Tuesday, January 17, 2012

NEWS OF THE DAY.

ஜனாதிபதியின் அமெரிக்க நீதிமன்ற வழக்கு!– நாளை தீர்ப்பு.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக அமெரிக்காவின் கொலம்பிய நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கின் தீர்ப்பு நாளை செவ்வாய்க்கிழமை வழங்கப்படவுள்ளது.  அமெரிக்காவில் உள்ள இலங்கை தூதுவர் ஜாலிய விக்ரமசூரிய தகவல் தெரிவிக்கையில், பெரும்பாலும் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.
திருகோணமலையில் பாதுகாப்பு படையினரின் துப்பாக்கி சூட்டில் பலியான மாணவர், ஒருவரின் பெற்றோர் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தனர்.இந்த வழக்கு தொடர்பில் அமெரிக்க சட்ட மா அதிபர் திணைக்களத்திடம் கொலம்பிய நீதிமன்றம் விளக்கம் கோரி இருந்தது.இந்த நிலையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இராஜதந்திர சிறப்புரை பெற்றவராக இருப்பதால், அவருக்கு எதிராக வழக்கு தொடர முடியாது என அமெரிக்க சட்ட மா அதிபர் திணைக்களம் அறிக்கைப்படுத்தியதாக ஊடகங்கள் தெரிவித்தன.இது தொடர்பில் ஜாலிய விக்ரமசூரிய கருத்து தெரிவிக்கும் போது, அமெரிக்க சட்டத்தின்படி, ஒரு நாட்டின் ஜனாதிபதிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய முடியும். எனினும், ஜனாதிபதிக்கு எதிராக தீர்ப்பு வழங்கும் அதிகாரம் அமெரிக்க நீதிமன்றத்துக்கு இல்லை என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் பெரும்பாலும் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.இதற்கிடையில், ஐக்கிய நாடுகள் சபைக்கான பிரதி வதிவிடப் பிரதிநிதி சவேந்திர சில்வாவுக்கு எதிரான வழக்கும் பெரும்பாலும் தள்ளுபடி செய்யப்படும் எனவே எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இறுதி யுத்தத்தின் போது பல இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில், சவேந்திர சில்வாவுக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.எனினும் அவர் அரசாங்க தரப்பு இராஜதந்திரியாக தற்போது உள்ள நிலையில், பெரும்பாலும் அவருக்கு எதிரான வழக்கும் தள்ளுபடி செய்யப்படலாம் என்று ஜாலிய விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கலையரங்கு இராணுவத்தினர் கட்டுப்பாட்டில்!
இலங்கையில் அண்மையில் திறந்து வைக்கப்பட்ட தாமரைத் தடாகம் மகிந்த ராஜபக்ச கலையரங்கு இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக கலாசார அமைச்சர் ரி.பி.எக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
சீனாவின் நிதி மற்றும் கட்டுமான உதவியுடன் இலங்கையின் கலாசார அமைச்சினால் கட்டப்பட்ட இந்த கலையரங்கு ஜனாதிபதி செயலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.
எனினும் இந்த கலை அரங்கின் நிர்வாகத்தை சிறிலங்கா இராணுவமே மேற்கொண்டு வருவதாக அமைச்சர் ரி.பி.எக்கநாயக்க தெரிவித்துள்ளார்.மேலும், தாமரைத் தடாகம் மகிந்த ராஜபக்ச கலையரங்கின் பிரதான அரங்கில் 1288 ஆசனங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு ஒரு நிகழ்ச்சியை நடத்துவதற்கு 8 இலட்சம் ரூபா அறிவிடப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ரிசானா நபீக்கை சவூதி அனுப்பிய இரு உபமுகவர்களுக்கு கடூழிய சிறை.
ரிஸானா நபீக்கை சவூதி அரேபியாவுக்கு அனுப்பியதாக குற்றம் சுமத்தப்பட்ட உப முகவர்கள் இருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இருவருட கடூழிய சிறைத் தண்டனையும் 60ஆயிரம் ரூபா அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.சாஹுல் ஹமீட் மொஹமது அப்துல் லத்தீவ், பாக்கீர் மொஹிடீன் வஜுர்டீன் ஆகிய உப முகவர்களுக்கே இன்று மேல் நீதிமன்ற நீதிபதி சுனில் ராஜபக்சவினால் இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.


சந்தேக நபர்கள் வீரசேன ரணஹேவ மற்றும் மொஹமட் நஸார் இருவரும் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதற்கிணங்கவே நீதிபதி சுனில் ராஜபக்ச மேற்படி தீர்ப்பை அளித்தார்.மேலும், குற்றம் சுமத்தப்பட்ட மூன்றாவது நபரான கம்ஸா லெப்பே அப்துல் சலாம் என்பவருக்கு எதிரான வழக்கு விசாரணை எதிர்வரும் 24 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் பௌசியின் மகனைக் கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு.
சிரேஸ்ட அமைச்சர் ஏ.எச்.எம். பௌசியின் மகன் நௌசர் பௌசியை கைது செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் ரஸ்மி சிங்கப்புலி  உத்தரவிட்டுள்ளார்.பம்பலப்பிட்டியைச் சேர்ந்த வர்த்தகர் முஸ்தாக் சாலி என்ற நபரை நௌசர் பௌசி கைத்துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த 13ம் திகதி மேல் மாகாண சபை உறுப்பினரும் அமைச்சர் பௌசியின் மகனுமான நௌசர் பௌசி தமக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக வர்த்தகர் முஸ்தாக் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.கொழும்பு பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் அடிப்படையில் இந்த சம்பவம் குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் சாட்சியங்கள் இருப்பதாகவும், அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட கைத் துப்பாக்கியை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.இதேவேளை, நௌசர் பௌசியை கைது செய்வதற்கு கால அவகாசம் தேவை என குற்றத் தடுப்புப் பிரிவினர் குறிப்பிட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கை நுவரெலியாவில் இன்று கடும் பனிப்பொழிவு.
நுவரெலியா மாவட்டத்தில் இன்று கடும் பனிப்பொழிவு காணப்பட்டதாகவும் இதன்காரணமாக, அங்கு கடுமையான குளிர் காலநிலை நிலவுவதாக காலநிலை அவதான மையம் தெரிவித்துள்ளது.இதேவேளை இந்த வருடத்தில் இலங்கையில் மிகக்குறைந்த வெப்பநிலையாக இன்று நுவரெலியவில் காணப்பட்ட 03.8 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக காலநிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.நுவரெலியாவில் மிக நீண்டகாலமாக இந்தளவான பனிபொழிவு ஏற்படவில்லை என்று அங்குள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.
ஈரானை கைவிட்டது இலங்கை.
கட்டார் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளில் இருந்து மசகு எண்ணெய்யை இறக்குமதி செய்வது தொடர்பில் ஆராய்வதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை ஏற்படுத்தும் அறிவித்தலை அடுத்தே இது தொடர்பில் ஆராயப்படுவதாக இலங்கையின் பெற்றோலியத்துறை அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.
இலங்கை தற்போது 40ஆயிரம் பெரல் மசகு எண்ணெய்யை நாளொன்றுக்கு ஈரானில் இருந்து இறக்குமதி செய்கிறது.இந்த எண்ணெய்யே, 1960களில் அமைக்கப்பட்ட சுத்தரிப்பு நிலையங்களில் சுத்திகரிக்கப்படுகின்றன. அத்துடன் சவூதி அரேபியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எண்ணெய்யும் இங்கு சுத்தகரிக்கப்படுகிறது.
இந்நிலையில் ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை எண்ணெய் இறக்குமதியை பாதிக்கும் என்ற அடிப்படையில் நேற்று இலங்கை வந்தடைந்த கட்டாரின் மன்னருடன் பேச்சு நடத்தி கட்டாரில் இருந்து மசகு எண்ணெய்யை இறக்குமதி செய்ய முயற்சி செய்யப்படும் என அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்அத்துடன் இந்த மாத இறுதியில் இலங்கைக்கு வருகைத்தரவுள்ள ஓமானின் எரிபொருள் துறை அமைச்சருடன் மசகு எண்ணெய் இறக்குமதி தொடர்பில் பேச்சுக்கள் நடத்தப்படவுள்ளதாகம் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
லெபனானில் 6 மாடி கட்டிடம் விழுந்து 11 பேர் பலி.
அரபு நாடுகளில் ஒன்றான லெபனானில் 6 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.லெபனான் தலைநகர் பெய்ருட் பகுதியில் 6 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
இதில் 11 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 12 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்கள் அங்குள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்கை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்தவர்களில் 7 பேர் வெளிநாட்டு பணியாளர்கள் என்று லெபனான் தொலைக்காட்சிகள் செய்தி வெளியிட்டு வருகின்றன.மேலும் இந்த விபத்து குறித்து பொலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
700 ஆண்டுகன் பழைமை வாய்ந்த கால்மார்க் முத்திரை.
தங்க விலை அதிகரித்துக் கொண்டே இருந்தாலும், தங்கம் வாங்குவோர் எண்ணிக்கை குறையவில்லை. விற்பனையாகும் தங்க ஆபரணங்களின் தரத்தை உறுதி செய்ய, பதிப்பிக்கப்படும் "ஹால்மார்க்” முத்திரை, 700 ஆண்டுகளுக்கு முன்பே பின்பற்றப்பட்டது ஆச்சர்யமான தகவலாக உள்ளது.
"ஹால்மார்க்" தர கூட்டமைப்பு நாடுகளில் ஆஸ்திரேலியா, டென்மார்க், அயர்லாந்து, நார்வே, ஸ்வீடன், செக் குடியரசு, பின்லாந்து, நெதர்லாந்து, போர்ச்சுகல், ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்தியாவில், "ஹால்மார்க்' முத்திரை, 2000ல் அறிமுகமானது.
ஐரோப்பாவில் முற்காலத்தில் தங்கம், வெள்ளி நகைகளின் தரம் மற்றும் விலையை நிர்ணயிக்க தனிக்குழு இயங்கியது. உறுப்பினர்களிடம் தங்கத்தை அளித்து, ஒரே தரத்தில் நகைகள் மற்றும் பொருட்கள் செய்தனர். நகைகளின் தரம் ஒரே மாதிரியாக இருந்தது.சில பொற்கொல்லர்கள் குழுவில் உறுப்பினராக இருந்து போலி நகைகள் செய்து விற்பனை செய்தனர். 1238ல் இவ்விஷயம் வெளியே தெரியவர குழுவில் இருந்து அனைவரும் நீக்கப்பட்டனர். 1300ல், எட்வர்ட் மன்னரால் முதன் முறையாக முத்திரையிடப்பட்ட பொருட்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, தனி சட்டமும் இயற்றப்பட்டது.
நகைகள், பாத்திரங்கள் மீது சிறுத்தையின் உருவம் பொறிக்கப்பட்டது. இது அப்பொருளின் தரத்தை உறுதிப்படுத்துவதாக அமைந்திருந்தது. எட்வர்ட் மன்னரின் இந்த சட்டம் தரத்தை அறியும் நிபுணர்குழுவுக்கு முழு சுதந்திரம் அளித்து, 19 காரட் நகைகளையும், கலப்பட மில்லாத வெள்ளி பொருட்களையும் மதிப்பிட உதவியாக இருந்தது.
கி.பி., 1327ல் எட்வர்ட் மன்னரால், லண்டனில் உள்ள நகைகளுக்கு சட்டபூர்வமான அங்கீகாரம் அளித்து, பரவலாக நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. அதன் பின்னரே ஒவ்வொரு நகை தயாரிப்பாளரும் தங்களின் ஒவ்வொரு தயாரிப்பிலும் முத்திரையிடும் அதிகாரம் பெற்றனர். நாகரிகம் வளர வளர தரமுத்திரைகளிலும் மாற்றங்கள் வந்தன. 1696ல், இங்கிலாந்தில் மூன்றாம் வில்லியம் மன்னர் காலத்தில் கிடைத்த பொருட்களில் இன்ஷியல்களும், மகுடம், ஒவ்வொரு நகை தயாரிப்பாளுக்குமான தனி குறியீடுகளை கொண்டிருந்தன.
கி.பி., 1773ல் புதிய சட்டமியற்றப்பட்டு இங்கிலாந்தில் உள்ள பர்மிங்ஹாம், ஷபீல்டு, எடின்பர்க், செஸ்டர், க்ளாஸ்கோ நகரங்களில் தங்கத்துக்காக ஹால்மார்க் தரக்கூடங்கள் நிறுவப்பட்டன. "ஹால்மார்க்' சட்டதிட்டங்களில் 1854ல் முக்கிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. 18, 22 காரட் தரத்துடன், புதிதாக 15, 12 காரட் தங்க மதிப்பில் சேர்க்கப்பட்டன. காலப்போக்கில் 15, 12 காரட் நகைகள் மதிப்பிழந்தன. 1999ல், 24 காரட் நகைகள் அறிமுகமாயின.பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்படும், "ஹால்மார்க்' தர முத்திரைக்கான கூடம், இப்போதும் லண்டனில் உள்ள பர்மிங்ஹாம் அரண்மனையில் இயங்குகிறது.
கப்பலில் காணமற்போனவர்களில் 3வர் உயிருடன் மீட்பு.
இத்தாலியில் பாறை தட்டி கவிழ்ந்த கப்பலில் இருந்து, மேலும் மூவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர் மீதமுள்ள 40 பேரின் கதி என்னவானது எனத் தெரியவில்லை.
இத்தாலியைச் சேர்ந்த கோஸ்டா கான்கொரிடா என்ற ஆடம்பரக் கப்பல், நேற்று முன்தினம் ரோம் அருகில் உள்ள தீவு ஒன்றின் கரையில் பாறை தட்டி கவிழ்ந்தது.இதில் இருந்த நாலாயிரத்துக்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்நிலையில், கப்பலில் இருந்து நேற்று மேலும் மூவர் மீட்கப்பட்டனர். இன்னும் 40 பேரின் கதி என்ன என்பது தெரியவில்லை.
மீட்புப் பணி முடிவதற்கு முன்பே கப்பலில் இருந்து வெளியேறிய கேப்டன் கைது செய்யப்பட்டார். விபத்து குறித்து பேட்டியளித்த கேப்டன், கப்பல் தட்டிய பாறை குறித்து, கப்பலில் இருந்த பாதை வரைபடங்களில் குறிப்பிடப்பட வில்லை என குற்றம்சாட்டினார்.மீட்புப் பணியாளர்கள், கடலில் மூழ்கியுள்ள கப்பலின் மற்றொரு பக்கத்தில் தேடுதலில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம், ஐரோப்பாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென் சீன பிரச்சனைகளை தீர்க்க பிலிப்பையின்ஸ் கோரிக்கை.
தென் சீனக் கடலில் நாடுகளுக்கிடையே நிலவி வரும், உரிமைப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்காக, ஆசியான் கூட்டமைப்புக் கூட்டத்தில் விவாதிக்கும்படி பிலிப்பைன்ஸ் கோரிக்கை விடுத்துள்ளது.தென் சீனக் கடலின் பல பகுதிகளில் கனிம வளம் அதிகளவில் இருப்பதால், அப்பகுதியில் சீனா வலுக்கட்டாயமாக உரிமை கொண்டாடி வருகிறது.
பிலிப்பைன்ஸ், கம்போடியா, தாய்லாந்து, மலேசியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு உட்பட்ட பகுதிகளை சீனா தனதாக்கிக் கொள்ள விரும்புகிறது. இந்நிலையில் இப்பிரச்னையைப் பேசித் தீர்க்க பிலிப்பைன்ஸ் அழைப்பு விடுத்துள்ளது.இதற்கான அவசரக் கூட்டத்தை விரைவில் கூட்டும்படி, தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பான ஆசியானுக்கு பிலிப் பைன்ஸ் கோரிக்கை வைத்துள்ளது. தலைநகர் மணிலாவில் கூட்டம் நடத்துவதற்காக ஏற்பாடுகளை செய்யவும் தயார் எனக் கூறியுள்ளது.
ரஷ்யாவில் அரசு அதிகாரிகள் 700 பேர் மீது ஊழல் வழக்கு.
ரஷ்யாவில் கடந்தாண்டு மட்டும், எம்.பி.,க்கள், அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள்,நீதிபதிகள் என அரசின் முக்கிய அதிகாரிகள் என 700 பேர்களின் மீது ஊழல் வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
ரஷ்யாவில் சமீபத்தில் நடந்த பொதுத் தேர்தலில், ஆளும் ஐக்கிய ரஷ்ய கட்சி பல்வேறு மோசடிகள் மூலம் வெற்றி பெற்றது. இதையடுத்து, பிரதமர் விளாடிமிர் புடினுக்கு எதிராக மக்கள் தொடர் ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர்.ரஷ்யாவின் தற்போதைய பெரும் சவாலாகக் கருதப்படுவது ஊழல் தான். அதை ஊட்டி வளர்ப்பது புடின் என்பதால் மக்களிடையே அவருக்கு எதிர்ப்பலை எழுந்துள்ளது. இந் நிலையில், அரசு ஊழலுக்கு எதிராகக் கடும் நடவடிக்கைகளை அதிகாரி ஒருவர் நேற்று அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
மேலும், எம்.பி.,க்கள், நீதிபதிகள்,வழக்கறிஞர்கள், அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள், புலனாய்வுத் துறை அதிகாரிகள்,என மொத்தம் 700 பேர் மீது ஊழல் வழக்குகள் பதியப் பட்டுள் ள தாகவும் கூறினார்.கடந்தாண்டில் மாஸ்கோ மற்றும் மாஸ்கோ மண்டலத்தில் மட்டும் ஏழாயிரத்து 900 ஊழல் வழக்குகள் பதியப்பட்டுள் ளன. மாஸ்கோவில் தேர்தல் கமிஷன் அதிகாரி ஒருவர் மீதும் ஊழல் வழக்குப் பதிவாகியுள்ளது. 
ரஷ்யா ஆளில்லா விண்கலம் இன்று பூமியில் விழ வாய்ப்பு.
செவ்வாய் கிரகத்தினை ஆராய ரஷ்யா அனுப்பிய ஆளில்லா விண்கலம் தோல்வியடைந்ததால், அது இன்று பூமியில் விழ வாய்‌ப்பு இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது எனினும் கடல் பகுதிகளில் விழ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.
இது குறித்து ரஷ்ய விண்வெளி ஆய்வு மையமான ராஸ்‌காஸ்மோஸ் விடுத்துள்ள செய்தியில் செவ்வாய் கிரகம் குறித்து ஆராய ரஷ்யாவின் விண்வெளி நிறுவனம், கடந்த புஹூபோஸ் எனும் ஆளில்லா விண்கலத்‌தினை கடந்த ஆண்டு நம்பவர் மாதம் 9-ம் தேதி விண்வெளியில் செலுத்தியது. ‌
மொத்தம் 165மில்லியன் டாலர் செலவில் 13.5 டன் எடை கொண்ட இந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தினை ஆராய்ந்து உரிய தகவல்களை அனுப்பும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்த அளவு செயல்படாததாதல் தோல்வியில் முடிந்தது.இதை‌யடுத்து இந்த விண்கலம் பூமியை நோக்கி வருகிறது. இன்று புஹூபோஸ் விண்கலம், இந்தியப்பெருங்கடல் அல்லது அட்லாண்டிக் பெருங்கடலில் விழ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ராஸ்காஸ்மோஸ் தெரிவித்துள்ளது. இதன் சிதறுண்ட பாகங்கள் பசிபிக் பெருங்கடலின் சீலி நாட்டின் கடல்பகுதியிலோ விழலாம் .இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
ஈராக்கில் நடந்த குண்டு வெடிப்பில் குழந்தைகள் உட்பட 8 பேர் பலி.
ஈராக் நாட்டில் ஷியா முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் மோசுல் நகரத்தில் உள்ள அகதிகள் முகாமில் இன்று காரில் வைத்திருந்த குண்டு வெடித்தது.
இந்த சம்பவத்தில் 4 பெண்கள் மற்றும் 3 குழந்தைகள் உட்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். மேலும் 4 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்த தகவலை மோசுலில் உள்ள ஹம்தானியா மருத்துவமனையின் மேனேஜர் லலித் ஹப்பாவும், பொலிசாரும் தெரிவித்துள்ளனர். சம்பவம் நடந்த மோசுல் நகரம் பாக்தாத்தின் வடக்கே 390 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பதவி விலகப்போவதாக யூசுப் ராஸா கிலானி அறிவிப்பு.
பாகிஸ்தான் பிரதமர் பதவியிலிருந்து விலக தயாராக இருப்பதாக யூசுப் ராசா கிலானி அறிவித்துள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ராஸா கிலானி இன்று(16.1.2012) அதிபர் சர்தாரியை சந்தித்தார். இந்த சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கிலானி, நாடாளுமன்றம் விரும்பினால் பதவி விலக தயாராக உள்ளதாக அதிபர் சர்தாரியிடம் கூறியுள்ளதாக கிலானி தெரிவித்தார்.மேலும் கிலானி உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகவும் முடிவு செய்துள்ளார். உச்ச நீதிமன்றம் அனுப்பிய சம்மனை அடுத்து பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ராஸா கிலானி ஆஜாராகும் முடிவை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சர்கோசியின் அவசர பொருளாதாரச் சீர்திருத்தங்கள் அறிமுகம்.
பிரான்சின் பொருளாதாரத் தகுதி AAA என்பதிலிருந்து AA+ ஆகக் குறைந்ததால் ஜனாதிபதி சர்கோசி பொருளாதாரத்தைச் சீரமைக்க அவசர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். இந்த மாதம் முடிவதற்குள் பிரான்சின் பொருளாதாரத்தை AAAக்குக் கொண்டு வந்தால் மட்டுமே அடுத்த ஜனாதிபதி தேர்தலில் அவருக்கு வெற்றி வாய்ப்பு உறுதியாகும்.
இந்நிலையில் அவர் சில கடுமையான நடவடிக்கைகளை எடுக்க முனைந்துள்ளார். முன்னாள் பிரதமர் மைக்கெல் டெப்ரேயின் நினைவு நாள் நிகழ்ச்சி அம்போய்ஸில் நடைபெற்ற போது சர்கோசி அங்கு உரை நிகழ்த்தினார். அப்போது நாட்டின் பொருளாதார நிலையை எடுத்துரைத்தார். இது ஒரு பரிசோதனை, இதனை நாம் எதிர்க்க வேண்டும் என்றார். இந்நிலையில் நாம் துணிச்சலையும் அமைதியையும் காட்ட வேண்டும் என்றார்.ஜனாதிபதி தேர்தலுக்கான கருத்துப்பணியில் இவருக்கு எதிரான சோசலிசக் கட்சி வேட்பாளரான ஃபிராங்கோய்ஸ் ஹோலாண்டேக்கு இப்போது ஆதரவு பெருகியுள்ளது. சர்கோசிக்கு சர்வதேச அரங்கிலும் ஆதரவு குறைந்துள்ளது.
பொதுக்கடன் பெருக்கம், வளர்ச்சிக் குறைவு, பொருளாதார வீழ்ச்சியின் அச்சுறுத்தல் ஆகியவற்றால் இறங்குமுகத்தில் இருக்கும் பொருளாதாரத் தகுதியைச் சரிசெய்ய, வரும் நான்கு மாதங்களில் இரண்டு கடுமையான திட்டங்களை அரசு அறிமுகம் செய்கிறது. ஆனால் பிரிட்டனின் ஆட்குறைப்பு மற்றும் வரிவிதிப்பை விட இந்த இரண்டு திட்டங்களும் கடுமை குறைந்ததாகவே இருக்கும்.பிரான்சின் பிரதமரான ஃபிராங்கோய்ஸ் ஃபில்லோன், இதில் புதிய கடுமையான திட்டங்கள் எதுவும் இல்லை. சிறிய அளவிலான சரிக்கட்டுதல்கள் தான் என்றார். சர்கோசியின் பதவிக்காலத்தின் இந்தக் கடைசிச் சில மாதங்களில் பொருளாதாரத் தகுதியை மீண்டும் பழைய நிலைக்கு உயர்த்தி, மக்களின் ஆதரவையும், நம்பிக்கையையும் பெறும் முயற்சிகளில் ஈடுபடுவார்.
தன் பிரச்சாரத்தின்போது ஹோலாண்டே இந்தப் பொருளாதாரத் தகுதிக்கணிப்பால் பிரான்சின் தாம் குறைந்து போய்விடவில்லை, மாறாக சர்கோசி சார்ந்துள்ள வலதுசாரிக் கொள்கையின் நம்பகத்தன்மை, அவரது அரசியல், கொள்கை, குழு, அரசு மற்றும் அவரது ஜனாதிபதி பதவி என அனைத்தும் தரம் குறைந்துபோய்விட்டன என்றார்.அமெரிக்காவின் ஜே.பி. மோர்கன் நிறுவனத்தில் தலைமைச் செயலரான ஜேமீ டிமோன், ஒரு ஜேர்மனியச் செய்தித்தாளுக்கு அளித்த பேட்டியில் ஐரோப்பா தான் உலகப்பொருளாதாரத்துக்கான மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது என்றார். மேலும் இந்நிலை தொடரும் என்றும் குறிப்பிட்டார்.
ஐரோப்பா தனது நெருக்காடியிலிருந்து மீள்வதற்கான வாய்ப்புகள் 90 சதவீதம் இருப்பதாக முன்பு கூறிய மோர்கன் இப்போது 60 சதவீதம் தான் இருப்பதாகக் கூறியிருக்கிறார். உடனடியாக இந்தப் பிரச்னைக்கு ஒரு தீர்வு காண வேண்டும், இல்லையென்றால் இந்தப் பிரச்னை நீடிப்பதால், சந்தையின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே போகும் என்று எச்சரிக்கை விடுத்தார்.இந்தப் பிரச்னைக்கான தீர்வாக இவர் கூறும் ஆலோசனை, யுரோ மண்டலத்திலிருந்து கிரீஸை உடனடியாக வெளியேற்றுவது தான். இந்த முடிவு நல்லதாகத் தோன்றவில்லை எனினும் இதுவே பிரச்னையை சமாளிக்க நமக்கு உதவும், என்கிறார்.
கனடாவில் மாணவர் கருத்தரங்கில் தொற்றுநோய் பரவியது.
கனடாவில் விக்டோரியா மாநிலத்தில் மாணவப் பத்திரிகையாளர் நடத்திய கருத்தரங்கில் கலந்துகொண்டவர்களுக்குத் திடீரென்று தொற்றுநோய் தாக்கியது. இதனால் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் தத்தம் அறைகளிலேயே தங்கியிருக்குமாறு தனிமைப்படுத்தப்பட்டனர்.
இவர்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு, தலைவலி மற்றும் தசையிறுக்கம் ஏற்பட்டது.கனடாவில் பல்கலைக்கழக ஆண்டுக் கருத்தரங்கு (NHSH), ஹார்பர் டவர்ஸ் உணவுவிடுதியில் நடந்தது. இதில் கலந்து கொண்ட 360 பேரில் 60 பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டது. CBCசெய்திக்கு எம்மா கோட்மேர் தெரிவித்தார். இவரும் பேராளராக வந்து நோய்த்தொற்றுக்கு ஆளானார். மருத்துவர்கள் உணவுவிடுதிக்கு வந்து சிகிச்சை அளிக்கின்றனர்.செயிண்ட் தாமஸ் பல்கலைக்கழகத்தின் மாணவப் பத்திரிகையாளரான லாரா பிரௌன் அங்கிருந்து வந்த பத்துப்பேரில் ஐந்துபேருக்கு வைரஸ் தாக்குதல் ஏற்பட்டதாகக் கூறினார். இந்த நோய் விரைவாகப் பரவும் என்பதால் அறையிலேயே தங்கியிருக்குமாறு மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால் தங்கும் செலவு மாணவருக்கு அதிகரித்துள்ளது.
உணவு விடுதியில் சாப்பிட்ட பிறகு விக்டோரியா பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்காக பேராளர்கள் அனைவரும் பேருந்தில் வந்தனர். பேருந்திலேயே சிலருக்கு மயக்கம் ஏற்பட்டது. உடனே அவர்கள் அந்த நிகழ்ச்சிக்குப் செல்வதை ரத்துத் செய்தனர். மருத்துவ சிகிச்சையைப் பெற்றனர்.விக்டோரியாவில் 74ஆவது பல்கலைக்கழக மாணவர்கள் கருத்தரங்கு கடந்த புதனன்று தொடங்கி சனியன்று நிறைவு பெற்றது. இக்கருத்தரங்கை விக்டோரியப் பல்கலைக்கழகத்தின் மாணவப் பத்திரிகையான மார்ட்லெட்டும் காமோசும் கல்லூரியின் மாணவப் பத்திரிகையான நெக்ஸசும் நடத்தின.
ஜேர்மனியைத் தாக்கும் பொருளாதாரக் கட்டுப்பாடு.
ஐரோப்பாவின் பல நாடுகளில் பரவலாகப் பின்பற்றப்பட்ட பொருளாதாரக் கட்டுப்பாடு இப்போது ஜேர்மனியையும் தாக்குகிறது. கெய்னேஷியப் பொருளாதாரக் கொள்கைகள் இன்றைக்கு அரசியலையும் பாடாய்ப்படுத்துகிறது.
கடந்த 1945 – 51 ஆம் ஆண்டுகளில் அட்லீ அரசுகளைத் தாக்கிய பொருளாதாரக் கொள்கைகளால் பழமைவாதிகள் போருக்குப் பிந்திய ஒப்பந்தங்களை ஏற்றுக்கொண்டனர். அட்லீ பிரதமர் ஹக் கெய்ட்ஸ்கெல் (1950-51) மற்றும் பழமைவாதிக் கட்சிப் பிரதமர் பட்லெர் (1951-55) ஆகியோரின் கொள்கைகளிலிருந்து “பட்ஸ்கெல்லிசம்" என்ற இணைந்த கொள்கை ஒன்று உருவாக்கப்பட்டது.
தொழிலாளர் கட்சியின் தலைவரான எட் மிலிபேண்டின் முதலாளித்துவத்தை ”கொள்ளையடிக்கும் முதலாளித்துவம்” என்று குறிப்பிடுவதைக் கேட்க கேமரூன் தயாராகிவருகிறார். முதலாளித்துவத்தின் விளைவாக, RBS வங்கியின் தலைவரான ஸ்டீஃபென் ஹெஸ்ட்டெருக்கு ஓர் ஆண்டுக்கு ஊக்கத்தொகை மட்டுமே இரண்டு மில்லியன் பவுண்டு வழங்கப்படுகிறது.
இதை நாட்டின் பிரதமரும், ஜனாதிபதியும் எப்படி அனுமதிக்கின்றனர்? கெய்னேஷிய பொருளாதாரக் கொள்கையின் படி ஒரு நாட்டில் சிறு, குறுந்தொழில்கள், வங்கிக் கடன் பெற இயலாமல் நசிவடைகின்றன. ஆனால் பெருந்தொழிலதிபர்கள் குறைந்த வட்டியில் அதிகக் கடன் பெற்று மிகுந்த இலாபம் அடைகின்றனர். இவர்களது தொழில் நஷ்டக் கணக்கு காட்டினாலும் இவர்களுக்கு அதனால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது.
ஜார்ச் ஆஸ்போர்ன், பொருளாதாரத் திட்டம் A யைத் தெரிவு செய்வதில் பெருந்தவறிழைத்து விட்டார். இத்திட்டம் அதீத வறுமைக்கான திட்டமாகும். தாட்சரின் காலத்து வரலாற்றில் மயங்கிப் போய் இத்திட்டத்தை இவர் ஏற்றார். ஆனால் ஃபாக்லாந்து போருக்குப் பிறகு தாட்சரின் புகழ் அதல பாதாளத்தில் விழுந்துவிட்டது. எனவே திட்டம் A என்பது இங்கிலாந்துக்கு எதிர்பார்த்த பலனைத் தரவில்லை.
இப்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் இங்கிலாந்து நாட்டின் பொருளாதார வளம் நலிவடைந்ததுடன் வேலைவாய்ப்பும் குறைந்துபோனது. உதாரணத்திற்கு இந்நாட்டின் மோட்டார்த் தொழில்கள் பற்றி ஆராய்ந்தால் இத்தொழில்கள் இந்நாட்டிற்கு உரியன கிடையாது. வெளிநாட்டின் தேவைகளுக்காக இங்கு இத்தொழில் நடத்தப்பட்டு வருகிறது. இங்கு நடைபெறும் உற்பத்தி அனைத்தும் ஏற்றுமதிக்கு உரியவை. வெளிநாடுகளில் பொருளாதார வீழ்ச்சி ஏற்படும்போது இந்நாட்டின் உற்பத்தி தடைபடும். ஆட்குறைப்பு ஏற்படும் வேலைவாய்ப்பு பறிபோகும்.
இதுபோன்ற கொள்கைகளால் ஐரோப்பாவின் மிகப்பெரிய ஏற்றுமதியாளராக இருந்த ஜேர்மனி, யூரோ மண்டலத்தின் பொருளாதாரச் சிக்கலால், தானும் சிக்கலுக்கு உள்ளானது. பிரங்ஸல்ஸில் தொடர்ந்து நடைபெறும் கூட்டங்கள், யூரோ மண்டலத்தில் நல்ல வளர்ச்சிக் கொள்கையை உருவாக்க வேண்டும். தாட்சர் வழியில் ”தடையற்ற உழைப்புச் சந்தையை” உருவாக்க வேண்டும் என்றே பேசி வருகின்றன. இதனால் பெரும்பயன் எதுவும் கிடையாது. இந்தக் கூட்டத்தில் பேசப்படும் விடயங்கள் எதுவும் தற்போதைய சிக்கலைத் தீர்க்கப் போவதில்லை. பெரியளவில் கூட்டுத் தேவையை முன்னிறுத்தியே திட்டங்கள் தீட்டப்படுகின்றன.
கடந்த பல பத்தாண்டுகளில் கெய்னேஷிய தத்துவங்களைப் பின்பற்றி இங்கிலாந்து போன்ற நாடுகள் நிதிநிலை அறிக்கையில் உபரி மதிப்பைக் காட்டிவந்தன. முதலீட்டை மையப்படுத்திய கெய்னேஷிய தத்துவம், பணம் பல நாடுகளிடையே சுற்றி வருவதை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் ஒரு நாட்டில் பொருளாதாரத் தட்டுப்பாடு ஏற்படும்போது அந்த இடத்தில் பணச்சுழற்சி நின்றுவிடுகிறது என்பதை நாம் மறுக்கவியலாது. இன்று அதனைக் கண்கூடாகக் காண்கிறோம். எனவே புதிய கொள்கையை விபரம் கண்டறிய வேண்டும்.பாருக்குப் பிந்தைய ஒப்பந்தங்களின்படி ஜேர்மனி புதிய நாட்டின் பொருள்வளத்தைப் பெருக்கியது சரிதான். ஆனால் இன்று வளங்கள் மிகுதியாக உள்ளன. அவற்றை முறையாகப் பயன்படுத்தத் தெரியவேண்டும். அப்போதுதான் ஜேர்மனியில் பொருளாதார நெருக்கடி நீங்கும் உற்பத்தியும், வேலைவாய்ப்பும் பெருகும்.
பொதுவாக்கெடுப்பு குறித்த பேச்சுவார்த்தைக்கு சம்மதம் தெரிவித்த பிரிட்டன்-ஸ்காட்லாந்து தலைவர்கள்.
ஸ்காட்லாந்தின் விடுதலைக்காக பாராளுமன்றத்தில் பொது வாக்கெடுப்பு நிகழ்த்துவது குறித்து இருநாட்டுத் தலைவர்களும் சந்திக்க மறுத்து வந்த நிலையில் இப்போது இன்னும் சில நாட்களில் இவர்களின் சந்திப்பு நிகழும் என்று பிரிட்டனின் பிரதமர் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது.ஸ்காட்லாந்தின் முதலமைச்சர் அலெக்ஸ் சால்மண்ட் பொது வாக்கெடுப்பு நியாயமாகவும், முடிவெடுக்கும் விதமாகவும் நடைபெறுவதற்குத் தேவையான சட்ட ரீதியான அதிகாரம் அதற்கு வழங்கப்படவேண்டும், என்றார்.
ஸ்காட்லாந்தின் நாடாளுமன்ற உறுப்பினரான மைக்கேல் மூர், ஸ்கை நியூசுக்கு அளித்த பேட்டியில் இந்தப் பிரச்னை குறித்து இன்னும் சில விடை தெரியாத வினாக்கள் இருப்பதாகத் தெரிவித்தார். இருந்தாலும் பிரிட்டன் அரசாங்கத்தின் விருப்பத்திற்கேற்ப இந்த வாக்கெடுப்பை நடத்துவோம் என்றார்.அலெக்ஸ் சால்மண்டின் செய்தித் தொடர்பாளர் இதுபற்றிப் பேசும்போது பல வினாக்கள் இருப்பதை உறுதி செய்தார். சுதந்திரம் கேட்கின்ற தேசியவாதிகளின் நோக்கம் என்ன என்பது எங்களுக்குத் தெரியவில்லை. எங்கள் வங்கிகளை எப்படி முறைப்படுத்துவோம் பிரிட்டன் மக்களும் பணம் போட்டுள்ள இரண்டு பெரிய வங்கிகள் எங்களிடம் உள்ளன. அவை இரண்டாண்டுகளுக்கு முன்பு திவாலாயின. இதை நாங்கள் எப்படி சரிசெய்வோம்.
எங்கள் ஓய்வூதியப் பணத்தை இனி யார் வழங்குவார்? எவ்வளவு வழங்குவார்கள்? நிறைய விடயங்கள் பேசித் தெளிவு பெற வேண்டும். இப்போது எடுக்கும் இந்த முடிவு இன்னும் முந்நூறு ஆண்டுகளுக்கு உரியதாகும். எனவே இதற்கு கால அவகாசம் தேவை, என்றார்.சுதந்தர ஸ்காட்லாந்து பல பொருளாதார சிக்கல்களை எதிர்கொள்ளும் என்பது பொருளியலாளரின் கணிப்பு. ஸ்காட்டிஷ் தேசியக் கட்சியும் அரசாங்கமும் வாக்கெடுப்புக்கு கால அவகாசம் தேவை என்று கருதும் சூழ்நிலையில் டேவிட் கேமரூனுடன் வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்துவதாக அறிவித்துள்ளன.
விடுதலை கொடுக்கத் துடிக்கும் பிரிட்டனின் செய்தித்தொடர்பாளர், இது ஒரு வரவேற்கத் தகுந்த மேம்பாடு, உண்மையான வளர்ச்சி” என்று பாராட்டினார். கேமரூன், சால்மண்டைச் சந்திக்க ஆவலோடு இருப்பதாகத் தெரிவித்தார். தான் கட்சியுடன் வாக்கெடுப்புக்கான ஏற்பாடுகளை கலந்தாலோசித்த பின்பு தலைவர்களின் சந்திப்பு நிகழும் என்றார்.பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் வாக்கெடுப்பு முயன்றவரை சீக்கிரமாக நடத்தப்பட வேண்டும் என்கிறார் ஆனால் ஸ்காட்லாந்தின் சால்மண்ட் எதிர்வரும் 2014ஆம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டும் என்கிறார்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF