Tuesday, January 31, 2012

NEWS OF THE DAY.

13+ இல் எதைச் சேர்ப்பது? இதனை தீர்மானிக்கவே பாராளுமன்ற தெரிவுக்குழு - மஹிந்த ராஜபக்‌ஷ.
13வது பிளஸ் இல் எதை உள்ளடக்குவது என்பது பற்றி தீர்மானிக்கவே பாராளுமன்றத் தெரிவுக் குழு அமைக்கப்பட்டுள்ளதென ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் அலரி மாளிகையில் இடம்பெற்ற இன்றைய சந்திப்பின்போதே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார். அங்கு தேசிய இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் ஜனாதிபதி மேலும் கூறியதாவது,
13வது பிளஸ் என்ற விடயத்தை நான் நேற்று இன்று அல்ல தொடர்ந்தும் கூறி வருகிறேன். மஹிந்த சிந்தனை திட்டத்திலும் உள்ளடக்கியுள்ளேன். 13வது பிளஸ் திட்டத்தில் எதனை உள்ளடக்குவது என்பது தொடர்பில் தீர்மானிக்கவே பாராளுமன்றத் தெரிவுக் குழுவை அமைத்துள்ளேன்.
எனவே எதிர்கட்சிகள் சற்று பொறுப்புடன் சிந்தித்து பாராளுமன்றத் தெரிவுக் குழுவுக்கு பெயர்களை பரிந்துரை செய்ய வேண்டும். இல்லையேல் பிரச்சினைக்கு தீர்வு பெறுவது தொடர்ந்தும் இழுத்தடிக்கப்படக்கூடும். இது ஊடகங்களினதோ, ஜனாதிபதியினதோ, எதிர்கட்சித் தலைவரினதோ தனிப்பட்ட பிரச்சினை அல்ல. நாட்டு மக்களின் தேசியப் பிரச்சினை. இதற்கு விரைவில் தீர்வு காண வேண்டும்.அதனால் விரைவில் இது தொடர்பில் தெளிவுபடுத்த பாராளுமன்றில் உள்ள அனைத்துக் கட்சிகளின் தலைவர்களை விரைவில் நான் சந்திக்க உள்ளேன்.
பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் அனைத்துக் கட்சிகளும் கூடி 13வது பிளஸ்ஸில் இவற்றைதான் உள்ளடக்க வேண்டும் எனக் கூறினால் நான் அதனை செயற்படுத்துவேன். இது இவ்வாறிருக்கையில் சில ஊடகங்கள் நாடு தொடர்பில் சர்வதேசத்திற்கு தவறான தகவல்களை வழங்கி வருகின்றன. இந்த ஊடகங்கள் நாடு தொடர்பில் நினைத்து பொறுப்புடன் செயற்பட வேண்டும்.ஊடகங்கள் நினைத்தால் 6 மாதங்களுக்குள் இந்த அரசாங்கத்தை கவிழ்க்க முடியும். ஆனால் நாடு தொடர்பில் முதலில் சிந்திக்க வேண்டும். எனவே அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலமே தேசியப் பிரச்சினைக்கு உரிய தீர்வை விரைவில் பெற முடியும். இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ குறிப்பிட்டார்.
இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து நாடாளுமன்ற தெரிவுக்குழுவே தீர்மானிக்கும் : ஜனாதிபதி மஹிந்த.
இந்தியாவுடன் 13ஆவது திருத்தச்சட்டம் குறித்து கலந்துரையாடியுள்ள போதிலும், அரசியல் தீர்வு பற்றிய இறுதி முடிவினை நாடாளுமன்ற தெரிவுக்குழுவே தீர்மானிக்கும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.இன்று திங்கட்கிழமை காலை அலரிமாளிகையில் நடைபெற்ற பத்திரிகை ஆசிரியர்களுடனான சந்திப்பின்போதே அவர் இதனைக் கூறினார்.
நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கத்துவர்களை இணைத்துக்கொள்வது தொடர்பாக அனைத்துக்கட்சி உறுப்பினர்களையும் விரைவில் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.
எதிர்க் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு அழைப்பாணை.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரை தெரிவு செய்ய அண்மையில் இடம்பெற்ற தேர்தல் முறையற்றது என அறிவிக்கும்படி கோரி கட்சியின் மாகாண சபை உறுப்பினர் மைத்திரி குணரத்ன நீதிமன்றில் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவென குறித்த தரப்பினருக்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.
ரணில் விக்ரமசிங்க இரகசிய வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்டிருந்தாலும் இரகசிய வாக்கெடுப்பிற்கு பயன்படுத்தப்பட்ட வாக்குச்சீட்டில் இலக்கங்கள் குறிப்பிடப்பட்டிருந்ததால் அதன் இரகசியத் தன்மை பேணப்படவில்லை என மைத்திரி குணரத்ன தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த மனுவை எதிர்வரும் பெப்ரவரி 22ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள கொழும்பு மாவட்ட நீதிபதி ஜி.ஏ.டி.கனேபொல அறிவித்தார்.அன்றைய தினம் மனுவின் பிரதிவாதிகளான ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்களை நீதிமன்றில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் உட்பூசல் நிலைமை மேலும் அதிகரிப்பு.
ஐக்கிய தேசியக் கட்சியின் கிளர்ச்சிக்குழு உறுப்பினர் மைத்திரி குணரட்ன, கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க ஆகியோருக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.ரணில் மற்றும் திஸ்ஸ ஆகியோர் எதிர்வரும் 22ம் திகதி நீதிமன்றில் ஆஜராக வேண்டுமென நீதிமன்றம் அழைப்பாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த நவம்பர் மாதம் 19ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய பதவிகளுக்காக நடத்தப்பட்ட தேர்தலை ரத்து செய்யுமாறு மைத்திரி குணரட்ன நீதிமன்றில் கோரியுள்ளார்.வாக்கெடுப்பிற்காக பயன்படுத்தப்பட்ட வாக்குச் சீட்டுக்கள் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட வேண்டுமெனவும் , இந்த வழக்கு விசாரணை நடத்தப்படும் வரையில் ரணில் விக்ரமசிங்கவின் கட்சித் தலைமைப்பதவி இடைநிறுத்தப்பட வேண்டுமெனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
பாடசாலை மாணவர்கள் ஐவரை ஊர்வலமாக ஏற்றிச் சென்று அவமானப்படுத்திய மூவர் கைது!- மட்டக்களப்பில் சம்பவம்.
மட்டக்களப்பு மீராவோடைப் பகுதியில் பாடசாலை செல்லும் சிறுவர்கள் ஜந்து பேரை, வாகனமொன்றில் ஏற்றி ஊர்வலமாக அழைத்துச் சென்று அவமானப்படுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டில் சந்தேகநபர்கள் மூவரை வாழைச்சேனை பொலிஸார் கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.நேற்று மாலை இடம்பெற்றுள்ள இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
வீடொன்றில் வளர்த்து வந்த புறாக்களை வீட்டு உரிமையாளரின் அனுமதியின்றி எடுத்துச் செல்லும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சிறுவர்களை, குறித்த வீட்டு உரிமையாளர் அடியாட்களின் உதவியுடன் பொலிஸாரின் அனுமதியின்றி கைது செய்து துன்புறுத்தி, உடலில் காயங்களை ஏற்படுத்தியுள்ளனர். மேலும் அச்சிறுவர்களை வாகனத்தில் ஏற்றி ஊர்வலமாகவும் கொண்டு சென்றுள்ளனர்.
இதனை அறிந்து பொதுமக்கள் பொலிஸாருக்கு  அறிவித்ததையடுத்து, பொலிஸார் சம்பவ இடத்திற்கு நேரடியாக சென்று சந்தேக நபர்களை கைது செய்து சட்ட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.பாதிக்கப்பட்ட சிறுவர்களை வாழைச்சேனை மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதற்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குத்துச்சண்டை வீரனை எதற்காக சந்தித்தார் மஹிந்த?
முன்னாள் உலக குத்துச்சண்டை சாம்பியன் ஏவாண்டா ஹொலிபீல்டுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்குமிடையில் விசேட சந்திப்பொன்று இன்று அலரிமாளிகையில் இடம்பெற்றது.மஹிந்த ராஜபக்‌ஷ அரசின் கீழ் ஆட்சி நடந்துகொண்டிருக்கும் நாட்டில் கொலை, கொள்ளை, பாலியல், கடத்தல், காணாமல் போதல் என மும்முரமாக தலைவிரித்தாடும் இந்நிலையில் எதற்காக குத்துச்சண்டை சாம்பியனை மகிந்த சந்தித்தார் என அமைச்சினர் குழம்பிப்போயுள்ளனர்.
கிரீஸ் பூதம் என்ற போர்வையில் மக்களைக் கலக்கிய காலம் முடிந்து, குத்துச் சண்டை வீரரும் நாட்டில் உருவாகப்போகின்றனரா என குழம்பிப் போயுள்ளது மஹிந்தவின் இந்த சந்திப்பு எது தொடர்பானது என தெரியாத அமைச்சினர்.
1997 ஜூன் 28ஆம் திகதி இடம்பெற்ற உலக சம்பியன் பட்டத்துக்கான போட்டியின் போது மைக் டைசனால் கடித்துத் துண்டாக்கப்பட்ட ஹொலிபீல்டின் காதை ஜனாதிபதி இச்ந்திப்பின் போது தொட்டுத் தடவிப் பார்த்தார்.அமெரிக்காவைச் சேர்ந்த டொக்டர் கே.ஏ.போல் ஏ கிறிஸ்டியனும் அலரி மாளிகையில் இடம்பெற்ற மேற்படி இருவருடனான சந்திப்பின் போது கலந்துகொண்டார் என்பதும் தெரியவந்துள்ளது.
பொலிஸ், காணி அதிகாரங்களை வழங்க ஜனாதிபதி இணங்க மாட்டார்!- ஹெலஉறுமய.
அதிகாரப்பரவலாக்கல் பட்டியலிலிருந்து பொலிஸ், காணி அதிகாரங்களை நீக்கக்கோரி நாடாளுமன்றத் தெரிவுக் குழுவிடம் எமது உறுதியான யோசனையை முன்வைப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம் என்று ஜாதிக ஹெலஉறுமய நேற்றுத் தெரிவித்துள்ளது.அத்துடன், பொலிஸ், காணி அதிகாரங்களைப் பகிர்வதற்கு ஜனாதிபதி ஒருபோதும் இணங்க மாட்டார் என நாம் உறுதியாக நம்புகின்றோம் என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது.காணி, பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் கருத்துவெளியிடும் போதே ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகப்பேச்சாளரும் மேல்மாகாண சபை அமைச்சருமான உதய கம்மன்வில தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு:
தமிழ் மக்களின் பிரச்சினையை சர்வதேசத்திடம் தூக்கிப்பிடித்து வருவதால் பயன் கிட்டப்போவதில்லை.எமது நாட்டு மக்களின் பிரச்சினைகளை நாமே பேசித் தீர்க்க வேண்டும். இதற்கு முன்வரத் தயங்குபவர்கள் தமிழர்கள் நலனில் அக்கறை கொள்வது போல் நடிக்கின்றனர்.தமிழ் மக்களை ஏனைய சமூகத்தினருடன் இணையவிடாது தடுப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சிக்கின்றது.
நாட்டுக்கும், தமிழ் மக்களுக்கும் துரோகமிழைக்கும் வகையிலேயே அவர்களின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. தமிழ் மக்களுக்கு விடிவைத் தேடிக்கொடுப்பதற்கு அவர்கள் விரும்பினால் தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்கலாம் அல்லவா?காணி, பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதற்கு ஜனாதிபதி ஒருபோதும் இணங்கமாட்டார் என நாம் உறுதியாக நம்புகின்றோம் என்றார்.
கொழும்பில் சீனா திருப்பியளித்த காணியை இந்தியா கொள்வனவு.
கொழும்பில் மிகவும் ஆடம்பர ஹோட்டலை நிர்மாணிக்கும் முகமாக காணியொன்றுக்கு இந்தியாவின் ஐடிசி குழுமம், இலங்கை அரசாங்கத்துக்கு முற்பணத்தை செலுத்தியுள்ளது.
கொழும்பு காலி முகத்திடலில் அமையவுள்ள இந்த ஹோட்டலுக்காக 50 வீத கொடுப்பனவான 73.5 மில்லியன் டொலர்களை இந்திய நிறுவனம் செலுத்தியுள்ளதாக அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.இந்த நிலையில் 300 மில்லியன் டொலர்கள் ஒதுக்கீட்டில் இந்த ஹோட்டல் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்தக்காணியை சீனாவின் சி.ஏ.டி.ஐ.சி நிறுவனம் கொள்வனவு செய்தபோதும் காணி விற்பனை தொடர்பான கொள்கையில் மாற்றம் கொண்டு வரப்பட்டமையால், இலங்கை அரசாங்கம் முற்பணக் கொடுப்பனவை சீன நிறுவனத்துக்கு திருப்பியளித்தது.இந்தக்காணி ஏற்கனவே ஹொங்கொங்கின் சங்க்ரி லா குழுமம் ஹோட்டல் அமைப்புக்காக காலி முகத்திடலில் கொள்வனவு செய்துள்ள காணியை ஒட்டிய வகையில் அமைந்துள்ளது.
தலிபான்களுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை: ஆப்கான் அரசு அதிர்ச்சி.
ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்துவதற்காக தலிபான்களுடன் அமெரிக்க அதிகாரிகள் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது ஆப்கான் அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பிறகு, அல்கொய்தா இயக்கத்தை ஒழிப்பதற்காக அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் முகாமிட்டன. அதன் ஒரு நடவடிக்கையாக அங்கிருந்த தலிபான் அரசை மாற்றியமைத்து புதிய அரசை ஏற்படுத்தியது.
இதன் பின்னர் பாகிஸ்தானில் மறைந்திருந்த பின்லேடனை அமெரிக்க படைகள் சுட்டுக் கொன்றன. இந்நிலையில் ஆப்கானில் இருந்து படைகள் வெளியேறப் போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
இந்நிலையில் ஆப்கானில் அமைதியை ஏற்படுத்துவது குறித்து தலிபான் இயக்கத்தைச் சேர்ந்த முக்கிய தலைவர்களுடன் அமெரிக்க அதிகாரிகள் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.கத்தாரில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் தலிபான் தலைவர் முல்லா ஓமரின் செயலாளர் உட்பட 8 பேர் பங்கேற்றதாக கூறப்படுகிறது. அப்போது குவான்டனாமோ சிறையில் அடைக்கப்பட்டுள்ள தீவிரவாதிகளை விடுவிக்குமாறு தலிபான் இயக்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். எனினும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
சூடானில் 27 தொழிலாளர்கள் கடத்தல்.
சூடானின் தெற்கு பகுதியில் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகம் உள்ளதால் இவர்கள் அரசை எதிர்த்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் தெற்கு கோர்டோபன் என்ற இடத்தில் சாலை அமைக்கும் பணிகளை மேற்கொள்ளும் சீன நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு சீன தொழிலாளிகள் உட்பட வெளிநாட்டு ஊழியர்கள் வேலை செய்கின்றனர்.கடந்த சனிக்கிழமை அங்கு புகுந்த தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். பின்னர் 27 சீன தொழிலாளிகள் உட்பட 80க்கும் அதிகமானவர்களை கடத்தி சென்றனர். பலரை காணவில்லை. இதனால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளிவிவகார அமைச்சக செய்தித் தொடர்பாளர் லியு வீமின் கூறுகையில், கடத்தப்பட்ட சீன தொழிலாளிகளை கண்டுபிடித்து மீட்க சூடான் அரசுடன் தொடர்பு கொண்டுள்ளோம். பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் சீனா - சூடான் தூதரக அதிகாரிகள் அவசர ஆலோசனை நடத்தினர் என்றார்.
ஈரானை பலம் வாய்ந்த நாடாக மாற விட மாட்டோம்: அமெரிக்கா.
ஈரானை அணு சக்தி பலம் வாய்ந்த நாடாக மாற விட மாட்டோம் என அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் லியான் பனெட்டா கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, அணுசக்தி ஆயுதங்களை ஈரான் அதிகரிப்பதாக எங்களது உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தால் அதனை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்போம், இதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என்றார்.ஈரான் அணு ஆயுதங்களை அதிகரிப்பதை அமெரிக்காவும், ஜனாதிபதியும் விரும்பவில்லை எனவும் கூறினார்.
ஆப்கானிஸ்தானால் இராணுவத்தின் நிதிநிலையை சமாளிக்க இயலாது: கனடா.
உலகநாடுகளின் பொருளாதாரம் பின்தங்கியுள்ள நிலையில் ஆப்கானிஸ்தான் இராணுவத்திற்கான செலவை அந்நாடே ஏற்றுக்கொள்ளும் நிலை உருவாகியுள்ளது.மேலும் எதிர்வரும் 2014ம் ஆண்டிற்குப் பிறகு ஆப்கானிஸ்தானால் நேட்டோவின் பயிற்சிக்கான இராணுவச் செலவை ஏற்க முடியுமா என்ற சந்தேகம் கனடாவின் தளபதியான பீட்டர் டெவ்லினுக்கு எழுந்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் ஏறத்தாழ 950 கனடா இராணுவ வீரர்கள் மூன்றாண்டுப் பயிற்சிப் பணிக்காக தங்கியுள்ளனர். இவர்களுக்கு ஆப்கானிஸ்தானால் செலவு செய்ய இயலுமா? என்று டெவ்லின் கேள்வி எழுப்பினர்.ஆப்கானிஸ்தானின் பாதுகாப்புத் துறை அமைச்சரான அப்துல் ரஹீம் வர்தாக் கூறுகையில், தங்களின் இராணுவத்திற்காக இதுவரை 6.2 பில்லியன் டொலர் செலவாகியுள்ளது என்றார். ஆனால் இந்நாட்டின் மத்தியக் கருவூலத்தின் மதிப்பு, வெளிநாட்டு நிதியுதவி உட்பட 4 பில்லியன் டொலர் மட்டுமே ஆகும்.
இந்த பற்றாக்குறையை சரிசெய்ய அரசு முயலவேண்டும், இதற்கு சர்வதேசச் சமூகம் உதவத் தயாராக இருக்கிறதா என்று கேட்டுவிட்டு அவர்களால் அது முடியாது என்று கருதுவதாகத் தெரிவித்தார்.இன்றைய நிதி நெருக்கடிச் சூழ்நிலையில் ஐரோப்பா, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகள் ஆப்கான் இராணுவத்துக்குச் செலவு செய்வதைத் தங்கள் நாட்டு மக்களிடம் நியாயப்படுத்த இயலாது. எனவே ஆப்கானிஸ்தான் அரசே செலவை ஏற்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
கப்பல் விபத்து: ஜேர்மனியைச் சேர்ந்த ஐந்தாவது நபரின் சடலம் மீட்பு.
இத்தாலியைச் சேர்ந்த கோஸ்டா கன்கார்டியா என்ற கப்பல் ரோம் நகருக்கு அருகே உள்ள தீவு ஒன்றில் தரை தட்டி மோதியதில் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பலியான ஏழு பேரை பற்றிய விபரங்கள் இன்னும் தெரியவில்லை. தற்போது ஒரு வயதான பெண்ணின் உடலைக் கண்டுபிடித்தனர்.பின்னர் இவர் ஜேர்மனியைச் சேர்ந்தவர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இவர் ஜேர்மனியின் லாஃபீம் நகரைச் சேர்ந்த 66 வயதுப் பெண்ணா, நூர்ட்டிங்கென் பகுதியைச் சேர்ந்த 71 வயதுப் பெண்ணா என்பது தெரியவில்லை.
பிரான்சில் புதிய பொருளாதாரச் சீர்திருத்தங்கள் அறிமுகம்.
பிரான்சில் அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே இருக்கும் நிலையில் சர்கோசி வெற்றியை பெறுவதற்காக புதிய பொருளாதாரச் சீர்திருத்தங்களை அறிமுகம் செய்கிறார்.இவர் வேலைவாய்ப்புகளை அதிகளவு உருவாக்கவும், தொழில் போட்டிகளை அதிகரிக்கவும் முடிவு செய்துள்ளார்.
பிரான்சில் பொருளாதார வீழ்ச்சி தலைகாட்டத் தொடங்கி விட்டதால், இந்நாட்டை மீட்கக்கூடிய ஒரே தலைவர் சர்கோசி மட்டுமே என்று மக்களை நம்பவைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.மேலும் சமூக மதிப்புக் கூட்டல் வரியை(Social VAT) மக்களிடம் அறிமுகப்படுத்தப் போகிறார். இதனால் 1.6 சதவீதத்தில் இருந்த வரி 21.1சதவீதமாக உயரும்.
இந்த வரிவிதிப்பால் முதலாளிகளின் சமூகப் பங்களிப்பு குறையும், நுகர்வோரின் வரிச்சுமை அதிகரிக்கும். ஜேர்மனியின் ஆலோசனையின் பேரில் இந்த வரிவிதிப்பு அறிமுகமாகிறது.சர்கோசியின் போட்டி வேட்பாளரான ஹோலேண்ட் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். வங்கிகள், பெரிய நிறுவனங்கள் போன்றவற்றின் வரியை அதிகரித்து பற்றாக்குறையை சரிசெய்ய வேண்டும் என்று தன் பிரச்சாரத்தின் போது கூறினார்.
ஆனால் சமீபத்தில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், வேலையில்லாக் கொடுமையையும், கடன் சிக்கலையும் குறைக்க ஹோலாண்டே சரியானவர் என்று மக்கள் கருதுகின்றனர்.இதில் 46 சதவீதம் பேர் இவர் வேலையில்லாக் கொடுமையைத் தீர்ப்பார் என்று கருத்துத் தெரிவித்தனர். 22 சதவீதம் பேர் மட்டுமே சர்கோசி மீது நம்பிக்கை வைத்துள்ளனர். பொதுக்கடனைத் தீர்ப்பதில் ஹோலாண்டிற்கு 34 சதவீதமும், சர்கோசிக்கு 32 சதவீதமும் ஆதரவு கிடைத்துள்ளது.
இத்தாலியின் முன்னாள் ஜனாதிபதி மறைவு.
இத்தாலியின் மூத்த அரசியல்வாதியும், முன்னாள் ஜனாதிபதியுமான ஆஸ்கார் லுயிகி ஸ்கால்ஃபரோ(Oscar Luigi Scalfaro)தனது 93வது வயதில் காலமானார்.இத்தாலியில் ஏறத்தாழ 50 ஆண்டுகளாக அரசியலிலிருந்த இவர் சிறந்த பாராளுமன்ற உறுப்பினராகவும், உள்துறை அமைச்சராகவும் நாட்டின் சிறந்த தலைவராகவும் இருந்தார் என்று தற்போதைய இத்தாலி நாட்டின் ஜனாதிபதி பாராட்டியுள்ளார்.
மேலும் போப் பெனடிக்ட் XVI(Pope Benedict XVI) வாட்டிகன் இணையத்தளத்திலிருந்து மறைந்த தலைவரின் மகளுக்கு அனுப்பிய இரங்கல் கடிதத்தில், இத்தாலியின் வரலாறு, குடிமைப் பாரம்பரியத்தோடு இணைந்த அழிவில்லாத சமயக் கருத்துகளையும், நல்லறங்களையும், பொதுநன்மையையும் பேணிக்காப்பதில் நிகரற்றவராக இருந்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.
1946ம் ஆண்டில் இத்தாலி சட்டசபை உறுப்பினரான இவர் பலமுறை அமைச்சர் பொறுப்பில் இருந்துள்ளார். மேலும் 1992ம் ஆண்டில் பாராளுமன்ற உறுப்பினரான இவர் ஒரே மாதத்தில் இத்தாலியின் ஜனாதிபதியானார். ஏழு ஆண்டுகள் ஜனாதிபதியாக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.பின்பு 1999ம் ஆண்டில் இவர் கார்லோ கியாம்பியிடம்(Carlo Ciampi) ஜனாதிபதி பொறுப்பை ஒப்படைத்துவிட்டு அரசியலியிருந்து ஓய்வு பெற்றார்.
ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் தீவிரம்.
இந்த ஆண்டு லண்டனில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கான தொடக்க நிகழ்ச்சிகளை டேனிபாயல் தலைமையிலான குழுவினர் இயக்குகின்றனர்.ஓஸ்கார் விருது பெற்ற “ஸ்லம்டாக் மில்லினியர்” என்ற ஹாலிவுட் படத்தை இயக்கியவர் ஆலிவுட் இயக்குனர் டேனிபாயல்.ஜூலை மாதம் தொடங்கும் ஒலிம்பிக் போட்டிக்காக இப்போதே ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
தொடக்க நாளில் நடைபெறும் கண்கவர் இசை நிகழ்ச்சிக்காக ரூ.20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சுமார் 10 ஆயிரம் கலைஞர்கள் கலந்து கொள்ளும் வகையில் 3 மணி நேரம் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. ஷேக்ஸ்பியரின் “தி டெம்பஸ்ட்” நாடகத்தை மையமாக வைத்து இசை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
பனி மூட்டத்தால் ஏற்பட்ட கோர விபத்து: 10 பேர் உயிரிழப்பு.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள நெடுஞ்சாலை ஒன்றில் பல வண்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதில் 10 பேர் உயிரிழந்தனர், பலர் காயமுற்றனர்.
கேய்னெஸ்வில்லெ(Gainesville) என்ற இடத்தின் அருகே உள்ள நெடுஞ்சாலையில் அதிகாலைப் பொழுதில் பனிமூட்டம் பாதையை மறைத்ததால் 12 கார்களும், 6 சரக்குப் பெட்டக வண்டிகளும் ஒன்றோடொன்று மோதிக்கொண்டன.இதனால் அருகில் இருந்த புதரில் தீப்பிடித்துச் சாலையெங்கும் புகை பரவியது. மேலும் உயிருக்குப் போராடிய 18 பேர் வைத்தியசாலைக்கு உடனடியாக எடுத்துச் செல்லப்பட்டனர்.
ஸ்டீவென் ஆர். கேம்ப்ஸ்(Steven R Camps)என்ற ஓட்டுநர் இந்த விபத்து குறித்து கூறுகையில், அதிகாலையில் வேலை முடித்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தப் போது எதிரே வரும் வண்டிகளும், வாகனங்களும் கண்ணுக்குத் தெரியாத வண்ணம் பனி மூட்டம் இருந்தது.இதனால் வண்டிகள் ஒன்றோடொன்று மோதும் சத்தமும், மக்களின் கூக்குரலும், அழுகையும் சாலை முழுக்க எதிரொலித்தது என்று கூறினார்.
உளவுத்துறை தலைவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கவில்லை: பிரதமர் கிலானி.
பாகிஸ்தானின் உளவுத்துறை தலைவர் சுஜா பாஷாவுக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்படுவது குறித்து எவ்வித முடிவும் செய்யப்படவில்லை என பிரதமர் கிலானி தெரிவித்துள்ளார்.கடந்த சில நாட்களுக்கு முன் சுஜா பாஷாவுக்கு பதவி நீட்டிப்பு வழங்குவது என கிலானி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. இத்தகவலை கிலானி மறுத்துள்ளார். மேலும் இது குறித்த முடிவு உரிய நேரத்தில் எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
இதனிடையே பாஷாவுக்கு பதவி நீடிப்பு வழங்குவதை பாகிஸ்தானின் ஆளும் கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சியினர் விரும்பவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.பாஷா கடந்த 2010ம் ஆண்டு மார்ச் மாதமே ஓய்வு பெற வேண்டியவர். ஆனால் இவருக்கு இரண்டு முறை பதவி நீட்டிக்கப்பட்டது. எதிர்வரும் மார்ச் மாதம் 18ம்  திகதியுடன் பதவிக்காலம் முடிவடைகிறது.
அமெரிக்காவில் சலே.
ஏமன் ஜனாதிபதி அலி அப்துல்லா சலே மருத்துவ சிகிச்சை மேற்கொள்வதற்காக அமெரிக்காவுக்கு சென்றுள்ளார்.ஏமனில் சலேவின் ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டங்கள் நடத்தினர். இந்நிலையில் கடந்தாண்டு ஜூன் மாதம் ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் குண்டு வீசப்பட்டது.
அப்போது அங்கு தொழுகையில் இருந்த சலேவுக்கு, காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சவுதி அரேபியாவில் சிகிச்சை பெற்றார்.போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் வளைகுடா நாடுகள் கூட்டுறவு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
கடந்த வாரம் சிகிச்சைக்காக அமெரிக்காவிடம் விசா கோரி விண்ணப்பித்தார். அமெரிக்காவும், சிகிச்சைக்காக மட்டும் அனுமதி அளித்ததால் அங்கு சென்றார்.எனினும் அவர் நியூயார்க்கிற்குத் தான் சென்றாரா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. அங்குள்ள ப்ரஸ்பிட்டேரியன் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புடினுக்கு எதிராக போட்டியிட தடை.
ரஷ்யா ஜனாதிபதி தேர்தலில் விளாடிமிர் புடினுக்கு எதிராக போட்டியிட எதிர்க்கட்சித் தலைவர் கிரிகரி யாவ்லின்ஸ்கிக்கு தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது.எதிர்வரும் மார்ச் மாதம் 4ம் திகதி ரஷ்யாவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது.ரஷ்யாவில் நான்கு முறை ஜனாதிபதியாக பதவி வகித்த விளாடிமிர் புடின், தற்போது பிரதமராக உள்ளார். அவர் மீண்டும் ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் அவரை எதிர்த்து எதிர்க்கட்சித் தலைவர் கிரிகரி யாவ்லின்ஸ்கி போட்டியிட உள்ளார். அதற்காக அவர் தேர்தல் கமிஷனிடம் அளித்த ஆவணங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.தேர்தலில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர்கள் இருபது லட்சம் வாக்காளர்களது ஆதரவுடன் கூடிய கையெழுத்து பெற வேண்டும் என்பது நிபந்தனை.
இந்நிலையில் யாவ்லின்ஸ்கி தாக்கல் செய்த ஆவணங்களில் நான்கில் ஒரு பங்கு விண்ணப்பங்கள் போலி என்பது தெரியவந்துள்ளது.இதையடுத்து அவர் தேர்தலில் போட்டியிட தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது. இதுகுறித்து யாவ்லின்ஸ்கி ஆதரவாளர்கள் கூறுகையில், புடின் உத்தரவுப்படி தேர்தல் கமிஷன் செயல்பட்டுள்ளது. இது திட்டமிட்ட சதித்திட்டம் என்றனர்.
லிபியாவில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு நிராகரிப்பு.
லிபியாவில் தற்பொழுது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள புதிய தேர்தல் சட்டத்தில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு நிராகரிக்கப்பட்டுள்ளது.
லிபியாவில் அரசியல் அமைப்பு சபையை அமைக்கும் வகையில் உருவாக்கப்பட்ட புதிய தேர்தல் சட்டத்தை ஆளும் தேசிய இடைக்கால கவுன்சில் ஏற்றுக் கொண்டது. அதே நேரம் அச்சட்டத்தில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு நிராகரிக்கப்பட்டு விட்டது.லிபியாவில் அரசியல் அமைப்பை உருவாக்குவதற்காக இந்தாண்டு ஜூன் மாதம் அரசியல் அமைப்பு சபை ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற வகையில் புதிய தேர்தல் சட்டம் கொண்டு வரப்பட்டது. இச்சட்டத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாக பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் கவுன்சில் அறிவித்துள்ளது.
இதன்படி நாடாளுமன்றத்தில் மொத்தம் உள்ள 200 இடங்களில் 136 பேர் அனைத்துக் கட்சி உறுப்பினர்களும், 64 சுயேச்சைகளும் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படுவர். ஆனால் இச்சபையில் ஒரு பெண் உறுப்பினர் கூட கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.மொத்தம் உள்ள 200 இடங்களில் 10 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்ற பிரிவு இச்சட்டத்தில் இருந்தது. ஆனால் அதன் பின் கொண்டு வரப்பட்ட திருத்தத்தின்படி அப்பிரிவு கைவிடப்பட்டது.
50 தீவிரவாதிகள் ஆப்கான் அரசிடம் சரண்.
ஹெஸ்ப்இஇஸ்லாமி என்ற பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 50 பேர் ஆப்கானிஸ்தான் அரசிடம் சரணடைந்தனர்.இதுகுறித்து பக்லான் மாகாண காவல்துறை உயரதிகாரி அசதுல்லா ஷிராசத் கூறியதாவது: அரசுக்கு எதிராக செயல்பட்டு வரும் மிகப் பெரிய தீவிரவாத குழுக்களில் ஒன்று ஹெஸ்ப்இஇஸ்லாமி என்ற அமைப்பு.நாட்டின் பாதுகாப்பை நிலை நாட்டும் வகையில் அமைதி பேச்சு வார்த்தை நடத்த தீவிரவாத அமைப்புகளுக்கு ஆப்கான் அரசு அழைப்பு விடுத்துள்ளது.
இதைத் தொடர்ந்து கடந்த 21ம் திகதி ஜனாதிபதி ஹமித் கர்சாய், ஹெஸ்ப்இஇஸ்லாமி அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.அதன் பலனாக பக்லான்இமர்கசி மாவட்டத்தில் 50 தீவிரவாதிகள் நேற்று சரணடைந்தனர். இதன் மூலம் தலிபான்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் அமைதி நடவடிக்கையில் இணைந்துள்ளதாக அசதுல்லா தெரிவித்தார்.
சிரியாவில் தொடரும் வன்முறை: இராணுவத்தின் தாக்குதல்கள் அதிகரிப்பு.
சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் நகருக்கு அருகில் உள்ள பகுதிகளை கைப்பற்றும் முயற்சியில் ஜனாதிபதியின் இராணுவம் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் போராட்டம் வலுத்து வருகிறது.சிரியாவில் ஜனாதிபதி பஷர் அல் அசாத்திற்கு எதிரான மக்கள் போராட்டம் கடந்தாண்டு மார்ச் மாதத்தில் தொடங்கியது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது இராணுவம் தாக்குதல் நடத்தவே படிப்படியாக இராணுவ வீரர்கள் பலர் அங்கிருந்து பிரிந்து எதிர்க்கட்சிகளுடன் இணைந்தனர்.
இவர்கள் சிரியா விடுதலை இராணுவம் என்ற எதிர்த்தரப்பு இராணுவத்தை உருவாக்கினர். ஜனாதிபதியின் இராணுவத்திற்கு இந்த புதிய இராணுவம் மிகப் பெரிய சவாலாக விளங்கி வருகிறது.இந்நிலையில் சிரியாவின் நிலைமை குறித்து ஆய்வு செய்ய டிசம்பர் மாதம் 26ம் திகதி முதல், அரபு லீக் சார்பில் 165 பிரதிநிதிகள் கொண்ட குழு சென்றது.ஆனால் இக்குழு வந்த பின் மக்கள் மீதான இராணுவத்தின் தாக்குதல் குறைவதற்குப் பதிலாக அதிகரித்தது. அதனால் ஜனாதிபதி அசாத் தனது பொறுப்புகளை துணை ஜனாதிபதியிடம் ஒப்படைத்து விட்டு பதவி விலக வேண்டும் என கோரிக்கை விடுத்தது.
இதற்கு சிரியா மறுப்பு தெரிவிக்கவே அரபு லீக்கில் உள்ள சவுதி அரேபியாவும் கத்தாரும், சிரியா குழுவில் இருந்து தங்கள் பிரதிநிதிகளை திரும்பப் பெற்றன.சவுதியின் இந்த முடிவை அடுத்து அரபு லீக் வெளிவிவகாரத்துறை அமைச்சர்கள் கலந்தாலோசித்தனர். இதையடுத்த சிரியாவில் இருந்து அரபு லீக் தனது பிரதிநிதிகள் குழுவை முழுமையாகத் திரும்பப் பெற்றுக் கொள்வதாக அறிவித்தது.
மேலும் ஜனாதிபதி அசாத்தை பதவி இறங்கும்படி வலியுறுத்தவும், அவரிடம் இருந்து அந்நாட்டு மக்களை காப்பாற்றவும், நெருக்கடி கொடுக்கும்படி அமெரிக்காவிடம் வலியுறுத்த சிரியாவின் எதிர்க்கட்சிக் கூட்டமைப்பான சிரியா தேசிய கவுன்சில் தலைவர் விரைவில் அமெரிக்கா செல்ல இருப்பதாக அக்கூட்டமைப்பு அறிவித்துள்ளது.சிரியாவில் நடக்கும் வன்முறைகளை உடனடியாக நிறுத்த சர்வதேச சமூகம் தலையிட வேண்டும் என வளைகுடா நாடுகள் மற்றும் துருக்கி வலியுறுத்தியுள்ளன.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF