Friday, January 6, 2012

NEWS OF THE DAY.

வெளிநாட்டு நாணயத்தாள்கள், தங்கக் கட்டிகளை சட்டவிரோதமாக கடத்தியோர் கைது.

ஐம்பது இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயத்தாள்கள் மற்றும் தங்கக் கட்டிகளை சட்டவிரோதமாக கடத்திய ஐந்து நபர்கள் இன்று கட்டுநாயக்க விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னைக்குச் செல்லவிருந்த கண்டி ஹக்குரன பிரதேசத்தைச் சேர்ந்த 5 முஸ்லிம் நபர்களே இன்று பி.ப.3 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்களின் தலைவருக்கு 45 வயதும் ஏனையவர்கள் 20-25 வயசுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.30 இலட்சம் ரூபா பெறுமதியான அமெரிக்க டொலர்கள், யூரோக்கள், சவூதி ரியால், குவைத் தினார் முதலான வெளிநாட்டு நாணயத்தாள்களும், 20 இலட்சம் ரூபா பெறுமதியான உருக்கிய தங்கக் கூறுகளுமே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.
பின் கதவு வழியாக சட்ட மூலங்களை கொண்டு வர வேண்டாம்- ஐ.தே.க.
ஊழியர் சேபலாப நிதி தொடர்பான சட்ட மூலத்தை அவசரமாக நிறைவேற்றக் கூடாது என்றும் பின் கதவு வழியாக அரசாங்கம் சட்ட மூலங்களை கொண்டுவரக் கூடாது என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.எதிர்வரும் 18ம் திகதி ஊழியர் சேபலாப நிதிச் சட்டத்தை பாராளுமன்றில் சமர்ப்பிக்க அரசாங்கம் உத்தேசித்துள்ளது. இந்த சட்ட மூலத்தை அவசரமாக அமுல்படுத்துவது பொருத்தமாகாது, விரிவான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.சட்ட மூலத்தை அமுல்படுத்த அரசாங்கம் கடந்த ஆண்டு மேற்கொண்ட முயற்சி காரணமாக 21 வயது இளைஞரான ரொசான் சானக உயிரைத் தியாகம் செய்ய நேரிட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியானால் தாம் வீதியில் வாழவேண்டிய நிலை ஏற்படும்: முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா.
மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாக தெரிவானால், தாம் 11 வருடங்களாக மேற்கொண்ட அனைத்து காரியங்களும் அழிந்துப்போய் விடும் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்திருந்ததாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.தாம் பதவியில் இருந்து விலகிச்செல்லும் போது, 2005 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் திகதி ராஜதந்திரிகளுக்கு வழங்கிய விருந்துபசாரத்தின் போதே சந்திரிகா இந்த கருத்தை வெளிப்படுத்தியதாக விக்கிலீக்ஸ் குறிப்பிட்டுள்ளது.
இந்த தகவலை அமெரிக்காவின் அப்போதைய தூதுவர் ஜெப்ரி லக்ஸ் டெட் அமெரிக்க ராஜாங்க திணைக்களத்துக்கு கேபிள் மூலம் அறிவித்திருந்ததாக விக்கிலீக்ஸ் வெளிப்படுத்தியுள்ளது.தாம் ஒருவேளை வீதியில் வாழவேண்டிய நிலை ஏற்படலாம் என்றும் சந்திரிகா இந்த சந்திப்பின்போது குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகள், மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாக வருவதை விரும்புவதாக தமக்கு அறியக்கிடைத்ததாகவும் சந்திரிகா இதன்போது தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் அப்போது (2005) வசித்த மஹிந்த ராஜபக்ஸவின் சகோதரரான இராணுவத்தில் பணியாற்றிய ஒருவர், படைகளில் இருந்து தப்பிவந்த 300 படையினரைக் கொண்டு யாழ்ப்பாணத்தின் தேர்தல் பணிகளுக்காக செல்லவிருந்ததாகவும் அதனை தாம் தடுத்ததாகவும் சந்திரிகா குறித்த விருந்துபசாரத்தின் போது குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை, ரணில் விக்கிரமசிங்க,தேர்தலில் வெற்றிப்பெற்றால் தமது பொதுவாழ்க்கை தொடர்வதற்கு வாய்ப்பு ஏற்படும் என்றும் சந்திரிகா இதன் போது குறிப்பிட்டதாக அப்போதைய அமெரிக்க தூதுவர் தெரிவித்திருந்ததாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
பொன்சேகாவை விடுவிக்க கோரி அமெரிக்காவிற்கு அனுப்பிய மகஜரில் மஹிந்த, கோத்தா,பஸில் ஆகியோரின் கையொப்பங்கள்.
சரத் பொன்சேகாவின் விடுதலைக்கு மத்தியஸ்தம் வகிக்குமாறு கோரி வெள்ளை மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள மகஜர் குறித்து பல்வேறு கோணங்களில் சர்ச்சைகள் எழுந்துள்ளமை கொழும்பு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்களின் பெயர்களை ஒத்தவகையில் கணிசமான அளவு கையொப்பங்கள் இருப்பதனால், இந்த மகஜர் தொடர்பாகச் சந்தேகங்கள் எழுந்துள்ளன என்றும் கூறப்படுகின்றது.
நான்கு வாரங்கள் என்ற குறுகிய காலப்பகுதிக்குள் சர்வதேச ரீதியில் 25 ஆயிரத்து 638 பேரிடம் கையொப்பம் திரட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அந்த மகஜரில், மஹிந்த ராஜபக்ச என்ற பெயரில் ஐந்து பேரும், ஷிராந்தி ராஜபக்ச என்ற பெயரில் 5 பேரும், கோத்தபாய ராஜபக்ச என்ற பெயரில் இருவரும் கையொப்பமிட்டுள்ளனர் எனத் தெரியவருகிறது.
அத்துடன், பஸில் ராஜபக்ச என்ற பெயரில் இருவரும், நாமல் ராஜபக்ச என்ற பெயரில் இருவரும், யோஷித ராஜபக்ச என்ற பெயரில் இருவரும் கையொப்பமிட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.அதேவேளை, யோஷித ராஜபக்ச, சசீந்ர ராஜபக்ச, சமல் ராஜபக்ச ஆகிய பெயர்களிலும் கையொப்பம் பதிவாகியுள்ளதுடன், விமல் வீரவன்ஸ மற்றும் மேர்வின் சில்வா ஆகிய பெயரில் இவ்விரண்டு கையொப்பங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
மஹிந்த யாப்பா அபேவர்த்தன, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, மனுஷ நாணயக்கார, மஹிந்தானந்த அளுத்கமகே, சனத் ஜயசூரிய, அனுருத்த ரத்வத்த, பிரட்றிகா ஜோன்ஸ், லக்ஷ்மன் ஹுலுகல்ல ஆகிய பெயர்களிலும் கையொப்பம் இடப்பட்டுள்ளன.திலகரட்ன டில்ஷான், மஹேல ஜயவர்த்தன, ரொஷான் மஹாநாம, ரஞ்சன் மடுகல்ல, முத்தையா முரளிதரன், சமிந்த வாஸ், மாவன் அத்தபத்து, ஷாமர சில்வா, உபுல் தரங்க, ஷாமர கபுகெதர, திலின கண்டம்பி, அஞ்சலோ மத்தியூஸ் ஆகிய கிரிக்கட் வீரர்களின் பெயர்களிலும் கையொப்பமிடப்பட்டுள்ளன.
பாதாள உலகக்குழு உருவாவதைத் தடுக்கமுடியாது: அமைச்சர் விமல் வீரவன்ச.
இலங்கையில் பாதாள உலக குழுக்கள் உருவாவதை பொலிஸாராலும், பாதுகாப்பு பிரிவினராலும் தடுக்க முடியாது என அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.அநுராதபுரத்தில் நேற்று இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸார் மற்றும் பாதுகாப்பு பிரிவினர் தற்போதுள்ள பாதாள உலக குழுக்களை ஒழிக்க முடியும், எனினும் பாதாள உலக குழுக்கள் உருவாவதை தடுக்க முடியாது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.பாதாள உலகக் குழுக்கள் வறுமையினாலேயே உருவாகிறது எனவும் பொருளாதார ரீதியில் ஒருவர் ஸ்திரமாக இருப்பாராயின், சமூகத்துடன் இணைந்து வாழக்கூடிய சந்தர்ப்பம் இருக்குமாயின் குற்றவாளிகள் உருவாவதற்கான சந்தர்ப்பம் குறைவடையும் எனவும் அமைச்சர் விமல் வீரவங்ச மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் மேவின் சில்வாவின் வருமானத்துக்கு தடை.
இலங்கையின் களனி பிரதேசத்தில் அமைச்சர் மேவின் சில்வா கப்பம் பெற்று வந்தமை தெரியவந்துள்ளது அவர், கிரிபத்கொட வாரச் சந்தையில் இதுவரை காலமும் கப்பம் பெற்று வந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.அந்த பணம் நேரடியாக மேவின் சில்வாவின் சொந்த செலவுகளுக்காக பயன்படுத்தப்பட்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் களனி பிரதேச சபையின் தலைவர் பிரசன்ன ரணவீர தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில் கிரிபத்கொட வாரச் சந்தையில் வரி அறவீடு செய்யும் நடவடிக்கைகளை களனி பிரதேச சபை நேற்று முதல் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளது.இந்த நடவடிக்கையை களனி பிரதேச சபை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வரவேற்றுள்ளனர்.இதேவேளை இந்த நடவடிக்கை அரசாங்கத்தின் உயர்மட்டத்தில் இருந்து எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குள் பிளவு?
மாகாண சபைகளுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வழங்குதல் மற்றும் 13ஆம் திருத்தச் சட்டமூல அமுலாக்கம் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குள் பாரியளவில் பிளவு ஏற்பட்டுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட மாட்டாது என அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு அண்மையில் தெரிவித்திருந்த போது, அதற்கு முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த சிலர் ஆதரவு தெரிவித்திருந்தனர்.
முஸ்லிம் மக்களுக்கு சேவையாற்றுவதற்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் அவசியமில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சில சிரேஸ்ட உறுபபினர்கள் தெரிவித்திருந்தனர்.எனினும், குறித்த அதிகாரங்கள் பகிரப்பட வேண்டுமென்று கட்சியின் முதன்மை உறுப்பினர்கள் கோரி வருவதாகக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளதாகவும் இதனால் கட்சிக்குள் முறுகல் நிலை ஏற்பட்டு, பிளவு ஏற்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளதாக சிங்கள பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
தெற்கு நெடுஞ்சாலையில் பயணிகளை இறக்கியமைக்கு பஸ் சாரதிக்கு அபராதம்!
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் விதிமுறைகளை மீறிய, இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்றின் சாரதிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.மஹரகமயிலிருந்து காலி நோக்கிப் பயணித்த பஸ்ஸில் இருந்த இரண்டு பயணிகளை, நெடுஞ்சாலையின் விதிமுறைகளை மீறி பஸ் சாரதி இறக்கிவிட்டமையினால் அபராதம் விதிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
தெற்கு அதிவேக வீதியில் பயணிக்கும் எந்தவொரு வாகனத்திற்கும் இடைநடுவே நிறுத்துவதற்கான அனுமதி வழங்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை, தெற்கு அதிவேக நெடுஞ்சாலைக்குள் பிரவேசித்த ஆடொன்றின் உரிமையாளருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நேற்று முன்தினம் பயணிகள் போக்குவரத்துக்காக சொகுசு பஸ் சேவையை போக்குவரத்து அமைச்சர் குமார் வெல்கம ஆரம்பித்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.
காங்கேசன் சீமேந்து ஆலை இயந்திரங்கள் பழைய இரும்பாக விற்பனை! தெற்கே கடத்தவிருந்த லொறி பொலிஸாரிடம் சிக்கியது.
காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையிலுள்ள பல லட்சம் ரூபா பெறுமதியான இரும்புகளை வெட்டி எடுத்துத் தென்னிலங்கைக்கு லொறியில்  கடத்த எடுத்த முயற்சி பொலிஸாரால் முறியடிக்கப்பட்டுள்ளது.தகவல் ஒன்றையடுத்து காங்கேசன்துறையில் பொலிஸார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் இரும்பு ஏற்றப்பட்ட நிலையில் லொறி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.
தென்னிலங்கைக்குக் கொண்டு செல்லத் தயார் நிலையிலிருந்த ஒரு தொகுதி இரும்பும், லொறியுடன் காங்கேசன்துறைப் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.பொலிஸார் இரும்பு கடத்த முற்பட்டவர்களை மடக்கிப் பிடிக்க முயன்றபோது, ஓடித் தலைமறைவாகிவிட்டனர் என்று ஒரு தகவல் தெரிவித்தது.
உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள சீமெந்துத் தொழிற்சாலையின் பெரும் இயந்திரங்கள் இரும்புகளாக வெட்டப்பட்டுப் பல வருடங்களாகத் தென்னிலங்கைக்குக் கடத்தப்பட்டு வந்தது.நீர்கொழும்பைச் சேர்ந்த முஸ்லிம் வர்த்தகர் ஒருவரே தினமும் கறுப்புக் கண்ணாடி பொருத்தப்பட்ட வாகனத்தில் நேரில் சென்று இரும்புகளை தென்னிலங்கைக்கு ஏற்றுகிறார் என்று நம்பகரமான தகவல்கள் கிடைத்துள்ளன.
சீமெந்துத் தொழிற்சாலைப் பகுதியில் "பெக்கோ" வாகனம் பெரிய "கிறேன்" மற்றும் கனரக வாகனங்களின் உதவியுடனேயே அங்குள்ள இரும்புகள் வெட்டப்பட்டு, அப்புறப்படுத்தப்படுகின்றன.தினமும் மூன்று அல்லது நான்கு கனரக லொறிகளில் இரும்பு எடுத்துச் செல்லப்படுவது வழமை. இராணுவத்தினர் இதற்குத் தடையேதும் விதிப்பதில்லை.
நீர்கொழும்பைச் சேர்ந்த அந்த நபர் தனது வாகனத்தில் பெரியளவான சிங்கக்கொடியைத் தாங்கியவாறே சீமெந்துத் தொழிற்சாலைப் பகுதிக்கு செல்கிறார்.இராணுவத்தினர் அந்த வாகனம் வருவதைக் கண்டதும் சோதனைச் சாவடியிலுள்ள தடைகளை அப்புறப்படுத்தி விடுகின்றனர் என்று நேரில் கண்ட சாட்சிகள் தெரிவிக்கின்றன.
தொழிற்சாலையிலுள்ள மூன்றில் ஒரு பகுதி இயந்திரங்கள் இவ்வாறு இதுவரை வெட்டப்பட்டு தெற்குக்கு ஏற்றப்பட்டு விட்டன.  இங்கிருந்து ஏற்றப்படும் இரும்புகள் தென்னிலங்கைக்கு ஏ9 வீதியூடாகவே எடுத்துச் செல்லப்படுகின்றன.இராணுவத்தின் உயர்பாதுகாப்பு வலயத்தினுள்ளே செல்வதாயின் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியின்றி எவரும் நுழைய முடியாது. எனினும் நீர்கொழும்பைச் சேர்ந்த நபர் எந்தத் தடையுமின்றி இரும்புகளைக் கடத்தி வந்தார். ஒரு சில இராணுவ உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்புடனேயே இந்தக் கடத்தல் சம்பவம் இடம்பெற்று வந்துள்ளது என நம்பப்படுகிறது.
பத்திரிக்கையாளர்களுக்கு பாதகமான நாடு மெக்ஸிகோ.
பத்திரிகை உட்பட மீடியாக்களில் பணிபுரிவோர்களுக்கு பாதகமான நாடாக மெக்ஸிகோ விளங்குவதாக வியன்னாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் அமைப்பான ஐ.பி.ஐ தெரிவித்துள்ளது.
2011ம் ஆண்டில் மட்டும் மெக்ஸிகோவில் 103 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், இது இரண்டாவது அதிகபட்ச அளவு தான் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 2009ம் ஆண்டில் 110 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானில் பள்ளிகளில் கைபேசிகள் உபயோகிக்க தடை.
பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் பள்ளி, கல்லூரிகளில் கைபேசி பயன்படுத்த தடை விதிக்க சட்டப் பேரவை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.கைபேசி பயன்படுத்துவதால் மாணவர்களுக்கு படிப்பில் கவனம் சிதறுகிறது. வகுப்பு நடைபெறும் போதே குறுஞ்செய்தி அனுப்புவது உள்ளிட்ட பழக்கம் அதிகரித்துள்ளது.
இதைக் கட்டுப்படுத்த பஞ்சாப் மாகாண சட்டப் பேரவை அனைத்து உறுப்பினர்களின் ஒருமித்த ஆதரவுடன் செவ்வாய்க்கிழமை இத்தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.கைபேசி பயன்பாடு மாணவர்களின் நன்னடத்தையைக் குறைத்து வருகிறது, இந்த தடை மாணவர்களின் கவனம் படிப்பிலிருந்து சிதறாமல் இருப்பதற்கே என்று பேரவை உறுப்பினர் ரஹீலா காதிம் தெரிவித்தார்.
சீனாவில் பேருந்து விபத்து: 16 பேர் உடல் நசுங்கி பலி.
சீனாவில் கடும் பனி மூட்டத்தால் பாலத்தில் இருந்து பேருந்து விழுந்து 16 பேர் உடல் நசுங்கி இறந்தனர்.சீனாவில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. பல இடங்களில் பனிமூட்டம் காணப்படுவதால் சாலைகள் மூடிகிடக்கின்றன.வழி தெரியாமல் சமீபகாலமாக பல விபத்துகள் நடந்து வருகின்றன. பல இடங்களில் போக்குவரத்து ஸ்தம்பித்து வருகிறது.
இந்நிலையில் சீனாவின் மத்திய பகுதியில் உள்ள அன்ஹூய் என்ற பகுதியில் நேற்று பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் 50க்கும் அதிகமான பயணிகள் இருந்தனர்.மலைப்பாங்கான இடத்தில் பாலத்தில் பேருந்து சென்ற போது பனிமூட்டம் அதிகமாக இருந்தது. வழி தெரியாமல் சென்ற போது, பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் இருந்து கீழே விழுந்தது. இதில் 16 பயணிகள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தனர். 30 பேர் படுகாயம் அடைந்தனர்.
இங்கிலாந்தில் கருப்பின மாணவரை கொன்ற நபருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை.
கருப்பின மாணவரை கொன்ற 2 பேருக்கு 15 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து இங்கிலாந்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இங்கிலாந்தில் வசித்த கருப்பின மாணவர் ஸ்டீபன் லாரன்ஸ். கடந்த 1993ம் ஆண்டு ஏப்ரல் மாதம் எல்தாம் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில், லாரன்சை 2 வெள்ளைக்கார இளைஞர்கள் கத்தியால் குத்தி கொலை செய்தனர்.அப்போது ஸ்டீபனக்கு 18 வயது. இதுதொடர்பாக கேரி டாப்சன்(36), டேவிட் நோரிஸ்(35) ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். இவர்களுக்கு அப்போது 18 வயதுக்கும் குறைவாக இருந்ததால் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.
இந்நிலையில் மான்செஸ்டர் பகுதியில் கடந்த வாரம் இந்திய மாணவர் அனுஜ் பித்வே படுகொலை செய்தார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்திய மாணவர்கள் மீது இனவெறி தாக்குதல் நடத்தப்படுவதாக குற்றச்சாட்டு விஸ்வரூபம் எடுத்துள்ளது.மேலும் லாரன்ஸ் படுகொலை வழக்கும் தீவிரம் அடைந்தது. வழக்கில் நேற்று ஓல்ட் பெய்லி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. கேரி டாப்சனுக்கு 15 ஆண்டு சிறைத்தண்டனையும், டேவிட் நோரிசுக்கு 14 ஆண்டு சிறைத்தண்டனையும் விதித்து நீதிபதி டிரேசி தீர்ப்பு வழங்கினார்.
சீனாவில் பாகிஸ்தான் இராணுவத் தளபதி.
பாகிஸ்தான் இராணுவத் தளபதி அஷ்பாக் பர்வேஸ் கயானி ஐந்து நாள் சுற்றுப் பயணமாக நேற்று சீனா சென்றார்.அமெரிக்கா உடனான பாகிஸ்தான் உறவு இன்னும் சீர்படுத்தப்படாத நிலையில் இராணுவத் தளபதி கயானி சீனாவுக்குச் சென்றுள்ளார்.
கடந்தாண்டு டிசம்பர் மாதம் சீன உயர் அதிகாரி டாய் பிங்குவோ, பாகிஸ்தானுக்கு வந்திருந்தார். இதைத் தொடர்ந்து கயானி சீனாவுக்கு வரும்படி சீனா அழைப்பு விடுத்திருந்தது.இந்த பயணத்தில் அவர் இருதரப்பு பாதுகாப்பு மற்றும் இராணுவ உறவுகள் தொடர்பாக பேசுவார் என பாகிஸ்தான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மெமோகேட் விவகாரத்தில் பாகிஸ்தான் ஆளும் கட்சியின் முக்கிய பிரமுகர்கள், நான்கு பேருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.பாகிஸ்தான் தகவல் தொடர்பு அமைச்சர் பிர்தவுஸ் அவான், மத விவகாரத் துறை அமைச்சர் குர்ஷித் ஷா ஆகியோர் இவர்களில் குறிப்பிடத்தகுந்தவர்கள்.
2012ல் ஜேர்மனியில் பொருளாதார வீழ்ச்சி ஏற்படாது.
யூரோ மண்டல கடன் நெருக்கடி காரணமாக 2012ம் ஆண்டில் ஜேர்மனியில் பொருளாதார வீழ்ச்சி ஏற்படாது என DIW என்ற பொருளாதார ஆய்வுக்கான ஜேர்மனியின் நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்த ஆண்டின் தொடக்கத்தில் சில பிரச்சினைகள் பொருளாதாரத்துறையில் இருந்தாலும், 2012ம் ஆண்டில் 0.6% தொடங்கும் வளர்ச்சி 2013ல் 2.2% என நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த DIW நிறுவனத்தின் தலைவரான பெர்னியாண்டு பிக்ட்னெர் கூறுகையில், இந்தப் பொருளாதார வளர்ச்சியை எட்ட வேண்டுமானால் அடுத்த சில மாதங்களிலேயே யூரோ மண்டல நெருக்கடிக்கு ஏற்றதொரு தீர்வை அரசியல்வாதிகள் கண்டுபிடிக்க வேண்டும் என்றார்.யூரோ மண்டலத்தின் அரசுகள் கடனில் சிக்கித் திணறினாலும் ஒரு சதவீத அளவாவது ஜேர்மனி வளர்ச்சிப் பாதையை நோக்கி நடைபோடும் என்பதில் பிக்ட்னெர் உறுதியாக இருக்கிறார்.
ஜேர்மனியின் பொருளாதார அமைச்சர் பிலிப் ரோஸ்லெர் கூறுகையில், உலகளவிலும் யூரோ மண்டலத்திலும் பொருளாதார நெருக்கடிகள் பெருகி வருவதால், ஜேர்மனியிலும் அந்த நெருக்கடி பரவலாம் என்று எச்சரிக்கிறார்.ஜனவரி மாதத்தின் நடுவில் வெளியிடப்படும் அறிக்கை சென்ற ஆண்டின் இறுதியில் அறியப்பட்ட பொருளாதாரச் சிக்கல்களை உறுதி செய்யும் என்றும் தெரிவித்தார்.
ஆர்மீனிய இனப்படுகொலைகள் குறித்த சட்டம்: வாக்கெடுப்பு நடத்த அரசு முடிவு.
பிரான்சில் ஆர்மீனிய இனப்படுகொலைகள் குறித்த சட்டம் விரைவில் அமுலுக்கு வரவிருக்கிறது. இந்த சட்டத்திற்கு நாடாளுமன்றத்தின் கீழவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டு விட்டது.1915ம் ஆண்டில் ஒட்டோமன் அரசின் துருக்கிப் படைகள் ஆர்மீனியர்களைக் கொன்று குவித்ததை இனப்படுகொலை என்று 2001ம் ஆண்டில் பிரான்சு அறிவித்தது.
இக்கருத்தை மறுப்பவர்களுக்கு ஒரு வருடச் சிறைத்தண்டனையும், 45000 யூரோ அபராதமும் விதிக்கப்படும் என்றும் பிரான்ஸில் தெரிவிக்கப்பட்டது.நவீன துருக்கி இந்தக் குற்றச்சாட்டை மறுத்து பிரான்சின் மீது வர்த்தகத் தடைகளைக் கொண்டு வந்தது. தனது தூதுவரையும் பாரீசை விட்டு விலக்கிக் கொண்டது.ஆர்மீனியப் பாரம்பரியத்தில் வந்தவர்கள் 5,00,000 பேர் பிரான்சில் வாழ்கின்றனர். சர்கோசியின் UMP கட்சி இந்த இனப்படுகொலைச் சட்டத்தை எதிர் வரும் ஜனாதிபதி தேர்தலை முன்னி்ட்டு ஆதரிப்பதாக அரசியல்வாதிகளும் மற்றவரும் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்தச் சட்டத்திற்கு உலகளாவிய ஆதரவு கிடையாது. எனவே நேட்டோவுடனான அரசியல் மற்றும் வர்த்தகத் தொடர்புகள் பாதிக்கப்படும் என்றும் சில அமைச்சர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.இதுகுறித்து வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலைன் ஜுப்பே கூறுகையில், இந்தச் சட்டத்தை அறிமுகப்படுத்த இது சரியான நேரமல்ல என்றார்.
பிலிப்பைன்சில் நிலச்சரிவு: 25 பேர் பலி.
பிலிப்பைன்ஸில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் 25 பேர் பலியாகி உள்ளனர், 150க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.கம்போஸ்டெலா வாலி மாகாணத்தின் பண்டுகான் எனும் இடத்தில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
கடந்த இரு நாட்களாக இங்கு தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்தது. இரவு நேரத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் உயிரிழப்புக்கள் மேலும் அதிகரித்துள்ளன என தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதுவரை 15 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக பிலிப்பைன்ஸின் தேசிய இடர் மீள் கட்டமைப்பு நிர்வாகம் தெரிவித்துள்ளது.இப்பகுதி ஏற்கனவே சுரங்க பகுதியாக இருப்பதால் இங்கு மண்சரிவுகள் ஏற்பட இன்னமும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பிலிப்பைன்சின் மிண்டானோவை தாக்கிய வாஷி சூறாவளியால் குறைந்தது 1,249 பேர் கொல்லப்பட்டிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்தில் கொலை செய்யப்பட்ட மாணவரின் உடல் பெற்றோர்களிடம் ஒப்படைப்பு.
இந்தியாவின் புனேவை சேர்ந்தவர் அனுஜ் பிட்வே(23). இவர் இங்கிலாந்தில் உள்ள லான்கேஸ்டர் பல்கலைக்கழகத்தில் மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ் முதுநிலை படிப்பு படித்து வந்தார்.கடந்தாண்டு டிசம்பர் மாதம் 26ம் திகதி மான்செஸ்டருக்கு நண்பர்கள், தோழிகளுடன் சுற்றுலா சென்ற போது மர்ம ஆசாமியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதுதொடர்பாக இங்கிலாந்தை சேர்ந்த ஸ்டேப்லெடான் என்ற 20 வயது வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் அனுஜ் பிட்வேயின் பெற்றோர் இந்தியாவில் இருந்து நேற்று லண்டன் வந்தனர்.
அனுஜ்ஜின் தந்தை சுபாஷ், தாய், மாமா ஆகியோர் இங்கிலாந்து உள்துறை அமைச்சக விவகார தலைவர் எம்.பி. கீத் வாசை சந்தித்து பேசினர்.இதற்கிடையில் அனுஜ்ஜின் உடல் 2 முறை பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து அனுஜ் உடலை நாளை இந்தியா கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றது.
சாலை விபத்து: ஏழு பேர் பலி, ஐவர் காயம்.
கனடாவின் ஒண்டோரியா மாகாணத்தில் நடந்த இரண்டு விபத்துகளில் இளைஞர்கள் ஏழு பேர் உயிரிழந்தனர், ஐந்து பேர் படுகாயமடைந்தனர்.பனி படர்ந்த சாலையில் மூன்று கார்கள் மோதிக்கொண்டதில் நான்கு இளைஞர்கள் மரணமடைந்தனர்.
இந்த கார்களில் பயணம் செய்த ஓட்டுநர் ஜெசிகா(18) மற்றும் அவருடன் பயணித்த அலிசாவும்(17) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.இந்தக் காரில் வந்த நிக்கோலசும்(19), கோனோரும்(14) டொரொண்டோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். நெடுஞ்சாலையில் இந்த விபத்து ஏற்பட்டதால் 6 மணிநேரம் போக்குவரத்து தடைப்பட்டது.மற்றொரு விபத்தில் ஒரு மினி வேனும், ஜீப்பும் எதிரெதில் மோதியதால் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். இந்த இரு விபத்துகள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சவுதி மன்னரை சந்திக்கிறார் முஷாரப்.
இந்த மாத இறுதியில் நாடு திரும்ப முடிவு செய்துள்ள பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப், பாகிஸ்தான் அரசு மற்றும் இராணுவம் தன்னை கைது செய்வதைத் தடுப்பதற்காக சவுதி அரேபிய மன்னரைச் சந்திக்க திட்டமிட்டுள்ளார். பாகிஸ்தானில் அடுத்தாண்டு பொதுத் தேர்தல் நடக்க உள்ளது. அதில் போட்டியிடப் போவதாக அறிவித்த முஷாரப் இந்தாண்டு மார்ச் மாதம் வருவதாக முதலில் தெரிவித்தார்.
பின் பிப்ரவரி மாதத்தில் வரப் போவதாக அறிவித்தார். சமீபத்தில் அறிக்கை வெளியிட்ட அவர் இம்மாத இறுதியிலேயே பாகிஸ்தான் திரும்ப முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்தார்.இந்நிலையில் அவர் நாடு திரும்பிய பின் அவர் மீதான வழக்கின் அடிப்படையில் அவரை அரசு மற்றும் இராணுவம் கைது செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த கைது நடவடிக்கையைத் தவிர்ப்பதற்காக இம்மாதம் 22ம் திகதி சவுதி மன்னர் அப்துல்லாவை முஷாரப் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.
பாகிஸ்தான் உள்நாட்டு அரசியலில் சவுதி அரேபியா நடுவர் பணியாற்றி வருவதால் அந்நாட்டின் மன்னர் மூலம் தன் மீதான வழக்கின் அடிப்படையில் கைது நடவடிக்கைகள் இருக்காது என்ற உறுதியை ஜனாதிபதி ஸர்தாரி மற்றும் இராணுவத் தளபதி கயானி ஆகியோரிடமிருந்து பெறுவதற்காக இந்த சந்திப்பை அவர் ஏற்பாடு செய்துள்ளார்.அமெரிக்காவில் வசிக்கும் பாகிஸ்தானி தொழிலதிபர் ரஜா புகாரி முஷாரப்பின் மிக நெருங்கிய வட்டாரத்தைச் சேர்ந்தவர். அவர் இதுகுறித்து அமெரிக்க அதிகாரிகளை விரைவில் சந்தித்துப் பேச உள்ளார். முஷாரப் தனது கைது நடவடிக்கை தவிர்க்கப்பட்டதாக உத்தரவாதம் பெற்ற பின் தான் நாடு திரும்பும் திகதியை அறிவிக்க உள்ளார்.
அணு ஆயுத தயாரிப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்த தயார்: ஈரான் அறிவிப்பு.
அணு ஆயுதங்கள் தயாரிப்பு விவகாரம் குறித்த பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக ஈரான் அறிவித்துள்ளது. அணுமின் நிலையங்களுக்காக தான் அணுசக்தியைப் பயன்படுத்துவதாக ஈரான் கூறிவந்தாலும், அணு ஆயுதத் தயாரிப்பில் அந்நாடு ஈடுபடுவதாகக் குற்றம்சாட்டி வருகின்றன.
அமெரிக்கா உட்பட நாடுகள் இதன் காரணமாக ஈரான் மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளை அந்நாடுகள் விதித்துள்ளன. இதற்கிடையில் ஈரான் ஏவுகணைப் பரிசோதனைகளை நடத்தி மேற்குலகத்தை மிரட்டியுள்ளது.
அதனால் ஈரானைப் பணிய வைக்க மேலும் பல பொருளாதாரத் தடைகளை விதிக்க மேற்குலகம் தயாராகி வருகிறது. இந்நிலையில் அணு ஆயுதத் தயாரிப்பு குறித்த பேச்சுவார்த்தைக்குத் தயார் என ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மேமன்பரஸ்ட் தெரிவித்தார்.இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், ஐரோப்பிய கூட்டமைப்பு கொள்கைப் பிரிவு தலைவர் கேத்ரீன் ஆஷ்டனின் திகதி மற்றும் இடம் குறித்த அறிவிப்புக்காக காத்திருக்கிறோம். அவரது அறிவிப்பு வெளியான உடன், ஈரான் தேசிய பாதுகாப்புக் கவுன்சில் செயலர் ஜலீலி, தனது முடிவுகளை அறிவிப்பார். தொடர்ந்து ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என்றார்.
ஜப்பானை கிண்டல் செய்யும் வடகொரியா.
வடகொரியாவின் அரசியல் ஸ்திரத் தன்மை குறித்து தொடர்ந்து சந்தேகப்பட்டு வரும் ஜப்பானை, இந்த உலகில் ஜப்பானின் அரசியல் நிலவரம் சிரிப்பாய் சிரிக்கிறது என வடகொரியா கிண்டல் செய்துள்ளது.ஜப்பானின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் இல் இறந்த பின் அந்நாடு அரசியல் ஸ்திரத் தன்மையை இழந்து சீர் குலைந்து விடும் என விமர்சித்திருந்தனர்.
இதற்குப் பதிலளிக்கும் வகையில் வடகொரியாவின் தேசிய செய்தி நிறுவனமான கே.சி.என்.ஏ வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது: பிரதமர்களை மாற்றிக் கொண்டே இருப்பதில் ஜப்பான் தான் இன்னும் உலகில் முதலிடத்தில் இருக்கிறது.அதன் பிழைப்பைப் பார்த்து உலகம் சிரிப்பாய் சிரிக்கிறது. அங்கு ஒவ்வொரு நாளும் அரசியல் திண்டாடிக் கொண்டு தான் இருக்கிறது.இதனால் தான் வடகொரியா உலகின் மிக ஸ்திரமான அரசியலைக் கொண்டுள்ளது என்பதை ஜப்பானால் புரிந்து கொள்ள முடியவில்லை என்று செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எங்களை நாயை விடக் கேவலமாக நடத்துகின்றனர்: இந்திய வர்த்தகர்கள் கதறல்.
சீனாவின் இவு நகரில் உள்ள ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ள இந்திய வர்த்தகர்கள் வெளியிட்டுள்ள தகவலில், தங்களை சீனர்கள் நாயை விடக் கேவலமாக நடத்துவதாகவும், மத்திய அரசு காப்பாற்றா விட்டால் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் தெரிவித்துள்ளனர்.
சீனாவின் ஷீஜியாங் மாகாணத்தில் இவு நகரில் உள்ள ஓட்டலில் தற்போது தங்க வைக்கப்பட்டுள்ள இந்திய வர்த்தகர்கள் தீபக் ரஹேஜா மற்றும் ஷ்யாம் சுந்தர் அகர்வால் இருவரும் விரைவில் ஷாங்காய் நகருக்கு கொண்டு செல்லப்பட உள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
மேலும் அவர்களுடன் பாதுகாப்பு கருதி இந்தியத் தூதரக அதிகாரிகள் இருவரும் செல்வர் என அவர் கூறியுள்ளார். இவ்விவகாரத்தில் இந்தியத் தூதரக அதிகாரி பாலச்சந்திரனுக்கு உணவு, மருந்து வழங்கப்படாமல் தாமதம் செய்யப்பட்டது என்று வெளியான செய்திகளுக்கு நேற்று சீன வெளியுறவு அமைச்சகம் மறுப்பு தெரிவித்தது.அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹோங் லீ இதுகுறித்துக் கூறியதாவது: இவு நகரில் இந்தியத் தூதரக அதிகாரிக்கு உணவு, மருந்து வழங்கப்படவில்லை என்ற செய்தி தவறானது.
இவ்விவகாரம் வர்த்தகத்தால் விளைந்த சிக்கல். அதனால் சீன சட்டப்படி இவ்வழக்கு நடக்கும். இவ்வழக்கின் வித்தியாசத்தை உணர்ந்து இதை முறையாக நடத்த இந்தியா உதவும் எனவும், சீனாவில் உள்ள இந்திய வர்த்தகர்கள் சீன சட்டப்படி நடக்க வேண்டும் என அவர்களுக்கு இந்தியா அறிவுறுத்தும் எனவும் நம்புகிறோம் என ஹோங் லீ தெரிவித்தார்.
அதேநேரம் இவ்வழக்கில் இந்திய வர்த்தகர்களை சிறை பிடித்து வைத்த ஐந்து சீனர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையில் இவு நகரில் இருந்து தனியார் செய்தி நிறுவனம் ஒன்றை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய தீபக் ரஹேஜா, இங்கு ஓட்டலுக்குள்ளேயே சீன வர்த்தகர்கள் வந்துவிட்டனர்.எங்களின் உடைகளைக் களைந்து விட்டு அடிக்கின்றனர், பொருட்களை தூக்கி வீசுகின்றனர், மிருகங்களைப் போல நடத்துகின்றனர், எங்களைக் காப்பாற்றாவிட்டால் நாங்கள் தற்கொலை செய்து கொள்வோம் எனத் தெரிவித்துள்ளார்.
இவ்வழக்கில் இந்திய வர்த்தகர்களை இந்தியாவுக்கு அனுப்ப மாட்டோம் எனவும், வழக்கு முடியும் வரை அவர்கள் சீனாவில் தங்க வைக்கப்படுவர் எனவும் இந்தியத் தூதரகம் சீனாவுக்கு உறுதியளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.ஆனால் தொலைபேசியில் பேசிய ரஹேஜா, நாங்கள் ஏழைகள், எங்களால் எதுவும் செய்ய முடியாது, மத்திய அரசுதான் எங்களைக் காப்பாற்ற வேண்டும் எனக் கோரியுள்ளார்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF