Wednesday, January 18, 2012

அமெரிக்காவில் "மாற்றம்' வருமா?



"மாற்றம்' என்கிற ஒற்றைச் சொல்லைக் கொண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றவர் பராக் ஒபாமா. நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட அவரது பிரசாரத்துக்கும் உரைவீச்சுக்கும் அமெரிக்க மக்கள் மயங்கி நின்றார்கள். அதிபர் வேட்பாளருக்கான போட்டியில் ஹிலாரி கிளின்டனைத் தோற்கடித்த போதும், அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஜான் மெக்கைனை வீழ்த்திய போதும் மாற்றம் என்கிற சொல்லை மட்டும் விடாது பிடித்திருந்தார் ஒபாமா.


 இராக், ஆப்கானிஸ்தான் போர், பொருளாதார நெருக்கடி போன்றவை காரணமாக ஜார்ஜ் புஷ் மீதும், குடியரசுக் கட்சியினர் மீதும் கடும் கோபத்தில் இருந்த அமெரிக்கர்கள், ஒபாமா கேட்டுக் கொண்டபடி "மாற்றம் தேவை' என்பதில் நம்பிக்கை வைத்தார்கள். முஸ்லிம் நடுப் பெயரை மறைத்தது போன்ற சர்ச்சைகள் எழுந்தாலும் கறுப்பினத்தைச் சேர்ந்தவர் என்கிற கரிசனமான பார்வை ஒபாமா மேல் இருந்தது. யாரும் எதிர்பார்க்காத வகையில் கென்னடி குடும்பத்தினர் ஆதரவளித்தனர். எல்லாம் சேர்ந்து ஒபாமாவை வெள்ளை மாளிகைக்கு அனுப்பி வைத்தது.இந்த 3 ஆண்டுகளில் நிலைமை தலைகீழாக மாறியிருக்கிறது. எந்தச் சொல்லைப் பயன்படுத்தி அதிபர் தேர்தலில் ஒபாமா வெற்றி பெற்றாரோ, அதே சொல் அவருக்கு எதிராகவே பயன்படுத்தப்படுகிறது. உண்மையிலேயே இப்போதுதான் மாற்றம் தேவை என்று அவரது எதிர்ப்பாளர்கள் பிரசாரம் செய்யத் தொடங்கியிருக்கின்றனர். ஒரு "வரலாற்றுத் தவறு' இந்த ஆண்டு திருத்தப்பட இருக்கிறது என்று கோஷம் எழுப்புகின்றனர். முக்கிய நகரங்களிலும் இணையதளம் மூலமாகவும் ஒபாமா எதிர்ப்புப் பிரசாரம் சூடு பிடித்திருக்கிறது.


 அமெரிக்க அதிபர் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடக்க இருக்கிறது. ஜனநாயகக் கட்சி சார்பில் ஒபாமாவே மீண்டும் போட்டியிடுவது என்பது உறுதியாகிவிட்டாலும்  ஒவ்வொரு  மாநிலத்தில் நடக்கும் தேர்தல்களிலும் அவர் பங்கேற்று பிரசாரம் செய்து வருகிறார். ஆனால், கடந்த தேர்தலைப் போல அவரது பிரசாரத்தில் மக்களை ஈர்க்கும் எந்த அம்சமும் இல்லை. அவரிடம் இருந்த ஆளுமைத் திறனும் வசீகரமும் திடீரெனக் காணாமல் போய்விட்டதைப் போலத் தெரிகிறது.அமெரிக்க அதிபர் தேர்தல் நம் நாட்டு தேர்தலைப் போல கிடையாது. பிரசாரம் கொஞ்சம் வித்தியாசமாகவும் மிக நீண்டதாகவும் இருக்கும். பிரைமரி, காகஸ் எனப்படும் வேட்பாளர்களுக்கான தேர்தல்கள் மூலம் உள்கட்சி ஜனநாயகம் உறுதிப்படுத்தப்படுகிறது.
 இதில் பிரைமரியை மாநில அரசோ, மத்திய அரசோ நடத்தும். காகஸ் என்பது கட்சிக்காரர்களே நடத்திக் கொள்வது. இதையெல்லாம் பார்த்தால், அங்கு ஜனநாயகம் தழைத்து ஓங்குவதைப் போலத்தான் தெரியும். ஆனால், அரசியல்வாதிகள் என்னவோ எல்லா நாடுகளையும் போல பெரு நிறுவனங்களின் கைப்பாவையாகவே நடந்து கொள்கிறார்கள். தேர்தல் நிதி வசூலிப்பது ஒவ்வொரு வேட்பாளரின் தலையாய கடமையாக இருக்கிறது. 


பெருநிறுவனங்களிடமிருந்துதான் பெரும்பணம் கிடைக்கிறது. இதற்குப் பதிலுதவியாகத்தான் பதவிக்கு வந்த பிறகு, இந்தியா போன்ற கேட்பாரற்ற நாடுகளின் பிரதமர்களைப் பிடித்து, நன்கொடை அளித்த நிறுவனங்களுக்கு அணுஉலை நிறுவுவது, ஆயுதம் அளிப்பது என ஏதாவது ஒப்பந்தப் பணிகளைப் பெற்றுக் கொடுக்கிறார்கள் போலும்.பொதுக்கூட்டங்களுக்குக் கூட்டம் சேர்ப்பது, அங்கும் பெரிய பிரச்னைதான். உண்மைத் தொண்டன் என்று யாரையும் பார்க்க முடியாது. பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ளுங்கள், அதிபருடன் இரவு விருந்தில் கலந்துகொள்ளும் வாய்ப்பை வெல்லுங்கள் என்பது போன்ற கவர்ச்சிகரமாக விளம்பரம் செய்தால்தான் பொதுக்கூட்டங்களில் மக்கள் கலந்து கொள்கிறார்கள்.


 ஜனநாயகக் கட்சி சார்பில் ஒபாமாதான் வேட்பாளர் என்று முடிவாகிவிட்ட நிலையில், குடியரசுக் கட்சியினர் மட்டும்தான் வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கிறது. கடந்த தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஜான் மெக்கைன் இந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை. இப்போதைக்கு குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளருக்கான போட்டியில் முந்தி நிற்பது மாசசூட்ஸ் முன்னாள் ஆளுநர் மிட் ராம்னி. கடந்த தேர்தலில் மெக்கைனிடம் வாய்ப்பைப் பறிகொடுத்த ராம்னி, இந்தத் தேர்தலில் அவரது முழு ஆதரவைப் பெற்றிருக்கிறார். ராம்னிக்கு போட்டியாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டவரும் மூன்றாவது இடத்தில் இருந்தவருமான உதா மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் ஹன்ஸ்மன் திடீரென போட்டியிலிருந்து விலகியிருக்கிறார்.ஆக, குடியரசுக் கட்சியில் இறுதிப் போட்டி மிட் ராம்னிக்கும் எம்.பி.யாக இருக்கும் ரான் பாலுக்கும் மட்டும்தான். இதில் ரான் பால் இரண்டாமிடத்தில் இருக்கிறார். தொழிலதிபரான ராம்னிக்கு குடியரசுக் கட்சியின் பல்வேறு தலைவர்களும் கார்ப்பரேட் நிறுவனங்களும் ஆதரவு தெரிவித்திருப்பதால், இந்தப் போட்டியில் அவர் வெற்றி பெறுவதற்கே அதிக வாய்ப்புகள் இருப்பதாகக் கருதப்படுகிறது.


 குடியரசுக் கட்சியின் போட்டியில் ராம்னி வென்று, ஒருவேளை இப்போதே தேர்தல் நடத்தப்பட்டால், ஒபாமா கடும் போட்டியைச் சந்திக்க நேரிடும் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. ராம்னிக்கு கிடைக்கப் போகும் வாக்குகளில் பெரும்பகுதி, ஒபாமா மீண்டும் பதவிக்கு வரக்கூடாது என்று விரும்புவோரின் வாக்குகளாகவே இருக்கும் என்றும் கூறப்படுகிறது.மக்கள் எதிர்ப்பைச் சம்பாதிப்பது ஒன்றும் அமெரிக்க அதிபர்களுக்கு புதிதல்ல. தேர்தலில் அது எதிரொலிக்குமா என்பதுதான் பிரச்னை. அனைத்துத் தரப்பினரும் எதிர்த்த ஜார்ஜ் புஷ்ஷால் இரண்டாவது முறையும் ஆட்சிக்கு வர முடிந்தது என்றால் ஒபாமாவால் மீண்டும் வர முடியாதா என்கிற கேள்வியிலும் நியாயம் இருக்கத்தான் செய்கிறது.


பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF