Thursday, January 12, 2012

பிரபஞ்சத்தில் நம் கண்களால் பார்க்கமுடியாத இருண்டபொருள்!


யுனிவர்ஸ் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் பிரபஞ்சம் அல்லது பேரண்டத்தில் பெரும்பகுதியாக இருப்பது டார்க் மேட்டர் என்கிற விவரிக்கமுடியாத இருண்ட பொருள். நம் கண்களால் சாதாரணமாக பார்க்கமுடியாத இந்த இருண்டபொருள் குறித்து அறிவியல் உலகில் நீண்டநாட்களாகவே அறியப்பட்டிருந்தாலும், பேரண்டத்தில் இந்த விவரிக்க முடியாத இருண்ட பொருள் எவ்வளவு தூரம் பரவியிருக்கிறது, பேரண்டத்தின் எந்தெந்த பகுதிகளில் இந்த இருண்டபொருள் காணப்படுகிறது என்பது குறித்த வரைபடம் எதுவும் இதுவரை தயாரிக்கப்படவில்லை.

அப்படியானதொரு வரைபடம் தயாரிப்பதில் வானியல் விஞ்ஞானிகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டிருப்பதாக சமீபத்தில் அறிவித்திருக்கிறார்கள்.அமெரிக்க வானியல் ஆய்வு மையத்தின் ஆய்வாளர்கள் இத்தகைய வரைபடம் ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள். இது விவரிக்கமுடியாத இருண்ட பொருள் குறித்த முழுமையான வரைபடம் இல்லை என்றாலும், விவரிக்க முடியாத இருண்ட பொருள் குறித்து இதுவரை தொகுக்கப்பட்ட வரைபடங்களிலேயே இது தான் பெரிய வரைபடமாக பார்க்கப்படுகிறது.

ஹவாயில் இருக்கும் பிரத்தியேக வான் தொலை நோக்கியை பயன்படுத்தி இந்த வரைபடத்தை இவர்கள் தயாரித்திருக்கிறார்கள். இதன்மூலம் நட்சத்திரங்கள் மற்றும் விண்வெளியில் இந்த இருண்ட பொருள் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்களை சாதாரண மனிதர்களும் பார்க்க படிக்க முடியும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.இந்த இருண்டபொருள் கண்ணுக்கு தெரியாது என்பதால், இதற்காக வடிவமைக்கப்பட்ட சிறப்பு புகைப்பட லென்சை பயன்படுத்தி இந்த வரைபடத்திற்கு தேவையான புகைப்படங்களை இவர்கள் எடுத்தார்கள்.பிரபஞ்சத்தில் இருக்கும் ஒவ்வொரு பொருளும், தனது எடைக்கு ஏற்ப, தன்னைச்சுற்றியுள்ள இடத்தையும் நேரத்தையும் வளையச்செய்யும் அல்லது மாற்றியமைக்கும் என்பது அடிப்படை விதி. இந்த விதியின் அடிப்படையில் பார்த்தால், விவரிக்க முடியாத இருண்டபொருளானது, தன்னைக்கடந்து செல்லும் ஒளிக்கீற்றுக்களை வளைந்து செல்லும்படி செய்கிறது. 

பூமிக்கு வந்து சேரும் ஒளிக்கீற்றுக்களின் பாதையை வைத்துப்பார்க்கும் போது பிரபஞ்சத்தின் எந்த பகுதியில் இந்த இருண்ட பொருள் இருக்கிறது என்பதை அடையாளம் காண முடியும். அப்படித்தான் இந்த விஞ்ஞானிகள் பேரண்டத்தின் எந்தெந்த பகுதிகளில் இந்த விவரிக்கமுடியாத இருண்ட பொருள் இருக்கிறது என்பதை அடையாளம் கண்டு வரைபடம் தயாரித்திருக்கிறார்கள்.இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் பிரபஞ்சத்தின் மிகச்சிறியதொரு பகுதியைத்தான் இவர்கள் அடையாளம் கண்டிருக்கிறார்கள். அதாவது நூறுகோடி ஆண்டுகள் ஒளி பயணிக்கக்கூடிய தூரத்தில் இருக்கும் வானத்தில் இருக்கும் இருண்டபொருளைத்தான் இவர்கள் தற்போது அடையாளம் கண்டிருக்கிறார்கள். 

அறுநூறு கோடி ஆண்டுகள் ஒளி பயணிக்கக்கூடிய தூரத்தில் இருக்கும் நட்சத்திரங்கள் வெளிப்படுத்திய ஒளியைத்தான் இந்த ஆய்வாளர்கள் தற்போது ஆய்வு செய்தார்கள்.இவர்கள் பார்த்த இந்த குறிப்பிட்ட பேரண்டத்தின் ஒரு பகுதியில், கேலக்ஸிஸ் எனப்படும் அண்டங்களை சுற்றி இந்த விவரிக்கமுடியாத இருண்ட பொருளானது சங்கிலித்தொடராக காணப்படுவதாகவும், பிறகு திடீரென ஒன்றுமே இல்லாத சூனியப்பிரதேசத்தில் இது சென்று முடிவதாகவும் இவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

பேரண்டத்தின் இருண்ட பொருள்!

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF