Sunday, January 22, 2012

NEWS OF THE DAY.

இலங்கையை ஆச்சரியம் மிக்க நாடாக மாற்றுவதே ஜனாதிபதியின் குறிக்கோள்!-பசில் ராஜபக்ஸ.
இந்நாட்டை ஆசியாவின் ஆச்சரியம் மிக்க நாடாக மாற்ற வேண்டுமென்பதிலும் ஒவ்வொரு மாவட்டங்கள் தோறும், சிறிய நடுத்தர பாரிய தொழிற்பேட்டைகளை நிறுவி அவற்றினூடாக சிறந்த பொருளாதார அபிவிருத்தி திட்டங்களை மேம்படுத்துவது தொடர்பிலும் ஜனாதிபதி அவர்கள் மிகுந்த அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றார் என பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இன்று, மன்னார் மாவட்டத்தில் குடும்பப் பொருளாதார மற்றும் போசனை விருத்திக்காக 25 இலட்சம் மனைப் பொருளாதார அலகுகளை அபிவிருத்தி செய்வதற்கான வாழ்வெழுச்சி தேசிய நிகழ்ச்சித் திட்டம், மன்னார் சென்சேவியர் கல்லூரியில் மாவட்ட அரச அதிபர் சரத் ரவீந்திர தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்வில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
வடமாகாணத்தில் யுத்தத்தால் குடும்பத் தலைவர்களை இழந்து பல்வேறு இழப்புக்களைச் சந்தித்து நிர்க்கதியாகியுள்ள குடும்பங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதே வாழ்வெழுச்சி திட்டத்தின் நோக்கம். செழிப்பான இல்லம் வளமான தாய்நாடு என்னும் வாழ்வெழுச்சி திட்டத்திற்காக நாடளாவிய ரீதியில் 25 இலட்சம் மக்கள் உள்வாங்கப்படவுள்ளனர்.
இம்மாவட்டம் பல்துறைசார்ந்த மாவட்டமாக விளங்கி வருவதுடன் புள்ளி விபரங்கள் அடிப்படையில் வன்னி மாவட்டத்தில் தான் மிகக் குறைந்தளவு வறுமைநிலை மக்கள் உள்ளதாகவும் எதிர்காலத்தில் இத்தொகையும் இல்லாமல் போகும் நிலை உருவாக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
சமாதானத்திற்கு சமாந்தரமாக நாட்டின் அபிவிருத்தியை ஜனாதிபதி முன்னெடுத்து வரும் நிலையில் அதற்காக பல்வேறு அபிவிருத்தி திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி வருகின்றார் எனவும் அமைச்சரவையில் மாற்றம் என்றும் இன்னும் பல்வேறு பொய்யான கருத்துக்களையும் சில அரசியல் வாதிகள் கூறிவருகின்ற நிலையில் மக்கள் மிகுந்த அவதானமாக இருக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.
இதனிடையே, இந்நாட்டில் வாழும் சகல மக்களும் இனம், மதம், மொழி என்ற வேறுபாடுகளின்றி ஒற்றுமையாகவும் சமாதானமாகவும் வாழும் போது அபிவிருத்தி மேம்பாட்டை விரைவாக முன்னெடுக்க முடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.இதனிடையே மன்னார் சென் சேவியர் கல்லூரி மைதானத்தில் காட்சிப்படுத்தபப்ட்டிருந்த 300 வரையான பல்வேறு துறைகளினதும் காட்சிக் கூடங்களும் விற்பனைக் கூடங்களும் அமைக்கப்பட்டிருந்தன.
இந்நிகழ்வில், சிரேஸ்ட அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அமைச்சர் ரிஷாத் பதியூதின், வட மாகாண ஆளுனர் ஜி.ஏ. சந்திரசிறி, வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி உணேஸ் பாரூக் மற்றும் அமைச்சுககளினதும் அரச திணைக்களங்களினதும் பல்வேறு துறைசார்ந்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
மேர்வின் கப்பம் பெற்றமை தொடர்பில் புலனாய்வு பிரிவினர் விசாரணை ஆரம்பம்!
களனி பிரதேசத்தில் இடம்பெற்று வந்த கப்பம் கோரல் சம்பவங்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
திட்டமிட்ட குழுவொன்று களனி பிரதேசம் முழுவதிலும் இவ்வாறு கப்பம் பெற்றுக் கொண்டுள்ளது. வர்த்தகர்கள், பொலிஸ் நிலையங்கள், உயர் பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு
தரப்பினரிடம் இந்தக் குழு கப்பம் பெற்றுள்ளது.

அபிவிருத்தித் திட்டங்கள். புத்தாண்டு நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு பொது நிகழ்வுகளுக்காக லட்சக் கணக்கான பணம் இவ்வாறு திரட்டப்பட்டுள்ளது.களனி பிரதேசத்தைச் சேர்ந்த சில பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் இந்தக் குழுவுக்கு பாரியளவில் பணம் வழங்கியுள்ளனர்.
வெசாக், பொசோன், புத்தாண்டு போன்ற நிகழ்வுகளுக்காக பணம் திரட்டப்பட்டுள்ளது. களனி, பெஹலியாகொட, கிரிபத்கொட போன்ற பிரதேசங்களில் வர்த்தகர்களிடமிருந்துமாதாந்தம் கப்பம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.இந்தக் கப்பம் கோரல் சம்பவங்களுடன் தொடர்புடைய முக்கியஸ்தர்கள் பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இதேவேளை, அமைச்சர் மேர்வின் சில்வா மற்றும் களனி பிரதேச சபைத் தலைவர் பிரசன்ன ரனவீர ஆகியோர் தொடர்பில் இரகசிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி இருவரும் ஊழல் மோசடிகள் மற்றும் கப்பம் கோரல் உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக ஒருவரை ஒருவர் குற்றம்சுமத்தியிருந்தனர்.பிரதேசத்தில் இடம்பெற்று வரும் கப்பம் கோரல் சம்பவங்கள் குறித்த களனி பிரதேச சபைத் தலைவரிடம் பொலிஸார் வாக்கு மூலங்களை பதிவு செய்துள்ளனர்.  அமைச்சர் மேர்வின் சில்வாவிடமும் இரகசிய பொலிஸார் விசாரணை நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கைதியை விடுதலை செய்ய ஜனாதிபதியிடம் மன்னிப்பு கோர வேண்டியது சட்ட ரீதியானதல்ல: ரவூப் ஹக்கீம்.
கைதி ஒருவரை விடுதலை செய்வதற்காக ஜனாதிபதியிடம் மன்னிப்பு கோர வேண்டியது சட்ட ரீதியான அவசியமாக கருதப்பட முடியாது என நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம்
தெரிவித்துள்ளார்.
கைதி ஒருவரை விடுதலை செய்வதற்காக ஜனாதிபதியிடம் பொது மன்னிப்பு கோருவது வழமையான மரபே தவிர, அதனை ஓர் சட்டமாக கருத முடியாது. எனினும், சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ஒருவரை விடுதலை செய்வதற்கான பொதுமன்னிப்பை வழங்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது.இது அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என நீதியமைச்சர் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா அல்லது அவரது உறவினர்கள், ஜனாதிபதியிடம் மன்னிப்பு கோரினால் பொதுமன்னிப்பு வழங்க முடியும் என அமைச்சர் அதாவுத செனவிரட்ன தெரிவித்துள்ளார்.எனினும், அரசியல் சாசனத்தில் இவ்வாறு பொதுமன்னிப்பு கோர வேண்டிய அவசியம் பற்றி குறிப்பிடப்படவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல குறிப்பிட்டுள்ளார்.
இந்த வாதப் பிரதிவாதங்களில் இணைந்து கொண்ட நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம்,கைதிகள் ஜனாதிபதியிடம் மன்னிப்பு கோர வேண்டிய சட்டத் தேவை இல்லை என்ற போதிலும், அரசியல் சாசனத்தின் அடிப்படையில் சிறைக் கைதிகளை விடுதலை செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்காவிற்கான எனது பயணம் அமைதியை ஊக்குவிப்பதற்கானது!- அப்துல் கலாம்.
 இடம்பெயர்ந்தோர் முகாம்களுக்குச் சென்று பார்வையிடுவதற்கு ஒழுங்குகளை செய்து தரும்படி சிறிலங்கா அரசிடம் கோரப் போவதாக இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தெரிவித்துள்ளார்.நான்கு நாள் பயணத்தை மேற்கொண்டு, நேற்றிரவு கொழும்பை வந்தடைந்த அப்துல் கலாம், கொழும்பு புறப்பட முன்னர் அவர் இந்திய ஊடகங்களுக்கு அளித்த செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
எந்தப் பிரச்சினைக்கும் போர் மூலம் தீர்வு காணமுடியாது. மோதல்களுக்கான தீர்வாக எந்தவொரு போரும் அமையவில்லை என இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக மாணவர்களையும், இந்துக் கல்லூரி மாணவர்களையும் சந்திக்கவுள்ளேன். அத்துடன் அங்குள்ள புலமையாளர்கள், நிபுணர்கள், பொதுமக்களை சந்திப்பதையிட்டு நிச்சயமாக மிகவும் மகிழ்ச்சிடைகிறேன்.2020இல் இந்தியாவை ஆற்றலுள்ள நாடாக மாற்றுவதற்கான திட்டம் குறித்த எமது அனுபவங்களை அவர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்த அனுபவங்களை சிறிலங்கா மக்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன்.
மும்மொழிக் கல்வித் திட்டத்தின் மூலம் சிறிலங்காவை மீளக்கட்டியெழுப்ப நல்லதொரு வாய்ப்பாக அமையும். இந்தியாவில் பலமொழிகள், பல கலாசாரங்கள் இருந்த போதிலும், ஜனநாயகம் எல்லா மக்களுக்கும் சமஉரிமையை உறுதி செய்கிறது. அதன் மூலம் அமைதியான வாழ்வை உறுதிப்படுத்த முடியும். சிறிலங்காவில் இருதரப்பு தலைவர்களையும் சந்தித்து பரஸ்பர நம்பிக்கையை கட்டியெழுப்புவது குறித்த பேசவுள்ளேன். இடம்பெயர்ந்தோர் முகாம்களுக்கு செல்வதற்கு ஒழுங்குகளை செய்து தரும்படி சிறிலங்கா அரசிடம் கோரவுள்ளதாக இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்காவுக்கான இந்தப் பயணம் அமைதியை ஊக்குவிப்பதற்கானது. இதனை சிலர் விமர்சித்தாலும் அது அவர்களின் ஜனநாயக உரிமை. போர்கள் மோசமான நிலைமைகளையே கொண்டு வந்துள்ளன. தமது மகன்களையே தந்தைமார் புதைத்துள்ளனர்.போருக்குப் பிந்திய நம்பிக்கையை, உண்மையை, நம்பகத்தன்மை கட்டியெழுப்ப வேண்டியது சிறிலங்காவின் தேவை. என அப்துல் கலாம் மேலும் தெரிவித்துள்ளார்.
உலகப் புகழ் பெற்ற கோடக் நிறுவனம் திவால்.
உலகப் புகழ் பெற்ற கோடக்(Kotak) புகைப்படக் கருவி நிறுவனம் தொடர்ந்து நஷ்டத்தைச் சந்தித்து வருவதால் திவால் நோட்டீஸ் சமர்ப்பித்துள்ளது.அமெரிக்காவின் கோடக் நிறுவனம் புகைப்படக் கருவி(Camera) மற்றும் படச் சுருள்(Film Role) ஆகியவற்றில் உலகப் புகழ் பெற்றது.
நூறாண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இந்த நிறுவனம் மோசமான நிர்வாகம், போட்டியாளர்களைச் சமாளிக்க முடியாதது போன்ற காரணங்களால், கடந்த 2003ம் ஆண்டு முதல் சிறிது சிறிதாக நொடிந்து கொண்டே வந்தது.ஆதலால் இதுவரை தனது 13 படச் சுருள் மற்றும் புகைப்படக் கருவி தயாரிப்பு நிலையங்களை மூடிய இந்நிறுவனம் 47 ஆயிரம் ஊழியர்களையும் வீட்டுக்கு அனுப்பியது.
இந்நிலையில் இந்நிறுவனம் அமெரிக்க அரசிடம் திவால் நோட்டீஸ்(சாப்டர் 11) சமர்ப்பித்துள்ளது. இதன் மூலம் நிறுவனங்கள் தனிநபர்களிடம் வாங்கிய கடனை இந்நிறுவனம் சிறிது கால அவகாசம் எடுத்துக் கொண்டு மெல்ல மெல்ல செலுத்தும்.இந்த திவால் நோட்டீஸ் அமெரிக்காவில் இயங்கும் வர்த்தகத்திற்கு மட்டுமே என கோடக் ஆசியா பிரிவின் சந்தைப்படுத்தல் துணைத் தலைவர் பி.என்.ரகுவீர் தெரிவித்துள்ளார்.
மூடப்பட்ட நேட்டோ பாதையை திறக்க பாகிஸ்தான் முடிவு.
நேட்டோ படைகளின் வசதிக்காக மூடப்பட்டுள்ள பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் சாலையை மீண்டும் திறக்க பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது.
ஆப்கானிஸ்தான் எல்லையில் நேட்டோ படைகள் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 24 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.இதனால் கோபமடைந்த பாகிஸ்தான் அப்பாதையை மூடி விட்டது. இப்பாதை மூலமாக பாகிஸ்தான் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் உணவு, எண்ணெய், எரிபொருள் உட்பட பல அத்தியாவசியப் பொருட்கள், வாகனங்களில் ஆப்கானிஸ்தானுக்கு கொண்டு செல்லப்பட்டு வந்தன.
இந்த பாதை மூடப்பட்டதால் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது, ஆப்கான் நாட்டில் உள்ள படை வீரர்களுக்கு தேவைப்படும் மூன்றில் ஒரு பகுதி பொருட்கள் கொண்டு செல்வதும் தடைபட்டது.இதனால் அமெரிக்காவுடனான நட்பு சீர்குலைய தொடங்கியதால் இதை தடுக்கும் விதமாக மூடப்பட்ட பாதையை மீண்டும் திறக்க பாகிஸ்தான் முனைப்பு காட்டி வருகிறது.மீண்டும் பாதை திறக்கப்பட்டாலும் கூட உடனடியாக வாகன போக்குவரத்து நடைபெறாது. படிப்படியாகத் தொடங்கும், வாகன போக்குவரத்து அனைத்தும் சோதனைச் சாவடிகள் வழியாகவே நடைபெறும். அப்பாதையை எப்போது திறப்பது என்பது குறித்த திகதி இன்னும் முடிவாகவில்லை.
ஜப்பான் அணு உலைகளின் ஆயுட்காலத்தை அதிகரிக்க முடிவு.
ஜப்பானில் உள்ள அணு உலைகளின் ஆயுட்காலத்தை 40 ஆண்டுகளிலிருந்து 60 ஆண்டுகளாக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது.
ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி பேரலைக்கு பின் புகுஷிமா அணுமின் நிலையம் பாதிக்கப்பட்டது. இதனால் உலகம் முழுவதும் அணு உலைகளின் பாதுகாப்புகளை பலப்படுத்த சர்வதேச அணுசக்தி கழகம் அறிவுறுத்தியது.சுனாமியால் அணு மின் நிலையம் பாதிக்கப்பட்டதால் ஜப்பானிலும், வேறு பல நாடுகளிலும், அணுமின் நிலையங்களை மூடப்போவதாக சில வெளிநாட்டு அணு எதிர்ப்புக் குழுக்கள் வதந்தி பரப்பின.
ஆனால் அவை வதந்தி தான் என்பதற்கு உதாரணமாக தன் அணுமின் நிலையங்களில் செயல்பாடுகளை ஜப்பான் மேலும் அதிகப்படுத்துகிறது.மேலும் அணு மின் நிலையங்களின் ஆயுட்காலத்தையும் அதிகரிக்க ஜப்பான் முடிவெடுத்துள்ளது. தற்போது அங்குள்ள அணுமின் நிலையங்களுக்கு 40 ஆண்டுகள் மட்டுமே ஆயுட்காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆனால் தற்போதைய மின்சார தேவையை கருத்தில் கொண்டு அணு உலைகளின் ஆயுட்காலத்தை 60 ஆண்டுகளாக உயர்த்த அந்நாட்டு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.இதற்கான மசோதாவை ஜப்பான் நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்ய உள்ளதாகவும், அணு உலை தொடர்பான அரசின் நிலைப்பாட்டில் எந்த மாறுபாடும் இல்லையென்றும் ஜப்பான் அமைச்சரவை செயலர் ஒசமு புஜிமோரா தெரிவித்துள்ளார்.
எகிப்தில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்: பராக் ஒபாமா.
எகிப்து நாட்டில் ஜனநாயகம் ஏற்படுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.இந்நிலையில் எகிப்து நாட்டின் இராணுவ பீல்டு மார்ஷல் டன்டவிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
சமூகம் மற்றும் அரசு சாரா அமைப்புகளின் துரித நடவடிக்கை மேற்கொள்ள எளிதாக அனுமதிக்க வேண்டும் எனவும், எகிப்தில் ஜனநாயகம் மலர அமெரிக்க ஆதரவு அளிக்கும் எனவும் வெள்ளை மாளிகை அறிக்கை தெரிவிக்கிறது.
நைஜீரியாவில் குண்டுவெடிப்பு: 8 பேர் பலி.
நைஜீரியாவின் கனோ நகரத்தில் நடத்த குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கி சண்டையில் 8 பேர் பலியாயினர்.இது அந்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமாகும். மேலும் இங்குள்ள காவல்துறை அலுவலகம் ஒன்றின் மீதும் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது.தொடர்ச்சியாக அப்பகுதியில் 20க்கும் மேற்பட்ட குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்ததில் 8 பேர் பலியாகியுள்ளனர்.
நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது விமானிக்கு மாரடைப்பு.
ரஷ்யாவில் விமானம் பறந்து கொண்டிருந்த போது விமானி திடீரென இறந்ததால் பதட்டம் ஏற்பட்டது.ரஷ்யாவின் போயிங் விமானம் ஒன்று பாங்காக்கில் இருந்து நோவோசிபிர்ஸ்க் பகுதிக்கு சென்று கொண்டிருந்தது.
அந்த விமானம் சீன வான் பகுதியில் பறந்து கொண்டிருந்த போது, விமானி செர்ஜி கோலெவ்வுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.காக்பிட்டில் அவருக்கு எல்லாவித முதலுதவியும் அளிக்கப்பட்டது, அத்துடன் விமானத்தில் பயணம் செய்த இருதயவியல் வைத்தியர் மூலமும் அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதனையடுத்து உடனடியாக தலைமை விமானி சீனாவின் சென்டு விமான நிலையத்தில் விமானத்தை அவசரமாக தரையிறக்க முயற்சித்தார். அதற்குள் விமானி செர்ஜி மாரடைப்பில் இறந்துவிட்டார்.இதனால் அந்த விமானம் தரையிறங்கவில்லை. செர்ஜிக்கு வயது 44தான் ஆகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
நிறைமாத கர்ப்பிணியின் வயிற்றை கிழித்து குழந்தை திருட்டு.
தென் ஆப்ரிக்காவில் கர்ப்பிணி பெண்ணின் வயிற்றை கிழித்து குழந்தையை திருடி சென்ற பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர்.தென் ஆப்ரிக்காவின் ஜோக்கன்னஸ்பர்க் மேற்கு பகுதியில் உள்ளது ரேண்ட்போடின் நகரம். இங்கு 34 வயது கர்ப்பிணி பிரசவத்துக்காக காத்திருந்தார்.இந்நிலையில் 29 வயதுடைய இளம்பெண் ஒருவர், கர்ப்பிணியின் வயிற்றை கத்தியால் கிழித்து குழந்தையை வெளியில் எடுத்துள்ளார்.
அதன்பிறகு கர்ப்பிணியை ரத்தவெள்ளத்தில் விட்டுவிட்டு குழந்தையுடன் மாயமானார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று தீவிர விசாரணை நடத்தினர்.அதன்பின் கொடூர செயலில் ஈடுபட்ட அந்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர். இதுகுறித்து காவல்துறை செய்தித் தொடர்பாளர் அப்பள் எர்ன்ஸ்ட் கூறுகையில், முதலில் அதிக ரத்த போக்கால் கர்ப்பிணி இறந்ததாக கூறப்பட்டது. தீவிர விசாரணையில் அவருடைய வயிற்றை கிழித்து குழந்தை திருடப்பட்டது தெரிந்தது.
கைது செய்யப்பட்ட பெண்ணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளோம். அவர் மீது கொலை, கடத்தல் உட்பட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.அந்த பெண்ணிடம் இருந்து மீட்கப்பட்ட குழந்தை தற்போது நலமாக உள்ளது. ஆனால் குழந்தையின் தாய்தான் பரிதாபமாக உயிரிழந்தார். தென் ஆப்ரிக்காவில் பிறந்த குழந்தைகள் திருடு போவது அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தெற்கு சூடானில் தொடரும் கலவரம்: லட்சக்கணக்கில் மக்கள் பாதிப்பு.
தெற்கு சூடானில் தொடர்ச்சியாக நடந்து வரும் உள்நாட்டு கலவரத்தில் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சூடானிலிருந்து பிரிந்து தெற்கு சூடான் என்ற புதிய நாடு உருவானது.
இந்நிலையில் அங்கு உள்நாட்டு கலவரங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. இதன் காரணமாக சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவதாகவும் ஐ.நா தெரிவித்துள்ளது.
தீவுகளை எங்களிடம் ஒப்படையுங்கள்: பிரிட்டனின் ஆதிக்கத்தை எதிர்த்து மக்கள் போராட்டம்.
அர்ஜென்டினாவின் தலைநகரான புயுனாஸ் எர்ஸில் உள்ள பிரிட்டன் தூதரகத்திற்கு முன்பு பிரிட்டனின் கொடியை எதிர்த்து பாக்லாந்து தீவுகளை ஒப்படைக்குமாறு மக்கள் போராட்டம் நடத்தினர்.
அர்ஜென்டினா இத்தீவுகளை அதன் பழைய பெயரில் லாஸ் மால்வினாஸ் என்று அழைத்தது. ஆனால் பிரிட்டனோ அந்த தீவுகளில் வாழும் மக்கள் பிரிட்டிஷ் ஆட்சியை விரும்புகின்றனர் என தெரிவித்தது.வருகிற பிப்ரவரி மாதம் ஹெலிகாப்டர் மீட்புப் படையின் இராணுவப் பயிற்சியை மேற்கொள்வதற்காக இளவரசர் வில்லியம் வருகை தரவிருக்கிறார்.
இவ்வாறு பிரிட்டன் இங்கு தனது இராணுவத்தை நிறுத்தி வைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறியும் மக்கள் போராட்டம் நடத்தினர்.தீவுகளில் வாழும் மக்களின் முடிவுக்கு எதிராக அர்ஜென்டினா அதைப் பெற நினைப்பது காலணி ஆதிக்கமாகும் என்று புதன்கிழமையன்று பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரூன் கூறியதை எதிர்த்து அர்ஜென்டினா தலைவர்கள் இப்போராட்டத்தில் இறங்கியுள்ளனர். கமரூன் தான் மேலும் இராணுவத்தை கொண்டு வந்து பாக்லாந்தில் நிறுத்தப் போவதாக தெரிவித்துள்ளார்.
பாக்லாந்து கடலின் அருகே பிரிட்டிஷ் நிறுவனங்கள் எண்ணெய்க் கிணறுகளை தோண்டி வருகின்றன. எண்ணெய் கிடைக்கும் என்ற ஆசையினால் பாக்லாந்தை பிரிட்டன் அர்ஜென்டினாவிடம் ஒப்படைக்க மறுக்கின்றது.அர்ஜென்டினா இலத்தீன் அமெரிக்கா நாடுகளிடம் இருந்து தனக்கு ஆதரவைத் திரட்டுகிறது. அர்ஜென்டினாவின் பிரதமர் கிறிஸ்டினா பெர்னாண்டெஸ் தங்களுக்குரிய இயற்கை வளங்களை பிரிட்டன் வலிந்து அபகரிப்பதாக குற்றம்சாட்டினார்.
கப்பல் மூழ்கும் போது குடிபோதையில் இருந்தார் கப்டன்: பயணிகள் புகார்.
இத்தாலியை சேர்ந்த கோஸ்டா கான்கோர்டியா என்ற பயணிகள் சொகுசு கப்பல் கடலில் மூழ்கியதில் 12 பேர் பலியாகியுள்ளனர். அதில் 29 பேரை காணவில்லை.இது தொடர்பாக கப்பல் கப்டன் பிரான்சிஸ்கோ ஸ்கெட்டினோ கைது செய்யப்பட்டு அவர் மீது கொலை குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் கவனக்குறைவாக கப்பலை செலுத்தியதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது.
தற்போது வீட்டுக்காவலில் இருக்கும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விபத்து நடந்தபோது தான் மது அருந்தவில்லை என விசாரனையில் தெரிவித்து இருந்தார்.ஆனால் அவர் குடிபோதையில் இருந்தார் என பயணி ஏஞ்சலோ பாப்ரி உள்ளிட்டோர் தெரிவித்துள்ளனர். விபத்து நடப்பதற்கு முன்பு கப்பலில் உள்ள ஓட்டலில் கப்டன் பிரான்சிஸ்கோ ஸ்கெட்டினோ ஒயின் (மது) சாப்பிட்டார்.
அவருடன் ஒரு பெண்ணும், மற்றொரு அதிகாரியும் இருந்தனர். ஒல்லியான உருவமுள்ள அப்பெண் அவரது மகளாக இருக்கலாம் என நினைக்கிறேன். இவர்கள் இரவு 9.05 மணி வரை மது அருந்தினர்.அதன் பின்னர் கப்டன் ஸ்கெட்டினோ 9-45 மணிக்கு பிரிட்ஷ் பகுதிக்கு செல்ல கப்பலை செலுத்தினார். குடிபோதையில் இருந்த அவர் கவனகுறைவாக கப்பலை செலுத்தியதால்தான் பாறையில் மோதி கவிழ்ந்தது என தெரிவித்துள்ளார். அவரது வாக்குமூலம் கப்டன் ஸ்கெட்டினோவுக்கு விசாரனையை மிகவும் தீவிரப்படுத்தி உள்ளது.
ஈரானை இஸ்ரேல் தாக்கினால் உலகம் முழுவதும் போர் ஏற்படும்: சர்கோசி எச்சரிக்கை.
இஸ்ரேல் ஈரானைத் தாக்கினால் மத்தியக் கிழக்கு நாடுகளில் ஏற்படும் போரை யாராலும் தடுக்க இயலாது என்று பிரான்ஸ் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசி தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி சர்கோசியை பிரான்சின் உயரதிகாரிகள் சந்தித்து பேசினர். அப்போது ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்ட நான்கு இராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
அப்போது சர்கோசி பேசுகையில், தமது வீரர்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை தொடர்ந்தால் ஆப்கானிஸ்தானின் இராணுவத்துக்கு பிரான்ஸ் அளித்துவரும் உதவியும், பயிற்சியும் நிறுத்தப்படும். மேலும் பிரான்ஸ் இராணுவம் முன்கூட்டியே தாய்நாடு திரும்ப நேரிடும் என்று எச்சரித்தார்.
மேலும் தெரிவிக்கையில், ஈரான் அணு ஆயுதங்களின் மீது கொண்டுள்ள ஆசையின் காரணமாக போர் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலிய அரசியல்வாதிகள் அச்சுறுத்தியபடி ஈரான் மீது இஸ்ரேல் போருக்குத் தயாராகி வருகிறது.இதனால் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பிரச்சினை எதுவும் தீரப்போவதில்லை. மாறாக உலகம் முழுக்க, குறிப்பாக மத்தியக் கிழக்கு நாடுகளில் போரும் குழப்பமும் உருவாகும் என்றார்.
மேலும் ஈரானின் எண்ணெய் இறக்குமதியைத் தடைசெய்தும், ஈரானிய மத்திய வங்கியின் சொத்துகளை முடக்குவதுமான பொருளாதாரத் தடைகளை விதிக்க ஜக்கிய நாடுகள் முன்வர வேண்டும்.சீனாவும், ரஷ்யாவும் ஜ.நா பாதுகாப்புக் குழு ஈரான் மீது எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
தென்கொரியாவுக்கு மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்யும் கனடா.
8 ஆண்டுகள் கழித்து தென்கொரியா கனடாவின் மாட்டிறைச்சியை பெற்றுக் கொள்ள சம்மதித்துள்ளது.
இதுகுறித்து கால்நடை உற்பத்தி கழகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், வருகிற மூன்றாண்டுகளுக்கு கனடாவுக்கு முப்பது மில்லியன் டொலர் மாட்டிறைச்சி வியாபாரத்தால் கிடைக்கும்.தென்கொரியாவின் சந்தைகளில் நல்ல வரவேற்பு இருப்பதால் தான் எங்கள் மாட்டிறைச்சியை வாங்க அவர்கள் முன்வருகின்றனர் என்றார். 
கனடாவின் அல்பெர்ட்டா மாகாணத்தில் கால்நடைகளில் கண்டுபிடிக்கப்பட்ட Mad Cow Diease என்ற நோய் காரணமாக மாட்டிறைச்சி வாங்குவதை தென்கொரியா நிறுத்திவிட்டது.நீண்டகாலம் கழித்து மீண்டும் தென்கொரியா கனடாவுடன் இந்த வர்த்தகத்தைத் தொடங்கியுள்ளது. இவ்வர்த்தகம் மீண்டும் தொடங்கியதற்கு முக்கிய காரணம், கனடாவின் மத்திய அரசு உலக வர்த்தக சங்கத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையே ஆகும்.
2013ம் ஆண்டு தேர்தலை தவிர்க்கும் குட்டன்பர்க்.
கருத்துத்திருட்டு மூலமாக முனைவர் பட்டம் பெற்ற ஜேர்மனியின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சரான குட்டன்பர்க் எதிர்வரும் 2013ம் ஆண்டும் நடைபெறும் தேர்தலில் பங்கேற்க போவதில்லை என தெரிவித்துள்ளார்.
கடந்தாண்டு மார்ச் மாதத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்ட குட்டன்பர்க் அமெரிக்கா சென்று குடும்பத்தோடு தங்கிவிட்டார்.அங்கு ஜரோப்பிய ஒன்றியத்தின் வலைத்தள ஆணையருக்கு ஆலோசகராகப் பணியாற்றினார்.
இந்நிலையில் அவரை மீண்டும் ஜேர்மனியின் அரசியலுக்குக் கொண்டு வர அவரது கட்சியான கிறிஸ்டியன் சோஷியல் யூனியன்(CSU) முயன்றது. அக் கட்சியின் தலைவர் ஹார்ஸ்ட் ஸீஹோர்ஃபெர் மீண்டும் குட்டன்பர்க்கைக் கொண்டுவர பெருமுயற்சி எடுத்தார்.ஆனால் குட்டன்பெர்க் தனது கட்சிக்கு எழுதிய கடிதத்தில், இது(2013 தேர்தல்) சரியான தருணமல்ல என்றும் தன் தவறுகளிலிருந்து இன்னும் தான் கற்றுக் கொள்ள வேண்டியது ஏராளம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF