Sunday, January 29, 2012

NEWS OF THE DAY.

சீனாவின் கடன்களில் தங்கியிருப்பது நாட்டுக்கு ஆபத்தானது! எச்சரிக்கிறது ஐ.தே.க.
இலங்கையின் கட்டுமான வேலைத்திட்டங்கள் நேரடி வெளிநாட்டு உள்நாட்டு முதலீடுகள் இன்றி முற்றுமுழுதாக சீனாவின் கடன்களிலேயே தங்கியிருக்கின்றமை நாட்டின் அரசியலுக்கும் பொருளாதாரத்துக்கும் பெரும் பாதகமாக அமைந்துவிடும் என்று அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி சுட்டிக்காட்டுகின்றது. பொதுக் கட்டுமான வேலைத்திட்டங்களில் டென்டர் நடைமுறைகளோ வெளிப்படைத் தன்மையோ இன்றி அரசாங்கம் சீனாவின் கடன்களை பெற்றுச் செயற்படுவதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா பிபிசியிடம் சுட்டிக்காட்டினார்.
மத்தள சர்வதேச விமான நிலையம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் போன்ற வேலைத்திட்டங்கள் சீனாவின் முழுமையான கடன்கள் எனவும் அவற்றுக்காக வெளிப்படையான டென்டர் நடைமுறைகள் பின்பற்றப்படவில்லையென்றும் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கூறினார்.
உட்கட்டமைப்பு அபிவிருத்தி செயற்திட்டங்களின் போது அரசாங்கம், உள்நாட்டு நிறுவனங்களை ஒதுக்கிவிட்டு சீன அரசின் கட்டுப்பாட்டிலுள்ள நிறுவனங்களுக்கே டென்டர் நடைமுறையின்றி முன்னுரிமை கொடுப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.பொதுவாக உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற நிறுவனங்கள் உட்கட்டமைப்பு வசதி அபிவிருத்திக்காக கடன் வழங்கும் போது, வெளிப்படையான, டென்டர் நடைமுறைகள் தேவை என்ற நிபந்தனைகளை விதிக்கும் நிலையில், சீனக் கடன்கள் எவ்வித நிபந்தனைகளையும் விதிப்பதில்லை என்பது நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் ஹர்ஷ டி சில்வா சுட்டிகாட்டினார்.
ஐ.தே.க செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க மீது சந்தேகம்! நீதிமன்றம் செல்வோம் அதிருப்தியாளர்கள் அறிவிப்பு.
ஐக்கிய தேசியக் கட்சியின் அதிருப்தியாளர்கள் நாளை நீதிமன்றத்துக்கு செல்லவுள்ளதாக அறிவித்துள்ளனர்.கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற கட்சி தேர்தலின்போது சுயாதீன முறை கடைபிடிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்தே அதிருப்தியாளர்கள் நீதிமன்ற உதவியை நாடவுள்ளனர்.
தென்மாகாண சபை உறுப்பினர் மைத்திரி குணரத்ன இது தொடர்பாக கூறும் போது, சுயாதீனமற்ற தேர்தல் தொடர்பில் கட்சியின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவின் மீது சந்தேகம் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.வாக்குச்சீட்டுக்கள் இலக்கமிடப்பட்டதும் வாக்களிப்புகள் ஸ்ரீகோத்தாவில் உள்ள ரணில் விக்கிரமசிங்கவின் அறையில் இடம்பெற்றதும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.திஸ்ஸ அத்தநாயக்கவை தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமித்தமைக்காக திஸ்ஸ அத்தநாயக்க ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக செயற்படுவதாக மைத்திரி குணரத்ன குற்றம் சுமத்தியுள்ளார்.
மட்டு. காத்தான்குடி கடலில் கரையொதுங்கியுள்ள பாரிய திமிங்கிலம்..
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி கடற்கரையில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பாரிய திமிங்கிலமொன்று கரையொதுங்கியுள்ளது.அதிகாலை வேளை 2 மணியளவில் இத்திமிங்கிலம் கரையொதுங்கியதை அவதானித்த மீனவர்கள் காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு தெரியப்படுத்தினர்.
16 அடி நீளமும் 5 அடி அகலமும் கொண்ட இத்திமிங்கிலத்தைக் கரைக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இவ்வாறு கரையொதுங்கியுள்ள திமிங்கிலத்தை மட்டக்களப்பு, காத்தான்குடி ஆகிய இடங்களில் இருந்து ஏராளமான பொது மக்கள் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.
தேசிய பிரச்சினைகளுக்கு அரசாங்கத்திடம் பதிலில்லை - அனுரகுமார திஸநாயக்க.
நாட்டின் தேசிய பிரச்சினைகளுக்கு அரசாங்கத்திடம் எதுவித பதிலும் கிடையாது என ஜே.வி.பியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் எதுவித இலக்குமின்றி தட்டுத்தடுமாறி ஆட்சி செய்கின்றது. பொருளாதாரம் பற்றி எவ்வித கொள்கையும் கிடையாது. எத்தனை சட்ட மூலங்களை அரசாங்கம் அண்மைக்காலமாக வாபஸ் பெற்றுக் கொண்டுள்ளது? அரசாங்கத்திற்குள் பல்வேறு உட்பூசல்கள் ஏற்பட்டுள்ளதாக அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.இதேவேளை, ஜே.வி.பி கிளர்ச்சிக் குழுவின் நடவடிக்கைகள் கட்சியின் பயணத்திற்கு எந்த வகையிலும் தடையாக அமையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையின் பாதாளக் குழு தலைவர்கள் இத்தாலியில் செயற்படுகின்றனர்.
இலங்கைப் பாதாளக் குழக்கள் இத்தாலியில் கப்பம் கோரல்களில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.நாட்டிலிருந்து தப்பிச் சென்ற பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் இத்தாலி வாழ் இலங்கையர்களுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தி வருகின்றனர்.இத்தாலியில் வாழும் இலங்கையர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து மாதாந்தம் பணம் அறவீடு செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் பாதாள உலகக் குழுவினரின் செயற்பாட்டை கண்டிக்கும் நோக்கில் இத்தாலி வாழ் இலங்கையர்கள் விரைவில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தத் திட்டமிட்டுள்ளனர்.பாதாள உலகக் குழுவினரை ஒடுக்கும் நோக்கில் இலங்கையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதனைத் தொடர்ந்து, பலர் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளனர்.
தெற்கின் முக்கிய பாதாள உலகக் குழுத் தலைவர்களில் ஒருவரான ரத்கம நதுன், கெசல்வத்தே கொட குமார, மெகா அஜித் போன்றவர்களும் தற்போது இத்தாலியில் வாழ்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.பாதாள உலகக் குழு உறுப்பினர்களின் நடவடிக்கைகள் தொடர்பில் இத்தாலி வாழ் இலங்கையர்கள் இதுவரையில் அந்தநாட்டு பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யவில்லை எனக்குறிப்பிடப்படுகிறது.
எரிபொருள் இறக்குமதி! இலங்கைக்கு ராஜதந்திர நெருக்கடி.
எரிபொருள் இறக்குமதி தொடர்பில் இலங்கை ராஜதந்திர பிரச்சினையை எதிர்நோக்கி வருகின்றது. இந்நிலையில் தொடர்ந்தும் நாட்டின் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்ய தயாராகவே உள்ளதாக ஈரான் இலங்கைக்கு அறிவித்துள்ளது.
ஆறு மாத காலப்பகுதியில் நடைமுறைக்கு வரும் வகையில் ஈரான் மீது அமெரிக்கா நிதி வழங்கல் தடையை கொண்டு வரும் சட்டத்தில் அமரிக்க ஜனாதிபதி கையொப்பமிட்டுள்ளார்.இதேவேளை, தொடர்ந்தும் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்வதாக இந்தியாவுக்கும் ஈரான் அறிவிப்பு விடுத்துள்ளது. எனினும் இந்தியா, அமெரிக்காவின் தடையை கருத்திற்கொள்ளாது தெஹ்ரானுக்கு அதன் அதிகாரிகளை அனுப்பி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.
இந்நிலையில், ஈரான் மீது அமெரிக்கா கொண்டு வரும் நிதி வழங்கல் தடை இலங்கையை பாதிக்கும் விதம் குறித்து தெளிவற்ற நிலைப்பாட்டை இலங்கை அரசாங்கம் கொண்டுள்ளது.இதனையடுத்து வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், அமரிக்கா தூதரகத்துடன் இது குறித்து தெளிவைப்பெற முயன்றுள்ளார்.எனினும், இந்த விடயத்தை பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதி இலங்கைக்கு வரும் அமரிக்காவின் திறைசேரி உதவிசெயலாளர் Luke Bronin உடன் மாத்திரமே கலந்துரையாட முடியும் என்று அமெரிக்க தூதரக ஊடகப்பணிப்பாளர்(Chris Teal) கிறிஸ் டீல் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா ஈரான் மீது விதிக்கும் நிதிவழங்கல் தடைக்காரணமாக இலங்கைக்கு பாதிப்பு ஏற்படுமா? என்பது குறித்து அவரே கருத்துக் கூறக்கூடியவர் என்றும் டீல் குறிப்பிட்டுள்ளார்.இலங்கை, ஈரானிடம் இருந்து 80 வீதமான மசகு எண்ணெய்யை இறக்குமதி செய்கிறது. இதற்காக 4 மாத கடன் சலுகையையும் இலங்கை பெற்றுக்கொள்கிறது.
இந்தியாவில் முதலீடு செய்யவுள்ளது பெலவத்த சீனித்தொழிற்சாலை நிர்வாகம்.
இலங்கையில் நீதி கிடைக்காவிட்டால் இந்தியாவில் முதலீட்டை மேற்கொள்ளப்போவதாக பெலவத்த சீனித்தொழிற்சாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.நட்டமடையும் நிறுவனங்களை பொறுப்பேற்கும் அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ் பெலவத்த சீனித்தொழிற்சாலையும் பொறுப்பேற்கப்பட்டது.
இந்நிலையில் மாதம் ஒன்று தொழிற்சாலையை பராமரிக்க 86 மில்லியன் ரூபாய்கள் செலவாவதாக பெலவத்த சீனித்தொழிற்சாலையின் தலைவர் தயா கமகே தெரிவித்துள்ளார்.எனவே, இந்த நட்டங்களுக்காக அரசாங்கத்திடம் இருந்து 10 பில்லியன் நட்ட ஈட்டை எதிர்ப்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அது கிடைக்காத பட்சத்தில் தாம் இந்தியாவில் முதலீட்டை மேற்கொண்டு நட்டத்தை ஈடுசெய்யப் போவதாகவும் தயா கமகே குறிப்பிட்டுள்ளார்.
இந்தோனேஷியாவில் பலத்த சூறைக்காற்று: 14 பேர் பலி.
இந்தோனேஷியாவில் இன்று திடீரென வீசிய சூறாவளி காற்றினால் 14 பேர் பலியாகினர், 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர், 2000 வீடுகள் பலத்த சேதமடைந்தன.இதுகுறித்து இந்தோனேஷியா பேரழிவு மேலாண்மை மையத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி விடுத்துள்ள செய்தியில், இந்தோனஷியாவின் கிழக்கு கடலோர மகாணங்களான ஜாவா, பாலி ஆகிய தீவுப்பகுதிகளில் கடந்த புதன்கிழமை முதல் புயல்சின்னம் தோன்றி இருந்தது.
இந்நிலையில் இன்று திடீரென சூறாவளி காற்று வீசியது. இதனால் சாலையில் நடந்து சென்றவர்கள் உட்பட 14 பேர் பலியாகினர், 60 பேர் காயமடைந்தனர், மேலும் 2000-த்திற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.இந்த சூறாவளிக்கு இக்கி என பெயரிடப்பட்டுள்ளது. தற்போது இது வலுவிழந்து மேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது என்றார்.
தொலைபேசி ஒட்பு கேட்பு விவகாரம்: லண்டனில் 5 பத்திரிக்கையாளர்கள் கைது.
பிரிட்டனில் தொலைபேசி ஒட்பு கேட்பு விவகாரத்தின் கீழ் லண்டன் நியூஸ் இன்டர்நேஷனல் பத்திரிக்கையின் நிருபர்கள்  ஐந்து பேரை காவல்துறையினர் இன்று கைது செய்தனர்.தொலைபேசியின் தகவல்களை ஒட்டு கேட்க காவல்துறை அதிகாரிகளுக்கு இவர்கள் லஞ்சம் கொடுத்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக ஏற்கனவே கைது செய்யப்பட்ட நியூஸ் இன்டர்நேஷனல் தலைவர் ரெபெக்கா புரூக்ஸ் பிணையில் விடுவிக்கப்பட்டார்.பிரிட்டன் மட்டுமின்றி உலக நாடுகளில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் ரூபர்ட் முர்டோக்கின் மூடப்பட்ட நியூஸ் ஆப் த வேர்ல்டு பத்திரிகையின் தொலைபேசி ஒட்டு கேட்பு விவகாரத்தால் பலர் பதவிகளை இழந்து வருகின்றனர்.இப்பத்திரிகையில் பணியாற்றி வந்த முன்னாள் ஆசிரியர்கள், துணை ஆசிரியர்கள் மற்றும் நியூஸ் இன்டர்நேஷனல் தலைவர் ரெபெக்கா புரூக்ஸ் என இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இக்குற்றச்சாட்டின் கீழ் லண்டன் மாநகர பொலிஸ் கமிஷனர் பால் ஸ்டீபன்சன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.ராஜினாமாவுக்கான காரணத்தில், நியூஸ் இன்டர்நேஷனல் மூத்த அதிகாரிகளுடன் மாநகர பொலிசாருக்கு தொடர்பு இருப்பதாக எழுந்த யூகம் மற்றும் குற்றச்சாட்டின் கீழ் பதவியை ராஜினாமா செய்கிறேன் என தெரிவித்துள்ளார்.
ஆற்று நீரில் காட்மியம் ரசாயனம் கலப்பு: பொதுமக்களுக்கு அரசு எச்சரிக்கை.
சீனாவில் குவாங்சி பகுதியில் உள்ள 2 மிகப்பெரிய ஆறுகளில் காட்மியம் ரசாயனம் கலந்திருப்பது பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.இதனால் புற்றுநோய் தாக்கும் அபாயம் இருப்பதால் ஆற்று நீரை பயன்படுத்த வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
சீனாவின் தெற்கு பகுதியில் உள்ளது குவாங்சி ஷுவாங் மாகாணம். இங்குள்ள நதிகள் லியுஜியாங், லாங்ஜியாங். இந்த நதிகளின் நீரை 37 லட்சத்துக்கும் அதிகமானோர் குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில் காட்மியம் ரசாயனம் ஆற்றில் அதிகளவில் கலந்திருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காட்மியம் கலந்த நீரை குடிப்பதால் புற்றுநோய் ஏற்படும் என்பதால் ஆற்று நீரை குடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் செயல்படும் பல்வேறு தொழிற்சாலைகளால் நீர் மாசுபாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குவாங்சி மாகாணத்தில் உள்ள லியுசோவ் பகுதியில் ஏராளமான சுரங்கங்கள் உள்ளன. சுரங்கங்களில் இருந்து வெளியாகும் ரசாயனம் கலந்த கழிவு நீர் ஆற்றில் திறக்கப்படுவதால்தான் நீர் மாசுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.சின்ஹுவா மாகாணம் ஹீச்சி பகுதியில் ஆற்று நீரில் காட்மியம் கலந்திருப்பது 2 வாரம் முன்பு கண்டறியப்பட்டது. தற்போது மேலும் 2 ஆறுகளில் ரசாயன கலப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து மாசுபட்ட ஆற்றுநீரை சுத்திகரிக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. காட்மிய ரசாயனத்தின் வீரியத்தை குறைக்கும் வகையில் அலுமினியம் குளோரைடு ரசாயனத்தை நீரில் கொட்டும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.ஆற்று நீரில் ரசாயன கழிவுகளை கலக்கும் தொழிற்சாலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். விதிகளை மீறும் நிறுவனங்களை இழுத்து மூட வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
போதை மறுவாழ்வு மையத்தில் தீ விபத்து: 26 பேர் உடல் கருகி பலி.
பெரு நாட்டில் உள்ள கிறிஸ்டிலவ் என்ற போதை மறுவாழ்வு மையத்தில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் 26 பேர் உடல் கருகி பலியாயினர்.லத்தீன் அமெரிக்க நாடான பெரு நாட்டில் கிறிஸ்டிலவ் என்ற பெயரில் போதைக்கு அடிமைக்கு உள்ளாவனர்களுக்கு மறுவாழ்வு மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு இரண்டு மாடி கட்டடம் செயல்பட்டு வருகிறது.இந்த கட்டடத்தில் இன்று காலை ஏற்பட்ட தீவிபத்தில் 26 பேர் தீயில் கருகி பலியாயினர், பலர் காயமடைந்தனர்.
சம்பவ இடத்தில் தீயணைப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தீ வேகமாக பரவியதால் பலர் தப்பிக்க கட்டடத்தின் ஜன்னல் வழியாக குதித்து தப்பிக்க முயன்ற போது பலியானதாகவும் கூறப்படுகிறது.இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் அல்பர்டோ ‌டேஜாடா கூறுகையில், அளவுக்கு அதிகமான அளவில் நோயாளிகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மறுவாழ்வு மையத்தில் அடிப்படை வசதிகள் சரிவர செய்யப்படவில்லை. மேலும் இவர்கள் கைதிகள் போல் நடத்தப்பட்டு வந்ததால் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றார்.தீ விபத்திற்கான காரணம் குறித்தும், இம்மறுவாழ்வு மையத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடந்து வருவதாக உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
காத்திருப்பதினால் அதிகப் பணம் விரையமாகின்றது: ஜேர்மன் மக்கள் குற்றச்சாட்டு.
தொலைபேசியில் பேசுவதற்காக காத்திருக்கும் நேரத்தில் அதிகளவு பணம் விரையமாகின்றது என்று ஜேர்மன் மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.தொலைபேசியில் பேசுவதற்காக காத்திருக்கும் நேரத்தில் 150 மில்லியன் யூரோ செலவாகிறது. இது தொலைபேசியில் பேசும் போது ஆகும் செலவை விட அதிகமாகும்.
எனவே அரசியல்வாதிகள் இந்தக் காத்திருப்புக் கட்டணத்தைக் குறைக்க மிகவிரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.0180 எனத் தொடங்கும் எண்களை பயன்படுத்தும் நபர்கள் அதிக நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. இவர்கள் ஆண்டுதோறும் 616 மில்லியன் நிமிடங்கள் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.அண்மையில் மக்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்கு நாடாளுமன்றத்தில் தொலைத்தொடர்பு மசோதா ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
அதில் கூடுதல் தொலைபேசிக் கட்டணத் தொகையைக் குறைக்க வேண்டும் என்றும், கட்டணமில்லா எண்களில் மட்டுமே மக்களை காக்க வைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது.இல்லையென்றால் குறைந்தபட்சக் கட்டணத்தை நிமிடக்கணக்கில்லாமல் வசூலிக்க வேண்டும் என்ற விதிகள் இந்த மசோதாவில் இடம்பெற்றுள்ளன.
அணு ஆயுத திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய ஐ.நா குழு இன்று ஈரானுக்கு பயணம்.
ஈரானின் அணு ஆயுத திட்டங்கள் குறித்து ஐ.நா.வின் சர்வதேச அணுசக்தி ஏஜென்சியைச் சேர்ந்த(ஐ.ஏ.இ.ஏ) உயர் அதிகாரிகள் இன்று ஈரான் சென்று ஆய்வு மேற்கொள்கின்றனர்.அணு சோதனை மற்றும் அணு ஆயுதங்களை தயாரிப்பதாக ஈரான் மீது அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இது தொடர்பாக அமெரிக்கா ஈரான் மீது பல்வேறு பொருளாதார தடை விதித்தது மற்றும் ஈரான் மத்திய வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. மேலும் ‌கடந்த சில நாட்களுக்கு முன் ஐரோப்பிய  கூட்டமைப்பு நாடுகளின் அமைப்பும் ஈரான் மீது பொருளாதார தடையை விதித்தது.மின்சார தேவைக்காக மட்டுமே அணுசோதனை என ஈரான் கூறிவந்தாலும், ‌தொடர்ந்து யுரேனியம் செறிவூட்டல் மையத்தினை அதிகரித்து வருவதாக புகார் எழுந்து வருகிறது. இதனை தொடர்ந்து ஈரான் மறுத்து வருகிறது.
இந்நிலையில் ஐ.நா.வின் அமைப்பான சர்வதேச அணுசக்தி ஏஜென்சியின்(ஐ.ஏ.இ.ஏ.) துணை இயக்குனர் ஜெரனல் ஹெர்மான்நெக்ரட்ஸ் தலைமையிலான 6 பேர் கொண்ட குழுவினர் இன்று ஈரான் சென்று அங்கு ஆய்வு நடத்துகின்றனர்.அப்போது ஈரான் அணுவிஞ்ஞானிகள் மற்றும் உயரதிகாரிகளிடம் அணுசோதனை குறித்து கேள்வி எழுப்ப உள்ளனர். தொடர்ந்து மூன்று நாட்கள் ஈரானில் முகாமிட்டு இந்த சோதனை நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து சர்வதேச அணுசக்தி ஏஜென்சியின் தலைவர் யூகியோ அமோனா கூறுகையில், ‌ஈரான் சென்றுள்ள குழுவினருக்கு அங்குள்ள அணுசக்தித்துறை அதிகாரிகள் உரிய பதில் அளிப்பர். இப்பிரச்னைக்கு விரைவில் தீர்வு எட்டப்படும் என்றார்.ஈரானின் அணுசோதனை குறித்து சர்வதேச அணுசக்தி ஏஜென்சி குழு நடத்தும் இரண்டாவது சோதனை இது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2008ம் ஆண்டு முதன்முறையாக ஐ.ஏ.இ.ஏ. குழு ஈரான் ‌சென்று அணுதிட்டம் குறித்து ஆய்வு மேற்கொண்டது. தற்போது இரண்டாவது முறையாக ஈரான் சென்றுள்ளது.
மியான்மர் தேர்தல்: பிரசாரத்தை தொடங்கினார் சூகி.
மியான்மரில் வரவிருக்கும் இடைத்தேர்தலில் அந்நாட்டின் ஜனநாயக லீக் கட்சி தலைவரும், நோபல் பரிசு பெற்றவருமான ஆங் சான் சூகி(66) முதன் முறையாக போட்டியிடுகிறார்.மியான்மர் அரசியல் கைதிகளை விடுவித்தல், அரசியல் கட்சிகளை அங்கீகரித்தல், பழங்குடியினர் உடனான மோதலை நிறுத்தி வைத்தல் என சமீப காலமாக பல்வேறு ஜனநாயக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
இதன் மூலம் அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகள் விதித்துள்ள பொருளாதாரத் தடைகளை நீக்கலாம் என கருதுகிறது.இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட பிறகும் கூட கடந்த 2010ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலை சூகி கட்சி புறக்கணித்தது. இதனால் அவரது கட்சி அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது.
தற்போது அவரின் தேசிய ஜனநாயக லீக் கட்சி தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது. நாடாளுமன்றத்தின் 48 இடங்களுக்கான இடைத்தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 1ம் திகதி நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த தேர்தலில் போட்டியிடுவதாக முடிவு செய்துள்ள சூகி, தொடர்ச்சியாக தற்போது யாங்கூன் அருகில் உள்ள காவ்மு என்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக கடந்த 17ம் திகதி வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
இதன் முதற்கட்டமாக இன்று ‌யாங்கூன் மாவட்டத்தின் தாவேய் நகரில் தனது முதல் பிரசாரத்தினை தொடக்கினார். மேலும் மியான்மரில் இரண்டாவது மிகப்‌பெரிய நகரமான பர்மா, மான்ட்லே உட்பட பகுதிகளில் பிரசாரம் செய்ய உள்ளதாக அவரது செய்தி தொடர்பாளர் நெயான்வின் தெரிவித்தார்.மியான்மர் பாராளுமன்ற கீழ்சபையின் மொத்தமுள்ள 48 இடங்களில், 40 இடங்களில் சூச்சியின் கட்சி தன் வேட்பாளர்களை நிறுத்த திட்டமிட்டுள்ளது.
பிரான்சின் தரமதிப்பு குறையவில்லை: பிட்ச் நிறுவனம்.
பிரான்ஸ் தன் தரமதிப்பான AAA தகுதியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது என பிட்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது.அயர்லாந்து தனது BBB தகுதியிலேயே தொடர்கிறது. இத்தாலி மற்றும் ஸ்பெயினின் நிதிநிலையில் சரிவு காணப்படுகிறது.இந்த பிட்ச் நிறுவனம் யூரோ மண்டலத்தின் நிதிநிலைமை இன்னும் மோசமடையும் என்று தெரிவித்துள்ளது.
யூரோ மண்டலத்தின் நிதி நெருக்கடியை அரசியல் தலைவர்கள் கையாண்டதில் ஏற்பட்ட தவறுகளே இத்தாலி, ஸ்பெயின், பெல்ஜியம், ஸ்லோவேகியா, சைப்ரஸ் போன்ற நாடுகளின் நிதிநிலை பாதிப்படையக் காரணமாயிற்று.பெரிய அளவில் பொருளாதார மீட்பு ஏற்பட்டால் மட்டுமே இந்தச் சிக்கலைத் தீர்க்க முடியும். பொருளாதார மற்றும் நிதி நிலைத்தன்மையைப் பாதுகாக்கும் முறைகளே இன்றைக்கு யூரோ மண்டலத்தின் இன்றியமையாத தேவையாகும்.
ஈரானை அழிக்க வெடிகுண்டுகளை தயாரிக்கும் அமெரிக்கா.
ஈரானின் அணுசக்தி திட்டங்களைத் தாக்கி அழிக்கும் திறன் கொண்ட பங்கர் – பஸ்டர் வெடிகுண்டுகளை அமெரிக்கா தயாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.ஈரானின் தலைநகர் டெஹ்ரான் அருகே உள்ள போர்டோ பகுதியில் பூமிக்கடியில் மிக மிக பாதுகாப்பான முறையில் அணு ஆயுதங்கள் தயாரிக்க உதவும் யுரேனியச் செறிவூட்டலில் தாம் ஈடுபட்டிருப்பதாகவும், அதை யாராலும் தாக்க முடியாது எனவும் ஈரான் சமீபத்தில் அறிவித்தது.
இதையடுத்துத் ஈரானின் மிக பாதுகாப்பான அணுசக்தி நிலையங்களைத் தாக்கும் வகையிலான சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளைத் தயாரிக்கும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டிருப்பதாக அமெரிக்காவில் இருந்து வெளிவரும் வால்ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த வெடிகுண்டு மொத்தம் 20 அடி நீளம் கொண்டது, 5300 பவுண்டு எடை கொண்ட வெடிப்பொருட்களை தாங்கி செல்லும் சக்தியும், பூமியில் 200 அடி ஆழத்திற்கு ஊடுருவும் திறனும் கொண்டது. போர்டோவில் ஈரான் நிறுவியுள்ள அணுசக்தி நிலையம் பூமிக்கடியில் 212 அடி ஆழத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இதுகுறித்து அப்பத்திரிகையில் கூறப்பட்டிருப்பதாவது: 20 குண்டுகளைத் தயாரிக்க அமெரிக்கா 330 மில்லியன் டொலர் செலவழித்துள்ளது. இந்த வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்ட போது ஈரானின் தற்போதைய பாதுகாப்பான அணுசக்தி நிலையங்களை தாக்கும் அளவிற்கு அவற்றின் திறன் இல்லை எனக் கண்டறியப்பட்டது.
எனவே அவற்றின் சக்தியை அதிகரித்து தயாரிப்பதற்காக கூடுதலாக 82 மில்லியன் டொலர் நிதியை அரசிடம் கோரியுள்ளது பென்டகன்.கடந்த 2009ம் ஆண்டில் அமெரிக்க விமானப் படையின் பி -2 உளவு விமானத்தில் இந்த ரக குண்டுகளைப் பொருத்தும் ஒப்பந்தத்தை போயிங் விமான நிறுவனம் வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
சிறை செல்லத் தயார்: கிலானி.
உச்சநீதிமன்றத்தை அவமதித்த வழக்கில் என்னை சிறையில் அடைக்க வேண்டும் என நீதிமன்றம் விரும்பினால் அதற்கும் நான் தயார் என பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து பிரதமர் கிலானி அளித்த பேட்டியில் கூறியதாவது, ஜனாதிபதி ஸர்தாரி மீதான ஊழல் வழக்குகளைத் தொடங்குவதற்கு சுவிஸ் அதிகாரிகளுக்கு கடிதம் எழுத வேண்டும் என உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
ஆனால் அரசியல் அமைப்புச் சட்டப்படி, ஜனாதிபதி, பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோருக்கு உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் எவ்வித வழக்கும் அவர்கள் மீது தொடுக்க இயலாத அளவில் சட்டப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மிக நீண்ட காலமாக நடக்கும் இவ்வழக்கில் ஜனாதிபதி ஏற்கனவே எட்டு ஆண்டுகள் சிறையில் இருந்தார்.எனினும் என்னையும் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என நீதிமன்றம் விரும்பினால் நான் அதற்கும் தயாராக இருக்கிறேன் என்றார்.
நியூசிலாந்தில் கடும் நிலநடுக்கம்: கடல் அலைகள் வேகமாக எழுந்தன.
நியூசிலாந்து நாட்டில் இன்று அதிகாலை கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அத்துடன் கடல் அலைகளும் வேகமாக எழுந்தன.ஜப்பானில் நேற்று 5.5 ரிக்டர் என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் பெரிய அளிவில் பாதிப்புகள் ஏதுமில்லை.இதன் தொடர்ச்சியாக இன்று அதிகாலை நியூசிலாந்து நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் நியூசிலாந்து நாட்டின் கடல் பகுதியில் உருவானதாகவும், ரிக்டர் அளவில் 6.2 ஆகவும் பதிவாகி இருந்தது.இதன் காரணமாக கடல் அலைகள் வேகமாக எழுந்தாலும், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. நியூசிலாந்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட அதே நேரத்தில் இந்தியாவில் டெல்லியை யொட்டி உள்ள அரியானா மாநிலத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
பொருளாதாரச் சிக்கலிலிருந்து மீண்டு வர திண்டாடும் ஜேர்மனி.
யூரோ மண்டலத்தின் பொருளாதாரச் சிக்கலிருந்து மீண்டும் ஜேர்மனி தனது பழைய நிலையை அடைய முயன்றாலும் பொது நிதியில் குறைவு ஏற்பட்டுள்ளதால் ஜேர்மனி திண்டாடி வருகிறது.ஆனால் அரசின் புள்ளி விபரப்படி கடந்த 2011ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பொது நிதி முந்தைய ஆண்டை(2010) விட 4.1 சதவீதம் உயர்ந்திருப்பதாக கூறியது.
71 பில்லியன் யூரோ அரசு வருவாய் அதிகரித்துள்ளது. ஆனால் இந்தக்கணக்கு இதற்கு முந்தைய மாதங்களை விட குறைவாகும். நவம்பரில் 7.6 சதவீதம் உயர்வும், ஒக்டோபரில் 8.5 சதவீதம் உயர்வும் இருந்தது.மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையின்படி கடந்த 2011ஆம் ஆண்டில் அரசு வாங்கிய புதிய கடன் 17.3 பில்லியன் யூரோவாகும். இந்த ஆண்டுக் கடனுக்கான வட்டி 32.8 பில்லியன் யூரோவாகும்.
நடைபெறும் 2012ஆம் ஆண்டின் தொடக்கம் நிதி அடிப்படையில் வேகம் குறைந்ததாக இருந்தாலும், யூரோ மண்டல நிதி நெருக்கடியை சமாளித்து ஆண்டின் பிற்பகுதியில் தனது பழைய நிலைக்கு வந்துவிடும் என்று அரசு கணித்துள்ளது.IFWவின் பொருளியல் அறிஞரான ஆல்ஃபிரெட் பாஸ் கூறுகையில், நாட்டின் பொருளாதாரம் சரிசெய்யப்படுவதாகவும், வரி வருமானம் நிறைவாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
இத்தாலி கப்பல் விபத்து: பயணிகளுக்கு இழப்பீடு வழங்க நிர்வாகம் ஒப்புதல்.
இத்தாலி நாட்டைச் சேர்ந்த கோஸ்டா கன்கார்டியா என்ற கப்பல் பாறை மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 16 பேர் பலியாகினர், மேலும் பலரை காணவில்லை.இத்தாலியின் டஸ்கனி தீவு பகுதியில் கடந்த 14ம் திகதி கோஸ்டா கன்கார்டியா என்ற பயணிகள் சொகுசு கப்பல் தரைதட்டி கவிழ்ந்தது. அந்த கப்பலில் ஊழியர்கள் உட்பட 4,200 பேர் பயணம் செய்தனர்.
இவர்களில் பெரும்பாலானவர்களை மீட்புப் படையினர் காப்பாற்றினர். எனினும் 16 பேர் பலியாயினர். கப்பல் கப்டன் பிரான்சிஸ்கோ ஷெட்டினோவின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டதால், அவர் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் நுகர்வோர் அமைப்புடன் கப்பல் நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியது. இதன்படி கப்பலில் பயணம் செய்து காயமின்றி உயிர் தப்பியவர்களுக்கு தலா 7.25 லட்சம் இழப்பீடும் மற்றும் அவர்கள் வீடு வந்து சேர்வதற்கான செலவு வழங்க நிர்வாகம் ஒப்புக் கொண்டுள்ளதாக நுகர்வோர் அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது, குழந்தைகளுக்கும் இந்த இழப்பீடு பொருந்தும்.
நிறுவனத்தின் மீது வழக்கு தொடுக்க மாட்டோம் என உறுதி அளிப்பவர்கள் இந்த இழப்பீட்டை 1 வாரத்துக்குள் பெற்றுக் கொள்ளலாம். எனினும் காயமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து தீவிர ஆலோசனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.இதற்கிடையே இந்த இழப்பீடு போதாது என கோடகன்ஸ் என்று நுகர்வோர் அமைப்பு கூறியுள்ளது. இந்த அமைப்பு 81 லட்சம் இழப்பீடு தர வேண்டும் என வலியுறுத்தி வழக்கு தொடுக்கப் போவதாகவும், இதற்காக பயணிகளின் பெயர் பட்டியலை தயாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
பின்லேடன் குறித்து ரகசியமாக தகவல் தெரிவித்த வைத்தியர்.
பாகிஸ்தானில் வசித்து வரும் வைத்தியர் ஷகீல் அப்ரிடி தான் பின்லேடன் குறித்து தகவல் அளித்தவர் என அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் லியான் பனெட்டா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில், தகவல் தெரிவித்த வைத்தியர் மீது தேசத் துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. அவர் தேசத் துரோகம் செய்ததாகத் தெரியவில்லை என்றார்.
மேலும் கூறுகையில், அபோதாபாத் நகரில் ஒசாமா பின்லேடன் வசித்து வந்த வீட்டின் சுற்றுச் சுவர் தான் மிக அதிக உயரத்துடன் உள்ளது.அதனால் பாகிஸ்தானில் உள்ள சில அதிகாரிகளுக்கு அந்த வீட்டில் பின்லேடன் இருந்தது நிச்சயம் தெரியும். அதற்கு ஆதாரங்கள் எதுவும் என்னிடம் இல்லை. ஆனால் எனது தனிப்பட்ட கருத்தாக இதைச் சொல்கிறேன் என்றார்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF