Tuesday, February 7, 2012

NEWS OF THE DAY.

இராணுவ உயரதிகாரிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும்!- ஹிலாரி அரசாங்கத்திடம் கோரிக்கை.
வன்னிப் போரில் கடமையாற்றிய உயர் இராணுவ அதிகாரிகளுக்கு தண்டனை விதிக்குமாறு அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்ரன், இலங்கை அரசாங்கத்திடம் கோரியுள்ளார். வடக்கு கிழக்கு இராணுவ முகாம்களை அகற்றுமாறும் படையினருக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தி ஹிலாரி கிளின்ரன் அழுத்தங்களை பிரயோகித்து வருவதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.இலங்கைக்கான அமெரிக்கத் தூதரக அதிகாரியின் ஊடாக அனுப்பி வைக்கப்பட்ட விசேட கடிதத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை பரிந்துரைகள் அமுல்படுத்தவில்லை என ஹிலாரி வருத்தம் வெளியிட்டுள்ளார்.இதேவேளை, ஹிலாரி கிளின்ரன் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் கருத்துக்களை வெளியிட்டுள்ளதாக சிரேஸ்ட படையதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.
தீர்வு திட்டம் குறித்து, எதிர்க்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் : ஐ.தே.க.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட நாட்டின் சகல எதிர்க்கட்சிகளுடனும் ஐக்கிய தேசியக் கட்சி பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகள் அமுல்படுத்தப்படாமை, ஜனநாயகத்தை நிலை நாட்டாமை உள்ளிட்ட விடயங்கள் குறித்து பேசப்படும்.
உத்தியோகப் பற்றற்ற ரீதியில் இந்த வாரம் முதல் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும்.வடக்கிற்கு அரசியல் தீர்வு வழங்குவதாகவும், நல்லிணக்க அணைக்குழு பரிந்துரைகளை அமுல்படுத்துவதாகவும் அரசாங்கம் வாக்குறுதி அளித்த போதிலும் இதுவரையில் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.
நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைத்து அதன் மூலம் அரசியல் தீர்வுத் திட்டத்தை காணும் முயற்சியானது காலத்தை கடத்தும் நடவடிக்கையாகும்.காலத்தை கடத்தாது அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெளிவாக நாட்டு மக்களுக்கு அறிவிக்க வேண்டும்.அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகள் தொடர்பில் எதிர்க்கட்சிகளின் நிலைப்பாட்டை அறிந்து கொள்ளும் நோக்கில் சகல கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்த தீர்மானித்துள்ளதாக திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவின் இரண்டாம் எலிசபெத் மகாராணி இலங்கை வருகை?
இலங்கையில் 2013 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பொது நலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டில் பிரித்தானியாவின் இரண்டாவது எலிசபெத் மகாராணியார் கலந்து கொள்ளவுள்ளதாக பங்கிங்ஹாம் மாளிகை அறிவித்துள்ளது. இலங்கையில் 1976 ஆம் ஆண்டு நடைபெற்ற அணிசேரா நாடுகளின் மாநாட்டில் 54 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். அதன் பின்னர், இலங்கையில் நடைபெற உள்ள மிகப் பெரிய மாநாடு இதுவாகும்.
பொதுநலவாய நாடுகளின் மாநாட்டு ஏற்பாடுகளுக்காக கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டப சூழலில் விஷேட செயலணிக்குழு அமைக்கப்பட்டுள்ளதுடன் இதற்காக விஷேட அரச ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார்கள்.அவ்வூழியர்களின் அடிப்படை சம்பளத்தை விட 50 வீத மேலதிக கொடுப்பனவு வழங்கப்பட்டு வருகிறது.
பிரித்தானியாவில் போலிக் கடவுச் சீட்டு தாயரித்த இலங்கையைச் சேர்ந்த நால்வர் கைது.
பிரித்தானிய - வெட்போர்ட் பகுதியில் இலங்கை அகதிகளுக்கு போலி கடவுச் சீட்டுகளை செய்து கொடுத்து அவர்களை தொடந்தும் அங்கு தங்கியிருக்க ஏற்பாடுகளைச் செய்துக் கொடுத்த இலங்கை பிரஜைகள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இயூஸ்டன் எவனியூவைச் சேர்ந்த இலங்கை பிரஜைகளான மொஹமட் ஹுசைன், அஸ்லாம் ரியாஸ், மொஹமட் பயாஸ் ஆகியோரும் ஹராவ் பகுதியைச் சேர்ந்த மொஹமட் இப்ராஹிம் என்பவரும் இவ்வாறு சிறை வைக்கப்பட்டுள்ளனர்.
ஹீத்ரோ விமான நிலைய அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.பிரித்தானிய எல்லை பாதுகாப்பு முகவர் நிலையத்தினர் மேற்கொண்ட தேடுதலில் ரியாஸ், பயாஸ், இப்ராஹிம் ஆகியோரிடமிருந்து போலி ஆவணங்கள் மீட்கப்பட்டுள்ளன.
ரியாஸ், ஹுசைன், இப்ராஹிம் ஆகியோர் விசா முடிவடைந்த நிலையில் பிரித்தானியாவில் தங்கியிருந்துள்ள நிலையில் பயாஸ் என்பவருக்கு மாத்திரம் மாணவர் விசா இருந்துள்ளது.இவர்கள் தரமான போலி ஆவணங்களை தயாரித்துக் கொடுத்து பலரை சட்டவிரோதமாக பிரித்தானியாவில் தங்க வைத்துள்ளதாக பிரித்தானிய எல்லை பாதுகாப்பு முகவர் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட 23 வயதுடைய ஹுசைன் பிரித்தானிய குடிவரவு சட்டத்தின்படி அல்பான்ஸ் குரொன் நீதிமன்றால் 13 மாதங்களுக்கும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.27 வயதுடைய அஸ்லாம் ரியாஸ் மற்றும் 21 வயதுடைய மொஹமட் பயாஸ் ஆகியோர் குற்றத்தை ஒப்புக் கொண்டதால் 12 மாதங்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இப்ராஹிம் என்பவர் 6 மாதங்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.சிறை தண்டனை காலம் முடிவுற்றதும் இவர்கள் நாட்டைவிட்டு வெளியேற்றப்படுவர் என பிரித்தானிய எல்லை பாதுகாப்பு முகவர் நிலையம் தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலியாவில் வெள்ளம் காரணமாக 2200 பேர் இடமாற்றம்.
அவுஸ்திரேலியாவின் கிழக்கு குயின்ஸ்லான்ட் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக அப்பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.சென்ஜோர்ஜ் நகரப் பகுதியில் கடந்த இரண்டு வருடங்களின் பின்னர் ஏற்பட்டுள்ள பாரிய வெள்ள அனர்த்தம் இது எனத் தெரிவிக்கப்படுகிறது.
பாலோன் ஆற்றின் நீர்மட்டம் இன்று 1.48 மீற்றர் உயர்ந்துள்ளதாகவும், நாளை இதன் நீர்மட்டம் 14 - 15 மீற்றர் வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.மேலும் 2200 பேர் தங்களது இருப்பிடத்தை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். இவர்களில் 1700 பேர் தங்களது சொந்த வாகனங்கள் மூலமாகவும், 500 பேர் பேருந்துகளிலும் சென்றனர்.
இப்பகுதியை விட்டு வெளியேறுமாறு அதிகாரிகள் கூறிய போதிலும், 400 குடும்பங்கள் இன்னமும் அங்கு தங்கியுள்ளனர். இவர்களை அழைத்து வருவதற்காக விமானங்கள் அங்கு சென்றுள்ளன.
ஈரான் பிரச்னையில் இஸ்ரேலுடன் இணைந்துள்ளோம்: ஒபாமா.
ஈரான் அணு ஆயுதங்களை தயாரிப்பதாக சந்தேகப்படும் இஸ்ரேல் அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்போவதாக தகவல்கள் வெளியாயின.இதுகுறித்து அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா அளித்த பேட்டியில் கூறியதாவது, ஈரான் அணு ஆயுதங்களை பெறுவதை தடுக்க, எல்லா நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்.
ஈரான் அணு ஆயுத தயாரிப்பு முயற்சியில் ஈடுபடக்கூடாது என்பதற்காக சர்வதேச நாடுகள் பொருளாதாரத் தடையை அமுல்படுத்தியுள்ளன. ஈரானை தண்டிக்க இந்த நடவடிக்கையே போதுமானது.ஈரான் அணு சக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்துவது குறித்து இஸ்ரேல் இதுவரை முயற்சி ஏதும் செய்யவில்லை. அமெரிக்காவின் பாதுகாப்பு எங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. ஈரானின் நடவடிக்கையினால் இஸ்ரேலுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம்.
வளைகுடா பகுதியில் எந்த ராணுவ நடவடிக்கை மேற்கொண்டாலும் அது எண்ணெய் விலையை உயர்த்த வழி ஏற்படுத்தி விடும். எனவே ஈரானுடனான பிரச்னையை தூதரக மட்டத்திலேயே தீர்த்துக் கொள்ள முயற்சித்து வருகிறோம் என்று கூறினார்.மேலும் அவர் தெரிவிக்கையில் அமெரிக்கத் தேர்தலில், இரண்டாவது முறை போட்டியிட எனக்கு தகுதி உள்ளது என நம்புகிறேன். என்னுடைய முதல் கட்ட ஜனாதிபதி பதவியில் நிறைவேற்ற முடியாத விடயங்களை, குறிப்பாக பொருளாதார மேம்பாட்டு விடயங்களை இரண்டாவது கட்ட தேர்தலின் மூலம் பூர்த்தி செய்ய முடியும் என நம்புகிறேன் என கூறியுள்ளார்.
புதிய பாலஸ்தீன அரசு 18ம் திகதி அறிவிப்பு.
புதிய பாலஸ்தீன அரசு எதிர்வரும் 18ம் திகதி அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.பாலஸ்தீன விடுதலை இயக்கப் பிரிவுகளில் ஒன்றான ஃபதாவைச் சேர்ந்த ஆசாம் அல் அகமது கத்தார் நாட்டியிலிருந்து செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டிளித்த போது இதைத் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், பாலஸ்தீன விடுதலைக்காகப் போராடி வரும் ஃபதா மற்றும் ஹமாஸ் இயக்கங்களிடையே ஏற்பட்டுள்ள உடன்பாட்டின் படி பிப்ரவரி மாதம் 18ம் திகதி புதிய அரசு அறிவிக்கப்படும். எகிப்து தலைநகர் கெய்ரோவில் அறிவிப்பு வெளியாகும் என்றார்.மேலும் இடைக்கால அரசின் தலைவரான முகமது அப்பாஸ் தலைமையில் புதிய அரசு அமையும் என்றும் தெரிவித்தார்.
மகிழுந்து ஓட்டுநர் உரிமம் கேட்டு சவுதி அரேபியாவில் பெண் வழக்கு.
சவுதியில் பெண்கள் மகிழுந்து ஓட்டக்கூடாது என்ற தடையை மீறி மனால் என்ற பெண் சாலையில் மகிழுந்து ஓட்டி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.மகிழுந்து ஓட்டுநர் உரிமம் கேட்டு சவுதியில் பெண் ஒருவர் வழக்கு தொடுத்துள்ளார். சவுதி அரேபியாவில் பெண்கள் மகிழுந்து ஓட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேர்தலில் வாக்களிக்கும் உரிமையும் இல்லாமல் இருந்தது. சமீபத்தில் இதற்கான தடை விலக்கப்பட்டு பெண்களும் வாக்களிக்க வகை செய்யப்பட்டுள்ளது. ஆனால் வாகன ஓட்டுமம் உரிமத்துக்கு தடை மட்டும் நீடிக்கிறது. இந்நிலையில் ரியாத்தில் உள்ள மனால் அல் ஷெரீப் என்ற பெண் ஓட்டும் உரிமம் கேட்டு விண்ணப்பித்தார்.3 மாதங்களாகியும் அவருக்கு போக்குவரத்து துறை இயக்குனரகத்திடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டதற்கு, விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக கூறியுள்ளனர்.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த மனால், கடந்த நவம்பர் மாதம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதுகுறித்து மனால் நிருபர்களிடம் கூறுகையில், பெண்களுக்கு ஓட்டும் உரிமம் வழங்க கூடாது என்று சவுதி சட்டத்தில் எந்த இடத்திலும் கூறப்படவில்லை.தனியாக வங்கி கணக்கு தொடங்கவும், கடவுச்சீட்டு எடுக்கவும், ஆண் துணை இல்லாமல் பள்ளி செல்லவும் பெண்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. இவை எல்லாம் சட்டவிரோதம் என்று சட்டத்தில் கூறப்படவில்லை.
ஆனால் மதத் தலைவர்கள் தான் தடை விதிக்கின்றனர். என்னைப் போலவே பல பெண்கள் உரிமம் கிடைக்காமல் அதிருப்தியில் உள்ளனர். நான் துணிந்து வழக்கு தொடுத்துள்ளேன். இதனால் மற்ற பெண்களும் தைரியமாக உரிமம் கேட்டு வருவார்கள் என்றார்.
அதன் பின் சவுதி அரேபியாவில் உள்ள சாலைகளில் தடையை மீறி மனால் கார் ஓட்டி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். அத்துடன் போராட்டம் நடத்தியதால் மனாலை பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்தனர், ஒன்பது நாட்களுக்கு பிறகு விடுவிக்கப்பட்டார்.வெளியில் வந்த மனால் பெண்கள் கார் ஓட்டலாம் என்ற விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டதால் சவுதியில் பிரபலமாகி விட்டார். அவருக்கு ஆதரவும் பெருகி வருகிறது.
சிரியாவில் தொடரும் தாக்குதல்கள்: 50 பேர் பலி.
சிரியா ஜனாதிபதி பஷர் அல் அசாத் பதவி விலகக் கோரி போராட்டக்காரர்கள் கடந்த 11 மாதங்களாக தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் இதுவரை 5 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் கடந்த வாரம் ஹாம்ஸ் உட்பட பல்வேறு நகரங்களில் நடந்த கிளர்ச்சியாளர்களின் போராட்டத்தை கட்டுப்படுத்த இராணுவம் அதிரடியாக பீரங்கி தாக்குதல் நடத்தியதில் 400க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.
இது தொடர்பாக ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் சிரியா ஜனாதிபதியை பதவி நீக்கக்கோரும் தீர்மானம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. இதை சீனாவும், ரஷ்யாவும் தங்களது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி தோற்கடித்து விட்டன.இந்நிலையில் நேற்றும் ஹாம்ஸ், டமாஸ்கஸ், அலெப்போ, சபாடனி ஆகிய நகரங்களில் இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதில் 50 பேர் கொல்லப்பட்டனர். கிளர்ச்சியாளர்களும் தங்கள் பங்குக்கு ஆயுதங்களை பயன்படுத்தி இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தினர்.
அரசு தரப்பில் தொலைக்காட்சி செய்தியில் கல்தியா பகுதியில் கிளர்ச்சியாளர்கள் வெடிகுண்டு தயாரித்த போது ஏற்பட்ட விபத்தில் பலர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இராணுவத்தினர் நடத்திய விமானத் தாக்குதலில் ஹாம்ஸ் நகரில் 17 பேர் கொல்லப்பட்டதாக மனித உரிமை அமைப்பின் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
28 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவி ரத்து: உச்சநீதிமன்றம் அதிரடி
பாகிஸ்தானில் மூன்று அமைச்சர்கள் உட்பட 28 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டதை உச்சநீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.பாகிஸ்தானில் 28 இடங்களுக்கு இடைத்தேர்தல் நடந்தது. இதில் போலி வாக்குகள் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களது தெரிவை ரத்து செய்ய வேண்டும் எனக்கோரி முன்னாள் கிரிக்கட் வீரரும், பாகிஸ்தான் தெரிக் இ இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான்கான் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை தலைமை நீதிபதி இப்திகார் சவுத்ரி தலைமையிலான நான்கு பேர் கொண்ட பெஞ்ச் விசாரித்தது.தேர்தல் கமிஷனின் முறையான அறிவிப்பு வெளிப்படாத நிலையில் தெரிவு செய்யப்பட்டதாகக் கூறும், 28 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவியை ரத்து செய்வதாக உச்சநீதிமன்றம் அறிவித்தது.
இவர்களில் நிதியமைச்சர் அப்துல் அபீஸ் ஷேக், பெட்ரோலியத்துறை அமைச்சர் அசிம் ஹுசைன், போதைப் பொருள் கட்டுப்பாட்டுத் துறை அமைச்சர் குடா பக்ஸ் ரஜார் ஆகியோரும் அடங்குவர்.
27 ஆண்டுகளுக்கு பிறகு ரோமில் கடும் பனிப்பொழிவு: 300 பேர் பலி.
ஐரோப்பிய நாடுகளில் கடும் குளிரும், பனிப்பொழிவும் நிலவுதால் இதுவரை 300 பேர் பலியாகியுள்ளனர். ரோம் நகரில் சுமார் 27 ஆண்டுகளுக்குப் பிறகு பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.தற்போது ஐரோப்பிய நாடுகளில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு பனிப்பொழிவு கடுமையாக உள்ளது. கடந்த வாரம் முழுவதும் ஆட்டிப்படைத்த பனிப்பொழிவு இந்த வாரமும் இருக்கும் என்று கூறப்படுகின்றது.
நேற்று முன்தினம் வரை பனிப்பொழிவுக்கு உக்ரைன், போலந்து, இத்தாலி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 297 பேர் பலியாகியிருந்தனர். இந்நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 300ஆக உயர்ந்துள்ளது.ரோமில் கடந்த 1985ம் ஆண்டிற்குப் பிறகு தற்போது தான் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்திலும் கடுங்குளிர் நிலவுகிறது. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மோசமான வானிலை காரணமாக லண்டன் ஹீத்ரூ விமான நிலையத்தில் இருந்து புறப்படும் கிட்டத்தட்ட பாதி விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.பனிப்பொழிவுக்கு உக்ரைனில் மட்டும் 131 பேர் பலியாகியுள்ளனர். இறந்தவர்களில் பலர் வீடு இல்லாதவர்கள். மேலும் 1,800 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதே போன்று போலந்திலும் குளிருக்கு 53 பேர் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில் நெதர்லாந்தில் கடந்த 27 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு தட்பவெட்பநிலை குறைந்துள்ளது. அல்ஜீரியாவிலும் குளிருக்கு இதுவரை 16 பேர் பலியாகியுள்ளனர்.இது தவிர செர்பியா மற்றும் ரோமானியாவிலும் நிலைமை மோசமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மாலைத்தீவு ஜனாதிபதி பதவி விலகுவதாக அறிவிப்பு.
மாலைத்தீவு ஜனாதிபதி மொஹமட் நஷிட் பதவி விலகுவதாக அறிவித்துள்ளதாக பீ.பீ.சி தெரிவித்துள்ளது.அந்த நாட்டு அரச தொலைக்காட்சி நிறுவனத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பொலிஸார் ஜனாதிபதியை பதவி விலக வலியுறுத்துமாறு மக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
மாலைத்தீவு ஜனாதிபதியால், சில வாரங்களுக்கு முன்னர் அந்தநாட்டு குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஒருவரை இராணுவத்தினர் கைது செய்ததை அடுத்து நாட்டில் அமைதியின்மை ஏற்பட்டது.குறித்த நீதிபதி முன்னாள் ஜனாதிபதி அப்துல் கயூம்மிற்கு ஆதரவான ஒருவர் என தற்போதைய ஜனாதிபதியின் தரப்பினர் குற்றஞ் சுமத்தியிருந்தனர்.இந்த நிலையில் நாட்டு மக்களுக்கான உரையில் தனது பதவி விலகலை மொஹமட் நஷிட் அறிவித்துள்ளதாக பீ.பி.சி மற்றும் ரொய்ட்டர் செய்தி சேவைகள் தெரிவிக்கின்றன.
மாலைத்தீவு அரசாங்க வானொலியை அந்த நாட்டின் பொலிஸ்துறை கைப்பற்றியுள்ளது. இதனையடுத்து எதிர்க்கட்சிகளின் ஒலிபரப்புச் சேவைகளும் அதில் இணைக்கப்பட்டுள்ளன.ஜனாதிபதியான முகம்மத் நஸீத் தேசிய இராணுவத் தலைமையகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளார்.
ரோமானியாவிற்குப் பிரதமராவாரா மிஹாய் ரஸ்வான்?
ரோமானியாவின் புதிய பிரதமராக அந்த நாட்டின் புலனாய்வுப் பிரிவின் தலைவரான மிஹாய் ரஸ்வான் உங்குரியானுவின் பெயர் பிரேரிக்கப்பட்டுள்ளது.பிரதமர் எமில் புலொக் பதவி விலகியதை அடுத்து அந்த நாட்டு ஜனாதிபதியால் இவரின் பெயர் பிரேரிக்கப்பட்டுள்ளது.இதற்கு ஆளும் கூட்டணி அரசாங்கத்தின் அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் ரோமானியாவின் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
எனினும் பிரதமராக பிரேரிக்கப்பட்டுள்ள புலனாய்வுப் பிரிவின் தலைவரின் பெயரை பாராளுமன்றம் அங்கீகரிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.இதேவேளை வரவு செலவுத் திட்டக் கொள்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களை அடுத்து பிரதமர் எமில் புலொக் பதவி விலகினார்.அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொண்டதை அடுத்து இந்த தீர்மானத்தை அவர் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரோமானியாவின் பொருளாதாரம் நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ள நிலையில் இந்தப் பதவி விலகல் பாரிய அரசியல் நெருக்கடியை தோற்றுவித்துள்ளது.அரச ஊழியர்களுக்கான ஓய்வூதியம் குறைக்கப்பட்டு நிதிப் பிரச்சினைகள் தீவிரமடைந்துவருகின்றன.அத்துடன் வரி அறவீடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளமை மக்களுக்கான சுமையை அதிகரித்துள்ளதாக விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.
சொகுசு வாழ்க்கை வாழ்கிறார் சர்கோசி.
பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசி மிகவும் ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார் என நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.பிரான்ஸ் ஜனாதிபதி நிகோலஸ் சர்கோசி ஆடம்பரமாக செலவு செய்கிறார் என்ற குற்றச்சாட்டு உள்ளது. ஜனாதிபதி மாளிகை செலவை குறைத்துக் கொள்கிறேன் என்று அவர் பதில் அளித்தார்.
அத்துடன் ஜனாதிபதி மாளிகை விருந்துகளையும் குறைத்து கொண்டார். எனினும் செலவு மட்டும் குறையவில்லை. ஒரு நாள் சாப்பாட்டுக்கு ரூ.7.80 லட்சம் செலவிடுகிறார் என்று சோஷலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரெனி டோசிர் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
“நாட்டின் பணம்” என்ற தலைப்பில் ரெனி சமீபத்தில் புத்தகம் வெளியிட்டுள்ளார். அதில் தான் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். மேலும், சர்கோசி தனது எலிசி பேலசில் 121 கார்களை வைத்துள்ளார். தனிப்பட்ட செலவுக்கும், ஜனாதிபதி என்ற முறையில் மேற்கொள்ள வேண்டிய செலவுக்கும் வித்தியாசம் தெரியாமல் பணத்தை வாரி இறைக்கிறார் என்று புத்தகத்தில் ரெனி குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைனில் உள்ள தனது மகன் பியரிக்கு சிகிச்சை அளிக்க தனி விமானத்தில் மருத்துவ குழுவினரை அனுப்பினார் சர்கோசி. அவர்கள் சென்று மகனை அதே விமானத்தில் அழைத்து வந்து சிகிச்சை அளித்தனர். இதற்கு லட்சக்கணக்கில் செலவானது என்று குற்றம் சாட்டியுள்ளார் ரெனி.சர்கோசியின் கார்களில் பெரும்பாலானவை மிகப்பெரியது. அதற்கான எரிபொருள் செலவும் அதிகம். அத்துடன் அவரது விமான பயணங்களுக்கு ஆகும் செலவை கணக்கிட்டால் தலை சுற்றும் என்று ரெனி தனது புத்தகத்தில் கூறியுள்ளார்.
ஜேர்மனியில் குளிர் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
ஜேர்மனியில் -29 டிகிரி குளிர் இருந்தாலும் இந்த வாரத்தின் மத்தியில் இன்னும் குளிர் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.கடந்த 25 ஆண்டுகளில் அதிகக் குளிராக பெர்லின் மாநகரிலும் அதனை அடுத்துள்ள பிராண்டென்பர்கிலும் -20 டிகிரி பதிவானது. இந்நிலையில் நாட்டின் மிகவும் வெப்பமான பகுதியாக கீழ் ரைன் பகுதியில் உள்ள டூயிஸ்பெர்கைக் குறிப்பிடலாம். இங்கு வெப்பநிலை -7.8 டிகிரி ஆகும்.
நாட்டின் அதிகபட்ச குளிர் இன்னும் வரவில்லை என்று வானிலை ஆய்வு மையத்தில் பணிபுரிபவரான கிறிஸ்டோஃப் ஹாட்மன் தெரிவித்துள்ளார்.மேலும் அவர் கூறுகையில், இன்று அதிகபட்ச உறைபனி உண்டாகும் என தெரிவித்தார். பகல் வேளைகளில் கூட -12 டிகிரி முதல் -7டிகிரி வரை குளிர் பரவியுள்ளது.இருப்பினும் நாட்டின் வடமேற்குப் பகுதியில் இன்று முதல் குளிர் குறையத் தொடங்கும், நாளை சற்று வெப்பம் தோன்றினாலும் 0 டிகிரிக்கு குறைவாகவே இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.
வைரவிழா கொண்டாடிய பிரிட்டன் ராணியின் வாழ்த்துச் செய்தி.
பிரிட்டனின் எலிசபெத்  ராணி மகுடம் சூட்டி அறுபதாண்டுகள் நிறைவுபெற்ற நிலையில் அவரது பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.எலிசபெத் ராணியின் அரண்னமையில் இருந்து வந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: நீங்கள் எனக்கும் இளவரசர் ஃபிலிப்புக்கும் அளிந்து வரும் அற்புதமான ஆதரவுக்கும் ஊக்கத்திற்கும் நன்றி, இந்த வைரவிழாவிற்காக குவியும் உங்களின் வாழ்த்து மடல்களே நீங்கள் எங்கள் மீது வைத்திருக்கும் அன்பை எடுத்து கூறுகின்றன.
இந்தச் சிறப்பான வருடத்தில் நான் உங்களின் சேவைக்காக என்னைப் புதிதாக அர்ப்பணிக்கிறேன் என்றார். மேலும் அவர் கூறுகையில் நாடுகள் ஒன்றாக இணைந்திருப்பதன் முழு பலத்தை என் ஆட்சிக்காலம் முழுக்க உணர்ந்திருக்கிறேன். இதனை பிரிட்டனிலும் காமன்வெத் நாடுகளிலும் பயணம் செய்யும் போது பல வடிவங்களில் பார்த்திருக்கிறேன்.
உங்கள் அனைவருக்கும் என் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என அவ்வறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.டவுன் ஹாலில் உள்ள கண்காட்சியில் பேசிய பேயர் கோலின் சாம்சன் இந்த நாட்டுக்கும் காமன்வெல்த் நாடுகளுக்கும் அறுபதாண்டுகளாக அரசியார் அபரிமிதமான சேவையாற்றி இருப்பதாகப் புகழ்த்துரைத்தார். மேலும் அங்கு நடந்த கண்காட்சியை அரசியார் பார்வையிட்டார்.
அதில் மேற்கு நார்ஃபோக் அரண்மனையின் நகைகளும் இடம்பெற்றிருந்தன. நார்ஃபோர் நகரத்தின் அரும்பொருட்கள் அக்கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தன. அதில் அவரது தந்தையார் சாண்டிங்காம் அரண்மனையில் தான் பிறந்தார் என்பதற்கான பிறப்புச் சான்றிதழும் இடம்பெற்றிருந்தது. மேலும் அக்கண்காட்சியை பார்வையிட்ட அரசியாருக்கு மேயர் பல பரிசுப்பொருட்களை வழங்கினார்.பின்பு அரசியார் டெர்சிங்காமில் உள்ள பாலர் பள்ளிக்கூடத்துக்குச் சென்றார்.அங்கு அவரின் இரண்டு புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. அதில் ஒன்றில் அவர் தனது கணவரோடு இராஜ உடையில் காட்சியளித்தார். இன்னொன்றில் அவரது தாயாரான பேரரசி விக்டோரியாவின் நினைவுச் சின்னத்தின் அருகே நிற்பது போல காட்சியளித்தார்.
பேரரசி விக்டோரியாவிற்கு அடுத்தப்படியாக அறுபதாண்டு வைரவிழா கண்ட பெருமை எலிசபெத் அரசியை மட்டுமே சேரும் என்பது குறிப்பிடத்தக்கது. அரசியார் பட்டமேற்ற நாளாக 1952 ம் ஆண்டின் பிப்ரவரி மாதம் 6 திகதி நினைவுகூரப்படுகிறது. மேலும் இவர் கென்யாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோது இவரது அன்புத் தந்தையார் 6ம் ஜார்ஜ் உறக்கத்தில் உயிர் துறந்தார்.
தந்தையாரின் மரணத்தால் மனம் உடைந்து பிரிட்டன் திரும்பிய எலிசபெத் அரசியாக தாய் நாட்டில் காலடி எடுத்து வைத்தார். பிரதமர் டேவிட் கேமரூன், அரசியாரின் அறுபதாண்டு நிறைவு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அரசியாரை வாழ்த்தினார். இவர் இந்நாள் அரசியாரின் அதியற்புதச் சேவைக்கு நான் நன்றி தெரிவிக்கும் இனிய நாள் என்று கூறினார்.மேலும் அரசியார் அனுபவம், கௌரவம் மற்றும் அதிகாரம் ஆகியவற்றோடு நமது நாட்டையும் காமன்வெல்த் நாடுகளையும் ஒன்றிணைத்து அறுபது ஆண்டுகள் அழைத்து வந்துள்ளார். ஆகவே இந்த நன்னாளில் நாம் அவருக்கு நன்றி மலர்களை காணிக்கையாக்கி மகிழ்வோம் என்றும் அவர் கூறினார்.
விருது வழங்கி கௌரவிக்க வேண்டும்: நோர்வே கொலைக் குற்றவாளி ஆண்டர்ஸ்.
நோர்வே நாட்டில் தீவிரவாத தாக்குதல் நடத்தி 77 பேரை கொன்றவர், தனக்கு விருது வழங்கி கௌரவிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் கேட்டுக் கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.நோர்வேயின் தலைநகர் ஆஸ்லோவில் கடந்தாண்டு ஜூலை மாதம் 22ம் திகதி காரில் வைக்கப்பட்ட வெடிகுண்டு வெடித்தது.
இரண்டு மணி நேரம் கழித்து உடோயா தீவில், நோர்வே தொழிலாளர் கட்சியின் இளைஞர் அணியினர் முகாம் மீது சரமாரி துப்பாக்கிச் சூடும் நடந்தது.அடுத்தடுத்து நடந்த தீவிரவாத தாக்குதலில் 77 பேர் கொல்லப்பட்டனர். இதுதொடர்பாக 32 வயதுடைய ஆண்டர்ஸ் பெஹ்ரிங் பிரீவிக் என்பவரை பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக ஆண்டர்ஸை கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆஸ்லோ மாவட்ட நீதிமன்றத்தில் பொலிசார் ஆஜர்படுத்தினர். அப்போது நோர்வேயில் முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் குடியேறி வருகின்றனர்.அத்துடன் ஐரோப்பாவின் ஆதிக்கத்தால் நோர்வே கலாசார சீரழிவை சந்தித்து வருகிறது. அதனால் தேச துரோகிகள் மீது நானே நடவடிக்கை எடுத்தேன். இதில் எந்த கிரிமினல் குற்றமும் செய்யவில்லை. என்னை விடுதலை செய்ய வேண்டும். இந்த தாக்குதலுக்காக எனக்கு இராணுவ விருது வழங்கி கௌரவிக்க வேண்டும் என்றார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் ஆண்டர்ஸை ஏப்ரல் மாதம் 16ம் திகதி வரை காவலில் வைக்கும்படி நீதிபதி வென்சி ஜெல்ஸ்டன் உத்தரவிட்டார். அன்று முதல் விசாரணை தொடங்க உள்ளது.குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 21 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்படும். மனநிலை சரியில்லாதவர் என்பது நிரூபணமானால் மனநல மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவார் என்று சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
மாலைத்தீவின் புதிய ஜனாதிபதியாக மொஹமட் வஹீட் ஹசன் சத்தியப்பிரமாணம்.
மாலைத்தீவு ஜனாதிபதி மொஹமட் நசீட் பதவி விலகியதை அடுத்து மாலைத்தீவின் புதிய ஜனாதிபதியாக முன்னாள் துணை ஜனாதிபதி மொஹமட் வஹீட் ஹசன் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.மாலைத்தீவில் ஜனநாயக வழியில் தெரிவான முதலாவது ஜனாதிபதியான மொஹமட் நசீட், முக்கிய நீதியரசர் ஒருவரை கைது செய்ய விடுத்த உத்தரவின் பின் ஏற்பட்ட எதிர்ப்பால் பதவி விலகினார்.இந்நிலையில் ஐக்கிய நாடுகள் மற்றும் ஆப்கானிஸ்தானின் சிறுவர் நிதியம் என்பவற்றில் கடமையாற்றியுள்ள மொஹமட் வஹீட் ஹசன் புதிய ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF