Wednesday, February 1, 2012

NEWS OF THE DAY.

எதிர்வரும் மாதங்களில் நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்படக் கூடும்: ரணில்.
எதிர்வரும் மாதங்களில் நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்படக் கூடிய அபாயம் காணப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொடகம பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.சர்வதேச நாணய நிதியத்தினால் அதிகளவு வட்டி அறவீடு செய்யப்படுவதாக மத்திய வங்கி ஆளுனர் குற்றம் சுமத்தியுள்ளார். சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன் பெற்றுக் கொண்டால் இரண்டு வீத வட்டியை செலுத்த வேண்டுமென ஆளுனர் தெரிவித்துள்ளார்.
எனினும், இலங்கை மத்திய வங்கி வெளிநாட்டு வர்த்தக வங்கிகளிடமிருந்து ஆறரை வீத வட்டிக்கு கடன் பெற்றுக் கொள்ளவுள்ளது. அதாவது 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இவ்வாறு கடனாகப் பெற்றுக்கொள்ளப்பட உள்ளது.இவ்வாறு கடன் பெற்றுக் கொள்வதனால் நாடு பாரியளவிலான பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கக் கூடும் என ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளார்.
கேலிச் சித்திரங்களை கண்டு நான் அஞ்சுவதில்லை : ஐனாதிபதி மஹிந்த.
என்னை பத்திரிகைகளில் கிண்டல் செய்வதையோ, கேலிச்சித்திரங்கள் மூலம் நையாண்டி செய்வதையோ நான் பொருட்படுத்துவதில்லை என ஐனாதிபதி மஹிந்த ராஐபக்ச தெரிவித்துள்ளார்.நேற்றையதினம் அலரி மாளிகையில் பத்திரிகை ஆசிரியர்களை சந்தித்த போது ஐனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
முன்னர் ஜனாதிபதியாக இருந்த ஆர். பிரேமதாஸவை எழுத்தாக்கங்கள் மூலமும் கேலிச் சித்திரங்கள் மூலமும் கிண்டல் செய்தவர்களுக்கு நடந்தது என்னவென்று உங்களுக்கு தெரியும்தானே. அப்பாவி ரிச்சட் சொய்சா கூட அதற்காக உயிரிழந்தார். நான் எத்தகைய கேலி, கிண்டல்களையும் சகித்துக் கொள்ளும் மனப்பக்குவம் கொண்ட அரசியல்வாதி. ரணிலும் என்னைப் போன்று எந்தக் கேலிக் கிண்டல்களையும் பொருட்படுத்தும் ஒருவர் அல்ல எனவும் தெரிவித்துள்ளார். 
உங்களை கேலி செய்யும் ஒரு நாடகத்தை அரங்கேற்றியமையால் ஒரு பாடசாலை அதிபர் வேலை நீக்கம் செய்யப்பட்டதாக செய்தி வெளிவந்துள்ளது. அதைப்பற்றி என்ன கூற விரும்புகிறீர்கள் என்று ஒரு ஆசிரியர் கேட்டதற்கு ஜனாதிபதி பதிலளிக்கையில், அது பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது. நான் இத்தகைய கேலி, கிண்டல்களை பொருட்படுத்துவதில்லை. அவற்றை சகித்துக் கொள்ளும் மனப்பக்குவம் எனக்கு இருக்கிறது என்று ஜனாதிபதி கூறினார்.
ஈராக்கிலுள்ள இலங்கை தூதரகத்தை விரைவில் திறக்க மஹிந்த உத்தரவு.
மிக விரைவாக ஈராக்கிலுள்ள இலங்கை தூதரகத்தை திறக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் உத்தரவிட்டுள்ளார்.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸிடம் இதனை தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.இன்று அலரிமாளிகையில் வெளிநாட்டு ஊடகவியலாளர்களை ஜனாதிபதி சந்தித்தமை குறிப்பிடத்தக்கது.
இனப்பிரச்சினைத் தீர்வுக்கு ஐ.தே.க பூரண ஆதரவு- திஸ்ஸ அத்தநாயக்க.
இனப்பிரச்சினைத் தீர்வுக்கான 13ஆம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சிகளுக்கு ஐக்கிய தேசியக் கட்சி பூரண ஆதரவளிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.13ஆம் திருத்தச் சட்டத்தை தாண்டிய தீர்வுத் திட்டமொன்று வழங்கப்படும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கை விஜயம் செய்திருந்த போது தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதேநேரம், உள்நாட்டு ரீதியான தீர்வுத் திட்டமொன்றை அமுல்படுத்துவதற்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கப்படுவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். முதலில் ஜனாதிபதி தெரிவித்த கருத்திற்கும், தற்போதைய நிலைப்பாட்டுக்கும் இடையில் வித்தியாசம் காணப்படுகின்றது.13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த எவரிடமும் அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை சட்டத்தை அமுல்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கை வெளிவிவகார அமைச்சரை அமெரிக்கா வருமாறு ஹிலாரி கிளின்ரன் அழைப்பு..
இலங்கை தொடர்பான விளக்கத்தினை பெற்றுக்கொள்ள அமைச்சர் ஜீ.எல்.பீரிஸை தமது நாட்டுக்கு விஜயம் செய்யுமாறு அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்ரன்  அழைப்பு விடுத்துள்ளார்.யுத்தத்தின் பின்னரான இலங்கையின் நிலைமைகள் மற்றும் நல்லிணக்கப்பணிகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் நோக்கில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் மார்ச் மாதமளவில் இந்த விஜயம் இடம்பெறும் எனத்தெரிவிக்கப்படுகிறது.
வட மாகாணசபைத் தேர்தல்கள், குற்றச் செயல்களுக்கு தண்டனைவிதித்தல், மனித உரிமை நிலைமைகள் குறித்தும் இந்த சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட உள்ளது.எவ்வாறெனினும், எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கியநாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவளிக்க அமெரிக்கா தீர்மானித்துள்ளது.ஹிலாரி கிளின்ரனின் அழைப்பு தொடர்பான கடிதம், ஏற்கனவே அமைச்சர் பீரிஸிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்தி நல்லிணக்க நடவடிக்கைகளை ஏற்படுத்துவதில் அமெரிக்கா ஆர்வம் காட்டி வருவதாக ஹிலாரியின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.இதேவேளை, இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அதற்கு இந்தியாவும் ஆதரவளிக்கக் கூடும் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
கச்சா எண்ணெய் ஏற்றுமதி விரைவில் நிறுத்தப்படும்: ஈரான்.
அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளின் செயல்களால் கோபமடைந்துள்ள ஈரான் சில நாடுகளுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி விரைவில் நிறுத்தப்படும் என அறிவித்துள்ளது.ஈரானின் அணு சக்தி திட்டங்கள் அணு ஆயுதங்களைத் தயாரிக்கப் பயன்படுகின்றன என்ற குற்றச்சாட்டின் பேரில் சர்வதேச அணு சக்தி ஏஜென்சி(ஐ.ஏ.இ.ஏ) குழுவினர் மூன்று நாள் பயணமாக நேற்று முன்தினம் ஈரான் சென்றனர். அவர்களுக்கு முறைப்படி ஒத்துழைப்பு அளிப்பதாக ஈரான் தெரிவித்தது.
இந்நிலையில் நேற்று எத்தியோப்பியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த ஈரான் வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி அக்பர் சலேஹி, ஐ.ஏ.இ.ஏ குழுவினர் விரும்பினால் அவர்கள் ஆய்வு செய்வதற்கான நாட்கள் நீட்டிக்கப்படும் எனத் தெரிவித்தார்.இதற்கிடையில் நேற்று அந்நாட்டு எண்ணெய் அமைச்சர் ருஸ்தம் கசேமி அளித்த பேட்டியில், சில நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் கச்சா எண்ணெய் நிறுத்தப்படும் எனத் தெரிவித்தார். ஆனால் எந்த நாடுகள் என அவர் குறிப்பிடவில்லை.
கடந்த 23ம் திகதி ஐரோப்பிய யூனியன் ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்குத் தடை விதித்தது. அதன் பின் ஈரான் இந்த முடிவை எடுத்துள்ளது.அதேநேரம் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆளில்லா கண்காணிப்பு விமானம் ஒன்றை விரைவில் வெள்ளோட்டம் விடப் போவதாகவும் ஈரான் அறிவித்துள்ளது. இந்த விமானம் 5 கிலோ எடையுள்ள வெடிபொருட்களைத் தூக்கிக் கொண்டு 10 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும் திறன் கொண்டது.
அமெரிக்கா - தலிபான் இடையேயான முதற்கட்ட பேச்சுவார்த்தை தோல்வி.
அமெரிக்காவிற்கும், ஆப்கானிஸ்தான் தலிபான் அமைப்பினருக்கும் இடையே நடந்த முதல்கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.அரபு நாடான கத்தாரில் அமெரிக்காவுக்கும், தலிபான் அமைப்பினருக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. முதற்கட்டமாக குவான்டனமோ சிறையில் உள்ள பயங்கரவாதிகளில் ஐந்து பேரை விடுவிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடந்தது.
இதில் பாகிஸ்தானின் தெற்கு வஜீரிஸ்தானில் கடந்த 2009ம் ஆண்டில் தலிபானால் சிறை பிடிக்கப்பட்ட அமெரிக்க வீரர் போவ் பெர்க்தல் என்பவரை தலிபான் விடுவிக்க வேண்டும். அதற்கு மாற்றாக குவான்டனமோவில் அடைக்கப்பட்டுள்ள தலிபான் பயங்கரவாதிகளில் ஐந்து பேரை அமெரிக்கா விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டது.ஆனால் இந்த விடுவிப்பிற்கு முன்பாக ஆப்கானில் தங்களின் தாக்குதல்களை தலிபான்கள் நிறுத்த வேண்டும் என அமெரிக்கா நிபந்தனை விதித்தது. ஆனால் அதை தலிபான் ஏற்க மறுத்து விட்டது. இதனால் இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.
இதற்கிடையில் சவுதி அரேபியா அல்லது துருக்கி ஆகிய இரண்டில் ஏதாவது ஒரு நாட்டில் வைத்து தலிபானுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த ஆப்கான் அரசு திட்டமிட்டுள்ளது.இதற்கு தலிபானும் ஒப்புக் கொண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்பேச்சு இன்னும் சில வாரங்களில் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறைந்து வரும் ஜப்பானின் மக்கள் தொகை.
உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் ஒன்றான ஜப்பானில் தற்போது மக்கள் தொகை குறைந்து கொண்டே வருவதாக மக்கள் தொகை மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆய்வுக்கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.ஜப்பானின் மக்கள் தொகை குறித்து அந்நாட்டு சுகாதார மற்றும் மக்கள் நலத் துறை அமைச்சகத்தின் தேசிய மக்கள் தொகை மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆய்வுக் கழகம் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதன்படி எதிர்வரும் 2060ம் ஆண்டில் ஜப்பானின் மக்கள் தொகை தற்போதைய மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு குறைந்து 8 கோடியே 67 லட்சமாக ஆகி விடும்.இதே சூழல் தொடர்ந்தால் எதிர்வரும் 2110ம் ஆண்டில் மக்கள் தொகை 4 கோடியே 29 லட்சமாகி விடும். உலகில் ஜப்பானில் தான் சராசரி மனித ஆயுள் அதிகம். கடந்த 2010ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி அங்கு சராசரி மனித ஆயுள் 86.39 ஆண்டுகள்.
இது 2060ம் ஆண்டில் பெண்களைப் பொறுத்தவரை 90.93 ஆண்டுகளாக அதிகரித்து விடும். ஆண்களின் சராசரி ஆயுள் தற்போதைய 79.64 ஆண்டுகளில் இருந்து 84.19 ஆண்டுகளாக அதிகரிக்கும். இந்த மக்கள் தொகை குறைவுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.முக்கியமாக தற்போதைய ஜப்பானிய இளைய சமுதாயம் தங்களின் வாழ்க்கைக்கும், வேலை வாய்ப்புக்கும், குடும்பத்தை ஒரு பாரமாகக் கருதுகின்றனர்.
அத்துடன் கடந்தாண்டு ஏற்பட்ட சுனாமியில் 19 ஆயிரம் பேர் பலியாயினர். சுனாமியால் ஏற்பட்ட பொருளாதாரச் சிக்கலால் பெரும்பாலானோரின் வேலை வாய்ப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் மக்கள் குழந்தைகளைப் பெறுவதை விரும்பவில்லை.தற்பொழுது ஜப்பானின் மக்கள் தொகை 12 கோடியே 77 லட்சமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் அமெரிக்காவை எச்சரிக்கும் வடகொரியா.
அமெரிக்கா, தென் கொரியா நாடுகள் மேற்கொள்ளும் கூட்டு இராணுவப் பயிற்சி அணு ஆயுதப் போரைத் தூண்டி விடும் என வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.வருகிற பிப்ரவரி மாதம் 27ம் திகதி முதல் மார்ச் 9ம் திகதி வரை அமெரிக்காவும், தென் கொரியாவும் இணைந்து கூட்டு இராணுவப் பயிற்சி மேற்கொள்ள உள்ளன.
இந்த பயிற்சியில் இரண்டு லட்சம் தென் கொரிய வீரர்களும், 2,100 அமெரிக்கப் பயிற்சியாளர்களும் கலந்து கொள்ள உள்ளனர். இது ஆண்டு தோறும் நடக்கும் வழக்கமான கூட்டுப் பயிற்சி என அந்நாடுகளின் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து வடகொரிய செய்தி நிறுவனமான கே.சி.என்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரிய தீபகற்பத்தில் அமைதியும், நிலையான அரசியல் சூழலும் அமைய வேண்டும் என விரும்பும் சர்வதேச சமூகத்திற்கு இந்த மிகப் பெரிய கூட்டு இராணுவப் பயிற்சி ஒரு சவால் தான்.இந்தப் பயிற்சி வட மற்றும் தென் கொரியாக்களுக்கிடையிலான உறவுகளை சீர்குலைக்கும், மேலும் போரைத் தான் உருவாக்கும். யார் போர் நடவடிக்கையைத் தூண்டினாலும் அவர்கள் நிச்சயமாகத் தண்டிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை கொடூர கொலை செய்த கணவர்.
ஆப்கானிஸ்தானில் பெண்கள் பள்ளி, பொது இடங்களுக்கு செல்ல கூடாது, கால்கள், முகம் தெரியும் படி உடை அணிய கூடாது போன்ற கடும் நிபந்தனைகள் உள்ளது.ஆனால் நேட்டோ படைகளின் நடவடிக்கைக்கு பிறகு தலிபான்களின் ஆதிக்கம் ஓரளவு குறைந்ததால், பெண்கள் பள்ளி செல்கின்றனர். அலுவலகங்களில் வேலை செய்கின்றனர்.
பிரச்னைகளை எதிர்த்து போராட்டங்கள் நடத்தவும் தைரியமாக அவர்கள் வெளிவருகின்றனர். எனினும் குடும்ப வன்முறைகளால் பெண்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில் பெண் குழந்தை பெற்றெடுக்கவில்லை என்ற ஆத்திரத்தில் இளம் மனைவியை கணவனே கொலை செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.குந்தூஸ் மாகாணத்தில் உள்ள கானாபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் ஷெர் முகமது. இவருடைய 22 வயது மனைவி எஸ்டோராய் வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடப்பதை அக்கம் பக்கத்தினர் பார்த்து காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர்கள் நடத்திய விசாரணையில் முகமதுக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ளது. இரண்டாவது பிரசவத்தில் ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவியை சித்ரவதை செய்து வந்துள்ளார். ஆத்திரத்தில் மனைவியை கொலை செய்துவிட்டு தலைமறைவானது தெரிய வந்தது.கொலைக்கு உடந்தையாக இருந்த முகமதுவின் தாய் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கொடூர கொலைக்கு ஆப்கனில் மனித உரிமை அமைப்புகள், பெண் உரிமை அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தலைமறைவான முகமதுவை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
பின்லேடனை கண்டுபிடிப்பதற்காக ரத்தம் சேகரித்த மருத்துவதாதிகள்.
ஒசாமா பின்லேடனை கண்டுபிடிப்பதற்காக 2 மருத்துவதாதிகள் ரத்தம் சேகரித்துள்ளனர் என பின்லேடனின் இருப்பிடம் குறித்து அமெரிக்காவுக்கு தகவல் தெரிவித்த வைத்தியர் கூறியுள்ளார்.பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் அருகே உள்ளது அபோதாபாத். இங்கு இராணுவ அகடமி உள்ளது. இதன் அருகில் உள்ள ஒரு கட்டிடத்தில் பதுங்கி இருந்த ஒசாமா பின்லேடனை கடந்த ஆண்டு மே மாதம் அமெரிக்க வீரர்கள் சுட்டுக் கொன்றனர்.
அந்த கட்டிடத்தில் ஒசாமா தங்கியிருந்தது பாகிஸ்தான் இராணுவம், உளவு நிறுவனம் ஐஎஸ்ஐக்கே தெரியாது என்று கூறப்பட்டது. ஆனால் அமெரிக்காவுக்கு எப்படி தகவல் கிடைத்தது என்பது மர்மமாகவே இருந்தது. இந்நிலையில் பாகிஸ்தான் வைத்தியர் ஒருவரின் உதவியால் ஒசாமா இருப்பிடத்தை அமெரிக்கா கண்டுபிடித்தது சமீபத்தில் தெரியவந்துள்ளது.
பாகிஸ்தானில் அமெரிக்க உளவு நிறுவனம் சிஐஏவின் ஆட்கள் ஒசாமாவின் இருப்பிடத்தை தேடி வந்துள்ளனர். அப்போது வைத்தியர் ஷகீல் அப்ரிடி என்பவர் அவர்களுக்கு உதவி செய்து வந்துள்ளார்.
அபோதாபாத்தில் ஒசாமா பதுங்கி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்த போது, அந்த பகுதியில் தடுப்பூசி போடுவது போலவும், ரத்த மாதிரிகள் சேகரிப்பது போலவும் ஷகீல் ஒரு திட்டத்தை தீட்டியுள்ளார். அதன்படி 2 மருத்துவதாதிகளை ரத்தம் சேகரிக்கும் பணியில் ஈடுபடுத்தினார்.அவர்கள் தெரு தெருவாக சென்று எல்லோருடைய ரத்தத்தையும் சேகரித்துள்ளனர். அப்போது பின்லேடன் தங்கியிருந்த வீட்டிலும் ரத்தம் சேகரிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் தி கார்டியன் பத்திரிகை கடந்த ஆண்டு ஜூலையில் முதன்முதலில் வெளியிட்டது. அதை அப்போது சிஐஏ செய்தித் தொடர்பாளர் ஜெனிபர் திட்டவட்டமாக மறுத்தார். ஆனால் பத்திரிகையில் வந்த செய்தி உண்மைதான் என்பது இப்போது உறுதியாகி உள்ளது.பின்லேடனின் சகோதரி 2010ம் ஆண்டு பாஸ்டன் நகரில் காலமானார். அப்போது அவருடைய டிஎன்ஏவை அமெரிக்க அதிகாரிகள் சேகரித்து வைத்தனர். அபோதாபாத்தில் உள்ளவர்களின் ரத்தத்தை அந்த டிஎன்ஏவுடன் ஒவ்வொன்றாக ஒப்பிட்டு பார்த்த பிறகே, பின்லேடன் பதுங்கியிருக்கும் வீட்டை அமெரிக்கா உறுதி செய்துள்ளது.
பின்லேடன் கொல்லப்பட்ட பிறகு அந்த பகுதியில் பாகிஸ்தான் இராணுவத்தினர் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது பொதுமக்கள் கூறுகையில், 2010ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மருத்துவதாதிகள் போல 2 பெண்கள் வந்தனர். அவர்களுடன் ஒரு ஆண் வந்தார். அவர் வீட்டுக்கு வெளியில் நின்று கொண்டார்.மருத்துவதாதிகள் மட்டும் வீட்டுக்குள் வந்து ஹெபடிடிஸ் பி நோய் வராமல் இருக்க இலவச தடுப்பூசி போட்டனர். பாகிஸ்தான் சுகாதார துறையில் இருந்து வருவதாக சொன்னார்கள். வீட்டில் உள்ளவர்களின் விவரங்களை தெரிவித்தால்தான் தடுப்பூசி போட முடியும் என்றனர். எங்கள் ரத்தத்தை சேகரித்து சென்றனர் என்று தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் வைத்தியர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பின்லேடன் பதுங்கியுள்ள தகவலை பாகிஸ்தான் அரசுக்கு தெரிவிக்காமல், அமெரிக்காவுக்கு தெரிவித்த குற்றத்துக்காக அவர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்ய கமிஷன் பரிந்துரைத்தது. அதற்கு அமெரிக்க இராணுவ அமைச்சர் லியோன் பனெட்டா கண்டனம் தெரிவித்துள்ளார்.லியோன் பனெட்டா கூறுகையில், அவர் எங்களுக்கு சில தகவல்கள் தான் கொடுத்தார். அதற்கும் தேச துரோகத்துக்கும் சம்பந்தம் இல்லை. தனி மனிதரை பிடித்து சிறையில் அடைப்பது சரியல்ல. தீவிரவாத ஒழிப்பில் அமெரிக்காவுடன் இணைந்து பாகிஸ்தான் செயல்படுவது உண்மையானால் வைத்தியரை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதுகுறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கிரீஸ் நாட்டை சிக்கலிலிருந்து மீட்க வேண்டும்: மார்க்கெல்.
கிரீஸ் நாட்டின் நிதிநிலைக் கட்டுப்பாடுகளை கடுமையாக பின்பற்ற வேண்டும் என்று கூறியவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஜேர்மனியின் பிரதமர் ஏஞ்சலா மார்க்கெல் இறங்கியுள்ளார்.
மார்க்கெல் கூறுகையில், கீரிஸ் தனது பணிகளைச் செம்மையாக நடத்த ஐரோப்பா உதவும் வழிகளைப் பற்றியே நாம் விவாதிக்க வேண்டும். முரண்பாடுகளைப் பற்றி பேசியே நேரத்தை வீணாக்காமல் வெற்றி பெறும் வழிகளை குறித்து ஆராய்ந்தறிய வேண்டும் என்றார்.ஐரோப்பியக் கூட்டமைப்பினரின்(EU) கண்காணிப்பு கிரீசுக்கு அவசியம் என்பதை ஜேர்மனியின் பொருளாதாரத் துறை அமைச்சரும், துணைப்பிரதமருமான ஃபிலிப் ரோஸ்லெரும் உணர்த்தினர்.
இவர்கள் கூறுகையில், கிரீஸைக் கண்காணிக்கவும், பொருளாதாரக் கட்டுப்பாடுகளை கிரீஸ் தீவிரமாகப் பின்பற்றும்படி அதனை வழிநடத்தவும் நமக்கு நல்ல தலைவர்கள் அதிகமாகத் தேவைப்படுகின்றனர்.ஒருவேளை கிரீஸ் அரசு இதனைச் செய்யத் தவறினால், கிரீசுக்கு வெளியிலிருந்து அதனை அப்பணிகளில் ஈடுபடுமாறு தூண்டவும், வழிநடத்தவும் சிறந்த தலைவர்களும் கண்காணிப்பாளரும் ஐரோப்பிய கூட்டமைப்பினர் மூலமாக நியமிக்கப்பட வேண்டும்.
அப்போது தான் கிரீஸ் தனது பொருளாதாரச் சிக்கலிலிருந்து விடுபடும். அதனைத் தொடர்ந்து மற்ற நாடுகளும் விடுபட இயலும் என்றனர்.ஜேர்மனி பொறுமையாக இருந்து பிணைய நிதியைத் திரட்டுகிறது. காலம் விரைந்து கொண்டிருப்பதால், கிரீஸ் தான் என்ன செய்யப்போகிறது என்பதைத் தெளிவாக மற்ற நாடுகளுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். உடனடி நடவடிக்கையில் கிரீஸ் இறங்கினால் மட்டுமே ஐரோப்பிய ஒன்றியம் நிதி நெருக்கடியிலிருந்து மீளும்.
சிரியா மீது ஐ.நா நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரான்ஸ்.
சிரியா இராணுவம் போராட்டக்காரர்கள் மீது நடத்தும் வன்முறைத் தாக்குதல்கள் குறித்து ஐ.நா பாதுகாப்புகுழு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரான்ஸ் கேட்டுக் கொண்டுள்ளது.அரபுக் கூட்டமைப்புகள் எடுக்கும் முயற்சிகள் அனைத்துக்கும் பிரான்ஸ் ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாக வெளிவிவகாரத்துறை அமைச்சரின் செய்தித் தொடர்பாளர் பெர்னார்டு வலேரோ தெரிவித்தார்.கடந்த டிசம்பர் மாதம் முதல் சிரியாவில் இருந்த பிரதிநிதிகள் குழுவை அரபுக் கூட்டமைப்பு திரும்ப பெற முடிவு செய்துள்ளது.
அரபுக் கூட்டமைப்பின் தலைவரான நபில் அல் அராபி மொரோக்கோ நகரத்தில் பாதுகாப்புக் குழுவிடம் தாங்கள் சமர்ப்பித்த தீர்வறிக்கையை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.இந்த அறிக்கை தெரிவிக்கின்ற புதிய திட்டங்களை அங்கீகரித்து ஐ.நா பாதுகாப்புக்குழு ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும், அத்தீர்மானத்தை சீனாவும், ரஷ்யாவும் ஆதரிக்க வேண்டும் என்றார்.
இந்தப் புதிய திட்டத்தின்படி ஜனாதிபதி அசாத் தன்னுடைய பொறுப்பை பேச்சுவார்த்தை எதுவுமின்றி அவரது துணைத்தலைவருக்கு மாற்றித்தர வேண்டும். இத்தீர்வை ஆரம்பத்தில் அசாத் ஏற்றுக் கொள்ளவில்லை.இதற்கிடையே ரஷ்யா அரபுக்கூட்டமைப்புக் குழுவினரின் தீர்வறிக்கையை ஏற்க மறுத்துவிட்டது. அதற்குப் பதிலாக சிரியாவில் நடந்த வன்முறைகளுக்கு அசாத் அரசு மட்டும் காரணமல்ல போராட்டக்காரர்களும் காரணம் தான் என்று ரஷ்யா கூறுகிறது.
பாகிஸ்தானில் ஆளில்லா விமானத் தாக்குதலை நிகழ்த்தியது அமெரிக்கா தான்: ஒபாமா.
பாகிஸ்தானில் ஆளில்லா விமானங்களை கொண்டு தாக்குதல் நடத்தியது அமெரிக்கா தான் என்று முதன் முறையாக ஒபாமா ஒப்புக் கொண்டுள்ளார்.அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கூறுகையில், பாகிஸ்தானில் மலைவாழ் மக்கள் குடியிருக்கும் பகுதிகளில் தீவிரவாதிகள் அதிகமாக இருந்ததால் ஆளில்லாத விமானங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியது தாம் தான் என்றும், இது அமெரிக்காவின் சாதுரியம் என்றும் தெரிவித்துள்ளார்.
கூகுள் சமூக இணையத்தளத்தில் தோன்றிய ஒபாமா ஒரு மணிநேரம் நேயர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். இதில் 1,300,000 கேள்விகளை நேயர்கள் அனுப்பியிருந்தனர்.அவற்றில் தேவையானவற்றை மட்டும் கூகுள் பணியாளர் தேர்ந்தெடுத்து ஆறு பேர் மூலமாக அந்தக் கேள்விகள் ஒபாமாவிடம் கேட்கப்பட்டு நேயர்களுக்கு பதில்கள் அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும் இவர் பேட்டியளித்த வேளையில் துணை ஜனாதிபதியான ஜோ பிடெனும்(Joe Biden)மற்ற அலுவலக அதிகாரிகளும் ட்விட்டரில் இவரோடு இணைந்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.மறைந்திருந்து தாக்கும் இந்த போர் குறித்து பெரும் அதிருப்தி உருவாகியுள்ள நிலையில், ஒபாமா துணிந்து அந்த தாக்குதல்களை மக்கள் முன்னிலையில் நியாயப்படுத்தியுள்ளார். இது போன்ற தாக்குதல்கள் FATA எனப்படும்.
மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் உள்ள மலைவாழ் மக்களின் பகுதிகளில் நடைபெற்ற இந்த தாக்குதல் ஆப்கானிஸ்தான்- பாகிஸ்தான் எல்லையில் வாழும் அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு எதிராக நடத்தப்பட்டது என்று கூறினார்.மேலும் சி.ஜ.ஏ என்ற அமெரிக்க உளவு நிறுவனமே இத்தாக்குதல்களை அல்கொய்தா மற்றும் தலிபான் மீது நடத்தி வருகின்றது என்றும் கூறினார். கடந்த 2010ம் ஆண்டில் 101 தாக்குதல்களும், 2011ம் ஆண்டில் 64 தாக்குதல்களும் நடைபெற்றதாக AFP செய்தி நிறுவனம் தெரிவிக்கின்றது.இத்தாக்குதல்களில் அப்பாவி பொதுமக்கள் பலர் உயிரிழந்தும், காயமடைந்துமிருப்பதால் பாகிஸ்தானியர்கள் அமெரிக்கா மீது கோபத்துடன் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இராணுவத்தின் பிடியில் சிரியாவின் முக்கிய நகரம்.
சிரியாவில் ஜனாதிபதிக்கு எதிரான போராட்டம் வலுத்து வரும் நிலையில், இராணுவம் சிரியாவின் முக்கிய நகரான ஸ்கூபாவை கைப்பற்றியுள்ளது.சிரியாவில் ஜனாதிபதி அசாத்தின் ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பெரும்பாலும் போராட்டக்காரர்கள் சிரியாவின் முக்கிய நகரை கைப்பற்றி உள்ளனர்.
ஆனால் தற்பொழுது சிரியாவின் இராணுவம் போரிட்டு தலைநகர் டமாஸ்கசின் அருகே உள்ள இடங்களை கைப்பற்றி வருகிறது. முக்கிய நகரமான ஸ்கூபாவை கைப்பற்றுவதற்காக இராணுவம் அனுப்பப்பட்டது.இவர்களுடன் 50 டாங்கிகள், 2 ஆயிரம் வீரர்கள் சென்றனர். இவர்களுக்கும் புரட்சி படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் ஸ்கூபா நகரை இராணுவம் மீட்டது.இந்த சண்டையில் 19 பேர் இறந்துள்ளதாக அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. சிரியாவின் கலவரத்தில் இதுவரை 5400 பேர் பலியாகி இருப்பதாக ஐ.நா சபை தகவல் வெளியிட்டுள்ளது.
பிரிட்டனை நடுங்க வைக்கும் உறைபனியும், கடுங்குளிரும்.
இந்த ஆண்டு பிரிட்டனில் உறை பனியும், கடுங்குளிரும் அதிகமாக இருக்கும் என்றும், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் வானிலை ஆய்வகம் எச்சரித்துள்ளது.
கடுமையான குளிர் நிலவும் என்பதால் பலரது அன்றாடப் பணிகள் பாதிக்கக்கூடும். எனவே பயணத்தின் போது மிகுந்த எச்சரிக்கை தேவை என்றும், அதிகாலை பொழுதில் பனி அதிகமாக இறங்கும் என்பதால் கவனமாக வண்டி ஓட்ட வேண்டும் என்றும் வானிலை அலுவலகம் அறிவித்துள்ளது.நாட்டின் பல பகுதிகளில் வெப்பம் உறைநிலையை விடக் குறைந்திருக்கும். குளிர் காரணமாக ஐரோப்பா முழுக்க இதுவரை 36 பேர் உயிரிழந்துள்ளனர். கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் -26 டிகிரி செண்டிகிரேடாக வெப்பநிலை அறியப்பட்டது.
இதனால் பள்ளிகளை மூடிவிட்டனர், ஆங்காங்கே வெப்பமாக இருக்ககூடிய தங்குமிடங்களைக் கட்டிவைத்திருக்கின்றனர். குளிர்தாங்க முடியாமல் அவதிப்படுவோர் அங்கு செல்லலாம்.வடபகுதியும், மத்திய பகுதியும் செவ்வாய்கிழமை முதல் கடுங்குளிரிலிருந்து விடுபடும். புதன், வியாழக்கிழமைகளில் மத்திய இங்கிலாந்தின் கிராமப்பகுதிகளை மிக மோசமான குளிர் தாக்கக்கூடும். அப்போது வெப்பநிலை -10 டிகிரி செண்டிகிரேட்டாக இருக்கும்.
ஸ்காண்டிநேவியப் பகுதியிலும், மேற்கு ரஷ்யாவிலும் உயர் அழுத்தம் தாக்குவதால், உறை பனி அதிகமாகிறது. இந்த காற்று பிரிட்டனை நோக்கி நகர்த்துகிறது. எனவே பிரிட்டனை உறைபனியும், கடுங்குளிலும் தாக்குகிறது.வெள்ளிக்கிழமை காலை வரை இந்தக் கடுங்குளிர் தாக்குதல் தொடரும். சனிக்கிழமைக்கு பிறகு இக்குளிர் குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லிபியாவின் முன்னேற்றத்துக்கு உதவ தயார்: கனடா அறிவிப்பு.
லிபியாவின் முன்னாள் ஜனாதிபதி கடாபி இறந்த பின் லிபியாவில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ளது. இந்த அரசு எடுக்கும் புதிய நடைமுறைகளுக்கு அனைத்து விதமான உதவிகளை செய்ய தயாராக உள்ளதாக கனடா அறிவித்துள்ளது.
உரோம் நகரத்தில் நடந்த மூன்று நாள் கூட்டத்தில் 15 தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் கனடா, ஒட்டாவாவின் தொழில் தலைவர்கள் கலந்துகொண்டனர்.இதில் இவர்கள் லிபியாவுக்கு உதவ முன்வந்திருப்பதாக தொழில்துறை அமைச்சர் எட் பாஸ்ட் தெரிவித்தார்.
மேலும் கூறுகையில், இந்தக் கூட்டத்தில் மம்மர் கடாஃபி கொல்லப்பட்டப் பிறகும் அரசாங்கத்திடம் அல்லது காவல்துறையிடம் பிடிபட்ட அவரது ஆதாரவாளர்கள் மனிதநேயம் சிறிதுமின்றி சித்திரவதைகளுக்கும், படுகொலைகளுக்கும் மற்றும் உடல்ரீதியான பல்வேறு கொடுமைகளுக்கும் ஆளாகின்றனர் என்றும், இது குறித்து நடவடிக்கை எடுக்கும் படி லிபியாவின் அமைச்சர்களிடம் எடுத்துக் கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.லிபியாவில் ஜனநாயகம் தழைக்க எல்லா உதவிகளையும் சேவைகளையும் நடைமுறைகளையும் சர்வதேச தரத்தை எவ்வாறு அடைவது என்றும், சர்வதேச சமூகத்தோடு இணையவும் கனடா இவர்களுக்கு அனைத்து விதமான உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதன் மூலமாக இவர்கள் மனித உரிமைகளை மதிக்க கற்றுக்கொள்வார்கள் என்றும் உறுதிபடக் கூறினார். உரோம் நகரில் நடந்த கூட்டத்திற்கு அமைச்சர் எட் ஃபாஸ்டுடன் வந்து கலந்துகொண்ட கனடாவின் நிறுவனங்களில் ஒன்றான டொமினியன் வோட்டிங்(Dominion Voting), லிபியா முழுக்க தேர்தல்களை நடத்துவதற்கு தாம் முழு உதவிகளையும் செய்யத் தயாராக உள்ளோம் என்று தெரிவித்தது.கனடா நிறுவனங்கள் சில லிபியாவின் உள்கட்டமைப்பு, போக்குவரத்து, தகவல்தொடர்பு, தொழில்நுட்பம், எண்ணெய் மற்றும் எரிவாயு போன்ற மறுகட்டமைப்புக்கான வாய்ப்புக்கைளை எதிர்பார்த்து இருக்கின்றன.
இன்னும் பல நிறுவனங்கள் லிபியாவுக்கு திரும்பாத போதிலும், புதிய அரசு பழைய தொழில் ஒப்பந்தங்களில் செயல்படும் என்று உறுதிப்படக் கூறியுள்ளது. உள்ளூர் போரின் போது லிபியாவின் தொழில் நிறுவனங்களைத் கனடா தொடங்கி நடத்த தயாராக உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.2008ம் ஆண்டை விட 2010ம் ஆண்டில் கனடா 250 மில்லியன் டொலருக்கு லிபியாவுக்கு ஏற்றுமதி செய்தது குறிப்பிடத்தக்கது. இவற்றின் பெரும் பகுதி விமானத்தடவாளம், தானியம், இயந்திரம், அறிவியல் கருவிகள் மற்றும் வாகனங்கள் உள்ளடங்கும்.
ஊழல் குற்றச்சாட்டு: ருமேனியாவின் முன்னாள் பிரதமருக்கு சிறைத்தண்டனை.
ஊழல் குற்றச்சாட்டின் பேரில் ருமேனியாவின் முன்னாள் பிரதமர் அட்ரியன் நடசாவுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.ருமேனியா நாட்டின் முன்னாள் பிரதமர் அட்ரியன் நடசா(வயது 61). இவர் கடந்த 2000ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டு வரையில் ருமேனியாவின் பிரதமராக பதவி வகித்தார்.
இவர் மீது பல்வேறு லஞ்ச, ஊழல் புகார்கள் சுமத்தப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. அதில் 2 வழக்குகளில் இருந்து கடந்தாண்டு டிசம்பர் மாதம் விடுதலை செய்யப்பட்டார்.இந்நிலையில் அவர் மீது 2004ம் ஆண்டில் பட்ஜெட்டுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து ரூ.10 கோடியை முறைகேடாக ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்தியதாக மற்றொரு வழக்கு தொடரப்பட்டு இருந்தது.இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் முன்னாள் பிரதமர் நடசாவுக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
சிரியாவின் மீதான தீர்மானம் உள்நாட்டு போரை உருவாக்கும்: ரஷ்யா எச்சரிக்கை.
மேற்குலக நாடுகளின் ஆதரவுடன் சிரியாவுக்கு எதிராக ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் நிறைவேற்ற உள்ள தீர்மானம் உள்நாட்டு போரை உருவாக்கும் என ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.அந்த தீர்மானத்தில் சிரியாவின் ஜனாதிபதி அசாத் தன்னுடைய ஆட்சிப் பொறுப்பை துணைப் பொறுப்பாளர் ஒருவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இது வெளிநாட்டு தலையீடு இருப்பதற்கான வாய்ப்பையே காட்டுகின்றது என ரஷ்யாவின் துணை வெளிவிவகாரத்துறை அமைச்சர் கென்னடி கட்டிலோவ் தெரிவித்தார்.சிரியாவில் நடந்து வரும் வன்முறைகளையும் மனித உரிமை மீறல்களையும் கண்டித்துள்ள அரபு லீக், அந்நாட்டுக்கு எதிராக மேலும் தடை நடவடிக்கைகளை அறிவிப்பது பற்றி எச்சரித்துள்ள நிலையில், அதன் அடிப்படையில் இந்த தீர்மானம் கொண்டுவரப்படுகிறது.
சிரியாவின் நெருங்கிய கூட்டாளி நாடுகளில் ஒன்றான ரஷ்யா, இந்தத் தீர்மானத்துக்கு எதிராக வீட்டோ மறுப்பாணை அதிகாரத்தை பிரயோகிக்காது வாக்களிப்பின் போது ஒதுங்கி நிற்கும் என்றும் மேற்குலகம் எதிர்பார்க்கிறது.இதற்கிடையே டமாஸ்கஸை ஒட்டிய பகுதிகளில் போராட்டக்காரர்களின் ஆதிக்கத்தை முறியடித்துவிட்டதாக சிரிய நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. ஆனால் தாங்கள் தந்திரமாக பின்வாங்கியிருப்பதாக போராட்டக்காரர்கள் கூறுகின்றனர்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF