Thursday, January 26, 2012

NEWS OF THE DAY.

வன்னிப் பிரதேசத்தில் கடும் குளிரான காலநிலை.
வன்னிப் பிரதேசத்தில் கடும் குளிரான காலநிலை நிலவி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பகல் வேளையில் வன்னி முழுவதிலும் கடுமையான வெப்பம் நிலவி வருவதாகவும் காலை மற்றும் மாலை வேளையில் கடுமையான குளிருடன் கூடிய காலநிலை நிலவி வருவதாகவும்
குறிப்பிடப்படுகிறது.  

இக் காலநிலையினால் பிரதேச மக்கள் பல்வேறு நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளனர். தோல் நோய்,  தொண்டை, சுவாசப் பிரச்சினை மற்றும் காய்ச்சல் போன்ற  நோய்களினால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
13ஆம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும்- அமைச்சர் ராஜித சேனாரட்ன.
நாட்டில் 13ஆம் திருத்தச் சட்டம்அமுல்படுத்தப்பட வேண்டும். திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதன் மூலம் மாகாண முதலமைச்சர்களின் கரத்தை வலுப்படுத்த முடியும் என மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
13ஆம் திருத்தச் சட்டம் பற்றி தெரியாதவர்களே அதனை கண்டு அஞ்சுகின்றனர். திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட்டால் முதலமைச்சர்களுக்கு இன்னும் இலகுவாக கடயைமாற்ற முடியும். 
நாட்டை பிளவுபடுத்தாது அதிகாரப் பகிர்வை மேற்கொள்ள 13ஆம் திருத்தச் சட்டத்தை பயன்படுத்திக்கொள்ள முடியும்.முதலமைச்சர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்று அமைச்சர் ராஜித கோரியுள்ளார்.
சீனாவில் மூன்றாவது துணைத் தூதரகத்தை சிறிலங்கா அமைக்கவுள்ளது.
சீனாவில் சிறிலங்கா தனது மூன்றாவது துணைத் தூதரகத்தை நிறுவவுள்ளது. அதற்கான அனுமதியை சீன அரசாங்கம் வழங்கியுள்ளது.தெற்கு சீனாவின் குவாங்டொங் மாகாணத்தில் உள்ள குவாங்சூ நகரில் இத் துணைத்தூதரகம் நிறுவப்படவுள்ளது.சீனாவில் சிறிலங்காவின் துணைத் தூதரகங்கள் ஏற்கனவே ஷாங்காய் மற்றும் செங்க் டு போன்ற நகரங்களில் அமைந்துள்ளது.
அதிவேக நெடுஞ்சாலை திறந்து மூன்று மாதங்கள்! இதுவரை 86 விபத்துகள் பதிவு.
இலங்கையின் தெற்கு அதிவேக நெடுஞ்சாலை திறக்கப்பட்டு மூன்று மாதங்களேயான நிலையில்  இதுவரை  86 வாகன விபத்துக்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், இம் மாதத்தில் மட்டும் விபத்துகள் சடுதியாக அதிகரித்துள்ளன.இந்த நெடுங்சாலையில் கடந்த ஆண்டு 50 விபத்துக்களும் இவ் ஆண்டு 36 விபத்துக்களுமாக இதுவரை 86 விபத்துக்கள் பதிவாகியுள்ளன.
அதிவேக நெடுஞ்சாலையில் போக்குவரத்து விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் வாகனம் செலுத்திய காரணத்திற்காக இதுவரை 9070 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அவற்றுள் இவ் ஆண்டு மட்டும் 999 பேருக்கெதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த நெடுஞ்சாலை கடந்த நவம்பர் மாதம் 28ம் திகதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌சவினால் திறந்து வைக்கப்பட்டது. திறந்து வைக்கப்பட்டு 24 மணிநேரத்திற்குள்ளாகவே விபத்து ஒன்று இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
வடக்குகிழக்கு மக்கள் காணி பொலிஸ் அதிகாரங்களை கோரவில்லை- பசில் ராஜபக்ச.
வடக்குகிழக்கு மக்கள் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை கோரவில்லை என்று இலங்கையின் அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் சகோதரரும் அரசியல் ஆலோசகருமான பசில் ராஜபக்ச இன்று கொழும்பில் செய்தியாளர் சந்திப்பின்போது, வடக்குகிழக்கு மக்கள் காணி அதிகாரத்தை கோரவில்லை என்றும் அவர்கள் காணி இல்லாதவர்களுக்கே காணிகளை கோருகின்றனர் எனவும் அதனை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தருவதற்கு முன்வந்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.
அதேபோல, பொலிஸ் அதிகாரங்களை வடக்குகிழக்கு மக்கள் கோரவில்லை என்றும், அவர்கள் கப்பம் மற்றும் குற்றங்களில் இருந்து தம்மை பாதுகாக்கவே பொலிஸ் பாதுகாப்பையே கோருகின்றனர் என்றும் தெரிவித்திருந்தார். அத்துடன், இந்த கருத்துக்கள் அரசாங்கத்தினுடைய கருத்துக்கள் அல்ல. தமது சொந்தக்கருத்துக்கள் என்றும் பசில் ராஜபக்ச தெரிவித்தார்.
இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் எம் கிருஸ்ணா அண்மையில் இலங்கைக்கு வந்திருந்த போது காணி பொலிஸ் அதிகாரங்கள் உள்ளடங்கிய 13 வது திருத்த சட்டத்துக்கு அப்பால் சென்று இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண இலங்கை ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக அறிவித்திருந்தார்.
இதனையடுத்து தேசியவாத கட்சிகள், அரசாங்கத்தின் உண்மை நிலைப்பாட்டை கோரியதுடன், அரசாங்கத்தை விமர்சனம் செய்திருந்தன.இந்தநிலையிலேயே பசில் ராஜபக்ச தமது சொந்தக்கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
போதைப் பொருள் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு மரண தண்டனை.
போதைப் பொருள் குற்றச்சாட்டில் கைதான மருதானை பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
3 கிரேம் ஹெரோயின் தன்வசம் வைத்திருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டு, நிரூபிக்கப்பட்டுள்ள நிலையிலேயே சந்தேக நபருக்கு இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால் கடந்த 2007ம் ஆண்டு குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டு, சட்ட மா அதிபரால் சந்தேகநபருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.நீண்ட காலமாக நடைபெற்ற குறித்த வழக்கு விசாரணையில், சந்தேகநபருக்கு எதிரான குற்றம் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுனில் ராஜபக்ஷ், மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
ஊடக சுதந்திரம் குறித்த பட்டியலில் இலங்கை 163ஆவது இடம்!
பிரான்சை தலைமையகமாக கொண்ட எல்லைகளற்ற ஊடகவிலாளர் அமைப்பினால் (Reporters Without Borders -RSF) ஆண்டுதோறும் வெளியிடப்படும் ஊடக சுதந்திரம் குறித்த பட்டியலில் இந்த ஆண்டில் இலங்கை பின்தள்ளப்பட்டுள்ளது. 
2011-12ம் ஆண்டுக்கான இந்தப் பட்டியலில் சிறிலங்காவுக்கு 163வது இடமே கிடைத்துள்ளது.கடந்த ஆண்டில் சிறிலங்கா 158வது இடத்தில் இருந்தது. சிறிலங்காவில் போர் தீவிரமாக இடம்பெற்ற 2009ம் ஆண்டில் கூட 162வது இடத்திலேயே சிறிலங்கா வரிசைப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஊடகங்கள் மீதான கெடுபிடிகள், தாக்குதல்கள், இணையத் தளங்கள் மீதான நேரடியான கட்டுப்பாடுகள், தணிக்கைகள் காரணமாகவே சிறிலங்கா இந்தப் பட்டியலில் பின்தள்ளப்பட்டதாக எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.இந்தப் பட்டியலில் முதலாவது இடத்தை பின்லாந்தும் நோர்வேயும், மூன்றாவது இடத்தை எஸ்தோனியாவும்,நெதர்லாந்தும் பிடித்துள்ளன. 179 நாடுகளைக் கொண்ட இந்தப் பட்டியலில் கடைசி இடத்தை எரித்திரியா பெற்றுள்ளது.
மிகத்திறமையான கல்லூரி மாணவியை நான் யாழ்ப்பாணத்தில் சந்தித்தேன்!- அப்துல் கலாம்.
நான் யாழ்ப்பாணத்துக்கு சென்று இந்துக் கல்லூரி மாணவர்களை சந்தித்து உரையாடிய போது  மாணவி ஒருவர் பொறுப்புள்ள பிரஜையாக திகழ நான் என்ன செய்யவேண்டும் என என்னிடம்  கேள்வியெழுப்பினார். அவ்வாறு திறமைவாய்ந்த மாணவியை நான் முன்னர் ஒருபோதும் சந்தித்தது கிடையாது என்று இந்திய முன்னாள் ஜனாதிபதி டாக்டர். அப்துல் கலாம் தெரிவித்தார். அம்மாணவி தொடுத்த வினாவிற்கு பதிலளித்த நான் அந்த  பதிலைத் திருப்பிக் கூறுமாறு தெரிவித்தேன். உடனடியாக அவர் அதனை திருப்பிக்கூறினார். அவ்வாறு மிகத் திறமையான மாணவியை நான் சந்தித்தது யாழ்ப்பாணத்தில் தான் என்று இந்திய டாக்டர். அப்துல் கலாம் தெரிவித்தார்.
கொழும்பில் ஊடகவியலாளர்களை நேற்று சந்தித்து உரையாடியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்துப் பேசிய அப்துல் கலாம், தான் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், மற்றும் இந்துக் கல்லூரியில் சந்தித்து உரையாடிய மாணவர்களின் திறமை தொடர்பாகவும் புகழாரம் சூட்டினார்.
நேற்று முன்தினம் காலை இந்துக் கல்லூரிக்கு விஜயம் செய்த அப்துல் கலாமிடம் ஆறு மாணவ மாணவிகள் கேள்விகளை எழுப்பினர். அதில் சிறு மாணவன் ஒருவன் ஐயா நீங்கள் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்தமையையிட்டு நான் மிகவும் பெருமையடைகின்றேன். உங்களைப் போன்று நானும் வரவேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் என வினவினான்.அந்த மாணவனது இந்தத் திடீர் வினா சபையார் அனைவரையும் கவர்ந்ததுடன் பலரது கரகோசத்தையும் பெற்றது. அதற்கு பதிலளித்த அப்துல் கலாம் நீ கடின உழைப்பாளியாகவும் இலட்சிய தாகமுடையவனாகவும் நேர்மையாளனாகவும் விடாமுயற்சி உடையவனாகவும் இருந்தால் உனது வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என்றார்.
உலகத் தலைவர்களை பேட்டியெடுக்கும் அசாஞ்ச்.
உலகில் பரபரப்பை ஏற்படுத்திய விக்கிலீக்ஸ் இணையத்தள நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் உலகின் முக்கிய நபர்களை விரைவில் பேட்டி எடுக்கவுள்ளார்.அசாஞ்ச் மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டால் சுவீடனுக்கு நாடு கடுத்தப்படும் நிலை உருவாகியுள்ளது.
தற்போது பிரிட்டனில் தங்கியிருக்கும் அசாஞ்ச் இணையத்தளத்தில் விடுத்த அறிக்கையில், தி வேர்ல்டு டுமாரோ என்ற தலைப்பில் பத்து பாகங்களாக தொலைக்காட்சி தொடர் ஒன்று வெளியாகும். இதில் உலகின் முக்கிய அரசியல்வாதிகள், சிந்தனையாளர்கள், புரட்சியி்ல் தொடர்புடையவர்கள் உட்பட பல முக்கிய தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இத்தொடரின் நோக்கம் எதிர்காலத்தில் உலகம் எப்படி இருக்கும்? லட்சியத்தை நிறைவேற்றும் வகையில் இருக்குமா? அல்லது அதற்கு எதிர்மாறானதாக இருக்குமா? என்பது பற்றி இத்தொடர் அலசி ஆராயும். இத்தொடர் மார்ச் மாத மத்தியில் இருந்து தொடக்கப்படும் என்றார்.
திபெத்தியர்கள் மீது சீன காவல்துறையினர் துப்பாக்கி சூடு.
திபெத் மீதான சீன ஆக்கிரமிப்பை கண்டித்து திபெத்தியர்கள் தீக்குளிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.கடந்தாண்டு மார்ச் முதல் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள திபெத்தியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அம்மாகாணத்தில் மட்டும் இதுவரை 13 புத்தமதத் துறவிகள் தீக்குளித்து பலியாகியுள்ளனர்.
அம்மாகாணத்தின் கான்ஜி வட்டத்தில் உள்ள லூவூஹோ பகுதியில் ஆயிரக்கணக்கான திபெத்தியர்கள் அரசு அலுவலகங்களை நோக்கி ஊர்வலமாகச் சென்றதாகவும், அவர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 3 பேர் பலியானதாகவும் ஒன்பது பேர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.இத்தகவலை திபெத்திய போராளி அமைப்பும், லண்டனைச் சேர்ந்த மற்றொரு அமைப்பான ப்ரீ திபெத் அமைப்பும் உறுதி செய்துள்ளது.
மீண்டும் பானி வாலித் நகரை கைப்பற்றிய கடாபியின் ஆதரவாளர்கள்.
லிபியாவின் ஜனாதிபதி கடாபி படுகொலை செய்யப்பட்ட பின் புதிய அரசு ஆட்சியை அமைத்துள்ளது.இந்த அரசு ஆட்சியை பிடித்து மூன்று மாதங்களுக்குப் பின் கடாபி ஆதரவாளர்கள் பானி வாலித் நகரைக் கைப்பற்றியுள்ளனர்.
இதையடுத்து அப்பகுதியில் அரசு அவசர நிலை பிரகடனத்தை பிறப்பித்துள்ளது. லிபியத் தலைநகர் டிரிபோலியில் இருந்து 140 கி.மீ தெற்கில் உள்ள பானி வாலித் நகரை மீண்டும் கடாபி ஆதரவாளர்கள் கைப்பற்றினர்.அந்நகரில் இருந்த புரட்சிப் படைத்தளபதி அலி அல் படாம்னி மிஸ்ரட்டா நகருக்குத் தப்பித்துச் சென்றார். நகரின் பல உயர்ந்த கட்டடங்களில் கடாபி ஆட்சியில் இருந்த பச்சைக் கொடியை அவரது ஆதரவாளர்கள் ஏற்றி வைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரானின் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடை: ஒபாமா வரவேற்பு.
ஈரானின் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பு விதித்த தடையை ஒபாமா வரவேற்றுள்ளார்.ஈரான் அணு சக்தியை தயாரித்து வருகின்றது என அமெரிக்காவும், மேற்குலக நாடுகளும் தொடர்ந்து கூறி வருகின்றன. இதனால் பல்வேறு தடைகளும் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தன. 
இந்நிலையில் பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்சில் ஐரோப்பிய நாடுகளின் வெளிவிவகாரத்துறை அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது.இதில் ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டது. அத்துடன் ஐரோப்பிய கூட்டமைப்பின் நாடுகளில் உள்ள ஈரான் மத்திய வங்கியின் சொத்துக்களை முடக்கவும் உத்தரவிடப்பட்டது.
இது குறித்து வாஷிங்டனில் நிருபர்களுக்கு பேட்டியளித்த ஒபாமா கூறியதாவது, ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பு அமெரிக்காவிற்கு என்றுமே நட்பு நாடுகள் தான். ஈரான் மீது தடைவிதித்ததை நான் வரவேற்கிறேன். இந்த நேரத்தில் தான் சர்வதேச சமூம் தனது ஒற்றுமையினை காண்பித்துள்ளது.ஈரான் இன்னும் தனது அணுசக்தி திட்டத்தை கைவிடாமல் முரண்டுபிடிக்கிறது. ஏற்கனவே அமெரி்க்க ஈரான் நாட்டிற்கு புதிய தடைவிதித்தும் அந்நாட்டு வங்கி பரிவர்த்தனைகளை முடக்கி வைத்தும் தடை விதித்தது. தற்போது ஐரோப்பிய கூட்டமைப்பின் இந்த முடிவு வரவேற்கத்தக்கது என்றார்.
பப்புவா நியூ கினியாவில் நிலச்சரிவு: 40 பேர் பலி.
அவுஸ்திரேலியாவின் பப்புவா நியூ கினியா நாட்டில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் 40 பேர் பலியாகி உள்ளனர்.
இந்நாட்டின் மலைப்பகுதியில் உள்ள மெண்டி நகரத்தின் அருகேவுள்ள 2 கிராமங்களில் இன்று அதிகாலை நிலச்சரிவு ஏற்பட்டது.இதனால் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த மக்கள் மண்ணுக்குள் புதைந்தனர். ஏராளமான வீடுகள் மற்றும் சாலைகள் பெரும் சேதத்திற்கு உள்ளாயின.தகவல் அறிந்த காவல்துறை அதிகாரிகளும், இராணுவமும் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 40 பேர் உயிரிழந்துள்ளனர், பலர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஹெலிகாப்டர் மூலம் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது. அவுஸ்திரேலிய அரசும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளது.
அமெரிக்காவின் உள்நோக்க அரசியலுக்கு ஐரோப்பிய நாடுகள் பலியாக கூடாது: ஈரான்.
ஈரானில் இருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதற்கு ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள் தடை விதித்துள்ளது.ஈரானின் அணுசக்தி திட்டங்களை அமெரிக்காவும், மேற்குலக நாடுகளும் தொடர்ந்து எதிர்த்து வருகின்றன.இந்நிலையில் பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்சில் ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளின் வெளிவிவகாரத்துறை அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டது. அத்துடன் ஐரோப்பிய கூட்டமைப்பின் நாடுகளில் உள்ள ஈரான் மத்திய வங்கியின் சொத்துக்களை முடக்கவும் உத்தரவிடப்பட்டது.இதுகுறித்து ஈரான் வெளிவிவகாரத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ராமின் மேமன்பரஸ்த் கூறுகையில், இத்தடையால் ஈரானின் வளர்ச்சியைத் தடுக்க முடியாது. ஐரோப்பிய நாடுகள் தற்போது அமெரிக்காவின் நெருக்கடியில் உள்ளன. அமெரிக்காவின் உள்நோக்க அரசியலுக்கு அவர்கள் பலியாகி விடக் கூடாது என்றார்.
இந்நிலையில் ஈரானின் எச்சரிக்கையை மீறி அமெரிக்காவின் யு.எஸ்.எஸ் ஆப்ரகாம் லிங்கன் என்ற விமானந்தாங்கிப் போர்க் கப்பலும், பிரிட்டன் மற்றும் பிரான்சின் தலா ஒரு போர்க் கப்பலும், இரு நாட்களுக்கு முன் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பாரசீக வளைகுடாவிற்குள் சென்றுள்ளன.இந்த நீரிணையை மூடுவதற்கான முயற்சிகளில் ஈரான் இறங்கும் பட்சத்தில், அதைத் தடுக்கும் வகையில் மேலும் பல கப்பல்களை அங்கு அனுப்ப வேண்டி வரும் என பிரிட்டன் வெளிவிவகார அமைச்சகம் எச்சரித்துள்ளது.
ஒரே நாளில் 34 பேருக்கு மரண தண்டனை.
ஈராக்கில் ஒரே நாளில் பெண்கள் உட்பட 34 பேருக்கு  தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஈராக்கில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற குற்றங்கள் மட்டுமின்றி பொருட்களுக்கு சேதம் விளைவிக்கும் குற்றங்களுக்கும் மரண தண்டனை விதிக்கப்படுகிறது.
குற்றம் நிரூபிக்கப்பட்ட 2 பெண்கள் உட்பட 34 பேருக்கு ஈராக்கில் கடந்த 19ம் திகதி ஒரே நாளில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது.ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் நவநீதம் பிள்ளை கூறுகையில், சட்டப்படி வெளிப்படையாக விசாரணை நடந்திருந்தால்கூட ஒரே நாளில் 34 பேரை தூக்கில் போட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
ஈராக்கில் கடந்த 8 ஆண்டுகளில் மட்டும் 1,200 பேருக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒன்றரை மாதத்தில் 64 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.விசாரணை நியாயமாக நடப்பதில்லை, சிறு குற்றங்களுக்கும் மரண தண்டனை விதிக்கப்படுகிறது என்பது ஈராக் மீதான பொதுவான குற்றச்சாட்டுகள்.
சாதாரண குற்றங்களுக்குகூட மரண தண்டனை வழங்கப்படுவது சதாம் ஆட்சிக் காலத்தில் இருந்தே நடந்து வருகிறது. அமைதியான முறையில் போராட்டம் நடத்துபவர்கள், பத்திரிகையாளர்கள் தாக்கப்படுவது, கருத்து சுதந்திரத்தை பறிப்பது, சந்தேக குற்றவாளிகளை ரகசிய சிறையில் அடைத்து சித்ரவதை செய்வது ஆகியவற்றில் ஈராக் படையினர் ஈடுபடுவதாக சமீபத்தில் புகார் எழுந்தது.இதையடுத்து சர்வாதிகாரப் போக்கில் நடந்துகொள்ள கூடாது என்று ஐ.நா. மனித உரிமை ஆணையம் எச்சரிக்கை விடுத்த 2 நாளில், 34 பேர் தூக்கில் இடப்பட்டிருக்கின்றனர். இது கண்டிக்கத்தக்கது என்றார்.
2012ம் ஆண்டில் கனடாவின் பொருளாதாரம் பாதிக்கப்படும்: சர்வதேச நாணய நிதியம் தகவல்.
ஐரோப்பாவின் பொருளாதார சீரழிவு கனடாவை கடுமையாக பாதிக்கும் என சர்வதேச நாணய நிதியம் அறிக்கை வெளியிட்டுள்ளது.கடந்த 2011ஆம் ஆண்டில் 2.3 சதவீதமாக இருந்த வளர்ச்சி 2012ஆம் ஆண்டில் 1.7 சதவீதமாகவே இருக்கும்.
எதிர்வரும் 2013ஆம் ஆண்டிலும் கனடாவின் பொருளாதாரம் வலுப்படும் என்று சொல்ல இயலாது. கனடாவின் மத்திய வங்கி வளர்ச்சி விகிதத்தை 2.8 சதவீதம் என்று அறிவித்தாலும் கூட கனடாவின் பொருளாதாரம் 2 சதவீதம் வீழ்ச்சியடைவது உறுதி என்று சர்வதேச நாணய நிதியம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதே போன்று ஜேர்மனி, இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளும் 2012ஆம் ஆண்டில் பொருளாதார வீழ்ச்சியை சந்திக்கும். யூரோ மண்டலம் முழுவதும் ஓரளவு பொருளாதார வீழ்ச்சியில் சிக்கித் திணறும்.உலகப் பொருளாதார வளர்ச்சி நான்கு சதவீதமாக இருக்கும் என்று கூறியது மாறி இப்போது வெறும் 3.3 சதவீதமாக மட்டும் இருக்கும் என்ற நிலை உருவாகியுள்ளது.
பிரெஞ்ச் வீரர்கள் மரணத்திற்கு தலிபான் காரணம் அல்ல: நேட்டோ.
ஆப்கானிஸ்தானில் கடந்த சில நாட்களுக்கு முன் நான்கு பிரெஞ்ச் வீரர்கள் கொலை செய்யப்பட்டனர்.இந்த கொலைகளை செய்தது தலிபான்கள் தான் என்று நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை என்று நேட்டோ தெரிவித்துள்ளது.
பிரான்ஸ் நாட்டு இராணுவ வீரர்களை தலிபான் இயக்கத்தைச் சேர்ந்தவன் தான் கொன்றான் என்று பிரான்ஸ் ஜனாதிபதி சர்கோசி தெரிவித்தார். உடனே இது பற்றி தகவல் அறிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜெரார்டு லோங்கேட்டையும் அங்கு அனுப்பி வைத்தார்.இதற்கிடையே லே மாண்ட் என்ற பிரெஞ்சு பத்திரிகையும் இனி பிரெஞ்சுப் படைகள் ஆப்கானிஸ்தானின் வீரர்களுக்கு பயிற்சி அளிக்காது என்று  தகவல் வெளியிட்டது.
ஆனால் இப்போது இந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் நேட்டோ படைகள் அங்கு தொடர்ந்து தங்கி பயிற்சியைத் தொடர்கின்றன. சில பாதுகாப்பு முறைகளை மட்டும் பின்பற்றப் போகின்றன.ஆப்கானின் படைவீரர் உள்ளே நுழைய முடியாதபடி ஒவ்வொரு நேட்டோ இராணுவ முகாமும் பாதுகாக்கப்படும். ஆப்கானின் படைகளுக்கு பயிற்சியளிக்கும் போது ஒவ்வொரு பிரெஞ்சு படைவீரரும் ஆயுதத்தோடுதான் இருக்க வேண்டும்.
பிரெஞ்சு வீரர்கள் பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றுவதில் அலட்சியமாக இருக்கின்றனர். தங்களைப் பற்றிய ஓர் உயர்வு மனப்பான்மை இவர்களிடம் காணப்படுகின்றது. இந்த மனப்பான்மையை இவர்கள் விலக்கி வைக்க வேண்டும் என்று லேமாண்ட் நாளிதழ்எச்சரித்துள்ளது.ஆப்கானிஸ்தானிலிருந்து பிரெஞ்சு படைகள் எதிர்வரும் 2013ஆம் ஆண்டில் வெளியேறும். ஆனால் அமெரிக்கப்படைகள் இன்னும் சில மாதங்களில் அமெரிக்காவுக்குத் திரும்பிவிடும்.
ஜேர்மனியில் புகலிடம் தேடி வருவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு.
ஜேர்மனியில் புகலிடம் நாடி வருவோரின் எண்ணிக்கை கடந்த 8 ஆண்டுகளாக அதிகரித்துக் கொண்டே வருகின்றது.கடந்த 2010ஆம் ஆண்டில் வந்ததை விட 2011ஆம் ஆண்டில் 11 சதவீத உயர்வு காணப்படுவதால் கடந்த ஆண்டில் மட்டும் ஏறத்தாழ 46,000 பேர் விண்ணப்பித்தாக தகவல் வெளியாகியுள்ளது.
இவர்களில் பலர் ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா போன்றவற்றில் இருந்து வருகிறார்கள். பாகிஸ்தானிலிருந்து 2500 பேர் விண்ணப்பித்துள்ளனர். இது கடந்த 2010 ஆம் ஆண்டை விட மூன்று மடங்கு அதிகமாகும்.செர்பியா அல்லது மேசிடோனியாவிலிருந்து வரும் மக்கள் ஜேர்மனிக்குள் விசா இல்லாமலேயே வந்து விடுகிறார்கள். இவர்களில் பலர் சட்டரீதியாக அனுமதி பெறாதவர்கள்.
ஐரோப்பிய நாடுகளுக்குள் இடம்பெயர்வோர் துருக்கி எல்லையிலிருந்து கிரீஸ் வழியாக ஜேர்மனி வருகின்றனர். கிரீஸில் அனுமதி பெற்றுவிடுவதால் வேறு ஐரோப்பிய நாடுகளுக்குள் அனுமதிபெறத் தேவையில்லை. கிரீசுக்கு இருக்கும் நிதிநெருக்கடி இவர்களுக்குப் புகலிடம் அளித்துப் பாதுகாக்க இடம் தராது.அரசின் அடக்குமுறைக்கு அஞ்சி சிரியா மக்கள் சிலர் ஜேர்மனிக்குப் பிழைப்பு தேடி வருகின்றனர். சட்ட ரீதியாக அனுமதி பெறாதவர்கள் திரும்பி அனுப்பப்படுவது மரபு. இவ்வாறு சிரியாவினரை அனுப்பும் போது அவர்களை நேரடியாக சிரியாவுக்குத் திருப்பி அனுப்புவது கிடையாது.
ஹங்கேரி போன்ற நாடுகளுக்கே அனுப்பப்படுகின்றனர். அங்கிருந்து ஹங்கேரி அரசு அவர்களை வேறுநாடுகளுக்கு அனுப்புகிறது. இச்செயலை இரக்கமற்றது என்றும் மனித நேயமற்றது என்று பசுமைக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் வோல்கெர் பெக் கண்டித்துள்ளார்.ஆனால் உள்துறை அமைச்சகம் கடந்த 2011ஆம் ஆண்டின் மத்தியிலிருந்து இவ்வாறு திருப்பியனுப்பப்பட்ட எவரும், அவரது விருப்பத்திற்கு மாறாக ஹங்கேரிக்கோ அங்கிருந்து சிரியாவுக்கோ அனுப்பப்படவில்லை என்று பதிலளித்துள்ளது.
சூரியப் புயல்: விமான சேவைகள் பாதிப்பு.
சூரியனில் இருந்து வெளியாகிய காந்த புயல் காரணமாக பல நாடுகளின் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.சூரியனில் இருந்து வெளியாகிய காந்த புயல் பூமியின் வட துருவ பகுதிகளை தாக்கும் வாய்ப்பு உள்ளதாகவும், இதனால் மனிதர்களுக்கு பாதிப்பில்லை என நாசா விண்வெளி ஆராய்சி மையம் தகவல் தெரிவித்திருந்தது.
இது மட்டும் இல்லாது சிறு அதிர்வலை தாக்குதல் ஏற்படும் எனவும் தகவல் வெளியிட்டிருந்தது. இதனால் பல நாடுகளுக்கு விமான சேவையில் ஈடுபட்டுள்ள உலகின் இரண்டாவது பெரிய விமான சேவை நிறுவனமான டெல்டா, தனது விமான சேவையை தென்பகுதியில் இருக்குமாறு அமைத்துள்ளது.அதன்படி ஹாங்காங், ஷாங்காய் மற்றும் சியோல் வழியாக இயங்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
நைஜீரிய தாக்குதலில் பலியானோரின் உடல்கள் ஒரே இடத்தில் அடக்கம்.
ஆப்ரிக்க நாடான நைஜீரியாவின் இரண்டாவது பெரிய நகரமான கனோ நகரில் பயங்கரவாதிகள் தொடர் வெடிகுண்டு தாக்குதல் மற்றும் துப்பாக்கி சூடு நடத்தினர்.இதில் 150 அப்பாவி பொதுமக்கள், 29 காவல்துறை அதிகாரிகள், 6 அதிகாரிகள் உட்பட 250க்கும் மேற்பட்டோர் பலியாயினர்.பலியானவர்களில் அடையாளம் காணப்பட்டவர்களின் உடல்கள் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அடையாளம் காணப்படாத 50 பேரின் உடல்கள் 2 வாகனங்களில் எடுத்துச் செல்லப்பட்டு, கலிபாவா என்ற கிராமத்தில் இறுதிச் சடங்கு நடத்தி மொத்தமாக அடக்கம் செய்யப்பட்டன.
இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்ற போகோ ஹராம் என்ற இயக்கத்தின் தீவிரவாதிகளை தேடி வருவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.நைஜீரியாவில் கடந்த 2009ம் ஆண்டு முதல் போகோ ஹராம் என்ற தீவிரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. இதுவரை அந்த தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 935 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்தாண்டு மட்டும் 253 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் கடும் துப்பாக்கி சண்டை: 23 பேர் பலி.
பாகிஸ்தானில் பாதுகாப்பு படையினருக்கும், தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 23 பேர் கொல்லப்பட்டனர்.பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதியான குர்ரம் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும், தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்றது.
இதில் 6 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டனர், பயங்கரவாதிகள் தரப்பில் 17 பேர் பலியாயினர்.குர்ரம் பகுதியில் தேடுதல் வேட்டையில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டிருந்த போது, அங்கு மறைந்திருந்த 50க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூடு நடத்தியதையடுத்து இருதரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF