Sunday, January 15, 2012

NEWS OF THE DAY.

இலங்கையில் 27 இணையத்தளங்களுக்கு மட்டுமே அனுமதி பத்திரம்.
இலங்கையில் இணையத்தளங்களைப் பதிவு செய்ய வேண்டும் என்ற உத்தரவுக்கமைய, ஊடகத்துறை அமைச்சுக்கு விண்ணப்பித்த 81 இணையங்களில் 27 இணையத்தளங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பதிவு செய்தமைக்கான அனுமதிப்பத்திரங்களை வழங்கும் நிகழ்வு நேற்று ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல முன்னிலையில் இடம்பெற்றது.
முன்னதாக 45 இணையத்தளங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நியைில், 27 இணையத்தளங்களுக்கே நேற்று அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டன. மிகவும் பிரபலமான இணையத்தளங்களுக்கு பெரும்பாலும் அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இதுதொடர்பாக கருத்து வெளியிட்ட தகவல் திணைக்களப் பணிப்பாளர் பி.பி.கணேகல,
"நேர்முகத்தேர்வுக்கு 81 இணையத்தள உரிமையாளர்கள் அழைக்கப்பட்டனர். இதில் 17 இணையத்தளங்கள் நேர்முகத் தேர்வுக்கு வரவில்லை. 13 விண்ணப்பங்களில் குறைபாடுகள் காணப்பட்டன.
இந்நிலையில், தெரிவு செய்யப்பட்ட 27 தளங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்விணையத்தளங்கள் ஊடக ஒழுக்கக் கோவைக்கமைய செய்திகளை வெளியிட வேண்டும்� என்று அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில், www.jayasiriradio.com , www.onlanka.com , www.srilankasports.com , www.hothotlanka.com , www.lankabusinesstoday.com , www.tamilaa.com , www.srilankamirror.com , www.pawuraradio.com , www.lankasitizen.com , www.micsrilanka.org , www.kalasem , www.puvath.lk , www.tharunayaweb.lk , www.lankanews.lk , www.lankareporter.com , www.rangalivefm.com , www.lankika.net , www.siddioice.info , www.srilankapatriot.lk, www.nation.lk , www.lankaelink.com , www.lakfmradio.com , www.vfmradio.lk , www.karaitivu.org, www.sihasara.com , www.maruthamunaionline.com , www.news360.lk ஆகிய இணையத்தளங்களுக்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 
மாணவர்களுக்கு புலிகள் முத்திரை குத்தி அரசாங்கம் தீய செயலில் இறங்கியுள்ளது : ஐ.தே.க குற்றச்சாட்டு.
தமிழீழ விடுதலைப் புலி முத்திரை குத்தி மாணவர் போராட்டங்களை ஒடுக்கும் முயற்சியானது கண்டிக்கப்பட வேண்டிடியது என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழக மாணவர்கள் மீது புலி முத்திரை குத்துவதன் மூலம் அரசாங்கத்தின் வங்குரோத்து நிலைமையை வெளிப்பட்டுள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இதனை ஒரு ஒடுக்குமுறையாகவே நோக்கப்பட வேண்டும். சுதந்திரக் கல்வி, பல்கலைக்கழகக் கட்டமைப்பு மற்றும் கல்வி உரிமைகளை பாதுகாக்கும் நோக்கில் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. உரிமைகளுக்காக போராடி வரும் பல்கலைக்கழக மாணவர்களை தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்களாக அடையாளப்படுத்துவது கண்டிக்கப்பட வேண்டியது.
பல்கலைக்கழக மாணவ மாணவியர் நீண்ட காலமாக எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்படாமையினால் அவர்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். மாணவர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றாது அவர்களது போராட்டங்களை ஒடுக்கும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.போர் மற்றும் புலி என்ற போர்வையில் அரசாங்கம் சகல தீய செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றது.
அமைச்சர் மேர்வின் சில்வாவிற்கு வாக்களிக்குமாறு கையொப்பத்துடன் கூடிய பத்திரிகை விளம்பரம் ஒன்றை வெளியிட்ட நபர் களனி பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக செயற்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.இதன் மூலம் பல்கலைக்கழகங்களில் எவ்வளவு தூரம் அரசியல் அதிகாரம் காணப்படுகின்றது என்பதனை உணர முடியும். பல்கலைக்கழக மாணவர்களின் பிரச்சினை மற்றும் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்று அமைக்கப்பட வேண்டுமென அகில விராஜ் காரியவசம் கோரியுள்ளார்.
சமூக ஒருமைப்பாட்டை ஏற்படுத்த உறுதி பூண வேண்டும்- ஜனாதிபதி மகிந்த.
சமூக ஒருமைப்பாட்டை ஏற்படுத்த நாட்டின் அனைவரும் உறுதி பூண வேண்டுமென்று, உலகத் தமிழர்களினால் நாளை கொண்டாடப்படவுள்ள தைப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.இந்து மக்களின் ஜனரஞ்சகமான பண்டிகையான தைப் பொங்கல் அனைவருக்கும் சௌபாக்கியத்தை ஏற்படுத்தட்டும்.முரண்பாடு ஏற்படுத்திக் கொண்டவர்கள் மீள இணைந்து கொள்ள இந்த பண்டிகையைப் பயன்படுத்திக்கொள்ள முடியும். தைத் திருநாள் தமிழ் மக்களின் வருட முதல் நாளாக மட்டுமன்றி, சமூக ஒருமைப்பாட்டை ஏற்படுத்தும் நாளாகவும் அமைய வேண்டுமென ஜனாதிபதி தமது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
பிளாஸ்டிக் கூடை விதிமுறை நாளை தொடக்கம் மீண்டும் அமுல்!- வர்த்தக அமைச்சு.
பழங்கள், மரக்கறிகளை வாகனங்களில் கொண்டுசெல்வதற்கு பிளாஸ்டிக் கூடைகளை பயன்படுத்த வேண்டும் என்ற விதிமுறை நாளை ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் அமுல்படுத்தப்படும் என வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
பிளாஸ்டிக் கூடைகளை பயன்படுத்த வேண்டும் என்ற நிபந்தனைக்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து ஜனாதிபதி தலையிட்டதன் பேரில் இவ்விதிமுறை அமுலாக்கம் ஒரு மாதத்திற்கு இடைநிறுத்தப்பட்டிருந்தது.
மேற்படி ஒருமாத கால அவகாசம் முடிவடைந்ததையடுத்து நாளை முதல் இவ்விதி மீண்டும் அமுல்படுத்தப்படும் என வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.8 மரக்கறிகள் இவ்விதிகளுக்குள் அடங்கமாட்டா என அமைச்சு முன்னர் தெரிவித்திருந்த போதிலும் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவில்லை.
மரக்கறிகள், பழங்களை கொண்டுசெல்லும் லொறிகளை சோதனைக்குட்படுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் எனவும் இவற்றை கொண்டுசெல்வதற்கு பிளாஸ்டிக், பலகையிலான கூடைகள் அல்லது அல்லது கார்ட்போர்ட் பெட்டிகளை பயன்படுத்துமாறு வலியுறுத்தப்படும் எனவும் அமைச்சு தெரிவித்தது.பிளாஸ்டிக் கூடைகளை வர்த்தகர்களுக்கு இலகு தவணை அடிப்படையில் விற்பனைசெய்யவும் கடன்வசதி பெற்றுக்கொடுக்கவும் தான் விரும்புவதாகவும் வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. 
வர்த்தகரை அச்சுறுத்திய அரசியல்வாதி மீது பொலிஸில் முறைப்பாடு.
கொழும்பு, கொள்ளுப்பிட்டி பிரதேச பிரபல வர்த்தகர் ஒருவரை பிரதேச அரசியல்வாதி ஒருவர் அச்சுறுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கறுவாத்தோட்ட பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வர்த்தகர் நேற்று காலை 6.30 அளவில் உடற்பயிற்சியின் பொருட்டு சென்றுகொண்டிருந்த சந்தர்ப்பத்தில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை கறுவாத்தோட்ட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்திய மண்ணில் இனி கால் வைக்கப் போவதில்லை- மஹிந்தவின் தங்கை நிரூபமா.
இந்திய மண்ணில் இனி கால் வைக்கப் போவதில்லை என ஜனாதிபதியின் சகோதரியும், பிரதி அமைச்சருமான நிரூபமா ராஜபக்ச தெரிவித்துள்ளார்.தனிப்பட்ட அல்லது உத்தியோகபூர்வ காரணங்களுக்காக இந்தியாவிற்கு செல்லப் போவதில்லை.
அண்மையில் தமிழகத்தைச் சேர்ந்த விடுதலைப்புலி ஆதரவாளர்கள் கணவருக்கு எதிர்ப்பை வெளியிட்டனர்.  இதன் காரணமாக இனிமேல் இந்தியாவிற்கு விஜயம் செய்யப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக தமிழகத்திற்கு விஜயம் செய்கின்ற போதிலும், கடந்த இரண்டு ஆண்டுகளாக விடுதலைப்புலி ஆதரவாளர்கள் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, தமிழீழ விடுதலைப் புலிகளை இலங்கையில் தோற்கடித்த காரணத்தினால், ராஜபக்சக்களுக்கு வெளிநாடுகளில் வாழும் தமிழ் புலம்பெயர் மக்களில் சிலர் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.இதன் காரணமாக எதிர்வரும் காலங்களில் இந்தியாவிற்கு விஜயம் செய்யப் போவதில்லை என நிரூபமா தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாநகர உறுப்பினர் அஷாத் சாலி பதவி விலகப்போவதாக அறிவிப்பு.
கொழும்பு மாநகரசபையின் எதிர்க்கட்சி உறுப்பினர் அஷாத் சாலி தமது உறுப்பினர் நிலையில் இருந்து விலகப்போவதாக அறிவித்துள்ளார்.இது தொடர்பில் தாம் எதிர்வரும் 19 ஆம் திகதி அறிவிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.மாநகர சபையின் மற்றும் ஒரு ஒரு எதிர்க்கட்சி உறுப்பினரான மொஹமட் மஹ்ரூப்புக்கு எதிர்க்கட்சி பிரதிதலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் மற்றும் ஏனைய சில காரணங்களை முன்வைத்தே தாம் பதவிவிலகவுள்ளதாக அஷாத் சாலி அறிவித்துள்ளார்.அஷாத் சாலி ஏற்கனவே ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
உயர்தர பரீட்சை பெறுபேறுகளி​ன் மாற்றியமைக்​கப்பட்ட மாவட்ட நிலைகள் வெளியீடு.
கடந்த வருடம் இடம்பெற்ற கா.பொ.த உயர்தரப்பரீட்சையின் மாற்றியமைக்கப்பட்ட மாணவர்களின் மாவட்ட நிலைகள் வெளியிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இந்த வருடம் வெ ளியான உயர்தரப் பரீட்சை முடிவுகளில் மாவட்டங்களின் அடிப்டையில் மேற்கொள்ளப்பட்ட தரவரிசையில் ஏற்பட்ட பிரச்சினைகள் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதனடிப்படையில் பரீட்சை பெறுபேறுகளில் காணப்பட்ட பிரச்சினைகளை ஆராய நியமிக்கப்பட்ட ஐந்து பேரைக்கொண்ட விசாரணைக்குழு கடந்த 11ம் திகதி ஜனாதிபதியிடம் தமது அறிக்கையை சமர்ப்பித்திருந்து குறிப்பிடத்தக்கது.
ஈராக்கில் தற்கொலைப்படை தாக்குதல்: 30 பேர் பலி, 90 பேர் படுகாயம்.
ஈராக்கில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் சுமார் 30 ஷியா இனத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள் பலியாகினர், 90க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.ஈராக்கில் சதாம் உசேன் அமெரிக்க படையினரால் கொல்லப்பட்ட பிறகு, ஷியா முஸ்லிம்கள் அதிகளவில் அரசியல் அதிகாரத்திற்கு வந்தனர்.இதனால் சன்னி முஸ்லிம் இனத்தவர்களுக்கும், ஷியா முஸ்லிம் இனத்தவர்களுக்கும் இடையே அவ்வப்போது தாக்குதல் சம்பவங்கள் நடந்து வருகின்றது.
எனவே அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகள் அங்கு தங்கியிருந்து ஈராக்கின் பாதுகாப்பை உறுதி செய்தன. இந்நிலையில் கடந்தாண்டு டிசம்பர் மாதத்தோடு ஈராக்கில் இருந்த அமெரிக்க படைகள் முழுவதுமாக, சொந்த நாட்டிற்கு அழைத்து கொள்ளப்பட்டதால் தற்போது ஈராக்கில் 2 முஸ்லீம் பிரிவினர் இடையே தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.இந்நிலையில் ஈராக்கின் பஸ்ரா நகரின் தென்மேற்கு பகுதியில் உள்ள சுபயர் நகரில் இன்று இரங்கல் கூட்டம் ஒன்று நடந்தது. இதில் அதிகளவில் ஷியா முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்திற்குள் நுழைந்த ஒரு நபர் தன் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்க செய்ததில் 30க்கும் மேற்பட்டோர் பலியாகினர், 90க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறை அதிகாரிகளும், மீட்புக் குழுவினரும் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.
இதுகுறித்து பஸ்ரா மாநகர செய்தித் தொடர்பாளர் அயத் அல் இமாரா கூறியதாவது, வெடிகுண்டு சம்பவம் குறித்த தெளிவான காரணம் எதுவும் தெரியவில்லை. தற்கொலை படையை சேர்ந்த நபரால் வெடிகுண்டு வெடித்ததா அல்லது குறிப்பிட்ட இடத்தில் இருந்த வெடிகுண்டு வெடித்தா என்பது குறித்து விசாரணை நடந்து வருகின்றது. இந்த சம்பவத்தில் பலியானோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றார்.
கிலானி - கயானி சந்திப்பு.
பாகிஸ்தானில் அரசுக்கும், இராணுவத்திற்கும் இடையேயான மோதல் அதிகரித்துள்ள நிலையில் பாகிஸ்தான் பிரதமர் யுசூப் ரசா கிலானியும், இராணுவத் தளபதி கயானியும் இன்று சந்திக்க உள்ளனர்.
பாகிஸ்தானின் பாதுகாப்பு மற்றும் அமெரிக்காவுடனான உறவுகள் குறித்து ஆலோசனை செய்ய பாகிஸ்தானின் பாதுகாப்புக்கான அமைச்சரவை கூட்டம் பிரதமர் தலைமையில் நடைபெற உள்ளது.இந்த கூட்டத்தில் கயானியும் கலந்து கொள்வார் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நடுக்கடலில் கப்பல் தத்தளிப்பு: 3000 பயணிகள் உயிருடன் மீட்கப்பட்டனர்.
இத்தாலியில் கோஸ்டா குரோசிரா என்ற நிறுவனத்திற்கு சொந்தமான கப்பல் ஒன்று 3000 பயணிகள் மற்றும் ஆயிரம் பணியாளர்களுடன் சென்று கொண்டிருந்தது.
இந்நிலையில் தரைதட்டி நின்றதில் கடல்நீர் உள்ளே நுழையத் தொடங்கியது.இந்நிலையில் பயணம் செய்த 3000 பேரும் மீட்கப்பட்டதாக இத்தாலிய பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது.மீ்ட்கப்பட்ட பயணிகள் பாதுகாப்பாக உள்ளனர் என்றும், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெறுகிறது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்து இளவரசரின் மனைவிக்கு 22 ஆண்டு கால சிறைத்தண்டனை.
இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இரண்டாவது மகன் இளவரசர் ஆண்ட்ரூ. இவரது முன்னாள் மனைவி சாரா பெர்குசன்(53).இவர் கடந்த 1986ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரை இளவரசர் ஆண்ட்ரூவுடன் வாழ்ந்து வந்தார். தற்போது கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.
இவர் சினிமா பட தயாரிப்பாளராகவும், டெலிவிஷன் டாகுமெண்டரி தயாரிப்பாளராகவும் உள்ளார். எனவே டாகுமெண்டரி தயாரிப்பதற்காக துருக்கி தலைநகர் அங்காரா அருகே உள்ள அனாதை குழந்தைகள் இல்லத்தில் ரகசியமாக படம் எடுத்தார்.
இதற்கு துருக்கி அரசிடம் முன் அனுமதி பெறவில்லை என கூறி அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளது. இதுகுறித்து சட்டப்பூர்வமாக உதவும்படி இங்கிலாந்து அரசிடம் கேட்டுள்ளது.அதை இங்கிலாந்து அரசு ஏற்றுக் கொண்டுள்ளதா என தெரியவில்லை. இதற்கிடையே சாராபெர்குசன் மீது துருக்கி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் சாரா பெர்குசனுக்கு 22 ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது.
அமெரிக்காவுடன் ரஷியா முரண்பாடு.
ஈரானிலும், சிரியாவிலும் அமெரிக்கா தன் படைகளை நிறுத்தி வைத்துள்ளது. இதற்கு ரஷ்யா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இதன் காரணமாக அவற்றின் நிறுவனங்களின் மீது கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.இஸ்லாமியக் குடியரசை எதிர்த்து கடந்த வாரம் தடை உத்தரவை மேலைநாடுகள் விதித்தன. இத்தடையால் எண்ணெய் வர்த்தகம் பாதிக்கப்படும்.
ஈரானின் அணு ஆயுதப் பிரச்னைகளை தீர்ப்பதற்காகவும், சர்வதேசச் சமூகம் எடுக்கும் முயற்சிகளை பலவீனப்படுத்தும் விதமாகவும் ஐ.நா.பாதுகாப்புக்குழு ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று ரஷ்ய வெளிவிவகாரத்துறையின் இணை அமைச்சரான கத்தி லோவ் கூறினார். இந்த வாரத்தில் இது ரஷ்யாவின் மூன்றாவது கண்டனம் ஆகும்.மேலை நாட்டாரின் கொள்கைக்கும், ரஷ்யாவின் கொள்கைக்கும் இடையே வேறுபாடு இருப்பதால், ஐ.நா பாதுகாப்புக் குழுவின் கருத்துகளை தங்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று கத்தி லோவ் தெரிவித்தார். அல் அசாத்தை ஒழிக்கத் திட்டமிடும் மேலைநாட்டாருடன் ரஷ்யா இணையாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.
பிரான்சின் தரமதிப்பு குறைந்தது.
பிரான்ஸ் நாட்டின் தரமதிப்பை AAA என்பதிலிருந்து AA+ ஆக குறைத்து ஸ்டாண்டர்டு அண்டு புவர் நிறுவனம் அறிவித்துள்ளது.இத்தாலியும் தனது தரமதிப்பில் இருந்து தாழ்ந்து BBB+ என்ற நிலைக்கு வந்துவிட்டது. ஆஸ்ட்ரியா தன் முதல் இடத்தை இழந்துவிட்டது.
இதுகுறித்து பிரான்சின் நிதியமைச்சர் பிராங்கோய்ஸ் பரோயின் கருத்துத் தெரிவிக்கையில், நாட்டின் பொருளாதார கொள்கை குறித்து அரசு முடிவெடுக்கும், அது குறித்து தனியார் முகமைகள் முடிவு செய்யக்கூடாது என்றார்.இது நல்ல செய்தி அல்ல என்றாலும் பேரழிவு ஒன்றும் இதனால் ஏற்படாது. மேலும் பிரெஞ்சு கொள்கைகளை இந்தத் தரமதிப்பீட்டு நிறுவனங்கள் தீர்மானிக்க இயலாது என்று ஆணித்தரமாக எடுத்துரைத்தார்.
யூரோ நாணய மதிப்பும் கடந்த 16 மாதங்களாக சரிந்து கொண்டே போகிறது. இதனால் சில அறிஞர்கள், இனி பிரான்ஸ் தன்னுடைய பொதுத்துறைச் செலவுகளை குறைக்க வேண்டும் என்றனர்.ஏற்கெனவே இதுபோல இரண்டுமுறை சிக்கன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஏர்கனடா ஜெட் விமானத்தில் கோளாறு: அவசரமாக தரையிறக்கம்.
டொரண்டோவிலிருந்து புரோவிடென்ஷியல்சுக்கு சென்று கொண்டிருந்த ஏர் கனடா நிறுவனத்தைச் சேர்ந்த ஜெட் விமானம் ஒன்று எரிபொருள் பிரச்னை காரணமாக கரிபீயன் கடலில் உள்ள தீவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.இந்த விமானம் புரொவிடென்ஷியல்ஸ் தீவுக்கு சென்று கொண்டிருந்த போது விமானக் கட்பனுக்கு ஒர் எச்சரிக்கை கிடைத்தது, உடனே விமானத்தை அவசரமாக கைகோஸ் தீவில் தரையிறக்கினார்.
பின்பு அவசர வண்டிகளை அழைத்து 110 பயணிகளையும் வேறாரு ஏர்பஸ்க்கு மாற்றினார். பின்பு அந்த விமானம் எரிபொருள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.இந்த விமானத்தில் ஹைட்ராலிக் கருவிகளில் பிரச்னை ஏற்பட்டதால், விமானம் தொடர்ந்து வெகுதூரம் பறக்க இயலாது என்பதால் வழியில் பாதுகாப்பாக இறக்கினர்.
ஜேர்மனியை விட்டு வெளியேறியது அமெரிக்க இராணுவம்.
மத்திய கிழக்கு நாடுகளுக்கும், ஆசியாவுக்கும் தன்னுடைய படைகளை அனுப்ப வேண்டி இருப்பதால் ஜேர்மனியில் இருந்த தன்னுடைய படைகளை அமெரிக்கா திரும்ப பெற்றது.இந்நிலையில் 10,000 முதல் 15,000 இராணுவ வீரர்கள் முதற்கட்டமாக கிளம்புவர். அமெரிக்காவின் நான்கு இராணுவக் குழுக்களில் மூன்று ஜேர்மனியில் உள்ளது.
இதில் பல்லாயிரக்கணக்கில் வீரர்கள் உள்ளனர். இன்னொரு குழு இத்தாலியில் உள்ளது. ஒவ்வொன்றாக சுழற்சிமுறையில் ஐரோப்பாவிலிருந்து புறப்படும் என்று அமெரிக்காவின் பாதுகாப்புத் துறை செயலர் பனேட்டா கூறினார்.இங்கிருந்த பலர் சமீபத்தில் ஆப்கானிஸ்தானிற்கும், ஈராக்கிற்கும் சென்று விட்டனர். இருப்பவர்களில் சிலரும் இனி மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்று விடுவர் என்றார் பனேட்டா.
ஜேர்மனியில் மட்டும் முப்படைகளைச் சேர்ந்த 80,000 பேர் இருக்கின்றனர். ஆரம்பத்தில் 200,000 பேர் ஐரோப்பாவில் இருந்தனர். இப்போது இந்த எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.பிரிட்டனும் ஜேர்மனியில் இருக்கும் தங்களுடைய 20,000 இராணுவ வீரர்களை எதிர்வரும் 2015ஆம் ஆண்டிற்குள் தன்நாட்டிற்கு திரும்ப அழைத்துக் கொள்ளப் போவதாக அறிவித்தது.
இந்தியாவிற்கு மட்டுமே விதிவிலக்கு, பாகிஸ்தானுக்கு அல்ல: ஜூலியா கில்லார்டு.
பாகிஸ்தானுக்கு யுரேனியம் ஏற்றுமதி செய்ய முடியாது என்று அவுஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லார்டு தெரிவித்துள்ளார்.
சர்வதேச அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உட்பட சில நாடுகள் மறுத்து வருகின்றன.இதனால் அணு சக்தி திட்டங்களுக்கு தேவையான யுரேனியம் மூலப்பொருளை இந்த நாடுகளுக்கு வழங்க பல நாடுகள் மறுத்துவிட்டன.இந்நிலையில் இந்தியாவின் அணுசக்தி கொள்கை மற்றும் உறுதிமொழிகளை ஏற்று இந்தியாவுக்கு யுரேனியம் ஏற்றுமதி செய்வது என அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனையடுத்து பாகிஸ்தானும் தங்களுக்கு யுரேனியம் வழங்க வேண்டும் என்று அந்நாட்டு வெளிவிவகாரத்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டது. இதுகுறித்து அவுஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லார்டு கூறுகையில், அவுஸ்திரேலியாவின் நலன் மற்றும் சர்வதேச மாற்றங்களின் அடிப்படையில் விதிவிலக்காக இந்தியாவுக்கு மட்டும் யுரேனியம் வழங்க நாடாளுமன்றம் முடிவெடுத்துள்ளது.இதுபோன்று பாகிஸ்தான் விடயத்தில் முடிவெடுக்க முடியாது. அவுஸ்திரேலியா - இந்தியாவுக்கு இடையில் உள்ள உறவு, அமெரிக்காவின் ஆதரவு போன்ற காரணங்களால் இந்தியாவுக்கு யுரேனியம் வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் தற்போதுள்ள சூழ்நிலையில் யுரேனியம் ஏற்றுமதிக்கு வாய்ப்பில்லை என்றார்.
ஈரான் அணு சக்தி விஞ்ஞானி படுகொலை: பான் கி மூன் கண்டனம்.
ஈரானில் அணு சக்தி விஞ்ஞானி படுகொலை செய்யப்பட்டதற்கு ஐ.நா பொதுச் செயலாளர் பான் கி மூன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.ஈரான் அணுசக்தி விஞ்ஞானி முஸ்தபா அகமதி ரோஷன்(32) டெஹ்ரான் நகரில் கடந்த புதன்கிழமை காரில் சென்று கொண்டிருந்த போது பின்னால் பைக்கில் வந்த மர்ம ஆசாமி கார் மீது சக்திவாய்ந்த வெடிகுண்டு வீசினான்.இதில் முஸ்தபா, இவரது பாதுகாவலர், வாகன ஓட்டுநர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். இது தீவிரவாத தாக்குதலாக இருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது.
இதுகுறித்து ஈரான் அரசியல்வாதிகள் கூறுகையில், முஸ்தபா படுகொலையில் அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ.வுக்கு பங்கு உள்ளது என்று குற்றம் சாட்டினார்.இந்நிலையில் விஞ்ஞானியின் படுகொலைக்கு ஐ.நா பொதுச் செயலாளர் பான் கி மூன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.மேலும் அவர் கூறுகையில், தீவரவாதம் என்ற பெயரில் யாரையும் படுகொலை செய்வது கடும் கண்டனத்துக்கு உரியது என்றார்.
பாரசீக வளைகுடா பகுதியில் அமெரிக்காவின் போர்க் கப்பல்கள்.
அமெரிக்க கடற்படையைச் சேர்ந்த இரு விமானம் தாங்கி கப்பல்கள் பாரசீக வளைகுடா கடல் பகுதிக்கு விரைகின்றன. இதனால் அப்பகுதியில் பதட்டமான நிலைமை நிலவி வருகிறது.ஹோர்முஸ் நீரிணையில் போர்ப் பயிற்சி மேற்கொண்ட ஈரான், அப்பகுதிக்கு அமெரிக்காவின் போர்க் கப்பல் இனி வரக்கூடாது என எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் பாரசீக வளைகுடா கடல் பகுதிக்கு அமெரிக்க கப்பல் படையைச் சேர்ந்த யு.எஸ்.எஸ் கால் வின்சன் என்ற விமானம் தாங்கி போர்க்கப்பல் விரைந்துள்ளது.
ஏற்கனவே வளைகுடா கடல் பகுதியில் யு.எஸ்.எஸ் ஜான் ஸ்டென்னிஸ் என்ற போர்க்கப்பல் நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து அமெரிக்க இராணுவத் தலைமையகமான பென்டகன் அலுவலக அதிகாரி கேப்டன் ஜான் கிர்பி கூறுகையில், இது ஏற்கனவே திட்டமிடப்பட்டது தான். இதற்கும் ஈரானுடனான பிரச்னைக்கும் சம்பந்தமில்லை என்றார்.இந்நிலையில் தாய்லாந்து கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த அமெரிக்க கடற்படையின் மற்றொரு விமானம் தாங்கி போர்க்கப்பலான யு.எஸ்.எஸ் ஆப்ரகாம் லிங்கன் அங்கிருந்து புறப்பட்டு தற்போது இந்திய பெருங்கடலுக்குள் நுழைந்துள்ளது. இதுவும் வளைகுடா கடல் பகுதிக்கு விரையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தலிபான்களை அவமானப்படுத்திய அமெரிக்க வீரர்கள்: ஹிலாரி கடும் கண்டனம்.
ஆப்கானில் கொல்லப்பட்ட தலிபான் போராட்டக்காரர்களின் சடலத்தின் மீது அமெரிக்க வீரர்கள் சிறுநீர் கழித்து மகிழ்ச்சி தெரிவிக்கும் வீடியோ காட்சி வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.
தலிபான் போராட்டக்காரர்களை ஒடுக்கும் விதத்தில் 20 ஆயிரம் அமெரிக்க இராணுவ வீரர்கள் ஆப்கானிஸ்தானில் களமிறக்கப்பட்டனர். அவர்கள் காந்தகார் மற்றும் ஹெல்மாண்ட் மாகாண பகுதிகளில் உள்ள தலிபான்களை கொலை செய்தனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் ஓன்லைன் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த தலிபான் வீரர்கள் சடலம் மீது அமெரிக்க கடற்படையினர் மகிழ்ச்சி களிப்பில் சிறுநீர் கழிப்பது போன்று இடம்பெற்றது.
அதில் ஒரு அமெரிக்க வீரர், நமக்கு ஆனந்தம் தரும் நாள் என்று எகத்தாளமாகக் கூறுவதும் வெளியாகியிருக்கிறது. இது உலகெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியது.ஆப்கான் ஜனாதிபதி கர் கூறுகையில், இக்காட்சி எங்களுக்கு மன உளைச்சலைத் தந்திருக்கிறது. இறந்தவர்கள் சடலத்தை அவமானப்படுத்தும் இச்செயல் மனிதாபிமானம் அற்றது என்றார்.
இதுகுறித்து அமெரிக்க இராணுவத் தளபதி லியோன் பனெட்டா, கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆப்கன் அதிபர் ஹமீத் கர்சாயிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டனும் கண்டனம் தெரிவித்துள்ளார். இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள தலிபான் அமைப்பு இதனால் அரசியல் ரீதியிலான நடவடிக்கைகள் எதுவும் பாதிக்கப்படாது என கூறியுள்ளது.
செயற்கைகோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது சீனா.
வானிலையை ஆய்வு செய்து தகவல்களை சேகரிக்கும் செயற்கைக்கோளை சீனா வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.பெங்கியூன்-2 என்ற இந்த செயற்கைக்கோள் வானிலை, நீர் வளம் குறித்தத் தகவல்களை சேகரிக்கும் என்று அந்நாட்டின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஷாங்காய் விண்கலத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்த செயற்கைகோள், லாங் மார்ச் 3ஏ என்ற ஏவுகணை மூலம் ஜிசாங் ஏவுகணைத் தளத்திலிருந்து வெள்ளிக்கிழமை விண்ணில் செலுத்தப்பட்டது.இந்த ஏவுகணையை சீன ஏவுகணைத் தொழில்நுட்ப ஆய்வு நிறுவனம் தயாரித்துள்ளது. 157வது முறையாக இந்த ரக ஏவுகணை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளதாக சீன அரசு தகவல் வெளியிட்டுள்ளது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF