Wednesday, January 11, 2012

NEWS OF THE DAY.

அவசரமாக ஆதரவு திரட்டும் முயற்சியில் இலங்கை! முஸ்லிம் நாடுகள் கைவிரிக்கும் நிலையில்..!

ஜெனிவா மாநாட்டில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்படவுள்ள பிரேரணைகளை முறியடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அரசு, இதற்காக முஸ்லிம் நாடுகளின் ஆதரவைத் திரட்டும் நோக்குடன் இராஜதந்திர மட்டத்திலான காய்நகர்த்தலையும் முன்னெடுத்து வருகிறது என நம்பகரமாகத் தெரியவருகிறது.இலங்கைக்கு எதிராகக் கடும் போக்குடைய சில மேற்கத்தேய நாடுகள் தீர்மானமொன்றைக் கொண்டுவருவதற்கு உத்தேசித்துள்ளன. இந்த நிலையில், அவ்வாறு பிரேரணை வரும்பட்சத்தில் அதற்கு முழுமையான ஆதரவை வழங்குவதற்கு ஆபிரிக்க நாடுகளும் உள்ளூரத் தீர்மானித்துள்ளதால் கொழும்பு பெரும் அதிர்ச்சியடைந்துள்ளது எனத் தெரியவருகிறது.
மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம் உட்பட முக்கியமான சில மாற்றங்களால் ஜெனிவாத் தொடரில் அந்த நாடுகளும் மேற்கத்தேய நாடுகளுக்கு ஆதரவாகவே செயற்படும் என்ற யதார்த்தத்தை உணர்ந்துள்ள அரசு தனது இராஜதந்திர மட்டத்திலான நடவடிக்கையைத் துரிதப்படுத்தியுள்ளது என அரசியல் ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார்.
முஸ்லிம் நாடுகளின் ஒற்றுமை சீர்குலைந்துவிட்டது. எனவே, ஜெனிவாக் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராகவே முஸ்லிம் நாடுகள் செயற்படும் என்ற போக்கிலேயே அதன் செயற்பாடுகள் உள்ளன என்று பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த முஸ்லிம் அரசியல்வாதி ஒருவர் நேற்றுத் தெரிவித்தார்.
முஸ்லிம் நாடுகளுக்கிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இந்தப் போட்டியின் காரணமாக சில நாடுகள் மேற்கத்தேய நாடுகளின் அடிவருடிகளாகச் செயற்படுகின்றன. மேற்கத்தேய நாடுகளின் தாளத்திற்கு அரசியல் ஆட்டம் ஆடும் நிலையிலேயே அந்நாடுகளின் கொள்கை உள்ளது என்றும் அந்த அரசியல் பிரமுகர் எம்மிடம் தெரிவித்தார்.
கடாபி, சதாம் ஹுஸைன் உட்பட முக்கிய முஸ்லிம் தலைவர்கள் கொல்லப்பட்ட போது முஸ்லிம் நாடுகளின் மௌனம் அவற்றின் ஒற்றுமையை சீர்குலைத்துவிட்டது.எனவே, இந் நாடுகள் இலங்கை விடயத்தில் கைவிரிக்கும் நிலைப்பாட்டையே இனிவரும் காலங்களில் எடுக்கும் எனச் சுட்டிக்காட்டிய அரசியல் பிரமுகர், இதன் பின்னணியில் மேற்கத்தேய நாடுகள் உள்ளன என்றும் குற்றஞ்சாட்டினார்.
இவ்வாறானதொரு நிலையாலேயே முஸ்லிம் நாடுகளின் ஆதரவைப் பெறும் முயற்சியில் அரசு மும்முரமாக ஈடுபட்டுள்ளது என்றும், அதன் பொருட்டு இராஜதந்திர மட்டத்திலான பேச்சுகள் இடம்பெற்று வருகின்றன என்றும் தெரிவிக்கப்படுகின்றது.அதேவேளை, எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவா கூட்டத் தொடர் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கரு ஜயசூரியவின் காரியாலயத்தை தீ வைக்க முயற்சி.
ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரியவின் கம்பஹா காரியாலயத்துக்கு சிலர் தீவைக்க முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று அதிகாலை வெள்ளை வேன் ஒன்றில் வந்த சிலர், காரியாலயத்தின் வாயிற்கதவை உடைத்து, தீ வைக்க முற்பட்டதாக, கரு ஜெயசூரியவின் செயலாளர் துசித குமார தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கம்பஹா காரியாலயத்தில் முறையிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை, அநீதிகளுக்கு எதிரான தேசிய நடவடிக்கை என்ற அமைப்பு ஒன்று, ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.இதன் போது கருத்து வெளியிட்ட கட்சியின் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, கட்சியின் அனைத்து உறுப்பினர்களுக்கும் தனிப்பட்ட ஆவனங்களை தயாரிக்க கட்சி தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்டார்.
அனைத்து, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களினதும் தனிப்பட்ட ஆவனங்களை தயாரிக்க தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இதன் மூலம் அரசாங்கத்துக்கு எதிரான ஐக்கிய தேசிய கட்சியின் போராட்டத்துக்கு, அனைவரினதும் செயற்பாட்டுகளையும் ஒன்றிணைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதன் கீழ் ஒவ்வொரு உறுப்பினரும் கடமைகள், செயற்பாடுகள், பங்களிப்புகள் என்பன பதிவாகவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சரத் பொன்சேகாவை விடுதலை செய்து வீட்டுக்காவலில் வைக்கத் திட்டம்?
சிறைத் தண்டனை அனுபவித்து வரும் சரத் பொன்சேகா எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவிருக்கும் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடருக்கு முன்னதாக, விடுதலை செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கக் கூடிய சூழ்நிலை உருவாகி வருவதாக கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று தெரிவித்துள்ளது.அத்துடன், அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடக்கூடாது என்பது உட்பட மேலும் சில நிபந்தனைகளுடன் அவரை விடுவிப்பதற்கு அரச தரப்பு அக்கறை கொண்டிருப்பதாகவும் அவ் வார இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரத் பொன்சேகாவை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அமைச்சர்கள் மட்டத்தில் கூட உருவாகியிருக்கும் நிலையில், கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவரும் விடுதலை செய்யுமாறு  கோரிக்கை விடுத்திருப்பதாகவும் அவ்வாறு விடுதலை செய்யப்படவில்லை எனில், ஜெனிவாவில் நடைபெறும் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் அரசாங்கம் நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனவும் இராஜதந்திர வழிமுறைகளில் இலங்கையை அமெரிக்க எச்சரித்திருப்பதாகவும்வ் ஆங்கில வார இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பொன்சேகாவின் விடுதலை தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் உருவாக்கப்பட்டுள்ள மனுவில் குறிப்பிட்டளவு கையொப்பங்களைப் பெறுவதற்கான முயற்சிகளும், பொன் சேகாவின் மகள் மேற்கொண்டிருந்த முயற்சிகளும் அரசாங்கத்திற்குப் பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியிருந்தது.இந்நிலையிலேயே, அரசாங்கம் சரத் பொன்சேகாவை விடுதலை செய்து வீட்டுக்காவலில் வைக்க திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
யார் துரோகி என்பதனை மக்கள் தீர்மானிப்பார்கள்!- சரத் பொன்சேகா.
யார் தேசத் துரோகி என்பதனை மக்கள் தீர்மானிப்பார்கள் என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்தார்.ஐந்தாம் வகுப்பு வரை கூட பாடசாலை செல்லாது, தேங்காய் திருடி, சிறுவர்களுக்கு போதைப் பொருள் விற்பனை செய்த தூள் சில்வாவிற்கு அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது.
இந்த அரசியல் கலாச்சாரத்தில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும்.துரோகி ஜெனராலா அல்லது சிறுவர்களுக்கு தூள் விற்பனை செய்யும் தூள் சில்வாவா என்பதனை மக்கள் தீர்மானிக்கட்டும்.தோள் பட்டையில் ஏற்பட்ட உபாதைக்கு சிகிச்சை பெற்றுக் கொள்வதற்காக தனியார் மருத்துவமனைக்கு சென்று திரும்பிய போது சரத் பொன்சேகா இவ்வாறு குறிப்பிட்டார். 
ஈராக்கில் குண்டுவெடிப்பு: 16 பேர் உடல் சிதறி பலி.
ஈராக்கின் தலைநகரில் இரண்டு கார்களில் பயங்கர வெடிகுண்டு வெடித்ததில் ஷியா பிரிவை சேர்ந்த 16 பேர் உடல்சிதறி இறந்தனர்.சதாம் உசேன் தூக்கிலிடப்பட்ட பின் நாட்டின் பாதுகாப்பு பொறுப்பை அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் ஏற்றுக் கொண்டன.
இந்நிலையில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் ஈராக்கின் பாதுகாப்பு பொறுப்பை அந்நாட்டு படைகளிடம் ஒப்படைத்துவிட்டு அமெரிக்க படைகள் தாய்நாடு திரும்பின. இந்நிலையில் தீவிரவாதிகளின் தாக்குதலும், ஷியா - சன்னி பிரிவினரின் மோதல்களும் அதிகரித்து வருகின்றன.பாக்தாத்தின் புறநகர் அல்சஹாப் என்ற இடத்தில் நேற்று மாலை 2 கார்களில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் வெடித்து சிதறியது.
அதில் கர்பாலா பகுதிக்கு சென்று கொண்டிருந்த ஷியா பிரிவு முஸ்லிம்கள் 16 பேர் உடல்சிதறி பலியாயினர். முன்னதாக நேற்று காலை சாலையோரம் வெடிகுண்டு வெடித்ததில் 2 ஷியா யாத்திரிகர்கள் பலியாயினர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஷியா பிரிவினர் 90 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஈராக்கின் சன்னி பிரிவின் துணை தலைவரும் பிரபல அரசியல்வாதியுமான தாரிக் அல்ஹாஸ்மி மீது தீவிரவாத குற்றச்சாட்டு கூறப்பட்டதால், அவரை கைது செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.இதையடுத்து ஷியா பிரிவினர் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் குர்ஷித் பகுதியில் தாரிக் மறைந்துள்ளதாகவும், சன்னி பிரிவினரின் ஆதிக்கம் உள்ள இந்த பகுதியில் ஈராக் காவல்துறை அதிகாரிகளால் அவ்வளவு எளிதாக நடவடிக்கை எடுக்க இயலாது என்றும் காவல்துறை உயரதிகாரிகள் தெரிவித்தனர்.
யூரோ மண்டலத்துக்கு டாபின் வரி விதிக்க வேண்டும்: ஏஞ்சலா மார்க்கெல்.
யூரோ மண்டல நாடுகளுக்கு வரி விதிப்பதன் மூலமாக மட்டுமே நிதி நெருக்கடியை சமாளிக்க முடியும் என்று ஜேர்மனியின் பிரதமர் ஏஞ்சலா மார்க்கெல் தெரிவித்துள்ளார்.
இந்த வரி செல்வர்களிடம் கொள்ளையடித்து ஏழைகளுக்கு கொடுத்த ராபின்ஹுட் பெயரால் “ராபின் ஹீட் வரி” அல்லது “டாபின் வரி” என்று அழைக்கப்படுகிறது.ஐரோப்பியத் தலைவர்களிடம் யூரோ மண்டல நெருக்கடிக்கான தீர்வு குறித்த பேச்சு வார்த்தையின் போது இதை மெர்கெல் தெரிவித்தார்.
பிரெஞ்சு ஜனாதிபதி நிகோலஸ் சர்கோசி, இந்த வரியை பிரான்சில் அறிமுகப்படுத்தப் போவதாக தெரிவித்தார். ஆனால் மற்ற நாடுகளின் தலைவர்கள் இன்னும் அறிவிக்கவில்லை.
டாபின் வரி விதிப்பால் தன்னுடைய வங்கிகளும் நிதிநிறுவனங்களும் லண்டனிலிருந்து இடம் மாறி சுவிட்சர்லாந்து அல்லது சீனாவுக்குப் போய்விடும் என்று அச்சத்தில் பிரிட்டன் இந்த நாடுகளுடன் சேரவில்லை.பிரான்சின் ஜனாதிபதி சர்கோசி இவ்வரியை அறிமுகப்படுத்த விரும்பினாலும், யூரோ மண்டலம் முழுக்க இதனை அறிமுகப்படுத்தினாலன்றி பிரான்சில் மட்டும் அறிமுகப்படுத்துவது பிரெஞ்சு பொருளாதாரத்திற்கு இடையூறு விளைவிப்பதாகும் என்று அசோஷியேஷன் பாரிஸ் யூரோபிளேஸ் என்ற பொருளியல் அறிஞர் சங்கம் கருத்து வெளியிட்டுள்ளது.
மெமோகேட் விவகாரத்தில் தாக்கல் செய்த அறிக்கைகள் சட்டவிரோதமானவை: கிலானி.
மெமோகேட் விவகாரத்தில் இராணுவத் தளபதி கயானி மற்றும் ஐ.எஸ்.ஐ தலைவர் பாஷா ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த விளக்க அறிக்கைகள் சட்டவிரோதமானவை என பிரதமர் யூசுப் ரசா கிலானி கூறியுள்ளார்.
அபோதாபாத்தில் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட பின் தனது ஆட்சி இராணுவத்தால் கவிழ்க்கப்படும் என சந்தேகப்பட்ட ஜனாதிபதி ஸர்தாரி, அமெரிக்க இராணுவத் தளபதியாக இருந்த மைக் முல்லனுக்கு கடிதம் எழுதி பாகிஸ்தான் இராணுவத்தை அடக்கி வைக்கும்படி கோரினார்.
இது குறித்த வழக்கு தற்போது பாகிஸ்தானில் நடந்து வருகிறது. இவ்வழக்கு மெமோகேட் எனப்படுகிறது. இவ்வழக்கில் இராணுவத் தளபதி கயானியும், ஐ.எஸ்.ஐ தலைவர் பாஷாவும் தங்கள் விளக்க அறிக்கைகளை தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி இருவரும் தங்கள் அறிக்கைகளை சமீபத்தில் தாக்கல் செய்தனர்.
இதுகுறித்து பீப்புள்ஸ் டெய்லி இணையப்பத்திரிகைக்கு பிரதமர் கிலானி அளித்த பேட்டியில், இருவரின் அறிக்கைகளும் அரசின் ஒப்புதல் இன்றி தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சரிடமும் அனுமதி கோரவில்லை. இது அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என தெரிவித்துள்ளார்.
ஈரான் யுரேனியத்தை செறிவூட்டூவது உண்மை தான்: சர்வதேச அணுசக்தி ஏஜென்சி.
ஈரான் தனது போர்டோ என்ற இடத்தில் பூமிக்கடியில் யுரேனியம் செறிவூட்டலைத் தொடங்கிவிட்டதாக செய்திகள் வெளியாகின. இத்தகவல்கள் உண்மைதான் என தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.ஈரானின் கோம் நகருக்கு வடக்கில் சிறிது தொலைவில் உள்ள போர்டோ நகரில் இராணுவத் தளத்திற்கு அருகில் பூமிக்கடியில் யுரேனியம் செறிவூட்டல் தொடங்கப்பட்டதாக அந்நாட்டின் முக்கிய பத்திரிகை ஒன்று தெரிவித்தது. இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியாகவில்லை.
இந்நிலையில் ஈரானின் யுரேனியச் செறிவூட்டல் பணி தொடக்கம் உண்மைதான் என சர்வதேச அணுசக்தி ஏஜென்சியைச் சேர்ந்த இரு அதிகாரிகள் நேற்று உறுதிப்படுத்தியுள்ளனர்.போர்டோவில் உள்ள யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் யுரேனியம் 20 சதவீதம் வரை செறிவூட்டப்படும் எனவும், இதுவரை ஈரான் 3.5 சதவீதம் வரைதான் யுரேனியத்தை செறிவூட்டியுள்ளது எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
யுரேனியம் 20 சதவீதம் வரை செறிவூட்டப்படும் போது அதில் இருந்து அணு ஆயுதங்கள் தயாரிப்பது வெகு எளிது எனவும் அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.இதற்கிடையில் சி.ஐ.ஏ.வுக்காக ஈரானில் உளவு பார்த்ததாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட ஈரானிய அமெரிக்கரான அமிர் மிர்சாய் ஹெக்மடி(28) என்பவருக்கு ஈரான் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
அறக்கட்டளை நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக ஜனாதிபதி மனைவி மீது புகார்.
எயிட்ஸ் பாதித்தவர்களுக்கு உதவிட வழங்கப்பட்ட அறக்கட்டளை நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக பிரான்ஸ் ஜனாதிபதியின் மனைவி மீது புகார் எழுந்துள்ளது.
இது தொடர்பாக லண்டனிலிருந்து வெளிவரும் ஒரு பத்திரிகையில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது: சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரைச் சேர்ந்த ஒரு அறக்கட்டளை நிறுவனம் பிரான்ஸ் நாட்டில் எயிட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்திற்கும், எயிட்ஸ் பாதித்துள்ள பிறந்த குழந்தைகள் நலனுக்கும், விழிப்புண்வு பணிகளுக்கும் செலவிட 2.70 மில்லியன் யூரோ நிதியினை அந்நாட்டு ஜனாதிபதி நிக்‌கோலஸ் சர்கோஸியின் மனைவி கர்ர்லாபுருனியிடம் வழங்கியிருந்தது.
இந்நிலையில் அந்த நிதியினை எயிட்ஸ் பாதிப்பிற்குள்ளானவர்களுக்கு செலவிடாமல் தனது நெருங்கிய தோழியின் அறக்கட்டளைக்கு ஒதுக்குமாறும் அதனை கார்லாபுரூனியின் தோழி ஜூலியன்ஸிவாஞ்சே மூலமாக கொடுத்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.இதனை பிரான்ஸ் ஜனாதிபதி மாளிகை மறுத்துள்ளது. கார்லாபுரூனி கூறுகையில், தனது ‌தோழியும், எயிட்ஸ் விழிப்புணர்வு குறித்த பிசாரத்திற்காக அறக்கட்டளை ‌நடத்துவதாகவும், அதன் பேரிலே வழங்கியதாகவும் முறைகேடு செய்யவில்லை என்றார்.
ஈரானில் சி.ஐ.ஏ உளவாளிக்கு தூக்கு தண்டனை: அமெரிக்கா கடும் கண்டனம்.
சி.ஐ.ஏ உளவாளிக்கு ஈரானில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.ஈரானில் அமெரிக்காவின் உளவுத்துறையான சி.ஐ.ஏ.வுக்கு உளவு பார்த்ததற்காக ஹெக்மாட்டி என்பவருக்கு ஈரான் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்துள்ளது.
ஹெக்மாட்டியும் சி.ஐ.ஏ.வுக்கு உளவுபார்த்ததை நீதிமன்றத்தில் ஒத்துக்கொண்டார். இந்நிலையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் டோமி வீடர் கூறுகையில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது உண்மையானால் அது கண்டனத்திற்குரியது. தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவும், கண்டனம் தெரிவிக்கவும் எங்கள் நட்பு நாடுகளுடன் இணைந்து பணியாற்றுவோம் என கூறினார்.
புனிதப் போர் நடத்த தீவிரவாதிகளுக்கு அழைப்பு.
சர்வதேச பயங்கரவாத அமைப்பான அல்கொய்தா பாகிஸ்தானிலிருந்து வெளியாகும் உருது மாத பத்திரிகை மூலம் புனிதப் போர்(ஜிஹாத்) பிரசாரத்தை தொடர்ந்துமேற்கொண்டு வருகிறது.
இந்த பத்திரிகை அனைத்து வீடுகளுக்கும் தபால் மூலம் பட்டுவாடா செய்யப்படுகிறது. ஹிதீன் என்ற பெயரில் 200 பக்கங்களுடன் வெளியாகும் இந்த பத்திரிகையில் புனிதப் போரில் உயிரிழந்தவர்களைக் கெளரவித்தும், ஒசாமா பின்லேடனைப் பாராட்டியும் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
அமெரிக்க கடற்படை கமாண்டோக்கள் பாகிஸ்தானின் அபோதாபாத்தில் ஒசாமா பின்லேடனை கடந்தாண்டு மே மாதம் கொன்றனர். இதையடுத்து ஜூன் மாதத்திலிருந்து இந்த பத்திரிகை வெளிவருவதாக எக்ஸ்பிரஸ் டிரிபியூன் செய்தி வெளியிட்டுள்ளது.இந்த பத்திரிகையின் 7வது மாத இதழ் கடந்த மாதம் வெளியானது. இதில் ஒசாமா பின்லேடன் மரணமடைந்த தினம் தியாகிகள் தினமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆப்கானிலிருந்து செயல்படும் தலிபான் அமைப்பின் தலைவர் முல்லா ஓமரின் கருத்துகளும், சில முன்னணி தலைவர்களின் அறிவுரைகளும் இடம்பெற்றுள்ளன.
இந்த இதழில் ஷேக் காலித் பின் அப்துல் ரெஹ்மான் அல் ஹுசேனின் பேட்டியும் பிரசுரமாகியுள்ளது. இவர் முன்னர் குவைத் அமைச்சரவையில் கலாசாரத்துறை அமைச்சராக இருந்து பின்னர் அல்கொய்தா அமைப்பில் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.நேட்டோ படைகளுக்குக் கொண்டு செல்லும் லாரிகளை முஸ்லிம்கள் கொள்ளையடிப்பது இஸ்லாத்துக்கு எதிரானதல்ல என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. பின்லேடன் கொலைக்கு முஜாஹிதீன்கள் காரணம் என்று கூறப்படுவது தவறு என்றும் பத்திரிகையில் தலையங்கம் தீட்டப்பட்டுள்ளது.
முஜாஹிதீன்கள் தொடர்ந்து போராடி வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் முஜாஹிதீன்கள் பற்றி வரும் அவதூறு செய்திகளை நம்ப வேண்டாம் என்றும் அதில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.முஸ்லிம் நாடுகளிலிருந்து அமெரிக்க படைகள் முற்றிலுமாக வெளியேறும் வரை தங்களது புனிதப் போர்தொடரும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. முஸ்லிம்களுக்காக போராட மற்றொரு பின்லேடன் உருவாக வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் செயல்படும் அல்கொய்தா அமைப்புக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இதழின் ஆசிரியர் பெயர் குறிப்பிடப்படவில்லை. வாசகர்கள் தங்களது கருத்துகளை அனுப்ப இரண்டு இணையத்தள முகவரிகள் தரப்பட்டுள்ளனஇந்த பத்திரிகை குறித்து தங்களுக்கு தகவல் தெரியும் என்றும் ஒவ்வொரு பிரதியையும் ஆவணத்துக்கு சேர்த்து வைத்துள்ளதாக பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். விரைவிலேயே இந்த பத்திரிகை வெளிவருவதற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
புத்த மத துறவிகள் தீக்குளிப்பு: அமெரிக்கா கவலை.
திபெத் விவகாரத்தில் புத்தமதத்துறவிகள் தீக்குளிப்பது குறித்து அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது.திபெத் விவகாரம் தொடர்பாக கடந்த வாரம் 3 புத்த மதத்துறவிகள் தீக்குளித்து பலியானார்கள்.இது குறித்து அமெரிக்க வெளிவிவகாரச் செய்தி தொடர்பாளர் கூறுகையில், திபெத் விவகாரம் தொடர்பாக மேலும் 3 புத்தமதத்துறவிகள் தீக்குளித்து பலியான சம்பவம் மிகவும் கவலையளிக்கிறது.
கடந்த மார்ச் மாதம் முதல் 15 திபெத் புத்த துறவிகள் தீக்குளத்துள்ளனர். இது குறித்து அமெரிக்கா சீனாவிடம் விவாதிக்கும். திபெத்தியர்களுடன் விரிவாக பேச்சுடவார்த்தை நடத்த சீனாவை வலியுறுத்துவோம்.திபெத்தில் நிலவும் கடினமான சூழ்நிலையை குறைக்கவும், பத்திரிகையாளர்கள், தூதர்களை அங்கு அனுமதிப்பது, மனித உரிமைகளை மதிக்க வேண்டும் என்பது பற்றி சீனாவிடம் ஆலோசனை செய்யப்படும் என கூறினார்.
வெள்ளை மாளிகை அதிகாரிகளை ஆட்டி படைக்கும் ஒபாமா மனைவி மிஷெல்.
வெள்ளை மாளிகையில் அதிகாரிகளை ஆட்டி படைக்கிறார் ஒபாமா மனைவி மிஷெல் என்று அமெரிக்க பத்திரிகையாளர் ஒருவர் எழுதியுள்ள புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் மனைவி மிஷெல் எளிமையானவராகவும், பார்ப்பதற்கு மிகவும் மென்மையானவராகவும் இருப்பார்.ஆனால் அவரது இன்னொரு முகத்தை பலரும் அறிய மாட்டார்கள், ஜனாதிபதி வசிக்கும் வெள்ளை மாளிகையில் வேலை பார்க்கும் அதிகாரிகளை கேட்டால், அந்த முகத்தை தெரிந்து கொள்ளலாம்.
இப்படி ஆரம்பித்து அவரை பற்றியும், ஒபாமாவை பற்றியும் பல்வேறு தகவல்களை ஒரு புத்தகமாக எழுதியுள்ளார் நியுயார்க் டைம்ஸ் பத்திரிகையின் நிருபர் ஜோடி கன்டார்.இன்று வெளியாகவுள்ள தி ஒபாமாஸ் என்ற அந்த புத்தகத்தில் இருந்து சில பகுதிகளை பெற்று, ஏ.பி. நியூஸ் ஏஜென்சி வெளியிட்டுள்ளது. அதில் மிஷெல் பார்ப்பதற்கு மிகவும் மென்மையானவராக இருந்தாலும் வெள்ளை மாளிகை அதிகாரிகளை ஆட்டி படைக்கிறார் என்று கூறி சில சம்பவங்களையும் குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும் வெள்ளை மாளிகையின் முன்னாள் தலைமை அதிகாரி இம்மானுவேல், ஜனாதிபதியின் முன்னாள் ஆலோசகர் ராபர்ட் கிப்ஸ் ஆகியோருடன் மிஷெல் மோதிய சம்பவங்களை குறிப்பிட்டிருக்கிறார்.கடந்த ஆண்டில் மருத்துவ காப்பீடு திட்ட மசோதாவை ஒபாமா கொண்டு வந்த போது, அதற்கு எதிர்ப்பான கருத்துகள் வெளியாகின. அந்த திட்டக் கொள்கைகளை சரியாக கவனிக்கவில்லை என்று இம்மானுவேலிடம் கடுமையாக சண்டை போட்டிருக்கிறார் மிஷெல்.
இதனால் மனம் நொந்த இம்மானுவேல் ராஜினாமா செய்திருக்கிறார். ஆனால் அதை ஒபாமா ஏற்றுக் கொள்ளவில்லை. இன்னொரு சமயம் ஜனாதிபதியின் உதவியாளர்கள் யாருமே சரியில்லை. வெள்ளை மாளிகையில் புது டீம் கொண்டு வர வேண்டும் என்று மிஷெல் திட்டியிருக்கிறார்.ஒரு முறை பிரான்ஸ் ஜனாதிபதியின் மனைவி கர்லா புருனி சர்கோஸ் வந்த போது, அவரிடம் மிஷெல், வெள்ளை மாளிகையில் வேலை பார்ப்பவர்கள் யாரும் சரியில்லை. இங்கு வசிப்பது நரகம் போல் இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.
இதனால் கிப்ஸ் கடும் கோபமடைந்திருக்கிறார். இது போல் பல சம்பவங்களை குறிப்பிட்டுள்ள நிருபர் கன்டார், இது பற்றி ஒபாமா மற்றும் மிஷெலிடம் கருத்து கேட்ட போது அவர்கள் பதிலளிக்க மறுத்துள்ளனர்.இந்நிலையில் புத்தகம் குறித்து வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘சாதாரணமாக நடந்த விஷயங்களை மிகைப்படுத்தியும், கற்பனைகளை சேர்த்தும் எழுதியுள்ளார்’ என்று தெரிவித்தார்.
தொலைக்காட்சி தொடராகும் நெல்சன் மண்டேலாவின் வாழ்க்கை.
தென் ஆப்பரிக்காவில் வெள்ளையர்களின் நிற வெறிக்கு எதிராக போராடி 27 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர் நெல்சன் மண்டேலா.உலக சமாதானத்துக்காக நோபல் பரிசு பெற்ற அவர் கடந்த 1990ம் ஆண்டு சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். இவர் தென் ஆப்பரிக்காவின் கறுப்பர் இன முதல் ஜனாதிபதியாவார். 
இவரது வாழ்க்கை வரலாறு தொலைக்காட்சி தொடராக தயாரிக்கப்படுகிறது. அதற்காக ரூ.150 கோடி(இந்திய ரூபாய்) செலவிடப்படுகிறது.அவரது இயற்பெயரான மடிபா என்ற தலைப்பில் தயாராகும் இந்த தொடரை கனடா, இங்கிலாந்து பட நிறுவனத்துடன் சேர்ந்து அவரது பேரன் தயாரிக்கிறார். இந்த தொடர் 6 பாகங்களாக உருவாகிறது.
அதில் அவரது இளமைப்பருவம், அரசியல் பிரவேசம், போராட்டத்தில் கைதாகி சிறைவாசம் அனுபவித்தது, பின்னர் அரசியல்வாதாகி தென் ஆப்பிரிக்காவின் ஜனாதிபதியானது வரை சித்தரிக்கப்படுகிறது. இந்த தொடர் தயாரிப்பதற்கான முழு தகவல்களை தர தயாராக இருப்பதாக நெல்சன் மண்டலோ அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
குற்றவாளிகளின் பெயர்கள் கொண்ட பட்டியல் வெளியீடு.
கனடாவில் புலம்பெயர்ந்தோர்களில் குற்றவாளிகளாக திகழும் நபர்களின் பட்டியலை கனடாவின் எல்லைப்பாதுகாப்பு துறை தயார் செய்துள்ளது.இந்தப் பட்டியலில் இருப்போர் உடனடியாக கனடாவை விட்டு வெளியேற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர்க்குற்றவாளிகளுக்கு மற்றும் மனித நேயத்துக்கு எதிரான குற்றங்களைச் செய்தவர்களுக்கு கனடாவில் இடம் கிடையாது என்பதை எல்லைப் பாதுகாப்புத் துறையின் இணையத்தளம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது. இந்தப் பட்டியலில் 21 பேர் பற்றிய தகவல்கள் வெளியாகின.
புலம்பெயர்வுத் துறை அமைச்சர் கென்னியும், பொதுப் பாதுகாப்புத் துறை அமைச்சர் விக் டோசும், குற்றவாளிகளுக்கு கனடா புகலிடம் அளிக்காது என்று திட்டவட்டமாக தெரிவித்து விட்டனர்.பாதுகாப்பு அமைச்சர் பட்டியலை வெளியிட்ட பிறகும் எல்லை பாதுகாப்புத் துறை அரசிடம் சற்று மெதுவாகவே இந்த வழக்குகளை நடத்துமாறு பரிந்துரை செய்துள்ளது.
டொரொண்ட்டோவின் தேவைப்படுவோர் பட்டியலில் உள்ள ஐந்து பேர் மீது நடவடிக்கை எடுக்கப்போவதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். இங்கு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் டோசும் கென்னியும் 32 பேர் அடங்கிய இரண்டாவது பட்டியலையும் வெளியிட்டனர்.அரசு இந்த விடயத்தில் உறுதியாக இருப்பதை உறுதி செய்யவே இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த இரண்டு பட்டியலும் மிகவும் கவனமாகத் தயாரிக்கப்பட்டதாக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
பிரிட்டன் நெருக்கடி குறித்து ஆய்வு.
பிரிட்டனில் பொருளாதார நெருக்கடி தவிர்க்க இயலாதது என்று உறுதியாகத் தெரிவிக்க முடியவில்லை.உற்பத்தி நிறுவனங்கள் தங்களின் உள்நாட்டுத் தேவைகளை நிறைவேற்ற இயலாமல் கடந்த மூன்று மாதமாகத் தவிக்கின்றன. எதிர்பார்த்த உற்பத்தி ஆணைகளும் ஒன்பது சதவீதத்தில் இருந்த -12 சதவீதமாக குறைந்துவிட்டன. சேவைத் துறைகளில் உள்நாட்டு ஆணைகள் 6 சதவீதம் குறைந்து -9 சதவீதமாகி விட்டது.
கடந்த 2009ஆம் ஆண்டிலிருந்து 2011ம் ஆண்டு வரை ஆராய்ந்தால் கடந்த காலாண்டறிக்கை தான் அனைத்துத் தளத்திலும் மிகவும் பின்தங்கியுள்ளது.கடந்த 2008ஆம் ஆண்டில் ஏற்பட்ட நெருக்கடியை விட இப்போது மோசமில்லை என்பதால் பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்று உறுதியாகச் சொல்ல இயலாது என்று பிரிட்டிஷ் வர்த்தக சங்கம் அறிவித்துள்ளது.கடந்த இரண்டாண்டுகளிலும் ஏற்பட்ட முன்னேற்றங்களை இப்போது காணமுடியவில்லை. எனவே உடனடியாக நடவடிக்கை எடுத்து குறுகிய காலத் தேக்கத்தை சரிசெய்து வர்த்தக  நம்பிக்கையை ஊட்ட வேண்டும்.
பிரிட்டனின் பொருளாதாரம் யூலை-செப்டம்பர் காலத்தில் 0.6 சதவீதமாக உயர்ந்தது. இதற்கு சேவைத் துறைகளும் கட்டிடத் தொழிலும் காரணமாகும்.உற்பத்தித் துறைகளில் எதிர்காலத்தில் வேலைவாய்ப்புக்கான அறிகுறி காணப்படவில்லை. சேவைத் துறையில் 4 சதவீதம் குறைந்து 2 சதவீதம் எட்டிவிட்டது. கடந்த 1994ஆண்டிற்குப் பின்பு இப்போதுதான் வேலைவாய்ப்பற்றோர் எண்ணிக்கை 2.64 மில்லியனை எட்டியது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF