Sunday, January 29, 2012

NEWS OF THE DAY.

ஆணைக்குழு அறிக்கையை நடைமுறைப் படுத்த அழுத்தம் கொடுப்பது முறையற்றது!- ஜனாதிபதி மகிந்த.
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அழுத்தம் கொடுப்பது முறையற்றது என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.மொனராகல மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை ஒரே நாளில் நடைமுறைப்படுத்த முடியாது. முப்பது ஆண்டுகாலப் பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வு காண்பது கடினம்.எனினும், முறைப்படி இந்தப் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படும். உடனடியாக இதனை நிறைவேற்ற வேண்டும் என்று அழுத்தம் கொடுப்பது முறையற்றது.பயங்கரவாதிகள் நாட்டை துண்டாடுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டபோது அதனைத் தடுக்க நாம் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்குப் பாரிய தடைகளும் எதிர்ப்புகளும் அழுத்தங்களும் வந்தன. நாம் அத்தனைக்கும் முகங்கொடுத்தே நாட்டை மீட்டெடுத்தோம்.
எமக்கெதிராக பல சேறு பூசல்களும், விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன. எனினும் அதற்குப் பயந்து நாம் எமது தாய்நாட்டை முன்னேற்றுவதில் இருந்து பின்வாங்கப் போவதில்லை.முதலில் எமது தாய்நாடு. ஏனையவையெல்லாம் அதன்பின்னரே.நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில், தமிழ் மக்கள் சிங்கள மொழியைக் கற்கவும், சிங்கள மக்கள் தமிழ் மொழியைக் கற்கவும் நான் யோசனைகளை முன்வைத்தேன்
அத்துடன் இளைஞர் யுவதிகள் ஆங்கில மொழியைக் கற்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினேன். அது நடைமுறைப்பட்டிருந்தால் இன்றுள்ள பல பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைத்திருக்கும்.தாய்நாட்டை டொலர்களுக்காக காட்டிக் கொடுப்பவர்களுக்கு இத்தகைய முன்னேற்றங்களில் விருப்பமில்லை என ஜனாதிபதி மகிந்த தெரிவித்துள்ளார்.
ஜிஎஸ்பி வரிச்சலுகைக்காக அமெரிக்காவிடம் இலங்கை விளக்கம்.
இலங்கைக்கு அமெரிக்காவின் ஜிஎஸ்பி வரிச்சலுகையை பெற்றுக்கொள்வதற்காக மிகவும் வலுவான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.கடந்த 24ஆம் திகதி அமெரிக்காவில் இடம்பெற்ற விசாரணை நிகழ்வில் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டார்.அத்துடன் அமெரிக்க அதிகாரிகளின் வாய்மூல கேள்விகளுக்கும் இலங்கையின் பிரதிநிதிகள் உரிய பதில்களை வழங்கியதாக அவர் தெரிவித்தார்.
இந்தநிலையில் அடுத்து சமர்ப்பிப்பை இலங்கை எதிர்வரும் பெப்ரவரியில் மேற்கொள்ளவுள்ளது.இதனையடுத்தே இலங்கைக்கு ஜிஎஸ்பி வரிச்சலுகையை வழங்குவது தொடர்பில் அமரிக்கா இறுதி தீhமானத்தை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இலங்கையில் தொழிலாளர் நலன் உரியமுறையில் மேற்கொள்ளப்படவில்லை என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே அமெரிக்க ஜிஎஸ்பி வரிச்சலுகை நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை மீது அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டாம் என அரசாங்கம்! பான் கீ மூனிடம் கோரிக்கை .
இலங்கை மீது அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டாம் என அரசாங்கம், ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் கோரிக்கை விடுத்துள்ளது.எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்ஸில் அமர்வுகளின் போது இலங்கைக்கு எதிராக பல்வேறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படக் கூடுமென அரசாங்கம் அச்சம் வெளியிட்டுள்ளது.
குறிப்பாக தாருஸ்மன் குழுவில் அங்கம் வகித்த ஸ்டீவன் ராட்னர் இலங்கைக்கு எதிராக போர்க் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கத் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இவ்வறாhன அழுத்தங்கள் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பிரகடனத்தை மீறும் வகையில் அமைந்துள்ளது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஸ்டீவன் ரட்னரின் சட்டவிரோத செயற்பாடுகள் குறித்து, ஜெனீவாவிற்கான இலங்கைத் தூதுவர் தமரா குணநாயகம் அரசாங்கத்திற்கு தெரிவித்துள்ளார்.ஐக்கிய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட குழு உறுப்பினர் ஒருவர், உறுப்பு நாடு ஒன்றுக்கு எதிராக செயற்படும் முதல் சந்தர்ப்பம் இதுவென இலங்கை அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
இலங்கையின் 64ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் அனுராதபுரத்தில்.
இலங்கையின் 64ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் இம்முறை அனுராதபுரத்தில் நடைபெறவுள்ளது.
“ஆச்சரியமிக்க தேசமொன்றை கட்டியெழுப்புவோம்”  என்ற தொனிப் பொருளில் இம்முறை சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெறவுள்ளதாக பொது நிர்வாக அமைச்சர் ஜோன் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. பாரிய அளவில் முப்படையினரின் மரியாதை அணி வகுப்புக்கள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டாவது தடவையாக அனுராதபுரம் நகரில் இம்முறை சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  இதேவேளை, சுதந்திர தினமன்று நாட்டின் சகல மதுபானசாலைகளும் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறுவர்களின் உடல் பாகங்களை வெளிநாடுகளில் விற்பனை செய்வதில் இலங்கை முன்னணி! சிங்கள நாளிதழ்.
உடல் பாகங்களை பெற்றுக் கொள்ளும் நோக்கில் சிறுவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கும் வர்த்தகம் பற்றிய தகவல்களை சிங்கள பத்திரிகையொன்று வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.உடல் பாகங்களைப் பெற்றுக் கொள்வதற்காக இலங்கைச் சிறுவர் சிறுமியர் பாரியளவில் இவ்வாறு வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிறுவர்களின் உடல் பாகங்களை விற்பனை செய்யும் முக்கிய நாடுகளில் இலங்கை முன்னணி வகிப்பதாகக் குறிப்பிடப்படுகிறது.சில ஆண்டுகளில் ஆயிரக் கணக்கான சிறுவர் சிறுமியர் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.அரசியல்வாதிகள், சட்டத்தரணிகள், உயர் தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்கள் போன்றோரின் ஒத்துழைப்புடன் இந்த வர்த்தகம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வடக்கில் சிறுவர் சிறுமியர் காணாமல் போதல் சம்பவங்கள் அதிகளவில் பதிவாகியுள்ளதாகவும், இவர்களில் பலர் இவ்வாறு உடல் பாகங்களுக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கலாம் எனவும் குறித்த சிங்கள பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.2009ம் ஆண்டு மே மாதம் முதல் 2010ம் ஆண்டு இறுதி வரையில் வடக்கில் 700 சிறுவர் சிறுமியர் காணாமல் போதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.உலகின் மிக அதிகளவில் சிறுவர் உடல் பாகங்கள் விற்பனை செய்யப்படும் நாடான இந்தியாவிற்கு சிறுவர் சிறுமியர் அழைத்துச் செல்லப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
தீங்கிழைக்கும் நோக்கில் நாட்டுக்குள் பிரவேசிப்போரை தடுக்க நடவடிக்கை.
தீங்கு இழைக்கும் நோக்கில் நாட்டுக்குள் பிரவேசிக்கும் நபர்களை தடுப்பதற்கு அரசாங்கம் விசேட திட்டங்களை அமுல்படுத்த உள்ளது.பயங்கரவாதம், அடிப்படைவாத மதக் கோட்பாடுகளை வியாபித்தல் போன்ற நோக்கங்களுக்காக நாட்டுக்குள் பிரவேசிப்போரை தடுக்கும் வகையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட உள்ளன.இந்தக் கமராக்களின் மூலம் நாட்டுக்குள் பிரவேசிப்போர் மற்றும் நாட்டிலிருந்து வெளியேறுவரின் புகைப்படங்களை சேகரித்துக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
சுற்றுலா வீசாக்களைப் பயன்படுத்தி புலிகளின் புலனாய்வுப் பிரிவினர், நாட்டுக்கு எதிரான அரச சார்பற்ற நிறுவனங்கள், சர்வதேச குற்றச் செயல்களுடன் தொடர்புடைய நபர்கள் நாட்டுக்குள் பிரவேசிப்பதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.இது வரை காலமும் இவ்வாறான கமராக்கள் பொருத்தப்படாத காரணத்தினால் பல தேசவிரோதிகள் நாட்டுக்குள் பிரவேசித்து நாச வேலைகளில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஐ.நா. சபை நியூயோர்க் அலுவலகத்தில் போதைப்பொருள் மீட்பு.
நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் கொக்கெய்ன் என்ற போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளதாக நியூயோர்க் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் முத்திரை பதிக்கப்பட்ட பை ஒன்றில் இருந்து, 16 கிலோ கிராம் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் இந்த பொதி மாறுப்பட்டு கொண்டு வரப்பட்டிருக்கலாம் என ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மெக்சிகோசிட்டியில் இருந்து இந்த பொதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
எனினும் முகவரி எதுவும் பொறிக்கப்பட்டிருக்கவில்லை என பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் நியூயோர்க் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.எவ்வாறாயினும், இந்த போதைப் பொருள் பொதி, ஐக்கிய நாடுகள் சபையின் அல்லது, சபையின் தலைமையத்தில் உள்ள ஒருவருக்காக அனுப்பி வைக்கப்பட்டிருக்கலாம் என சபையின் பேச்சாளர் மார்ட்டின் நெசர்கி தெரிவித்துள்ளார்.
ஜப்பானில் இன்று நிலநடுக்கம்.
ஜப்பானின் யமனாஷி பகுதியில் உள்ளூர் நேரப்படி இன்று காலை 07.53 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5ஆக பதிவானது. காலை நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.சேத விபரங்கள் குறித்த உடனடி தகவல் ஏதுமில்லை.
மனம் மாறிய கிலானி.
மெமோகாட் விவகாரத்தில் தான் கூறிய கருத்தை பாகிஸ்தான் பிரதமர் கிலானி வாபஸ் பெற்றுள்ளார்.மெமோகேட் விவகாரத்தில் பாகிஸ்தான் இராணுவத் தலைவர் கயானி மற்றும் ஐ.எஸ்.ஐ தலைவர் பாஷா இருவரும் உச்சநீதிமன்றத்தில் விளக்க அறிக்கைகள் அளித்த செயல் சட்ட விரோதமானது என கடந்த 10ம் திகதி பிரதமர் கிலானி விமர்சித்திருந்தார்.
இதனையடுத்து அரசுக்கும், இராணுவத்திற்கும் இடையிலான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியது.இந்நிலையில் மோதலைத் தணிக்கும் வகையில் பிரதமர் கிலானி விடுத்த அறிக்கையில், இராணுவம் மற்றும் ஐ.எஸ்.ஐ தலைவர்கள் செய்தது சட்டவிரோதம் என்ற கருத்தை நான் வாபஸ் பெறுகிறேன். அக்கருத்து ஒரு குறிப்பிட்ட சூழலில் சொன்னது. அப்போது அரசு அமைப்புகளுக்குள் மோதல் இருந்தது, இப்போது இல்லை என்றார்.
அரசியலிலிருந்து ஓய்வு பெறுகிறார் ஹிலாரி கிளிண்டன்.
அமெரிக்க அரசியலிலிருந்து ஓய்வு பெற ஹிலாரி கிளிண்டன் முடிவுவெடுத்துள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.இதுகுறித்து அவர் கூறுகையில, இந்தாண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் பராக் ஒபாமா வெற்றி பெற்றாலும், அரசியலில் நீடிக்க விரும்பவில்லை என்றார்.மேலும் தொடர்ந்து இரண்டாவது முறையாக வெளிவிவகாரத்துறை அமைச்சர் பதவியில் நீடிக்க விரும்பவில்லை, தனக்குப் பதிலாக வெளிவிவகாரத்துறை அமைச்சராக மற்றொருவரை ஒபாமா நியமிக்கும் வரை இப்பதவியில் இருக்க விரும்புவதாக அவர் தெரிவித்தார்.
20 ஆண்டுகளுக்கும் மேலாக தீவிர அரசியலில் ஈடுபட்டு விட்டதால் தனக்கு ஓய்வு தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து இதேபோன்று அதி முக்கியத்துவம் வாய்ந்த பதவியில் நீடிக்க விரும்பவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.கடந்த 1993ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை பில் கிளிண்டன் ஜனாதிபதியாக இருந்தபோது, அமெரிக்காவின் முதல் பெண்மணியாக ஹிலாரி வலம் வந்தார். இதன் பின் 2001ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை நியூயார்க்கின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஒபாமாவும், ஹிலாரியும் போட்டியிட்டனர். தேர்தலில் ஒபாமா வெற்றியடைந்தால் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டவுடன், ஹிலாரிக்கு வெளிவிவகாரத்துறை அமைச்சர் பதவி அளிக்கப்பட்டது.வெளிவிவகாரத்தறை அமைச்சராக இருப்பவர் தேர்தலில் பங்கேற்கக்கூடாது. அத்துடன் சமீப காலமாக தேர்தல் சார்ந்த விவாதக் கூட்டங்களிலும் ஹிலாரி பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பொருளாதார பற்றாக்குறையினால் இராணுவத்தில் மாற்றம் மேற்கொள்ளும் அமெரிக்கா.
பொருளாதார பற்றாக்குறையின் காரணத்தினால் செலவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக அமெரிக்க இராணுவ வீரர்களின் எண்ணிக்கையை குறைக்க அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது.இதன் ஒரு பகுதியாக அடுத்த 10 ஆண்டுகளுக்குள் அமெரிக்க இராணுவ பட்ஜெட்டில் 48,700 கோடி அமெரிக்க டொலர்களை குறைக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.
செலவைக் குறைக்க அரசு தயாரித்துள்ள திட்டங்கள் குறித்து அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் லியோன் பனெட்டா கூறியதாவது: தற்பொழுது 5,62,000 போர் வீரர்கள் உள்ளனர். இந்த எண்ணிக்கையை 4,90,000 ஆக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இந்த நடவடிக்கை படிப்படியாக மேற்கொள்ளப்பட்டு 2017ம் ஆண்டுக்குள் இலக்கை எட்ட முடிவு செய்துள்ளோம். குறிப்பாக கடற்படையில் மட்டும் 20,000 வீரர்களைக் குறைக்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.
மேலும் பல ஆண்டுகளாக சேவையில் உள்ள சில போர் விமானங்கள், படையில் இருந்து விலக்கிக் கொள்ளப்படும். விமானப்படையில் மொத்தமுள்ள 60 படையணிகளில் 6-ஐ ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். ஏவுகணைகளை செலுத்துவதற்கான வசதியில்லாத போர்க்கப்பல்களை விலக்கிக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.இராணுவம் சார்ந்த சில பணிகளை ஒப்பந்தமுறையில் விடுவது, பணியாளர்களை முறைப்படுத்துவது போன்றவை மேற்கொள்ளப்படும். இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் 6,000 கோடி அமெரிக்க டொலர்களை சேமிக்க முடியும்.
எனினும் உலகம் முழுவதும் எந்தப் பகுதிக்கும் விரைவாக சென்று சேரும் வகையில் இராணுவப் படையணிகள் தயார் நிலையில் வைக்கப்படும். குறிப்பாக ஆசிய - பசிபிக் பகுதிகளிலும், மத்திய கிழக்கு பகுதிகளிலும் எதிரிகளின் தற்காப்பு அரண்களை தகர்க்க ஏதுவாக அடுத்த தலைமுறை போர் விமானங்களை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம்.வானில் பறந்தபடியே போர் விமானங்களில் எரிபொருளை நிரப்பும் தொழில்நுட்பத்தைக் கொண்டு வரவுள்ளோம். அவுஸ்திரேலியா மற்றும் பிலிப்பைன்ஸ் அரசுகளின் ஒத்துழைப்புடன் அப்பகுதிகளில் கடற்படையை நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று பஹ்ரைனில் ரோந்து கப்பலையும், சிங்கப்பூரில் சிறிய அளவிலான போர்க் கப்பலையும் நிறுத்தி வைக்கத் திட்டமிட்டுள்ளோம் என்று தெரிவித்தார்.
வாணவேடிக்கை​களுடன் அவுஸ்திரேலி​யாவை அசத்திய மின்னல்.
அவுஸ்திரேலிய தினத்தை கொண்டாடும் முகமாக வாணவேடிக்கைகளுடன் தமது குதூகலத்தை மக்கள் வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர்.அந்நேரத்தில் மாபெரும் ஔிப்பிளம்பாக தோன்றிய மின்னலும் மக்களின் குதூகலத்திற்கு வலுச்சேர்த்துள்ளது.
அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் காலநிலை மாற்றம் காரணமாக எதிர்பாராமல் நடந்த இடம்பெற்ற இச்சம்பவத்தை ஏறத்தாழ 250,000 மக்கள் நேரடியாக கண்டுகளித்துள்ளனர்.
ஆப்கானிலிருந்து விரைவில் பிரான்ஸ் படைகள் வெளியேறும்: சர்கோசி.
ஆப்கானிஸ்தானிலிருந்து விரைவில் பிரான்ஸ் படைகள் வெளியேறும் என பிரான்ஸ் ஜனாதிபதி நிகோலஸ் சர்கோசி தெரிவித்துள்ளார்.அரசு முறைப் பயணமாக பிரான்ஸ் சென்றுள்ள ஜனாதிபதி ஹமீத் கர்சாய் பாரிசில் பிரான்ஸ் ஜனாதிபதி நிகோலஸ் சர்கோசியை சந்தித்து 20 ஆண்டுகள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
இந்த ஒப்பந்தம் ஐந்தாண்டுக்கு ஒருமுறை மறுபரிசீலனை செய்யப்படும். நாட்டின் பாதுகாப்பு, கல்வி, மற்றும் பிற விடயங்கள் குறித்து இந்த ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளது.கடந்த சில வாரங்களுக்கு முன் பிரான்ஸ் இராணுவ வீரர்கள் நால்வரை ஆப்கானிஸ்தானிய இராணுவ உடையணிந்த வீரன் ஒருவன் சுட்டுக்கொன்றான்.ஓய்வு பெற்ற இராணுவத் தளபதி ஃபிராங்க் டெஸ்போர்ட்டெஸ் இராணுவம் திரும்பி வருவதில் உள்ள பிரச்னைகளை முன்வைத்தார்.அங்கிருந்து 3600 வீரர்களை உடனே அழைத்து வரலாம், ஆனால் ஆயுதம் தாங்கிய டாங்கிகள், சீசர் துப்பாக்கி, டைகர் ஹெலிகப்டர் போன்றவற்றை பிரான்சிற்குக் கொண்டுவர குறைந்த பட்சம் பதினெட்டு மாதங்கள் ஆகும் என்றார்.
மேலும் நேட்டோவின் அனுமதியில்லாமல் படைகளைத் திரும்பக் கொண்டு வருவதால் சர்வதேச நட்புறவு குறிப்பாக அமெரிக்காவுடனான உறவு பாதிக்கப்படும் என்றார்.ஆனால் சர்கோசியின் போட்டி வேட்பாளரான ஃபிராங்கோய்ஸ் ஹோலாண்ட், குறிப்பிட்ட நாளுக்கு முன்பே பிரான்சின் இராணுவத்தை ஆப்கானிஸ்தானிலிருந்து திரும்ப தாய்நாட்டுக்கே கொண்டுவருவதாக வாக்குறுதி அளித்துள்ளார்.
துக்க காலத்தில் கைபேசி பயன்படுத்தினால் போர் குற்றத்துக்கு இணையான தண்டனை.
வடகொரியா நாட்டின் ஜனாதிபதியாக இருந்த இராணுவ ஆட்சியாளர் கிம் ஜாங் கடந்த டிசம்பர் மாதம் 17ம் திகதி மரணம் அடைந்தார்.இதனையொட்டி அந்த நாட்டில் 100 நாள் துக்கம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த காலத்தில் யாராவது சீனா நாட்டிற்குள் சென்றாலோ அல்லது கைபேசிகளை பயன்படுத்தினாலோ போர் குற்றவாளியாக கருதப்பட்டு தண்டனை வழங்கப்படும் என அரசாங்கம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.தற்போது வடகொரியாவில் உணவுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் ஏராளமான மக்கள் சீனாவிற்குள் செல்லும் முயற்சியில் ஈடுபடுவதால் அதை தடுக்கும் நோக்கத்தில் இந்த தடை பிறப்பிக்கப்பட்டு இருப்பதாக கருதப்படுகிறது.
முதன்மை தொழில்நுட்ப அதிகாரி பதவி விலகல்.
அமெரிக்காவில் ஒபாமா தலைமையிலான அரசின் முதன்மை தொழில்நுட்ப அதிகாரி அனீஷ் சோப்ரா பதவி விலகியுள்ளார்.புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்த இவர், தற்போது தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இவரது பதவி விலகம் குறித்து ஒபாமா கூறுகையில், தொழில்நுட்பத்தை பயன்படுத்தி படைவீரர்களுக்கு மின்னணு உடல்நல பதிவேடுகள், கிராமப்புற சமூகத்தினருக்கு பிராட்பேண்ட் வசதி விரிவாக்கம் செய்தது, அரசு ஆவணங்களை நவீனமயமாக்கியது போன்ற பல நவீன தொழில்நுட்ப வசதிகளை அளித்துள்ளார் என கூறியுள்ளார்.அனீஷ் சோப்ரா இது குறித்து கூறுகையில், கடந்த மூன்று ஆண்டுகளாக முதன்மை தொழில்நுட்ப அதிகாரியாக பணியாற்றிய பின், எனது சொந்த இடமான விர்ஜீனியாவுக்கு திரும்ப உள்ளேன். உடல்நலம் மற்றும் கல்விக்காகவும், மேலும் புதிய தொழில்நுட்பங்களை கண்டுபிடிக்கவும் நான் எனது பதவியை ராஜினாமா செய்துள்ளேன் என்று கூறியுள்ளார்.
மேலும் அரசாங்கத்தில் ஒரு புதுமையான கலாச்சாரத்தை ஊக்கப்படுத்தும் பணியை ஜனாதிபதி ஒபாமா என்னிடம் ஒப்படைத்ததற்காகவும், அவருடைய வழிகாட்டுதலுக்காகவும், நாட்டு மக்களின் நன்மைக்காக தொழில்நுட்பத்தை பயன்படுத்த அவர் காட்டிய ஈடுபாட்டிற்காகவும் எனது நன்றியை அவருக்கு தெரிவித்து கொள்கிறேன் என கூறியுள்ளார்.இவர் எதிர்வரும் பிப்ரவரி மாதம் 8ந் திகதி வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவார்.
தொழிலாளர்களுக்கு அதிகளவு கூலி வழங்குவதில் அல்பெர்ட்டா முதலிடம்..
கனடாவின் அல்பெர்ட்டா மாகாணத்தில் வாரக்கூலி அதிகமாகவும், ஒண்டோரியோவில் குறைவாகவும் வழங்கப்படுவதாக சமீபத்திய அறிக்கை ஒன்று சுட்டிக் காட்டுகிறது.இந்த அறிக்கையை ஸ்டேட்டிஸ்ட்டிகஸ் கனடா(Statistics Canada) என்ற அமைப்பு புள்ளி விபரத்துடன் வெளியிட்டுள்ளது.அந்த அறிக்கையில், கடந்தாண்டை விட இந்த ஆண்டில் அல்பெர்ட்டாவில் வழங்கப்படும் கூலியின் சதவிகிதம் உயர்ந்துள்ளதாகவும், இதே நேரத்தில் ஒண்டோரியோவில் 0.5 சதவீதம் குறைவாகக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2007ம் ஆண்டின் முதல் அல்பெர்ட்டா பகுதியில் பணியாளர் பற்றாக்குறை இருந்ததால் எண்ணெய் மற்றும் எரிவாயு தொழிற்சாலையில் வேலைக்கு வரும் பணியாளருக்கு அதிகக் கூலி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.ஆனால் இதே நேரத்தில் பிரின்ஸ் எட்வர்டு தீவில் மட்டும் வாரக்கூலி 1.6 சதவீதத்திலிருந்து குறைந்து இருப்பதாகப் புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. இதுவே கனடாவின் குறைந்தபட்ட கூலியாகும்.
நாட்டின் நான்கு மிகப் பெரிய தொழில்துறைகளான நிர்வாகத் துறை, சில்லரை வியாபாரம், தொழில்நுட்பத்துறை மற்றும் உற்பத்தித்துறைகளில் ஆண்டுதோறும் கூலி உயர்வு தேசிய சராசரியைக் காட்டிலும் அதிகமாக இருக்கிறது.கடந்தாண்டு ஒக்டோபர் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை சில்லரைத் தொழில், கட்டிடத் தொழில், உற்பத்தித் துறை, சுரங்கத் தொழில், சுகாதாரம் மற்றும் சமூக உதவி போன்றவற்றில் 12,300 பேர் புதிதாக வேலைவாய்ப்பு பெற்றனர். இத்துறைகள் நல்ல லாபத்துடன் இயங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
பொருளாதாரச் சிக்கலிலிருந்து மீண்டு வர திண்டாடும் ஜேர்மனி.
யூரோ மண்டலத்தின் பொருளாதாரச் சிக்கலிருந்து மீண்டும் ஜேர்மனி தனது பழைய நிலையை அடைய முயன்றாலும் பொது நிதியில் குறைவு ஏற்பட்டுள்ளதால் ஜேர்மனி திண்டாடி வருகிறது.ஆனால் அரசின் புள்ளி விபரப்படி கடந்த 2011ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பொது நிதி முந்தைய ஆண்டை(2010) விட 4.1 சதவீதம் உயர்ந்திருப்பதாக கூறியது.
71 பில்லியன் யூரோ அரசு வருவாய் அதிகரித்துள்ளது. ஆனால் இந்தக்கணக்கு இதற்கு முந்தைய மாதங்களை விட குறைவாகும். நவம்பரில் 7.6 சதவீதம் உயர்வும், ஒக்டோபரில் 8.5 சதவீதம் உயர்வும் இருந்தது.மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையின்படி கடந்த 2011ஆம் ஆண்டில் அரசு வாங்கிய புதிய கடன் 17.3 பில்லியன் யூரோவாகும். இந்த ஆண்டுக் கடனுக்கான வட்டி 32.8 பில்லியன் யூரோவாகும்.
நடைபெறும் 2012ஆம் ஆண்டின் தொடக்கம் நிதி அடிப்படையில் வேகம் குறைந்ததாக இருந்தாலும், யூரோ மண்டல நிதி நெருக்கடியை சமாளித்து ஆண்டின் பிற்பகுதியில் தனது பழைய நிலைக்கு வந்துவிடும் என்று அரசு கணித்துள்ளது.IFWவின் பொருளியல் அறிஞரான ஆல்ஃபிரெட் பாஸ் கூறுகையில், நாட்டின் பொருளாதாரம் சரிசெய்யப்படுவதாகவும், வரி வருமானம் நிறைவாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
பாகிஸ்தானில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதால் பரபரப்பு.
பாகிஸ்தானில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பாகிஸ்தானின் துறைமுக நகரமான கராச்சியின் மக்கள் நெருக்கடி மிகுந்த பகுதியில் மர்ம மனிதன் கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இவர்களில் 2 பேரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. மக்கள் நெருக்கடி மிகுந்த பகுதியில் தாக்குதல் நடந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குடும்பத்தையே அழ வைத்த 7 வயது சிறுவனின் கௌரவ விருது.
அமெரிக்காவில் இண்டியானா மாகாணத்தில் உள்ள 7 வயது சிறுவன் ஒருவனுக்கு தீயணைப்பு வீரனுக்கு அளிக்கப்படும் கௌரவம் வழங்கப்பட்டது குடும்பத்தையே மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது.அமெரிக்காவின் இண்டியானா மாநில தலைநகர் இண்டியானாபோலீசில் வசிப்பவர் கிரேக் வின்சன். தீயணைப்பு வீரராக பணியாற்றுகிறார். இவருடைய 7 வயது மகன் பிராடன் வின்சன்.தந்தையை போலவே தீயணைப்பு வீரனாக வேண்டும் என்பது இவனுடைய கனவு. சிறுவனின் தாத்தா, மாமா, சித்தப்பா என்று குடும்பமே தீயணைப்பு வீரர்கள் என்பதால், தானும் அதுபோல் ஆகவேண்டும் என்று விரும்பினான்.
ஆனால் அதற்கு சாத்தியமே இல்லை என்று தெரிந்து குடும்பத்தையே வேதனையில் ஆழ்த்தியது. வின்சனுக்கு சிஸ்டிக் பிப்ரோசிஸ் என்று டாக்டர் சொன்னபோது குடும்பத்தினருக்கு அந்த நோயின் கோரம் தெரியவில்லை. ஆனால அந்த நோய் ஏற்படுத்தப் போகும் விளைவுகளை டாக்டர்கள் அளித்த விளக்கங்களை கேட்டு பதறியது குடும்பம்.அரிய வகை நுரையீரல் நோய் அது. மரபணு கோளாறால் உயிருக்கு ஆபத்தான இந்நோய் தாக்கியது கண்டுபிடிக்கப்பட்டது. மூச்சுக்குழாய் பாதிப்பால் சாப்பிடுவதில் சிக்கல் இருக்கும்.
இதனால் ஜீரண கோளாறு, வயிற்று வலி என பல பிரச்னைகள் ஏற்படும். பரம்பரையாக வரும் நோய் இது. நுரையீரலில் பசை போன்ற திரவம்(மியூக்கஸ்) சுரக்கும். இதனால் மூச்சுத்திணறல் ஏற்படும்.ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் கணையத்தையும் இது பாதிக்கும். உடலின் பல பாகங்களில் பிரச்னை ஏற்படும். இந்த நோய் தாய், தந்தை இருவரிடம் இருந்தும் கிடைக்கப்பெறும் பாதிக்கப்பட்ட ஒரு ஜீன் சேர்க்கையால் உருவாகிறது என்பதே டாக்டர்களின் கண்டுபிடிப்பு.
வியர்வை சுரப்பிகள், ஆண்மை ஆகியவற்றையும் சிஸ்டிக் பிப்ரோசிஸ் பாதிக்கும். லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.வின்சனுக்கு 2 வயதாக இருக்கும் போதே இந்த நோய் பாதிப்பு குறித்து தெரிய வருகிறது. குழந்தை பிறந்தவுடன் எடை குறைவாக இருந்தால், நாளடைவில் வளர்ச்சி இல்லாமை, மலச்சிக்கல், வயிற்று வலி, வயிறு பெருத்து காணப்படுதல், சளி, ஜூரம் போன்ற பாதிப்புகள் இருக்கும்.
இதை கட்டுப்படுத்த மருந்து மாத்திரைகள் கொடுக்கப்படுகின்றன. மேலும் வாரத்துக்கு 3 முறை உடற்பயிற்சி, நீச்சல், ஜாக்கிங், சைக்கிளிங் போன்றவை இந்நோய் பாதிப்பை குறைக்கும் என்று டாக்டர்கள் கூறுகின்றனர். எனினும், சிஸ்டிக் பிப்ரோசிஸால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்நாள் 37 ஆண்டுகள்தான் என்பது கொடுமை.
இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ள வின்சனால் தீயணைப்பு வீரனாக முடியாது. தாத்தா, தந்தையை போல தீயணைப்பு வீரனாக முடியாதே என்ற ஏக்கத்தில் தினமும் வின்சன் புலம்பி வந்தான்.இதை அறிந்த இண்டியானாபோலிஸ் சட்டசபை பிரதிநிதிகள், சிறுவனுக்கு கவுரவ தீயணைப்பு வீரன் பதவி வழங்க தீர்மானம் நிறைவேற்றினர்.
கௌரவ பதவி வழங்கும் விழா நேற்று நடந்தது. தீயணைப்பு வீரர்களுக்கு வழங்கப்படும் தலை கவசத்தை சிறுவனுக்கு அணிவித்து கவுரவப்படுத்தினர். அத்துடன், தீயணைப்பு வீரருக்கான பதக்கம், சான்றிதழும் வழங்கப்பட்டது.சட்டசபையில் சிறுவனை மேசை மீது நிற்க வைத்தனர். தொப்பியை சிறுவன் அணிந்து மகிழ்ச்சி பொங்க அனைவரையும் பார்த்து சிரித்தான். அப்போது பிரதிநிதிகள் அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்து அவனை உற்சாகப்படுத்தினர்.
அப்போது சிறுவனும் அவனது தந்தை கிரேக்கும் உணர்ச்சிகளை அடக்க முடியாமல் கதறி அழுதனர். என் மகனின் கனவு நனவானது. அதற்காக இண்டியானா சட்டசபை பிரதிநிதிகளுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கிரேக் குரல் தழுதழுக்க கூறினார்.வின்சனின் குடும்பத்தினர் மட்டுமின்றி உறவினர்களும், தீயணைப்பு வீரர்களும் கண்களில் நீர்மல்க நெகிழ்ச்சியுடன் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
சிறைச்சாலையில் கடாபியின் ஆதரவாளர்கள் துன்புறுத்தல்.
லிபியாவின் முன்னாள் ஜனாதிபதி மும்மர் கடாபியின் ஆதரவாளர்கள் சிறையில் கொடுமைப்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதுகுறித்து ஐ.நா.வின் மனித உரிமைக் குழுவின் தலைவியான நவி பிள்ளை கூறுகையில், லிபியாவில் பொறுப்போற்றுள்ள புதிய அரசு சிறைச்சாலையைத் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்று கூறினார்.
மருத்துவ குழுவும் மிஸ்ரட்டா சிறையில் பல கொடுமைகள் நடந்து வந்ததால் தங்கள் பணிகளை மீண்டும் தொடராமல் இடையில் நிறுத்திவிட்டதாக தெரிவித்துள்ளனர்.அந்த சிறையில் உள்ள கைதிகள் பல்வேறு துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர் என பி.பி.சி தகவல் வெளியிட்டுள்ளது.
ஆனால் இவை எதுவும் சிறைச்சாலை வளாகத்திற்குள் நடக்கவில்லை என்றும், சட்டத்திற்குப் புறம்பாக வெளியிடத்திலும், இராணுவத்திற்கு உட்பட்ட எல்லைப்பகுதியிலும் இந்த சித்திரவதைகள் தொடர்ந்து நடந்தன என்றும் சர்வதேச பொதுமன்னிப்பு அமைப்பின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.கடாபியின் மரணத்துக்குப் பின் நூறு நாட்கள் கழித்து இந்த துன்புறுத்தல் பற்றிய குற்றச்சாட்டுகள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF