Friday, February 3, 2012

NEWS OF THE DAY.

எனக்காக போராடுங்கள்!- மக்களிடம் சரத் பொன்சேகா கோரிக்கை.
பலவந்தமாக என்னைக் கடத்திச் சென்று, போலிக் குற்றச்சாட்டு சுமத்தி சிறையில் அடைத்து எதிர்வரும் 8ஆம் திகதியுடன் இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. எனக்காக நடத்தப்படும் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மக்களிடம் கோரியுள்ளார்.மனித உரிமை ஆணைக்குழுவின் உயர் அதிகாரி, மனசாட்சிக்கிணங்க பணியாற்ற முடியாமையினால் இன்று பதவி விலகியுள்ளார். அந்த உயரதிகாரியை நாம் பாராட்டுகின்றோம்.
இதன் மூலம் யார் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுகின்றார்கள் என்பது வெளிப்படுகின்றது. இந்த நிலைமைகளை மாற்றி அமைப்போம் என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.யுத்த நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிரான மேன்முறையீட்டு வழக்கு விசாரணைகளில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு சுற்றுலா வீசாவில் வருகை தந்து சாரதிகளாக பணியாற்றிய 6 இந்தியர்கள் கைது!
மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில், சுற்றுலா விசா மூலம் இலங்கைக்கு வருகை தந்து தொழிலில் ஈடுபட்ட ஆறு இந்தியர்கள் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.கடந்த திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் இவர்கள் கொக்கட்டிச்சோலை பகுதியில் வைத்து இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பட்டிப்பளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.இவர்கள் சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வருகை தந்து பட்டிப்பளை பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதிகளில் இடம்பெற்றுவரும் விவசாய அறுவடையின்போது அறுவடை இயந்திரத்தின் சாரதிகளாக பணியாற்றி வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்கள் அனைவரும் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டபோது அவர்களுக்கு தலா இரண்டாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்போக அறுவடை ஆரம்பித்துள்ள நிலையில் நவீன முறையில் அறுவடை இயந்திரத்தை இயக்குவதற்கு தேவையான ஆளணியை பெற்றுக்கொள்வதில் விவசாயிகள் பெரும் சிரமம் எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்த முகத்துடன் அரசாங்கம் ஜெனீவா செல்ல போகிறது?- ஐக்கிய தேசியக் கட்சி கேள்வி.
ஜெனீவா மனித உரிமைகள் சபையில் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை சமர்பிக்க போவதில்லை என்ற அரசாங்கத்தின் கருத்துக்கு ஐக்கிய தேசிய கட்சி கண்டனம் வெளியிட்டுள்ளது.இறுதி போர் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் நிபுணத்துவ குழு சமர்பித்த அறிக்கையை நம்ப வேண்டாம்.இ லங்கையின் நல்லிண்ண ஆணைக்குழுவின் அறிக்கை வரையில் காத்திருங்கள் என்று ஸ்ரீலங்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அமெரிக்காவில் சென்று கூறி வந்தார்.
எனினும், நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதனை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையில் சமர்பிக்க போவதில்லை என்று அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், நாடு என்ற அடிப்படையில் ஜெனீவா மனித உரிமைகள் சபையில் எவ்வாறு முகம் கொடுக்கப்பேகின்றது என்று ஐக்கிய தேசிய கட்சியின் பா.உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல கேள்வி எழுப்பியுள்ளார்.கொழும்பில் இன்று இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜெனீவா மாநாட்டுக்கு முதல் அமெரிக்காவுடன் இலங்கை பேசும் - மஹிந்த ராஜபக்‌ஷ.
இலங்கையில் மனித உரிமைகள் நிலைவரத்தை விருத்திசெய்வதற்கென மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க தலைவர்களுக்கு விளக்கமளிக்க மஹிந்த ராஜபக்‌ஷ ஆர்வப்படுகின்றார்.இதற்காக, ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடருக்கு முன்னர் அமெரிக்காவுக்கு தூதுக்குழுவொன்றை அனுப்ப வேண்டிய அவசியத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.
அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரனா தீர்மானத்தை அமெரிக்கா ஆதரிக்கும் என அமெரிக்க அரசாங்கம் ஏற்கெனவே அறிவித்துள்ளது. அத்துடன், இலங்கை வெளிவிவகார அமைச்சரை அமெரிக்காவுக்கு விஜயம் செய்து இலங்கை மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்குமாறு அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டன் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.
இவ்விடயம் குறித்து கடந்த புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன. இது தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்திகள் குறித்து அமைச்சர் டியூ குணசேகர முதலில் கேள்வி எழுப்பினார்.
ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தொடருக்கு முன்னர் அமெரிக்காவுடன் இலங்கை கலந்துரையாட வேணடும என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ இக்கூட்டத்தில் கூறினார். நாம் மேற்கொண்ட நடவடிக்கைகள், எமது எதிர்கால திட்டங்கள் குறித்து அவரக்ளுக்கு விளக்க வேண்டும் என ஜனாதிபதி கூறினார்.எனினும் தற்போதைய நிலையில் அமெரிக்காவுடன் இத்தகைய கலந்துரையாடல்களை நடத்துவது குறித்து வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் பொறியியல் சேவைகள் அமைச்சர் விமல் வீரவன்ஸ தயக்கம் தெரிவித்தார். இத்தகைய விஜயம் இடம்பெற்றாலும் இலங்கைக்கு எதிரான தனது நிலைப்பாட்டை அமெரிக்கா மாற்றிக்கொள்ளாது என அவர் கூறினார்.
அதேவேளை ஜனாதிபதியின் நிலைப்பாட்டை அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஆதரித்துப் பேசினார். இந்தியாவின் ஆதரவையும் பெற்றுக்கொள்வது அவசியம் என அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க வலியுறுத்தினார்.
தமிழகத்தில் இலங்கைப் பொருட்கள் புறக்கணிப்பு தற்காலிகமானதே!- இலங்கை வர்த்தகப் பணிப்பாளர்.
தமிழ் நாட்டில் இலங்கையின் உற்பத்திப் பொருட்களைப் புறக்கணிக்கும் வகையில், விதிக்கப்பட்டுள்ள தடையினால் ஏற்பட்டுள்ள பின்னடைவு தற்காலிகமானதே. இது நீண்டகாலத்துக்கு தொடர வாய்ப்பில்லை என இலங்கை வர்த்தகப் பணிப்பாளர் நாயகம் பி.ஜி.பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.பிஸ்கட் மற்றும் இனிப்பு வகைகளின் ஏற்றுமதிக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து, இப்பிரச்சினையைத் தீர்ப்பது குறித்து தாம் புதுடெல்லியிலும் சென்னையிலும் உள்ள இலங்கைத் தூதரகங்களுடன் தொடர்பு கொண்டிருப்பதாக வர்த்தகப் பணிப்பாளர் நாயகம் பி.ஜி.பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.
இதேவேளை, முன்னரை விட அதிகளவில் இலங்கையின் உற்பத்திற் பொருட்கள் தென்னிந்திய சந்தைகளில் இனிவரும் காலங்களில் இடம் பிடிக்கும் என்றும் இலங்கையின் உற்பத்திகளைப் பொறுத்தவரையில் தமிழ்நாடு ஒரு மிகச்சிறிய சந்தை தான் என இலங்கையின் ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
லிபியா ஈரான், ஈராக் போன்ற விவகாரங்களினால் இலங்கையின் வர்த்தகத்துக்கு பாரிய பாதிப்புகள் ஏற்பட்டன. இவற்றுடன் ஒப்பிடும் போது, இது ஒன்றும் பெரிய விவகாரம் அல்ல. இலங்கையின ஏற்றுமதி 11 மில்லியன் டொலராகும். இந்த ஆண்டில் இது மேலும் விருத்தியடையுமென குறிப்பிட்டுள்ளார்.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் ஒருவர் பலி.
இலங்கையின் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று காலை ஏற்பட்டுள்ள வாகன விபத்து ஒன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
25 வயதான ஒருவரே இவ்வாறு விபத்தில் உயிரிழந்துள்ளார்.
இந்தநிலையில், இதுவே தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் நேர்ந்த முதல் விபத்து மரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த வீதி திறக்கப்பட்டது முதல் கடந்த இரண்டு மாதக்காலப்பகுதியில் பல விபத்துக்கள் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பாடசாலைக் கல்வித் திட்டத்தில் வரலாற்றுக்குப் பதிலாக தேசிய உரிமைகள்.
இலங்கையின் கல்வித் திட்டத்தில் எதிர்வரும் ஆண்டு முதல் வரலாறு பாடத்தின் பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இனி வரும் காலங்களில் வரலாறு என்ற பாடத்திற்கு பதிலாக தேசிய உரிமைகள் மற்றும் சுற்றாடல் என்னும் பாடம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
தேசிய உரிமைகள் மற்றும் சுற்றாடல் தொடர்பில் மாணவர்கள் மத்திய போதிய தெளிவில்லை எனவும் கிராமப் புற மாணவ மாணவியருக்கு வளங்களை பகிர்ந்தளிக்கக் கூடிய வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.பத்தரமுல்ல வோட்டர் எஜ் ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் போது அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாட்டின் கல்வித்துறை வீழ்ச்சியடைந்துள்ளது – ரணில்
நட்டின் கல்வித்துறை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இலவசக் கல்வி முறைமையை இல்லாமல் செய்ய முயற்சி எடுக்கப்படுகின்றது.இஸட் புள்ளி பிரச்சினை பாரிய குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளதாக ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இலவசக் கல்வி அரசியல் அமைப்பில் உறுதி செய்யப்பட்டுள்ள போதிலும், தற்போது மாணவர்களிடமிருந்து அந்த உரிமை பறிக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் சம சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டுமென அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்ட போதிலும் தற்போது அந்த நிலைமை காணப்படுகின்றதா? என ரணில் விக்ரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கை மீனவர்களை இன்று கொல்லப் போகிறோம் - சோமாலிய கடற்கொள்ளையர்கள் எச்சரிக்கை.
இலங்கை மீனவர்களின் சார்பில் இன்று கப்பம் செலுத்தப்படாவிட்டால் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்களை சுட்டுக்கொல்லப் போவதாக சோமாலிய கடற்கொள்ளையர்கள் எச்சரித்துள்ளனர்.இந்த எச்சரிக்கையை சோமாலிய கடற்கொள்ளையர்கள் தமக்கு விடுத்துள்ளதாக, கொள்கையர்களால் மீனவர்களுடன் கடத்திச் செல்லப்பட்ட படகின் உரிமையாளரான நிஹால் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
எனினும், தம்மால் கொள்ளையர்கள் கோரும் கப்பத்தொகையை வழங்க முடியாதுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீர்கொழும்பை சேர்ந்த 6 மீனவர்கள் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் சோமாலிய கடற்கொள்ளையர்களால் கப்பம் கோரி கடத்திச் செல்லப்பட்டனர்.இதேவேளை, இந்த மீனவர்களை விடுவிப்பதற்கு சர்வதேச மத்திஸ்தம் தேவை என்று பொதுச்சொத்துக்கள் துறை பிரதியமைச்சரும் நீர்கொழும்பு நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் குமார குணரத்ன தெரிவித்துள்ளார்.இலங்கை அரசாங்கமும் இந்த விடயத்தில் முனைப்புக்காட்டி மீனவர்களை விடுவிக்கவேண்டும் என்று கோரியுள்ளார் .
ரொபர்ட் ஓ பிளக் இலங்கைக்கு திடீர் விஜயம் - பரபரப்பில் கொழும்பு.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்காசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான உதவிச் செயலாளர் ரொபேர்ட் ஓ பிளேக் எதிர்வரும் பதினொராம் திகதி கொழும்பு வருகிறார்.
ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அமர்வுகள் நெருங்கிவரும் நிலையிலும் அந்தக் கூட்டத் தொடரில் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பாகக் கொண்டுவரப்பட உள்ள தீர்மானத்துக்கான முன்மொழிவை ஆதரிக்க வோஷிங்ரன் தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலும் பிளேக் கொழும்பு வருகிறார்.அவரது இந்த அவசர பயணத்தின் பின்னணி குறித்து உடனடியாக விவரம் வெளிவரவில்லை. எனினும் கொழும்பு அரசியலில் பெரும் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.
கொழும்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட்ட பல முக்கிய தரப்புகளுடன் பேச்சு நடத்த உள்ள பிளேக், ஆளுங்கட்சியின் உயர்மட்டத் தலைவர்களையும் சந்திக்கவுள்ளார்.பிளேக் இலங்கைக்கு வருகையில், தனிப்பட்ட பயணமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாகிஸ்தான் செல்லவுள்ளார். இதனால் கொழும்பில் இரண்டு நாள்கள் மட்டுமே தங்கியிருக்கும் பிளேக்கிற்கும், ஜனாதிபதி மஹிந்தவிற்குமிடையில் நேரடிப் பேச்சுகள் நடைபெறுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவென உயர்மட்ட இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. .அரசு கூட்டமைப்பு பேச்சு, ஜெனிவா மனித உரிமைகள் சபை அமர்வில் இலங்கையின் பங்கு உட்பட்ட பல விடயங்கள் குறித்து பிளேக் கொழும்பில் பேச்சு நடத்துவாரென்றும் அந்த வட்டாரங்கள் மேலும் கூறின.
இதேவேளை, ஜெனிவாவில் இம்மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 19ஆவது கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டு வரும் முயற்சிகளை மேற்கொண்டுள்ள மேற்குலக நாடுகள் அதற்கு இந்தியாவின் ஆதரவைப் பெறும் முயற்சிகளில் இறங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக நோர்வே அமைச்சர் எரிக் சொல் ஹெய்ம் இந்தியாவுக்கு விரைந்துள்ளார்.
நல்ல திறமை உள்ளவர்களுக்கு மட்டுமே பிரிட்டனில் இடம்: அமைச்சர் அறிவிப்பு.
தகுதியும் நல்ல திறமையும் உடையவர்களுக்கு மட்டுமே பிரிட்டனில் தங்க இடம் கொடுக்கப்படும் என அந்நாட்டு புதிய குடியேற்ற சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள், ஐரோப்பிய கூட்டமைப்பு அல்லாத நாட்டைச் சேர்ந்தவர்கள் கல்வி கற்க இதர தொழில் விஷயமாக பிரிட்டன் வருகின்றனர். பின்னர் அவர்கள் குடியுரிமை கோருகின்றனர். இந்நிலையில் அந்நாட்டு குடியேற்றச்சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்நாட்டு குடியேற்றத்துறை அமைச்சர் டேமின்கிரீன் கூறுகையில், பிரிட்டனில், ஐரோப்பிய கூட்டமைப்பு அல்லாத நாட்டைச் சேர்ந்தவர்கள், 31 ஆயிரம் பவுண்ட்கள் ஆண்டு வருமானம் பெறுபவர்கள், ஐந்து ஆண்டுகள் தங்கியிருந்தவர்கள் பிரிட்டனில் தங்க அனுமதியில்லை.
அதற்கு மேலாக சம்பளம் பெறுவபர்கள் மட்டுமே பிரிட்டனில் நிரந்தர குடியுரிமை பெற தகுதியானவர்கள். மேலும் பிரிட்டன் நாட்டைச் சேர்ந்தவர்கள், வெளிநாட்டினை திருமணம் செய்து பிரிட்டனுக்கு அழைத்து வந்தால் அவரது(பிரிட்டன் வாசி) ஆண்டு வருமானம் 25 ஆயிரம் பவுண்ட்களுக்கு மேல் இருக்க வேண்டும்.இதற்காக குடியேற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படும் என்று கூறினார். அமைச்சரின் இந்த அறிவிப்பு வெளிநாட்டவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது.
சர்வதேச சட்டங்களை மீறும் சீனா: ஜப்பான் குற்றச்சாட்டு.
தென் சீனக் கடலில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டிவந்த சீனா தற்போது கிழக்கு சீனக் கடலிலும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டுத் தொடங்கியுள்ளது.சீனாவுக்கும், ஜப்பானுக்கும் இடையே உள்ள சென்காகு தீவுகள் தொடர்பான கடல் எல்லைப் பிரச்னை இருந்து வருகின்றது. இந்த தீவுக்கு இரு நாடுகளும் உரிமை கொண்டாடி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2010ம் ஆண்டு ஏற்பட்ட பிரச்னையை தொடர்ந்து, சர்வதேச சட்டத்தின்படி இரு நாடுகளும் இணைந்து அப்பகுதியில் இயற்கை எரிவாயு எடுக்க வேண்டும் என கூறப்பட்டது.இதற்கிடையில் சீனா, ஜப்பானுக்கு எந்த தகவலும் அறிவிக்காமல் மேற்குப் பகுதியில் உள்ள கஷி என்ற இடத்தில் இயற்கை எரிவாயு எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
இதுகுறித்து ஜப்பான் அமைச்சரவைத் தலைமைச் செயலர் ஒசாமு புஜிமுரா அளித்த பேட்டியில், கஷி பகுதியில் எரிவாயு எடுக்கும் முயற்சி நடப்பதாகத் தெரியவந்துள்ளது என்றார்.மேலும் சீனாவின் இந்தப் போக்கு கண்டிக்கத்தக்கது என்றும், இதுகுறித்து விரைவில் பேச்சுவார்த்தை தொடக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
டைட்டானிக் கப்பல் விபத்தில் மூழ்கிய வயலின் கண்டுபிடிப்பு.
அட்லான்டிக் கடலில் டைட்டானிக் கப்பல் மூழ்கி 100 ஆண்டுகள் ஆகின்றன. இதையொட்டி சமீபத்தில் டைட்டானிக் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.கடந்த 1912ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10ம் திகதி இங்கிலாந்தின் சவுதாம்டன் பகுதியில் இருந்து டைட்டானிக் சொகுசு கப்பல் நியூயார்க் புறப்பட்டது.
உலகிலேயே மிக பிரமாண்டமான முதல் சொகுசு கப்பலான டைட்டானிக் தனது முதல் பயணத்திலேயே வடக்கு அட்லான்டிக் கடலில் மிகப்பெரிய பனிப்பாறையில் 15ம் திகதி மோதி விபத்துக்குள்ளானது. கப்பலில் பயணம் செய்த 2,223 பேரில் 1517 பேர் உயிரிழந்தனர். இது உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய கப்பல் விபத்தாக இன்றளவும் உள்ளது.கடலில் மூழ்கிய கப்பல் மற்றும் விபத்து குறித்து பல்வேறு நிறுவனங்கள் தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த ஆய்வின்போது கப்பலில் இருந்து பல அரிய பொருட்கள் கிடைக்க பெற்றுள்ளன.
இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட சுமார் 5000 பொருட்களை வரும் ஏப்ரல் மாதத்தில் ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது அமெரிக்காவின் நியூயார்க் குர்ன்சே என்ற பிரபல ஏல நிறுவனம்.ஆனால் அதே நேரத்தில் ஏலத்தில் எடுக்கும் பொருட்களை நன்கு பராமரிக்க வேண்டும், அவ்வப்போது பொதுமக்கள் பார்வைக்கு அவற்றை வைக்க ஒப்புக் கொள்ள வேண்டும் என்பது உட்பட கட்டுப்பாடுகளை அந்நாட்டு நீதிமன்றம் விதித்துள்ளது.
இந்நிலையில் டைட்டானிக் கப்பலில் இருந்து அரிய மாடல் வயலின் ஒன்று கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை அக்கப்பலில் இருந்த பேண்ட் மாஸ்டர் வாலஸ் ஹர்ட்லி பயன்படுத்தி இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.வாலஸ் ஹர்ட்லி என்ற இசைக் கலைஞர், தனது வயலினை அணைத்த நிலையிலேயே கடலில் மூழ்கினார். அந்த நிலையிலேயே அவரது உடல் மீட்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. அந்த வயலின்தான் தற்போது கிடைத்திருக்கிறது என்று கூறப்படுகிறது.
இங்கிலாந்தை சேர்ந்த ஒருவரிடம் இந்த வயலின் பல ஆண்டு காலமாக இருந்துள்ளது. வாலசுக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த பெண் மரியா ராபின்சன், டைட்டானிக் விபத்து நடந்த சில ஆண்டுகளில் இதை தன்னிடம் கொடுத்ததாக அவர் கூறியுள்ளார். டைட்டானிக் வயலின் குறித்த இதர தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
பாகிஸ்தான் பிரதமர் கிலானிக்கு உச்சநீதிமன்றம் சம்மன்.
பாகிஸ்தான் பிரதமர் அலுவலகத்துக்கு வந்த மர்ம பவுடர் குறித்த விசாரணையில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகள் தொடங்கப்படும் என்று அந்நாட்டின் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.அக்டோபர் மாதம் பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானியின் அலுவலகத்திற்கு ஒரு மர்மப் பார்சல் வந்தது. அதை காவல்துறை அதிகாரிகள் சோதனை செய்ததில் கால்நடைகளுக்கு நோயை பரப்பும் 'ஆந்த்ராக்ஸ்'  என்ற கொடிய கிருமி பவுடர் பார்சல் என கண்டுப்பிடிக்கப்பட்டது.
மேலும் இந்தப் பார்சல் பற்றிய விசாரணையை காவல்துறை அதிகாரிகள் நடத்தினர். அதில் பார்சலை அனுப்பியது ஜாம்ஷாரோ பெண்கள் பல்கலைக்கழகப் பேராசிரியர் என தெரியவந்துள்ளது.  இதுகுறித்து அப்பேராசிரியரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்றது.
இதனால் பாகிஸ்தான் பிரதமருக்கு இதுதொடர்பாக சம்மன் அனுப்பியுள்ள உச்சநீதிமன்றம், பிப்ரவரி மாதம் 13ம் திகதி முறையாகக் குற்றம்சாட்டப்படும் என  தெரிவித்துள்ளனர். பிரதமர் கிலானிக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை 7 பேர் கொண்ட உச்சநீதிமன்ற பெஞ்ச் விசாரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல்கட்ட விசாரணை வழக்கில் போதுமான ஆதாரங்கள் இருப்பதாக தெரிவித்த உச்சநீதிமன்றம், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க போதுமானதாகவும் இருக்கின்றது என தெரிவித்தனர்.குற்றப்பத்திரிகையை பதிவு செய்வதை பிப்ரவரி மாதம் 13ம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளோம் என்றும், பிரதமர் இந்த விவகாரம் தொடர்பாக நேரில் ஆஜராக வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தான் மீது இனி வான்வழித் தாக்குதல்கள் கிடையாது: அமெரிக்கா.
பாகிஸ்தான் மீது வேண்டுமென்றே திட்டமிட்டது போன்ற வான்வழித் தாக்குதல்கள் நடைபெறாது என அமெரிக்கா அறிவித்துள்ளது.தெற்கு சிந்து மாகாணத்தில் உள்ள மொஹஞ்சதாரோ நகரில் செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தானுக்கான அமெரிக்கத் தூதர் கேமரூன் முன்டர் தெரிவித்ததாவது: சலலெய்ன் மொஹமது பழங்குடியினப் பகுதியில் உள்ள இரண்டு எல்லைச் சாவடிகளில் நிகழ்ந்த வான் தாக்குதல் ஒரு பயங்கரான சம்பவமாகும். அதுபோன்று மீண்டும் நடைபெறக் கூடாது. அது வேண்டுமென்ற நடத்தப்பட்ட தாக்குதல் அல்ல.
அந்த சம்பவத்துக்காக அமெரிக்க மக்கள் மிகவும் வருந்தினர். அதைப்போன்று எதிர்காலத்திலும் நிகழாமல் தடுப்பதை உறுதி செய்ய வேண்டும். எனவே இதுதொடர்பாக அமெரிக்கா பாகிஸ்தானுடன் பேச்சு நடத்த விரும்புகிறது. பேச்சு விரைவில் தொடங்கும் என்று அவர் தெரிவித்தார்.
கடந்தாண்டு நவம்பர் மாதம் 26ம் திகதி நிகழ்ந்த இந்தத் தாக்குதலை அடுத்து பாகிஸ்தான் கடுமையாக நடந்துக் கொண்டது. ஆப்கானுக்குச் செல்லும் அனைத்து சாலைகளையும் பாகிஸ்தான் மூடிவிட்டது. இதனால் அங்குள்ள தனது துருப்புகளுக்கு இராணுவ உதவி பொருள்களை அமெரிக்காவால் அனுப்ப முடியாமல் போனது.
மேலும் ஷாம்ஷி விமான தளத்திலிருந்து வெளியேறுமாறும் அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் உத்தரவிட்டது. இதனால் இருதரப்பு உறவிலும் பின்னடைவு ஏற்பட்டது.இருநாட்டு இராணுவத்தினருக்கும் இடையே தொடர்புகளில் ஏற்பட்ட தோல்வியே இதற்குக் காரணம் என்று அமெரிக்க இராணுவம் அறிக்கை வெளியிட்டது. ஆனால் அதை நிராகரித்த பாகிஸ்தான், தாக்குதல் ஒரு திட்டமிட்ட செயல் என்று குற்றம் சாட்டியிருந்தது.
பான் கி மூன் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் ஷூ வீச்சு.
இஸ்ரேல்- பாலஸ்தீன எல்லையில் ஐ.நா பொதுச்செயலர் பான் கி மூன் மீது ஆர்ப்பார்க்காரர்கள் ஷூ மற்றும் கற்களை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்னை கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தீர்வு எட்டப்படாமல் உள்ளது. இஸ்ரேல்- பாலஸ்தீனத்தின் எல்லைப் பகுதியான காஸா பகுதியில் ஜப்பானின் நிதியுதவியுடன் வீட்டுவசதி திட்டம் தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது.
இதற்காக ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் பகுதிக்கு வருகை தந்தார். அப்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் பான் கீ மூனின் கார் வரும் கன்வாய் வழியாக அவருக்கு எதிராக 50-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கோஷங்கள் எழுப்பினர், சிலர் அவர் சென்ற கார் மீது ஷூ மற்றும் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.இதில் பான்கீமூ‌னுக்கு எந்த வித காயமும் ஏற்படவில்‌லை. இது தொடர்பாக 50 பாலஸ்தீனியர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட இவர்கள் இஸ்ரேல் இராணுவத்தினரால் சிறைபிடிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் எனவும், இஸ்ரேல்-பால்ஸ்தீன பிரச்னையில் ஐ.நா.வின் செயல்பாட்டை கண்டித்தும் இத்தாக்குதல் சம்பவம் நடந்ததாகவும் கூறப்படுகிறது.
இஸ்ரேலை அழிக்க அணு குண்டுகளை தயாரிக்கும் ஈரான்.
இஸ்ரேலின் முக்கிய நகரங்களை தாக்குவதற்காக ஈரான் நான்கு அணு குண்டுகளை தயாரித்துள்ளதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது.ஈரான் அணு ஆயுதங்களை தயாரிப்பதாக அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகள் குற்றம்சாட்டின. இதன் காரணமாக ஈரான் மீது பல்வேறு பொருளாதார தடைகள் விதித்தன.
இந்நிலையில் ஈரான் நான்கு அணு குண்டுகளை தயாரித்துள்ளதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியுள்ளது. இதுதொடர்பாக இஸ்ரேலின் ஜெருசலேம் நகரில் சர்வதேச பாதுகாப்பு உச்சி மாநாடு நடந்தது.இதில் அந்நாட்டு இராணுவ உளவு அமைப்பின் தலைவர் ஜெனரல் அவிவ்கோச்சாவி கூறுகையில், இஸ்ரேலை ஈரான் தாக்கும் நோக்கில் 2 லட்சம் ராக்கெட்டுகள், ஏவுகணைகள் உட்பட சுமார் 100 கிலோ எடை கொண்ட யுரேனியம் செறிவூட்டப்பட்ட 4 அணு குண்டுகளை தயாரித்துள்ளது.
இதன் மூலம் எந்த நேரமும் இஸ்ரேலின் முக்கிய நகரங்களை தாக்க சிரியா, லெபான் நாடுகள் வாயிலாக திட்டமிட்டுள்ளது என்றார்.
செர்பியாவில் வரலாறு காணாத பனிப்பொழிவு: 10000 பேர் மீட்பு.
செர்பியாவில் வரலாறு காணாத அளவில் பனிப்பொழிவு இருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.வெப்பநிலை -30 டிகிரிக்கு கீழ் சென்றுள்ளது. இதனையடுத்து செர்பியா மற்றும் போஸ்னியாவில் உள்ள கிராமப்பகுதிகளில் உள்ள மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் அப்பகுதிகளிலிருந்து மீட்கப்பட்டு, பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
பெண் குழந்தையை தத்தெடுக்க ஜனாதிபதி ஸர்தாரிக்கு அனுமதி மறுப்பு.
பாகிஸ்தானில் கைவிடப்பட்ட பெண் குழந்தையை தத்தெடுத்த ஜனாதிபதி ஸர்தாரிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ஜின்னா வைத்தியசாலையில் சில வாரங்களுக்கு முன்பு ஒரு வயதுள்ள பெண் குழந்தையை அனாதையாக விட்டு சென்றிருந்தனர்.அதை அதிகாரிகள் மீட்டு வைத்தியசாலையில் பாதுகாத்து வந்தனர். இது குறித்த தகவல் வெளியானவுடன், அந்த குழந்தையை தத்தெடுக்க 8 பேர் விருப்பம் தெரிவித்தனர்.
அவர்களில் ஒருவர் பாகிஸ்தான் ஜனாதிபதி ஸர்தாரி. இவர் தனது சகோதரி பர்யால் தல்புருக்காக, குழந்தையை தத்தெடுக்க விரும்பினார். அனைவரின் விண்ணப்பங்களையும் பஞ்சாப் மாகாண அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.தத்தெடுப்பு சட்டப்படி தீவிர விசாரணைக்கு பின், குழந்தை இல்லாத முகமது இக்பால் - ஆயிஷா தம்பதிக்கு குழந்தையை தத்து கொடுக்க முடிவெடுத்தனர்.
இதற்கான விழா கடந்த புதன்கிழமை ஜின்னா வைத்தியசாலையில் நடந்தது. அப்போது அல்லாமா இக்பால் வைத்தியசாலை தலைவர் ஜாவேத் அக்ரம், பாத்திமா என்ற அந்த பெண் குழந்தையை, ஆயிஷாவிடம் கொடுத்தார்.ஸர்தாரி உட்பட 7 பேரின் விண்ணப்பங்களை அதிகாரிகள் நிராகரித்தனர். அதற்கான காரணம் வெளியிடப்படவில்லை.
நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பேன்: கிலானி.
உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பேன் என பாகிஸ்தான் பிரதமர் கிலானி தெரிவித்துள்ளார்.பாகிஸ்தான் ஜனாதிபதி சர்தாரி, அவரது மனைவியும் முன்னாள் பிரதமருமான பெனசிர் புட்டோ ஆகியோர் சுவிட்சர்லாந்தில் சட்டவிரோதமாக கோடிக்கணக்கில் பணம் குவித்துள்ளனர்.
கடந்த 1990ம் ஆண்டுகளில் பாகிஸ்தானில் பல்வேறு டெண்டர்களுக்கு அனுமதி வழங்கியதில் ஊழல் நடந்துள்ளது என்று வழக்கு பதிவு செய்யப்பட்டது.ஆனால் இருவருக்கும் அப்போதைய ஜனாதிபதி பெர்வேஸ் முஷாரப் பொது மன்னிப்பு வழங்கி வழக்குகளை தள்ளுபடி செய்தார். இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.அதன்பின் ஜனாதிபதி மீதான ஊழல் வழக்குகளை விசாரிக்க நடவடிக்கை எடுக்கும்படி அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால், பிரதமர் கிலானி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் கடந்த மாதம் 19ம் திகதி  உயர்நீதிமன்றத்தில் கிலானி ஆஜராகி விளக்கம் அளித்தார். நீதிபதி நசிர் உல் முல்க் தலைமையிலான 7 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் முன் ஆஜரான கிலானி, உலகளவில் ஜனாதிபதி பதவி வகிப்பவர்களுக்கு சில அதிகாரங்கள், சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளன. பாகிஸ்தான் அரசியல் சட்டப்படி ஜனாதிபதி பதவி வகிப்பவர்களுக்கு எதிராக விசாரணை நடத்த முடியாது. நீதிமன்றத்தை அவமதிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கில்லை என்று விளக்கம் அளித்தார்.
அதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை தள்ளி வைத்தனர். ஆனால் கிலானி ஆஜராக தேவையில்லை என்று கூறப்பட்டது. இந்நிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக கிலானி மீண்டும் வரும் 13ம் திகதி ஆஜராக வேண்டும் என்று உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த உத்தரவு வெளியான சிறிது நேரத்தில் தனது வக்கீல் மற்றும் அமைச்சரவை சகாக்களுடன் கிலானி அவசர ஆலோசனை நடத்தினார். பின்னர் கிலானியின் வக்கீல் அட்ஜாஸ் அசான் கூறுகையில், நீதிமன்ற உத்தரவுபடி கிலானி ஆஜராவார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனை வழங்கப்பட்டால், அவர் 30 நாட்களுக்குள் மறுபரிசீலனை செய்வதற்கு வாய்ப்பு உள்ளது என்று கூறினார்.
இந்நிலையில் நாடாளுமன்றத்தில் பேசிய கிலானி, நீதிமன்ற உத்தரவுபடி நான் ஆஜராவேன். நாமே சட்டத்தை பின்பற்றவில்லை என்றால், வேறு யார் பின்பற்றுவார்கள்.எனினும் பாகிஸ்தானில் உள்ள அமைப்புகள் அதிகார எல்லைக்கு உட்பட்டு செயல்பட வேண்டும் என்றார். நீதிமன்ற உத்தரவால் ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கும், பிரதமர் கிலானிக்கும் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
எகிப்தில் கால்பந்தாட்ட போட்டியில் வன்முறை: 73 பேர் பலி, 1000 பேர் படுகாயம்.
எகிப்தில் கால்பந்தாட்ட போட்டியின் போது நடைபெற்ற மோதலில் 73 பேர் பலியாகினர், 1000க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.எகிப்து நாட்டில் உள்ள சிட்டி ஆப் போர்ட் நகரில் உள்ளூர் கால்பந்து அணிகளான அல் அலி மற்றும் அல் மாஸ்ரி ஆகிய அணிகள் மோதியது.
இரு அணிகளுக்கும் பலத்த ரசிகர்கள் ஆதரவு இருந்து வந்தது. இந்நிலையில் சிட்டி ஆப் போர்ட் நகரில் மேற்கண்ட இரு அணிகளும் மோதும் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.போட்டிய‌ை காண ஆவலுடன் ரசிகர்கள் மைதானத்தில் திரண்டிருந்தனர். இந்நிலையில் போட்டி தொடங்குவதற்கு கால தாமதம் ஏற்பட்டதாகவும், அதனையடுத்து ரசிகர்கள் ஒருவருக்கொருவர் தங்களது அணிகளை ஆதரித்தும் ரகளையில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக  ஏற்பட்ட வன்முறையில் 73 பேர் பலியாயினர், 1000க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இவ்வாறு ரசிகர்களிடையே உண்டான மோதல் எகிப்து கால்பந்து வரலாற்றில் இது ஒரு மோசமான விளைவு என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மேலும் இது ஒரு மிகப்பெரிய வரலாற்று கறை என சுகாதாரத்துறை ‌அமைச்சர் கருத்து தெரிவித்தார்.
இனப்படுகொலைச் சட்டத்தை எதிர்த்து மேல்முறையீடு: துருக்கி வரவேற்பு.
பிரான்சில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட ஆர்மீனிய இனப்படுகொலை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 130 பாராளுமன்ற உறுப்பினர்கள் மேல்முறையீடு செய்துள்ளனர். இதற்கு துருக்கி வரவேற்பு தெரிவித்துள்ளது.
கடந்த 23ம் திகதி பிரெஞ்சு மேலவையில் நிறைவேற்றப்பட்ட ஆர்மீனிய இனப்படுகொலை சட்டத்தில் ஜனாதிபதி சர்கோசி இன்னும் கையெழுத்திடவில்லை. அவர் கையெழுத்திட்டவுடன் இந்த சட்டத்தை மறுப்பவருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை வழங்கப்படும்.
இந்நிலையில் இந்த சட்டத்தை எதிர்த்து 130 பாராளுமன்ற உறுப்பினர்கள் மேல்முறையீடு செய்துள்ளனர். பிரான்சில் உள்ள துருக்கி தூதரகத்தின் செய்தித்தொடர்பாளர், இந்த மேல் முறையீட்டால் துருக்கி பெரும் உற்சாகம் அடைந்திருப்பதாகக் கூறினார்.இந்த மசோதா மட்டும் சட்டமாகி விட்டால், அத்துடன் பிரான்சுக்கும், துருக்கிக்கும் இடையிலான உறவுகள் முற்றிலுமாக முறிந்துவிடும். ஆர்மீனிய இனப்படுகொலையைத் திட்டமிட்ட இனப்படுகொலை என்று பிரான்சின் கீழவை மற்றும் மேலவை உறுப்பினர்கள் தெரிவிக்க, துருக்கியோ அது உலகப்போரின் ஓர் நிகழ்வு என்று மறுத்துரைக்கிறது.
இந்த நிகழ்வு குறித்து வரலாற்று அறிஞர்கள் ஆராயவேண்டுமே தவிர அரசியல்வாதிகள் அல்ல என்பது துருக்கியின் முடிவாகும்.சர்கோசியின் பழமைவாதக்கட்சியின் கீழவை உறுப்பினர் ஒருவர் கூறுகையில், இச்சட்டம் உருவாக ஆர்வம் காட்டியவர்கள் ஜேர்மனியின் யூதப்படுகொலையையும், ஆர்மீனியரின் படுகொலையையும் சமமாகவே கருதுகின்றனர் என்றார்.இந்தச் சட்டம் அரசியலமைப்பு விதிகளுக்கு அப்பாற்பட்டது. இனப்படுகொலை அல்ல என்று மறுக்கின்றவர்களைக் குற்றம் சாட்டுவதற்கும் மேலாக இச்சட்டம் பிரான்சின் பேச்சுரிமையையும், கருத்துரிமையையும் வெளிப்படுத்துகிறது என்பதே சரியான கருத்தாகும்.
ஜேர்மனியில் அதிகரித்து வரும் பனியும், குளிரும்.
ஜேர்மன் நாடு முழுவதும் -20 டிகிரி செல்சியசுக்கும் குறைவான வெப்பநிலை இருப்பதால் பனியும், குளிரும் அதிகமாகி வருகிறது.ஜேர்மனியில் 22,000 பேர் வீடுகளை இழந்து தெருக்களில் வசிக்கின்றனர். கிழக்குப் பகுதியிலும், கிராமப்பகுதியிலும் தெருவில் வசிப்பவர்கள் குளிரின் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மனிதர்கள் மட்டுமல்லாமல் விலங்குகளும், பறவைகளும் கூட இந்தக் குளிரால் பாதிக்கப்பட்டுள்ளன. இடம்பெயர்ந்து சென்ற கொக்கு, நாரையினங்கள் குளிர் குறைந்ததும் ஜேர்மனிக்குத் திரும்பின.இப்போது குளிர் அதிகரித்துவிட்டதால் அவை மீண்டும் தென்பகுதிக்குச் செல்லலாம் என்று இயற்கை பாதுகாப்புக் கழகத்தின்(NABU) மைக்கேல் தாம்சன் கருதுகிறார்.
புதன்கிழமையன்று நாட்டின் தென்கிழக்குப் பகுதிகள் -90 டிகிரி வெப்பநிலையிலும், மேற்குப்பகுதிகள் -1 டிகிரி வெப்பநிலையிலும் இருக்கும் என்று வானிலை அறிக்கை தெரிவிக்கின்றது.பனிச்சறுக்கு விளையாட்டுக்கு வசதியாக தென்பகுதியில் அதிகம் பனி உருவாகலாம். மற்ற பகுதிகள் பனிக்காற்றினால் பாதிக்கப்படும்.
ரஷ்யாவிலும், ஆர்க்டிக் வடபகுதியிலும் உயர் அழுத்தம் உருவாகி இருப்பதால் உறைபனிக் காற்று வீசும் என்று ஜேர்மனியின் வானிலை ஆய்வு மையத்தைச் சேர்ந்த ஹெல்முட் மலேஸ்கிர் தெரிவித்துள்ளார்.
புதினை புதைக்கலாமா? என்று கூறிய செய்தி வாசிப்பாளரால் பரபரப்பு.
ரஷ்யாவில் சைபீரியா பகுதியைச் சேர்ந்த தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் மரியா புக்துயேவா ஒரே நிமிடத்தில் ரஷ்யா முழுவதும் பிரபலமாகி விட்டார்.இதற்கு காரணம் மறைந்த ரஷ்ய தலைவர் லெனின் உடல், சுமார் 90 ஆண்டுகளாக புதைக்காமல் பராமரிக்கப்பட்டு வருகிறது. அந்த உடலை புதைப்பது பற்றி தற்போது ஒரு விவாதம் நடந்து வருகிறது.
இதை சுட்டிக்காட்டிய அந்த செய்தி வாசிப்பாளர்,  புதினை புதைக்கலாமா? இதுபற்றி இணையதளம் எங்கும் விவாதிக்கப்பட்டு வருகிறது என்று தொலைக்காட்சியில் கூறினார். அதாவது லெனின் என்று கூறுவதற்கு பதிலாக, தற்போதைய ரஷ்ய பிரதமர் புதின் பெயரை கூறிவிட்டார்.
ஏற்கனவே புதினுக்கு எதிர்ப்பு எழுந்து வரும் நிலையில் அவரது பேச்சுக்கு ரஷ்யா முழுவதும் ஆதரவு உருவாகி அவர் ஒரு நிமிடத்தில் புகழ் பெற்று விட்டார்.ஆனால் அந்த பெண் செய்தி வாசிப்பாளரோ வாய் தவறி அப்படி கூறிவிட்டதாக விளக்கம் அளித்துள்ளார்.
சிரியாவில் உள்ள பணியாளர்கள் உடனே நாடு திரும்ப வேண்டும்: கனடிய அரசு.
சிரியாவில் உள்ள கனேடிய தூதரகத்தில் பணியாற்றும் ஒரு சில பணியாளர்களைத் தவிர ஏனையவர்கள் அனைவரும் தாய்நாட்டுக்கு திரும்புமாறு கனேடிய அரசு அறிவித்துள்ளது.சிரியா அரசு பல்வேறு போக்குவரத்து தடைகளை அறிமுகப்படுத்தியுள்ளதால் தலைநகர் டமாஸ்கஸ் தவிர ஏனைய பகுதிகளில் உள்ள கனேடியர்களுக்கு உதவி புரியும் தன்மை கடுமையமாக பாதிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூதரகம் திறந்துள்ளதெனவும், விசா மற்றும் குடிவரவு பிரிவுகள் மூடப்பட்டுள்ளதாகவும், மட்டுப்படுத்தப்பட்ட அளவு சேவைகள் மட்டும் வழங்கப்படுவதாகவும் கனேடிய வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜான் பெயர்டு கூறியுள்ளார்.
கடலில் மூழ்கிய கப்பலில் இருந்து 238 பேர் மீட்பு.
பப்புவா நியு கினியாவில் 350 பேருடன் மூழ்கிய கப்பலில் இருந்து 238 பேர் மீட்கப்பட்டனர் என்று அவுஸ்திரேலிய மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.எனினும் இன்னும் 100-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை என்றும், அவர்களில் பெரும்பாலானோர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுவதாகவும் மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
மீட்புப் பணியில் ஹெலிகாப்டர்களும், உயிர் காக்கும் படகுகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய கடலோர பாதுகாப்பு ஆணையத்தின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
.
ஜப்பானின் அணு உலையில் கதிரியக்க நீர் கசிவு.
கடந்தாண்டு மார்ச் மாதத்தில் ஜப்பானில் நிலநடுக்கமும், அதைத் தொடர்ந்து சுனாமியும் ஏற்பட்டது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பலியாயினர்.அத்துடன் ஜப்பானின் புகுஷிமா டச்சி அணு உலை வெடித்து விபத்துக்குள்ளானது. அதன் பின் அணு உலைகள் சரிசெய்யப்பட்டு வருகிறது.
ஆனால் தற்பொழுது 8.5 டன் அளவிலான கதிரியக்க நீர் கசிந்துள்ளதாகவும், அந்நீர் ரியாக்டரின் வெளிப்புறத்தை அடையும் முன்னர் தடுத்து நிறுத்தப்பட்டு விட்டதாகவும் டோக்கியோ எலெக்ட்ரிக் பவர் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அணு உலையின் 4வது ரியாக்டரில் பைப்பிற்கும், ரியாக்டருக்கும் உள்ள இணைப்பு துண்டிக்கப்பட்டதே இந்த நீர் கசிவுக்கு காரணம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் உதவியை நாடும் ஆசிய நாடுகள்: ஒபாமா.
தங்கள் நாடுகளை மேம்படுத்திக் கொள்ளவும், சீனாவிடம் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் ஆசிய நாடுகள் அமெரிக்காவின் உதவியை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன என அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கூறியுள்ளார்.
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடந்த தேர்தல் பிரசார நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ஒபாமா கூறியதாவது, கடந்த மூன்றாண்டுகளில் நாம் அனேக பிரச்னைகளைக் கடந்து வந்து விட்டோம்.அதே காலகட்டத்தில் நான் உலகம் முழுவதும் சுற்றிப் பார்த்தபின் ஒன்றைத் தெளிவாக தெரிந்து கொண்டேன். அது உலகம் இன்னும் நமது தலைமையை எதிர்பார்த்திருப்பது தான்.
நம்மிடம் உள்ள அதிகாரத்திற்காக அவர்கள் நம்மை எதிர்பார்க்கின்றனர். ஆசியாவில், சீனாவின் வளர்ச்சியை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். அவர்களின் பொருளாதார எதிர்காலம் நம்மோடு மட்டுமல்ல, அசுர வேகத்தில் வளர்ந்து வருவதை அவர்கள் உணர்ந்துள்ளனர்.அதனால் ஆசியாவின் அச்சிறிய நாடுகள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், தங்களின் இயற்கை வளங்கள் சுரண்டப்படாமல் முறையாக மேம்படுத்தவும் விரும்புகின்றனர். அதனால் அவர்கள் நம்மை விரும்புகின்றனர் என்று தெரிவித்தார்.
ஆப்கான் அரசுடன் பேச்சுவார்த்தையா? தலிபான்கள் மறுப்பு.
தலிபான் தீவிரவாத அமைப்பினருடன் ஆப்கான் அரசு பேச்சுவார்ததை நடத்தப் போவதாக வெளியான தகவலை தலிபான் அமைப்பினர் மறுத்துள்ளனர்.அரபு நாடான கத்தாரில் அமெரிக்காவிற்கும், தலிபான்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து வந்தது.
இதில் பாகிஸ்தானின் தெற்கு வஜீரிஸ்தானில் கடந்த 2009ம் ஆண்டில் தலிபானால் சிறை பிடிக்கப்பட்ட அமெரிக்க வீரர் போவ் பெர்க்தல் என்பவரை தலிபான் விடுவிக்க வேண்டும். அதற்கு மாற்றாக குவான்டனமோவில் அடைக்கப்பட்டுள்ள தலிபான் பயங்கரவாதிகளில் ஐந்து பேரை அமெரிக்கா விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஆனால் இந்த விடுவிப்பிற்கு முன்பாக ஆப்கானில் தங்களின் தாக்குதல்களை தலிபான்கள் நிறுத்த வேண்டும் என அமெரிக்கா நிபந்தனை விதித்தது. ஆனால் அதை தலிபான் ஏற்க மறுத்து விட்டது. இதனால் இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.இதனையடுத்து தலிபான்களுக்கும், ஆப்கான் அரசுக்கும் இடையே பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறப்போவதாக தகவல் வெளியானது.
இதுகுறித்து தலிபான் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், சவுதி அரேபியாவில் கர்சாய் தலைமையிலான ஆப்கான் அரசுப் பிரதிநிதிகளை தலிபான் அமைப்பினர் சந்தித்து பேச்சு நடத்தப் போவதாக வந்த தகவல்கள் தவறானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கு முன்பு தொடங்கிய தலிபான், ஆப்கான் பேச்சுவார்த்தை ஆப்கான் முன்னாள் ஜனாதிபதி பர்ஹனுதீன் ரப்பானி தலிபான்களால் கொலை செய்யப்பட்ட பின் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF