Saturday, January 21, 2012

NEWS OF THE DAY.

மந்தமான உலக பொருளாதார நிலை இலங்கைக்கு ஆபத்தை ஏற்படுத்தும்: உலக வங்கி.
மேற்கத்தேய நாடுகளின் நிதி நெருக்கடி ஏற்படுத்தியுள்ள பொருளாதார மந்தநிலையானது, இலங்கையில் பொருளதாரத்தில் இறங்கு நிலையை ஏற்படுத்துமென உலக வங்கி தெரிவித்துள்ளது. இலங்கையின் பொருளாதாரம் 2011ல் 8.3 வீதமாக இருந்து 2012ல் 8.0 வீதத்தை அடையும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்திருந்தது.இந்நிலையில், உலக வங்கியின் 2012ம் ஆண்டுக்குரிய உலக பொருளாதார வாய்புக்கள் குறித்தான அறிக்கை வெளிவந்துள்ளது.
இதில் தென்னாசிய பிராந்தியத்தின் பொருளாதார வாய்ப்புக்கள் குறித்தான மதிப்பீட்டில், மேற்கத்தேய நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளதார மந்தநிலை இலங்கையின் பொருளாதார வளர்ச்சியின் இலக்கை அடைய வாய்ப்புகளை வழங்காதென தெரிவித்துள்ளது.யூரோ நாணய வலயத்தில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி, தென் ஆசியாவுக்கான பொருளாதார மூலதன பரிமாற்றத்தில், பலவீன நிலையை தோற்றுவிக்கும் எனவும் உலக வங்கி எச்சரித்துள்ளது.
இலங்கை, மாலைத்தீவு மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகள் ஐரோப்பிய வலய நாடுகளுடன் கொண்டிருக்கின்ற நெருக்கமான வர்த்க பரிமாற்றத்தில், சரிவு நிலை ஏற்படும் எனவும் உலக வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சுற்றுலாத் துறையில்  இலங்கையும் மாலைதீவும் கடினமான நிலையை எட்ட வேண்டும் என தெரிவித்துள்ள உலக வங்கி , எண்ணெய் இறக்குமதி சார்ந்த நாடுகளில் ஏற்படும் அழுத்தம், எண்ணெய் விலை அதிகரிப்பை இலங்கையில் ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளது.
அப்துல் கலாம் இன்று இலங்கை விஜயம்.
இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும் புகழ்பெற்ற அணு விஞ்ஞானியுமான அப்துல் கலாம் இன்று இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.நாளை மாலை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெறவுள்ள நிகழ்வு ஒன்றில், ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து அப்துல் கலாம் மும்மொழிக் கல்வித் திட்டத்தை அறிமுகம் செய்யவுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, எதிர்வரும் திங்கட்கிழமை யாழ்ப்பாணம் செல்லும் அப்துல் கலாம் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் வடமாகாண பாடசாலை மாணவர்கள் மத்தியில் உரையாற்றவுள்ளார்.அடுத்து, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அப்துல் கலாம் தனது இலங்கைக்கான பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியா புறப்பட்டுச் செல்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
செனட் சபைக்கு இந்தியா அங்கீகாரம்! தீர்வை தெரிவுக்குழுவே தீர்மானிக்கும்! அரசாங்கம் அறிவிப்பு.
இனப்பிரச்சினைக்கான தீர்வாக செனட் சபை அமைக்கப்படுவதை இந்தியா ஏற்றுக் கொண்டுள்ளது. ஆனாலும் தீர்வு குறித்து பாராளுமன்றத் தெரிவுக் குழுவே தீர்மானிக்கும். இதற்கு வெளியில் எத்தனை சுற்றுப் பேச்சுக்கள் நடைபெற்றாலும் அவை தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்குத் தீர்வாக அமையாது என்று அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.இனப்பிரச்சினை விடயத்தில் தன்னிச்சையாக தீர்வை ஏற்படுத்தி சர்வாதிகாரியாக செயற்பட நாம் விரும்பவில்லை. அதேபோன்று நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டும் செயற்பட முடியாது. எனவே தீர்வுக்கான அனைத்து விடயங்கள் குறித்தும் தெரிவுக் குழுவிலேயே பேசப்படல் வேண்டும் என்றும் அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
தகவல் திணைக்களத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற அமைச்சரவை தீர்மானம் வெளியிடும் ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த போதே ஊடக அமைச்சரும் அமைச்சரவையின் பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் கூறியதாவது;
அரசியல் தீர்விற்கான விடயங்கள் குறித்து பாராளுமன்ற தெரிவுக் குழுவில் பேசுவதே சிறந்தது. இதற்கு வெளியில் எவ்வளவு பேசினாலும் இறுதியில் பாராளுமன்றத்திற்கே வர வேண்டும்.எவ்வாறாயினும் இனப் பிரச்சினைக்கான தீர்வுக்கான அதிகாரப் பகிர்வு குறித்தோ அல்லது செனட் சபை அமைப்பது தொடர்பாகவோ பாராளுமன்ற தெரிவுக் குழுவிலேயே பேசப்படல் வேண்டும்.பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் வழங்குவதில் பிரச்சினைகள் உள்ளன.
13ஆவது திருத்தச் சட்டத்தை முழுஅளவில் நடைமுறைப்படுத்துவது குறித்தும் உத்தியோகபூர்வமாக பாராளுமன்றத்திலேயே பேசப்படல் வேண்டும்.எவ்வாறாயினும் மாகாண சபைகளுக்கு முழு அளவிலான அதிகாரங்கள் வழங்குவது என்பது பரந்த விடயமாகும். இதனை குறிப்பிட்ட இரு தரப்பு பேசுவதை விட பாராளுமன்றத்தில் அங்கத்துவம் வகிக்கும் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து பேசுவதன் ஊடாகத் தான் தீர்மானத்துக்கு வர முடியும்.
செனட் சபை ஊடாக தமிழ் மக்களின் அரசியல் உள்ளிட்ட ஏனைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பாக அரசாங்கம் ஆராய்ந்து வருகின்றது. இதற்கு இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கும் விருப்பம் தெரிவித்துள்ளார்.மத்திய அரசில் இருந்து மாகாண சபைகள் முழு அளவில் தனித்துச் செயற்பட ஆரம்பித்தால் அது பிரச்சினைகளையே தோற்றுவிக்கும்.
இதற்காக சிறுபான்மை மக்களின் பிரதிநிதிகளை கூடுதலாக உள்வாங்கி செனட் சபை உருவாக்கப்படுமேயானால் மத்திய அரசிற்கும் மாகாண சபைகளுக்கும் இடை யிலும் தொடர்புகள் ஏற்பட்டு நிலைமை சுமுகமாக அமையும்.எனவேதான் அரசாங்கம் செனட் சபையினை அமைப்பது குறித்து யோசனையை முன் வைக்கின்றது. எவ்வாறாயினும் இறுதித் தீர்மானம் பாராளுமன்ற தெரிவுக் குழுவின் கைகளிலேயே தங்கியுள்ளது என்றார். 
பதில் எதிர்க்கட்சித் தலைவராக ஜோன் அமரதுங்க நியமனம்.
இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கு விஜயம் செய்ததையடுத்து, பதில் எதிர்க்கட்சித் தலைவராக ஜோன் அமரதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
ரணில் விக்ரமசிங்க நாடு திரும்பும் வரையில் பதில் எதிர்க்கட்சித் தலைவராக ஜோன் அமரதுங்க கடமையாற்றுவார் என நாடாளுமன்றிற்கு ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.
இதன்படி எதிர்வரும் 24ம் திகதி வரையில் பதில் எதிர்க்கட்சித் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க கடமையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொழும்பு மாநகராட்சி தொடர்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!- மனோ கணேசன் - முஸாமில் கைச்சாத்து.
கொழும்பு மாநகரசபையின் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சிக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசனும், கொழும்பு மாநகரசபை மேயர் முஸாமிலும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்து இட்டுள்ளார்கள்.நேற்று காலை புதிய ஆண்டுக்கான முதல் மாநகரசபை அமர்வு நடைபெறுவதற்கு சற்று முன்னர் மாநகரசபையில் அமைந்துள்ள மேயர் அலுவலகத்தில் இந்த கையெழுத்து இடும் நிகழ்வு நடைபெற்றது.
ஜனநாயக மக்கள் முன்னணிக்கு வாக்களித்த வாக்காளர்களின் நலன்களை முன்னிறுத்திய ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே ஜனநாயக மக்கள் முன்னணி, ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு வழங்குகின்றது.மேயர் முசாம்மிலுடன், பிரதி மேயர் டைடஸ் பெரேரா மற்றும் கொழும்பு மாநகரசபையின் ஜமமு குழுத்தலைவர் கலாநிதி கங்கை வேணியன் தலைமையில் கட்சியின் அனைத்து மாநகரசபை உறுப்பினர்கள் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.
மாநகரசபையின் முன்பள்ளிகளில் நீண்ட காலமாக தமிழ் சிறார்களுக்கு புறக்கணிக்கப்பட்டுள்ள தமிழ் மொழி மூல கல்வி, மாநகரசபை நூலகங்களில் தமிழ் நூல்கள் மற்றும் அலுவலர்கள், மாநகரத்தில் தமிழ் மொழி பெயர் பலகைகள், கொழும்பு மாநகரசபை அலுவலகங்களில் தமிழ் பேசும் மக்கள் தமது தாய்மொழியில் சேவைகளை பெற்றுக்கொள்ளல், தமிழ் மொழி பாவனை மற்றும் நூலகங்கள் தொடர்பில் விசேட மக்கள் கண்காணிப்பு குழுக்களை அமைத்தல், மாநகரின் பின் தங்கிய பகுதிகளில் ஒவ்வொரு மாதமும் ‘கொழும்பு மக்கள் எழுச்சி இயக்கம்’ என்ற பெயரில் ஜமுமு நடத்த ஆரம்பித்துள்ள மாதாந்த சிரமதான இயக்கத்திற்கு மாநகரசபை இயந்திரத்தின் பூரண அனுசரணை, ஜமமு பிரேரிக்கும் பின் தங்கிய மற்றும் மாநகர் குடியிருப்பு பிரதேசங்களுக்கு கார்பெட் வீதிகள் அமைத்தல் ஆகிய விவகாரங்கள் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ளன.
அதேவேளையில், அபிவிருத்தி நோக்கில் கொழும்பு மாநகரின் பின்தங்கிய பகுதிகளில் வாழும் மக்களின் அனுமதியை பெறாமல் வீடுகள் உடைக்கப்படாமை, கொழும்பு மாநகரில் அனைத்து இனத்தவருக்கும், மொழிகளுக்கும் சம அந்தஸ்து வழங்கப்படுவதன் மூலம் முழு நாட்டிற்கும் முன்னுதாரணமான நிர்வாகத்தை நடத்துவது என்பவை தொடர்பில் இணக்கப்பாடுகள் ஏற்பட்டுள்ளன.இது தொடர்பில் கருத்து தெரிவித்த மனோ கணேசன் கூறியதாவது,மாநகரசபை நிதிக்குழு தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பெரும்பான்மை பெற்றுகொண்டுள்ளது. இதற்கு காரணம் ஐக்கிய தேசிய கட்சியில் நிலவும் உட்கட்சி பூசல் மற்றும் கட்டுப்பாடு இன்மை ஆகும். அக்கட்சியை சேர்ந்த சிலர் கட்சிமாறி வாக்குகளை அளித்துள்ளனர்.
இவர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுப்பது அக்கட்சி தலைமையின் வேலை. ஆனால் இது எந்த விதத்திலும் மேயரின் அதிகாரத்தை கட்டுப்படுத்தாது. நிதிக்குழு தொடர்பில் மேயர் முடிவு எடுக்கும் அதிகாரத்தை கொண்டுள்ளார்.அதற்கான இறுதி அதிகாரம் மாநகரசபைக்கு உள்ளது. மாநகரசபையில் பெரும்பான்மையை உறுதிபடுத்த நாம் மேயர் முசாம்மிலுக்கு ஆதரவு வழங்குகிறோம். இந்நிலையில் எமது ஆதரவு கொழும்பு மாநகர சபையின் நிலையான ஆட்சிக்கு பெரும் காரணமாக அமைகிறது.
எமது இந்த ஆதரவு ஜனநாயக வழிமுறைகளுக்கு உட்பட்டுள்ள அதேவேளையில் எமக்கு வாக்களித்த தமிழ் மக்களின் நலன் சார்ந்ததாகும். எமக்கு வாக்களித்த தமிழ் மக்களின் நலன்களை நாம் கையெழுத்து இட்டுள்ள இந்த ஒப்பந்தம் உறுதி செய்கிறது.நீண்ட காலமாக ஒதுக்கப்பட்டுள்ள கொழும்பு தமிழ் வாக்காளர்கள் மாநகரசபை இயந்திரம் மற்றும் சேவைகளுக்குள் உள்வாங்கப் பட வேண்டும். இது நடைபெறாவிட்டால் நாம் எமது ஆதரவை வாபஸ் வாங்குவோம்.
மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரங்களை பகிர முடியாது! ஜனாதிபதி மகிந்த உறுதி: ஆங்கில நாளிதழ்.
மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரங்களைப் பகிர முடியாது என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணாவிடம் தெளிவாகக் கூறிவிட்டதாக, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார் என கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும், செனட் சபை ஒன்றை அமைப்பது உள்ளிட்ட விடயங்களில் அரசியலமைப்பின் 13வது திருத்தத்துக்கு அப்பால் செல்வதற்குத் தயாராக இருப்பதாகவும் எஸ்.எம்.கிருஸ்ணாவிடம் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
நேற்று நடந்த திருமண நிகழ்வு ஒன்றில் ஐ.தே.கவின் முன்னாள் பிரதித் தலைவர் கரு ஜெயசூரியவை சந்தித்த போதே, மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரங்களைப் பகிர முடியாது என்று இந்தியாவிடம் கூறி விட்டதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.ஆறுமுகன் தொண்டமான் உள்ளிட்ட பல அமைச்சர்கள் பொலிஸ் அதிகாரங்களை மாகாணங்களுக்குப் பகிர்வதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருவதாகவும் அவர் கூறியிருப்பதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் குறிப்பிடப்பட்டுள்ளது.
வர்த்தக மையங்களில் கப்பம் கோரப்படுகின்றது: சபாநாயகர்.
இலங்கையிலுள்ள சில வர்த்தக மையங்களில் கப்பம் கோரப்படுவதாக சபாநாயகர் சமால் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
வர்த்தக மையங்களில் கப்பம் கோருவோர் தொடர்பில் விசாரணை நடத்துமாறு சபாநாயகர் ஆளும் கட்சியினரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.இதே வேளை, வர்த்தக மையங்களில் கப்பம் கோரப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரண, நுகர்வோர் விவகார அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவிடம் கேள்வி எழுப்பினார்.
இக்கேள்விக்க பதிலளித்த அமைச்சர் ஜொன்ஸ்டன், வர்த்தக மையங்களில் கப்பம் கோரல் சம்பவங்கள் இடம்பெறவில்லை என தெரிவித்துள்ளார்.எனினும், கப்பம் கோரல் சம்பவங்களினால் வர்த்தக மையங்கள் பாரியளவில் பாதிக்கப்படுவதாக புத்திக்க பத்திரண இன்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத நடவடிக்கையில் காணாமல் போனவர்களுக்கு அரசோ, இராணுவமோ பொறுப்பு இல்லை: கோதபாய ராஜபக்ச.
தமிழீழ விடுதலைப் புலி பயங்கரவாதிகள் அரசியல் கட்சிகளில் இணைந்து செயற்பட்டு வருவதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.வடக்கு கிழக்கில் போர் நிறைவடைந்துள்ள போதிலும், சில பயங்கரவாதிகள் அரசியல் கட்சிகளுடன் இணைந்து நாட்டின் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்க முயற்சி செய்து வருவதாக பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார்.மாத்தளை கொஹொன்வலவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் போதே பாதுகாப்புச் செயலாளர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாத நடவடிக்கைளில் ஈடுபட்டு காணாமல் போவோர் குறித்து அரசாங்கமோ, இராணுவமோ பொறுப்பு சொல்லாது என்றும் சில வெளிநாட்டு நிறுவனங்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவளித்து வருகின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார்.மேலும், தமிழீழ விடுதலைப் புலி அமைப்பின் நடவடிக்கைகள் தொடர்பில், புலனாய்வுத் தரப்பினர் தொடர்ந்தும் அவதானித்து வருவதாக பாதுகாப்பு செயலாளர் கோட்டாபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.யுத்த ரீதியாக தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டாலும், அந்த அமைப்பின் கொள்கைகளைப் பின்பற்றும் நபர்கள் இருப்பதை மறந்து விடக்கூடாது எனவும் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபாய ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.
களனி பிரதேச சபை உறுப்பினர்களுக்கு மேர்வின் கொலை மிரட்டல்!
களனி பிரதே சபையின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு எதிராக, அமைச்சர் மேர்வின் சில்வா தரப்பினர் மிரட்டல் விடுத்து வருவதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.பாதாள உலகக் குழுக்களைப் பயன்படுத்தி கொலை செய்யப் போவதாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது என களனி பிரதேச சபையின் உறுப்பினர் அசித மடவல தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கு மின் அஞ்சல் மூலம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முறைப்பாடு குறித்து விரிவான விசாரணை நடத்துமாறு பொலிஸ் மா அதிபர் களனிபிரதேசத்திற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
பிரதேச சபை உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்தும் ஒப்பந்தம், ஹிக்கடுவ, சிலாபம் மற்றும் கடுவெல ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த பாதாள உலகக் குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என களனி பிரதேச சபையின் உறுப்பினர் அசித மடவல குறிப்பிட்டுள்ளார்.பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் ஏற்கனவே களனி பிரதேசத்திற்கு வருகை தந்துள்ளதாகவும் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் அவர் பொலிஸ் மா அதிபரிடம்
கோரியுள்ளார்.
சரத் பொன்சேகா சுதந்திர தினத்தன்று விடுதலை செய்யப்படுவார்!
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா சுதந்திர தினத்தன்று நிபந்தனையின்றி விடுதலை செய்யப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது. ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ் இவ்வாறு நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.எனவே, குறித்த காலம் வரையில் எந்தவொரு போராட்டத்தையும் நடத்தக் கூடாது என சரத் பொன்சேகா ஆதரவாளர்களிடம் டிரான் அலஸ் கோரியுள்ளார்.சரத் பொன்சேகாவை விடுதலை செய்யும் நோக்கில் பல அமைப்புக்கள் பாரியளவில் போராட்டங்களை நடத்தத் திட்டமிட்டிருந்தன.
எனினும், எதிர்வரும் பெப்பரவரி மாதம் 4ம் திகதி வரையில் எந்தவொரு போராட்டத்தையும் நடத்தாது அமைதியை பேணுமாறு டிரான் அலஸ், சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கோரியுள்ளார்.சுதந்திர தினத்தன்று சரத் பொன்சேகா நிபந்தனையின்றி விடுதலை செய்யப்படாவிட்டால் மறு தினமே பாரியளவில் போராட்டங்களை நடத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேடப்படும் குற்றவாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு.
சர்வதேச பொலிஸ் அமைப்பான இன்டர்போலில் தேடப்படும் குற்றவாளிகளின் எண்ணிக்கை 50 சதவீதமாக உயர்ந்துள்ளது.
உலகின் ஒரு நாட்டில் குற்றங்களில் ஈடுபட்டு வேறு நாட்டுக்கு தப்பி சென்றவர்களை கைது செய்யும் பணியில் இன்டர்போல் ஈடுபட்டுள்ளது.இவ்வாறு தேடப்படும் குற்றவாளிகள் குறித்த விவரங்களை இன்டர்போலுக்கு சம்பந்தப்பட்ட நாடுகள் வழங்கும்.அதன் அடிப்படையில் குற்றவாளி எந்த நாட்டில் இருந்தாலும் இன்டர்போல் காவல்துறையினர் கைது செய்வார்கள்.
அந்த வகையில் இன்டர்போல் காவல்துறையினரால் தேடப்படும் குற்றவாளிகளின் எண்ணிக்கை கடந்த 2010ம் ஆண்டை விட கடந்த 2011ம் ஆண்டு 50 சதவீதமாக உயர்ந்துள்ளது.இதுகுறித்து இன்டர்போல் தலைவர் ரொனால்ட் நோபல் கூறுகையில், கடந்த 2010ம் ஆண்டு சர்வதேச அளவில் 50 ஆயிரம் பேர் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் இருந்தனர். அது கடந்த ஆண்டு 75 ஆயிரமாக உயர்ந்துள்ளது. சமீபத்தில் 26 ஆயிரம் பேருக்கு எதிராக ரெட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது என்றார்.
கிரஹாம் ‌பெல் எழுதிய கடிதம் 92 ஆயிரம் அமெரிக்க டொலருக்கு ஏலம்.
‌‌தொலைபேசியை கண்டுபிடித்த அலெக்சாண்டர் கிரஹாம் பெல் தனது பெற்றோருக்கு தனது அரிய கண்டுபிடிப்பு தொடர்பாக ‌எழுதிய கடிதம் 92 ஆயிரம் அமெரிக்க டொலருக்கு ஏலம் போனது.
கடந்தாண்டு டிசம்பர் மாதம் தொடங்கிய ஏலம் நேற்று முடிவடைந்தது. அக்கடிதத்தில் கிரஹாம் பெல் தனது கண்டுபிடிப்பு குறித்து அவரது பெற்றோருக்கு சில விபரங்களை ‌‌தெரிவித்திருந்தார்.தொலைபேசி கண்டிபிடிப்பிற்கான பேட்டன்ட் உரிமம் கிடைத்த 2 ஆண்டுகளுக்கு பிறகு தனது பெற்றோருக்கு கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகத் தலைவர்களுடன் நட்புடன் பழகும் ஒபாமா.
ஜேர்மன் சான்சலர் ஏஞ்சலா மார்க்கெல் மற்றும் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் எனது நண்பர்கள் என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறியதாவது: பிரதமர் மன்மோகன் சிங், ஜேர்மன் சான்சலர் ஏஞ்சலா மார்க்கெல் ஆகியோருடன் நட்பு மற்றும் நம்பிக்கையை வளர்த்துள்ளதாக கூறினார்.
நான் மற்ற நிர்வாகிகளை போன்று இல்லை, மற்ற நாடுகளின் தலைவர்களையும் வேறுபடுத்தி பார்க்கவில்லை. மார்க்கெல், மன்மோகன் சிங், தென் கொரிய அதிபர் லீ மியூங் பாக், துருக்கி பிரதமர் ரெசிப் தாயிப் எர்டோகன், பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன் ஆகியோருடன் நெருங்கிய நட்புறவு வைத்துள்ளேன்.இந்த தலைவர்களிடம் கேட்டால் அவர்களும் அமெரிக்க ஜனாதிபதியுடன் உண்மை மற்றும் நம்பிக்கையை கொண்டிருந்ததாகவும் கூறுவார்கள்.
ஒருவர் கூறுவதை மற்றவர்கள் நம்புவார்கள், அவர்கள் தங்களது உறுதிமொழியை நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.எங்களது கவலை மற்றும் நலனில் அதிக கவனம் செலுத்துவார்கள் என்றார். மேலும் வளர்ந்து வரும் நாடுகளான இந்தியா, பிரேசில், சீனா ஆகியவற்றை அமெரிக்க தலைவர்கள் அங்கீகரித்துள்ளதாகவும் கூறினார்.
பாகிஸ்தானில் துப்பாக்கி முனையில் வெளிநாட்டவர்கள் கடத்தல்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் வெளிநாட்டவர்கள் இரண்டு பேரை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் கடத்தி சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கோட் அப்டு அருகில் உள்ள குவாசிம் பெலா நகரில் இரண்டு பேரை அடையாளம் தெரியாத மர்ம கும்பல் துப்பாக்கி முனையில் கார் மூலம் கடத்தி சென்றனர்.
கடத்திச் சென்றவர்களில் ஜேர்மனியை சேர்ந்தவர் பர்ன்ட்(45), இத்தாலியை சேர்ந்தவர் கியோவான்னி(38) என்றும் தொண்டு நிறுவனத்தில் திட்ட இயக்குநர் மற்றும் நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்ததாகவும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.கடந்த 2010ம் ஆண்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருவரும் பணிபுரிந்து வருவதாகவும், இவர்கள் கோட் அப்டு பகுதியில் நடைபெறும் பணிகளை பார்வையிட சென்ற போது அவர்களை மர்ம நபர்கள் கடத்தி சென்றதாகவும் பாகிஸ்தான் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஓய்வு பெற தயாராக இல்லை: கனடாவில் முதியவர்கள் கருத்து.
ஓய்வு பெறும் வயதை நெருங்கிய பிறகும் ஓய்வு பெற மக்கள் தயாராக இல்லை என்று கனடாவின் இம்பீரியல் வர்த்தக வங்கி நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
வர்த்தக வங்கிக்காக ஹேரிஸ் டெஸிமா என்ற நிறுவனம் ஆயிரம் கனடா மக்களிடம் கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியது. அதில் 44 சதவீதம் பேர் பொருளாதார அடிப்படையில் தாங்கள் ஓய்வு பெற தயாராக இல்லை என்று தெரிவித்துள்ளனர். இவர்களில் 31 சதவீதம் பேர் 55 முதல் 64 வயதிற்கு உட்பட்டவர்கள்.பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் பெரும்பாலும் மக்கள் ஓய்வுக்கால திட்டம் வைத்துள்ளனர். இவ்வாறான திட்டம் வைத்திருப்பவர்களில் 76 சதவீதம் பேர் ஓய்வுக்கால வாழ்க்கைக்கு தயாராக உள்ளனர்.
கால்வாசிப்பேர் மட்டும் எவ்வித திட்டமும் இல்லாததால் ஓய்வுக்காலத்தை அனுபவிக்க இயலாமல் வேலைக்கு போய் சம்பாதிக்க வேண்டிய நெருக்கடியில் இருக்கின்றனர்.கனடாவில் 55 வயதினரில் மூன்றில் ஒரு பங்கினர் இன்னும் 16 ஆண்டுகளுக்கு கடனைச் செலுத்த வேண்டிய திட்டங்களில் இணைந்துள்ளனர். கடந்த பத்தாண்டுகளில் 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மூன்று மடங்கு கடன் சுமைக்கு ஆளாகி உள்ளனர். கடன் நெருக்கடியினால் இந்த நாட்டில் முதியவர்களால் ஓய்வு பெற இயலவில்லை.
ஐஎஸ்ஐ தலைவருக்கு பதவி நீட்டிப்பு சந்தேகம்.
பாகிஸ்தான் உளவு நிறுவனத்தின்(ஐஎஸ்ஐ) தலைவரான அகமது ஷுஜா பாஷாவின் பதவி காலம் எதிர்வரும் மார்ச் மாதத்துடன் முடிவடைகிறது.ஐஎஸ்ஐ தலைவர் பாஷா, இராணுவ தளபதி ஜெனரல் அஷ்பக் பர்வேஸ் கயானிக்கு மிகவும் நெருக்கமானவர். இராணுவம், ஐ.எஸ்.ஐ.யின் முடிவே அரசின் முடிவாக பெரும்பாலும் இருக்கும்.
பாஷாவின் பதவி காலம் கடந்த 2010ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிந்து விட்டது. எனினும் கயானிக்கு நெருக்கமானவர் என்பதால், 2 முறை அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது. ஆனால் சமீப காலமாக பிரதமர் கிலானிக்கும், கயானிக்கும் கருத்து வேறுபாடு முற்றியுள்ளது.அதனால் ஐஎஸ்ஐ தலைவர் பாஷாவின் பதவி காலத்தை நீட்டிக்க அரசு விரும்பவில்லை. அவருக்கு பதில் புதிய தலைவரை பாகிஸ்தான் அரசு நியமிக்க திட்டமிட்டுள்ளது என்று தி எக்ஸ்பிரஸ் டிரிபியூன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
புதிய தலைவர் பதவிக்கு 3 பேர் பெயர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இராணுவ அதிகாரி ஜெனரல் வாஷித் அஷ்ரத், கராச்சி இராணுவ படை கமாண்டர் ஜெனரல் முகமது ஜாகிருல் இஸ்லாம், பெஷாவர் இராணுவ படை கமாண்டர் ஜெனரல் காலித் ரபானி ஆகியோரில் ஒருவர் ஐஎஸ்ஐ தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.எதிர்வரும் மார்ச் மாதம் 18ம் திகதியுடன் பாஷாவின் பதவி காலம் முடிவடைவதால் அதற்கு முன்னதாக ஐஎஸ்ஐ.க்கு புதிய தலைவர் நியமிக்கப்படுவார் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஹெலிகாப்டர் திடீரென தீப்பிடித்து எரிந்ததில் 6 பேர் பலி.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகளுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே அடிக்கடி மோதல் நடந்து வருகின்றது.
இந்நிலையில் தெற்கு ஆப்கானிஸ்தானில் நேட்டோ படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று வானில் பறந்து சென்று கொண்டிருந்த போது திடீரென தரையில் விழுந்து தீப்பிடித்து எரிந்தது.இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 6 இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இச்சம்பவம் எப்படி நடந்தது என தெரியவில்லை.
ஏனெனில் விபத்து நடந்த போது தெற்கு ஆப்கானிஸ்தான் பகுதிகளில் தீவிரவாதிகள் நடமாட்டம் எதுவும் இல்லை. எனவே ஹெலிகாப்டர் மீது தாக்குதல் நடத்த வாய்ப்பு இல்லாததால் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இதே போன்று கடந்தாண்டு ஆகஸ்டு மாதம் கிழக்கு ஆப்கானிஸ்தானில் நேட்டோ படை வீரர்களுடன் சென்ற ஹெலிகாப்டர் நொறுங்கி விபத்துக்குள்ளானதில் 22 நேவிசீல் கமாண்டர்கள் உட்பட 30 வீரர்கள் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒலிம்பிக் போட்டிகளுக்​காக பிரித்தானி​யாவில் இடம்பெற்ற அதிரடிப்பா​துகாப்பு ஒத்திகை.
2012ம் ஆண்டு லண்டனில் இடம்பெறும் ஒலிம்பிக் போட்டிகளின் போது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற நோக்கில் பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது.இதற்காக பயங்கரமான பாதுகாப்பு ஒத்திகைகளில் பிரித்தானிய அதிரடிப்டையினர் ஈடுபட்டுள்ளனர்.
இப்பாதுகாப்பு பணியில் 44 பொலிஸ் உத்தியோகத்தர்களும், 94 இராணுவத்தினரை உள்ளடக்கி 100 வரையான நீர்மூழ்கிக்கப்பல்கள், அதிவேகப் படகுகள், 100 வரையான உலங்கு வானூர்திகள் போன்றவற்றை கொண்டு ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது.இந்த ஒலிம்பிக் போட்டிகளின்போது பாதுகாப்பு பணிகளுக்கென மொத்தமாக 13,500 இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜேர்மன் ஜனாதிபதி மீதான அதிருப்தி அதிகரிப்பு.
ஜேர்மன் ஜனாதிபதியான கிறிஸ்டியன் உல்ப்பின் மீது மக்கள் அதிருப்தி அதிகமானது அண்மையில் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.ARD சுமார் 1000 பேரிடம் நடத்திய கருத்துக்கணிப்பில் 46 சதவீதம் பேர் அவர் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்றனர்.ஆனால் ஜனவரி மாதம் 12ம் திகதி நடத்திய கருத்துக்கணிப்பில் 41 சதவீதம் பேர் மட்டுமே பதவி விலக வேண்டும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்தாண்டு டிசம்பர் மாதம் இவர் 500,000 யூரோ கடன் வாங்கியதை மறைத்ததில் ஏற்பட்ட பிரச்சனை இன்னும் முடியவில்லை. இந்நிலையில் தேர்தல் நெருங்கிறது.இந்த வார இறுதியில் தேர்தல் நடந்தால் பிரதமரின் வலது சாரிக் கட்சியான கிறிஸ்தவ ஜனநாயக கட்சிக்கு 36 சதவீதமும், முக்கிய எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சிக்கு 29 சதவீதமும்(இது முன்பைவிட ஒரு சதவீதம் குறைந்துள்ளது) கூட்டணிக் கட்சியான விடுதலை ஜனநாயக் கட்சிக்கு 3 சதவீதமும், இடது சாரிக்கு ஆதரவு கூடியதால் 7 சதவீதமும் நாடாளுமன்றத்தில் இடங்கள் கிடைக்கலாம்.
கைதாவோம் என்ற பயத்தில் முஷாரப் நாடு திரும்புவது ஒத்திவைப்பு.
பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப் இம்மாதம் தாயகம் திரும்பும் திட்டத்தை ஒத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் ஜனாதிபதியாக இருந்த பர்வேஸ் முஷாரப் கடந்த 2007ம் ஆண்டில் தலைமை நீதிபதி உள்ளிட்டோரை பதவி நீக்கம் செய்து சிறையில் அடைத்து அவசர சட்டத்தை பிறப்பித்தார்.அதன் பின் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைமையிலான கூட்டணி அரசு பதவி ஏற்றதும் அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளின் நிர்பந்தத்தால் முஷாரப் ஜனாதிபதி பதவியிலிருந்து விலகினார்.
இதுமட்டுமல்லாமல் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் பெனசிர் புட்டோவுக்கு உரிய பாதுகாப்பு அளிக்காதது குறித்தும் இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.தற்போது பிரிட்டன் மற்றும் அமெரிக்க நாடுகளில் அவர் தங்கியுள்ளார். பாகிஸ்தானில் தற்போது நிலவும் அரசியல் ஸ்திரமற்ற நிலையை பயன்படுத்திக் கொண்டு அவர் நாடு திரும்ப திட்டமிட்டிருந்தார்.
இவர் அனைத்து பாகிஸ்தான் முஸ்லிம் லீக் என்ற பெயரில் அரசியல் கட்சி ஒன்றை நடத்தி வருகிறார். இந்த மாத இறுதியில் நாடு திரும்புவேன் என கூறியிருந்தார்.ஆனால் அவர் நாடு திரும்பினால் கராச்சியிலேயே கைது செய்யப்படுவார் என சிந்து மாகாண உள்துறை அமைச்சர் மன்சூர் வசன் எச்சரித்திருந்தார்.
அதுமட்டுமல்லாது பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரெஹ்மான் மாலிக் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசுகையில், முஷாரப் எப்போது நாடு திரும்பினாலும் இந்த நாட்டு சட்டப்படி கைது செய்யப்படுவார். இந்த தருணத்தில் அவர் பாகிஸ்தான் வந்தால் கூட அடுத்த நிமிடமே அவர் கைது செய்யப்படுவார் என்றார்.இது குறித்து முஷாரப்பின் தகவல் தொடர்பாளர் முகமது அலி சயீப் குறிப்பிடுகையில், கைது நடவடிக்கைக்காக முஷாரப் பயப்படவில்லை. கட்சித் தலைவர்கள் மற்றும் நண்பர்களுடன் கலந்தாலோசித்த பின் அவர் பாகிஸ்தான் திரும்பும் திகதியை அறிவிப்பார் என்றார்.
வங்கதேச அரசை கவிழ்க்க சதி: இருவர் கைது.
வங்கதேசத்தின் ஆளும் அரசை கவிழ்க்க முன்னாள் இராணுவத்தினர் உட்பட சிலர் சதித்திட்டம் தீட்டியதை அந்நாட்டு இராணுவம் கண்டுபிடித்துள்ளது.வங்கதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசினா தலைமையிலான அரசை கவிழ்க்க சதி நடந்துள்ளது.இதுகுறித்து இராணுவ ஜெனரல் முகமது மசூத் ரசாக் நிருபர்களிடம் கூறியதாவது: அரசை கவிழ்க்கும் முயற்சியில் முன்னாள் இராணுவ அதிகாரிகளுடன் தற்போது இராணுவத்தில் உள்ள சிலர் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பாக முன்னாள் மேஜர் மற்றும் துணை தளபதி 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஆட்சியை கவிழ்க்க சதித்திட்டம் தீட்டியது அம்பலமானது.மேலும் இதில் தொடர்புள்ள சிலர் தலைமறைவாகியுள்ளனர். முன்னாள் மேஜர் ஜியா மற்றும் சந்தேகிக்கப்படும் தற்போதைய அதிகாரிகள் 16 பேரை இராணுவம் தீவிரமாக கண்காணித்து வருகிறது. இது தொடர்பான விசாரணை முழுமையடையும் பட்சத்தில், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF