Tuesday, January 24, 2012

NEWS OF THE DAY.

யாழ் - கொழும்பு விமானசேவை மீண்டும் ஆரம்பம்.
யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் இடையில் மீண்டும் விமானசேவையை ஆரம்பிக்கப் போவதாக எக்ஸ்போ எவியெசன் நிறுவனம் அறிவித்துள்ளது.இவ்விமான சேவையை நாளொன்றுக்கு இரண்டு சேவைகளை நடத்தவுள்ளதாகவும், இதற்கு 12 ஆசனங்களைக் கொண்ட விமானங்களை பயன்படுத்தவுள்ளதாகவும் எக்ஸ்போ எவியெசன் நிறுவனம் அறிவித்துள்ளது.விமான சேவையை ஆரம்பிக்க சிறிலங்காவின் குடியியல் விமான சேவை அதிகாரசபையின் அனுமதிக்காக காத்திருப்பதாகவும், எக்ஸ்போ நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏ-9 வீதி திறக்கப்படுவதற்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு நாளொன்றுக்கு சுமார் 200 பேர் விமானம் மூலம் பயணம் செய்து வந்தனர்.தற்போது ஏ-9 வீதி திறந்து விடப்பட்டுள்ள நிலையில் நாளொன்றுக்குத் தேவைப்படும் விமானப் பயண ஆசனங்களின் எண்ணிக்கை 36 ஆக குறைந்துள்ளதாகவும் எக்ஸ்போ எவியெசன் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
தீர்வுக்கு அமெரிக்காவின் மூன்றாம் தரப்பின் மத்தியஸ்தம் அவசியம்! அமெரிக்க இராஜதந்திரிகளிடம் கூட்டமைப்பினர் தெரிவிப்பு.
இலங்கையில் இனப்பிரச்சினை தீர்வுக்கு மூன்றாம் தரப்பின் மத்தியஸ்தம் அவசியம் என வலியுறுத்தியுள்ள தமிழ்தேசிய கூட்டமைப்பு, இறுதி யுத்தத்தின் போதும், இன முரண்பாடுகள் முளைத்த காலப்பகுதியிலிருந்தும் தமிழ் இன அழிப்பு நடவடிக்கையொன்று இங்கு இடம்பெற்றது என்ற நியாயம் வழங்கப்படவேண்டும் எனவும் கேட்டுள்ளது. அமெரிக்க இராஜதந்திரிகளிற்கும்- கூட்டமைப்பினருக்குமிடையில் நேற்று மாலை யாழ்.நகரிலுள்ள தனியார் விடுதியொன்றில் இடம்பெற்ற சந்திப்பின் போதே மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
குறித்த சந்திப்பின்போது, கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், மற்றும் சி.சிறிதரன் ஆகியோரும் பிரதேச தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.இந்த சந்திப்பில் மேலும் பேசப்பட்ட விடயங்களாக. இலங்கையில் தமிழ் சிங்கள இனங்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள இனமுரண்பாடுகளை தீர்ப்பதற்கு காலத்திற்குக் காலம் வந்த அரசாங்கங்கள் பல தீர்வுத் திட்டங்களையும், உடன்படிக்கைகளையும் கைச்சாத்திட்டனர்.
ஆனால் அத்தனையிலும் தமிழர்கள் ஏமாற்றப்பட்டார்கள், அல்லது சர்வதேசத்திற்கு நாம் பயங்கரவாதிகளாக காட்டப்பட்டோம், இந்த நிலையில் இந்த நாட்டில் இனமுரண்பாடுகளை தீர்ப்பதற்கும் நிரந்தரமான இனப்பிரச்சினை தீர்வு ஒன்று எட்டப்படுவதற்கும் மூன்றாம் தரப்பின் மத்தியஸ்தம் இன்றியமையாதது.இந்த மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்தை அமெரிக்கா எடுத்துக் கொள்வதை தமிழர்கள் ஆதரிக்கின்றார்கள்,
இந்தச் சந்திப்பில் சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை தொடர்பாக அமெரிக்க இராஜதந்திரிகள் குழு வினவியது.இதற்குப் பதிலளித்த பாராளுமன்ற உறுப்பினர்கள், ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் கூட்டமைப்பு தெளிவானதும், உன்மையானதுமான அறிக்கையினை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையே எமது தீர்மானம் என்றனர்.
மேலும் போர்க்குற்றச்சாட்டுக்கள் வலுப்பெறும்போது இனப்பிரச்சினை தீர்வு விடயத்தை கூட்டமைப்பும் தமிழர்களும் கைவிடுவார்களா என இராஜதந்திரிகள் குழு வினவியது.இதற்கு பதிலளித்த பாராளுமன்ற உறுப்பினர்கள், போர்க்குற்றச்சாட்டுக்களை இனப்பிரச்சினைக்கான வழியாக பயன்படுத்திக் கொள்வதற்கே கூட்டமைப்பு முயற்சிக்கின்றது.
குறிப்பாக போர்க்குற்றச்சாட்டுக்கள் என்பதற்கு மேலாக காலத்திற்குக் காலம் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு நடவடிக்கைகள் குறித்து ஒரு தீர்வு எட்டப்பட்டு அதனடிப்படையில் நாம் சுயமாக எம்மை ஆளும் உரிமை பெற்று வாழும் நிலை உருவாக்கப்படவேண்டும், அதை மூன்றாம் தரப்பினுடாகவே பெற்றுக் கொள்ள முடியும் அந்த மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்தை அமெரிக்கா எடுத்துக் கொள்ளவேண்டும், எனவும் தெரிவித்தனர்.மேலும் யுத்தத்தின் பின்னர் வடகிழக்கில் தமிழ் மக்கள் மீது இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட அடாவடிகள் குறித்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் நாவாந்துறை சம்பவம் மற்றும் சேந்தாங்குளம், அளவெட்டி தாக்குதல் போன்றவற்றை எடுத்துக் காட்டினர்.
இதற்குப் பதிலளித்த இராஜதந்திரிகள் இராணுவமற்ற அமைதியான தீர்வொன்றை அரசாங்கத்திடம் வலியுறுத்துவோம் என்றனர்.
இல்லாத அதிகாரங்களுக்காக ஏங்குவதில் அர்த்தமில்லை: சசிந்திர ராஜபக்ச.
நாட்டில் இல்லாத அதிகாரங்களுக்காக ஏங்குவதில் அர்த்தமில்லை என ஊவா மாகாணசபையின் முதலமைச்சர் சசிந்திர ராஜபக்ச தெரிவித்துள்ளார்.தற்போது வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு நியாயமானளவு சேவைகளை மக்களுக்கு ஆற்ற முடியும் என்பதே எனது நிலைப்பாடு. காணி அதிகாரம் கிடைத்தால் நல்லது, பொலிஸ் அதிகாரம் கிடைத்தால் நல்லது என ஏங்குவதில் அர்த்தமில்லை.
கிடைக்கப் பெற்றுள்ள அதிகாரத்தை உரிய முறையில் பயன்படுத்தினால் மாகாணங்களை சிறந்த முறையில் அபிவிருத்தி செய்ய முடியும் என சசிந்திர ராஜபக்ச தெரிவித்துள்ளார்.தற்போது, 13ஆம் திருத்தச் சட்ட மூலம் தொடர்பிலும் அதன் அதிகாரங்கள் தொடர்பிலும் பலரும் பல்வேறு கருத்துக்களை வெளியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க அதிபர் ஒபாமாவின் உயர்மட்ட அதிகாரி இலங்கை வரவுள்ளார்.
போர்க்குற்ற விவகாரங்கள் தொடர்பான அமெரிக்க அதிபர் ஒபாமாவின் தூதுவராக பணியாற்றும் ஸ்டீபன் ராப் என்ற உயர்மட்ட அமெரிக்க அதிகாரி எதிர்வரும் வாரங்களில் இலங்கைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கம், எதிர்க்கட்சி மற்றும் சிவில் சமூகப் பி்ரதிநிதிகளுடன் உயர்மட்டக் கலந்துரையாடல்களை நடத்துவதற்காகவே அமெரிக்காவின் உயர் மட்டத் தூதுவர் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
இவர், 2007இல் சியராலியோனில் நிறுவப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் முன்னாள் லைபீரிய அதிபர் சாள்ஸ் ரெய்லர் உள்ளிட்டோரால் நிகழ்த்தப்பட்ட கொடூரங்களுக்கு எதிரான வழக்கில் சட்டவாளராகப் பணியாற்றியவராவார். அத்துடன் ருவான்டா இனப்படுகொலைகள் குறித்த போர்க்குற்ற விசாரணைகளிலும் இவர் பங்கேற்றுள்ளார்.இவரது பயணம், ஜெனிவாவில் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை பற்றிக் கலந்துரையாடுவதற்கு அனைத்துலக சமூகம் கொடுக்கவுள்ள அழுத்தங்களுக்கான முன்னோடியாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆணைக்குழு அறிக்கை தொடர்பாக ஜெனிவா கூட்டத்தொடரில் கலந்துரையாடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வரும் இலங்கை அரசு, அடுத்த அமர்வின் போது தமக்கு எதிரான தீர்மானங்கள் ஏதும் நிறைவேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால் அதனை முறியடிப்பதற்கான பரப்புரைகளில் ஈடுபட்டு வருகிறது.ஸ்டீபன் ராப்பின் வருகையை எதிர்கொள்வதற்குத் தேவையான எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும், இவர் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் பேசவே இங்கு வருவதாகவும் இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மாகாண சபைகளுக்கு அதிகாரப்பரவலாக்கம்! முதலமைச்சர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு!
இலங்கையில் மாகாணங்களுக்கு 13 வது அரசியலமைப்பின் அதிகாரங்கள் பகிரப்படுவது தொடர்பில், மாகாணங்களின் முதலமைச்சர்கள் தமது கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளனர்.அண்மையில், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா கொழும்பில் வைத்து அதிகாரப்பகிர்வு தொடர்பில் ஜனாதிபதியிடம் தெரிவித்ததையடுத்து, 13 வது அரசியலமைப்பு அதிகாரப்பகிர்வு குறித்து, மாகாணங்களின் முதலமைச்சர்கள் தமது கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளனர்.
தென்மாகாண முதலமைச்சர் சான் விஜேலால் சில்வா தமது கருத்தில், அதிகாரங்கள் ஒரு சமூகத்துக்கு பகிரப்படக்கூடாது. அனைத்து இனங்களினதும் அபிலாஸைகளைகருத்திக்கொண்டு அந்த அதிகாரங்கள் பகிரப்படவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் இன்றியே மாகாண சபைகள் சிறப்பாக தமது பணிகளை மேற்கொள்ளமுடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.வடமத்திய மாகாண முதலமைச்சர் பேர்டி பிரேம்லால் திசாநாயக்க, இதே கருத்தை ஒத்த கருத்தையே வெளிப்படுத்தியுள்ளார். சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத் தமது கருத்தில் 13 வது அரசியலமைப்பு உடன்படிக்கையை உன்னிப்பாக ஆராய்ந்த பின்னரே அது குறித்து கருத்துக்கூறமுடியும் என்று தெரிவித்துள்ளார்.
இலங்கையின் ஜனாதிபதிக்கும் இந்திய வெளியுறவு அமைச்சருக்கும் இடையில் பேசப்பட்ட விடயங்கள் குறித்து தாம் எதனையும் அறிந்திருக்கவில்லை என்று மஹிபால ஹேரத்குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை, காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் பகிரப்படும் விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டையே தாம் கொண்டுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
கச்சத்தீவு உடன்படிக்கை மீண்டும் திறக்கப்படவேண்டும் -இந்திய கம்யூனிஸக்கட்சி.
1974 ஆம் ஆண்டின் கச்சத்தீவு உடன்படிக்கையை மீண்டும் திறந்து தமிழக மீனவர்கள் நடுக்கடலில் தாக்கப்படும் சம்பவங்களுக்கு இறுதிமுடிவை காணவேண்டும் என்று இந்திய
கம்யூனிஸக்கட்சி கோரியுள்ளது.
நேற்று முன்தினம் தமிழக மீனவர்களின் சுமார் 600 படகுகள் மீன்பிடியில் ஈடுபட்டிருந்தபோது இலங்கை கடற்படையினரால் தாக்குதலுக்கு உள்ளானதாக குற்றம்சுமத்தப்பட்டிருந்ததுஇது குறித்து கருத்து வெளியிட்டுள்ள கம்யூனிஸக்கட்சியின் தலைவர் டி ராஜா,  இந்திய வெளியுறவு அமைச்சர் இலங்கைக்கு சென்று திரும்பியுள்ள நிலையில் இந்திய மீனவர்கள்
தாக்கப்படுவது கண்டனத்துக்குரியது என்று குறிப்பிட்டுள்ளார்எனினும் இந்திய அரசாங்கம் இதற்கு உரிய வகையி;ல் நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்றும் ராஜா குற்றம் சுமத்தியுள்ளார்இதேவேளை இலங்கையின் கடற்படையினர் தமது 200 படகுகளை சேதம் செய்ததாகவும் 9 மீனவர்களை காணவில்லை என்றும் ராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்
பாதாள உலக குழுக்களை இல்லாதொழிக்க விசேட நடவடிக்கை.
பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்சவின் உத்தரவின் அடிப்படையில் நாடு முழுவதிலும் பதுங்கியிருக்கும் பாதாள உலகக் குழு உறுப்பினர்களை கைது செய்ய விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்பைப் பேணும் நபர்களுக்கு எதிராக தராதரம் பார்க்காது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் நாட்டை விட்டுத் தப்பிச் செல்வதனை தடுப்பதற்கு விசேட நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.குறிப்பாக கடல் வழியாக செல்லக் கூடிய வாய்ப்புக்களை முடக்க விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
விசேட அதிரடிப்படை, பொலிஸ், முப்படையினர், புலனாய்வுப் பிரிவினர் உள்ளிட்ட நாட்டின் சகல பாதுகாப்புத் தரப்பினரினதும் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்பட உள்ளது.அரசியல்வாதிகளோ அல்லது ஏனைய தரப்பினரோ பாதாள உலகக் குழுக்களுக்கு ஆதரவளித்தால், அவர்களுக்கும் தண்டனை விதிக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
ஜனாதிபதி மகிந்த அளித்த வாக்குறுதி இதுரை அமுல்படுத்தப்படவில்லை!- திஸ்ஸ அத்தநாயக்க.
இனப்பிரச்சினைக்கான அரசாங்கத்தின் தீர்வுத்திட்டம் வெளிப்படுத்தப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கோரியுள்ளார்.
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் முழுமையாக அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி அளித்த வாக்குறுதி இதுவரையில் அமுல்படுத்தப்படவில்லை. 13ம் திருத்தச் சட்டத்தைத் தாண்டிய தீர்வுத் திட்டம் முன்வைக்கப்படும் என்ற அரசாங்கத்தின் அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது என திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்
வடக்குப் பிரச்சினைக்கு தீர்வு வழங்குவது தொடர்பில் அரசாங்கம் காலம் தாழ்த்துவதனை பிரதான நோக்கமாகக் கொண்டு செயற்பட்டு வருகின்றது. இந்நிலையில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டி வெளிப்படுத்தப்பட வேண்டும் என திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
வடக்கு பிரச்சினைக்கு நம்பகரமான தீர்வுத் திட்டமொன்று வழங்கப்பட வேண்டும் என்பதே ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடாகும். எனினும், இந்தத் தீர்வுத்திட்டம் நாட்டின் அரசியல் யாப்பிற்கு அமைவானதாக இருக்க வேண்டும். அனைத்து இன மக்களினால் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையிலும் அமைய வேண்டும்.அரசாங்கம் சர்வதேசத்தில் ஒரு நிலைப்பாட்டையும் உள்நாட்டில் மற்றோர் நிலைப்பாட்டையும் வெளியிட்டு வருகின்றமை ஆபத்தானது.
மெமோகாட் விவகாரம்: தொழிலதிபர் மன்சூர் இஜாஸ் நேரில் ஆஜராக உத்தரவு.
பாகிஸ்தானில் இராணுவப் புரட்சி ஏற்பட்டால் அமெரிக்கா உதவி புரிய வேண்டும் என அமெரிக்கவெளிவிவகாரத்துறைக்கு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.பாகிஸ்தானில் அரசைக் கவிழ்க்க இராணுவம் சதித் திட்டம் தீட்டியதாக சந்தேகப்பட்ட ஜனாதிபதி ஸர்தாரி கடந்தாண்டு மே மாதம் அமெரிக்காவுக்கான அப்போதைய பாகிஸ்தான் தூதர் உசேன் ஹக்கானி மூலம் அமெரிக்காவின் அப்போதைய இராணுவ தளபதி மைக் முல்லனுக்கு ஒரு கடிதம் கொடுத்தார்.அக்கடிதத்தில் பாகிஸ்தான் இராணுவத் தளபதி கயானியை கண்டிக்கும் படி ஜனாதிபதி ஸர்தாரி கூறியிருந்தார். இத்தகவலை அமெரிக்காவில் வசிக்கும் பாகிஸ்தான் தொழிலதிபர் மன்சூர் இஜாஸ் வெளியிட்டார்.
இதனால் ஏற்பட்ட பிரச்னையின் காரணமாக உசேன் ஹக்கானி தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு நாடு திரும்பினார். இதுகுறித்து பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது.இந்த விவகாரத்தில் மன்சூர் இஜாஸ் என்பவர் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இஜாசின் என்ற சட்டத்தரணி கூறுகையில், இஜாஸ் தனது பாதுகாப்பு குறித்து அச்சம் தெரிவித்துள்ளார். இதனால் லண்டன் அல்லது ஜூரிச் நகரில் நீதிபதி குழு முன் தனது கருத்தை தெரவிக்க இஜாஸ் தயாராக உள்ளார் என தெரிவித்தார்.
விபத்தில் பலியானோரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டது.
இத்தாலியின் தலைநகர் ரோம் அருகே உள்ள தீவு ஒன்றில் பாறை மீது மோதி கப்பல் கவிழ்ந்த விபத்தில் பலியானோரில் சிலரின் உடல்கள் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளன.
ரோம் அருகில் உள்ள கிக்லியோ போர்டோ தீவு அருகில் கடந்த 14ம் திகதி கோஸ்டாகான் கார்டியா என்ற கப்பல் பாறை மீது மோதியதால் கவிழ்ந்தது. இச்சம்பவத்தில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர், 20 பேர் காணாமல் போயுள்ளனர்.இந்நிலையில் இறந்தவர்களில் எட்டு பேரின் உடல்கள் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளன. அவர்களில் நான்கு பேர் பிரான்ஸ் நாட்டவர், இத்தாலியர் ஒருவர், ஹங்கேரிய நாட்டவர் ஒருவர், ஸ்பெயின் நாட்டவர் ஒருவர் மற்றும் ஜேர்மனியைச் சேர்ந்தவர் ஒருவர்.
இதற்கிடையில் கப்பலின் இடிபாடுகளுக்கிடையே இரு நாட்களுக்கு முன் ஒரு இளம் பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அவர் ஹங்கேரியைச் சேர்ந்தவராக இருக்கலாம் என கருதப்படுகிறது.அதேநேரம் கப்பலில் பயணித்த பயணிகளின் பட்டியலில் அவர் பெயர் இல்லை. இதனால் அக்கப்பலில் பயணச் சீட்டு பெறாமல் சட்டவிரோதமாக சிலர் பயணம் செய்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
15 இராணுவ வீரர்களை கொடூரமான முறையில் சுட்டுக் கொன்ற தலிபான்கள்.
பாகிஸ்தானைச் சேர்ந்த 15 இராணுவ வீரர்களை தலிபான்கள் சுட்டுக் கொல்லும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.பாகிஸ்தானின் வடமேற்கு மற்றும் வஜிரிஸ்தான் பகுதியில் உள்ள சோதனைச்சாவடியில் கடந்த மாதம் சில இராணுவ வீரர்கள் காணாமல் போயினர். அவர்கள் கடத்தப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் கருதினர்.
இந்நிலையில் கொடூர வீடியோ காட்சி ஒன்று ஒரு முன்னணி ஆங்கில செய்தி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டிருந்தது. அதில் பாகிஸ்தானின் எல்லைப்பகுதி இராணுவ வீரர்கள் 15 பேரின் பின் கைகள் கட்டப்பட்ட நிலையில் வரிசையாக அமரவைக்கப்பட்டனர்.பின்னர் வரிசையாக நிற்கவைக்கப்பட்டு பின்னால் முகமூடி அணிந்த தலிபான்கள், ஒவ்வொருவரையும் துப்பாக்கியால் சுட்டுத்தள்ளுகின்றனர். இந்த காட்சி பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள மலைப்பகுதி உச்சியில் எடுக்கப்பட்டிருந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எ‌ல்லையின் கைபர் மாவட்டத்தில் பதுங்கியுள்ள தகரிர் இ தலிபான்கள் அமைப்பினர் தான் இந்த கொடூர செயலை அரங்‌கேற்றிருப்பதாகவும், சம்பவத்திற்கு பின்னர் தலிபான்களில் ஒருவர் பேசுகையில், எங்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களை கைது செய்து சிறையில் அடைத்தா‌லோ, சுட்டுக்கொன்றாலோ, இதே நிலைதான் மற்ற பாகிஸ்தான் வீரர்களும் ஏற்படும் என பேசும் காட்சியும் இடம் பெற்றிருந்தது.
சீனாவில் டிராகன் புத்தாண்டு கொண்டாட்டங்கள்.
சீனாவில் இன்று டிராகன் புத்தாண்டு பிறப்பதையொட்டி நேற்று முதல் 15 நாட்கள் கொண்டாட்டம் தொடங்கியது. இதையடுத்து நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.சீனாவில் சூரிய சந்திர நாட்காட்டி கி.மு.500ம் ஆண்டில் சீரமைக்கப்பட்டது. இளவேனிற்பருவத்தில் இந்த நாள் காட்டியின்படி புத்தாண்டு தொடங்கும். அதனால் இது வசந்த விழா எனவும் அழைக்கப்படும்.
சீன வானியல்படி மொத்தம் 12 ராசிகளுக்கும் ஒவ்வொரு விலங்குகள் அடையாளமாகக் குறிக்கப்படும். மேலும் அந்த விலங்கின் பெயரால் அந்த ஆண்டும் குறிக்கப்படும்.அதன்படி இன்று டிராகன் ஆண்டு பிறக்கிறது. டிராகன் என்பது சீன தொன்மத்தில் வரும் ஒரு கற்பனை விலங்கு. டிராகன் அரசக் குடும்பங்களின் அடையாளமாக சீனாவில் அறியப்படுகிறது.
அடிக்கடி வெள்ளம் மற்றும் பஞ்சத்தால் பாதிக்கப்படும் பகுதிகளில் நீரின் தெய்வமாகவும் கருதப்படுகிறது. தற்போது சீனாவைக் குறிக்க இந்த டிராகன் தான் பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.சீனாவில் இன்று டிராகன் புத்தாண்டு பிறப்பதை ஒட்டி, இன்று முதல் 15 நாட்கள் வசந்த விழா நடக்கும். இதில் கலந்து கொள்வதற்காக இடம் பெயர்ந்து வாழும் 134 கோடி பேர் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்கின்றனர்.
இதுதான் ஆண்டுதோறும் நடக்கும் உலகின் மிகப் பெரிய இடப்பெயர்வாகக் கருதப்படுகிறது.புத்தாண்டை ஒட்டி அசம்பாவிதங்கள் எதுவும் நடக்காமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.இந்த புத்தாண்டு சீனாவில் மட்டுமின்றி சிங்கப்பூர், மலேசியா, ஹாங்காங், மக்காவு, தென் கொரியா, தைவான், வியட்நாம் ஆகிய நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. சீனா உட்பட இந்த நாடுகளில் புத்தாண்டிற்காக ஒன்று முதல் நான்கு நாட்கள் வரை பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மக்களின் ஆதரவுடன் நாடு திரும்புவேன்: முஷாரப்.
மக்களின் ஆதரவுடன் நிச்சயம் நாடு திரும்புவேன் என பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப் தெரிவித்துள்ளார்.பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனசிர் புட்டோ கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முஷாரப் லண்டனில் இருந்து இம்மாதம் 27ம் திகதி முதல் 30ம் திகதிக்குள் நாடு திரும்பப் போவதாக அறிவித்திருந்தார்.அவ்வாறு அவர் பாகிஸ்தான் திரும்பினால் குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்படுவார் என பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதையடுத்து நாடு திரும்பும் தனது திட்டத்தை தற்காலிகமாக முஷாரப் ஒத்தி வைத்தார். இந்நிலையில் இஸ்லாமாபாத்தில் முன்னாள் இராணுவ வீரர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பேசிய முஷாரப் கூறியதாவது: இராணுவம் மற்றும் ஐ.எஸ்.ஐ.யின் ஆதரவுடன் நான் நாடு திரும்ப மாட்டேன்.மாறாக மக்களின் பேராதரவுடன் தான் நாடு திரும்புவேன், என் மீதான அனைத்து வழக்குகளும் அரசியல் மற்றும் தனிப்பட்ட நோக்கம் கொண்டவை, இராணுவத்தின் மேற்பார்வையில் சுயேச்சையான, சுதந்திரமான தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றார்.
அமெரிக்கா சென்று சிகிச்சை பெற ஏமன் ஜனாதிபதி முடிவு.
ஏமன் ஜனாதிபதி சலே உடல்நலக்குறைவால் அவதியுறுவதால் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற திட்டமிட்டுள்ளார்.ஏமன் ஜனாதிபதியாக கடந்த 33 ஆண்டுகளாக பதவி வகித்து வந்த அலி அப்துல்லா சலேவின் அரசுக்கு எதிராக கடந்தாண்டு ஜனவரி மாதம் முதல் மக்கள் புரட்சி ஏற்பட்டது.
இதில் அப்பாவி பொதுமக்களையும், போராட்டக்காரர்களையும் ஜனாதிபதியின் ஆதரவாளர்கள் கொன்று குவித்தனர். இப்போராட்டம் அரேபிய தீபகற்பத்தில் உள்நாட்டு போருக்கு வழிவகுக்கும் என மேற்குலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன. இருப்பினும் ஜனாதிபதி சலே பதவி விலக மறுத்தார்.இந்நிலையில் ஏமன் நாட்டின் ஆட்சி அதிகாரத்தை மாற்றியமைக்க சலே முடிவு செய்தார். இதனால் நாடாளுமன்ற தேர்தல் நடத்த சம்மதித்ததாக கூறப்படுகிறது.
அவருக்கு பொதுமன்னிப்பு வழங்க வகை செய்யும் பிரேணணை நேற்று முன்தினம் ஏமன் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது.இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி சலே அளித்த பேட்டியில், அமெரிக்கா சென்று சிகிச்சை பெற நாட்டை விட்டு வெளியேறுகிறேன், கடந்த கால தவறுகளை ஏமன் மக்கள் மன்னிக்க வேண்டும். விரைவில் நாடு திரும்புவேன் என்றார்.
பிறந்து மூன்று மாதங்களேயான யானை குட்டி இதய நோயால் மரணம்.
பிறந்து மூன்று மாதங்களேயான யானைக் குட்டியின் இதயத்தில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனை சரிசெய்ய அறுவை சிகிச்சை மேற்கொள்ள வைத்தியர்கள் முடிவு செய்தனர்.
ஜேர்மனியின் மூனிச் நகரில் ஹெல்லா ப்ரோன் உயிரியல் பூங்காவில் பிறந்து மூன்று மாதங்களேயான லோலா என்ற யானைக் குட்டி உள்ளது.இந்த குட்டி தண்ணீர் குடிக்கும் போது மூச்சுத் திணறலால் அவதிப்பட்டு வந்தது. எனவே அதனை வைத்தியர்கள் பரிசோதித்ததில் அதன் இதயத்தில் உள்ள ரத்த நாளங்களில் கட்டிகளால் அடைப்பு இருப்பதை அறிந்தனர்.
இதையடுத்து யானைக் குட்டிக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய மூனிச் பல்கலைக்கழக வைத்தியர்கள் முடிவு செய்தனர்.ஆனால் அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு முன்பாகவே அந்த குட்டி யானை பரிதாபமாக உயிரிழந்தது.
தனியாக படகு மூலம் உலகை சுற்றி வந்து 16 வயது பெண் சாதனை.
உலகம் முழுவதையும் படகு மூலமாக தனியாக சுற்றி வந்து 16 வயது பெண் சாதனை படைத்துள்ளார்.நெதர்லாந்தை சேர்ந்த 16 வயது பெண் லாரா டெக்கர். இவர் தனது 14வது வயதில் ஒரு படகு மூலம் தனியாக உலகை சுற்றி வர விரும்பினார். அதற்கு நெதர்லாந்து அரசு சம்மதிக்கவில்லை.
எனவே அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக நெதர்லாந்து குழந்தைகள் நல மையத்தின் உதவியுடன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.வழக்கின் தீர்ப்பு இவருக்கு சாதகமாக அமையவே கடந்த 2010ம் ஆண்டு ஆகஸ்டு 21-ந் திகதி கிப்ரால்டார் என்ற இடத்தில் இருந்து 38 அடி நீள குப்பி என்ற எந்திர படகின் மூலம் தனது பயணத்தை தொடங்கினார்.8 மாதங்கள் கழித்து கரீபியன் கடலில் உள்ள செயின்ட் மார்டினை வந்தடைந்த டெக்கரை அவரது பெற்றோர் உட்பட சுமார் 500 பேர் உற்சாகத்துடன் வரவேற்றனர். தற்போது உலகை தனியாக சுற்றி முடித்த இளம் வயது வீராங்கனை என்ற பட்டத்தையும் இவர் பெற்றுள்ளார்.
இஸ்ரேலை காப்பாற்ற ஒபாமாவை படுகொலை செய்யுங்கள்: பத்திரிக்கையாளர் அதிரடி.
இஸ்ரேல் நாட்டு மக்களை காப்பாற்ற அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை படுகொலை செய்வதை தவிர வேறு வழியில்லை என்று அமெரிக்க பத்திரிக்கை ஒன்றில் கட்டுரை வெளியானது.அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலம் அட்லான்டா நகரில் வசிக்கும் யூதர்களுக்காக வெளிவரும் பத்திரிகை “ஜூயிஷ் டைம்ஸ்”.
இதில் ஆண்ட்ரூ அட்லர் என்ற யூத எழுத்தாளர் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது, இஸ்ரேல் மக்களை காப்பாற்ற 3 வழிகள் இருக்கின்றன. ஹிஸ்புல்லா மற்றும் ஹமாஸ் இயக்கத்தை அழிக்க வேண்டும். ஈரானில் உள்ள அணுசக்தி மையங்களை தகர்க்க வேண்டும். அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை இஸ்ரேல் படுகொலை செய்ய வேண்டும் என்று அவர் எழுதியிருந்தார்.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது, இதற்கு பல தரப்பிலும் கண்டனம் எழுந்தது. இதையடுத்து கட்டுரை எழுதிய ஆண்ட்ரூ அட்லர் மன்னிப்பு கேட்டுள்ளார்.இதெல்லாம் ஒரு தீர்வா என்று வாசகர்களிடம் ஒருவித எரிச்சலை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான் எழுதினேன். வன்முறை மற்றும் ஒபாமா எதிர்ப்பை தூண்ட வேண்டும் என்பது நோக்கமல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.
பிலிபைன்ஸ் நாட்டில் 2 சரக்கு கப்பல்கள் திடீரென்று கடலில் மூழ்கியது.
பிலிப்பைன்ஸ் நாட்டு கடற்பகுதியில் சிமெண்டு மற்றும் இரும்பு தாது பொருட்களை ஏற்றிச் சென்ற 2 சரக்கு கப்பல்கள் திடீரென்று கடலில் மூழ்க தொடங்கின.இது குறித்து உடனடியாக பிலிப்பைன்ஸ் கடலோர பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதை தொடர்ந்து 3 கப்பல்கள் மற்றும் ஹெலிகாப்டர்களில் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கப்பல்களில் சிக்கியிருந்த 32 ஊழியர்கள் பத்திரமாக மீட்டனர்.மூழ்கிய வற்றில் இரும்பு தாது ஏற்றிய கப்பல் பனாமாவில் பதிவு செய்யப்பட்டதாகும். கப்பல்கள் மூழ்கியதற்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமெரிக்காவால் கனடாவிற்கு நஷ்டம்.
அமெரிக்க பொருளாதார சீர்கேட்டால் கனடாவிற்கு மில்லியன் கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று பாங்க் ஆப் கனடாவின் கவர்னர் திரு.மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், தற்போதைய அமெரிக்க பொருளாதாரம் மிகவும் பலவீனமான நிலையை அடைந்துள்ளது, மிக ஆபத்தான கட்டத்தை எதிர்நோக்கியுள்ளது.இந்நிலைமை சீரடைய இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம். அமெரிக்க பொருளாதர சீர்கேட்டால் கனடாவின் இறக்குமதி வருமானம் 30 பில்லியன் டொலர் அளவிற்கு நஷ்டமடைந்துள்ளது.
இதன் காரணமாக கனடாவில் உள்ள வீடுகளின் விலைகள் அதிகளவில் சரியாமல் இருக்க தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.இதுகுறித்து மத்திய அமைச்சர் ஜிம் பிளாகர்டி கூறுகையில், டொரண்டோ மற்றும் வான்கூவர் நகரங்களில் உள்ள வர்த்தகங்கள் சீராக இருக்க தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
லண்டனில் பிரமாண்டமா​ன சூரிய உதயம்.
லண்டனிலுள்ள Trafalgar சதுர்க்கத்தில் இன்று காலை 6.54 மணியளவில் ஏற்பட்ட மிகப்பிரமாண்டமான சூரிய உதயம் அங்கு கூடியிருந்தவர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.ஆனால் அது நிஜமான சூரியன் அல்ல என்று சிறிது நேரத்தின் பின்னரே அவர்கள் உணர்ந்து கொண்டனர்.
அதாவது அவ்விடத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் நோக்கிலேயே இந்த பிரமாண்டமான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.அதாவது 60,000 மின்குமிழ்களை பயன்படுத்தி சூரியனை போன்ற அமைப்பில் ஒரு போலி சூரியனை உருவாக்கியுள்ளனர்.இந்த போலி சூரியனானது ஒரு காற்பந்தைப்போல் 30,000 மடங்குகள் பெரிதாக அமைக்கப்பட்டதுடன் அதன் மொத்த பரப்பளவு 200 சதுர மீற்றர்களாகும். அத்துடன் இதன் நிறையானது சுமார் 2,500 கிலோ கிராம்கள் ஆகும்.
தந்தையின் கண் முன்னே 10 வயது சிறுமியை கொன்று விழுங்கிய முதலை.
இந்தோனேஷியாவில் 10 வயது சிறுமியை அவளது தந்தையின் கண் முன்னே முதலை கொன்று விழுங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஜுரைதா என்ற 10 வயது சிறுமி தனது தந்தை மற்றும் சகோதரருடன் இந்தோனேஷியாவின் கிழக்கு நுசாடெங்கரா மாகாணத்தில் உள்ள ஆற்றங்கரையின் அருகில் கடல் ஆமைகளை பிடித்துக் கொண்டிருந்தாள்.
அப்போது ஆற்றில் அவள் இறங்கிய போது முதலை ஒன்று அவளை தண்ணீருக்குள் இழுத்துச் சென்றது. அவரது அலறல் சத்தம் கேட்டு அவளது தந்தை அங்கு ஓடி வந்தார்.ஆனால் அதற்குள் அந்த முதலை சிறுமியைக் கடித்துக் கொன்று விழுங்கியது. தனது மகள் தன் கண் முன்பே கொல்லப்பட்டதைப் பார்த்த தந்தை அதிர்ச்சியில் உறைந்தார்.
சிறுமியின் உடலை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபடுத்தப்பட்டனர். ஆனால் சிறுமியின் ஆடையும், ரிப்பனும் தான் கிடைத்ததே தவிர உடல் கிடைக்கவில்லை. இந்த தகவலை ஜகர்த்தா போஸ்டின் அதிகாரி விக்டர் மாடோ வாடன் தெரிவித்தார்.கடந்த மாதம் இதே ஆற்றில் சிறுவன் ஒருவன் முதலையால் கொல்லப்பட்டான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹோஸ்னி முபாரக்கே எகிப்தின் ஜனாதிபதி: சட்டத்தரணி வாதம்.
எகிப்து நாட்டின் ஜனாதிபதியாக ஹோஸ்னி முபாரக் தான் நீடிக்கிறார் என அவரது சட்டத்தரணி கூறியுள்ளார்.கடந்தாண்டு எகிப்து ஜனாதிபதி ஹ‌ோஸ்னி முபாரக்கின் ஆட்சிக்கு எதிராக மக்கள் புரட்சி ஏற்பட்டது. 18 நாட்கள் நடந்த போராட்டத்திற்கு பின்னர் ஜனாதிபதி முபாரக் பதவி விலகினார்.போராட்டத்தின் போது ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதால், இவர் மீது ஊழல் மற்றும் போர் குற்ற வழக்குகள் தொடரப்பட்டது. இதற்கான வழக்கு விசாரணை கெ‌ய்ரோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இராணுவ தரப்பில் விசாரணை முடிவடைந்த பின் முபராக்கின் சட்டத்தரணி பரீத்-அல்தீப் வாதிடுகையில் கூறியதாவது, எகிப்து ஜனாதிபதியாக முபாரக் இன்னமும் பதவியில் உள்ளார். அவர் பதவி விலகுவதாக அறிவித்தாலும், முறையாக ராஜினாமா கடிதம் எதுவும் கொடுக்கவில்லை.
அதிகாரப்பூர்வமாக அவர் பதவிவிலகுவதாக எந்த ஆவணத்திலும் கையெழுத்திடவில்லை. அதற்கு பதிலாக முன்னாள் உளவுத்துறை தலைவரான ஒமர் சுலைமான் என்பவரை கடந்த ஆண்டோ துணை ஜனாதிபதியாக நியமித்து அவரிடம் தற்காலிக பொறுப்பினை ஒப்படைத்தார் என்றார்.இதைத்தொடர்ந்து வழக்கு விசாரணை வரும் பிப்ரவரி மாதம் 16ம் திகதி ஒத்தி வைக்கப்பட்டது.
இந்து கடவுள்கள் படம் போட்ட தரைவிரிப்புகள் வாபஸ்.
இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து சாமி படம் போட்ட யோகாசன தரைவிரிப்புகளை ஜேர்மன் நிறுவனம் வாபஸ் பெற்றுள்ளது.
ஜேர்மனியின் விக்கன்ஸ்பக் நகரை சேர்ந்த நிறுவனம் யோகிஸ்டர். இந்நிறுவனம் யோகாசனம் செய்யும் போது அணியும் பேன்ட், சட்டை, அமர்ந்து யோகா செய்வதற்கான தரைவிரிப்பு, தியானம் செய்வதற்கான டைமர் கடிகாரம், ஆயுர்வேத டீ, தியான சிடிக்கள் உள்பட பல்வேறு பொருட்களை ஓன்லைன் மூலமாக விற்று வருகிறது.உட்காரும் தரைவிரிப்பில் காட்டர் என்ற புதிய ரகத்தை யோகிஸ்டர் நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. இந்து கடவுள்களான விநாயகர், சிவன், லட்சுமி உட்பட சாமி படங்கள் அதில் வரையப்பட்டிருந்தன. அமெரிக்காவில் இது பரபரப்பாக விற்பனையானது.
இந்நிலையில் உட்கார்ந்து கால் வைத்து பயிற்சி செய்யும் தரைவிரிப்பில் சாமி படம் போட்டிருப்பதற்கு இந்துக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. சாமி படம் போட்ட விரிப்பை வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்து ஓன்லைன் விற்பனையில் இருந்து சாமி படம் போட்ட விரிப்பை யோகிஸ்டர் நிறுவனம் நீக்கிவிட்டது.புத்தகம், பேனா, பென்சில் மட்டுமின்றி சாதாரண பேப்பர் காலில் பட்டால்கூட இந்துக்கள் தொட்டுக் கும்பிடுவார்கள். மக்களின் மன உணர்வை புரிந்துகொண்டு தரைவிரிப்பை வாபஸ் பெற்ற யோகிஸ்டர் நிறுவனத்துக்கு பாராட்டுகள் என்று அமெரிக்காவாழ் இந்துக்கள் அமைப்பின் தலைவர் ராஜன் சேத் கூறியுள்ளார்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF