கூட்டமைப்பு மற்றும் அரசாங்கத்திற்கிடையே இடம்பெறும் பேச்சுவார்த்தையில் காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் பற்றி பி.பி.சிக்கு அளித்துள்ள செவ்வி ஒன்றிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தைப் பொறுத்தவரை, எந்த விடயங்கள் குறித்தும் பேசத் தயாராக இல்லை, பேசமாட்டோம் என்று மறுக்கவில்லை. காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் குறித்து மட்டுமன்றி வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்புப் பற்றிக் கூட நாங்கள் பேசமாட்டோம் என்று நிராகரிக்கவில்லை. இருந்தாலும் நாங்கள் பேச்சு நடத்துகிறோம். இவை மிகவும் நுணுக்கமான சிக்கலான விடயங்கள். இவற்றை ஓரிரு நாட்களில் தீர்த்துவிட முடியாது என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு சில பிரச்சினைகள் உள்ளன. அதுபோல தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் பிரச்சினைகள் உள்ளன. அவற்றைத் பேசித் தான் தீர்க்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.இலங்கை அரசாங்கம் அரசியலமைப்பின் 13வது திருத்தப்படி, அதிகாரங்களை முழுமையாக வடக்கு கிழக்கு பிரதேசங்களுக்கு பகிர தயாராக இருப்பதாக தமக்கு உறுதியளித்துள்ளதாக இந்திய அரசு அண்மையில் அறிக்கை வெளியிட்டிருந்தது.
இது தொடர்பாக, இந்தியா எமக்கு எந்தவிதமான அழுத்தமும் கொடுக்கவில்லை. இலங்கையை எவ்வாறு ஆட்சி செய்ய வேண்டும் என்று இந்தியாவோ அல்லது வேறு எந்த நாடோ எமக்கு உத்தரவிட முடியாது என குறிப்பிட்டுள்ளார். அவர்களின் விருப்பப்படி எம்மால் நடந்து கொள்ள முடியாது. இந்தப் பிரச்சினைகளை உள்ளுக்குள் தீர்ப்பதற்கே பேச்சுக்கள் நடக்கின்றன.இந்திய அழுத்தம் என்று எதுவும் கிடையாது என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
தமிழ்ப் பிரதேசங்களுக்கு காணி, காவல்துறை அதிகாரங்கள் வழங்குவதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவிப்பதாக அரசின் பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமய கூறுவது குறித்து கருத்து வெளியிட்ட அவர்,நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றை அமைத்தே ஒருமனதான தீர்மானத்துக்கு வரமுடியும். எமக்கு ஒவ்வொரு கட்சியினதும் நிலைப்பாடு அவசியம். தமிழர் தரப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முக்கியமானது. அதேவேளை ஈ.பி.டி.பியினது கருத்தையும் அறிய வேண்டும். என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பொலிஸ் நிலையங்களில் இணையத்தளங்கள் அமுல்படுத்த திட்டம்.
அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் தமக்கிடையே தகவல்களை பரிமாறிக்கொள்வதற்காக இந்த நடைமுறை அமுலுக்கு வரவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் பொதுமக்கள் தமது தகவல்களை பரிமாறிக்கொள்ளமுடியும் என்றும் இதனால், நாட்டின் நடைபெறுகின்ற விடயங்களை அனைவரும் தெரிந்துக்கொள்ளக்கூடிய வசதி ஏற்படும் என்றும் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.
எனினும், பொதுமக்களின் முறைப்பாடுகளை இணையங்களின் மூலம் பெற்றுக்கொள்ளும் நடைமுறை அமுலுக்கு வராது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.இதேவேளை, அபராதங்களை குறுஞ்செய்தி(எஸ்.எம்.எஸ்) மூலம் செலுத்தும் முறை ஒன்றையும் இலங்கையின் பொலிஸ் திணைக்களம் அறிமுகப்படுத்தவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அதிகார பகிர்விற்கு இடமே இல்லை: அமைச்சர் சம்பிக்க ரணவக்க.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சிறந்த பின்னணியைக் கொண்டு விரிவாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பித்துள்ளது.இந்த நாட்டில் இனப்பிரச்சினை ஒன்று இருப்பதாக ஜாதிக ஹெல உறுமய ஏற்றுக்கொள்ளவில்லை என அவர் தெரிவித்தள்ளார்.
இலத்திரனியல் வீசா முறை புதுவருட தினத்தில் அமுல்! விமானநிலையத்தில் இரண்டு கருமபீடங்கள்.
இதன்கீழ் வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு வீசாவை பெற்றுக்கொள்வதற்கென விமானநிலையத்தில் இரண்டு கருமபீடங்கள் திறக்கப்பட்டுள்ளதாக குடிவரவு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், அனைத்து நாடுகளுக்குமான ஈ வீசாக்களுக்கு 20 அமெரிக்க டொலர்களும், தென்னாசிய நாடுகளுக்கு 10அமெரிக்க டொலர்களையும் அறவிடவுள்ளதாக குடிவரவு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதேநேரம் வழமைபோலவே சிங்கப்பூர், மாலைதீவு போன்ற நாடுகளின் பயணிகள் வீசா இன்றியே நாட்டுக்குள் பிரவேசிக்கமுடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரைகளை புறக்கணிக்க ஜனாதிபதி மகிந்த தயார்!- ஆங்கில இணையத்தளம்.
பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் ஜனாதிபதியின் ஆலோசகர்கள் பலரும் தொடர்ச்சியாக கொடுத்த அழுத்தத்தை அடுத்தே அவர் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நல்லிணக்க ஆணைக்குழுவிடம் இருந்து அரசாங்கத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்கும், யுத்தக் குற்ற விவகாரங்களில் இருந்து தப்பிக் கொள்வதற்குமான யோசனைகள் சிலவற்றையும் இந்தக் குழுவினர் ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ளதாகவும் அவ்விணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியை சந்தித்த இந்தக் குழுவினர், அனைத்துலக சமூகத்தைத் திருப்திப்படுத்துவதற்காக ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதானது, விடுதலைப் புலிகளால் பாதிக்கப்பட்ட தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களுக்கும், உயிர்த் தியாகம் செய்து நாட்டில் அமைதியை ஏற்படுத்திய படையினருக்கும் இழைக்கப்படும் அநீதியாகவே அமையும் என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு எதிராக அமைச்சர்கள் சம்பிக்க ரணவக்கவையும், விமல் வீரவன்சவையும் களமிறக்கி உள்நாட்டில் பரப்புரைகளை மேற்கொள்ளுமாறும், முன்னாள் வெளிவிவகார அமைச்சர்களான ரோகித போகொல்லாகம மற்றும் மிலிந்த மொறகொட போன்றோரை அனைத்துலக பரப்புரைகளில் ஈடுபடுத்துமாறும் இவர்கள் ஆலோசனை கூறியுள்ளனர் எனவும் அத்தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் முக்கியமான எதிர்க்கட்சி அரசியல்வாதிகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் ஆலோசனை கூறப்பட்டுள்ளதுடன், நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கைக்கு எதிராக மட்டுமன்றி, அதில் இடம்பெற்றிருந்த உறுப்பினர்களைக் குறிவைத்தும் பரப்புரைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொன்சேகாவின் விடுதலை தொடர்பில் மத்தியஸ்தம் வகிக்குமாறு கோரி அமெரிக்காவிடம் மகஜர்.
மகஜர் கிடைக்கப் பெற்றதையடுத்து அதுகுறித்து எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகளைப் பரிசீலிக்கும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர் என்றும் அந்த இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.மகஜரில் ஒப்பமிட்ட அனைவருக்கும் பொன்சேகாவின் தரப்பு நன்றிகளைத் தெரிவித்துள்ளது.
சவுதி அரேபியாவில் இலங்கையர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.
காணாமல் போனவரின் மகன் இது குறித்து தெரிவிக்கையில், தமது தந்தைக்கு ஏற்பட்ட நிலையை அடுத்து தமது குடும்பம் பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளதாக குறிப்பிட்டார்.குறித்த இலங்கையர் விபத்து ஒன்றில் சிக்கியதாக முன்னர் தகவல் வெளியாகியிருந்தது.
தமது தந்தையின் நிலை குறித்து அவருடன் தொழில்புரிந்த பிறிதொருவர் ஊடாகவே அறிந்து கொண்டதாக மகன் தெரிவித்துள்ளார்.எனினும், தொழில்புரிந்த நிறுவனத்தில் இருந்து எந்த வித உத்தியோகபூர்வ தகவல்களும் இதுவரை வெளியிடப்படவில்லை.
பொலிஸ், காணி அதிகாரங்களை வழங்குவதில் அரசாங்கத்திற்கு சிக்கல் என்கிறார் கெஹலிய.
ஆனால் எந்த விடயத்துக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள வேண்டும். காணி பொலிஸ் அதிகாரங்களை வழங்காவிடின் பேச்சு நடத்துவதில் அர்த்தம் இல்லை என்று கூறி விலகிச் செல்வதால் ஏற்படப்போவது ஒன்றுமில்லை.
குறித்த அதிகாரங்களின் சில விடயங்கள் குறித்து பேச அரசாங்கத்தின் கதவுகள் திறந்தேயுள்ளன என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் குறித்து தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் பேச்சு நடத்தத் தயார் என்று அரசாங்க பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவர் அமைச்சர் நிமால் சிறிபால டி. சில்வா தெரிவித்துள்ளதாக வெளிவரும் தகவல்கள் குறித்து தெளிவுபடுத்துகையிலேயே அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.
அரசியல்வாதிகள் மஹாவம்சத்தை திரிபுபடுத்த முயற்சிக்கின்றனர் – சரத் பொன்சேகா.
பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மானின் பெயர்கள் மஹா வம்சத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், எனது பெயர் உள்ளடக்கப்படவில்லை.
இந்தக் கீழ்த்தரமான அரசியல்வாதிகள் மஹா வம்சத்தையும் திரிபுபடுத்த முயற்சிக்கின்றனர்.வைத்திய சிகிச்சை பெற்றுக் கொள்வதற்காக கொழும்பு தனியார் வைத்தியசாலைக்கு சென்றிருந்த போது சரத் பொன்சேகா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வெளிவாரி பட்டப்படிப்பினை நாய்கள் கூட மதிப்பதில்லை – உயர்கல்வி அமைச்சர்.
பிலியந்தலையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.வெளிவாரி பட்டப்படிப்பினால் எவருக்கும் எந்தவித நன்மையும் கிடையாது.
உயர் நீதிமன்றத்தையும் நாய்களையும் தொடர்புபடுத்தி கடந்த காலத்தில் எஸ்.பி. திஸாநாயக்க வெளியிட்ட கருத்து, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதுடன், நீண்ட சிறைத்தண்டனையை அனுபவிக்கவும் வழிகோலியது.தனியார் பல்கலைக்கழகங்களை அமைப்பதில் உயர்கல்வி அமைச்சர் தீவிரம் காட்டி வருவதாக ஆளும் கட்சி உறுப்பினர்களே குற்றம் சுமத்தி வருகின்ற சந்தர்ப்பத்தில், வெளிவாரி பட்டக் கற்கைநெறிகளை நாய்களும் விரும்பாது என வெளியிட்ட கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தக் கூடும் என தெரிவிக்கப்படுகிறது.
இராணுவத்தினர் அரசாங்கத்திற்கு 3.7 பில்லியன் ரூபாவினை சேமித்துக் கொடுத்துள்ளனர்: ஜகத் ஜயசூரிய.
வீதிகள், சர்வதேச மைதானங்கள், பூங்காக்கள் போன்றவற்றை நிர்மாணிக்கும் பணிகளும், நகரை அழகுபடுத்தும் நடவடிக்கைகளிலும் படையினர் சிறந்த பங்களிப்பை வழங்கி வருவதாக இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கல்வி, விவசாயம், பொருளாதாரம், சுயதொழில் முயற்சிகளுக்கு படையினர் ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் உதவி வழங்கி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அணு உலை எரிபொருளை சொந்தமாக தயாரித்த ஈரான்: ஏவுகணை சோதனையும் நிகழ்த்தப்பட்டது.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அணு உலை எரிபொருளை ஈரான் அரசு முதல் முறையாக சோதனை செய்துள்ளது.
ஈரான் அரசு அணு ஆயுதங்கள் தயாரிப்பில் ஈடுபடுவதாக ஐ.நா, அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட பல நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன, அத்துடன் பொருளாதார தடையும் விதித்துள்ளன.
அணுசக்திக்கு தேவையான யுரேனியம் மூலப்பொருளையும் ஈரானுக்கு விநியோகம் செய்ய கூடாது என்று தடை விதிக்கப்பட்டது. எனினும் ஏற்கனவே வாங்கி வைத்திருக்கும் யுரேனியம் மற்றும் யுரேனிய கழிவுகளில் இருந்து எரிபொருள் தயாரித்து, அணுசக்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் என்று ஈரான் கூறிவந்தது.
இந்நிலையில் டெஹ்ரானில் அமைக்கப்பட்டுள்ள அணு உலைக்கு தேவையான எரிபொருளை யுரேனியத்தின் மூலம் தயாரித்துள்ளது ஈரான். இதை அணு உலையில் செலுத்தி முதல் முறையாக விஞ்ஞானிகள் பரிசோதனையும் செய்து பார்த்துவிட்டனர் என்று ஈரான் அணுசக்தி கழகம் தனது இணையத்தளத்தில் தகவல் வெளியிட்டுள்ளது.
கென்யாவில் படகு கவிழ்ந்து விபத்து: 7 பேர் பலி.
கென்ய நாட்டின் லாமு ரிசார்ட் பகுதியில் படகு கவிழ்ந்து விழுந்த விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
82 பேர் இந்த படகில் பயணித்ததாகவும், இதுவரை 48 பேர் உயிரோடு மீட்கப்பட்டிருப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவித்தன.பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
ஈரான் மீது பொருளாதார தடைகள், பாகிஸ்தானுக்கு நிதியுதவி நிறுத்தம்: ஒபாமா அதிரடி.
ஈரான் மீது மேலும் பல பொருளாதார தடைகளை விதிக்கக் கூடிய மற்றும் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அளிக்கும் நிதியுதவியை குறைக்கக் கூடிய பாதுகாப்பு பிரேணணையில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கையெழுத்திட்டுள்ளார்.குறுகிய தூரம் சென்று தாக்கக் கூடிய ஏவுகணையை ஈரான் நேற்று வெற்றிகரமாகப் பரிசோதித்துள்ளது. அத்துடன் அணுமின் நிலையங்களுக்கான யுரேனிய எரிபொருளையும் தயாரித்துள்ளது.
இந்த இரண்டையுமே உள்நாட்டு தொழில்நுட்பம் மூலம் ஈரான் சாதித்துள்ளது. ஈரான் குறித்த இச்செய்திகள் நேற்று தான் வெளியாகின. ஆனால் இந்த இரண்டும் எப்போது, எங்கே நடந்தன என்பது குறித்து ஈரான் தேசிய செய்தி நிறுவனம் எதுவும் குறிப்பிடவில்லை.இந்த அதிரடி சம்பவங்களை எதிர்பார்த்துக் கொண்டிருந்த அமெரிக்காவுக்கு, இவை பற்றிய செய்திகள் முதலில் தெரிந்திருக்க வாய்ப்புண்டு.
அதை உறுதிப்படுத்தும் விதத்தில் கடந்தாண்டு டிசம்பர் கடைசி வாரத்தில் ஈரான் மீது மேலும் பல பொருளாதாரத் தடைகளை விதிக்கும் பாதுகாப்பு பிரேணணை ஒன்று அமெரிக்க காங்கிரசில் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.அதன்படி அமெரிக்காவின் அரசு மற்றும் தனியார் வங்கிகள் அனைத்தும் ஈரான் மத்திய வங்கி உட்பட நிதி நிறுவனங்களுடன் எவ்வித உறவும் வைத்து கொள்ளக் கூடாது. மீறி உறவு கொள்ளும் வங்கிகள், அமெரிக்க பங்குச் சந்தையிலிருந்து விலக்கி வைக்கப்படும்.
அதேபோல் பயங்கரவாதத்துக்கெதிரான போரில் பாகிஸ்தானுக்கு அளிக்கப்படும், 850 மில்லியன் டொலர் நிதியுதவியில் 60 சதவீதம் அதாவது 510 மில்லியன் டொலர் நிறுத்தி வைக்கப்படும்.பாகிஸ்தானில் தயாரிக்கப்படும் நாட்டு வெடிகுண்டுகள் மூலமாக ஆப்கானில் பயங்கரவாதிகள் நடத்தும் தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் பலியாகி வருகின்றனர். அதனால் நாட்டு வெடிகுண்டு உற்பத்தியைத் தடுக்கும் நடவடிக்கைகளில் பாகிஸ்தான் முழுமூச்சுடன் ஈடுபட்டால் ஒழிய இந்த தடை நீக்கப்படுவதற்கு வாய்ப்பில்லை.
ஹவாய் தீவில் ஓய்வு பெற்று வரும் ஜனாதிபதி ஒபாமா இந்த பிரேணணையில் நேற்று கையெழுத்திட்டார். ஈரான் தனது தொலை தூரம் சென்று தாக்கும் ஏவுகணைப் பரிசோதனையை நிறுத்தி வைப்பதாகவும், அணுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தைக்குத் தயார் எனவும் அறிக்கை வெளியிட்டதற்கு சில மணிநேரங்கள் கழித்து ஒபாமா இந்த பிரேணணையில் கையெழுத்திட்டுள்ளார். இதையடுத்து பிரேணணை சட்டமாகியுள்ளது.
அதேநேரம் குவான்டனாமோ சிறையில் உள்ள வெளிநாட்டுக் கைதிகளை விசாரணைக்காக அமெரிக்காவிற்கோ அல்லது உடல்நலம் காரணமாக அவரவரின் நாடுகளுக்கோ அனுப்பி வைப்பதில் இந்த சட்டம் சில கெடுபிடிகளை வலியுறுத்தியுள்ளது.உலகளவில் பொருளாதார சிக்கல் ஏற்பட்டுள்ள இந்நிலையில் ஈரான் மீதான தற்போதைய தடைகள் எண்ணெய் வர்த்தகத்தில் மேலும் பல நெருக்கடிகளை ஏற்படுத்தும் எனவும், கைதிகள் பரிமாற்றத்தில் செய்யப்பட்டுள்ள கெடுபிடிகள் தேவையில்லை எனவும் ஒபாமா அதிருப்தி தெரிவித்துள்ளார்.
அவர் தனது உரையில், இந்த பிரேணணையில் நான் கையெழுத்திட்டேன் என்பதற்காக இதன் எல்லா அம்சங்களையும் ஏற்றுக் கொண்டேன் என்பது அர்த்தமல்ல என்றார்.ஆனால் பாகிஸ்தானுக்கான நிதியுதவி நிறுத்தப்பட்டது குறித்து அவர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
அர்ஜென்டினாவின் மாகாண ஆளுநர் சுட்டுக் கொலை.
அர்ஜென்டினாவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்ற மாகாண ஆளுநர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார்.லத்தீன் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவின் ரியோநெக்ரோ மாகாணத்தின் ஆளுநராக இருந்தவர் கார்லோஸ் சோரியா(61). நேற்று முன்தினம் புத்தாண்டு என்பதால் தனது மனைவியுடன் புத்தாண்டினை கொண்டாட ஜெனரல்ரூக்கா நகரில் உள்ள தனது வீட்டில் முக்கிய நண்பர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
சம்பவத்தன்று உள்நாட்டு நேரப்படி இரவு 8 மணியளவில் அவரது படுக்கையறையிலிருந்து துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்கவே அறையில் சென்று பார்த்த போது அவரது தலையில் குண்டுகாயங்களுடன் பிணமாக கிடந்தார். இது குறித்து காவல்துறை அதிகாரிகள் கார்லோஸ் சோரியாவின் மனைவி சுஸானாபெர்ரிடோஸிடம் விசாரணை நடத்தி வருகி்ன்றனர்.
சுட்டுக்கொல்லப்பட்ட ஆளுநர் கார்லோஸ்சோரியா ஆளும் பெர்னோஸிட் தேசிய கட்சி சார்பில் கடந்த ஆண்டு(2011) டிசம்பர் 10ம் திகதி தான் ரியோநெக்ரோக மாகாண ஆளுநர் தேர்தலில் போட்டியிட்டு பெரும் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆளுநராக பதவியேற்றார்.
இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்: பீதியில் மக்கள்.
இந்தோனேஷியாவின் வடபகுதியில் உள்ள சுமத்ரா தீவில் இன்று அதிகாலை 5.3 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.சுமத்ரா தீவில் பந்தா அசே பகுதிக்கு தென்மேற்கில் 160 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.
இந்த நிலநடுக்கத்தால் கடற்கரையை ஒட்டியுள்ள கட்டடங்கள் குலுங்கின. இதன் காரணமாக சேதம் ஏதும் ஏற்பட்டதாக தகவல் ஏதும் இல்லை. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.
இந்தோனேசியாவில் நிலநடுக்கம் அவ்வப்போது ஏற்படும் என்பதால் சிறிது நேரம் பரபரப்படைந்த மக்கள் அதன் பின் தங்கள் பணிகளை தொடர்ந்தனர். முன்னதாக கடந்த 2004ம் ஆண்டு சுமத்ரா தீவில் ரிக்டர் அளவுகோலில் 9.9 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டு 2,20,000 மேற்ப்பட்ட மக்கள் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
புத்தாண்டு வாழ்த்துக்களால் முடங்கி போன ட்விட்டர்.
அதிகளவில் புத்தாண்டு வாழ்த்துக்கள் குவிந்ததால் பிரிட்டனில் ட்விட்டர் சமூக வலைத்தளம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக முடங்கி விட்டது.ட்விட்டர் சமூக வலைத்தளம் மூலமாக நேற்று முன்தினம் உலகம் முழுவதிலும் உள்ளோர் தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். இந்நிலையில் பிரிட்டனில் நேற்று முன்தினம் மதிய நேரத்தில் ட்விட்டர் முடங்கி விட்டது.
அந்த நேரத்தில் ஜப்பானில் புத்தாண்டு தொடங்கி விட்டதால் ட்விட்டரில் வாழ்த்துக்கள் குவிய ஆரம்பித்து விட்டன. அதாவது நிமிடத்துக்கு 16 ஆயிரத்து 197 வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டன.இதனால் ட்விட்டர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக முடங்கி விட்டது. இதனால் ஏற்கனவே வாழ்த்து தெரிவித்தவரும், வாழ்த்து தெரிவிக்கப்பட்டவரும் தங்கள் செய்திகளைக் காண முடியாமல் தவித்தனர். இதன் காரணமாக பயனாளிகள் கடும் எரிச்சல் அடைந்தனர்.
இதுகுறித்து அவர்கள் அனுப்பிய செய்திகளில், ட்விட்டர் ஈஸ் ஓவர் கெபாசிட்டி என்ற மூன்று வார்த்தைகள் எனது இன்றைய நாளை வீணாக்கிவிட்டன எனவும், இந்த புத்தாண்டில் ட்விட்டர் எடுக்க வேண்டிய உறுதிமொழி என்னவென்றால் இனி நான் எப்போதும் ஓவர் கெபாசிட்டி என்ற நிலைக்குப் போக மாட்டேன் என்பது தான் எனவும் கிண்டல் செய்துள்ளனர்.
அதேநேரம் பேஸ்புக் சமூக வலைத்தளம் புத்தாண்டு தினத்தன்று 100 கோடி செய்திகள் மற்றும் புகைப்படங்கள் உலகம் முழுவதிலும் பரிமாறப்படும் என்பதால், அதைச் சமாளிக்கத் தயாராக இருப்பதாக அறிவித்திருந்தது.
மெமோகேட் விவகாரம் மீதான விசாரணை இன்று தொடக்கம்.
மெமோகேட் விவகாரத்தில் நேரில் ஆஜராகும்படி அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் முன்னாள் தூதர் உசேன் ஹக்கானி மற்றும் ஐ.எஸ்.ஐ தலைவர் அகமது சுஜா பாஷா ஆகியோருக்கு விசாரணைக் குழு சம்மன் அனுப்பியுள்ளது.
பாகிஸ்தானில் அரசைக் கவிழ்க்க இராணுவம் சதித் திட்டம் தீட்டியதாக சந்தேகப்பட்ட ஜனாதிபதி ஸர்தார, கடந்தாண்டு மே மாதம் அமெரிக்காவுக்கான அப்போதைய பாகிஸ்தான் தூதர் உசேன் ஹக்கானி மூலம் அமெரிக்காவின் அப்போதைய இராணுவ தளபதி மைக் முல்லனுக்கு ஒரு கடிதம் கொடுத்தார்.அக்கடிதத்தில் பாகிஸ்தான் இராணுவத் தளபதி கயானியை கண்டிக்கும் படி ஜனாதிபதி ஸர்தாரி கூறியிருந்தார். இத்தகவலை அமெரிக்காவில் வசிக்கும் பாகிஸ்தான் தொழிலதிபர் மன்சூர் இஜாஸ் வெளியிட்டார்.
இதனால் ஏற்பட்ட பிரச்னையின் காரணமாக உசேன் ஹக்கானி தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு நாடு திரும்பினார். இதுகுறித்து பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது.இதற்காக மூன்று நபர் கொண்ட விசாரணைக் குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்துள்ளது. இவ்விவகாரம் தான் மெமோகேட் விவகாரம் என்று பத்திரிக்கைகளால் அழைக்கப்படுகிறது.இந்நிலையில் தொழிலதிபர் மன்சூர் இஜாஸ், ஐ.எஸ்.ஐ தலைவர் பாஷா, முன்னாள் தூதர் உசேன் ஹக்கானி, முன்னாள் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோம்ஸ் ஜோன்ஸ் ஆகியோர் நேரில் ஆஜராகி தங்கள் விளக்கங்களை அளிக்கும்படி விசாரணைக் குழு நேற்று முன்தினம் சம்மன் அனுப்பியுள்ளது.
மெமோகேட் விவகாரத்திற்கு காரணம் எது? ஜனாதிபதி ஸர்தாரியின் வேண்டுகோள் உண்மைதானா? இந்த வேண்டுகோளின் நோக்கம் என்ன? ஆகியவை குறித்து இந்த விசாரணைக் குழு இன்னும் நான்கு வாரங்களில் தனது அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும். விசாரணைக் குழு தனது விசாரணையை இன்று தொடங்குகிறது.
பிலிப்பைன்சில் சோகமாக முடிந்த புத்தாண்டு கொண்டாட்டங்கள்.
பிலிப்பைன்சில் சட்ட விரோதமாக தயாரிக்கப்பட்ட சக்தி வாய்ந்த பட்டாசுகள் வெடித்து 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட 205 பேர் படுகாயமடைந்தனர்.உலகம் முழுவதும் நேற்று புத்தாண்டை மக்கள் மகிழ்ச்சியுடன் கோலாகலமாக கொண்டாடினர்.
ஆனால் பிலிப்பைன்சில் அரசின் எச்சரிக்கையையும் மீறி சட்ட விரோதமாக சக்திவாய்ந்த பட்டாசுகளை வெடித்தும், துப்பாக்கி குண்டுகள் முழங்கவும் விபரீதமாக கொண்டாடினர்.காது செவிடாகும் வகையில் அதிக சத்தம் எழுப்பும் பட்டாசுகள் வெடித்த விபத்துகளில் 197 பேரும், குண்டடிபட்டு 8 பேரும் படுகாயமடைந்தனர்.
இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் குழந்தைகள், படுகாயத்தால் 14 சிறுவர்களின் கை விரல்களை துண்டிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.வெடி விபத்து குறித்த விழிப்புணர்வு மற்றும் அரசின் எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல் நடந்த இந்த விபத்தால் படுகாயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
சட்ட விரோதமாக செயல்பட்டு பலர் காயமடைய காரணமாக இருந்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நாட்டு உயரதிகாரிகள் தெரிவித்தனர்.வெடிவிபத்தின் தீமைகள் பற்றிய பிரசாரம், வெடிவிபத்துகளின் கோர காட்சி அடங்கிய படங்கள் மூலம் அதன் கொடூரத்தை சுட்டிக் காட்டியும் விபத்துகள் தொடர்ந்து நடக்கின்றன.கொண்டாட்டத்தின் போது வெடி வெடிக்கும் பழக்கத்தை மக்கள் மனதில் இருந்து அகற்றினால் மட்டுமே எதிர் காலத்தில் இதுபோன்ற விபத்துகளை தவிர்க்கலாம் என அறிவுறுத்தப்பட்டது.
பாகிஸ்தான் அரசை கண்டித்து வர்த்தகர்கள் உண்ணாவிரதம்.
பாகிஸ்தான் அரசை கண்டித்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள வர்த்தகர்கள் எல்லையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் விளையும் பொருட்கள் பாகிஸ்தானுக்கு டிரக்குகளில் கொண்டு செல்லப்படுகின்றன.
அந்த டிரக்குகளை வழிமறிக்கும் பாகிஸ்தான் சுங்க துறை அதிகாரிகள், வரி கட்ட சொல்லி கட்டாயப்படுத்தி வருகின்றனர்.இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வரும் வர்த்தகர்கள் கடந்த சனிக்கிழமை எல்லையில் உண்ணாவிரத போராட்டம் தொடங்கினர். அதனால் சரக்குகளுடன் 120 டிரக்குகள் ஜீலம் பள்ளத்தாக்கு சாலையில் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து வர்த்தகர்கள் கூறுகையில், பாகிஸ்தான் சுங்க துறை அதிகாரிகளின் கெடுபிடிகள் நிறுத்தப்பட வேண்டும். எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும். அதுவரை எங்கள் பொருட்களை மார்க்கெட்டுக்கு அனுப்ப மாட்டோம். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வங்கி சேவை இல்லை, தகவல் தொடர்பு வசதி இல்லை, பொருட்களை கொண்டு செல்ல ஏகப்பட்ட கெடுபிடிகள் உள்ளன என்று தெரிவித்தனர்.
இதுகுறித்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வர்த்தக சங்க செய்தித் தொடர்பாளர் பெர்வேஸ் அகமது கூறுகையில், கோரிக்கைகளை பரிசீலிப்பதாக பிரதமர் அறிவித்த பிறகும், எங்கள் டிரக்குகளை சுங்க துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். வர்த்தகர்களிடம் லஞ்சம் கேட்டு தொந்தரவு செய்யும் சுங்க துறை அதிகாரிகள் மீது காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்துள்ளோம் என்றார்.
பிரிட்டனில் இந்திய மாணவர் கொலை: விசாரிப்பதற்காக அதிகாரிகள் இந்தியா வருகை.
பிரிட்டனில் இந்திய மாணவர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் மான்செஸ்டர் காவல்துறை அதிகாரிகள் இருவர் இந்தியா வந்து மாணவரின் பெற்றோரைச் சந்திக்க உள்ளனர்.
பிரிட்டனில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் 26ம் திகதி மான்செஸ்டர் நகரில் அனுஜ் பித்வே(23) என்ற இந்திய மாணவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.இக்கொலையில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர், இவர்களில் மூன்று பேருக்கு பிணை வழங்கப்பட்டது. இந்நிலையில் கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி இன்னும் காவல்துறையினரால் கைப்பற்றப்படவில்லை.
கொலையாளியைக் கண்டுபிடிப்போருக்கு 50 ஆயிரம் பவுண்டு பரிசளிக்கப்படும் என மான்செஸ்டர் காவல்துறையினர் அறிவித்துள்ளனர். பித்வேயின் உடலை இந்தியா கொண்டு வருவதற்காக அடுத்த வாரம் அவரின் பெற்றோர் மான்செஸ்டர் செல்லவுள்ளனர்.இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பான விபரங்களை பித்வேயின் பெற்றோரிடம் தொலைபேசி மூலம் பேசுவதில், காவல்துறை அதிகாரிகளுக்கு சில சிரமங்கள் இருப்பதால் அவர்களில் இரு உயர் அதிகாரிகள் விரைவில் பித்வேயின் பெற்றோரை நேரில் சந்தித்து தகவல்களைப் பெறவுள்ளனர்.
தெற்கு சூடானில் கலவரம்: 1000 பேர் பலி.
ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள சூடானில் இருந்து விடுதலை பெற்று கடந்த ஆண்டு(2011) ஜூலை மாதம் 9ந் திகதி தெற்கு சூடான் உதயமானது.அங்கு ஜாஸ்லே மாகாணத்தில் உள்ள பைபோர் பகுதியில் இரு பிரிவினருக்கு இடையே அதிகாரத்தை கைப்பற்றுவதில் மோதல் ஏற்பட்டது. தற்பொழுது இந்த வன்முறை வெடித்து கலவரமாக மாறியது.
பல மாதங்களாக நடைபெற்று வரும் இந்த கலவரத்தில் இதுவரை 1000 பேர் உயிரிழந்தனர். எனவே கலவரத்தை அடக்க அங்கு கூடுதலாக மேலும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இராணுவ வீரர்களும், பொலிசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.இதற்கிடையே இரு பிரிவினரும் சமாதானத்துடன் அமைதி காக்கும் படி ஜனாதிபதி சால்வா கீர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உலகின் முதல் 3டி சேனல் சீனாவில் தொடக்கம்.
உலகின் முதல் 3டி தொலைக்காட்சி சேனலை சோதனை முறையில் சீனா தொடங்கியுள்ளதாக அந்நாட்டு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.சீனாவில் உள்ள சில தொலைக்காட்சி நிறுவனங்கள் ஒன்றிணைந்து இந்த 3டி தொலைக்காட்சி சேனலை தொடங்கியுள்ளன.ஆங்கில புத்தாண்டான ஜனவரி 1ம் திகதி முதல் தொடங்கப்பட்ட இந்த 3டி சேனல் தினமும் 13.5 மணி நேர நிகழ்ச்சிகளை சோதனை முறையில் ஒளிபரப்பு செய்து வருகிறது.
இந்த சேனலை சீனாவின் மத்திய தொலைக்காட்சி நிறுவனம் நடத்தி வருகிறது. வரும் ஜனவரி 23ம் திகதி சீனாவில் வசந்த விழா கொண்டாடப்பட இருக்கிறது. அன்றைய நாளில் இந்த 3டி சேனல் அதிகராப்பூர்வமாக ஒளிபரப்பப்படும்.முப்பரிமாண முறையில் காட்சிகளை கண்முன்னே நிறுத்தும் இந்த 3டி சேனல் உலகின் முதன் முதலாக தொடங்கப்பட்டது என்ற பெருமையைப் பெறுகிறது.
வேலைவாய்ப்புகளில் புதிய சாதனை நிகழ்த்திய ஜேர்மனி.
கடந்த 2011ம் ஆண்டு ஜேர்மனி ஒரு புதிய சாதனையை படைத்துள்ளது. ஐரோப்பிய மண்டலத்தின் பொருளாதாரத்தால் ஜேர்மனியில் அரை மில்லியன் புதிய வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.கடந்த ஆண்டில் மட்டும் 41.04 மில்லியன் மக்கள் வேலை வாய்ப்புகளை பெற்றுள்ளனர். இது அதற்கு முந்தைய ஆண்டைக் காட்டிலும் 1.3 சதவீதம் அதிகமாகும்.
தற்பொழுது தான் முதன் முறையாக இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. ஜேர்மனியின் மொத்த மக்கள் தொகை 82 மில்லியன் என்பது குறிப்பிடத்தக்கது.ஜேர்மனியின் பிரதமர் ஏஞ்சலா மார்க்கெல் மற்றும் நிதித்துறை அமைச்சர் கூறுகையில், இந்த ஆண்டு கடந்த 2011ம் ஆண்டைக் காட்டிலும் மிக கடுமையாக இருக்கும் என எச்சரித்துள்ளனர்.
6 மாதமாக மலசலகூடத்தில் அடைக்கப்பட்டு வதைக்கப்பட்ட சிறுமி.
ஆப்கானிஸ்தான் நாட்டில் 15 வயதுடைய சிறுமி ஒருத்திக்கு அவளது பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர்.அவளை மணந்த கணவர் அந்த பெண்ணை துன்புறுத்தியுள்ளதுடன் அவரும், அவரது தாயாரும் இணைந்து மலசல கூடத்தில் அடைத்து வைத்து சித்திரவதைகள் புரிந்துள்ளனர்.
அவளை விபசாரத்திற்கு நிர்பந்தித்துள்ளனர், உரிய முறையில் உணவுகள் வழங்கப்படாமல் ஆறுமாதங்களாக மலசல கூடத்தில் அடைத்து வைக்கப்பட்டு கொடுமைப்படுத்தபட்டுள்ளார்.சிறுமியின் பெற்றோர் காவல்துறையில் முறையிட்டதை அடுத்து பலத்த நோய் வாய்பட்ட நிலையில் நிகங்கள் அழுகிய நிலையிலும் உடல் முழுவதும் தொப்பளங்கள் ஏற்பட்டு உயிருக்கு போராடி கொண்டிருந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.தற்போது குறித்த சிறுமிக்கு விசேட சிகிச்சை வழங்க காபூலுக்கு இடம் மாற்றப்பட்டுள்ளார். இந்த சிறுமிக்கு சிறுவயதில் திருமணம் செய்து வதைக்கப்பட்டது உலகில் பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது.
பிரான்சில் மென்பானங்கள் மீது புதிய வரி விதிப்பு.
பிரான்சில் இவ்வாண்டின் தொடக்கம் முதல் கொக்ககோலா போன்ற மென்பானங்கள் மீது ஐரோப்பாவிலேயே முதல் முறையாக புதிய வரி விதிக்கப்படுகிறது.ஐரோப்பாவின் பிற நாட்டினரைப் போலவே இந்த காலகட்டத்தில் பொருளாதார ரீதியாக மற்றவர்களைக் காட்டிலும் சற்று கூடுதலான பாதிப்புகள் பிரெஞ்சு மக்களுக்கு வருகிறது என்று கூறலாம்.
அந்நாட்டில் இந்த வருடத்தின் ஆரம்பத்தில் இருந்து மென்பானங்கள் அதிக அளவில் விலை ஏறுகின்றன.கடன் சுமையை சமாளிப்பதற்காக அந்நாட்டின் அரசாங்கம் “சோடா வரி” என்ற ஒரு புதிய வரியை கொண்டுவந்துள்ளது.
பிரான்சில் மென்பானங்கள் மீதான இந்தப் புதிய வரி விதிப்பை அரசியல் சாசனத்துக்கு முரணானது என்று அறிவிக்க வேண்டுமென அந்நாட்டின் மென்பான உற்பத்தி நிறுவனங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. ஆனால் அந்த வழக்கில் அவர்களுக்கு சாதகமான முடிவு வரவில்லை.இந்த வரி விதிப்பின் மூலம் பிரான்சுக்கு ஒரு வருடத்தில் சுமார் 28 கோடி யூரோ வருவாய் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
மென்பானங்களால் உடல்நலத்துக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள், நாட்டு மக்களிடம் உடற்பருமன் பிரச்சினை அதிகரித்து வருவது போன்றவற்றை கருத்தில் கொண்டுதான் இந்த வரியை தாங்கள் அறிமுகப்படுத்தியுள்ளதாக பிரெஞ்சு அரசாங்கம் கூறுகிறது.இந்த வரியின் மூலம் பெறக்கூடிய வருவாய் பிரான்சின் பொதுசுகாதார மற்றும் சமூகப் பாதுகாப்பு கட்டமைப்பிலேயே முதலீடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வரியை நியாயப்படுத்துவதற்காக தங்களது உற்பத்திப் பொருட்களை மோசமான விஷயங்களாகக் காட்ட அரசாங்கம் முயற்சிக்கிறது என்று கூறி கொக்ககோலா போன்ற மென்பான உற்பத்தியாளர்கள் கடும் அதிருப்தி வெளியிட்டிருந்தனர்.வெவ்வேறு பெயர்களில் சிறிய அளவில் மென்பானங்களை தயாரித்து விற்பனை செய்யும் உற்பத்தியாளர்கள், தங்களுக்கு கிடைக்கக்கூடிய சொற்ப லாபத்தைக் குறைத்துக்கொண்டோ, உற்பத்திச் செலவுகளைக் குறைத்தோ இந்த வரியை தங்களால் செலுத்த முடியாது. ஆகவே வரிக்கு ஏற்ப பொருட்களின் விலையை ஏற்றுவதைத் தவிர வேறு வழியில்லை என்று கூறியிருக்கின்றனர்.