Thursday, January 19, 2012

NEWS OF THE DAY.

எப்போதும் இலங்கையின் பக்கமே இந்தியா: அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்.
இலங்கையில் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு காலக்கேடு விதிப்பது கடினமான விடயம் என வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இந்திய வெளிவிவகார அமைச்சருடன் இணைந்து நடத்திய செய்தியாளர் சந்திப்பில் பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இனப் பிரச்சினைத் தீர்வு தொடர்பாக நாம் சகல தரப்பினருடனும் மனம் விட்டு பேச வேண்டும். அந்தப் பேச்சுக்களின் போது தெரிவிக்கப்படும் கருத்துக்களை அடிப்படையாக வைத்து, நாம் சில யோசனைகளை முன்வைத்து, கலந்துரையாடுவதன் மூலம் நிரந்தரத் தீர்வொன்றை ஏற்படுத்துவதற்கு உதவ முடியும் என்பதில் நாம் அசையாத நம்பிக்கை வைத்திருக்கிறோம்.
நாடாளுமன்றத் தெரிவுக்குழுவே இனப்பிரச்சினைக்கு தீர்க்கமான முடிவை காணக்கூடிய ஒரு சிறந்த மேடையாக விளங்குகிறது. எனவே, தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த வாய்ப்பை நழுவ விடாமல் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு தங்கள் பிரதிநிதிகளின் பெயரை முன்மொழிய வேண்டும் என வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.இதன்மூலமே நீண்டகாலமாகத் தொடர்ந்து கொண்டிருக்கும் இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை காணமுடியும்.
மேலும், இலங்கையின் நெருக்கமான நட்பு நாடு இந்தியா. கடந்த காலத்தில் எத்தனையோ சந்தர்ப்பங்களில் இந்தியா எங்களுக்கு உதவி செய்திருக்கிறது. அதனால் எப்போதும் இலங்கையின் பக்கமே இந்தியா நிற்கும். இந்த நட்புறவு எதிர்காலத்திலும் நீடிக்கும் என்று நாம் அசையாத நம்பிக்கை கொண்டிருக்கிறோம்.இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்துவதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஸ்ணாவின் இந்தப் பயணம் அமையும் என்று வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
சீன தொல்பொருள் ஆய்வாளர்களின் கோரிக்கையை இலங்கை நிராகரிப்பு.
சீன தொல்பொருள் விஞ்ஞான கல்லூரியினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை  இலங்கை தொல்பொருள் ஆய்வு மையம் நிராகரித்துள்ளது.இலங்கையை அண்டிய கடற்பிரதேசங்களில் அகழ்வாராய்ச்சி நடத்துவது தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடுகளை அடுத்து,இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தொல்பொருள் ஆய்வாளர் நாயகம் டொக்டர் செனரத் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் இலங்கையின் பல கடற்பகுதிகளில் அகழ்வாராய்ச்சியில் ஈடுபடுவது குறித்து சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருந்தது.எனினும், ஒப்பந்தத்தின் சில சரத்துக்கள் தொடர்பில் இலங்கை அதிருப்தி வெளியிட்டுள்ளது. குறிப்பாக அகழ்வாராயச்சியில் கிடைக்கப் பெறும் பொருட்களில் ஒரு பகுதியை எடுத்துச் செல்லல் மற்றும் அகழ்வாராய்ச்சிக்காக இலங்கைக் கடற்படை கப்பல்களை பயன்படுத்தல் போன்ற நிபந்தனைகளுக்கு இலங்கை எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
இதே நேரம் பண்டைய காலத்தில் மூழ்கிய சீனக் கப்பல்கள் குறித்து ஆராயும் நோக்கில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. ஆனால்,சீன தொல்பொருள் விஞ்ஞான கல்லூரியின் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என தொல்பொருள் ஆய்வாளர் நாயகம் டொக்டர் செனரத் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் தனது செலவுகளை ஈடு செய்ய மக்கள் மீது வரிச் சுமையை திணித்துள்ளது: ஐ.தே.க.
அரசாங்கம் அத்தியாவசிய பண்டங்கள் சிலவற்றுக்கான இறக்குமதி தீர்வையை அவசரமாக அதிகரித்து, மக்கள் மீது வரிச் சுமையை திணித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.அரசாங்கத்தின் செலவுகளை ஈடு செய்யும் நோக்கில் சாதாரண மக்களின் மீது வரிச் சுமை திணிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
பெருந்தொகையான அமைச்சர்கள் மற்றும் ஆலோசகர்களை பராமரிக்கும் காரணத்தினால் அரசாங்கம் பெரும் செலவுகளை எதிர்நோக்கி வருகின்றது.இந்த செலவுகளை ஈடு செய்ய அத்தியாவசிய பொருட்களின் விலைகளை உயர்த்துவது முறையல்ல என திஸ்ஸ அத்தநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
அரசாங்கத்தின் முடிவை அனைவரும் பாராட்ட வேண்டும்- பிரபா கணேசன் எம்.பி..
இந்திய வெளிவிவாகர அமைச்சரிடம் 13வது திருத்தத்திற்கு அப்பால் தீர்வு காண்பதற்கு அரசாங்கம் தயார் என்று ஜனாதிபதி உறுதியளித்திருப்பதை கட்சி பேதமின்றி அனைத்து தமிழ் கட்சி தலைவர்களும் பாராட்ட வேண்டும் என கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.
பிரபா கணேசன் தனது ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் குறிப்பிடுகையில்,ஒரு வருட காலமாக அரசாங்கத்திற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்குமிடையில் ஏற்பட்டு வந்த பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. அதே நேரம் 13வது திருத்த சட்டத்திற்கமைய அரசியலமைப்பிலுள்ள காணி பொலிஸ் அதிகாரங்களை வழங்க முடியாதென அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்திருந்தது.
ஆனால் இந்திய வெளிவிவகார அமைச்சரின் வருகைக்குப்பின் நிலைமை அடியோடு மாறி 13வது திருத்த சட்டத்திற்கு அப்பால் தீர்வுக்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார்.இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தமிழ் கூட்டமைப்பு உட்பட இலங்கையிலுள்ள அனைத்து தமிழ் கட்சி தலைவர்களும், புலம்பெயர்ந்தவர்களும்,புத்திஜீவிகளும் தமிழ் அமைப்புகளும் ஒருமித்த குரலாக ஜனாதிபதிக்கு பாராட்டு தெரிவிக்க வேண்டும். முடியுமானால் பட்டாசுகளை கொழுத்தி தமது சந்தோஷத்தை தமிழ் மக்கள் வெளிப்படுத்த வேண்டும்.
இப்படியான செயல்பாடுகள் மூலம் தான் அரசாங்கம் தனது வாக்குறுதியிலிருந்து மீள முடியாத நிலைக்கு தள்ளப்படும். இதுவே சாணக்கியமும் விவேகமும் கொண்ட செயல்பாடாகும். அனைத்து தரப்பிலும் அரசாங்கத்தின் இந்த வாக்குறுதிக்கு வரவேற்பு அதிகரிக்கும் பொழுது ஒரு போதும் அரசாங்கம் இவ்வாக்குறுதியிலிருந்து மீளமுடியாமல் கட்டுண்டிருக்கும் நிலைமைக்கு தள்ளப்படும்.வெறுமனே இத்தருணத்தில் அரசாங்கத்தை நம்ப முடியாது என்று அறிக்கைகள் விடுவதன் மூலம் வாக்குறுதியிலிருந்து அரசாங்கம் தப்பிவிடுவதற்கு சந்தர்ப்பத்தை நாமே வழிவகுப்பதாக அமைந்துவிடும். இத்தருணத்தை பற்றிப்பிடித்து எமது தீர்வை பெற வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.
இச்சந்தர்ப்பத்தில் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உடனடியாக பங்குபற்றுமுகமாக உறுப்பினர்களை நியமிக்க வேண்டும். காலந்தாழ்த்தும் பொழுது அது அரசாங்கம் தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வதற்கு ஏதுவாக அமைந்து விடும்.பாராளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கம் வகிப்பதன் மூலம் உடனடியாக நடைமுறைப்படுத்தக்கூடிய தீர்வுகளை வலியுறுத்துவதற்கும் கூட்டமைப்பினருக்கு சந்தர்ப்பம் கிடைக்கும். என பிரபா கணேசன் குறிப்பிட்டுள்ளார்.
16 நாட்களில் பல ஆயிரம் அமெரிக்க டொலர்களை சம்பாதித்த இலங்கை சுற்றுலாத்​துறை.
இந்த வருடத்தில் இதுவரை இலங்கை சுற்றுலாத்துறைக்கு 393,865 அமெரிக்க டொலர்கள் வருமானம் கிடைத்துள்ளதாக பொருளாதார வளர்ச்சி துணை அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.ஜனவரி முதலாம் திகதியிலிருந்து நேற்றுவரையான 16 நாட்களில் 60,989 சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாகவும், இவர்களுள் 21,000 சுற்றுலாப்பயணிகள் இலங்கை அரசினால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்லைன் விசா எனப்படும் மின்னணு சுற்றுலா அங்கீகாரத்தின் (ETA) மூலம் நாட்டிற்குள் நுளைந்துள்ளனர் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்த வருடமுடிவில் 1 மில்லியன் சுற்றுலாப்பயணிகளை எதிர்பார்ப்பதாகவும் இதன் மூலம் ஏறத்தாழ 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை சுற்றுலாத்துறை வருமானமாக பெறமுடியும் என்று கூறிய அவர் கடந்த வருடத்தில் 855,975 சுற்றுலாப்பயணிகள் மூலம் 800 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானமாக கிடைத்ததையும் சுட்டிக்காட்டினார்.
அரசாங்கத்தை கவிழ்க்கும் திட்டம் பற்றி சந்திரிக்கா என்னிடம் கூறினார்!- புத்திக்க.
அரசாங்கத்தை கவிழ்க்கும் திட்டம் பற்றி முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தம்மிடம் கூறினார் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரண தெரிவித்துள்ளார்.ஒழுங்கான ஒரு தலைவர் இருந்தால் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் திட்டத்தை குறிப்பிடுவதாக சந்திரிக்கா தம்மிடம் மெய்யாகவே தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களில் வெளியான செய்திகள் உண்மையானவை. டுபாய் விமான நிலையத்தில் சந்திரிக்கா இதனைக் குறிப்பிட்டார் என புத்திக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சரியான பழக்கமில்லாத நாடாளுமன்ற உறுப்பினருடன் இணைந்து அரசாங்கத்தை கவிழ்ப்பது குறித்து பேசும் அளவிற்கு தாம் முட்டாள் கிடையாது என முன்னாள் ஜனாதிபதி
சந்திரிக்கா தெரிவித்துள்ளார்.
வலுவான ஒரு தலைவர் ஐக்கிய தேசியக் கட்சிக்கு தலைமை தாங்கினால், ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் இரகசியத்தை தாம் சொல்லித்தருவதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை.
�ஆட்சி அமைத்தல் மற்றும் இல்லாமல் செய்தல் ஆகிய கருமங்களிலிருந்து தாம் விலகிக் கொண்டுள்ளேன். 2010ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதபதித் தேர்தலின் போது ஆளும் கட்சியினரும்,எதிர்க்கட்சியினரும் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு விடுத்த கோரிக்கையை நான் முற்று முழுதாக நிராகரித்தேன்.இந்தநிலையில் வலுவான ஒர் எதிர்க்கட்சியின அவசியம் வெகுவாக எழுந்துள்ளது என்று மாத்திரமே புத்திக்க பத்திரணவிடம் குறிப்பிட்டதாக சந்திரிக்கா தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தைப்பொங்கல் விழாவானது தேசிய விழாவாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் அதி உத்தம ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் அரசாங்கத்தில் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சின் அமைச்சர் வாசுதேவ நாணாயக்கார அவர்களின் ஆலோசனையின் பேரில் 2012ம் ஆண்டு தைத்திருநாளானது தேசிய தைப்பொங்கல் உற்சவம் ...
இம்முறை நுவரெலியா மாவட்டத்தின் தலவாக்கலை நகரில் அமைந்துள்ள ஸ்ரீ கதிரேசன் கோவிலில் வெகு கோலாகலமாக நடைப்பெற்றது. இவ்விழா தமிழ் பாரம்பரிய கலாச்சார நிகழ்ச்சிகளுடன் சூரிய பகவானுக்கும் பசுக்களுக்கும் பொங்கலிட்டு தமிழ் மக்களின் தொன்மை வாய்ந்;த இந்த பொங்கல் விழா சிறப்பாக நடைப்பெற்றது.
இவ்விழாவில் நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் டி.பி.ஜி குமாரசிரி அவர்கள் நுவரெலியா பாராளுமன்ற உறுப்பினர் பி. திகாம்பரம் அவர்கள் தலவாக்கலை லிந்துல நகரசபை தலைவர் அசோக அவர்கள் மற்றும் இந்து பௌத்த கிறிஸ்தவ இஸ்லாம் மதப்பெரியவர்களின் பங்குப்பற்றுதலுடன் இவ்விழா சிறப்பாக நடைப்பெற்றது. இதில் விசேட அம்சம் யாதெனில் கடந்த வருடம் ஜேர்மன் நாட்டில் இடம்பெற்ற உலகத்தமிழர் பண்பாட்டு இயக்கத்தின் 11வது சம்மேளனத்தில் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சின் சார்பிலும் அமைச்சர் வாசுதேவ நாணாயக்கார அவர்களின் சார்பிலும் கலந்து கொண்ட அமைச்சரின் ஒருங்கிணைப்புச் செயலாளர் கலாநிதி. சிதம்பரம் மோகனிடம் உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் செயலாளர் நாயகம் தமிழ் பணிச்செம்மல் துரை கணேஷலிங்கம் அவர்களால் இலங்கையில் பொங்கல் விழாவை அரச விழாவாக அமுல்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அது இன்று உலகத்தமிழரையும் இலங்கைத் தமிழரையும் கௌரவிக்கும் வண்ணம் பிரகடனப்படுத்தப்பட்டது.
மஹேந்திர ஹரிச்சந்திர
ஊடக செயலாளர்
தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சு
பசிலை விட கோத்தா மீதே மஹிந்த மரியாதை கொண்டிருக்கிறார்: ரொபட் ஓ பிளெக்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தமது சகோதரர்களில் பசில் ராஜபக்சவை காட்டிலும் கோத்தபாய ராஜபக்சவிடமே அதிக மரியாதை கொண்டிருக்கிறார் என்று அமெரிக்க தூதரகம் வாசிங்டனில் உள்ள இராஜாங்க திணைக்களத்துக்கு தகவல் அனுப்பியுள்ளது.சோதனை சாவடிகளை மாற்றும் தீர்மானத்தைக் கூட கோத்தபாயவின் ஆலோசனை இன்றி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எடுப்பதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல்களை முன்னாள் தூதுவர் ரொபட் ஓ பிளெக் 2007 ஆம் ஆண்டு மே 15 ஆம் திகதி அமெரிக்க இராஜாங்க திணைக்களத்துக்கு அறிவித்துள்ளதாக விக்கிலீக்ஸ் குறிப்பிட்டுள்ளது.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, பாதுகாப்பு மற்றும் அரசியல் விடயங்களில் பசில் ராஜபக்சவை மற்றும் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரிடம் கலந்துரையாடுகிறார்.
எனினும், அதில் பசிலை காட்டிலும் கோத்தபாய மீதே ஜனாதிபதி மரியாதையை கொண்டிருக்கிறார் என்று ரொபட் ஓ பிளெக் குறிப்பிட்டுள்ளார்.இரண்டு சகோதரர்கள் விடயத்தில் ஜனாதிபதி கொண்டுள்ள கொள்கை தொடர்பில் ஆளும் கட்சிக்குள்ளும் அதன் தோழமை கட்சிகளுக்குள்ளும் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக ரொபட் ஓ பிளெக் தெரிவித்துள்ளதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
கொழும்பில் நபர்களை இலகுவில் இனம்காணக்கூடிய 100 கண்காணிப்பு கமெராக்கள்.
கொழும்பில் இடம்பெறும் குற்றச் செயல்களை தடுக்கவும் போக்குவரத்து விதிகளை மீறுவோரை கண்டறியவும் மேலும் 100 கண்காணிப்பு கமராக்களை பொருத்துவதற்கு பொலிஸ் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.புதிதாக பொருத்தப்படவுள்ள கமெராக்கள் மூலம் நபர்களின் முகங்களையும் வாகனங்களின் இலக்கத் தகடுகளையும் இலகுவில் இனங்காணக்கூடியதாக இருக்கும்.
இதனால் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை இனம்காண்பதற்கு இக்கமெராக்கள் பயன்படுத்தப்படும் என பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.கொழும்பு ஒல்கொட் மாவத்தையிலுள்ள பொலிஸ் கட்டிடமொன்றில் விசேட பொலிஸ் குழுவொன்று இக்கமெராக்கள் மூலம் கண்காணிப்புகளை மேற்கொள்கின்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், 2010 ஆம் ஆண்டு 28 இடங்களில் 350 மில்லியன் ரூபா செலவில் 108 கண்காணிப்பு கமெராக்கள் பொருத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.இந்நிலையில், ரெயில்வே நிலையங்கள், பேரூந்து நிலையங்கள், மற்றும் முக்கிய சந்திகள், பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் புதிய கமராக்கள் பொருத்தப்படவுள்ளதாக அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
பர்மா தேர்தலில் போட்டியிடுகிறார் ஆங் சான் சூகி.
பர்மாவின் முன்னாள் ஜனநாயகத் தலைவரான ஆங் சான் சூகி மியான்மர் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார்.வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சூகி விடுதலையான பின்பு பர்மாவில் நடந்த தேர்தல்களைப் புறக்கணித்தார். தற்பொழுது நாடாளுமன்றத்தின் 48 இடங்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் 1ம் திகதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கின்றது.
இதில் இவர் அதிகம் வளர்ச்சியடையாத கிராமங்களை உள்ளடக்கிய கவ்மு பகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இந்தப் பகுதி நர்கீஸ் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதியாகும். கடந்த 2008ஆம் ஆண்டில் தாக்கிய இந்தப் புயல் ரங்கூன் பகுதியிலும், ஐராவதி கழிமுகப் பகுதியிலும் 1,38,000 பேரின் உயிரைப் பறித்தது.ஜனவரி 13ம் திகதி அன்று பர்மாவின் பல அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். இதுவரை பர்மா மீது பொருளாதாரத் தடைகளை விதித்திருந்த ஐரோப்பா, கனடா, அமெரிக்கா போன்ற மேலைநாடுகள், குறிப்பாக அமெரிக்கா இனி தடையை விலக்கிக்கொள்ள முன்வந்துள்ளது. தனது தூதரை பர்மாவுக்கு அனுப்பவும் பர்மாவின் தூதரை தன் நாட்டில் ஏற்றுக் கொள்ளவும் தயாராக உள்ளது.
இந்தியா, சீனா, தென்கொரியா போன்ற நாடுகள் தான் பர்மாவுடன் தொழில் தொடர்பு வைத்திருந்தன. இனி பர்மாவின் ஜனநாயக வளர்ச்சிக்கு ஏற்ப மேலைநாட்டத் தலைவர்கள் பொருளாதாரச் சலுகைகளும் அரசியல் ஆதரவும் தர சம்மதித்துள்ளனர்.பர்மாவின் இராணுவ ஆட்சியைக் கடுமையாக விமர்சித்த ஆசிய நாடான பிலிப்பைன்ஸ் பர்மா மீதான தனது பொருளாதாரத் தடைகளை விலக்கிக் கொள்வதாகத் தெரிவித்தது. இரண்டு நாடுகளுமே தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ளன. பர்மா இந்தக் கூட்டமைப்பின் தலைவராக எதிர்வரும் 2014ஆம் ஆண்டு வரை இருக்கும்.
வீக்கிபீடியா இன்று ஒருநாள் வேலை நிறுத்தம்.
இணையக் களஞ்சியமான விக்கிபீடியா இன்று ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது.இணையத்தளங்களில் பதிப்புரிமை பெற்ற அறிவு சார் சொத்துக்கள் வெளியிடப்படுகின்றன. இக்கருத்துக்களை பலர் திருட்டுத் தனமாக எடுத்துப் பரப்புவதைத் தடுக்கும் வகையில் இணையத் திருட்டு நிறுத்தல் சட்டம்(எஸ்.ஓ. பி.ஏ) மற்றும் அறிவுசார் சொத்து திருட்டு தடுப்புச் சட்டம் 2011(ப்ரொடக்ட் ஐபி) இரு சட்டப் பிரேணணைகள் கடந்தாண்டு அக்டோபர் மாதத்தில் அமெரிக்க காங்கிரசில் தாக்கலாயின.
இவை அமெரிக்க காங்கிரசில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு சட்டமாக்கப்படவுள்ளன. இவைகள் இணையத்தளங்களின் சுதந்திரச் செயல்பாடுகளை முடக்கி விடும் என கூகுள், யாஹூ மற்றும் விக்கிபீடியா உட்பட பல்வேறு இணைய நிறுவனங்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.இந்நிலையில் இந்த சட்டத்தை எதிர்த்து ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக இணைய கலைக் களஞ்சியமான விக்கிபீடியா அறிவித்தது.
இதுகுறித்து விக்கிபீடியா நிறுவனத்தின் தொடர்புத் துறைத் தலைவர் ஜே வால்ஷ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இச்சட்டங்கள் இணையத்தின் சுதந்திர மற்றும் கட்டுப்பாடற்ற செயல்களை முடக்கிவிடும். அமெரிக்காவில் இயங்கிவரும் இணையத்தளங்களை தணிக்கை செய்வதற்கான புதிய வழிமுறைகளை உருவாக்கித் தரும் எனத் தெரிவித்துள்ளார்.எனினும் இந்த வேலை நிறுத்தம் அமெரிக்காவில் மட்டுமே. உலகின் பிற பகுதியினர் வழக்கம் போல் விக்கிபீடியாவைப் பயன்படுத்தலாம். மேலும் அமெரிக்காவில் இயங்கும் ரெட்டிட், போயிங் போயிங் போன்ற நிறுவனங்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.
பொம்மை விமானத்தை அமெரிக்காவுக்கு வழங்குகிறது ஈரான்.
ஈரானால் சுட்டுவீழ்த்தப்பட்ட விமானத்தை போன்று அமெரிக்காவுக்கு பொம்மை விமானத்தை அனுப்பி வைக்க ஈரான் முடிவு செய்துள்ளது.
கடந்தாண்டு டிசம்பர் மாதம் 5ம் திகதியன்று ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியை ஒட்டிவுள்ள ஈரான் இராணுவ முகாம்களை உளவு பார்க்க அமெரிக்கா அனுப்பிய ஆர்.-க்யூ-170 என்ற ஆளில்லா உளவு விமானம் ஈரான் இராணுவத்தினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது.தற்பொழுது அந்த விமானம் தற்போது ஈரான் வசம் உள்ளது. இதையறிந்த அமெரிக்கா அந்த விமானத்தை திருப்பிதருமாறு ஈரானுக்கு கோரிக்கை விடுத்தது.
இதுகுறித்து ஈரான் வானொலி வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: அமெரிக்க திருப்பி கேட்ட உளவு விமானத்திற்கு பதிலாக ‌அதே போன்ற பொம்மை விமானம் ஒன்றை தயாரித்துள்ளோம்.இந்த விமானம் 30 செ.மீ நீளமும், 14 செ.மீ. அகலும் கொண்டது, 70 ஆயிரம் ரியால்(6 டொலர்) மதிப்புடையது. எதிர்வரும் பிப்ரவரி மாதம் 5ம் திகதி ஈரான் நாட்டின் இஸ்லாமிய குடியரசு தோன்றியதன் 34-ம் ஆண்டு விழா கொண்டாடப்படவுள்ளது. அந்த நிகழ்வின் போது இந்த விமானத்தை அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கவுள்ளோம்.
வெள்ளை மாளிகை மூடப்பட்டது.
அமெரிக்காவின் ஜனாதிபதி மாளிகையான வெள்ளை மாளிகையில் திடீரென புகை கிளம்பியதால் மாளிகை மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த புகை வெள்ளை மாளிகை சுற்றுச்சுவர் அருகேயிருந்து கிளம்பியது, எனவே குண்டு வீசப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெள்ளை மாளிக்கைக்கு வெளியே ஆயிரக்கணக்கானோர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்கள் ஏதேனும் வீசியிருப்பார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் பிரதமருக்கு நெருக்கடி முற்றுகிறது.
பாகிஸ்தான் பிரதமர் கிலானிக்கு எதிராக வழக்குத் தொடர்வது குறித்து அந்நாட்டின் ஊழல் தடுப்பு ஆணையம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது.பாகிஸ்தான் அரசுக்குச் சொந்தமான எண்ணெய்-எரிவாயு மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவராக ஆதன் கவாஜா நியமிக்கப்பட்டார். இவர் ஊழல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டவர் என்பதால், நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்ட ஒருவரை அரசுத் துறையின் உயர் பதவியில் பிரதமர் கிலானி நியமித்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த விவகாரத்தில் கிலானி மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடர அந்த நாட்டின் ஊழல் தடுப்பு அமைப்பான தேசிய நிதிநிர்வாக ஆணையம் முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. வழக்கு தொடரப்பட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டால் கிலானிக்கு 14 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும் என்று சட்டநிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதை உறுதி செய்யும் வகையில் தேசிய நிதி நிர்வாக ஆணையத்தின் தலைவர் புகாரி நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், கவாஜா நியமனத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர ஆலோசித்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.முன்னாள் ஜனாதிபதி முஷாரபின் ஆட்சிக் காலத்தில் கிலானியும், கவாஜாவும் ஒரே சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். 1993-96 காலத்தில் நாடாளுமன்ற கீழ்அவையின் தலைவராக இருந்த கிலானி அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த வழக்குகளில் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் அவரை விடுதலைச் செய்தது நினைவுகூரத்தக்கது.
ஜனாதிபதி ஆசிப் அலி ஜர்தாரி மீதான ஊழல் குற்றச்சாட்டை விசாரிக்கத் தவறி விட்டதாக அந்நாட்டு உச்ச நீதிமன்றம், சில நாள்களுக்கு முன்பு கிலானிக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பியது. இந்த விவகாரத்தால் கிலானி விரைவில் பதவியை ராஜினாமா செய்யக்கூடும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.இப்போது தேசிய நிதிநிர்வாக ஆணையமும் அவர் மீது வழக்குத் தொடர ஆலோசித்து வருவது அவருக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
புத்த மதத் துறவிகள் தீக்குளிப்பு: அவுஸ்திரேலியா கடும் கண்டனம்.
திபெத் மீதான சீனாவின் ஆக்கிரமிப்பை எதிர்த்து புத்த மதத் துறவிகள் தீக்குளிப்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது.கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் இதுவரை 16 புத்த மதத் துறவிகள் தீக்குளித்து இறந்துள்ளனர். இவை அனைத்தும் சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் தான் நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அம்மாகாணத்தின் டாரி என்ற பகுதியில் தீக்குளித்து இறந்த 16வது புத்த மதத் துறவியின் உடலைத் திரும்பப் பெறும் நிகழ்ச்சிக்காக நூற்றுக்கணக்கான திபெத்தியர்கள் திரண்டிருந்தனர். அப்போது சீன இராணுவ வீரர்கள் அவர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இச்சம்பவத்தைக் கண்டித்து செடா பகுதியில் புத்த மதத் துறவிகளும், திபெத்தியர்களும், தலாய் லாமாவின் படத்தோடு திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.திபெத்தியர்கள் வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ தலாய் லாமாவின் படத்தை வைத்திருக்கக் கூடாது என்று சீன அரசு உத்தரவிட்டுள்ள நிலையில் அவரது படத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டது சீன அரசை மேலும் எரிச்சல் அடைய வைத்துள்ளது.
இந்நிலையில் அவுஸ்திரேலியாவில் உள்ள திபெத் கவுன்சில் என்ற அமைப்பு திபெத்தியர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதற்காக பிரதமர் ஜூலியா கில்லார்டு சீனாவுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது.இதுகுறித்து அவுஸ்திரேலிய வெளிவிவகாரத்துறை அமைச்சர் கெவின் ரூத்தின் செய்தித் தொடர்பாளர வெளியிட்ட அறிக்கையில், திபெத்தியர்கள் மீதான நடவடிக்கைகள் குறித்து ரூத் மிகவும் கவலை அடைந்துள்ளார். சீனச் சிறுபான்மையினரின் மொழி, பண்பாடு மற்றும் மத அடையாளங்களை காப்பதற்கு பொருளாதார வளர்ச்சி தான் மிகச் சிறந்த கருவி என்பதை சீனா உணர வேண்டும் என்றார்.
கப்பல் விபத்து: கப்டனை வீட்டுக் காவலில் வைக்க உத்தரவு.
இத்தாலியில் பாறை மீது மோதி கப்பல் விபத்துக்குள்ளானதை அடுத்து அந்த கப்பலின் கப்டனை வீட்டுக்காவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இத்தாலியில் பாறை மீது மோதி கடலில் கவிழ்ந்த கப்பலில் இருந்து காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 29ஆக அதிகரித்துள்ளது. இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் என ஐ.நா கூறியுள்ளது.
இத்தாலி தலைநகர் ரோம் அருகில் உள்ள கிக்லியோ போர்டோ தீவுக்கருகில் உள்ள பாறை மீது மோதி, கோஸ்டா கான்கொரிடா என்ற சொகுசுக் கப்பல் கவிழ்ந்தது. இச்சம்பவத்தில் 6 பேர் பலியாயினர். தவறான முறையில் கப்பலை செலுத்தியதனால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் கோஸ்டா கான்கொரிடா சொகுசு கப்பலின் கப்டனான பிரான்ஸிஸ்கோ செச்சிட்டினோ கடந்த சனிக்கிழமையன்று கைது செய்யப்பட்டார். தற்போது அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.இதனையடுத்து இத்தாலியின் கிராஸ்சிட்டோ மாஜிஸ்திரேட் நீதிபதி கப்பல் கப்டனை வீட்டுக்காவலில் வைத்து தொடர்ந்து கண்காணிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
சிகரெட் இயந்திரங்களுக்குத் தடை.
சிகரெட் விற்கும் இயந்திரங்களுக்கு எதிர்வரும் மார்ச் மாதம் முதல் தடைசெய்யப்படும் என்று அயர்லாந்து நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் எட்வின் பூட்ஸ் அறிவித்துள்ளார்.இந்த சிகரெட் விற்பனையால் 16 வயதிற்கும் குறைந்த சிறுவர்களும் புகை பிடிக்கத் தொடங்கிவிட்டனர். இப்பழக்கம் இவர்களின் உடல்நலத்துக்கு மிகவும் கேடு விளைவிப்பதாகும். எனவே இந்த விற்பனை முறையை நிறுத்திவிட அரசு முடிவு செய்துள்ளது.
இந்த சிகரெட்டுகளை வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதால் அங்குள்ள சிறுவர்களும் புகைப்பழக்கத்திற்கு அடிமைப்படும் பரிதாபநிலை ஏற்படும். பிரிட்டிஷ் தீவுகளுக்குள் இவற்றை விற்காமல் ஏற்றுமதி செய்ய வாய்ப்பு இருப்பதால் அதுகுறித்து சிந்திக்க வேண்டும் என்று DUP கட்சியின் சட்டசபை உறுப்பினரான ஜிம் வெல்ஸ் தெரிவித்தார்.அல்ஸ்ட்டெர் என்ற புற்றுநோய் அமைப்பு நடத்திய ஆய்வில் புகைப் பழக்கத்தால் நுரையீரல் புற்றுநோய், இதய நோய் மற்றும் ஆஸ்துமா போன்ற பல்வேறு நோய்கள் உருவாகும் என்பதால் வருடத்திற்கு 2700 பேர் உயிரிழக்கின்றனர் என்று தெரிவித்துள்ளது.
புகைப்பழக்கத்திற்கு ஆளானவர்களில் பாதிப்பேர் உயிர் கொல்லி நோயால் மரணமடைகின்றனர். இப்போது இங்குள்ள இளைஞர்களில் 16-19 வயதுடையவர்களில் 21 சதவீதத்தினர் இப்பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டனர். பதின்வயதில் இப்பழக்கத்திற்கு ஆளாகி அதை நிறுத்தாமல் தொடர்பவர்கள் 50 சதவீதமாகும்.எனவே இந்நாட்டில் இளைஞர்கள் நடுவயதில் மரணமடைவதைத் தடுக்கவும், அவர்கள் நீண்டநாள் ஆரோக்கியமாக வாழவும், உழைக்கவும் வேண்டிய நடவடிக்கைகளை சுகாதாரத்துறை எடுத்து வருகிறது.
சர்கோசிக்கு ஸ்பெயினின் மிக உயரிய விருது வழங்கி கௌரவிப்பு.
பிரான்ஸ் ஜனாதிபதி நிகோலஸ் சர்கோசிக்கு ஸ்பெயின் நாட்டின் மிக உயரிய விருதான “நைட் ஆஃப் தி கோல்டன் ஃபிலீஸ்” விருது வழங்கப்படும் என அந்நாட்டு அரசர் அறிவித்துள்ளார்.பாஸ்க் பிரிவினை இயக்கமான ஈட்டாவை எதிர்த்து ஒடுக்குவதற்கு பிரான்ஸ் ஜனாதிபதி ஸ்பெயினுக்கு தொடர்ந்து உதவி செய்து வந்ததால் இந்த விருது சர்கோசிக்கு வழங்கப்படுகிறது.
சர்கோசி கடந்த 2002-2004ம் ஆண்டு மற்றும் 2005-2007ம் ஆண்டு வரை உள்துறை அமைச்சராகப் பணியாற்றிய காலத்திலும் ஸ்பெயினுக்கு ஈட்டாவை ஒழிக்க உதவி புரிந்தார். ஒரு காலத்தில் ஈட்டா இயக்கத்தினர் பிரான்சை புகலிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்தனர். பிரான்சும், ஸ்பெயினும் இணைந்து ஈட்டாவை ஒடுக்கியது.ஐரோப்பாவின் பொருளாதார நெருக்கடி குறித்து ஸ்பெயினின் புதிய பிரதமரான மரியானோ ரஜோயுடன் சர்கோசி கடந்த திங்கட்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினார்.
பிரான்சின் தரமதிப்பை எஸ் அண்டு பி நிறுவனம் குறைத்துள்ளது. இந்தத் தகுதிக்கணிப்பில் பிரான்ஸ் மட்டுமல்லாமல் ஒன்பது ஐரோப்பிய நாடுகளின் தரமதிப்பும் குறைக்கப்பட்டுள்ளது.ஸ்பெயின் தற்போது தனது கடனை அடைக்கவும், சிதைந்த சந்தை நிலையை சரி செய்யவும் முயன்று வருகிறது. இந்நிலையில் இந்த ஸ்பெயின் – பிரான்ஸ் பேச்சுவார்த்தையை ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒப்பந்தங்களைச் சீரமைக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மெக்சிகோவில் கனடிய நபர் படுகொலை.
மெக்சிகோவில் ஈராக் நாட்டைச் சேர்ந்த சலீது அப்துலாசிஸ் சபாஸ் என்பவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
இவருடைய கொலைக்கான காரணம் தெரியவில்லை, கொன்றவர் யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.ஆனால் இவர் கொலையுண்டு கிடந்த இடம் போதைமருந்து கடத்தல் அதிகம் நடைபெறும் இடமாகும். சினாலோவா மாநிலத்தின் தலைநகரான குலியாகானில் சாலைகள் சந்திக்கும் பகுதியிலேயே இவர் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்து கிடந்தார்.
இச்செய்தியை தி லாட்டின் அமெரிக்கன் ஹெரால்டு டிரிபியூன் நாளிதழ் வெளியிட்டுள்ளது. இறந்து கிடந்த இந்த நபரிடம் கனடா செல்தற்கான கடவுச்சீட்டு ஒன்றும் இருந்தது.இதுகுறித்து கனடாவின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் அளித்த பேட்டியில், இவர் ஈராக்கில் இருந்து வந்தவர் என்று தெரிவித்தார். ஆனால் கனடாவில் எங்கு வசித்தார் என்பதைத் தெரிவிக்க மறுத்துவிட்டார்.
கப்பல் விபத்து: ஜேர்மானியர் ஒருவர் பலி.
இத்தாலியில் பாறை மீது கப்பல் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 29ஆக அதிகரித்துள்ளது.இறந்த கிடந்த நபர்களை தேடும் பொருட்டு கப்பலில் பாரிய துளை ஒன்றை அதிகாரிகள் போட்டனர். இதன் பிறகு உள்ளே சென்று பார்த்ததில் ஐந்து உடல்களை மீட்புப் பணியினர் கண்டெடுத்தனர். அவர்களில் ஒரு ஜேர்மானியரும் இருந்தார்.
இந்தக் கப்பலில் பயணம் செய்தவர்களில் 29 பேர் பற்றிய தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை. இவர்களில் 12 பேர் ஜேர்மானியர் ஆவர்.இதுகுறித்து ஜேர்மனியின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் குய்டோ வெஸ்டர்வேலே தெரிவிக்கையில், தகவல்கள் கிடைக்கப் பெறாத ஜேர்மானியரை தேடும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்கள் கப்பலில் இருக்கும் 2400 டன் எரிபொருள் கடலில் கசிந்தால் அங்கு வாழும் அரிய உயிரினங்கள் இறந்து போகும் அபாயம் உள்ளது என அஞ்சுகின்றனர்.மத்திய தரைக்கடலின் திமிங்கப் பாதுகாப்புப் பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இங்கு பல அரியவகை திமிங்கலங்களும், டால்பின்களும் இருக்கின்றன. இவற்றை பாதுகாக்க வேண்டும் என்று WWF என்ற அமைப்பு எச்சரித்துள்ளது.
யாஹூ இணையத்தளத்தின் இணை நிறுவனர் பதவி விலகல்.
உலகப் புகழ் பெற்ற யாஹூ இணையத்தளத்தின் இணை நிறுவனர் ஜெரி யாங் யாஹூ பதவி விலகியுள்ளார்.கடந்த 1995ம் ஆண்டு டேவிட் பிலோ என்பவருடன் இணைந்து யாஹூ ஓன்லைன் நிறுவனத்தை ஜெரி யாங் தொடங்கினார்.ஜெரி யாங் யாஹூ பதவி விலகியதையடுத்து அவரது இடத்துக்கு முன்னாள் பேபால் நிறுவன இயக்குனர் ஸ்கோட் தாம்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சவேஸ் இன்னும் ஒரு சில மாதங்களே உயிர் வாழ்வார்: வைத்தியர்கள் தகவல்.
புற்றுநோய் பாதித்துள்ள வெனிசுலா நாட்டின் ஜனாதிபதி ஹ்யூகோ சவேஸ் இன்னும் ஓராண்டு கூட உயிர் வாழ மாட்டார் என்று வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.வெனிசுலா நாட்டின் ஜனாதிபதி ஹ்யூகோ சவேஸின்(56) புரோஸ்டிரேட் சுரப்பியில் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவருக்கு கியூபாவில் சத்திர சிகிச்சை மூலம் புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டது.இதன் பின் தான் நலமாக உள்ளதாகவும், புற்றுநோய் செல்கள் தனது உடலில் இல்லவே இல்லை என்றும் சவேஸ் அறிவித்தார்.
இந்நிலையில் எதிர்வரும் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் வரை சவேஸ் உயிருடன் இருந்தால் அது அவர் செய்த பாக்கியம் என்று அவருக்கு நெருக்கமான வைத்தியர்கள் கூறியதாக தி டெய்லி மெயில் செய்தி வெளியிட்டுள்ளது.சவேஸ் பெருங்குடலின் ஒரு பாகம் மற்றும் புரோஸ்டிரேட் சுரப்பியை பாதித்த புற்றுநோய் தற்போது அவரது எழும்பு உட்பட உடலின் பல்வேறு பகுதிகளுக்கு பரவியுள்ளது என்று அவரது வைத்தியர்கள் தெரிவித்ததாக பிரேசில் நாட்டு பத்திரிக்கை வேஜா செய்தி வெளியிட்டுள்ளது.
கீமோதெரபி, ரேடியோதெரபி மற்றும் சத்திர சிகிச்சையால் பலனில்லை என்றும், உடனடியாக ஐரோப்பாவில் உள்ள புற்றுநோய் மையத்தில் சேருமாறும் கடந்த ஆகஸ்ட் மாதமே வைத்தியர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஆனால் அவர் புற்றுநோய் மையத்தில் சேர மறுத்துவிட்டார் என்று அந்த பத்திரிக்கை மேலும் தெரிவித்துள்ளது.ஆனால் ஜனாதிபதி பணியில் குறிக்கிடும் எந்தவித சிகிச்சையையும் தான் எடுத்துக் கொள்ளப் போவதில்லை என்று சவேஸ் தெரிவித்துள்ளார்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF