Wednesday, January 18, 2012

NEWS OF THE DAY.

அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பு?
இலங்கை அரசாங்கம் அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றின் இறக்குமதி வரியை நேற்று திடீரென அதிகரித்துள்ளது. ஒரு கிலோ பருப்புக்கு 8 சதவீதமும், ஒரு கிலோ சீனிக்கு 5 சதவீதமும், ஒரு கிலோ பூண்டுக்கு 15 சதவீதமும் இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பாம் எண்ணெய்க்கான இறக்குமதி வரி லீற்றர் ஒன்றுக்கு 10 சதவீதத்தினாலும், மீனுக்கான இறக்குமதி வரி 35 சத வீதத்தினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதி வரியை அரசாங்கம் திடீரென அதிகரித்துள்ளதால், உள்நாட்டில் இந்தப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பதுடன், வாழ்க்கைச்செலவும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேர்வின் சில்வா பிரச்சினை தொடர்பில் களனி வர்த்தகர்களிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு.
அமைச்சர் மேர்வின் சில்வாவிற்கும், களனி பிரதேசசபை உறுப்பினர்களுக்கும் இடையிலான மோதல் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு களனி பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர்களிடம் பொலிஸார் வாக்கு மூலங்களை பதிவு செய்யத் தீர்மானித்துள்ளனர்.கப்பம் கோரல், மோசடி, பாதாள உலகத் தொடர்பு, கடத்தல் உள்ளிட்ட பாரிய குற்றச் செயல்கள் தொடர்பில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்திக் கொண்டுள்ளனர்.
அமைச்சர் தரப்பும், பிரதே சபைத் தலைவரின் தரப்பும் பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்கக்கோனிடம் நேரடியாக முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.இதேவேளை, களனி சம்பவம் குறித்து அமைச்சர் பசில் ராஜபக்ச விசாரணை நடத்தவுள்ளார்.வெளிநாட்டு விஜயமொன்றை மேற்கொண்டு நாடு திரும்பியுள்ள அமைச்சர், சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்திய ஒழுக்காற்று குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
பிக்குகளுக்கு தனியான நீதிமன்றம்! அமைச்சரவை நிராகரிப்பு.
பௌத்த பிக்குகளுக்கு தனியான நீதிமன்றங்களை அமைக்க வேண்டியதில்லை என அமைச்சரவை தீர்மானித்துள்ளது.மதகுருமார் தொடர்புபட்ட வழக்குகளையும் சாதாரண நீதிமன்றங்களில் விசாரணை செய்ய வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
பௌத்த பிக்குகளுக்கு தனியான நீதிமன்றம் ஒன்றை அமைக்க வேண்டுமென பிரதமர் டி.எம். ஜயரட்ன யோசனை ஒன்றை முன்வைத்திருந்தார். எனினும் இந்த யோசனை அமைச்சரவை அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்பட்ட போது அதனை அமைச்சரவை நிராகரித்துள்ளது.
இலங்கைக்கு கடத்தவிருந்த ரூ.25 லட்சம் மதிப்புள்ள கடல் குதிரைகள் சென்னை விமானநிலையத்தில் பறிமுதல்.
சென்னை விமான நிலையத்தில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் கடத்த முயன்ற ரூ.25 லட்சம் மதிப்புள்ள கடல் குதிரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அத்துடன்  இதுதொடர்பாக 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதுபற்றி தெரியவருவதாவது:சென்னையில் இருந்து கொழும்பு செல்லும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் கடல் குதிரைகள் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு இரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து, சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று அதிகாலை 4 மணிக்கு புறப்பட தயாராக இருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் சுங்கத்துறையின் புலனாய்வுத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அதில் இராமநாதபுரத்தைச் சேர்ந்த சிக்கந்தர் சமீது (32), முகமது சிராஜுத்தீன் (30), முகமது ரபீக் (35) ஆகியோர் பெரிய அட்டைப்பெட்டி வைத்திருந்தனர்.
அதன் மீது சந்தேகம் வந்ததால் அதிகாரிகள் விசாரித்தனர். அட்டைப் பெட்டியில் கருவாடு உள்ளது. உறவினர்களுக்கு கொண்டு செல்கிறோம் என அவர்கள் கூறினர்.இதில் சந்தேகம்கொண்ட அதிகாரிகள் அந்த அட்டைப் பெட்டியை பிரித்து பார்த்தனர். அதில் பதப்படுத்தப்பட்ட 130 கிலோ கடல் குதிரைகள் இருந்தன. இதன் சர்வதேச மதிப்பு ரூ.25 லட்சம். இதையடுத்து, 3 பேரையும் கைது செய்து, கடல் குதிரைகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இராமேஸ்வரம் கடலில், கடல் குதிரைகள் காணப்படுகிறது. இது அழிந்து வரும் இனம் என்பதால் வெளிநாட்டுக்கு கொண்டு செல்ல மத்திய அரசு தடை விதித்துள்ளது.கொள்ளை லாபம் சம்பாதிப்பதற்காக இவற்றை கடத்துகிறார்கள். கடத்தலுக்கு துணையாக இருப்பவர்களை பற்றி விசாரிக்கிறோம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
பம்பலப்பிட்டியில் முச்சக்கர வண்டியில் ஹெரோயின் கடத்திய மூவர் கைது.
முச்சக்கர வண்டியில் ஹெரோயின் போதைப் பொருள் கடத்திச் சென்ற சந்தேகநபர்கள் மூன்று பேரை பம்பலபிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்.இன்று அதிகாலை பம்பலபிட்டி சென் பீற்றர்ஸ் சந்தியில் சந்தேகத்திற்கிடமான முச்சக்கர வண்டி ஒன்றை பொலிஸார் சோதனை செய்த போதே, முச்சக்கர வண்டியில் இருந்து 230 ஹெரோயின் பைக்கற்றுக்கள் அடங்கிய இரு பொதிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இதனையடுத்து, முச்சக்கர வண்டியுடன் சேர்த்து அதில் பயணித்த மூன்று சந்தேகநபர்களையும் கைது செய்து தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பம்பலபிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சந்தேகநபர்கள் தெஹிவளை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கை வரலாற்றில் மூன்று முறை வெளியிட்ட பரீட்சைப் பெறுபேறுகள்.
இலங்கை பரீட்சை திணைக்களமானது, உயர்தரப் பரீட்சையில் ரஷ்ய மொழிக்கான பெறுபேற்றை நேற்றுவெளியிட்டிருந்து. எனினும் அதில் பரீட்சார்த்தியின் தேசிய நிலை, மாவட்ட நிலை என்பன குறிப்படப்பட்டிருக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.பரீட்சை தி​ணைக்களத்தின் தரவுகளின் அடிப்படையில் ஏனைய பாடங்களுக்கு தோற்றிய மாணவர்களின் தரநிலை, இசட் புள்ளி என்பனவற்றில் மாற்றங்கள் மேற்கொள்ள வேண்டிய நிலை காணப்பட்டதால், ஏற்கனவே முழுமையாக வெளியிடப்பட்டிருந்த தரநிலையில் ரஷ்ய மொழிப்பரீட்சைக்கு தோற்றி 36 மாணவர்களினதும் தரநிலை வெளியிடப்படவில்லை.எனவே, இதன் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டபோதும் அதில் மாணவர்களின் தேசிய, மாவட்ட தரநிலைகள் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.
இத்தவறானது ரஷ்ய மொழி பரீட்சைக்கு தோற்றிய அனைத்து மாணவர்களினதும் தேசிய, மாவட்ட நிலைகளில் பாதிப்பை ஏற்படுத்துமென்பது குறிப்பிடத்தக்கது.இதேநேரம் ஒரு பரீட்சைக்கான பெறுபேறுகளை மூன்று தடவைகள் வெளியிட்டது இலங்கை வரலாற்றில் இதுவே முதன்முறையாகும்.
13 ஆம் அரசியலமைப்புக்கு அப்பால் சென்று தீர்வை வழங்கப்போவதாக மஹிந்த உறுதி- இந்திய வெளியுறவு அமைச்சர்.
இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இனப்பிரச்சினை தீர்வுக்காக 13 ஆவது அரசியலமைப்புக்கு அப்பால் சென்று முயற்சிகள் முன்னெடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்று செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே இந்திய வெளியுறவு அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.இலங்கையில் வெளியிடப்பட்டுள்ள நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் சில காத்திரமான பரிந்துரைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில், இலங்கை அரசாங்கம் அமுல் செய்யவேண்டியது அதன் பொறுப்பாகும் அவ்வாறு நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்தினால் இலங்கையில் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தலாம் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் கிருஸ்ணா குறிப்பிட்டுள்ளார்.இந்தியாவை பொறுத்தவரை காத்திரமான அதிகாரப் பகிர்வுடன் கூடிய 13 ஆம் திருத்த சட்டம் நடைமுறைப் படுத்தப்படவேண்டும் என்பதே பிரதான குறிக்கோளாகும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இலங்கை அரசாங்கமும் நடத்திவரும் பேச்சுவார்த்தை மற்றும் அரசாங்கத்தினால் பிரேரிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழு என்பன நாட்டின் இனப்பிரச்சினைக்கு தீர்வை ஏற்படுத்தும் என்று இந்தியா நம்பிக்கை கொண்டிருப்பதாக வெளியுறவு அமைச்சர் கிருஸ்ணா தெரிவித்துள்ளார்.தமது விஜயத்தின்போது இன்று 230 மில்லியன் டொலர்கள் ஒதுக்கீட்டிலான வீடமைப்பு திட்டம் மற்றும் தொலைத்தொடர்புகள், கல்வி, சுகாதாரம், விவசாயம் ஆகிய துறைகள் சார்ந்த புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டதாக இந்திய வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அரசுக்கு எதிராக அரபு நாடுகள் செயற்படாது!- கட்டார் மன்னரின் சிறிலங்கா பயணத்தின் எதிரொலி.
சிறிலங்காவுக்கான தனது பயணத்தை முடித்துக் கொண்டு, கட்டார் மன்னர் வியட்னாமுக்கு சென்றுள்ள நிலையில், சிறிலங்கா அரசுக்கு எதிராக அரபு நாடுகள் ஒருபோதும் செயற்படாது என சிறிலங்கா அரசுத் தலைவரின் ஆலோசகர் அஸ்வர் தெரிவித்துள்ளார்.கட்டார் மன்னர் சிறிலங்காவுக்கு சென்றிருந்த போது, சிறிலங்கா அரசுத்தலைவர் கட்டுநாயக்கா விமான நிலையம் சென்று, மன்னரை நேரடியாகவே பூரண மரியாதையுடன் வரவேற்றதன் ஊடாக, அரபு நாடுகள் சிறிலங்காவின் பண்பாட்டினை புரிந்து கொண்டிருக்கும் என மகிந்த ராஜபக்சவின் ஆலோசகர் அஸ்வர் மேலும் தெரிவித்துள்ளார்.
அரபு நாடுகள் சிறிலங்காவுக்கு எதிரான செயற்படவுள்ளதாக ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்திகள் போலிக்கதைகள் என தெரிவித்த அஸ்வா், ஜெனீவா மனித உரிமைக் கூட்டத்தொடரில் மட்டுமல்ல எந்தவொரு மாநாட்டிலும் அரபு நாடுகள் சிறிலங்காவுக்கு ஆதரவாகவே செயற்படும் என மேலும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, சிறிலங்காவுக்கு எதிரான மேற்குலக நாடுகளில் சதிவலைக்குள் அரபு நாடுகள் ஒருபோதும் துணைபோகாது எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.பெப்ரவரி 27ம் திகதி தொடங்கவுள்ள ஜெனீவா – ஐ.நா மனதி உரிமைக் கூட்டத் தொடரில், அரபு நாடுகள் சிறிலங்காவினைக் கைவிடும் என்ற அச்ச நிலையிலேயே, மேற்காபிரிக்க நாடுகளை நோக்கி விரைந்த சிறிலங்கா அரச தரப்பு, தற்போது கட்டார் மன்னரின் இலங்கை வருகையின் ஊடாக, அரபு நாடுகளின் நம்பிக்கையினை தக்கவைக்க முயற்சிப்பதாகவே இதனைக் கருதவேண்டியுள்ளது.
கோத்தபாயவும் பசிலும் மஹிந்தவுக்கு அரசியல் பாதுகாப்பு வழங்குகின்றனர்!- ரொபோ்ட் ஓ பிளாக்.
இலங்கை அரசாங்கத்தில் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவும் அமைச்சர் பசில் ராஜபக்சவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு அரசியல் ரீதியாக பாதுகாப்பை வழங்கி வருகின்றனர் என்று முன்னாள் தூதர் ரொபோ்ட் ஓ பிளாக் அமெரிக்கா இராஜாங்க திணைக்களத்துக்கு தெரிவித்துள்ளதாக விக்கிலீக்ஸ் குறிப்பிட்டுள்ளது. தீர்மானங்கள் மேற்கொள்ளும் போது அவற்றை கோத்தபாயவுக்கும் பசிலுக்கும் பாரப்படுத்தப்படுகின்றன. அந்த தீர்மானங்களில் ஜனாதிபதியின் ஈடுபாடு குறைந்தே காணப்படுகிறது.இந்தநிலையில் குறித்த தீர்மானங்களால் உள்ளூரிலும் வெளிநாடுகளிலும் இலங்கையின் மீது விமர்சனங்கள் மேற்கொள்ளப்படுகின்றன என்று முன்னாள் தூதர் ரொபோ்ட் ஓ
பிளாக் அமெரிக்கா இராஜாங்க திணைக்களத்துக்கு தெரிவித்துள்ளார்.
தேவையற்ற தீர்மானங்கள் மேற்கொண்டு அதன் தாக்கங்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஏற்படாமல் கோத்தபாயவும் பசிலும் பாதுகாப்பதாக ரொபோ்ட் ஓ பிளாக் குறிப்பிட்டுள்ளார்.இனப்பிரச்சினைக்கான அதிகாரப்பகிர்வுத் தீர்வை முன்வைப்பதற்காக அமைக்கப்பட்ட அனைத்து கட்சி குழுவின் அறிக்கையை தாமதப்படுத்தும் தீர்மானம் மற்றும் அதேபோல அந்தக் குழுவுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யோசனையை சமர்ப்பிப்பதை தாமதப்படுத்தும் தீர்மானம் இரண்டையும் கோத்தபாயவும் பசிலுமே மேற்கொண்டதை பிளாக் உதாரணமாக சுட்டிக்காட்டியுள்ளார்.
தலிபான் தலைவர் ஹக்கீமுல்லா மெசூத் உயிரோடு இருப்பது உண்மையா?
தாரிக் இ தலிபான் என்ற பாகிஸ்தானி தலிபான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹக்கீமுல்லா மெசூத், அமெரிக்க ஆளில்லா விமானங்களின் தாக்குதலில் பலியானார் என தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் அதை அந்த அமைப்பு மறுத்துள்ளது. பாகிஸ்தானின் பாதுகாப்புக்கு மிகப் பெரும் சவாலாக விளங்கும் பாகிஸ்தானி தலிபான் அமைப்பின் தலைவர் ஹக்கீமுல்லா மெசூத், கடந்த 12ம் திகதி, வடக்கு வஜீரிஸ்தானின் டட்டாகெல் என்ற பகுதியில் நடந்த அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதலில் பலியானார் என அமெரிக்க அதிகாரிகள் சிலர் நேற்று முன்தினம் தெரிவித்திருந்தனர்.
ஆப்கன் எல்லையை ஒட்டிய அப்பகுதிக்கு அவர் வாகனம் ஒன்றில் சென்று கொண்டிருந்த போது கொல்லப்பட்டதாக, தலிபான் அமைப்பினர் தந்தியில்லா வானொலி மூலம் பேசிக் கொண்டதை, இடைமறித்து ஒட்டுக் கேட்டதாக அமெரிக்க அதிகாரிகள் கூறினர்.ஆனால், இதுகுறித்து பாகிஸ்தான் தரப்பில் அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில், பாகிஸ்தானி தலிபான் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் எசனுல்லா எசன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் மெசூத் பலியானதாக வெளியான செய்தி தவறானது.
அவர் எங்கிருக்கிறார் என்பதைக் கண்டறிய கிளப்பி விடப்பட்ட புரளிகள் இவை எனத் தெரிவித்தார். டட்டாகெல் பகுதியில் நடந்த ஆளில்லா விமானத் தாக்குதலில் ஒன்பது பேர் பலியானதாகவும் அவர்களில் ஹக்கீமுல்லா இல்லை எனவும் தலிபான் அமைப்பினைச் சேர்ந்தவர்கள் ஒரு பத்திரிகைக்கு தெரிவித்துள்ளனர்.கடந்த 2009ல் அந்த அமைப்பின் தலைவராக இருந்த பைதுல்லா மெசூத், ஆளில்லா விமானத் தாக்குதலில் பலியான பின், ஹக்கீமுல்லா தலைவரானார். 2010, ஜனவரியில், தெற்கு வஜீரிஸ்தானில் அவர் ஆளில்லா விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக வெளியான செய்தியை அடுத்து, தனது குரல் பதிவுச் செய்திகளை வெளியிட்டுத் தான் உயிரோடு இருப்பதை வெளியுலகுக்கு நிரூபித்தார் ஹக்கீமுல்லா.
உழைப்பாளருக்கு தீங்கு விளைவிப்பதாக மிலிபேண்டுக்கு கண்டனம்.
பிரிட்டனில் உழைப்பாளர் கட்சியின் தலைவராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் இருக்கும் எட் மிலிபேண்டு உழைப்பாளரை அழிவுப்பாதையில் இட்டுச் செல்கிறார் என்றும் சில தேர்தல் தோல்விக்கும் அவரே காரணம் என்றும் அந்நாட்டின் மிகப்பெரிய தொழிற்சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
உழைப்பாளர் கட்சி, அரசாங்கம் பொதுத் துறைப் பணியாளருக்கு சம்பள உயர்வை நிறுத்தப் போவதை ஆதரித்து அறிக்கை வெளியிட்டது.இதை எதிர்த்து தொழிற்சங்கத்தின் பொதுச்செயலாளரான லென் மெக் கிலஸ்கி கருத்துத் தெரிவித்தார். இதனால் மிலிபேண்டின் தலைமைப் பண்பு குறைவாக மதிக்கப்படும் அவர் பிளேரிடம் விலை போய்விட்டார் என்ற சந்தேகமும் தோன்றக்கூடும் என்று கார்டியன் பத்திரிகையில் எழுதியுள்ளார்.
கடந்த 2010ம் ஆண்டில் பிரிட்டன் அரசு 21000 பவுண்டுகளுக்கு மேல் சம்பளம் பெறும் பொதுப்பணியாளர்களுக்கு இனி இரண்டு வருடங்களுக்கு சம்பள கிடையாது என்று அறிவித்தது.கடந்த நவம்பர் மாதத்தில் பிரிட்டனின் சனாதிபதி ஜார்ச் ஆஸ்போர்ன் எதிர்வரும் 2015ம் ஆண்டு வரை இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை 1 சதவீதம் வரை சம்பளம் உயர்த்தப்படும் என்றார்.
பிரிட்டனின் நிதி நெருக்கடியை சமாளிக்க எதிர்க்கட்சியும் சனாதிபதியின் சிக்கன நடவடிக்கைகளுக்கு துணை நிற்கும் என்று நிழலதிபராகக் கருதப்படும் எட் பால்ஸ் தெரிவித்தார்.தொழிற்சங்கத் தலைவரான மெக் கிலஸ்கி தொழிற் சங்கங்களை கலந்து ஆலோசிக்காமல் தன் முடிவை வெளியிட்டது தவறு என்று உழைப்பாளர் கட்சித் தலைவரைத் தாக்கிப் பேசினார்.
இதற்கு மிலிபேண்டு, வேலையைப் பாதுகாப்பதா, சம்பளச் சிக்கனத்தைக் கடைபிடிப்பதா என்று பிரச்சினை வரும் போது தொழிலாளர்களின் வேலையைப் பாதுகாப்பதே தனக்கு முக்கியமாகப்பட்டது. எனவே அரசின் சம்பளச் சிக்கன கொள்கையை ஆதரித்ததாக விளக்கினார்.ஆனால் கடந்த வார இறுதியில் தொழிற்சங்கங்கள் இணைந்து உழைப்பாளர் கட்சித்தலைவர், சில பிரச்சினைகளில் பழமைவாதக் கட்சியைச் சேரந்த தோரிக்களை விட தீவிரமாக செயற்படுகிறார் என்று கடுமையாக அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்ததனால் எட் மிலிபேண்டின் தலைமைப்பதவியே ஆட்டம் கண்டுள்ளது.
தீ விபத்தால் கொரியா கப்பல் இரண்டாக உடைந்தது: 5வர் பலி.
தென் கொரியாவின் வடபகுதியில், சரக்குக் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் கப்பல் இரண்டாக உடைந்தது. இதில் கப்பலில் இருந்த ஐந்து பேர் பலியாயினர்.தென் கொரியாவின் வடபகுதியில், இன்ஷியோன் துறைமுகத்தில் இருந்து 32 கி.மீ., தொலைவில் உள்ள ஜவோல் தீவுக்கருகில் நேற்று தென் கொரியாவைச் சேர்ந்த ஒரு எண்ணெய் சரக்குக் கப்பலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இவ்விபத்தில் கப்பலில் இருந்த ஒரு மியான்மர் நாட்டவர், இரு தென் கொரியாவினர் உள்ளிட்ட ஐந்து பேர் தீயில் கருகி பலியாயினர். எண்ணெய் வைக்கப்பட்ட பகுதியில் ஏற்பட்ட வாயுக் கசிவினால் இந்த தீ விபத்து நிகழ்ந்துள்ளது.தீ விபத்தை அடுத்து ஏற்பட்ட அதிர்வில், கப்பல் இரண்டாக உடைந்தது. இதுகுறித்து தென் கொரிய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முஷாரப்பின் தலைக்கு 10 கோடியே 10 லட்ச ரூபாய் பரிச: ஷாஜெய்ன் புக்தி.
இம்மாத இறுதியில், பாகிஸ்தானுக்கு அதன் முன்னாள் அதிபர், பர்வேஸ் முஷாரப் வரப்போவதாக அறிவித்துள்ள நிலையில், அவரது தலைக்கு, 10 கோடியே 10 லட்ச ரூபாய் பரிசு அறிவித்துள்ளார், பலுசிஸ்தான் தலைவர் அக்பர் புக்தி.பாகிஸ்தானில் சுயாட்சி அல்லது பிரிவினை கோரி நீண்ட காலமாக, பலுசிஸ்தான் போராட்டம் நடத்தி வருகிறது. அம்மாகாண முதல்வரும், பாகிஸ்தானின் முன்னாள் உள்துறை இணை அமைச்சருமான, நவாப் அக்பர் கான் புக்தி, இந்தப் போராட்டத்திற்கு தலைமை வகித்தார்.
கடந்த 2006ல், அப்போதைய அதிபர் முஷாரப்பின் உத்தரவின்படி, மேற்கொள்ளப்பட்ட ராணுவ நடவடிக்கையில், பலுசிஸ்தானின் கொலு மாவட்டத்தில், இவரும் வேறு சிலரும் கொல்லப்பட்டனர். இதற்கிடையில், இம்மாதம், 27 முதல் 30ம் திகதிக்குள், பாகிஸ்தான் திரும்பப் போவதாக முன்னாள் அதிபர், முஷாரப் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து, புக்தியின் பேரன் ஷாஜெய்ன் புக்தி நேற்று வெளியிட்ட அறிக்கையில், "முஷாரப்பை கொலை செய்யும் நபருக்கு, 10 லட்ச ரூபாய் ரொக்கப் பணமும், 10 கோடி ரூபாய் மதிப்புடைய பங்களாவும் பரிசாக” அளிக்கப்படும். மேலும், அந்த நபருக்கு முழு பாதுகாப்பும் வழங்கப்படும் என அறிவித்தார்.மேலும் அவர், "எனது தாத்தா மட்டுமல்லாமல், லால் மசூதியில் இருந்த நூற்றுக்கணக்கான அப்பாவிகளையும்” முஷாரப் கொன்று குவித்துள்ளார். நாடு திரும்பும் போது, அவர் அரசால் கைது செய்யப்படாவிடில், மோசமான விளைவுகள் ஏற்படும் எனவும் எச்சரித்தார். முஷாரப் நாடு திரும்பும் பட்சத்தில், பாக்., முன்னாள் பிரதமர் பெனசிர் புட்டோ கொலை வழக்கு தொடர்பாக, கைது செய்யப்படுவார் என உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அல்-குவைதாவின் பிடியில் ஏமன் நகரம்.
ஏமனின் தென் பகுதியில் உள்ள ஒரு சிறு நகரை, அல்-குவைதா பயங்கரவாதிகள் கைப்பற்றியுள்ளதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏமனில், அலி அப்துல்லா சலே பதவி விலகிய பின், தற்போது இடைக்கால அரசு பொறுப்பில் உள்ளது.
சலே ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையில் ஆங்காங்கே மோதல்கள் நடந்து வருகின்றன. கடந்த, 23 ஆண்டுகால ஆட்சியில், சலேவும் அவரது அமைச்சர்களும், அதிகாரிகளும் செய்த வன்முறைகளுக்காக, அவர்கள் மீது வழக்கு தொடுக்கப்பட வேண்டும் என கோரி, மக்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தலைநகர் சனாவில் இருந்து தெற்கில், 160 கி.மீ., தொலைவில், பைடா மாகாணத்தைச் சேர்ந்த, ரட்டா என்ற நகரை, அல்-குவைதாவினர் நேற்று கைப்பற்றியுள்ளனர். இத்தகவலை தெரிவித்த அதிகாரிகள், அந்நகரில் இருந்து யாரும் வெளியேறவும், அந்நகருக்குள் செல்லவும் முடியாதபடி பாதுகாப்பு வளையத்தை, அல்-குவைதாவினர் ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தனர்.தான் பதவி விலகினால், நாடு அல்-குவைதாவின் கையில் சிக்கும் என அதிபர் சலே எச்சரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராணி எலிசபெத்துக்கு புதிய கப்பல் கட்ட பிரிட்டன் அரசு முடிவு.
பிரித்தானிய ராணி எலிசபெத்தின் வைர விழா நினைவாக ராணி பெயரில் புதிய கப்பலை தயாரித்து வழங்க பிரித்தானிய அரசு முடிவு செய்துள்ளது.இக்கப்பல் தயாரிப்புக்கான செலவுகளுக்கு The Daily Mail மூலமாக பிரசாரம் தொடங்கியுள்ளது. இளவரசர் சார்லஸ் மற்றும் இளவரசி ஆனியின் ஆதரவும் இத்திட்டத்திற்கு உதவியாக உள்ளது.
உலகின் மிகப்பெரிய கப்பலாக 600 அடி நீளத்தில் உருவாக உள்ள இக்கப்பலின் கட்டுமான செலவுக்காக சுமார் 80 மில்லியன் பவுண்டுகள் தேவைப்படுகின்றது.இந்த கப்பலில் அரச குடும்பத்தார்களின் பயன்பாட்டுக்காக தனி அறைகளும், இவை தவிர பெரிய கண்காட்சி அரங்கும் அமைக்கப்பட உள்ளது. மேலும் 220 நபர்கள் தங்கும் வகையில் அறைகளும் கட்டப்பட உள்ளது.
வர்த்தகம் மற்றும் தொழில் நிகழ்ச்சிகள் நடைபெறத் தேவையான வசதிகளை இக்கப்பல் கொண்டிருக்கும். இளைஞர்கள் அறிவியல் கல்வியும், பயிற்சியும் பெற உதவியாக விளங்கும்.ராணி எலிசபெத் அரச பதவி ஏற்று அறுபது ஆண்டுகள் நிறைவு பெற்றதைக் குறிக்கும் வகையில் இந்த கப்பல் பிரம்மாண்டமாக விளங்கும். ஆனால் மக்களின் வரிப்பணம் இதற்காக செலவழிக்கப்படாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது.
ராணி எலிசபெத்துக்கு குடிமக்கள் தங்கள் அன்பையும், மரியாதையையும் காட்டும் வகையில் அவர்கள் பணம் திரட்டி இந்தக் கப்பலை தயாரித்து அரசிக்கு அன்பு பரிசாக வழங்கும் திட்டமிட்டுள்ளனர்.பிரித்தானியாவின் பெரும் பணக்காரர்கள், நிறுவனங்களிடம் அன்பளிப்பு வசூலிக்கப்படும் என்றும் கண்காட்சிகள் நடத்தி பொருள் திரட்டப்படும் எனவும் தகவல் வெளியாகி உள்ளன.
பாட்டுக்கேட்பதால் விபத்துகள் அதிகரிக்கின்றன.
கனடாவில் காதில் பாட்டுக் கேட்கும் கருவியைச் செருகிக்கொண்டு ஐ பாட், எம்.ப்பி.3 போன்றவற்றில் பாட்டுக் கேட்டுக்கொண்டே நடப்பவர்கள் அதிகமாக விபத்துக்களில் சிக்குகின்றனர், என்று சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்தது.கடந்த ஆறு ஆண்டுகளில் இந்த விபத்துகளின் எண்ணிக்கை மூன்று மடங்காகியது. இந்த ஆய்வின் அலைபேசி பயன்படுத்துவோரைச் சேர்க்கவில்லை.
கடந்த 2004ஆம் ஆண்டில் இறந்தவர் எண்ணிக்கை 16 ஆக இருக்க கடந்த 2011ஆம் ஆண்டில் 47 ஆக உயர்ந்துவிட்டது. மொத்தம் 116 பேர் இறந்துள்ளனர். இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பாட்டுக்கேட்டுக் கொண்டே ரயில் தண்டவாளங்களில் நடந்ததனால் ரயிலில் அடிபட்டு இறந்னர். இவர்களில் மூன்றில் இரண்டு பங்கு 30 வயதுக்கு உட்பட்ட ஆண்கள்.
காயத்தடுப்புப் பிரிவின் தலைவரான ரிச்சர்டு லிச்சென்ஸ்டீன் பிரிட்டிஷ் பத்திரிகை ஒன்றில் இந்த விபத்துகள் பற்றி எழுதியுள்ளார். இவர் பால்ட்டிமோரில் உள்ள சிறுவர்களுக்கான மேரிலாண்டு மருத்துவமனைப் பல்கலைக்கழகத்தில் பணிபுரிகிறார்.இவரது ஆய்வுக்கட்டுரை “கவனமின்மையின் குருட்டுத்தனம்” பற்றி எச்சரிக்கின்றது. காதில் “ஹெட்ஃபோன்” மாட்டிக் கொண்டு நடப்பதால் மூளை புறச்செயல்கள் குறித்து எச்சரிக்க தவறுகிறது. வெளியே ஆபத்தான் சூழ்நிலைகள் நிலவும் போது அதை அறிய வழியில்லாமல் அதில் சிக்கிக்கொண்டு இளைஞர்கள் தம் இன்னுயிரை இழந்துவிடுகின்றனர்.
பிரிட்டன் பால்வள நிறுவனம் ஜேர்மனியுடன் இணைந்தது.
பிரிட்டனைச் சேர்ந்த ஒயிஸ்மன் டெய்ரீஸ் என்ற பால்பொருள் நிறுவனம் ஜேர்மனியின் மூல்லெர் பால்வள நிறுவனத்துடன் இணைந்து கடந்த 1947ஆம் ஆண்டில் ஸ்காட்லாந்தில் ராபர்ட் ஒயிஸ்மேன் டெய்ரீன் ஒரு குடும்ப நிறுவனமாகத் தொடங்கியது.இதை இன்று தயிர் வியாபாரத்தில் வெற்றிக்கொடி நாட்டிய மூல்லெர் கார்னர் 279.5 மில்லியன் பவுண்டுக்கு எடுத்துக்கொண்டது. ஒயிஸ்மேன் குடும்பம் 35 சதவீதம் பங்குகளைக் கொண்டிருக்கிறது. இங்கு பணிபுரியும் 5000 பேரில் 1000 பேர் பங்குதாரராக இருக்கின்றனர்.
இதில் பெரும்பங்கு வகிக்கும் இதில் நிர்வாகத்தலைவரான 56 வயதுடைய ராபர்ட் ஒயிஸ்மேனுக்கு 49 மில்லியன் பவுண்டும், இவரது அண்ணன், முன்னாள் தலைவராக இருந்து ஓய்வுபெற்ற 60 வயது நிரம்பிய ஆலனுக்கு 35 மில்லியன் பவுண்டும் இவர் தம்பி நிர்வாக இயக்குநர் கவினுக்கு (50 வயது) 8 மில்லியன் பவுண்டும் இப்போது கிடைக்கும். இதில் 10 சதவீதம் பங்குகளைப் பெற்றுள்ள First Milk என்ற விவசாயிகள் கூட்டுறவுச் சங்கத்திற்கு 27.9 மில்லியன் பவுண்டு கிடைக்கும்.
மூல்லெரின் தலைமை நிர்வாகியான ஹெய்னெர் கேம்ப்ஸ் இனி இந்த ஒயிஸ்மேன் நிறுவனத்துக்கும் தலைவராகப் பதவி வகிப்பார். மற்ற நிர்வாகிகள் தங்கள் பதவிகளில் தொடர்வார்கள். ஆட்குறைப்பு, பதவி மாற்றம், நிர்வாக மாற்றங்கள் இனி நடக்கலாம். இப்போதைக்கு ஒயிஸ்மேன் நிறுவனத்தின் பணி இடமோ, சூழ்நிலையோ மாற்றப்படாது. ஆட்குறைப்பு இருக்காது என்று உழைப்பாளர் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மைக்கேல் மெக்கன் தெரிவித்தார்.ஆனால் ஒயிஸ்மேன் நிறுவனத்தின் தொடர்பு இயக்குநரான கிரேம் ஜேக் அவ்வாறு (ஆட்குறைப்பு இல்லை) உறுதியாகச் சொல்ல இயலாது. புதிய நிர்வாகம் சில மாற்றங்களைக் கொண்டு வரும் என்றார்.
ஒயிஸ்மேன் லண்டனின் பங்குச்சந்தையில் சிறப்பிடத்தைப் பெற்றிருந்தது. ஆறு பால்பண்ணையும் 14 1.5 பில்லியன் லிட்டர் அளவு பால் விநியோகம் செய்தது. டெஸ்கோ, சென்ஸ்பரி மற்றும் கூட்டுறவு நுகர்வோர் பட்டியலில் இடம்பெற்றிருந்தார்.இந்த இணைப்பினால் மூல்லெருக்குச் சிறிதளவு சேமிப்பு கிடைக்கலாம். ஆனால் பெரியளவில் இலாபம் கிடையாது என்று பீல் ஹண்ட் ஆய்வு நிறுவனம் கருத்துத் தெரிவித்துள்ளது. ஒயிஸ்மேனுக்கு இந்தப் பரிவர்த்தனை சிறப்பானதாகும்.
பொதுவாக்கெடுப்பு குறித்த பேச்சுவார்த்தைக்கு சம்மதம் தெரிவித்த பிரிட்டன்-ஸ்காட்லாந்து தலைவர்கள்.
ஸ்காட்லாந்தின் விடுதலைக்காக பாராளுமன்றத்தில் பொது வாக்கெடுப்பு நிகழ்த்துவது குறித்து இருநாட்டுத் தலைவர்களும் சந்திக்க மறுத்து வந்த நிலையில் இப்போது இன்னும் சில நாட்களில் இவர்களின் சந்திப்பு நிகழும் என்று பிரிட்டனின் பிரதமர் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஸ்காட்லாந்தின் முதலமைச்சர் அலெக்ஸ் சால்மண்ட் பொது வாக்கெடுப்பு நியாயமாகவும், முடிவெடுக்கும் விதமாகவும் நடைபெறுவதற்குத் தேவையான சட்ட ரீதியான அதிகாரம் அதற்கு வழங்கப்படவேண்டும், என்றார்.ஸ்காட்லாந்தின் நாடாளுமன்ற உறுப்பினரான மைக்கேல் மூர், ஸ்கை நியூசுக்கு அளித்த பேட்டியில் இந்தப் பிரச்னை குறித்து இன்னும் சில விடை தெரியாத வினாக்கள் இருப்பதாகத் தெரிவித்தார். இருந்தாலும் பிரிட்டன் அரசாங்கத்தின் விருப்பத்திற்கேற்ப இந்த வாக்கெடுப்பை நடத்துவோம் என்றார்.
அலெக்ஸ் சால்மண்டின் செய்தித் தொடர்பாளர் இதுபற்றிப் பேசும்போது பல வினாக்கள் இருப்பதை உறுதி செய்தார். சுதந்திரம் கேட்கின்ற தேசியவாதிகளின் நோக்கம் என்ன என்பது எங்களுக்குத் தெரியவில்லை. எங்கள் வங்கிகளை எப்படி முறைப்படுத்துவோம் பிரிட்டன் மக்களும் பணம் போட்டுள்ள இரண்டு பெரிய வங்கிகள் எங்களிடம் உள்ளன. அவை இரண்டாண்டுகளுக்கு முன்பு திவாலாயின. இதை நாங்கள் எப்படி சரிசெய்வோம்.எங்கள் ஓய்வூதியப் பணத்தை இனி யார் வழங்குவார்? எவ்வளவு வழங்குவார்கள்? நிறைய விடயங்கள் பேசித் தெளிவு பெற வேண்டும். இப்போது எடுக்கும் இந்த முடிவு இன்னும் முந்நூறு ஆண்டுகளுக்கு உரியதாகும். எனவே இதற்கு கால அவகாசம் தேவை, என்றார்.
சுதந்தர ஸ்காட்லாந்து பல பொருளாதார சிக்கல்களை எதிர்கொள்ளும் என்பது பொருளியலாளரின் கணிப்பு. ஸ்காட்டிஷ் தேசியக் கட்சியும் அரசாங்கமும் வாக்கெடுப்புக்கு கால அவகாசம் தேவை என்று கருதும் சூழ்நிலையில் டேவிட் கேமரூனுடன் வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்துவதாக அறிவித்துள்ளன.
விடுதலை கொடுக்கத் துடிக்கும் பிரிட்டனின் செய்தித்தொடர்பாளர், இது ஒரு வரவேற்கத் தகுந்த மேம்பாடு, உண்மையான வளர்ச்சி” என்று பாராட்டினார். கேமரூன், சால்மண்டைச் சந்திக்க ஆவலோடு இருப்பதாகத் தெரிவித்தார். தான் கட்சியுடன் வாக்கெடுப்புக்கான ஏற்பாடுகளை கலந்தாலோசித்த பின்பு தலைவர்களின் சந்திப்பு நிகழும் என்றார்.பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் வாக்கெடுப்பு முயன்றவரை சீக்கிரமாக நடத்தப்பட வேண்டும் என்கிறார் ஆனால் ஸ்காட்லாந்தின் சால்மண்ட் எதிர்வரும் 2014ஆம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டும் என்கிறார்.
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பேச்சுவார்த்தை இன்று ஆரம்பம்.
இந்தியா-பாகிஸ்தான் இடையே வர்த்தகம், பொருளாதார ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, 15 பேர் ‌கொண்ட அனைத்துக்கட்சி பாராலிமென்ட் எம்.பி.க்கள் குழுவினர் நேற்று பாகிஸ்தான் சென்றடைந்தனர்.இன்று இஸ்லாமாபாத்தில் அவர்கள் பாகிஸ்தான் பாராலிமென்ட் எம்.பி.க்கள் குழுவினரை சந்தித்து பேசுகின்றனர். இந்தியா-பாகிஸ்தான் நாடுகளி‌டையே பரஸ்பரம், ஒத்துழைப்பு நல்கவும், வர்த்தக பொருளாதார விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த கடந்த ஆண்டு ஜனவரி மாதம், இந்திய எம்.பி.க்கள் குழுவினர் பாகிஸ்தான் சென்று இஸ்லாமாபாத் நகரில் முதல் சுற்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர் அதே ஆண்டு(2011) ஓகஸ்ட் மாதம் இந்தியா வந்த பாக். பாராலிமென்ட் எம்.பி.க்குழுவினர் டெல்லியில் இரண்டாவது சுற்றுப்பேச்சுவார்த்தை நடத்தினர். இந்நிலையில் இன்று மூன்றாவது சுற்றுப்பேச்சுவார்த்தை இஸ்லாமாபாத் நகரில் இரு நாட்டு பார்லிமென்ட் எம்.பி.க்கள் குழுவினரி‌டையே நடக்கிறது.
இதில் இந்தியாவின் 15 எம்.பி.க்கள் கொண்ட குழுவினர் கலந்து கொள்கின்றனர். இக்குழுவில், மணிசங்கர அய்யர், டி.ராஜா, சத்ருகன்சின்ஹா, யாஷ்வந்த்சின்ஹா, ஷாநவாஸ் ஹூசைன், திபெந்தர்ஹூடா, ஹமத்துல்லா சையத் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.இன்றும் நாளையும் (17.01.2011 - 18.01.2011) இப்பேச்சுவார்த்தை நடக்கிறது. பாகிஸ்தானில் தற்போதைய அரசியல் சூழ்நிலை சிக்கலாக உள்ள நிலையில், இக்குழுவினரின் பேச்சுவார்த்தை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
ஜேர்மனியைத் தாக்கும் பொருளாதாரக் கட்டுப்பாடு.
ஐரோப்பாவின் பல நாடுகளில் பரவலாகப் பின்பற்றப்பட்ட பொருளாதாரக் கட்டுப்பாடு இப்போது ஜேர்மனியையும் தாக்குகிறது. கெய்னேஷியப் பொருளாதாரக் கொள்கைகள் இன்றைக்கு அரசியலையும் பாடாய்ப்படுத்துகிறது.
கடந்த 1945 – 51 ஆம் ஆண்டுகளில் அட்லீ அரசுகளைத் தாக்கிய பொருளாதாரக் கொள்கைகளால் பழமைவாதிகள் போருக்குப் பிந்திய ஒப்பந்தங்களை ஏற்றுக்கொண்டனர். அட்லீ பிரதமர் ஹக் கெய்ட்ஸ்கெல் (1950-51) மற்றும் பழமைவாதிக் கட்சிப் பிரதமர் பட்லெர் (1951-55) ஆகியோரின் கொள்கைகளிலிருந்து “பட்ஸ்கெல்லிசம்" என்ற இணைந்த கொள்கை ஒன்று உருவாக்கப்பட்டது.
தொழிலாளர் கட்சியின் தலைவரான எட் மிலிபேண்டின் முதலாளித்துவத்தை ”கொள்ளையடிக்கும் முதலாளித்துவம்” என்று குறிப்பிடுவதைக் கேட்க கேமரூன் தயாராகிவருகிறார். முதலாளித்துவத்தின் விளைவாக, RBS வங்கியின் தலைவரான ஸ்டீஃபென் ஹெஸ்ட்டெருக்கு ஓர் ஆண்டுக்கு ஊக்கத்தொகை மட்டுமே இரண்டு மில்லியன் பவுண்டு வழங்கப்படுகிறது.இதை நாட்டின் பிரதமரும், ஜனாதிபதியும் எப்படி அனுமதிக்கின்றனர்? கெய்னேஷிய பொருளாதாரக் கொள்கையின் படி ஒரு நாட்டில் சிறு, குறுந்தொழில்கள், வங்கிக் கடன் பெற இயலாமல் நசிவடைகின்றன. ஆனால் பெருந்தொழிலதிபர்கள் குறைந்த வட்டியில் அதிகக் கடன் பெற்று மிகுந்த இலாபம் அடைகின்றனர். இவர்களது தொழில் நஷ்டக் கணக்கு காட்டினாலும் இவர்களுக்கு அதனால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது.
ஜார்ச் ஆஸ்போர்ன், பொருளாதாரத் திட்டம் A யைத் தெரிவு செய்வதில் பெருந்தவறிழைத்து விட்டார். இத்திட்டம் அதீத வறுமைக்கான திட்டமாகும். தாட்சரின் காலத்து வரலாற்றில் மயங்கிப் போய் இத்திட்டத்தை இவர் ஏற்றார். ஆனால் ஃபாக்லாந்து போருக்குப் பிறகு தாட்சரின் புகழ் அதல பாதாளத்தில் விழுந்துவிட்டது. எனவே திட்டம் A என்பது இங்கிலாந்துக்கு எதிர்பார்த்த பலனைத் தரவில்லை.இப்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் இங்கிலாந்து நாட்டின் பொருளாதார வளம் நலிவடைந்ததுடன் வேலைவாய்ப்பும் குறைந்துபோனது. உதாரணத்திற்கு இந்நாட்டின் மோட்டார்த் தொழில்கள் பற்றி ஆராய்ந்தால் இத்தொழில்கள் இந்நாட்டிற்கு உரியன கிடையாது. வெளிநாட்டின் தேவைகளுக்காக இங்கு இத்தொழில் நடத்தப்பட்டு வருகிறது. இங்கு நடைபெறும் உற்பத்தி அனைத்தும் ஏற்றுமதிக்கு உரியவை. வெளிநாடுகளில் பொருளாதார வீழ்ச்சி ஏற்படும்போது இந்நாட்டின் உற்பத்தி தடைபடும். ஆட்குறைப்பு ஏற்படும் வேலைவாய்ப்பு பறிபோகும்.
இதுபோன்ற கொள்கைகளால் ஐரோப்பாவின் மிகப்பெரிய ஏற்றுமதியாளராக இருந்த ஜேர்மனி, யூரோ மண்டலத்தின் பொருளாதாரச் சிக்கலால், தானும் சிக்கலுக்கு உள்ளானது. பிரங்ஸல்ஸில் தொடர்ந்து நடைபெறும் கூட்டங்கள், யூரோ மண்டலத்தில் நல்ல வளர்ச்சிக் கொள்கையை உருவாக்க வேண்டும். தாட்சர் வழியில் ”தடையற்ற உழைப்புச் சந்தையை” உருவாக்க வேண்டும் என்றே பேசி வருகின்றன. இதனால் பெரும்பயன் எதுவும் கிடையாது. இந்தக் கூட்டத்தில் பேசப்படும் விடயங்கள் எதுவும் தற்போதைய சிக்கலைத் தீர்க்கப் போவதில்லை. பெரியளவில் கூட்டுத் தேவையை முன்னிறுத்தியே திட்டங்கள் தீட்டப்படுகின்றன.
கடந்த பல பத்தாண்டுகளில் கெய்னேஷிய தத்துவங்களைப் பின்பற்றி இங்கிலாந்து போன்ற நாடுகள் நிதிநிலை அறிக்கையில் உபரி மதிப்பைக் காட்டிவந்தன. முதலீட்டை மையப்படுத்திய கெய்னேஷிய தத்துவம், பணம் பல நாடுகளிடையே சுற்றி வருவதை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் ஒரு நாட்டில் பொருளாதாரத் தட்டுப்பாடு ஏற்படும்போது அந்த இடத்தில் பணச்சுழற்சி நின்றுவிடுகிறது என்பதை நாம் மறுக்கவியலாது. இன்று அதனைக் கண்கூடாகக் காண்கிறோம். எனவே புதிய கொள்கையை விபரம் கண்டறிய வேண்டும்.பாருக்குப் பிந்தைய ஒப்பந்தங்களின்படி ஜேர்மனி புதிய நாட்டின் பொருள்வளத்தைப் பெருக்கியது சரிதான். ஆனால் இன்று வளங்கள் மிகுதியாக உள்ளன. அவற்றை முறையாகப் பயன்படுத்தத் தெரியவேண்டும். அப்போதுதான் ஜேர்மனியில் பொருளாதார நெருக்கடி நீங்கும் உற்பத்தியும், வேலைவாய்ப்பும் பெருகும்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF