Monday, January 23, 2012

NEWS OF THE DAY.

மேர்வின் சில்வாவின் பிரச்சினை இன்னும் முடிந்த பாடில்லை!- மைத்திரிபால சிறிசேன.
அமைச்சர் மேர்வின் சில்வாவிற்கு எதிராக அதிக எண்ணிக்கையிலான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதனால் இன்னும் இரண்டு வார கால அவகாசம் விசாரணைக்காக தேவைப்படுவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார் களனி பிரதேச சபையின் தலைவர் பிரசன்ன ரணவீர மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களினால் அமைச்சர் மேர்வினுக்கு எதிராகவும் பிரதேச சபை தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களுக்கு எதிராக அமைச்சர் மேர்வின் சில்வாவும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.
சம்பந்தப்பட்டவர்கள் பொலிஸார், லஞ்ச ஊழல் தவிர்ப்பு ஆணைக்குழு போன்றவற்றிடம் முறைப்பாடு செய்து வருகின்றனர்.இன்னமும் பிரச்சினை முடிந்தபாடில்லை பொறுத்திருந்து பார்ப்போம் என மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சுயாதீனமான விசாரணைகள் நடத்தப்பட்டு வருதாகவும் விசாரணைகளின் பின்னர் மிகவும் நேர்மையான தீர்ப்பு வழங்கப்படும் என கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மத்திய வங்கி சர்வதேச நாணய நிதியத்துடன் புதிய ஏற்பாடு.
இலங்கை மத்திய வங்கி, சர்வதேச நாணய நிதியத்துடன் புதிய ஏற்பாடு ஒன்றை செய்து கொள்வது தொடர்பாக ஆராய்ந்து வருவதாக மத்திய வங்கியின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் வழங்கி வரும் 2.6 பில்லியன் டொலர் கடன் திட்டத்தின் இறுதி இரண்டு தவணைக் கொடுப்பனவுகள் இலங்கைக்கு வழங்கப்பட வேண்டியுள்ளன.இந்த நிலையிலேயே சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்பாடு ஒன்றை செய்துக்கொள்ள இலங்கை மத்திய வங்கி தயாராகி வருவதாக அவ்வதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
2.6 பில்லியன் டொலர்கள் கடன் திட்டம் முடிவடைந்ததன் பின்னரும் சர்வதேச நாணய நிதியத்துடன் கடன் திட்டங்களை பேணும் வகையிலேயே இந்த ஏற்பாடு செய்து கொள்ளப்படவுள்ளது.ஏற்கனவே 2.6. பில்லியன் டொலர்களை இலங்கை பெற்றுக்கொள்வதற்காக மத்திய வங்கி, 800 மில்லியன் டொலர்களை நம்பிக்கை மீதித்தொகையாக நாணய நிதியத்தில் நிறுத்தி வைத்திருந்தது.
இந்தநிலையில் 2.6 பில்லியன் டொலர் கடன்தொகை முடிவடையும் தறுவாயில் குறித்த 800 மில்லியன் டொலர்களை பெற்றுக்கொள்வதா? அல்லது அப்படியே விட்டுவைப்பதா? என்பது தொடர்பில் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்று மத்திய வங்கியின் அதிகாரி தெரிவித்துள்ளார்.இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை கிளை தலைவர் பிரைன் எட்கின் நாளை இலங்கை வரவுள்ளார்.
இனப்பிரச்சினைத் தீர்வுக்கான 13+ ஐ எதிர்க்கிறோம்!- ஜாதிக ஹெல உறுமய.
இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இனப்பிரச்சினையின் தீர்வுக்காக ஏற்றுக்கொண்டுள்ள 13பிளஸ் திட்டத்தை தாம் எதிர்ப்பதாக ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
இலங்கையின் அரசியலமைப்பில் 13 வது திருத்தச்சட்டம் இந்தியாவினால் இலங்கையில் திணிக்கப்பட்ட ஒன்றாகும். இந்தநிலையில் 13 பிளஸில் அடங்கியுள்ள விடயங்கள் என்ன என்பதை தாம் இன்னும் அறிந்திருக்கவில்லை என்று ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
எனவே, அதனை இலங்கையில் நடைமுறைப்படுத்த தமது கட்சி இணங்காது என்று ஹெல உறுமயவின் பேச்சாளர் நிசாந்தஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்துள்ளார்.இதேவேளை, செனட் சபையை உருவாக்குவது தொடர்பாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ள போதும் அது தொடர்பிலும் தாம் ஆராய்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.எனினும், நாடாளுமன்றத்தின் அதிகாரங்களை செனட் சபைக்கு அளிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் தமது கட்சி ஏற்றுக்கொள்ளாது.நாடாளுமன்றத்தினால் கலைக்கப்படக்கூடிய ஒரு அமைப்பாகவே செனட் சபை இருக்கமுடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்லாம் பற்றி பிரசாரம் செய்யும் வெளிநாட்டவரை நாட்டில் இருந்து வெளியேறுமாறு இலங்கை உத்தரவு.
இலங்கையில் தங்கியிருந்து இஸ்லாம் பற்றி பிரசாரம் செய்து வரும் 161 வெளிநாட்டவர்களை நாட்டில் இருந்து வெளியேறுமாறு குடிவரவு கட்டுப்பாட்டாளர் சூலாநந்த பெரேரா உத்தரவிட்டுள்ளார்.இவர்கள் இந்தியா, பங்களாதேஸ், பாகிஸ்தான் மற்றும் அரபு நாடுகளில் இருந்து இலங்கைக்கு சுற்றுலா பயணிகளாக வந்துள்ளனர்.இந்தநிலையில் இவர்கள் நாடுமுழுவதும் சென்று இஸ்லாம் பற்றி போதனை செய்து வருகின்றனர். எனினும், இவர்கள் வீசா சட்டங்களை மீறிச் செயற்படுவதாக கூறியே நாட்டில் இருந்து வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவர்களின் அலுவலகம் ஒன்று கொட்டாஞ்சேனையிலும் இயங்கி வருவதாகவும் தப்லித் ஜமாத் என்ற அமைப்பை சேர்ந்த இவர்கள் சுற்றுலாவுக்கு இலங்கைக்கு வந்துள்ள நிலையில் வேறு விடயங்களில் ஈடுபடமுடியாது என்று குடிவரவு கட்டுப்பாட்டாளர் குறிப்பிட்டுள்ளார்.எனினும், குறித்த அமைப்பினர் எவ்வித அரசியல் நோக்கங்களையும் கொண்டவர்கள் அல்லர் என்று மேல்மாகாண ஆளுநர் அலவி மௌலானா தெரிவித்துள்ளார்.
இவர்கள் இஸ்லாமின் உண்மையை பிரசாரம் செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்தநிலையில் குறித்த அமைப்பினர், முன்னாள் அமைச்சர் ஏ எச் எம்; பௌஸியை சந்தித்து தம்மை இலங்கையில் இருந்து வெளியேறக்கூறும் உத்தரவை விலக்கிக்கொள்ளும் முயற்சியில் நேற்று ஈடுபட்டிருந்தனர்.
இலங்கைக்கான ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகையினை நீடிப்பது குறித்து அமெரிக்கா பரிசீலிக்கும்.
அமெரிக்க ஜீ எஸ் பீ பிளஸ் வர்த்தக சலுகையினை மேலும் நீடிப்பது குறித்து இந்த வாரம் பரீசிலிக்க உள்ளதாக அமெரிக்க தெரிவித்துள்ளது.இந்த தகவலை ஆபிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் தெற்காசிய வர்த்தக நடவடிக்கைகளுக்கு பொறுப்பான பிரதி உதவி செயலாளர் “ஹொலி வைன்யாட்” தெரிவித்துள்ளார்.கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போது ஊடகவியலாளர் குழுவொன்றிடம் அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இந்த விடயம் பரீசிலிக்கப்படும் போது இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவரும் பிரசன்னமாயிருப்பார் எனவும் அவர் குறிப்பிட்டார்.இந்த பரீசிலனை இலங்கைக்கு எதிராக எடுக்கப்படும் பட்சத்தில் இலங்கையில் இருந்து அமெரிக்காவுக்கு மேற்கொள்ளப்படும் ஏற்றுமதிகள் பெருமளவு பாதிப்புகளுக்கு உள்ளாகும் என தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்கம் இந்தியாவின் தாளத்திற்கு ஆட்டம் போடுகின்றது: ரில்வின் சில்வா.
அரசாங்கம் இந்தியாவின் தாளத்திற்கு ஆட்டம் போடுகின்றது என ஜே.வி.பி. கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.இந்தியத் தலைவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்த சந்தர்ப்பங்களிலும் இலங்கைத் தலைவர்கள் இந்தியாவிற்கு விஜயம் செய்த சந்தர்ப்பங்களிலும் 13ஆம் திருத்தச் சட்ட மூலம் பற்றி பேசப்படுகின்றது.
13ஆம் திருத்தச் சட்ட மூலத்தைத் தாண்டிய தீர்வுத் திட்டம் குறித்து அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும். அத்துடன் செனட்சபையின் கட்டமைப்பு குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.தமிழ் மக்களின் உரிமைகளை வழங்குவதற்கு பதிலாக ஆட்சியிலிருந்த சகல அரசாங்கங்களும் வேறு வேறு தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். சில அரசாங்கங்கள் ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள இனவாதத்தைப் பயன்படுத்திக் கொண்டன.
போர் காரணமாக பாரியளவில் தமிழ் மக்களே பாதிக்கப்பட்டனர். தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு சரியான தீர்வுத் திட்டத்தை வழங்க அரசாங்கம் முன்வர வேண்டும்.இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நடவடிக்கைகளை காலம் தாழ்த்துவது பொருத்தமாகாது.போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் உரிய முறையில் மீள் குடியேற்றப்பட வேண்டும் என ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மகிந்தவின் இரண்டு மகன்மார் எஸ்கொட் நிறுவனத்தின் பங்குகளை கொள்வனவு.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இரண்டு மகன்மார் எஸ்கொட் ஹோல்டிங் என்ற நிறுவனத்தில் 20 வீத பங்குகளை கொள்வனவு செய்துள்ளதாக நிறுவனத்தின் இடைக்கால நிதியறிக்கையின் மூலம் இது தெரியவந்துள்ளது.
இதன்படி, மஹிந்த ராஜபக்சவின் மகனும் கடற்படை அதிகாரியுமான யோசித்த, ஒரு இலட்சம் பங்குகளை கொள்வனவு செய்துள்ளார்.
மற்றும் ஒரு மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச 92 ஆயிரம் பங்குகளை கொள்வனவு செய்துள்ளார்.
இது 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் திகதியன்று காட்டப்பட்ட தகவலாகும். ஜனாதிபதியின் இரண்டு மகன்மாரும் பங்குகளை செய்துள்ள எஸ்கொட் நிறுவனத்தின் மொத்த சொத்துக்களின் பெறுமதி 1.25 பில்லியன் ரூபாய்களாகும். பொறுப்புகளின் தொகை 600 மில்லியன் ரூபாய்களாகும்.
6 மில்லியன் டொலரில் போர் விமானங்களை தரமுயர்த்தும் இலங்கை?
இலங்கையின் விமானப்படையை நவீனமயப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக, சீனாவிடம் வாங்கப்பட்ட மூன்று போர் விமானங்களை 6 மில்லியன் டொலர் செலவில் இலங்கை அரசாங்கம் தரமுயர்த்தவுள்ளது.கே-8 ரகத்தைச் சேர்ந்த மூன்று போர் விமானங்களே முதற்கட்டமாக தரமுயர்த்தப்படவுள்ளன. இந்தப் போர் விமானங்களில் Head Up Display System (HUD) மற்றும் Multi-Function Display System (MFD) ஆகியன நவீன கருவிகள் பொருத்தப்படவுள்ளன.
Head Up Display System மூலம் விமானிகளின் வழக்கமான பார்வைக் கோணத்துக்கும் அப்பாலுள்ளவற்றையும் பார்க்கும் வசதி கிடைக்கும்.Multi-Function Display System மூலம் போர் விமானத்திலுள்ள ரேடர் , ஆயுதங்கள் மற்றும் வழிநடத்துதல் காட்சி தரவுகளை விமானி பெற்றுக் கொள்ளலாம்.
சீனாவின் தேசிய வான் தொழில்நுட்ப ஏற்றுமதி இறக்குமதி நிறுவனத்துடன் செய்து கொள்ளப்பட்டுள்ள விமானங்களைத் தரமுயர்த்தும் உடன்பாட்டுக்காக 6 மில்லியன் 40 ஆயிரத்து 300 டொலர் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை கடந்த மாதம் அமைச்சரவை வழங்கியுள்ளது.
ஏனைய நாடுகளால் போர் நடவடிக்கைக்குப் பயன்படுத்தப்படும் கே-8 ரக போர் விமானங்களை இலங்கை விமானப்படை விமானிகளுக்குப் பயிற்சி வழங்கவே பயன்படுத்தி வருகிறது.கே-9 ரக போர் விமானங்கள் மூன்றும் சங்காய்க்கு அனுப்பப்பட்டு தரமுயர்த்தப்படும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.அமெரிக்காவில் கட்டப்பட்ட இந்தப் போர் விமானங்களில் அமெரிக்க இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நண்டு வளர்க்கும் முன்னாள் போராளிகள்!
யாழ்ப்பாணம் தீவகப் பகுதியில், புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளும் இராணுவத்தினரும் இணைந்து நண்டு வளர்ப்புத் திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.யாழ். இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்கவின் முன்மொழிவின்படி, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் இராணுவத் தளபதியின் உத்தரவின்படி இத்திட்டம்ஆரம்பிக்கப்பட்டுள்ளது.ஊர்காவற்றுறையில் 3 மாதங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ் நன்னீர் நண்டு வளர்ப்புக்கான சிறிய குளங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தின் 1.6 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டின் கீழ், ஒவ்வொன்றும் தலா 50, 40 அடி அளவுள்ள 16 நண்டு வளர்ப்புத் தடாகங்கள் தற்போது அமைக்கப்பட்டு வருகின்றன.எதிர்காலத்தில் இதனோடு தொடர்புடைய நண்டு பதனிடல், சந்தைப்படுத்தல் தொழில்வாய்ப்புக்களும் கிடைக்கும் என்று இராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நைஜீரியாவில் தொடர் பயங்கரவாத தாக்குதல்கள்: 120 பேர் பலி.
நைஜீரியாவின் கானோ நகரில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சண்டையில் 120 பேர் உயிரிழந்தனர், மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
தீவிரவாதிகள் சில இடங்களில் குண்டுகள் வெடித்தும், துப்பாக்கியால் சுட்டும் தாக்குல் நடத்தியதில் 120 பேர் உயிரிழந்தனர். இதனால் இந்த நகரில் 24 மணி நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாத அமைப்பினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நிகழ்ந்தது. இந்த துப்பாக்கிச் சண்டையில் தற்கொலைப்படை பயங்கரவாதி கொல்லப்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
உள்ளூர் செய்தியாளர், 3 காவல்துறை அதிகாரிகள் ஆகியோர் உயிரிழந்தவர்களில் அடங்குவர். சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டவர்களில் சிலர் வெளிநாட்டவர் என்பது தெரியவந்துள்ளது என்று வைத்தியர்கள் தெரிவித்தனர்.இங்குள்ள காவல் நிலையத்தில் குண்டு வெடித்த சத்தம் கேட்டதாகவும், அதைத் தொடர்ந்து துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டதாகவும் உள்ளூர் மக்கள், தொலைக்காட்சி பேட்டியில் தெரிவித்தனர்.
கடந்த ஜூலை மாதம் அபுஜாவில் ஐக்கிய நாடுகள் சபை தலைமையகத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதில் 26 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின்போது நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டனர்.15 கோடி மக்கள் தொகை கொண்ட நைஜீரியாவில் முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் சம எண்ணிக்கையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
நேட்டோ படைகளுக்கான பொருட்கள் வினியோகம்: ஆயிரம் டொலர் வசூலிக்க பாகிஸ்தான் முடிவு.
ஆப்கானிஸ்தானில் உள்ள நேட்டோ படைகளுக்கான பொருட்கள் செல்லும் பாதையை மீண்டும் திறக்க பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது.இந்நிலையில் அவ்வாறு செல்லும் ஒரு வாகனத்திற்கு ஆயிரம் டொலர் வீதம் சுங்க வரி வசூலிக்கவும் திட்டமிட்டுள்ளது.பாகிஸ்தான் ஜனாதிபதியாக முஷாரப் இருந்த போது போடப்பட்ட ஒப்பந்தத்தில் ஆப்கானில் உள்ள நேட்டோவுக்கு பாகிஸ்தானுக்கு வழியாக பொருட்கள் வினியோகம் நடத்தப்பட வேண்டும் என்பதும் ஒன்று.
அதன்படி நேட்டோவுக்குத் தேவையான பொருட்கள் கப்பல் மூலம் கராச்சியை வந்தடைந்து பாகிஸ்தான் வழியாக எல்லையைக் கடந்து ஆப்கானுக்குச் செல்லும். இந்த போக்குவரத்திற்கு எவ்வித சுங்க வரியும் முஷாரப் காலத்தில் வசூலிக்கப்படவில்லை. கடந்தாண்டு முதல் இப்போக்குவரத்திற்கு பாகிஸ்தானின் மத்திய வருவாய்த் துறை மூலம் சுங்க வரி வசூலிக்கப்பட்டு வந்தது.கடந்தாண்டு நவம்பர் மாதத்தில் ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையில் நேட்டோப் படை நடத்திய தாக்குதலில் கோபமடைந்த பாகிஸ்தான் அரசு இந்த வழியை அடைத்து விட்டது. இதனால் நேட்டோவுக்கான பொருட்கள் வினியோகம் அமெரிக்காவுக்கு பெரும் செலவை உண்டாக்கி வருகிறது.
இந்நிலையில் நேட்டோவுக்கான வழியைத் திறந்து விட பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது. அதேநேரம் ஒரு வாகனத்திற்கு ஆயிரம் டொலர் வீதம் வசூலிக்கப்படும் என பாகிஸ்தான் தெரிவித்து விட்டது. இந்த சுங்க வரியை வருவாய்த் துறை வசூலிக்காமல் அதற்குப் பதிலாக இராணுவத்தின் தேசியப் போக்குவரத்து பிரிவு தான் வசூலிக்கப் போகிறது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தலிபான்களுடன் அமெரிக்கா ரகசிய பேச்சுவார்த்தை.
அமெரிக்க அரசுடன் தலிபான்கள் இரகசிய உடன்பாடு செய்து கொள்ள வாய்ப்பு உள்ளது என ஆப்கான் இராணுவத் தளபதி அப்துல் கரீம் குர்ராம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: தலிபான்களுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக கத்தாரில் அலுவலகம் ஒன்றை திறக்க அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது.இந்த அலுவலகத்தை ஆப்கானில் திறக்கவே நாங்கள் விரும்பினோம். ஏனெனில் தலிபான்களுடனான போர் முடிவுக்கு வர விரும்பியே நாங்கள் அதனை ஆதரித்தோம்.
அமைதிப் பேச்சுவார்த்தை குறித்து அமெரிக்க அரசு ஆப்கான் அரசுக்கு சரியான தகவல்களை அளிப்பதில்லை.பாகிஸ்தானில் வசித்து வரும் சில தலிபான் தலைவர்கள் கத்தாரிலிலுள்ள அலுவலகத்துக்குச் சென்று வருகின்றனர். இதற்கு பாகிஸ்தான் அதிகாரிகள் உதவி புரிகின்றனர்.
தலிபான்களுடனான அமைதிப் பேச்சு வார்த்தையில் பாகிஸ்தான் பங்கேற்கிறதா என்பது குறித்து அமெரிக்கா எங்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். ஆனால் இதுவரை அமெரிக்கா இதற்கான பதிலை அளிக்கவில்லை.தலிபான்களுடனான அமைதிப் பேச்சுவார்த்தையில் ஆப்கான் இல்லையெனில் அது ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையாக அமையாது என்றும் அவர் தெரிவித்தார்.
முஷாரப் நாடு திரும்ப அனுமதிக்க மாட்டோம்: கிலானி.
பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப் நாடு திரும்ப அனுமதிக்க மாட்டோம் என பிரதமர் யூசுப் ரசா கிலானி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து கிலானி கூறுகையில், முஷாரப் கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.அந்த காலகட்டத்தில் நாடு எவ்வித வளர்ச்சியும் அடையவில்லை. மாறாக அவரது ஆட்சிக் காலத்தில் ஊழல் பெருகியது, வறுமை தலைவிரித்தாடியது.பாகிஸ்தானில் தான் இல்லாதது மக்களுக்கு பேரிழப்பு என்றும், விரைவில் நாடு திரும்பப் போவதாகவும் முஷாரப் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.அவ்வாறு முஷாரப் நாடு திரும்ப ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்றார்.
ஆப்கானிலிருந்து படைகளைத் திரும்பப் பெறவில்லை: பிரான்ஸ் அறிவிப்பு.
ஆப்கானிஸ்தானில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்டதால் பிரெஞ்சு இராணுவம் தன் பயிற்சியை நிறுத்திவிட்டு தாய்நாடு திரும்பும் என்று ஜனாதிபதி சர்கோசி அறிவித்திருந்தார்.ஆனால் தற்போது அந்த கருத்திலிருந்து பிரான்ஸ் பின்வாங்கியுள்ளது. இராணுவம் தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் தங்கியிருக்கும் என்று அதன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜெரார்டு லோங்கோ தெரிவித்துள்ளார்.அமெரிக்காவின் தலைமையின் கீழ் இயங்கும் நேட்டோ படையில் பெரும்பகுதி பிரான்ஸ் இராணுவத்தை சேர்ந்தவர்கள். பிரான்ஸ் ஏறத்தாழ 130,000 வீரர்களை நேட்டோ படைக்கு அனுப்பியுள்ளது.
இவை ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளை எதிர்க்க அந்நாட்டுப் படைகளுக்குப் பயிற்சியளித்து வருகிறது.இதற்கிடையே ஆப்கான் போர் வீரர் சீருடை அணிந்த ஒருவரால் பிரெஞ்சு வீரர்கள் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர், 15 பேர் காயமுற்றனர். இதனால் ஆத்திரமடைந்த பிரான்ஸ் தன் 3600 வீரர்களைத் திரும்பப் பெறுவதாக அறிவித்தது. இதற்கு முன்பும் ஒருமுறை இது போன்ற கொலைச் சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதன்பின் பாதுகாப்புத் துறை அமைச்சர் லோங்கோவும் பாதுகாப்புத்துறையின் தலைமை அதிகாரி எட்வர்டு குய்லாடும் ஆப்கானிஸ்தானுக்கு விரைந்து சென்று அவசரப் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்பு தங்கள் இராணுவம் ஆப்கானிஸ்தானத்தில் தொடர்ந்து தங்கியிருக்கும், பிரான்சுக்கு திரும்பி வராது என்றனர்.லோங்கோ ஆப்கானிஸ்தானில் உள்ள பிரெஞ்சு படையின் தளபதி ஜுன் பியரே பலாஸேட்டுடன் பேசினார். இன்று ஆப்கானிஸ்தானின் பிரதமர் ஹமீது கர்சாய், ஆப்கானிஸ்தானின் பாதுகாப்புத்துறை மற்றும் உள்துறை அமைச்சர்கள், அமெரிக்கத் தளபதி ஜான் ஆலன் மற்றும் சர்வதேச பாதுகாப்புத் துணைப்படையின் மூத்த தளபதிகள் ஆகியோரோடு பேச்சுவார்த்தை நடத்துவார்.
ஜேர்மனியில் முப்பது வண்டிகள் மோதி பெரு விபத்து.
ஜேர்மனியில் சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் பெரும் விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. இருவர் மட்டும் படுகாயமுற்றனர், 13 பேருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டன.வடக்கு ஜேர்மனியில் க்ளோப்பன்பெர்க் என்ற நகரத்தின் அருகே உள்ள A1 நெடுஞ்சாலையில் இந்த விபத்து ஏற்பட்டது.முதலில் இரண்டு வண்டிகள் நேருக்கு நேர் மோதின. அதனைத் தொடர்ந்து வந்த வாகனங்கள் இவற்றின் மீது முட்டி மோதிக் கொண்டன.
ஓட்டுநர்களால் வண்டியை ஈரச்சாலையில் நினைத்தவுடன் நிறுத்த முடியவில்லை, முன்னால் நின்ற வண்டி மீது பின்னால் வேகமாக வந்து லாரி ஒன்று மோதியதில் இரண்டு பேர் பலத்த காயமுற்றனர். மேலும் இந்த மோதலால் இடையிலிருந்து பல கார்கள் நசுங்கின. காயம்பட்ட இருவரும் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.க்ளோப்பன்பெர்குக்கு வெளியே ஆயிரம் மீற்றர் தூரத்தில் ஏற்பட்ட இந்த விபத்தால் குழப்பம் ஏதும் இல்லை என்று காவல் துறையின் செய்தித் தொடர்பாளர் மத்தியாஸ் குட்ஸ்னெர் தெரிவித்தார்.
அமெரிக்காவில் மாகாணத் தேர்தல்: தெற்கு கரோலினாவில் ஜின்கிரீச் வெற்றி.
அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் 6ம் திகதி ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் நடைபெறுகிறது.இதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி ஒபாமா மீண்டும் போட்டியிடுகிறார்.குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கான தெரிவு நடைபெற்று வருகிறது. இதற்கான வேட்பாளர்களை மாகாண அளவில் நடைபெறும் தேர்தலில் குடியரசு கட்சியின் பிரதிநிதிகள் வாக்களித்து தெரிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தெற்கு கரோலினா மாகாணத்தில் வேட்பாளருக்கான தேர்தல் நடந்தது. அதில் மிட் ரோம்னி, நியூட்கின் கிரீச், ரிக்சாண்டோரம், ரோன்பால் ஆகியோர் போட்டியிட்டனர்.தேர்தல் முடிந்த பின்பு 70 சதவீதம் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் ஜின்கிரீச் வெற்றி பெற்றார். அவர் 40 சதவீதம் வாக்குகளை பெற்றிருந்தார்.
அவருக்கு அடுத்தபடியாக மிட்ரோம்னி 2-வது இடம் பெற்றார். அவருக்கு 28 சதவீதம் வாக்குகள் கிடைத்தது.ரிக்சாண்ட்ரோம் 18 சதவீதமும், ரோன்பால் 13 சதவீதம் வாக்குகள் பெற்றனர். இதுவரை நடந்த தேர்தல்களில் மிட் ரோம்னி வெற்றி பெற்று முன்னிலையில் இருந்தார். ஆனால் தெற்கு கரோலினாவில் ஜின்கிரீச் வெற்றி பெற்றுள்ளார்.
இது ரோம்னிக்கு சிறிது பின்னடைவை ஏற்படுத்தி உள்ளதாக கருதப்படுகிறது. ஆனால் அதை அவர் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. வர இருக்கின்ற மற்ற மாகாண தேர்தல்களில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.ஏனெனில் கடந்த 1980ம் ஆண்டு முதல் நடைபெறும் வேட்பாளர் தெரிவு போட்டியில் தெற்கு கரோலினாவில் ஜின்கிரீச்தான் வெற்றி பெற்று வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விண்வெளி குப்பைகளால் கனடா விண்கலங்களுக்கு ஆபத்து.
விண்ணுக்கு செலுத்தப்படும் செயற்கைகோள்கள் செயலிழந்து குப்பையாக மாறிவிடுவதால் அவை தற்பொழுது செயல்பட்டு கொண்டிருக்கும் விண்கலங்களின் மீது மோதி பேராபத்தை உருவாக்கும் என அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், பெரும்பாலும் வீணாய்ப்போன விண்கலங்களும், நொறுங்கிப் போன பழைய ராக்கெட் லாஞ்சர்களும் குப்பைகளாக இருப்பதாகக் கூறுகிறார்.ஏறத்தாழ 20,000 பொருட்கள் பூமியைச் சுற்றி குப்பையாகக் கிடக்கின்றன. கடந்த 2009ஆம் ஆண்டில் அமெரிக்காவின் தகவல் தொடர்பு விண்கலமும் ரஷியாவின் தகவல்தொடர்பு விண்கலமும் மோதிக் கொண்டதில் 3000 குப்பைகள் பரவத் தொடங்கின.
கடந்த 2007ஆம் ஆண்டில் ஆண்டில் சீனா தனது பழைய தட்பவெப்பநிலை அறியும் விண்கலத்தை உடைத்து விண்கலத்திற்கு எதிரான ஒரு சோதனையை நடத்தியது. இந்தச் சோதனையில் 2000 குப்பைகள் விண்வெளியில் பரவின.இவையிரண்டுமே விண்கலக் குப்பைகளில் கால் பகுதியை ஆக்கிரமித்தன. இந்தக் குப்பைகள் கனடாவின் மூன்று விண்கலங்களுடன் மோதிவிடாமல் பார்த்துக் கொள்வது டோயோனின் வேலையாகும்.
கனடா ராடார்சேட் – 1, ராடார்சேட் -2, மற்றும் ஸ்கிசேட்(SCISAT) என்ற மூன்று விண்கலங்களை விண்ணில் ஏவியுள்ளது. ராடார்சேட் விண்கலங்கள் சுமார் ஒரு பில்லியன் டொலர் செலவில் உருவானவையாகும். இவை தேசிய பாதுகாப்புத்துறைக்கும், கப்பல் நிறுவனங்களுக்கும் கடலில் ஐஸ்கட்டி நிரம்பிய தண்ணீர் இருக்குமிடத்தைத் தெரிவிக்கின்றன.இதனால் கப்பல்கள் இப்பகுதியிலிருந்து விலகிச் செல்ல முடியும். ஸ்கிசாட் என்பது ஓசோன் மண்டலத்தில் ஏற்படும் மாற்றங்களைக் கண்காணிக்கிறது.
இந்த விண்வெளிக் குப்பைகளை அகற்றும் பணியில் கனடாவின் விண்கலக் குழு(Canadian Space Society – CSS) சில வழிமுறைகளை ஆராய்ந்து வருகிறது.லேசரைப் பயன்படுத்தி அழிக்க முடியும். இதனால் குப்பைகளை அகற்றுவது மட்டுமின்றி ரகசியப் போரையும் நடத்திவிட முடியும் என்பதால் விண்வெளியில் லேசர் பயன்பாடு கூடாது என்று பலர் எதிர்ப்புக்குரல் எழுப்புகின்றனர்.
மெக்சிகோவில் நிலநடுக்கம்: மக்கள் அலறியடித்து ஓட்டம்.
வட அமெரிக்க நாடான மெக்சிகோவின் சியாபாஸ் மாநிலத்தில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.2 என்ற அளவுக்கு இந்த நில அதிர்வு பதிவானது.மெக்சிகோவின் டக்ஸ்லா கட்ரஸ் உட்பட பல்வேறு நகரங்களில் அடுக்குமாடி கட்டிடங்கள் குலுங்கின.
அலமாரியில் இருந்து பொருட்கள் உருண்டன, மக்கள் வீதிகளுக்கு ஓடி வந்தனர். சேதம் குறித்த தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை.கடற்கரையில் இருந்து 57 கி.மீ. தொலைவில் பசிபிக் பெருங்கடலில் 66 கி.மீ. ஆழத்தில் அதிர்வு மையம் கொண்டிருந்ததாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஈரானில் பார்பி பொம்மைகளுக்கு தடை.
ஈரானில் மேற்கத்திய கலாசாரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் பார்பி பொம்மைகளை விற்பனை செய்யும் கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.ஏனெனில் மினி ஸ்கர்ட், நீச்சல் உடையில் பார்பி பொம்மைகள் தயாரிக்கப்படுகின்றன. பெண்கள் பொது இடங்களில் செல்லும் போது முகத்தை மறைத்து பர்தா அணிந்து செல்ல வேண்டும் என்று ஈரானில் சட்டதிட்டம் உள்ளது.
இதுபோன்ற ஒரு சமுதாயத்தில் பார்பி பொம்மைகள் கலாசார சீரழிவுக்கு வழிவகுக்கின்றன. இந்த பொம்மைகள் விற்பனைக்கு ஈரானில் கடந்த 1990ம் ஆண்டே தடை விதிக்கப்பட்டது.பார்பி பொம்மைகளுக்கு பதில், ஈரான் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் தாரா - சாரா என்ற பெயரில் இரட்டை பொம்மைகள் அறிமுகம் செய்யப்பட்டன. எனினும் டெஹ்ரானில் பார்பி பொம்மைகளை விற்பனை செய்து வந்த கடைகளுக்கு சீல் வைத்துள்ளோம் என்று அதிகாரிகள் கூறினர்.
சீனாவில் காந்த சக்தியில் இயங்கும் ரயில்கள் அறிமுகம்.
சீனாவில் மணிக்கு 100 கி.மீ வேகத்தில் செல்லக்கூடிய மேக்னக்டிக் ரயில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.சீனாவில் மணிக்கு 300 கி.மீ வேகத்துக்கும் அதிகமாக செல்லும் புல்லட் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்கள் சமீபத்தில் விபத்தில் சிக்கியதால் பயணிகளின் பாதுகாப்பு குறித்த கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் காந்த சக்தியில் அதிகபட்சம் 100 கி.மீ வேகத்தில் செல்ல கூடிய மேக்னடிக் ரயிலை சீனா அறிமுகம் செய்துள்ளது. இதுபோன்ற ரயில்களை ஜப்பான், ஜேர்மனி நாடுகளில் இருந்துதான் சீனா இதுவரை வாங்கி வந்தது.
இப்போது ஜூஜூ எலக்ட்ரிக் லோகோமோடிவ் கார்ப்பரேஷன் என்ற சீன நிறுவனமே இந்த ரயிலை உருவாக்கி உள்ளது. புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட மேக்னடிக் ரயிலை மலைப் பகுதிகள், மக்கள் தொகை அதிகம் உள்ள பீஜிங், ஷாங்காய் போன்ற நகரங்களில் இயக்க சீன அரசு திட்டமிட்டுள்ளது.இதுகுறித்து மேக்னடிக் ரயில் தயாரித்த நிறுவனம் கூறுகையில், ஜப்பான், ஜேர்மனி நாட்டின் ரயிலை விட இது மிகவும் விலை குறைவு. சுற்றுச்சூழலுக்கு உகந்தது. 3 பெட்டிகள் கொண்ட இந்த ரயில் மணிக்கு 100 கி.மீ வேகத்தில் செல்லும். இதில் 600 பேர் பயணம் செய்யலாம். ரயில் தடம் புரளாமல் இருப்பதற்கான வசதிகள் இந்த ரயிலில் செய்யப்பட்டுள்ளன என்று கூறியுள்ளது.
விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு நஷ்டஈடு கோரி வழக்கு தொடர முடிவு.
இத்தாலியின் ரோம் நகருக்கு அருகே உள்ள தீவு ஒன்றில் கோஸ்டா கான்கோரிடியா என்ற பயணிகள் சொகுசு கப்பல் மூழ்கியதில் 11 பேர் பலியாகினர்.இதனைத் தொடர்ந்து இந்த விபத்திற்கு காரணமாக கருதப்படும் கப்பலின் கப்டன் பிரான்சிஸ்கோ ஸ்கெட்டினோ கைது செய்யப்பட்டு வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.இதற்கிடையே இந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு நஷ்டஈடு வழங்க கோரி இத்தாலி நுகர்வோர் உரிமைகள் கழகத்தினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளனர்.
இந்த கப்பலை அமெரிக்க தொழிலதிபர் ஒருவர் இயக்கி வந்தார். எனவே அந்த நிறுவனத்திடம் பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.80 லட்சம் நஷ்டஈடு கேட்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையே நீர்மூழ்கி நீச்சல் வீரர்கள் மூழ்கிய கப்பலுக்குள் இறங்கி பலியானவர்களின் உடல்களை தேடிவருகின்றனர்.
எகிப்தில் நாடாளுமன்ற தேர்தல்: இஸ்லாமியக் கட்சிகள் வெற்றி.
எகிப்தில் நடைபெற்ற மக்கள் போராட்டத்தின் விளைவாக ஹோஸ்னி முபாரக் பதவியிலிருந்து விலகினார்.அதன்பின் நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் இஸ்லாமிக் கட்சிகள் வெற்றி பெற்றன.
கடந்த ஆறுவாரகாலமாக மூன்று கட்டங்களாக எகிப்தில் தேர்தல் நடைபெற்றது. மக்களவைக்கு 498 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பத்து உறுப்பினர்களை ஆளும் இராணுவம் நியமிக்கும்.இந்தப் புதிய நாடாளுமன்றம் எதிர்வரும் திங்கட்கிழமை பொறுப்பேற்கும், விடுதலை மற்றும் நீதிக்கட்சி சாத் அல்-கதாத்னியை சபாநாயகராக நியமிக்கப் போகிறது. இவர் சகோதரத்துவக் கட்சி சார்பில் நீண்டகாலம் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து இவர் கருத்து வெளியிடுகையில், மக்கள் புரட்சியின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதே தம் தலையாய பணி என்றார். போராட்டத்தில் உயிரிழந்தவர் மற்றும் காயம்பட்டவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என்றும் கூறினார்.எகிப்திய இராணுவ ஆட்சியாளர்கள் கூறும் திகதியில் புதிய ஜனாதிபதி பதவியேற்க வேண்டும். அந்த ஜனாதிபதியே அரசாங்கத்தை நடத்துவார் என்பதால் முஸ்லிம் சகோதரத்துவ கட்சிக்கு முழு அதிகாரமும் கிடைக்குமா என்பது சந்தேகம் தான்.
அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் பொதுத் தேர்தல் நடத்தப்படும்: கிலானி.
பாகிஸ்தான் நாட்டில் அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்று பிரதமர் யூசுப் ரசா கிலானி தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறியதாவது: பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடத்தப்படும். இதில் ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சி தேர்தலில் போட்டியிடும். அரசு செயல்பாடுகளின் அடிப்படையில் மக்களிடம் தைரியமாக வாக்குகள் கேட்போம்.
பாகிஸ்தானில் புரட்சி ஏற்படுத்த போவதாக கூறுபவர்களுக்கு மக்களிடம் ஆதரவு இல்லை. அவர்களால் தேர்தலில் வெற்றி பெற முடியாது.புதிதாக அரசியல் கட்சி ஆரம்பித்தவர்களிடம் வலிமையான கொள்கைகள், திட்டங்கள் எதுவும் இல்லை. எனவே வரும் தேர்தலிலும் நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்றார்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF