ மற்றும் குவைத் ஆகிய நகரங்களில் உள்ள சிரிய தூதரகங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.கனடா தலைநகர் ஒட்டாவாவில் சிரியா தூதரகம் முன் அசாத் எதிர்ப்பாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிரியா நாட்டு தூதுவர்களை வெளியேற்ற வேண்டும்: யேமனைச் சேர்ந்த தவக் உல் கர்மன்.
சிரியாவை ஜனநாயக நாடாக விரும்பும் ஜனாதிபதி பஷர் அல் அஷாத்துக்கு எதிராக ஒன்று திரளவேண்டும் என அமெரிக்கா கூறியுள்ளது.சிரியாவில் ஜனநாயகத்தில் மாற்றமொன்றைக் கொண்டுவருவதற்காக முயன்றுவரும் எதிரணியினருக்கு ஆதரவளிக்க வேண்டுமென்று அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஹிலாரி கிளிண்டன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சிரியாவில் நடந்துவரும் வன்முறைகளுக்கு முடிவுகட்டுவதற்கு ஐ.நா.வுக்கு வெளியே அமெரிக்கா தயாராகிறதா என்ற கேள்வியை இந்த அழைப்பு ஏற்படுத்தியுள்ளது.சிரியாவுக்கு எதிரான ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தீ்ர்மானத்தில் ரஷ்யாவும், சீனாவும் வீட்டோ அதிகாரத்தைப் பிரயோகித்துள்ளமை மேற்குலகிலும் அரபுலகிலும் அதிருப்தியை உண்டுபண்ணியுள்ளது.
இதேவேளை சிரியாவில் நடந்துவரும் கொலைகளுக்கு ரஷ்யாவும், சீனாவும் பொறுப்பை ஏற்றுத்தான் ஆகவேண்டும் என்று நோபல் அமைதிப் பரிசு வென்ற யேமனைச் சேர்ந்த தவக் உல் கர்மன் தெரிவித்துள்ளார்.உலகநாடுகள் சிரிய நாட்டு தூதுவர்களை தமது மண்ணிலிருந்து வெளியேற்ற வேண்டுமென்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். சிரியாவில் அதிகரித்துவரும் வன்முறைகளின் மத்தியில் இதுதான் “எம்மால் செய்யக்கூடிய குறைந்தபட்ச நடவடிக்கை” என அவர் கூறியுள்ளார்.
எகிப்தில் இராணுவத்திற்கு எதிராக போராட்டம்: நான்காவது நாளாக தொடர்ந்தது.
எகிப்தில் இராணுவத்திற்கு எதிராக நடைபெறும் கலவரம் நான்காவது நாளாக தொடர்ந்தது. இந்த கலவரத்தில் இதுவரை 12 பேர் பலியாகியுள்ளனர், 2,532 பேர் காயமடைந்துள்ளனர்.எகிப்தின் வடபகுதியில் உள்ள போர்ட் சயீத் என்ற துறைமுக நகரில் கடந்த 1ம் திகதி நடந்த கால்பந்தாட்ட போட்டியின் போது இரு குழுக்களுக்குள் ஏற்பட்ட மோதலில் 74 பேர் பலியாகினர்.இதன் பின்னணியில் இராணுவம் இருப்பதாக பாதிக்கப்பட்ட கால்பந்து போட்டிக் குழுவின் ஆதரவாளர்கள் கருதினர்.
இதையடுத்து தலைநகர் கெய்ரோவில் இராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். அத்துடன் காவல்துறையினரை எதிர்த்து கல்வீச்சு உட்பட பல்வேறு தாக்குதல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் இக்கலவரம் நான்காவது நாளாக தொடர்ந்தது. இதில் கெய்ரோவில் உள்ள வரி ஆணையத்தின் கட்டிடம் தீக்கிரையாக்கப்பட்டது. இந்தக் கட்டடத்தின் அருகில் தான் உள்துறை அமைச்சகம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்துறை அமைச்சகம் உட்பட முக்கியமான பகுதிகளில் கலவரக்காரர்கள் கூடுவதை தவிர்க்கும் வகையில் காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.கெய்ரோவில் மட்டுமல்லாமல் சூயஸ் நகரிலும் போராட்டம் நடந்தது. இதில் இரண்டு பேர் காவல்துறை அதிகாரிகள் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியாகினர். இவர்களையும் சேர்த்து இக்கலவரத்தில் இதுவரை 12 பேர் பலியாகியுள்ளனர். 2,532 பேர் காயம் அடைந்துள்ளனர்.
பிலிப்பைன்சில் பயங்கர நிலநடுக்கம்: 44 பேர் பலி.
பிலிப்பைன்ஸ் நாட்டில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 44 பேர் பலியாயினர், 29 பேரை காணவில்லை.பிலிப்பைன்ஸ் நாட்டின் மத்திய பகுதியில் உள்ள நீக்ரோஸ் தீவில் 6.8 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் குய்குல்கான் என்ற நகரத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி கல்லூரி மாணவர் ஒருவர், பள்ளி மாணவர்கள் இரண்டு பேர் உட்பட நான்கு பேர் பலியாயினர்.
சந்தை கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் ஒருவர் பலியானார். இந்த நிலநடுக்கத்தில் 44 பேர் வரை பலியாகியுள்ளதாக அந்நாட்டு இராணுவ அதிகாரி கூறியுள்ளதாக அந்நாட்டு பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.நிலநடுக்கத்தால் மூன்று பாலங்களில் விரிசல் விட்டுள்ளதால் அதை மக்கள் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக நகர மேயர் எர்னெஸ்டோ ரியஸ் தெரிவித்துள்ளார்.லா லிபர்டாட் பகுதியில் கடற்கரையோர குடிசை விடுதிகள் ராட்சத கடல் அலைகளால் அடித்து செல்லப்பட்டன. இதனால் இப்பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. செபு நகரத்தில் மூன்றடுக்கு கட்டிடம் ஒன்று தரை மட்டமானது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF