Saturday, January 14, 2012

NEWS OF THE DAY.

லசந்த படுகொலை பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும் - ரணில்.
சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலைச் சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகளை நடத்த முடியாவிட்டால் அதன் பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். உள்நாட்டிலும் வெளிநாட்டிலுக்கும் இருக்கும் குற்றவாளிகளை கைது செய்யக் கூடிய ஆற்றல் இலங்கையின் பொலிஸாருக்கு காணப்படுகின்றது.

இந்தநிலையில் லசந்த படுகொலையாளிகளை கைது செய்வதற்கு ஏன் முடியவில்லை. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்ட மற்றும் கடத்தப்பட்ட சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தப்படும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த பரிந்துரைகளை ஏற்றுக்கொள்வதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.எனவே காலத்தை கடத்தாமல் உடனடியாக இந்த பரிந்துரைகளை அமுல்படுத்தஅரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். லசந்த படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த ஜேசுதாசன் என்பவரின் மரணம் பற்றியும் விசாரணை நடத்தப்பட வேண்டும்.

லசந்த படுகொலைச் சம்பவம் தொடர்பில் தேவைக்கு அதிகளவான சாட்சியங்கள் காணப்படகின்றன. வெளிநாட்டில் வசித்து வந்த குமரன் பத்மநாதனை பொலிஸார் கைது செய்திருந்தனர் எனவே லசந்த படுகொலையாளிகளை கைது செய்வது சிரமமாக அமையாது. விசாரணை நடத்தி நியாயம் வழங்க அரசாங்கத்திற்கு உண்மையிலேயே விருப்பம் இருந்தால்குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவது கடினமானதல்ல என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகாரத்தை அதிகரித்துக் கொள்வதில் ஜனாதிபதி ஆர்வம் காட்டினார்!- விக்கிலீக்ஸ்.
1978ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவினால் அறிமுகம் செய்யப்பட்ட நிறைவேற்று அதிகாரங்களை அதிகரித்துக் கொள்வதில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆர்வம் காட்டியதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.நிறைவேற்று அதிகாரத்தை ரத்து செய்வதாக ஜனாதிபதி ராஜபக்ச தேர்தல் காலத்தில் பிரச்சாரம் செய்த போதிலும், ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியதன் பின்னர் அதிகாரத்தை கூட்டிக் கொள்வதில் ஜனாதிபதி நாட்டம் காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2007ம் ஆண்டு மே மாதம் 15ம் திகதி அப்போதைய இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ரொபர்ட் ஓ பிளேக்கினால், அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு இந்த தகவல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.அதேவேளை, ராஜபக்ச சகோதரர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருவதாக அந்தக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெரும் எண்ணிக்கையிலான அமைச்சர்கள் பிரதிநிதி அமைச்சர்கள் அரசாங்கத்தில் பதவி வகித்தாலும், ராஜபக்ச சகோதரர்களே முக்கிய தீர்மானங்களை எடுக்கின்றனர்.மிக முக்கியமான நிதி, பாதுகாப்பு போன்ற அமைச்சுக்களை ஜனாதிபதியே நேரடியாக நிர்வாகம் செய்கின்றார்.தேசிய வரவு செலவுத்திட்டத்தின் 60 வீதமான நிதி ஒதுக்கீடுகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நிர்வாகம் செய்கின்றார்.
கொழும்பு பணக்கார முக்கிய பிரபுக்களை ராஜபக்ச சகோதரர்கள் தமது நடவடிக்கைகளில் இணைத்துக்கொள்ளவில்லை.குறிப்பாக கொழும்பு 07 ஐச் சேர்ந்த பணக்கார புத்திஜீவிகளுடன் மிகவும் குறைந்தளவான உறவினையே ஜனாதிபதி பேணுகின்றார் என அமெரிக்கத் தூதுவர் பிளேக் தெரிவித்துள்ளதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
அங்கவீனராய் சிறையில் துன்பப்படுகின்ற எங்களுடைய பிள்ளைகளை விடுதலை செய்யுங்கள்!- பெற்றோர்கள் ஜனாதிபதிக்​கு கடிதம்.
கருணை உள்ளத்துடன் எங்கள் பிள்ளைகளை மன்னித்து அனைவருடய மனங்களிலும் நிரந்தரமான சமாதானத்தையும் சந்தோசத்தையும் வழங்குமாறு தங்களை தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறோம். என அங்கவீனராய் சிறையில் துன்பப்படும் பிள்ளைகளை விடுவிக்குமாறு  பெற்றோர் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
கடிதத்தின் முழுவடிவம்
அதிமேதகு ஜனாதிபதி.
ஜனாதிபதி காரியாலயம்
கொழும்பு 01.

அங்கவீனராய் சிறையில் துன்பப்படுகின்ற எங்களுடைய பிள்ளைகளை விடுதலை செய்யுங்கள்
அதிமேதகு ஜனாதிபதி அவர்களே!
கடந்த மூண்று தசாப்தகாலமாக நடைபெற்ற யுத்தம் முடிவுக்குள் கொண்டுவரப்பட்டு இன்று வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் சகல மாவட்டங்களிலும் தேசியப் பாதுகாப்புக்கு எந்தவிதமான அச்சுறுத்தலற்ற சூழ்நிலையே காணப்படுகிறது.
மேலும்: இந்த கொடிய யுத்தத்தினால் கண், கால், கைகளை, இழந்தும் இடுப்போடு உணர்ச்சிகளை இழந்த நிலையிலும் எங்களுடைய பிள்ளைகளும் உறவினர்களும் தாங்கமுடியாத துன்பங்களோடு சிறையில் வாடுகின்றார்கள்.இவர்களை ஏனைய சக கைதிகளுடன் ஒண்றாக தடுத்து வைக்கப்பட்டிருக்கிறதால் இவர்கள் ஏனைய கைதிகளால் மன வெறுப்புக்குள்ளாக வேண்டிய துர்ப்பாக்கிய சூழலுக்குள்ளாகிறார்கள்.
இட வசதியற்ற காரணத்தால் இவர்கள் தங்களுடைய அடிப்படையிலான தேவைகளைக்கூட செய்ய முடியாமல் தவிக்கின்றார்கள்.எங்களுடைய பிள்ளைகள் சிலருக்கு காயங்கள் கூட இன்னும் சரியாக குணமடையாததால் இன்னும் காயங்களிலிருந்து இரத்தம், ஊணம் வடிந்தவண்ணம் இருக்கின்றது.
ஒழுங்கான முறையிலே இவர்களுக்கான மருத்துவ வசதிகள் இல்லாததால் இவர்கள் மேலும் மேலும் நோய்களால் துன்பப்படுகிறார்கள்.C R P, நியூ மகசின், வெலிக்கடை பெண்கள் பிரிவு, அனுராதபுரம், திருகோணமலை, மட்டக்களப்பு போண்ற சிறைகளில் எங்களுடைய பிள்ளைகள் இருக்கின்றார்கள். இவர்களில் அனேகமானவர்கள் இறுதி யுத்தத்தின்போது அரசாங்கத்தின் வாக்குறுதியினை நம்பி இராணுவத்திடம் சரணடைந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேதகு ஜனாதிபதி அவர்களே!
இறுதியுத்தத்தில் சரணடைந்த குறிப்பிட்ட ஒரு தொகுதி முன்னால் போராளிகளை புனர்வாழ்வளித்து அவர்களை சமூகமயப்படுத்தியுள்ளீர்கள். இது எங்களுக்கும் மிக மிக மகிழ்ச்சியினை தந்திருக்கின்றது.
இருந்தாலும் இதுபோன்று எங்களுடய பிள்ளைகளையும் நீங்கள் விடுதலை செய்யும்போதுதான் எங்கள் அனைவருடைய மனங்களிலும் முழுமையான சந்தோசங்களை காணமுடியும்.இதற்கு முன்பு நாங்கள் பல தடவை நீதிமன்றங்களிலும், இது சம்பந்தமான அரச அதிகாரிகளுடனும் பல முறை தெரிவித்திருந்தும் எந்தப் பலனும் எங்கள் பிள்ளைகளுக்கு கிடைக்கவில்லை.
கெளரவ ஜனாதிபதி அவர்களே! இன்று அங்கவீனத்துடன் சிறைக்குள் வாடித் தவிக்கின்ற எங்களுடைய பிள்ளைகளையும் உறவுகளையும் இப்புத்தாண்டிலாவது எங்களோடு சேரந்து வாழ்வதற்கு ஓர் சந்தர்ப்த்தை வழங்குங்கள்.கருணை உள்ளத்துடன் எங்கள் பிள்ளைகளை மன்னித்து அனைவருடய மனங்களிலும் நிரந்தரமான சமாதாணத்தையும் சந்தோசத்தையும் வழங்குமாறு மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களை தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறோம்.
இன்றைய தினம் நாடளாவிய ரீதியாக பெற்றோர், உறவினர்கள் இக்கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தனர்.இதன் பிரதி ஒன்று பாதுகாப்பு செயலாளர் அவர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நன்றி
17 பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கு திடீர் இடமாற்றம்.
பதினேழு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கு உடனடி இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மாத்தறை, பேருவள, அலுத்கம, பென்தொட்ட. மஹவெல, உடபுஸ்ஸலாவ, நானுஓயா, பலங்கொட, பெலியகொட, வீரகெடிய, ஹக்மன, வெலிகந்த, கல்கிஸ்ஸ, கதிர்காமம். கெகிராவ மற்றும் திக்வெல்ல ஆகிய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் நலன்புரி பிரிவின் பொறுப்பதிகாரி, பாதுகாப்பு கமரா பிரிவிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.என்ன காரணத்திற்காக இந்தத் திடீர் இடமாற்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன என்பது குறித்து அறிவிக்கப்படவில்லை.
பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கும் ரஷ்ய விண்கலம்.
செவ்வாய் கோளின் ஆராய்ச்சிக்காக ரஷ்யா செலுத்திய Phobos Grunt என்ற விண்கலம் எதிர்வரும் 15ம் திகதியன்று இந்திய பெருங்கடலில் விழும் என எதிர்பார்க்கப்படுகிறது.விண்கலம் விழப்போகும் இடம், நேரம் போன்றவற்றை விழுவதற்கு 24 மணி நேரத்துக்கு முன்பு தான் கணித்துச் சொல்ல முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
13.5 டன் எடையுள்ள இந்த விண்கலம் கடந்தாண்டு நவம்பர் மாதம் 9ம் திகதி செவ்வாய் கோளின் சந்திரன்களில் பெரியதாக இருக்கும் போபோசுக்கு அனுப்பப்பட்டது.இன்னும் செலுத்திய பாதையிலேயே சுற்றி வரும் இந்த விண்கலம் அதன் மேற்பகுதியை மேல் நோக்கி செலுத்த இயலாததால் காற்று மண்டலத்திற்குள் புகுந்து கடலில் விழப்போகிறது.இந்த விண்கலத்தைச் செயல்படவிடாமல் சில அந்நிய சக்திகள் செயல்பட்டதாக ரஷ்ய விஞ்ஞானிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
ரஷ்யா அனுப்பும் விண்கலங்கள் ஒரு நிழற்பகுதியை அடையும் போது, அதிலிருந்து எந்தத் தொடர்பும் இருக்காது. அப்போது அந்த விண்கலத்தில் ஏதேனும் மாற்றம் செய்யப்படுகிறதா என்பது குறித்து ரஷ்ய விஞ்ஞானிகளுக்குத் தெரியவில்லை.இந்தத் தகவல் தடையும், நிழற்பகுதியும் எப்படி ஏற்படுகின்றன என்பதும் புரியவில்லை. இதனால் தான் அந்நியச் சக்திகளின் ஊடுருவல் இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.
இன்றைய தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டு விண்கலத்தின் சில பகுதிகளின் செயற்பாட்டை நிறுத்திவிட முடியும், அப்படித்தான் மேல்நோக்கிச் செலுத்தத் திட்டமிட்ட விண்கலத்தின் மேற்பகுதியை செலுத்த முடியாமல் நிறுத்திவிட்டனர் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.அலாஸ்காவில் அமெரிக்காவின் ராடார்கள் அனுப்பிய ஆற்றல் மிகுந்த மின்காந்த அலைகளால் ரஷ்ய விண்கலம் செயல்படாமல் போயிருக்கும் என்று ரஷ்யாவின் முன்னாள் ஏவுகணைத் தளபதி தோல்விக்கான காரணத்தை தெரிவித்தார்.
.
நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டிய அவசியமில்லை: கிலானி.
எனது ஆட்சி குறித்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்று பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானி தெரிவித்துள்ளார்.
எனக்கு எதிராக நாடாளுமன்றத்தில் யாராவது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர விரும்பினால் தாராளமாகக் கொண்டுவரலாம் எனவும் அவர் கூறினார்.நாடாளுமன்றக் கூட்டத்தில் இன்று அவர் உரையாற்றுகையில், அரசியல் சாசனத்தை அனைவரும் மதிக்க வேண்டும். பிரதமர் மற்றும் ஜனாதிபதியின் பதவிக்காலத்தை குறைக்க வேண்டும் என்று யாராவது விரும்பினால் அரசியல் சட்டத்தில் அதற்கான திருத்தங்களை அவர்கள் முன்மொழிய வேண்டும் என்றார்.
நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் குறைக்கப்பட வேண்டும் என்று நீங்கள் கருதினால் அதற்கான திருத்தத்தை கொண்டுவர வேண்டும் என அவர் கூறினார்.இராணுவப் புரட்சிக்கு எதிராக கடுமையாக கருத்து வெளியிட்ட கிலானி, ஏகாதிபத்தியத்தை ஆதரிக்காமல் ஜனநாயகத்தை ஆதரிக்க வேண்டும் என்றார். பாகிஸ்தானில் சர்வாதிகாரத்துக்கு யாரும் ஆதரவளிக்கக்கூடாது என அவர் வலியுறுத்தினார்.
ஜனாதிபதி ஸர்தாரி நாடு திரும்பினார்.
பாகிஸ்தானில் அரசியல் ஸ்திரமற்ற சூழ்நிலை உருவாகியுள்ள நிலையில், அவசரமாக துபாய் சென்ற பாகிஸ்தான் ஜனாதிபதி ஸர்தாரி பயணத்தை ரத்து செய்து விட்டு நாடு திரும்பியுள்ளார்.
பாகிஸ்தானில் அரசுக்கும், இராணுவத்திற்கும் இடையேயான மோதல் வலுத்து வருகிறதால் அரசியல் ஸ்திரத்தன்மையற்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. அங்கு இராணுவ புரட்சி ஏற்படும் அபாயம் இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தனிப்பட்ட, சொந்த விடயங்களுக்காக அந்நாட்டு ஜனாதிபதி ஆசிப் அலி ஸர்தாரி நேற்று துபாய் சென்றிருந்தார்.இதனால் அவரது பயணம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. இந்நிலையில் ஆசிப் அலி ஸர்தாரி தனது பயணத்தை ரத்து செய்துவிட்டு பாகிஸ்தான் திரும்பியுள்ளார்.அவர் பாகிஸ்தான் திரும்பிவிட்டதாக ஜனாதிபதி மாளிகை செய்தி தொடர்பாளர் தகவல் வெளியிட்டுள்ளார்.
கருணை அடிப்படையில் 651 கைதிகள் விடுதலை.
மியான்மரில் கருணை அடிப்படையில் நாளை 651 கைதிகள் விடுதலை செய்யப்பட உள்ளனர் என அந்நாட்டு வானொலி மற்றும் தொலைக்காட்சிகள் செய்தி வெளியிட்டுள்ளன.ஆனால் இதில் அனைத்து வகை கைதிகளும் அடங்குவார்களா என்பது தெரிவிக்கப்படவில்லை, பெரும்பாலும் அரசியல் ‌கைதிகள் தான் விடுதலை செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து எதிர்கட்சி த‌லைவர் ஆங் சாங் சூகி கருத்து வெளியிடுகையில், விடுதலை செய்யப்படும் கைதிகளில் எத்தனை பேர் அரசியல் கைதிகள் என்பது நாளை தெரியவரும் என்றார்.அரசியல் காரணங்களுக்காக கைது செய்யப்பட்டவர்கள் பெரும்பாலும் சூகி கட்சியை சார்ந்தவர்கள் ஆவர். நடப்பாண்டில் அரசியல் கைதிகளாக 600 முதல் 1500 பேர் வரையிலும் சிறிய குற்றத்திற்காக மற்றவர்களும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசின் ஓய்வூதிய சீரமைப்பு திட்டம் நிராகரிப்பு.
இங்கிலாந்து அரசு பொதுத்துறை தொழிலாளர்களுக்காக ஓய்வூதிய சீரமைப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியது.அரசு கொண்டுவந்த இந்த திட்டத்தை பாதுகாப்பு அமைச்சக தொழிலாளர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவன தொழிலாளர்கள் அனைவரும் ஒருமனதாக நிராகரித்துள்ளனர்.
இதுகுறித்து தொழிலாளர் அமைப்பின் பொதுச்செயலாளர் ‌மெக்லஸ்கி கூறுகையில், பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் நீண்ட காலம் தங்களது பணிகளை செய்கின்றனர்.ஆனால் பணி ஓய்வு காலத்தில் சிறிய தொகையை மட்டுமே ஓய்வூதியமாக பெறுகின்றனர். இதுவே நிராகரிப்பு காரணம் என குறிப்பிட்டார்.
தொழிலாளர்கள் அவர்களுடைய தகுதிக்கு ஏற்றாற் போல் உரிய தொகையை பெற அமைச்சர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்படுகிறது.அரசின் இந்த சீரமைப்பு ‌திட்டத்தால் தொழிலாளர்கள் திருப்தி அடையவில்லை என தெரிவித்தார்.
சவுதியில் பிரிட்டன் பிரதமர்.
பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன் முதன் முறையாக சவுதி அரேபியாவுக்கு வருகை புரிந்துள்ளார்.கமரூன் சவுதியின் அரசர் அப்துல்லாவையும், இளவரசர் நயீஃபையும் சந்தித்து பேசுகிறார்.
பிரிட்டன் – சவுதி தொடர்புகளைப் பலப்படுத்த இந்த சந்திப்பு உதவும். மத்திய கிழக்கு நாடுகளில் சவுதி அரேபியா பிரிட்டனின் முக்கிய வர்த்தகப் பங்குதாரராக இருந்து வருகிறது.ஆண்டுக்கு 15 பில்லியன் அளவுக்கு இரு நாடுகளுக்கும் இடையே தொழில் வர்த்தக தொடர்புகள் நடந்துள்ளன. சவுதி அரேபியா மட்டுமே பிரிட்டனில் 62 பில்லியன் பவுண்டு வரை முதலீடு செய்துள்ளது.அரசியல் சீர்திருத்தம், தீவிரவாத எதிர்ப்பு, அணுசக்தி பாதுகாப்பு குறித்த பிரச்னைகளில் பிரிட்டனும், சவுதியும் கூடிப் பேசி நல்ல முடிவுகளை எடுக்கும் என்று நம்பப்படுகிறது.
போதை மருந்தின் பெயரில் இசை ஆல்பமா? : சர்ச்சையை கிளப்பியிருக்கும் மடோனா.
உலக புகழ் பெற்ற அமெரிக்க பாடகி மடோனா. இவருக்கு வயது 53 என்றால் நம்புவது கடினம். அந்த அளவுக்கு இன்னமும் இளமை துள்ளலுடன் இருக்கிறார்.
உற்சாகம் குறையாமல் கவர்ச்சி உடைகளில் டான்ஸ் ஆடுகிறார். தனது முதல் இசை ஆல்பத்தை ‘மடோனா’ என்ற பெயரிலேயே 1983-ல் வெளியிட்டார். தொடர்ந்து லைக் எ வர்ஜின், ட்ரூ ப்ளூ, எரோடிகா உள்பட பல ஆல்பங்களை வெளியிட்டார்.முதல் ஆல்பம் வெளியிட்டு 25 ஆண்டுகள் ஆவதை நினைவுகூர்ந்து 2008-ல் ‘ஹார்ட் கேண்டி’ என்ற ஆல்பத்தை வெளியிட்டார். 4 ஆண்டு இடைவெளிக்கு பிறகு, வரும் மார்ச்சில் ஒரு ஆல்பத்தை வெளியிட உள்ளார். இது அவரது 12-வது ஆல்பம். இதற்கு ‘எம்.டி.என்.ஏ’ என்று பெயர் வைத்துள்ளார் மடோனா. போதை மருந்து ஒழிப்பு அமைப்புகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
‘‘எக்ஸ்டசி என்ற போதை மருந்து எம்டிஎம்ஏ என்றும் அழைக்கப்படுகிறது. இதை நினைவுபடுத்தும் வகையில், போதை மருந்தை விளம்பரப்படுத்தும் நோக்கில் பெயரிட்டுள்ளார். பெயரை மாற்ற வேண்டும்’’ என்று கூறியுள்ளனர். தன் பெயரை சுருக்கித்தான் எம்டிஎன்ஏ என்று பெயர் வைத்திருப்பதாக கூறியுள்ள மடோனா, பெயரை மாற்ற வாய்ப்பு இல்லை என்று கூறியிருக்கிறார்.
அமெரிக்காவில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிப்பு.
கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு பிறகு அமெரிக்காவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.உள்நாட்டினருக்கு அதிகம் வேலை வழங்காத நிறுவனங்களுக்கு வரி சலுகை நிறுத்தப்படும் என்று ஒபாமா கூறியதால், அவுட்சோர்சிங் நிறுவனங்கள் கலக்கம் அடைந்துள்ளன.
அமெரிக்காவில் கடும் நிதி நெருக்கடி காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக ஏராளமானோர் வேலை இழந்து வருகின்றனர். கடந்த 2011ம் ஆண்டில் இந்த நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டது.இந்நிலையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறைகள் முடிந்த பிறகு இதுபற்றி கணக்கெடுப்பு நடத்தியதில், வேலையில்லா திண்டாட்டம் மீண்டும் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. வேலை இல்லாதவர்களுக்கான காப்பீடு தொகையை கேட்டு 3.99 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் விண்ணப்பித்திருக்கின்றனர்.
இதையடுத்து வேலைவாய்ப்பு தொடர்பான கொள்கைகளில் விரைவில் மாற்றம் கொண்டு வரப்படும் என்று அதிபர் ஒபாமா அறிவித்துள்ளார். வெளிநாட்டினருக்கு வழங்கப்படும் வேலைவாய்ப்புகளை குறைத்து உள்நாட்டு வேலைவாய்ப்புகளை அதிகரிக்குமாறு அமெரிக்க நிறுவனங்களை அவர் கேட்டுக் கொண்டுள்ளார். அமெரிக்காவில் முதலீட்டை அதிகரிக்கும்படியும் கூறியுள்ளார்.உள்நாட்டினருக்கு அதிகம் வேலைவாய்ப்பு வழங்காத அவுட்சோர்சிங் நிறுவனங்களுக்கு வரி சலுகைகள் நிறுத்தப்படும் என்றும் எச்சரித்த அவர், இதுகுறித்த அறிவிப்புகள் ஒரு சில வாரங்களில் வெளியிடப்படும் என்று தெரிவித்தார். பணிகளை வெளிநாடுகளில் செய்து பெற்றுக் கொள்ளும் அவுட்சோர்சிங் நிறுவனங்கள் இதனால் கலக்கம் அடைந்துள்ளன.
ஏமனில் பாதுகாப்பு அதிகாரி சுட்டுக் கொலை.
ஏமனில் பாதுகாப்பு அதிகாரியை மர்ம நபர்கள் சுட்டுக் கொன்றனர். அவர்கள் அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது.ஏமனின் ஏடன் நகரில் பாதுகாப்பு தொடர்பான உயர்நிலை கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது.
இதில் கலந்து கொள்ள அரசியல் தலைவர்களுக்கான பாதுகாப்பு பிரிவு அதிகாரி ஒருவர் காரில் சென்றார். அவரை 4 பேர் கொண்ட மர்ம கும்பல் சரமாரியாக சுட்டுக் கொன்றது.இத்தாக்குதலில் 7 பேர் காயம் அடைந்தனர். அரசியல் மோதல் காரணமாக இத்தாக்குதல் நடந்ததாக கூறப்பட்டாலும், அல்கொய்தா தீவிரவாதிகள் இதற்கு காரணமாக இருக்கலாம் என்றும் பாதுகாப்பு அதிகாரிகள் சிலர் தெரிவித்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF