Wednesday, January 25, 2012

NEWS OF THE DAY.

இல்லாத அதிகாரங்களுக்காக ஏங்குவதில் அர்த்தமில்லை: சசிந்திர ராஜபக்ச.
நாட்டில் இல்லாத அதிகாரங்களுக்காக ஏங்குவதில் அர்த்தமில்லை என ஊவா மாகாணசபையின் முதலமைச்சர் சசிந்திர ராஜபக்ச தெரிவித்துள்ளார். தற்போது வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு நியாயமானளவு சேவைகளை மக்களுக்கு ஆற்ற முடியும் என்பதே எனது நிலைப்பாடு. காணி அதிகாரம் கிடைத்தால் நல்லது, பொலிஸ் அதிகாரம் கிடைத்தால் நல்லது என ஏங்குவதில் அர்த்தமில்லை.
கிடைக்கப் பெற்றுள்ள அதிகாரத்தை உரிய முறையில் பயன்படுத்தினால் மாகாணங்களை சிறந்த முறையில் அபிவிருத்தி செய்ய முடியும் என சசிந்திர ராஜபக்ச தெரிவித்துள்ளார்.தற்போது, 13ஆம் திருத்தச் சட்ட மூலம் தொடர்பிலும் அதன் அதிகாரங்கள் தொடர்பிலும் பலரும் பல்வேறு கருத்துக்களை வெளியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டு இஸ்லாமிய போதகர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்.
இலங்கையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வெளிநாடுகளை சேர்ந்த 161 இஸ்லாமிய மதபிரசாரகர்களில் பெரும்பாலானோர் நாட்டில் இருந்து வெளியேறி விட்டதாக குடிவரவுத்துறை கட்டுப்பாட்டாளர் சூலாநந்த பெரேரா தெரிவித்துள்ளார்.
நாட்டில் இருந்து வெளியேறியவர்களில் பெரும்பாலானோர் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளை சேர்ந்தவர்களாவர்.
சுற்றுலா பயணிகளாக இலங்கைக்கு வந்த இவர்கள்,  மதப்போதனைகளில் ஈடுபட்டு வந்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. முஸ்லிம் சமூகத்தில் இருந்து கிடைத்த முறைப்பாடுகளை அடுத்தே இவர்களை நாட்டில் இருந்து வெளியேற உத்தரவிட்டதாக பெரேரா குறிப்பிட்டார்.
ரூபாவின் உறுதித்தன்மையை பேணுவதற்காக பல மில்லியன் டொலர்கள் செலவழிப்பு.
ரூபாவின் உறுதித்தன்மையை பேணுவதற்காக இலங்கை மத்திய வங்கி கடந்த 4 மாதங்களில் 1, 560, 22 மில்லியன் டொலர்களை செலவிட்டுள்ளது.மத்திய வங்கியின் அறிக்கையின் படி கடந்த ஜூலையில் 416.99 மில்லியன் டொலர்களும், ஆகஸ்டில், 197.6 மில்லியன் டொலர்களும், செப்டம்பரில் 514.05 மில்லியன் டொலர்களும், ஒக்டோபரில் 431.58 மில்லியன் டொலர்களும் செலவிடப்பட்டுள்ளன.
இதனை தவிர, பெறுமானத் தேய்வை கட்டுப்படுத்தி டொலருக்கு எதிராக 113 ரூபா 89 சதம் அல்லது 90 சதம் என்ற நிலையில் ரூபாவின் பெறுமதியை பேணுவதற்காக நவம்பர் 22 ஆம் திகதி முதல் மத்திய வங்கி 985 டொலர் மில்லியன்களை செலவிட்டுள்ளது.
அரசாங்கம் மக்களை வேட்டையாடி வருகிறது தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: கரு ஜயசூரிய.
அரசாங்கத்தின் ஏகாதிபத்திய பயணத்தை தடுத்து நிறுத்த அனைவரும் இணைந்து செயற்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.அரசாங்கம் மக்களை வேட்டையாடி வருகின்றது இதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அத்துடன் ஏகாதிபத்திய பயணத்திற்கு எதிராக மக்களை அணிதிரட்ட கட்சியின் அனைவரும் இணைந்து செயற்பட வேண்டுமென கரு ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார்.
இதனைவிடுத்து, தெரிவு செய்யப்பட்ட ஒரு சிலரை மட்டும் இணைத்துக் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படக் கூடாது.மக்களின் கருத்துக்களை தலைமைத்துவத்திற்கு எடுத்துச் செல்லும் பணியை மேற்கொண்டேன். எனினும் கட்சி உறுப்பினர்களை ஒன்றிணைக்க முடியவில்லை. ஐ.தே கட்சி உறுப்பினர்கள் ஒன்றியைவதன் மூலமே நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்.
தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண அப்துல் கலாம் கூறிய இரு ஆலோசனைகள்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் இனப்பிரச்சினை விவகாரம் தொடர்பாகவும் மீனவர்களின் பிரச்சினை தொடர்பாகவும் பேச்சு நடத்தியதாக இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தெரிவித்தார்.இதில் குறிப்பாக தனக்கும் இந்திய மீனவர்களுக்குமிடையில் நெருங்கிய தொடர்பு உள்ளதால் - இலங்கை ஜனாதிபதியுடன் மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் முக்கியபேச்சு நடத்தியதாக அவர் குறிப்பிட்டார்.
மீனவர்களோடு நன்கு பழகிய மற்றும் மீன்பிடி தொடர்பில் நுணுக்கங்களை அறிந்து வைத்திருப்பவன் என்ற ரீதியில் சில விடயங்களை சுட்டிக்காட்டியிருந்தேன். கடலின் அனைத்து பிரதேசங்களிலும் மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவர்.மீன்வளம் எங்கிருக்கிறதே அதனைத் தேடி மீனவர்கள் தேடிச் செல்வர். அது இந்தியர்களாக இருக்கட்டும் இலங்கையர்களாக இருக்கட்டும் இல்லையேல் அமெரிக்கர்களாக இருப்பினும் இதனையே செய்வர்.ஆகையினால் மீன்பிடி தொடர்பில் இறுக்கமான சட்டங்களை பிரயோகிப்பது சாத்தியமற்ற விடயம். இதனை ஒரு போதும் யாராலும் இலகுவில் தடுக்கவும் முடியாது" எனவும் டாக்டர் அப்துல் கலாம் கூறினார்.
இலங்கை வந்துள்ள இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் காலம் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பொன்றை இன்று செவ்வாய்க்கிழமை மேற்கொண்டார்.இச்சந்திப்பின்போது "ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் என்னென்ன விடயங்கள் தொடர்பில் உரையாடினீர்கள்?" என்று ஊடகவியலாளரொருவர் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இருநாட்டு மீனவர் பிரச்சினை தொடர்பில் தொடர்ந்து குறிப்பிடுகையில்...
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடனான சந்திப்பின்போது மீனவர்களின் பிரச்சினைக்கு இரண்டு தீர்வுகளை முன்வைத்தேன். அதில் முதலாவது, ஏழு நாட்களில் ஒருநாள் மீன்பிடி நடவடிக்கைக்கு ஒய்வு வழங்கல். ஏனைய ஆறு நாட்களில் மூன்று நாட்கள் இந்திய மீனவர்களும் ஏனைய மூன்று நாட்கள் இலங்கை மீனவர்களுக்கும் சாதகமான மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட வழிசெய்தல்.இரண்டாவதாக ஆழ்கடல் மீன்பிடி நடவடிக்கையை ஊக்குவிப்பதாகும். இச்செயற்பாட்டில் நவீன வசதிகளைக் கொண்ட கப்பல்களை ஈடுபடுத்தி மீன்பிடி நடவடிக்கையை மேற்கொள்ளல்.
குறித்த மீன்களை கப்பலில் வைத்தே பதனிட்டு பொதி செய்து கடல் பிரதேசத்திலேயே மொத்தமாக விற்பனை செய்யமுடியும். இச்செயற்பாடுகள் அனைத்தும் கடல் பிரதேசத்தில் இடம்பெறுவதனால் பல சிக்கல்களை நிவர்த்தி செய்துகொள்ளலாம். குறிப்பாக வரி செலுத்துகின்ற பிரச்சினையும் குறைந்துவிடும்.இந்த இரு யோசனைகளையும் முன்மொழிந்திருக்கிறேன். இந்தப் பிரச்சினைக்கு இனி எவ்வாறு இராஜதந்திர ரீதியில் தீர்வு காண்பது என்பது பற்றி இரு நாட்டின் தலைமைகளும் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்காவுக்கு இஸ்ரேல் அழைப்பு.
ஈரானின் அணு ஆயுத தயாரிப்பு நிலையங்களை குறி வைத்து தாக்குதல் நடத்தி அழிக்கப் போவதாக இஸ்ரேல் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.ஈரான் தொடர்ந்து அணு ஆயுதங்களை தயாரித்து வருவதாக அமெரிக்கா உட்பட பல்வேறு மேற்கத்திய நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இதனைத் தொடர்ந்து ஈரான் மீது பல்வேறு பொருளாதார தடைகளும் விதிக்கப்பட்டன. ஆனால் ஆக்கப்பூர்வ பயன்பாட்டுக்காக மட்டுமே அணு சக்தி உற்பத்தி செய்யப்படுவதாக ஈரான் தொடர்ந்து கூறிவருகிறது. இந்நிலையில் சமீப காலமாக அண்டை நாடுகளான இஸ்ரேல் - ஈரான் இடையே மோதல் வெடித்துள்ளது.
அணு உற்பத்தியை உடனடியாக நிறுத்த தவறினால் ஈரான் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்று அமெரிக்காவை இஸ்ரேல் வலியுறுத்தியது. இதற்கிடையே ஈரானின் அணு உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதலை தொடங்க அமெரிக்காவுக்கு 12 மணி நேர கெடுவை இஸ்ரேல் விடுத்துள்ளது. அது தவறும் பட்சத்தில் தன்னிச்சையாக தாக்குதல் நடத்தப் போவதாகவும் எச்சரித்துள்ளது.அமெரிக்க முப்படை இணை தலைவரான ஜெனரல் மார்ட்டினிடம் இஸ்ரேல் இராணுவ அமைச்சர் எகுத் பாரக் இதை தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அமெரிக்கா அதிர்ச்சி அடைந்துள்ளது.
எகிப்தில் முதல் நாடாளுமன்ற பொதுக் கூட்டம் தொடக்கம்.
எகிப்தி்ல் ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக்கின் ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் நடந்தது. 18 நாள் போராட்டத்திற்கு பின் முபாரக் பதவி விலகினார்.இதன் பின் நாடாளுமன்றத்திற்கான பொதுத் தேர்தல் நடைபெற்றது. இதில் இஸ்லாமியக் கட்சிகள் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றின.தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் பங்கேற்ற நாடாளுமன்றத்தின் முதல் கூட்டம் நடந்தது.
கடந்தாண்டு டிசம்பர் மாதம் தொடங்கி இம்மாதத்தின் தொடக்கம் வரை மூன்று கட்டங்களாகப் பொதுத் தேர்தல் நடந்தது. அதில் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் அரசியல் கட்சியான விடுதலை மற்றும் நீதிக் கட்சி(எப்.ஜே.பி) பெரும் வெற்றி பெற்றது. அல்நூர் கட்சி இரண்டாம் இடத்திலும், வப்த் கட்சி மூன்றாமிடத்திலும் வந்தன.
இதையடுத்து நேற்று முறைப்படி நாடாளுமன்றத்தின் முதல் கூட்டம் தொடங்கியது. வப்த் கட்சி உறுப்பினரும், நாடாளுமன்றத்தின் மூத்த பிரமுகருமான மஹ்மூத் அல் சகா(81) இடைக்கால சபாநாயகராக பொறுப்பேற்று கூட்டத்தை தொடங்கி வைத்தார்.புரட்சியில் பலியானோருக்கு ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்தப்பட்ட பின் கூட்டம் தொடங்கியது. எப்.ஜே.பி.யின் முன்னாள் தலைவரான சாத் அல் கடாட்னி சபாநாயகர் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். விரைவில் அவர் சபாநாயகராக பொறுப்பேற்பார்.
இந்நிலையில் நாடாளுமன்றம் இராணுவத்துடன் எவ்வாறு ஒத்துழைக்கப் போகிறது என்பது குறித்து, மக்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது. ஆட்சி அமைப்பதில் எக்காரணம் கொண்டும் அல் நூர் கட்சியுடன் கூட்டணி அமைக்கப் போவதில்லை என எப்.ஜே.பி தெரிவித்து விட்டது.மேலும் இராணுவத்திடம் இருந்து சுமுகமான முறையில் அதிகார மாற்றம் ஏற்பட தேவையான நடவடிக்கைகளை எடுக்கப் போவதாகவும் அக்கட்சி உறுதியளித்துள்ளது.
முஷாரப்பை கைது செய்யும் தீர்மானம்: பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்.
பாகிஸ்தான் திரும்ப உள்ள முன்னாள் ஜனாதிபதி முஷாரப்பை கைது செய்ய அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.முஷாரப் கடந்த 2008ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலுக்குப்பின் நாட்டைவிட்டு வெளியேறி லண்டன் துபாய் நகரங்களில் வசித்து வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன் இம்மாதம் 27 அல்லது 30ம் திகதிகளில் நாடு திரும்ப உள்ளதாக தெரிவித்தார். இந்நிலையில் பாகிஸ்தான் நாடாளுமன்ற மேல்சபையான செனட் சபையில் முஷாரப் நாடுதிரும்பினால் அவரை கைது செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பாகிஸ்தான் மக்கள் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவரும், செனட் சபை உறுப்பினருமான ராஸா ரப்பானி இந்த தீர்மானத்தை கொண்டு வந்தார்.
அதில் கூறப்பட்டதாவது, முஷராப் மீது முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோ, பலுசிஸ்தான் தேசிய கட்சி தலைவர் அக்பர் பக்டி ஆகியோர் கொலை செய்யப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே தேச நலனுக்கான அரசியலமைப்பு சட்டம் விதி 6-ன் கீழ் அவர் கைது செய்யப்பட வேண்டும். ஆனால் தானாக நாட்டை வெளியேறி விட்டார். மீண்டும் நாடு திரும்ப உள்ளதால் அவரை கைது செய்ய வேண்டும் என கூறினார்.இதைத்தொடர்ந்து அனைத்துக்கட்சிகளின் ஒப்புதலுடன் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேறியது. முன்னதாக கடந்த ஆண்டு பாகிஸ்தானின் இரு நீதிமன்றங்கள் முஷாரப்பிற்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
சிரியாவில் தொடரும் வன்முறை: பதவி விலக மறுக்கும் அசாத்.
சிரியா கடந்த பல மாதங்களாக ஜனாதிபதி பஷர் அல் அசாத்தின் ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஜனாதிபதியின் ஆதரவாளர்கள் பொதுமக்களையும், போராட்டக்காரர்களையும் கொன்று குவிக்கின்றனர்.சிரியாவில் ஜனாதிபதி அசாத்திற்கு எதிராக கடந்த 10 மாதங்களாக மக்கள் போராடி வருகின்றனர். அவர்களுடன் இராணுவத்தில் இருந்து பிரிந்தோரும் சேர்ந்துள்ளனர்.
இராணுவத்தில் இருந்து பிரிந்தோர் "சிரிய விடுதலை ராணுவம்" என்ற பெயரில் இயங்கி வருகின்றனர். இவர்களுக்கும், அசாத்தின் இராணுவத்திற்கும் மோதல் வலுத்து வருகிறது. இது உள்நாட்டுக் கலவரமாகப் பரிணமிக்கும் முன் தடுத்த நிறுத்தப்பட வேண்டும் என்ற நோக்கில் அரபு லீக் சில பரிந்துரைகளை முன்வைத்தது.அந்த பரிந்துரைகள் பின்வருமாறு: நாட்டின் பல பகுதிகளிலும் தெருக்களில் குவிக்கப்பட்டுள்ள இராணுவம் வாபஸ் பெறப்பட வேண்டும், அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும், எதிர்க்கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும்.
இவற்றை சிரியா எந்தளவில் அமுல்படுத்தியுள்ளது என்பதை நேரில் ஆய்வு செய்வதற்காக அரபு லீக் நாடுகளின் பிரதிநிதிகள் 165 பேர் அடங்கிய குழு ஒன்று சிரியாவில் கடந்த மாதம் முதல் ஆய்வில் ஈடுபட்டு வருகிறது. இக்குழு சிரியா வந்த பின்னும் தொடர்ந்த இருதரப்பு மோதலில் இதுவரை ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர்.இந்நிலையில் தான் நேற்று முன்தினம் எகிப்து தலைநகர் கெய்ரோவில் கூடிய அரபு லீக் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில், சிரியாவில் உள்ள அரபு லீக் பிரதிநிதிகள் குழுவின் ஆய்வை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்க முடிவெடுக்கப்பட்டது. அத்துடன் ஜனாதிபதி அசாத் பதவி விலகி தனது பொறுப்புக்களை துணை ஜனாதிபதியிடம் ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதுகுறித்து நேற்று சிரியா வெளியிட்டுள்ள அறிக்கையில், அரபு லீகின் இந்த அழைப்பு சிரியாவின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுகிறது. அரசு, பயங்கரவாதிகள் கூடத் தான் மோதிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே எடுக்கப்பட்ட அரபு லீகின் முடிவுக்கு மாறாக வெளியிடப்பட்ட இந்த அழைப்பை சிரியா நிராகரிக்கிறது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.சிரியா தனது உறுதிமொழிகளை மீறி நடந்து வருவதால் அரபு லீகின் கண்காணிப்புக் குழுவில் இருந்து விலகப்போவதாக அறிவித்துள்ள சவுதி அரேபியா, சர்வதேச சமூகம் உடனடியாக சிரியா மீது நெருக்கடி கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
பிஜி தீவில் கடும் நிலநடுக்கம்.
பசிபிக் கடலில் உள்ள பிஜி தீவில் நள்ளிரவு 12.52 மணி அளவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின.
நிலநடுக்கம் ஏற்பட்ட போது அயர்ந்து தூங்கி கொண்டிருந்த மக்கள் அலறியடித்தபடி எழுந்தனர். பின்னர் நிலநடுக்கம் ஏற்பட்டதை அறிந்த அவர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி கடும் குளிரில் சாலைகளில் தஞ்சம் புகுந்தனர்.இந்த நிலநடுக்கம் 6.3 ரிக்டர் அளவு பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. பிஜி தலைநகரம் சுவா நகருக்கு தெற்கு 582 கி.மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உருவானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக வழக்கத்துக்கும் மாறாக கடலில் மிக உயரத்துக்கும் அதிகமான அலைகள் எழும்பியதால் சுனாமி ஏற்படும் என மக்கள் அச்சம் அடைந்தனர். ஆனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.இதற்கிடையே நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர்சேதம் மற்றும் பொருட்சேத விவரங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.
ஜனாதிபதிக்கு எதிராக ஐ.எஸ்.ஐ சதி: ஊடக ஆலோசகருக்கு கொலை மிரட்டல்.
பாகிஸ்தானில் ஜனாதிபதி ஸர்தாரியின் ஊடக ஆலோசகருக்கு ஐ.எஸ்.ஐ கொலை மிரட்டல் விடுத்துள்ளது.பாகிஸ்தானில் மெமோகேட் விவகாரம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதில் ஏற்கனவே பிரதமர் கிலானிக்கு சம்மன் அனுப்பப்பட்டு அவர் நேரில் ஆஜரானார்.
இந்நிலையில் அமெரிக்கா சென்றிருந்த ஜனாதிபதி ஸர்தாரியின் ஊடக ஆலோசரான பெர்னாஷ் இஸ்பஹானி(பாகிஸ்தான் முன்னாள் அமெரிக்க தூதர் ஹூசைன் ஹக்கானியின் மனைவி) வாஷிங்டன் நகரில் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்தார்.
அதில் கூறியதாவது, பாகிஸ்தானில் இராணுவ புரட்சியை ஏற்படுத்த முயன்ற விடயத்தில் மேற்குல நாடுகளுக்கு தொடர்பில்லை. எனினும் ‌மெமோகேட் விவகாரத்தில் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ ஜனாதிபதி ஸர்தாரியை சிக்க வைக்கவும், அதற்கு சம்மதிக்க வேண்டும் என தனது கணவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறினார்.
மேலும் தன்னையும் கடத்தி ஜனாதிபதிக்கு எதிராக கையெழுத்திட ஐ.எஸ்.ஐ சதி திட்டம் தீட்டி வருகிறது. இதனால் தான் பாகிஸ்தானை விட்டு வெளியேறி அமெரிக்காவிற்கு தப்பி வந்ததாக கூறுவது தவறு, நான் பாகிஸ்தானைவிட்டு எங்கும் போகமாட்டேன், எந்த மிரட்டலுக்கு நான் பயப்படமாட்டேன் என கூறியதாக அந்த தொலைக்காட்சி தகவல் வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தானில் ஜேர்மானிய உளவாளிகள் கைது.
ஜேர்மனியைச் சேர்ந்த உளவாளிகள் என சந்தேகப்பட்டு மூன்று பேரை பாகிஸ்தான் காவல்துறையினர் கைது செய்து தூதரகத்தில் ஒப்படைத்துள்ளனர்.
பெஷாவரின் வடகிழக்குப் பகுதியில் சனிக்கிழமை அன்று இம்மூவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் தங்களை ஜேர்மானிய தூதரகத்தின் அங்கீகரிக்கப்படாத தொடர்பு அதிகாரிகளாக அறிமுகப்படுத்திக் கொண்டனர்.இவர்களைத் தொடர்ந்து கண்காணித்து வந்த காவல்துறை இம்மூவரும் பெஷாவாரைச் சுற்றியே உளவு வேலை பார்த்து வந்ததாகத் குற்றம் சாட்டினர்.
இவர்களிடம் இருந்த அடையாள அட்டையில் GIZ என்ற மேம்பாட்டு முகமையின் பணியாளர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால் GIZ இவர்களைத் தங்கள் பணியாளர் அல்லர் என்று மறுத்துவிட்டது.மேலும் பெஷாவரில் ஜேர்மனியின் தூதரக அலுவலகம் எதுவும் இல்லாததால் இவர்கள் தூதரக அலுவலர்களும் அல்லர் என்பது தெள்ளத் தெளிவாகியது. இவர்கள் மீது பாகிஸ்தானில் குற்றவியல் நடவடிக்கைகள் தொடங்குமா அல்லது ஜேர்மனிக்கு திருப்பி அனுப்பப்படுவார்களா? என்பது குறித்து தகவல் ஏதும் இல்லை.
துருக்கிக்கு எதிரான மசோதா பிரான்சில் நிறைவேற்றம்.
பிரான்ஸ் நாடாளுமன்றத்தின் மேலவையில் ஒட்டோமன் பேரரசை ஆதரித்த துருக்கியருக்கு எதிரான இனப்படுகொலை மசோதா நிறைவேற்றப்பட்டது.கடந்த 1915-16ஆம் ஆண்டுகளில் நடந்த ஆர்மீனியப் படுகொலையைப் பெருந்துயரம் என்றே உலகின் பெரும்பகுதியினர் குறிப்பிட்டனர்.
இந்த மசோதாவை நிறைவேற்றினால் துருக்கிக்கும், பிரான்சுக்கும் இடையிலான வர்த்தகத் தொடர்புகள் முறிக்கப்படும் என்று துருக்கி அச்சுறுத்தியது.பிரான்சில் தங்கியிருக்கும் ஆர்மீனியர்களின் 500,000 வாக்குகளை பெறுவதற்காக ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசி இந்த மசோதாவை நிறைவேற்றியதாக துருக்கியின் வெளிவிவகாரத் துறை அமைச்சர் தெரிவித்தார்.
பிரான்சில் இந்த ஆர்மீனியப் படுகொலையை மறுப்பவர்களுக்கு ஓராண்டு சிறைத்தண்டனையும், 45,000 யூரோ அபராதமும் விதிக்கப்படும். இந்த மசோதா எட்டுமணி நேர விவாதத்திற்குப் பின்பு நிறைவேற்றப்பட்டது.பாரிசில் உள்ள துருக்கித் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் இந்த மசோதா குறித்து கூறுகையில், இனியும் பிரான்ஸ் துருக்கியைத் துன்புறுத்துவதை சகித்துக் கொண்டிருக்க இயலாது. எங்கள் நாட்டின் வரலாற்றோடு பிரெஞ்சு அரசியல்வாதிகள் விளையாடுவதை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது என்று கண்டனம் தெரிவித்தார்.
இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொள்ளும் கனடிய அமைச்சர்கள்.
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெறும் உலகப் பொருளாதார சங்கத்தின் கூட்டத்தில் கனடிய பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் கலந்து கொள்கிறார்.இவருடன் கனடாவின் வெளிவிவகாரத்துறை அமைச்சரான ஜான் போர்டும், நிதியமைச்சரான ஜிம் பிளாஹர்ட்டியும்  கலந்து கொள்கின்றனர்.
இதன் பின்பு இருவரும் இந்த வாரக் கடைசியில் இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொள்கின்றனர். அங்கு பாலஸ்தீனப் பகுதிகளை பார்வையிடுகிறார்.டாவோஸ் கூட்டத்திற்கு வருவதற்கு முன்பே வெளிவிவகாரத்துறை அமைச்சர் பிரிட்டனுக்கு பயணம் மேற்கொள்கிறார்.கடந்தாண்டு செப்டம்பர் மாதத்தில் நடைபெற்ற ஐ.நா பொதுக்கூட்டத்தில் பேர்டு பேசிய போது, இரண்டாம் உலகப் போருக்கு முன்பு இனவாதத்தையும் பொதுவுடைமை தத்துவத்தையும் வெறித்தனமாக நம்பியவர்களுக்கு இணையாகவே தற்போது இஸ்ரேலுக்கு எதிரானவர்கள் செயல்படுகிறார்கள் என்றார்.
நைஜீரியாவில் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரிப்பு: வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட 8 கார்கள் கண்டுபிடிப்பு.
நைஜீரியாவின் இரண்டாவது பெரிய நகரமான கனோவில் பயங்கரவாதிகள் தொடர் குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியதில் 250 பேர் பலியாயினர்.காவல்துறை நிலையங்கள், காவல்துறை தலைமை அலுவலக கட்டிடம், கடவுச்சீட்டு மற்றும் குடியுரிமை அலுவலகங்களில் நடந்த தாக்குதல்களில் 162 பேர் பலியானார்கள், ஏராளமானவர்கள் காயம் அடைந்தனர். அவர்களுக்கு வைத்தியாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது சாவு எண்ணிக்கை 250ஆக உயர்ந்துள்ளது. தெருக்களிலும், வைத்தியசாலைகளின் சவக்கிடங்குகளிலும் பிணங்கள் குவிந்து கிடக்கின்றன.இதற்கிடையே தீவிரவாதிகள் வெடிகுண்டுகள் நிரப்பிய கார்களை ஆங்காங்கே நிறுத்தி வைத்துள்ளனர் என காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. எனவே நகரை சுற்றியும் ஆராய்ந்து காவல்துறை அதிகாரிகள் அவற்றை செயல் இழக்க செய்தனர்.
இதுவரையிலும் 8 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்களிடையே பதட்டம் நிலவுகிறது. எனவே மசூதிகளில் சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்படுகிறது. இதில் மத குருக்களும், அரசியல் தலைவர்களும் கலந்து கொண்டனர்.குண்டு வெடிப்பு நிகழ்ந்த கனோ நகரை ஜனாதிபதி ருட்லக் ஜோனாதன் நேரில் பார்வையிட்டார். காயம் அடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெறுபவர்களை நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறினார்.
ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்படும்: அதிர்ச்சியில் மக்கள்.
ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்படும் என்று சமீபத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7 என்ற அளவில் இருக்கும் என்றும், இது இன்னும் 4 ஆண்டுகளுக்கும் ஜப்பான் தலைநகர் டோக்கியோவை தாக்கும் என்றும் ஆய்வு தெரிவிக்கின்றது.கடந்தாண்டு மார்ச் மாதத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம், அதனைத் தொடர்ந்து சுனாமியால் சுமார் 20 ஆயிரம் பேர் பலியாயினர் என்பது குறிப்பிடத்தக்கது.
மனைவியை கொல்வதற்கு புது வித வழியை பின்பற்றிய கணவர்.
தனது முன்னாள் மனைவியை கொல்வதற்காக புது வித வழியை பின்பற்றியுள்ளார் ஹக் பிலிங்டன்.கிரிஸ்டியன் லாரன்ஸ் என்பவர் இங்கிலாந்தின் டார்செட் நகரில் உல் பகுதியில் வசித்து வருகிறார். இவர் நாய்கள் விற்பனை மற்றும் அச்சக தொழில் செய்து வருகிறார்.இவருடைய கணவர் ஹக் பிலிங்டன்(53). எண்ணெய் நிறுவனத்தில் ஓட்டுநராக பணிபுரிகிறார். இருவருக்கும் கருத்து வேறுபாடு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 20ம் திகதி கெரசின் ஏற்றிய டேங்கர் லாரியுடன் மனைவி வசிக்கும் பங்களாவுக்கு வந்தார் பிலிங்டன். ஆத்திரத்தில் பயங்கர வேகத்தில் சென்று பங்களா மீது டேங்கர் லாரியை மோதினார்.முன்னதாக வீட்டு முன் பக்க கதவு மீது கெரசின் ஊற்றியுள்ளார். இதனால் பங்களா தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.இதற்கிடையில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய கிறிஸ்டியன் காவல்துறையில் புகார் செய்தார். தலைமறைவான பிலிங்டனை காவல்துறையினர் நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அங்கு தனது பெயர், பிறந்த திகதி மட்டும் தெரிவித்த பிலிங்டன் தனக்கென்று நிரந்தர முகவரி எதுவும் இல்லை என்று கூறினார். இந்த வழக்கு 30ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.எரிபொருள் நிரப்பிய டேங்கர் லாரியை வீட்டின் மீது மோதி மனைவியை கொல்ல முயற்சித்த சம்பவம் டார்செட் நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மலசலகூடத்தில் 10 ஆண்டுகளாக அடைபட்டு கிடந்த சிறுமி.
பாலஸ்தீனத்தில் 10 ஆண்டுளாக மலசலகூடத்தில் அடைக்கப்பட்டிருந்த சிறுமியை காவல்துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.பாலஸ்தீனம் மேற்குக்கரையில் உள்ள குவால்கிவ்லியா என்ற பகுதியை சேர்ந்தவர் ஹசன் மெல்கம். இஸ்ரேல் குடியுரிமை பெற்றவர். இவர் தனது மனைவியுடன் விவாகரத்து ஏற்பட்டதை அடுத்து தனது மகளாக பாரா மெல்கமை தன்னோடு வைத்து கொண்டார்.
எனவே இந்த பெண்ணை வெளியே விடாமல் ஒரு சிறிய மலசலகூடத்திற்குள் அடைத்து வைத்தார். அப்போது அவருக்கு வயது 11. இரவு நேரத்தில் மட்டும் வெளியே வர அனுமதிப்பார், ஆனாலும் வீட்டை விட்டு வெளியே போக முடியாது.இந்த தகவல் எப்படியோ 10 ஆண்டுகள் கழித்து காவல்துறை அதிகாரிகளுக்கு தெரியவந்ததால், அந்த வீட்டில் சோதனையிட்டு பாராவை மீட்டனர்.
இது குறித்து பாரா கூறுகையில்: நான் 10 ஆண்டுகளாக வெளி உலகை பார்க்கவில்லை. அவ்வப்போது இரும்பு கம்பியால் அடிப்பார். என்றாவது ஒரு நாள் வெளிச்சத்தை காண்பேன் என்ற நம்பிக்கை இருந்தது.இனிமேல் தான் என் வாழ்க்கை தொடங்குகிறது. எனது தந்தையை நான் வெறுக்க மாட்டேன், அதே நேரத்தில் அவர் செய்த செயலை தான் நான்‌ வெறுக்கிறேன். ஏன் அவ்வாறு செய்தார் என்பது எனக்கு இன்னும் புரியவில்லை. அவ்வாறு இருந்தோமே என்ற கவலை எனக்கு இப்போது இல்லை என்றார்.

உளவு நிறுவனத் தலைவருடன் முஷாரப் ரகசிய சந்திப்பு.
பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப்பை ஐஎஸ்ஐ தலைவர் பாஷா துபாயில் ரகசியமாக சந்தித்து பேசியுள்ளார்.பாகிஸ்தானில் பிரதமர் கிலானிக்கும், இராணுவ தளபதி கயானிக்கும் இடையில் கருத்து வேறுபாடு நிலவுகிறது.
ஜனாதிபதி சர்தாரி மீதான ஊழல் வழக்குகள் மீது நடவடிக்கை எடுக்காததால், உச்சநீதிமன்றத்தின் கண்டனத்துக்கும் ஆளானார் கிலானி.இந்நிலையில் இராணுவ புரட்சி மூலம் ஆட்சியை கைப்பற்ற இராணுவம் முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகின. பாகிஸ்தானில் இராணுவம் மற்றும் உளவு நிறுவனத்தின்(ஐஎஸ்ஐ) ஆதிக்கம் இருப்பதால் இராணுவ புரட்சி ஏற்படுமோ என்ற அச்சம் எழுந்தது.
இந்நிலையில் ஐஎஸ்ஐ தலைவர் பாஷா துபாயில் முஷாரப்பை ரகசியமாக சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது நாடு திரும்ப வேண்டாம் என்று அவரை பாஷா கேட்டுக் கொண்டுள்ளார் என்று பாகிஸ்தானில் இருந்து வெளிவரும் டான் சேனல் செய்தி வெளியிட்டுள்ளது.பாஷாவை சந்தித்த முஷாரப், தனது அனைத்து பாகிஸ்தான் முஸ்லிம் கட்சியை நாளை அவசரமாக கூட்டியுள்ளார்.
பூமியை இன்று தாக்குகிறது சூரியப்புயல்: நாசா எச்சரிக்கை.
சூரியனிலிருந்து வரும் அதிசக்தி வாய்ந்த காந்தப் புயல் பூமியை இன்று தாக்கும் என்று அமெரிக்க நாசா விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுபற்றி கடந்த 6 வருடங்களாக விண்வெளி ஆராய்ச்சியில் நாசா ஈடுபட்டு வருகிறது.இந்த சூரிய புயல் இன்று நொடிக்கு 2000 கிலோ மீற்றர் வேகத்தில் பூமியை நோக்கி வரும் என நாசா தெரிவித்துள்ளது.
சூரிய புயலின் தாக்கம் அமெரிக்கா, ஐரோப்பா, ஆசிய நாடுகளில் இருக்கும் என்றும் உயர் ரக அலைவரிசை ரேடியோவை பயன்படுத்தும் விமானங்களில் தொடர்பு துண்டிக்கப்படும் என்றும் விண்வெளியில் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளவர்கள் மையங்களில் இருந்து பாதுகாப்பான இடத்துக்கு சென்று விடும்படியும் நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது.சூரிய புயல் தாக்கும் போது மின் தடை ஏற்படும் என்றும் நாசா தெரிவித்துள்ளது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF