Saturday, January 28, 2012

NEWS OF THE DAY.

சாப்பாட்டில் உப்பு கூட போட்டு மூக்கு உடைபட்ட இலங்கை பணிப்பெண்! குவைத்தில் சம்பவம்.
இலங்கைப் பணிப்பெண் ஒருவர் வீட்டு எஜமானியால் தாக்கப்பட்டு மூக்கு உடைபட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் குவைத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த பணிப்பெண் வீட்டில் சமைத்த உணவிற்கு அதிகமாக உப்பு சேர்த்தமை காரணமாகவே எஜமானியின் தாக்குதலுக்குள்ளாகியுள்ளார். 
தாக்குதலுக்கு உள்ளாகி மூக்கு உடைபட்டநிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள குறித்த  இலங்கைப் பணிப்பெண் 40 வயதானவர் என தெரிவிக்கப்படுகிறது.இவருடைய பெயர் விபரங்கள் எவையும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பெருந்தொகையான யூரோக்களை கடத்திய இலங்கையர் இத்தாலி விமானநிலையத்தில் கைது.
சட்டவிரோதமான முறையில் ஒரு தொகை யூரோக்களை எடுத்துச் சென்ற இலங்கையர் இத்தாலி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த இலங்கையர் இத்தாலியின் மிலானோ விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது அவரிடமிருந்து 4 லட்சத்து 20 ஆயிரம் யூரோக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக குறித்த இலங்கையர் மிலானோ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. 
அரசாங்கம் சீனாவிற்கு இந்த நாட்டை விற்பனை செய்யத் தொடங்கியுள்ளது!- ஐ.தே.க.
அரசாங்கம் சீனாவிற்கு இந்த நாட்டை விற்பனை செய்யத் தொடங்கியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா குற்றம் சுமத்தியுள்ளார்.
கொழும்புத் துறைமுகத்தின் ஒரு பகுதியை சீன நிறுவனமொன்று கொள்வனவு செய்துள்ளது. அபிவிருத்திப் பணிகளை சீன நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் மேற்கொள்வதாகத் தெரிவித்தால், அதில் உண்மையில்லை.
எனினும் பொருளாதாரக் கொலையாளிகள் நாட்டுக்குள் பிரவேசித்துள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.2011ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் வரையிலான நிதி அறிக்கைகள் நடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.அரசாங்கம் நாட்டு மக்களுக்கு பொய்யுரைத்து வருகின்றது. சீனா, உண்மையில் இலங்கைக்கு நன்கொடையாக ஒரு சதத்தையேனும் இந்தக் காலப்பகுதியில் வழங்கவில்லை.சீனாவிடம் பெற்றுக்கொண்ட கடன்களுக்காக அரசாங்கம் அதிகளவான வட்டி செலுத்தப்படுகின்றது என அவர் ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை உற்பத்தி பொருட்களுக்கு தமிழ்நாட்டில் தடை விதிப்பு.
இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களை இந்தியாவின் தமிழ் நாட்டிலுள்ள கடைகளின் முன்பாக உள்ள அலுமாரிகளில் காட்சிக்கு வைக்க வேண்டாம் எனவும் அவ்வாறு வைக்கப்பட்டுள்ளவற்றை உடன் அகற்றுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழ்நாடு அரச நகர கூட்டுறவுச் சங்கங்களின் மூத்த அலுவலர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.இலங்கைப் பொருள் களைப் புறக்கணிப்போம்" என்ற அமைப்பு மேற்கொண்ட தீவிர பிரசாரங்களை அடுத்து சக்தி சரவணன் என்ற மூத்த அதிகாரி இந்த உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார்.
தமிழக அரசு ஏற்கனவே இலங்கைக்கு எதிராக தமிழக சட்ட சபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் இப்போது இலங்கை உற்பத்திப் பொருள்களுக்கு தடைவிதிக்க வேண்டும் என அரச கூட்டுறவுச் சங்கங்களே கோரிக்கை விடுத்துள்ளதை அடுத்து தமிழகத்தில் உள்ள அரச நகர கூட்டுறவுச் சங்கங்களின் கடைகளின் முன்னால் உள்ள அலுமாரிகளிலிருந்து அந்தப் பொருள்கள் அகற்றப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.இலங்கையில் உற்பத்தியாகும் பிஸ்கட், சொக்கலேட், மருந்துப் பொருள்கள் ஆகியவற்றுக்கே இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
கப்பல் விபத்திற்கு காரணம் என்ன? அதிர்ச்சித் தகவல் வெளியீடு.
இத்தாலி தலைநகர் ரோம் அருகில் உள்ள தீவு ஒன்றில் கடலில் பாறை மீது மோதி கவிழ்ந்த கோஸ்டா கான்கார்டியா கப்பல் ஏன் கிக்லியோ தீவு அருகில் சென்றது என்பது குறித்து தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது.இவ்விபத்தில் இதுவரை 16 பேர் பலியாகியுள்ளனர், 17 பேர் காணாமல் போயினர். அவர்களைத் தேடும் பணி தொடர்கிறது.
இவ்வழக்கில் கப்பல் தனது பயணப் பாதையை விட்டு தீவுக்கு மிக அருகில் சென்றது ஏன் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இந்நிலையில் கப்டன் ஷெட்டினோ கைது செய்யப்பட்ட உடனேயே அவரது கைபேசி ரகசியமாகப் காவல்துறையினரால் ஒட்டுக் கேட்கப்பட்டது. அதில் தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது.விபத்து நிகழ்ந்த மறுநாள் கைதான நிலையில் தனது நண்பருடன் கைபேசியில் பேசிய ஷெட்டினோ, நிர்வாகம் தான் என்னை தீவுக்கருகில் கப்பலைக் கொண்டு செல்லும்படி பலமுறை வலியுறுத்தியது.
அதேநேரம் அப்பகுதியில் பாறை இருப்பதை அவர்கள் கூறவில்லை. அந்த இடம் ஆழம் குறைவாக இருக்கும், பாறை இருக்கும் என எனது பயணப் பாதை வரைபடத்திலும் குறிப்பிடப்படவில்லை. நிர்வாகத்தின் பேச்சைக் கேட்டதற்கு இப்போது நான் விலை கொடுத்துக் கொண்டிருக்கிறேன் என கூறியுள்ளார்.இருந்தாலும் கப்பலை மேலும் பெரும் விபத்திற்குள்ளாக்காமல், பயணிகளைக் காப்பதில் என்னால் முடிந்த அளவு நான் உதவியிருக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
பூமியின் வடமுனையை தாக்கியது சூரியப் புயல்: வானில் பிரகாசமான ஒளி தோன்றியது.
சூரியனில் இருந்து வெடித்து சிதறிய காந்த புயல் பூமியை தாக்க வருகிறது என்று அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்தனர்.சூரிய புயல் பூமியை நோக்கி பல கோடி மைல் வேகத்தில் வந்து கொண்டிருப்பதாகவும், இது செயற்கைகோள்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும், இதன் மூலம் கணணி, கைபேசி மற்றும் தகவல் தொடர்பு சேவைகள் பாதிக்கப்படும் என்று எச்சரித்து இருந்தனர். குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் இந்த தாக்குதல் அச்சம் அதிகம் இருந்தது.இதனால் ஐரோப்பிய நாடுகள் தங்கள் நாட்டு விமானங்கள் செல்லும் பாதைகளை தற்காலிகமாக மாற்றி அமைத்து இருந்தனர். இந்த காந்த புயல் பூமியை தாக்க தொடங்கி விட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சூரியனில் நேற்று முன் தினம் கரோனா பிளாஸ்மா கதிர்வீச்சு உருவாகி அன்றைய தினமே பூமியின் காந்த மண்டலத்திற்குள் வந்து விட்டதாக நாசா விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தினர்.பூமியின் வடமுனையில் உள்ள அயர்லாந்து, இங்கிலாந்தின் வட பகுதியான ஸ்காட்லாந்து, நோர்வே ஆகிய நாடுகளை காந்த புயல் தாக்கியது. அப்போது வானில் நீலம்-பச்சை நிறம் கலந்த ஒளி வெள்ளம் காணப்பட்டது. மின்னல் போல் வானில் ஒளி பாய்ச்சுவது போல் காந்தப்புயல் தாக்கியது.
இதை விஞ்ஞானிகள் அதிநவீன டெலஸ்கோப் மூலம் படம் பிடித்து வெளியிட்டுள்ளனர். பூமியின் வடமுனையில் ஆண்டுதோறும் செப்டம்பர், அக்டோபர் மற்றும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் இது போன்ற ஒளிவெள்ளம் தோன்றுவது வழக்கம். என்றாலும் இந்த முறை சூரிய காந்த புயலால் ஜனவரி மாதத்தில் இந்த ஒளி வெள்ளக்காட்சி தோன்றியதாக தேசிய பெருங்கடல் மற்றும் வளி மண்டல நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சூரிய காந்த புயல் கதிர் வீச்சால் பூமியின் வடமுனையில் தகவல் தொடர்பு பாதிக்கப்படலாம் என கருதி அமெரிக்காவின் டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனம் ஹாங்காங், ஷாங்காய், சியோல் ஆகிய நகரங்களில் இருந்து வரும் விமானங்களை தென் பகுதி வழியாக வரும்படி பாதைகளை மாற்றியுள்ளது.சூரியப் புயல் குறித்து கடந்த 20 ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து வரும் டாக்டர் பிஷ்ஷர்(69) கூறுகையில், 22 ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரியனில் மின் காந்த சக்தி அதிகமாக வெளிப்படுகிறது.
சூரியனில் 11 ஆண்டுகளுக்கு ஒரு முறை மின்காந்த புயல் ஏற்படுகிறது. இது புள்ளிகள் அல்லது சுடரொளி போல் காணப்படுகிறது. அப்போது சூரியனின் வெப்பம் மிக அதிகமாக 10 ஆயிரம் டிகிரி பாரன்ஹீட்(5,500 டிகிரி செல்சியஸ்) வெப்பம் அடையும்.மனிதனின் வாழ்நாளில் இதுபோல் மூன்று, நான்கு முறை சூரியனின் புயல் ஏற்படுவதை அறியலாம். வரும் 2013-ஆம் ஆண்டில் இரண்டு நிகழ்வுகளும் ஒன்று சேர்ந்து வர உள்ள தால் சூரியனில் இருந்து அதிகளவில் கதிரியக்கம் வெளிப்படும் வாய்ப்பு உள்ளது.
இதனால் வட ஐரோப்பா மற்றும் இங்கிலாந்தில் உள்ள மின்சக்தி நிலையங்கள் எளிதாக பாதிக்கப்பட்டு பல மாதங்கள் மின்சாரம் இல்லாமல் மக்கள் அவதியடையும் சூழ்நிலை ஏற்படலாம்.எந்த அளவு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தாலும் பாதிப்பு எப்படி இருக்கும் என்று தெரியாததால் அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை இப்போதே கூற முடியாது என்றார்.
பிரிட்டனில் வெளிநாட்டு மாணவர்களுக்காக புதிய வசதி அறிமுகம்.
வெளிநாட்டு மாணவர்கள் தங்களது நாட்டில் இருந்தபடியே பிரிட்டனில் உயர் கல்வி பயிலுவதற்கு வசதியாக அரசு புதிய சேவையொன்றை அறிவித்துள்ளது.பிரிட்டனில் உயர் கல்வி கற்பதற்காக உலகம் முழுவதிலும் இருந்து ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் வருகின்றனர்.
ஆனால் சமீப காலமாக கல்விக் கட்டணம் உயர்வு, படிப்பிற்கு பிறகு வேலை பார்த்து படிப்பிற்கான கட்டணப் பாக்கியைச் செலுத்துவதற்காக அளிக்கப்பட்ட விசா ரத்தாகும் நிலை, மாணவர் விசாவில் கெடுபிடி உட்பட பல்வேறு பிரச்னைகளால் தங்கள் தாய்நாட்டில் இருந்தபடியே பிரிட்டனில் படிப்பதற்கு அவர்கள் விரும்புகின்றனர்.இந்நிலையில் உலகளவில் கல்விச் சந்தையில் ஏற்பட்டுள்ள போட்டியில் தனது இடத்தை தக்க வைப்பதற்காக பிரிட்டன் வெளிவிகாரத்துறை அமைச்சர் வில்லியம் ஹாக் மற்றும் பல்கலைக்கழகங்கள் மற்றும் அறிவியல் துறை இணையமைச்சர் டேவிட் வில்லெட்ஸ் இருவரும் புதிய சேவை ஒன்றை தொடங்கி வைத்தனர்.
“உயர்கல்விக்கான உலகளவிலான ஒருங்கிணைந்த ஆலோசனை சேவை” என்ற இத்திட்டத்தின்படி பிரிட்டன் அரசு சார் நிறுவனங்கள் மற்றும் அவற்றுடன் இணைந்து செயலாற்றும் நிறுவனங்கள் அளிக்கும் கல்விச் சேவைகள் மற்றும் ஆலோசனைகள் ஆகியவை ஒரே இணையத்தளத்தில் இனி கிடைக்கும்.
அந்த இணையத்தளத்தில் பல்வேறு கல்வி நிறுவனங்களைத் தொடர்பு கொள்வதற்கு வசதியாக அவற்றின் மின்னஞ்சல், தொலைபேசி எண்கள் உட்பட தொடர்பு முகவரிகள் அளிக்கப்பட்டிருக்கும்.இவற்றின் மூலம் எந்த நாட்டைச் சேர்ந்த மாணவரும் மிக எளிதில் தேவையான பிரிட்டன் கல்வி நிறுவனத்தை விரைவில் தொடர்பு கொண்டு தனது படிப்பைத் தொடர முடியும்.
ஹிட்லரின் இராணுவத் தலைமையகத்தை சுற்றுலாத்தளமாக மாற்ற முடிவு.
சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லரின் இராணுவத் தலைமையகமாக திகழ்ந்த இடம் தற்போது சுற்றுலாத்தளமாக மாறியுள்ளது.இரண்டாம் உலகப் போருக்கு பின்பு கிழக்கு ப்ரஷியா போலந்துக்கும், ரஷியாவுக்கு இடையேயான எல்லையாக பிரிந்து விட்டது. தற்போது போலந்து நாடு இந்த இடத்தை சுற்றுலாத் தளமாக அறிவித்துள்ளது.
இத்தகவலை போலந்து நாட்டின் வனத்துறை மூத்த அதிகாரியான ஆர்தர்குரெக் தெரிவித்தார். இதற்கான ஒப்பந்தத்தில் சிறுவர்களைக் கவரும் விதமாக இந்தச் சுற்றுலாத்தளம் அமைய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த இடத்தில் இருக்கும் குழிகள் இரண்டாம் உலகப்போரின் ஹிட்லரின் கனவுகள் நனவானதை நமக்கு வெளிப்படுத்துகின்றன. இந்த இடத்திலிருந்து தான் பல்வேறு இராணுவ உத்தரவுகளை ஹிட்லர் பிறப்பித்தார்.
நாஜிகளின் அட்டூழியத்தை உலகிற்கு எடுத்துக் காட்டும் வகையில் இந்த இடத்தை பொதுமக்கள் பார்வையிட போலந்து அரசு அனுமதித்துள்ளது. இப்போது இங்கு ஆண்டொன்றுக்கு 180,000 முதல் 200,000 வரை பார்வையாளர்கள் வருகின்றனர், ஆனால் 1.6 மில்லியன் யூரோ செலவிட்டால் இந்த இடத்திற்கு இன்னும் 20 சதவீத பார்வையாளர்கள் அதிகமாக வருவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த இடத்தில் தான் கடந்த 1939ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் போலந்து மீது ஜேர்மனி படையெடுத்து தன் முதல் வெற்றியைப் பெற்றது, அதன் பின்பு ஐரோப்பாவைக் கைப்பற்றியது.
கமரூனின் பேச்சு அர்த்தமற்றது: அர்ஜென்டினா ஜனாதிபதி.
அர்ஜெண்டினா, பாக்லாந்து தீவுகளைத் தன்னுடையது என உரிமை கொண்டாடுவது காலனி ஆதிக்கத் தன்மையிலானது என்று பிரிட்டன் பிரதமர் கமரூன் பேசியது அர்த்தமற்றது என்று அர்ஜென்டினாவின் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.புற்றுநோய்க்கான சிகிச்சை பெறுவதற்காக இருபது நாட்கள் மருத்துவ விடுமுறையில் இருந்த ஜனாதிபதி மறுபடியும் சேர்ந்ததும் தலைநகரில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசினார்.
அப்போது கூறுகையில், பாக்லாந்து போர் தொடங்கி முப்பது ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில் பிரிட்டிஷார் நம்மை கெட்டவராகவும், வன்முறையாளராகவும் இந்த உலகிற்குக் காட்ட நினைக்கின்றனர்.ஆனால் உண்மையில் வலுவான ஆதாரங்கள் இல்லாததால் அவர்கள் இப்படி நம்மைப் பற்றி அபத்தமாகப் பேசுகின்றனர் என்றார்.கமரூனின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தலைநகரத்தில் உள்ள பிரிட்டிஷ் தூதரகத்தின் முன்பு அர்ஜென்டினாவினர் யூனியன் ஜாக் கொடியை எரித்து தங்களின் எதிர்ப்பைக் காட்டினர்.
ஈராக்கிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேற காரணம் என்ன? அல்கொய்தா விளக்கம்.
பொருளாதார சீர்குலைவின் காரணமாக ஈராக்கில் ஏற்படும் செலவை ஈடுகட்ட முடியாததால் அமெரிக்க படைகள் வெளியேறுகின்றன என அல்கொய்தா தெரிவித்துள்ளது.குவைத் நாட்டின் மீது ஈராக் தாக்குதல் நடத்தியதால் ஏற்பட்ட வளைகுடா போருக்குப் பின் அமெரிக்க படைகள் ஈராக்கில் தங்கி விட்டன.
இந்நிலையில் கடந்தாண்டு ஈராக்கிலிருந்து அமெரிக்க படைகள் முற்றிலுமாக வெளியேறின. அல்கொய்தா பயங்கரவாதிகள் ஈராக்கிலும் செயல்பட்டு வருகின்றன.இந்த அமைப்பின் தகவல் தொடர்பாளர் அபு முகமது அல் அத்னானி என்பவர் இணையத்தளத்தில் குறிப்பிடுகையில், அமெரிக்காவில் பொருளாதார சரிவு ஏற்பட்டதால் ஈராக்கில் முகாமிட்டிருந்த அதன் படைகளுக்கு செலவு செய்ய முடியவில்லை. இதன் காரணமாகவே அமெரிக்க படைகள் ஈராக்கிலிருந்து வெளியேறின என்றார்.
ஈரான் மீது தடை விதித்தால் பாதிப்பு மேற்குலக நாடுகளுக்கு தான்: ஜ.எம்.எப் எச்சரிக்கை.
ஈரான் அரசு ஹோர்முஸ் நீரிணையை மூடினால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும் என்று சர்வதேச நாணய நிதியம்(ஐ.எம்.எப்.) எச்சரிக்கை விடுத்துள்ளது.இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 30 அமெரிக்க டாலருக்கும் அதிகமாக உயரும் என்று தெரிவித்துள்ளது.
ஈரானின் அணு சக்தி திட்டங்களை தொடர்ந்து எதிர்த்து வரும் மேற்குலக நாடுகள், அந்நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்க திட்டமிடுகின்றன.அவ்வாறு தடை விதிக்கப்பட்டால் ஹோர்முஸ் நீரிணையை மூடிவிடுவோம் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது, இதனால் வளைகுடா பிராந்தியத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.ஈரான் நாளொன்றுக்கு 15 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயை உற்பத்தி செய்கிறது. இந்நிலையில் தேவையான மாற்று ஏற்பாடு இல்லாமல் அந்நாட்டின் மீது தடைவிதித்தால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 20-30 சதவீதம் உயரும் என்று ஐ.எம்.எப் கூறியுள்ளது.
ஹிட்லரின் நினைவலைகளை வெளியிட தடை.
ஜேர்மனியின் சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லரின் நினைவலைகளை தொகுப்பாக கொண்ட மெயின் கேம்ப் என்ற புத்தகத்திலிருந்து சில பகுதிகளை வெளியிடும் திட்டத்துக்கு சட்ட ரீதியாக தடை எழுந்துள்ளது.இந்த புத்தகத்திலிருந்து சில பகுதிகளை தன்னுடைய வாரப் பத்திரிக்கையில் தொடராக வெளியிட பீட்டர் மெக்கீ என்பவர் திட்டமிட்டார்.
ஆனால் ஹிட்லர் பிறந்த மாகாணமான பவேரியா மாநில அரசு இந்த புத்தகத்தின் பதிப்புரிமையை வைத்திருக்கிறது.தன்னுடைய அனுமதி இல்லாமல் யாரும் இதை பதிப்பிக்கக் கூடாது என்று அரசு கூறிவிட்டது. ஏனெனில் ஹிட்லரி நினைத்தது என்ன, பேசியது என்ன என்று வெளியிட்டால் நாசிசம் மீண்டும் வலுப்பெற்று விடும் என அரசு அஞ்சுகிறது.
ஒலிம்பிக் நெறிமுறை குழுவின் கமிஷனர் திடீர் ராஜினாமா.
ஒலிம்பிக் போட்டிகள் இந்தாண்டு ஜூலை மாதம் இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் நடைபெறுகின்றது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றது.இந்தியாவின் போபாலில் கடந்த 1984ம் ஆண்டு விஷவாயு கசிந்து ஆயிரக்கணக்கானோர் பலியாயினர். இந்த பயங்கர பேரழிவுக்கு காரணமான யூனியன் கார்பைட் நிறுவனம்(டோவ் கெமிக்கல்ஸ் குருப்பை சேர்ந்தது) ஒலிம்பிக் போட்டிக்கு நிதியுதவி செய்வதற்கு இந்தியாவில் பல தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஒலிம்பிக் நெறிமுறை கமிட்டி கமிஷனர் பதவியை மெரிடித் அலெக்சாண்டர் ராஜினாமா செய்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், போபால் விஷவாயு கசிவு விடயத்தில் மிக மோசமான மனித உரிமை மீறல் நடந்துள்ளது.இந்த விடயத்தில் டோவ் நிறுவனத்துக்கு ஆதரவாக செயல்பட விரும்பவில்லை. விஷவாயு கசிவு நடந்து 27 ஆண்டுகள் ஆன பிறகும் அந்த இடத்தை இன்னும் சுத்தப்படுத்தவில்லை. ஆயிரக்கணக்கான மக்கள் இன்றும் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்று கூறியுள்ளார்.
லண்டன் விளையாட்டுகளை நெறிமுறை குழு கண்காணிக்கும். இந்த குழுவில் மொத்தம் 13 கமிஷனர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது ஒரு கவுரவ பதவி. இந்த பணிக்கு சம்பளம் கிடையாது.எனினும் தார்மீக அடிப்படையில் பதவியை ராஜினாமா செய்துள்ளார் மெரிடித் அலெக்சாண்டர். எனினும் ஒலிம்பிக் போட்டியில் டோவ் நிறுவனத்தின் ஸ்பான்சரை நிராகரிக்க முடியாது என்று ஒலிம்பிக் போட்டி ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.
கடாபியின் ஆதரவாளர்களை சித்ரவதை செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும்: கனடா
லிபியாவில் கடாபியின் ஆதரவாளர்களை புதிய தலைவர்கள் கொடுமைப்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என கனடா கேட்டுக் கொண்டுள்ளது.பல பெரிய மனிதநேய சர்வதேச அமைப்புகள் லிபியாவின் சிறைகளில் கடாபி ஆதரவாளர்கள் படும் வேதனையை விளக்கி அறிக்கை அனுப்பியுள்ளன.
பல கைதிகள் சித்திரவதையால் உயிரிழந்தனர், விசாரணையின் போது அதிகக் கொடுமைக்கு உள்ளானவர்களை மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சை பெற்ற பின்பு மீண்டும் விசாரணை செய்து துன்புறுத்துகின்றனர்.லிபியாவில் உள்ள சர்வதேச பொதுமன்னிப்பு அமைப்பின் மூத்த ஆலோசகர் சித்திரவதைக்கு எதிராக தேவையான நடவடிக்கைகள் எடுத்த பிறகும் கூட இதில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று தமது அறிக்கையில் கூறியுள்ளார். மேலும் இவர்களில் இறந்துபோனவரின் குடும்பத்திற்கு எவ்வித நிவாரண உதவிகளும் வழங்கவில்லை. நீதிமன்ற விசாரணையும் நடத்தப்படவில்லை என்றார்.
சித்திரவதைக்குள்ளான கைதிகளின் தலை, கை, கால், முதுகு மற்றும் பிற பாகங்களில் வெளிக்காயங்கள் உள்ளன. இவர்கள் தலைநகரான திரிபோலியிலும் மற்ற சில நகரங்களிலும் சிறையில் அவதிப்பட்டு வருகின்றனர்.சிறைக்கைதிகள் சித்திரவதைக்கு உள்ளாகுகின்றனர் என்று சர்வதேச அமைப்புகள் குரலெழுப்பியவுடன் பிரிட்டனின் பிரதமர் டேவிட் கமரூன் இந்தப் பிரச்னையை உடனடியாக லிபியா தலைவர்கள் சரிசெய்ய வேண்டும், சித்திரவதையை முற்றிலுமாக நிறுத்திவிட வேண்டும் என்று வலியுறுத்திக் கூறினார்.
பிரான்சில் PIP நிறுவன உரிமையாளர் கைது.
பிரான்சில் PIP என்ற நிறுவனம் மருத்துவ தகுதியில்லாத சிலிக்கானை தம்முடைய தயாரிப்புகளில் பயன்படுத்தியதால் அந்நிறுவனத்தின் நிறுவனரையும், நிர்வாகத் தலைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.சர்வதேச மருத்துவத்துறையில் நடந்த மிகப்பெரிய ஊழலாக  PIP நிறுவனத்தின் ஊழல் கருதப்படுகிறது.
செயற்கை மார்பகத்திற்குத் தேவையான சிலிக்கானை பயன்படுத்தும்போது மருத்துவத் தகுதியில்லாதவற்றைப் பயன்படுத்தியதால் பலர் பாதிப்புக்குள்ளாகி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.இதனையடுத்து காவல்துறையினர் உடனே விசாரணையை தொடங்கி அந்நிறுவனத்தின் நிறுவனரை கைது செய்தனர்.
வரலாறு காணாத செலவில் 2012ம் ஆண்டின் ஒலிம்பிக்போ​ட்டிகள்.
2012ம் ஆண்டில் இடம்பெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பிக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அது பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்கள் கசிய ஆரம்பித்துள்ளன.
அதில் ஒன்றுதான் பட்ஜட் பற்றிய விடயம். அதாவது கடந்த காலங்களில் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டிகளுக்கான செலவுகளை விட இம்முறை பல மடங்கு செலவில் மிகப்பிமாண்டமாக நடாத்தப்பவுள்ளன.ஏறத்தாழ 24 பில்லியன் யூரோ நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது 2005ம் ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியைவிட பத்து மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈராக்கில் தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல்: 28 பேர் பலி, 50 பேர் படுகாயம்.
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் வைத்தியசாலை அருகே கார் குண்டு வெடித்ததில் 28 பேர் பலியாகினர், மேலும் 50 பேர் படுகாயமடைந்தனர்.ஈராக்கில் ஜனாதிபதி சதாம் உசேன் தூக்கிலிடப்பட்ட பின், பாதுகாப்பு பொறுப்பை அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் ஏற்றிருந்தன.
கடந்தாண்டு டிசம்பர் மாதம் ஈராக்கில் இருந்து அனைத்து படைகளும் வெளியேறின. இதையடுத்து ஈராக் இராணுவமும் காவல்துறை அதிகாரிகளுமே இப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். எனினும் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.பாக்தாத்தின் சாதியா மாவட்டத்தில் உள்ள ஓட்டல் நுழைவு வாயிலில் தீவிரவாதிகள் சக்திவாய்ந்த 2 வெடிகுண்டுகளை வீசினர். அதில் 3 பேர் பலியாயினர்.
அதேபோல் ஹமியா பகுதியில் 2 காவல்துறை அதிகாரிகளின் வீடுகள் மீது வெடிகுண்டுகள் வீசப்பட்டன. இதில் 2 காவல்துறை அதிகாரிகள், 2 குழந்தைகள், 4 பெண்கள் இறந்தனர்.இதுபோல் ஒரே நாளில் 10 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது, இதில் 17 பேர் பலியாயினர். அமெரிக்க படைகள் வெளியேறிய பின்னர் ஜனவரி மாதத்தில் இதுவரை 190 பேர் தீவிரவாத தாக்குதலால் பலியாகி உள்ளனர் என்று ஈராக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF