எனவே விரைவில் கட்சிக்குள் மற்றுமொரு பிளவு ஏற்படுவதனை தடுக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே பிளவடைந்து சென்றுள்ள சிலரை வெளிநாட்டு உளவு நிறுவனங்கள் வழிநடத்தி வருகின்றதாகவும் கட்சியை விட்டு தாம் விலகிச் செல்வதற்கும் வெளிநாட்டு உளவுப் பிரிவுகளின் செயற்பாடுகள் காரணமாக அமைந்தது என்றும் விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.
எனவே பதவி ஆசைகளை துறந்து கட்சியை பாதுகாத்துக்கொள்ள சோமவன்ச, ரில்வின் போன்றோர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.
விசாரணைகளையும் எதிர்கொள்ள தயார்- ஐ.தே.கட்சியின் பா.உ தயாசிறி.
தனக்கு எதிராக மேற்கெொள்ளப்படும் எந்தவெொரு ஒழுக்காற்று விசாரணைகளையும் எதிர்கெொள்ளத் தயாராக இருப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
கம்பஹா மாவட்டத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கட்சிக்காக உண்மையாக உழைக்கும் தன்மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் தொடர்பாக தான் கவலையடைவதாகவும் எந்தவொரு தலைவருக்கு எதிராகவும் கருத்துக்களை தெரிவிக்க தான் ஒருபோதும் பின்னிற்கப் போவதில்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி முதியவர்களைக் கொண்ட கட்சியாக மாறி விட்டதெனவும் அரசுக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுப்பதன் மூலமே இதனை இளைஞர்கள் உள்ள கட்சியாக மாற்ற முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அண்மையில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் உள்ளிட்ட முக்கிய பதவிகளுக்காக சிறிகொத்தவில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பு மோசடியானது என தயாசிறி ஜயசேகர குற்றம் சுமத்தியிருந்தார். இக்குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம், சிரேஷ்ட தலைவர்கள் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
உயர்தர பெறுபேற்றில் குழறுபடி! பரீட்சைகள் ஆணையாளர் மீது ஜனாதிபதியின் குழு விசாரணை.
இந்தக்குழு கடந்த வெள்ளிக்கிழமை கூடி விசாரணைகள் தொடர்பில் ஆராயந்துள்ளதுடன், அதன் அடிப்படையில் நாளை பரீட்சைகள் ஆணையாளர் அநுர எதிரிசிங்கவிடம் விளக்கத்தை பெறுவது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகளின் பெறுபேறுகள் கணணி தொழில்நுட்ப பிரச்சினை காரணமாகவே பிழையாக பதிவு செய்யப்பட்டதாக, முன்னர் பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்திருந்தார்.
அதன்பின்னர், தகுதி வாய்ந்த பணியாளர்கள் இல்லைமை காரணமாகவே இந்த பிரச்சினை ஏற்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதனடிப்படையிலேயே பரீட்சைகள் ஆணையாளரிடம் அது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் ஜனாதிபதியினால் அமைக்கப்பட்ட குழு தமது விசாரணை அறிக்கையை இரண்டு வாரத்தில் ஜனாதிபதியிடம் கையளிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மலேசியாவிலிருந்து தப்பிச் செல்ல முயன்ற 12 இலங்கையர் கைது.
பந்தார் பெனாவர் மாகாணத்தில் உள்ள பன்டாய் சுங்காய் டெனாங் பகுதியில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கைதானவர்கள் 17 தொடக்கம் 40 வயதுடையவர்கள் என, மலேசிய எல்லை பாதுகாப்பு பிரதி தளபதி என். கலைசெல்வன் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டவர்கள் தற்போது பந்தார் பெனாவர் காவற்துறையிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இவ்வாறு சட்ட விரோதமான முறையில் மலேசியா ஊடாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 985 பேர் கடந்த வருடம் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதிவேக நெடுஞ்சாலையில் பஸ் சேவை ஜனவரி 3ஆம் திகதி ஆரம்பம்.
இச்சேவைக்காக இரண்டு சொகுசு வசதிகளைக் கொண்ட பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இச்சேவையானது, காலி தரிப்பிடத்திலிருந்து ஆரம்பமாகி மஹரகம பஸ் தரிப்பிடத்தை வந்தடையும் எனவும் இதற்கான ஒரு வழிப் பயணக் கட்டணமாக ரூபா 400 அறவிடப்படும் எனவும் எம்.டி. பந்துசேன தெரிவித்துள்ளார்.
காலி நகரிலிருந்து காலை 6.00, 8.00, 10.00 மற்றும் நண்பகல் 12 மணிக்கும் மாலை 2.30 மணிக்கும் சேவைகள் ஆரம்பமாகும்.
மஹரகமவிலிருந்து காலை 6.00, 8.00 10.00 நண்பகல் 12.30 மற்றும் 2.30 மாலை 4.30 மணிக்கு பஸ் புறப்படும். காலியிலிருந்து மஹரகமவை வந்தடையும் பயணிகள் அங்கிருந்து புறக்கோட்டைக்கு வருவதற்கு விசேட இ.போ.ச. பஸ் சேவைகளும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இச்சேவையை போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம எதிர்வரும் 3 ஆம் திகதி மஹரகம பஸ் தரிப்பிடத்தில் ஆரம்பித்து வைக்கவுள்ளாரென்றும் இ.போ. சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
சுற்றுலாத் தளங்களின் பட்டியலில் இலங்கை 5ஆம் இடத்தில்.
இவ்வருடத்தில் சுற்றுலா பயணிகளுக்களின் ஈர்ப்புமிக்க புதிய சுற்றுலாத் தளமாக இலங்கை விளங்கும் என அச்சஞ்சிகை எதிர்வு கூறியுள்ளது.
இப்பட்டியலில் இலங்கை மூன்றாம் இடத்தில் உள்ளது. பிரிட்டன், அவுஸ்திரேலியா, அபுதாபி ஆகியவற்றைவிட இலங்கை முன்னிலை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார் முஷாரப்.
பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி பர்வேஷ் முஷாரப் இந்த மாதம் நாடு திரும்ப போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பெனாசிரின் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆட்சியை பிடித்தது. அதை தொடர்ந்து பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி முஷாரப் நாடு கடத்தப்பட்டார்.
துபாய் மற்றும் இங்கிலாந்தில் தங்கி பல கூட்டங்களில் சொற்பொழிவு நிகழ்த்தி வருகிறார். தற்போது லண்டனில் தங்கியுள்ள அவர் அங்கிருந்தபடியே “அனைத்து பாகிஸ்தான் முஸ்லிம் லீக்” என்ற கட்சியை தொடங்கியுள்ளார்.
இந்நிலையில் அவர் இந்த மாதம் இறுதியில் தனது சொந்த நாடான பாகிஸ்தானுக்கு திரும்புகிறார் மற்றும் இந்த ஆண்டின் இறுதியில் நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளார்.
முஷாரப் ஜனாதிபதியாக இருந்த போது லண்டனில் தங்கியிருந்த முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ நாடு திரும்பினார். கராச்சியில் நடந்த தேர்தல் பிரசார பேரணியில் பங்கேற்ற போது துப்பாக்கியால் சுட்டும், வெடிகுண்டு வீசியும் கொல்லப்பட்டார். முஷாரப் போதிய பாதுகாப்பு கொடுக்காததால் தான் அவர் கொலை செய்யப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மேலும் பெனாசிர் கொலை வழக்கில் இவரும் ஒரு குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணைக்கு அவர் இதுவரை நேரில் ஆஜராகாத காரணத்தினால், கைது வாரண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவர் பாகிஸ்தான் திரும்பும் பட்சத்தில் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பலில் தீ விபத்து.
ரஷ்ய இராணுவத்தைச் சேர்ந்த அணு விசை நீர்மூழ்கிக் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் காயமடைந்தனர்.
எகாடெரின்பர்க் என்ற டெல்டா-4 வகையைச் சேர்ந்த அணுவிசை நீர்மூழ்கிக் கப்பல் ரஷ்ய இராணுவத்துக்குச் சொந்தமானது.
இது நோர்வே அருகில் அமைந்துள்ள ரஷ்யக் கடற்படைத் தளமான ரோஸ்லியாகோவோவில் பராமரிப்புப் பணிக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இக்கப்பல் அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லக் கூடியது.
சம்பவ தினத்தன்று இதன் இரு அணு உலைகளின் செயல்பாடும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. மேலும் இதிலுள்ள அணு ஆயுதங்கள் உள்ளிட்ட ஏனைய ஆயுதங்களும் முன்னதாகவே அப்புறப்படுத்தப்பட்டு இருந்தன.
இந்நிலையில் கப்பலின் மேற்புறத்தில் உள்ள மரக் கட்டுமானத்தில் தீ பிடித்தது. இது கப்பலின் உள்புறத்திலும் பரவியது.
11 தீயணைப்புப் படைப்பிரிவுகளும், கப்பற்படையைச் சேர்ந்த தீயணைப்புப் படகு ஒன்றும் சேர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. தீயின் உக்கிரம் அதிகமாக இருந்ததால் ஹெலிகாப்டர் ஒன்றும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டது. நீண்ட நேர முயற்சிக்குப் பின் தீ அணைக்கப்பட்டது.
மீண்டும் தீப்பிடிக்கா வண்ணம் கப்பல் கடலின் உள்ளே இழுத்துச் சென்று நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்று தெரிவித்த அவர்கள், சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
மேலும் கப்பலிலுள்ள அணு உலைகளின் செயல்பாடு முன்னதாகவே நிறுத்தப்பட்டு இருந்ததால், கதிர்வீச்சு அபாயம் ஏற்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
அமெரிக்காவை மிரட்டும் ஈரானின் ஏவுகணை சோதனை.
ஈரானின் அணு ஆயுத கொள்கைக்கு எதிராக பொருளாதார தடை விதிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பெர்சியன் வளைகுடாவில் உள்ள ஸ்ரெயிட் ஆப் ஹார்மோஷ் துறைமுகம் வழியாக அமெரிக்கா எண்ணெய் கப்பல்களை செல்ல விட மாட்டோம் என ஈரான் எச்சரிக்கை விடுத்தது.
தற்போது அமெரிக்காவை மிரட்டுவதற்காக ஸ்ரெயிட் ஆப் ஹார்மோஷ் துறைமுக பகுதியில் ஏவுகணை சோதனையை ஈரான் நடத்தியது.
குறைந்த தூரம் மற்றும் நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகள், நிலத்தில் இருந்து கடலுக்குள் பாய்து சென்று தாக்கும் ஏவுகணைகள், விண்ணில் சென்று தாக்கும் ஏவுகணைகள் என அனைத்து ரக ஏவுகணைகளையும் சோதனை செய்தது.
இந்த சோதனை வெற்றிகரமாக நடந்ததாக ஈரான் கப்பற்படை செய்தி தொடர்பாளர் கமாண்டர் முகமது மவுசவி தெரிவித்துள்ளார். ஆனால் இதை அமெரிக்கா பொறுமையுடன் நிதானமாக கவனித்து வருகிறது.
அதே நேரத்தில் ஈரானின் இந்த மிரட்டலை சகித்து கொள்ள முடியாது என தெரிவித்துள்ளது. இதற்கிடையே இந்த பதட்டமான சூழ்நிலையில் ஈரானின் எதிர் நாடான சவுதி அரேபியா அமெரிக்காவிடம் இருந்து 84 புதிய போர் விமானங்களை வாங்குகிறது. அதற்கான ஒப்பந்தம் சமீபத்தில் கையெழுத்தானது.
பாகிஸ்தானில் கார்குண்டு தாக்குதல்: 9 பேர் பலி.
பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் உள்ள பலூசிஸ்தான் மாகாண முன்னாள் முதல் மந்திரி மிர்முகமது நசீர் மெஸ்காலின் மகன் ஷபீப் மெஸ்கால் வீட்டின் அருகே சக்தி வாய்ந்த கார்குண்டு வெடித்தது.
இதனால் அப்பகுதி முழுவதும் கடுமையாக அதிர்ந்ததில் 9 பேர் பலியானார்கள், 20 பேர் காயம் அடைந்தனர்.
அவர்கள் அனைவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. குண்டு வெடிப்பு குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினார்கள்.
அதில் தீவிரவாதிகள் காரில் குண்டு வைத்து வெடிக்க செய்தது தெரியவந்துள்ளது. இந்த தாக்குதல் முன்னாள் முதல் மந்திரி மிர் முகமது நசீர் மெஸ்காலின் மகன் ஷபீப் மெஸ்காலை குறி வைத்து நடந்தது. ஆனால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
பேஸ்புக் நட்பு வட்டாரத்திலிருந்து தோழி பிரிந்ததால் வாலிபர் தற்கொலை.
பேஸ்புக் நட்பு வட்டத்தில் இருந்து தோழி பிரிந்ததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இங்கிலாந்தின் குளோஸ்டெர்ஷைர் பகுதியில் உள்ளது ஹைட். இங்கு வசித்தவர் சைமன் பாக்ஸ்லே(21).
சமூக இணையதளமான பேஸ்புக்கில் இவர் பலருடன் நட்பு வைத்திருந்தார். அவர்களில் இளம்பெண் ஒருவரும் இருந்தார். அவர் மீது சைமனுக்கு காதல் ஏற்பட்டது.
தனது எண்ணத்தை அந்த பெண்ணிடம் வெளிப்படுத்தினார். அவ்வளவு தான், தனது பேஸ்புக்கில் இருந்து நண்பர் என்ற தொடர்பை அந்த பெண் துண்டித்துக் கொண்டார்.
விரக்தி அடைந்த சைமன், மற்ற நண்பர்கள் மூலம் அந்த பெண்ணை தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் அந்த நண்பர்களும் சைமனை தரக்குறைவாக பேசினர்.
அதில் மனம் உடைந்த சைமன் வீட்டு தோட்டத்தில் தூக்கு போட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொள்வதற்கு முன் அந்த பெண்ணுக்கு எழுதிய கடிதத்தில், எனக்காக நீ செய்த எல்லாவற்றுக்கும் மிகவும் நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரெஞ்சு நபர்களுக்கு மட்டுமே இனி பிரான்சில் இடம் உண்டு.
பிரான்ஸ் நாட்டில் இனி குடியுரிமை கேட்டுவரும் வெளிநாட்டவர்கள் பிரெஞ்சு மொழியையும், கலாச்சாரத்தையும் ஏற்றுக்கொண்டிருந்தால் மட்டுமே குடியுரிமை பெற முடியும் என்று உள்துறை அமைச்சர் கிளாடி குயெண்ட் தெரிவித்துள்ளார்.
குடியுரிமை கேட்டுவரும் நபர்கள் தனது உரிமை மற்றும் பொறுப்புணர்வுக்கான புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும்.
குடியுரிமை விண்ணப்பதாரர்கள் பிரான்சில் இருந்து கொண்டே இன்னொரு நாட்டில் குடியுரிமையைப் பெறக்கூடாது. ஆனால் இரட்டைக்குடியுரிமைக்கு அனுமதி உண்டு.
பிரான்ஸ் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசியின் ஆளுங்கட்சி உறுப்பினரான குயெண்ட் கூறுகையில், பிரெஞ்சு மொழியின் சமூக மதிப்புகள் மற்றும் குறியீடுகளை ஏற்றுக்கொள்கின்ற இந்த நடைமுறை ஒரு நிகழ்வாகும் என்றார். இத்தகைய நடைமுறையைப் புகுத்தவேண்டிய அவசியம் இப்போது பிரான்சுக்கு எழுந்துள்ளது.
ஒவ்வோர் ஆண்டும் சுமார் 1,00,000 முஸ்லீம்கள் பிரான்சு குடியுரிமை பெறுகின்றனர். இவர்கள் பிரெஞ்சுக்காரராக மாற வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று மனைவியுடன் வாழ்பவருக்கு பிரெஞ்சு குடியுரிமை அளிக்கக்கூடாது என்றார்.
மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல்: கனடாவுக்கு 23வது இடம்.
மக்கள் மகிழ்ச்சியாக வாழும் நாடுகளின் பட்டியலில் கனடா 23வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த ஆய்வு 58 நாடுகளில் உள்ள 53,000 நபர்களிடம் நடத்தப்பட்டது.
ஃபிஜி தீவுகள் முதலிடத்தைப் பெற்றன. அமெரிக்க மக்களைவிட அதிக மகிழ்ச்சியுடன் வாழ்பவர்கள் ஆப்கானிஸ்தானியர்கள் என்பது தெரியவந்துள்ளது.
கனடா மக்களில் 1003 பேரிடம் மகிழ்ச்சி பற்றிக் கேட்கப்பட்டதில் 60 சதவீதம் பேர் மகிழ்ச்சியாக இருப்பதாகத் தெரிவித்தனர். 13 சதவீதம் பேர் வருத்தமாக இருக்கின்றனர். 26 சதவீத பேருக்கு எப்படி இருக்கிறோம் என்று சொல்லத் தெரியவில்லை.
இதுகுறித்து ஷீல்சு கருத்து தெரிவிக்கையில், கனடாவில் எதிர்பார்ப்புகள் ஏராளம். குறைந்த உழைப்பில் நிறைந்த லாபம் கிடைப்பதையே மகிழ்ச்சி என்று நாம் கொள்கிறோம். மற்ற நாட்டினரைவிட அதிகமாக நாம் எதிர்பார்க்கிறோம் என்றார்.
ஐக்கிய அரபு நாடுகளுக்கு அமெரிக்கா ஆயுத விநியோகம்.
ஐக்கிய அரபு நாடுகளுடன் 34 லட்சம் டொலர் மதிப்பிலான ஆயுத விநியோக ஒப்பந்தத்தை அமெரிக்கா மேற்கொண்டுள்ளது.
ஈரான், அமெரிக்கா இடையில் ஏற்பட்டுள்ள விரிசல் அதிகரித்து வரும் நிலையில் ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் அமெரிக்கா இடையிலான இந்த ஆயுத விநியோக ஒப்பந்தம் நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி மொத்தம் 34 லட்சம் டொலர் மதிப்பிலான பல்வேறு ராணுவத் தளவாடங்களை அமெரிக்கா ஐக்கிய அரபு நாடுகளுக்கு விற்கிறது.
சமீபத்தில் தான் அமெரிக்கா, சவுதி அரேபியாவுடன் 3 கோடி டொலர் மதிப்பிலான ஆயுத விநியோக ஒப்பந்தத்தை மேற்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்ற தேர்தலில் ஆங் சான் சூகி போட்டியிட முடிவு..
மியான்மர் நாட்டில் நாடாளுமன்றத்திற்கான இடைதேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 1ந் திகதி நடைபெற உள்ளது.
நாட்டில் உள்ள 48 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் 40 தொகுதிகள் நாடாளுமன்ற கீழ் சபையாகும்.
இந்த இடைத்தேர்தலில் முக்கிய எதிர்க்கட்சி தலைவரும், தேசிய ஜனநாயக லீக் கட்சி தலைவருமான ஆங் சான் சூகி தலைநகர் அருகிலுள்ள காவாமூ தொகுதியில் கீழ் சபைக்கு போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது.
ஜப்பானில் நிலநடுக்கம்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோ மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.
அந்நாட்டு நேரப்படி மதியம் 2.28 ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 7.0 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை ஏதும் விடப்படவில்லை.
கனடாவில் இந்திய மாணவர் சுட்டுக் கொலை.
கனடாவில் கடை முதலாளி குடும்பத்தினர் கிறிஸ்துமஸ் கொண்டாட சென்றதால் வியாபாரத்தை கவனித்த இந்திய இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்தியாவின் பஞ்சாப் மாநில பஞ்சகுலா பகுதியை சேர்ந்தவர் ஹரிவன்ஷ் குப்தா. அவரது மகன் அலோக் குப்தா(27).
சண்டிகரில் பள்ளி படிப்பை முடித்து, டிஏவி கல்லூரியில் பட்டம் பெற்று, நொய்டா ஐசிஐசிஐ வங்கியில் பணியாற்றினார். பிறகு எம்பிஏ படிக்க 6 மாதங்கள் முன் கனடா சென்றார்.
அங்குள்ள கல்லூரியில் படித்த அலோக் குப்தா, பகுதி நேரமாக வான்கோவரின் சர்ரே பகுதியின் பலசரக்கு கடையில் பணியாற்றினார். கிறிஸ்துமஸ் நாளில் விடுமுறை என்ற போதிலும், முதலாளி குடும்பத்தினர் கிறிஸ்துமஸ் கொண்டாட சென்றதால், கடையை பார்த்துக் கொண்டார்.
அப்போது யாரோ குப்தாவை துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பினர். இதில் குப்தா படுகாயம் அடைந்தார். ரத்த வெள்ளத்தில் அவர் சாலையில் ஓடினார். உதவி கேட்டார். பக்கத்து வீட்டினர் வந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
எனினும் வழியில் அவர் பலியானதாக டாக்டர்கள் அறிவித்தனர். கிறிஸ்துமஸ் தினத்தில் நடந்த இந்த துப்பாக்கி சூடு பற்றி வான்கோவர் காவல்துறையினர் விசாரணை நடத்துகின்றனர்.
எனினும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. துப்பாக்கி சூட்டை பார்த்த நேரடி சாட்சிகள் யாரும் இல்லாததால் கொலையாளி ஒருவரா அல்லது கும்பலா, கொள்ளை அடிக்க நடத்தப்பட்டதா என துப்பு கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.
கல்லூரியிலும் வசிப்பிடத்திலும் நற்பெயர் கொண்ட அலோக் குப்தா சுட்டுக் கொல்லப்பட்டது அவரது குடும்பத்தினரை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து தொந்தரவு செய்த பெண் கைது.
இங்கிலாந்தில் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு 800க்கும் அதிகமான முறை போன் செய்து டார்ச்சர் செய்த டீன் ஏஜ் இளம்பெண் கைது செய்யப்பட்டார்.
லண்டனை சேர்ந்தவர் கெர்ரி ஆன் மோதே(18). இவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து ஏதாவது பரபரப்பாக பேசி வந்துள்ளார்.
கடந்த கிறிஸ்துமஸ் தினத்தன்றும், அதற்கடுத்த நாட்களிலும் கட்டுப்பாட்டு அறை எண் 999க்கு 756 முறை போன் செய்து ஏதேதோ தகவல் தெரிவித்துள்ளார். அதற்கு முன் கடந்த டிசம்பர் 11ம் திகதியில் இருந்து 13ம் திகதிக்குள் 44 முறை போன் செய்து பேசியுள்ளார்.
இதனால் கோபம் அடைந்த லண்டன் காவல்துறையினர் கெர்ரியை கைது செய்து ஹன்டிங்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அப்போது அடிக்கடி போன் செய்து தொந்தரவு கொடுத்ததை நீதிபதியிடம் கெர்ரி ஒப்புக் கொண்டார். இந்த வழக்கு விசாரணை முடிந்து விரைவில் அவருக்கு தண்டனை வழங்கப்படும் என்று காவல்துறையினர் கூறினர்.
1000 பேருக்கு எயிட்ஸ் நோயை பரப்பிய மர்ம ஆசாமி கைது.
அமெரிக்காவை சேர்ந்த 51 வயது ஆசாமி ஆயிரத்துக்கும் அதிகமான ஆண்கள் மற்றும் பெண்களுக்கு எயிட்ஸ் நோயை பரப்பியது தெரியவந்துள்ளது.
அமெரிக்காவை சேர்ந்தவர் டேவிட் டீன்ஸ்மித்(51). சந்தேகப்படும்படி இவருடைய நடவடிக்கைகள் இருந்ததால், மிச்சிகன் காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது இதுவரை ஆண்கள், பெண்கள் என ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு எயிட்ஸ் நோய் பரப்பி இருக்கிறேன் என்று டேவிட் கூறியதை கேட்டு காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து மிச்சிகன் காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது: எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட டேவிட் பல ஆண்டுகளாக ஆண்கள், பெண்கள் என 3,000க்கும் அதிகமானவர்களுக்கு எயிட்ஸ் நோயை பரப்பியுள்ளார்.ஆனால் எப்போது எச்ஐவி பரிசோதனை செய்தார், எப்போது நோயை உறுதி செய்தார் என்ற விவரங்கள் இல்லை. எயிட்ஸ் பாதிப்பு இருப்பது தெரிந்து அதை மற்றவர்களுக்கு பரப்ப வேண்டும் என்ற உள்நோக்கத்துடனே செயல்பட்டுள்ளார்.
இதனால் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவில்லை. எனினும் ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம். அவர் மீது 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றனர்.
முன்கூட்டியே தேர்தல் நடைபெறாது: கிலானி.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் நடக்க வாய்ப்பில்லை என்றும், தனது ஆட்சிக் காலத்தை ஆளுங்கட்சி பூர்த்தி செய்யும் என்றும் அந்நாட்டு பிரதமர் கிலானி தெரிவித்துள்ளார்.
தனது சொந்த ஊரான முல்தானில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர் மேற்கண்ட தகவலைத் தெரிவித்தார்.திட்டமிட்டபடி 2013-ம் ஆண்டே பொதுத்தேர்தல் நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டார். அரசியலமைப்புச் சட்டப்படியே தனது அரசு இயங்குவதால், அடுத்த பொதுத்தேர்தல் சட்டப்படியே நடக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவித்ததாவது: நாங்கள் ஆட்சியில் நீடிப்பது சிலருக்குப் பிடிக்கவில்லை. அப்படிப்பட்டவர்களே தேர்தல் குறித்துப் பேசி வருகின்றனர். ஆனால் நாங்கள் சட்டப்படியும், அரசியலமைப்புப்படியும் இயங்கி வருவது அவர்களுக்குத் தெரியவில்லை.
கருத்தொற்றுமையின் அடிப்படையிலேயே நாடாளுமன்றத்தில் நாங்கள் செயல்பட்டு வருகிறோம். ஜனாதிபதி ஆஸிப் அலி ஸர்தாரியுடனும், ராணுவத் தலைமைத் தளபதி பர்வேஸ் கயானியுடனும் சுமூகமான உறவு நிலவுகிறது.கயானியை 3 வருட பதவி நீடிப்பில் இருக்கும்படி கடந்த ஆண்டு நான் கெஞ்சியதாக வந்த தகவலில் உண்மையில்லை. உருது மொழியி நான் தெரிவித்த கருத்துகளை, ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும்போது குழப்பம் ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைமையிலான கூட்டணி அரசு ஸ்திரமாக உள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் பூர்த்தி செய்யப்படவேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர்.எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள மேலவைத் தேர்தலை சீர்குலைக்கவே, பொதுத்தேர்தல் முன்கூட்டியே நடத்தப்பட வேண்டும் என்ற கூக்குரல் எழுப்பப்படுகிறது.
அமெரிக்கா மற்றும் நேட்டோ குறித்து மறுசீரமைக்கப்பட்ட கொள்கைகளை நாடாளுமன்றம் அங்கீகரிக்கும். அமெரிக்காவுடனான உறவுகள் குறித்த பரிந்துரைகளை தேசியப் பாதுகாப்புக்கான நாடாளுமன்றக் குழு தயார் செய்கிறது.அது குறித்து நாடாளுமன்றத்தின் கூட்டுக் குழுவில் விவாதிக்கப்படும். ஸ்திரமான, வலிமையான ஆப்கானிஸ்தான் அமைவதையே பாகிஸ்தான் விரும்புகிறது. அந்நாட்டுடன் நட்புறவையே நாங்கள் விரும்புகிறோம்.
பஞ்சாபில், செராய்கி மாகாணத்தை உருவாக்குவதில் கூட்டணிக் கட்சிகளுடன் கருத்தொற்றுமை எட்டுவதில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இம்ரான் கானின் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியினால் எவ்வித ஆபத்துமில்லை. இது போன்று ஒரே இரவில் ஆரம்பிக்கப்பட்ட கட்சிகள் ஒரே இரவிலேயே காணாமல் போய்விடும் என்றார் கிலானி.
பிரான்சின் பாதுகாப்பு துறை அமைச்சர் ஆப்கானிஸ்தானுக்கு திடீர் வருகை.
ஆப்கானிஸ்தானுக்கு பிரான்சின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜெரார்டு இரு நாள் பயணமாக திடீரென வருகை புரிந்தார்.இந்த பயணத்தில் ஆப்கானின் ஜனாதிபதி ஹமீது கர்சாய் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் அப்துல் ரஹீம் வர்தாக்கையும் ஜெரார்டு சந்திப்பார்.நேட்டோ தலைமையில் இயங்கும் சர்வதேச பாதுகாப்பு உதவிப்படையின்(ISAF) தளபதி ஜான் ஆலனையும் லோங்குவே சந்திப்பார். பின்பு பிரெஞ்சுப் படைகளைப் பார்வையிடுவார்.
கடந்த 2001ம் ஆண்டு முதல் பிரெஞ்சு படையினர் ஆப்கானிஸ்தானில் தங்கி போர்ப்பயிற்சி அளித்து வருகின்றனர். இவர்களில் இதுவரை 78 பேர் மரணமடைந்துள்ளனர். கடந்த 2011 ஆம் ஆண்டில் 400 வீரர்கள் பிரான்ஸ் திரும்பி விட்ட நிலையில் இன்னும் 3600 பேர் பயிற்சியளித்து வருகின்றனர்.பத்தாண்டுப் போரில் கடந்த 2011ஆம் ஆண்டில் மட்டும் அதிகபட்சமாக 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர். எதிர்வரும் 2014ஆம் ஆண்டிற்குள் நேட்டோ படையைச் சேர்ந்த இந்த வீரர்கள் கொஞ்சம் கொஞ்சமாகத் தம் தாய்நாட்டிற்குத் திரும்பி விடுவர்.
யூரோ மண்டலத்திற்கு எந்தவித ஆபத்தும் இல்லை: ஜேர்மனியின் நிதியமைச்சர்.
யூரோ மண்டலம் சிதறிப் போகும் அளவுக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை என்று ஜேர்மனியின் நிதியமைச்சர் கூறியுள்ளார்.ஐரோப்பியத் தலைவர்கள் யூரோ மண்டலத்தை காப்பாற்ற அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகின்றனர். மேலும் அடுத்த 12 மாதங்களில் இந்த யூரோ மண்டல கடன் தொல்லை தீர்ந்து நிதிநிலைமை சீராகிவிடும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
ஐரோப்பாவின் நாடுகளான கிரீஸ், இத்தாலி, ஸ்பெயின் போன்றவை கடனில் மூழ்கித் தத்தளிக்கும் சூழ்நிலையில் ஜேர்மனியின் பொருளாதாரம் சிறப்பாகவே இருந்து வருகிறது.யூரோ பத்திரங்கள் ஐரோப்பிய ஒப்பந்தங்களுக்கு எதிரானவை என்பதால் இவற்றை நம்புவது ஆபத்தானது என்று ஷாபிள் எச்சரித்தார்.அடுத்த ஆண்டுக்குள் ஐரோப்பிய அரசுகளுக்கு நிதிச்சீரமைப்பு செய்யப்பட வேண்டியது அவசியமானது என்பதால் இந்தக் கடினமான முயற்சியில் அனைவரும் கண்டிப்பாக ஈடுபடவேண்டும்.
தேவைப்பட்டால் அரசுப் பத்திரங்களுக்கு வட்டிவிகிதத்தை அதிகரிக்கலாம். இதனால் பொருளாதாரம் பாதிக்கப்படாது, மாறாக மக்களுக்கு தங்களின் நிதிநிலையை உணர்த்த உதவும்.பொதுநிதியைப் பெருக்கும் முயற்சியில் அடித்தள மக்களின் பங்களிப்பும், பங்கேற்பும் அவசியம் என்பதை ஷாபிள் சுட்டிக் காட்டினார்.
அணு சக்தி திட்டங்கள் குறித்து ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை.
அணுசக்தி திட்டங்கள் குறித்து ஐரோப்பிய கூட்டமைப்பு தலைமையிலான குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று ஈரான் அரசு தெரிவித்துள்ளது.அணுசக்தி திட்டங்கள் என்ற பெயரில் பயங்கர அணு ஆயுதங்களை தயாரித்து வருகிறது என்று அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் குற்றம் சாட்டி வந்தன. இதை ஈரான் திட்டவட்டமாக மறுத்து வந்தது.மேலும் சர்வதேச அணுசக்தி கழகத்தை சேர்ந்த பிரதிநிதிகள் ஈரானில் ஆய்வு நடத்த அனுமதிக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அதிகரித்தது.
இதையடுத்து ஈரான் மீது தேவைப்பட்டால் போர் நடவடிக்கையும் எடுப்போம் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தது. எனினும் அணுசக்தி திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்துவோம் என்று ஈரான் கூறியது.இந்நிலையில் ஈரான் மீது ஐ.நா அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளன. பரபரப்பான சூழ்நிலையில் அணுசக்தி திட்டங்கள் குறித்து ஐரோப்பிய கூட்டமைப்பு தலைமையிலான பிரதிநிதிகள் குழுவுடன் பேச்சு நடத்த தயார்.
ஆனால் அந்த பேச்சு இருதரப்பு ஒத்துழைப்பு என்ற அடிப்படையில் இருக்க வேண்டும் என்று ஈரான் சமரச பேச்சு பிரதிநிதி சயீத் ஜலில் கூறினார்.டெஹ்ரானில் பலநாட்டு தூதர்களின் சந்திப்புக்கு பிறகு இதை அவர் அறிவித்தார். இதுகுறித்து ஜேர்மனிக்கான ஈரான் தூதர் அலிரெசா ஷேக் அட்டார் கூறுகையில், பேச்சு நடத்த தயார் என்பது குறித்து விரைவில் கடிதம் அனுப்புவோம் என்றார்.
நைஜீரியாவில் தீவிரவாதிகள் ஊடுருவும் அபாயம்.
நைஜீரியா நாட்டின் எபோனி மாகாணத்தின் தென்கிழக்கு பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்தும்ஸ் தினத்தன்று 2 பிரிவினருக்கு இடையே மோதல் வெடித்தது.
தலைநகர் அபுஜா அருகேயுள்ள மாடல்லா என்ற இடத்தில் கிறிஸ்துமஸ் அன்று “போகோ காரம்” என்ற அமைப்பினரால் கார் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.இச்சம்பவத்தில் 44 பேர் உயிர் இழந்தனர். இதனால் அப்பகுதியில் பதட்டமும், வன்முறையும் நிலவுகிறது. மேலும் எல்லைப்பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவி வருகின்றனர்.
எனவே பிரச்சினைகளை சமாளிக்க போர்னோ மாகாணத்தில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. அதற்கான உத்தரவை ஜனாதிபதி குட்லக் ஜோனாதன் பிறப்பித்துள்ளார்.இதுகுறித்து ஜனாதிபதி கூறுகையில், நைஜீரியாவில் போகோ காரம் அமைப்பினர் தாக்குதல் நடத்தி வருவதால் குழப்பமான சூழ்நிலை நிலவுகிறது. அதை தீவிரவாதிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது.எனவே போர்னோ மாகாணத்தில் அவசரநிலை பிரகடனம் செய்வது அத்தியாவசியமாகி விட்டது என்று தெரிவித்துள்ளார்.
சீனாவில் எலியின் மூலமாக பரவும் காய்ச்சலுக்கு 24 பேர் பலி.
சீனாவில் எலியின் மூலமாக பரவும் காய்ச்சலுக்கு இந்த ஆண்டில் 24 பேர் பலியாகி உள்ளதாக புள்ளி விவரம் கூறுகிறது.சீனாவின் கிழக்குப் பகுதியில் உள்ள ஷான்டாங் மாகாணத்தில் கடந்த அக்டோபர் மாதத்தில் ஒருவித காய்ச்சல் பரவியது.
இது எலியால் பரவுவது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த காய்ச்சலால் இதுவரை 938 பேர் பாதிக்கப்பட்டதில் 24 பேர் பலியாகி உள்ளனர். இது 2010ம் ஆண்டைவிட 1.88 சதவீதம் குறைவு.இதில் துறைமுக நகரான க்விங்டாவில் மட்டும் 13 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டில் எலி காய்ச்சலுக்கு 13 பேர் மட்டுமே பலியானது குறிப்பிடத்தக்கது.இந்த காய்ச்சலுக்கு பெரும்பாலும் கிராம மக்களே பாதிக்கப்படுவதாகவும், அவர்கள் வசிக்கும் பகுதியில் எலி நடமாட்டம் இருப்பதே இதற்குக் காரணம் என்றும் வைத்தியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மூன்றில் ஒரு விவாகரத்துக்கு பேஸ்புக் தான் காரணம்.
உலகம் முழுவதும் நடக்கும் மூன்றில் ஒரு விவகாரத்துக்கு சமூக இணையதளமான பேஸ்புக் தான் காரணம் என்று இங்கிலாந்து சட்ட நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து விவாகரத்து சட்ட ஆலோசனை அளிக்கும் டைவர்ஸ் ஆன்லைன் நிறுவன நிர்வாக இயக்குனர் மார்க் கென்னன் கூறியுள்ளார்.இதுபற்றி டெய்லி மெயில் நாளேடு வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது: கடந்த ஓராண்டில் பெறப்பட்ட விவாகரத்துகளில் 33 சதவீத வழக்குகளின் நீதிமன்ற வாதங்களில் பேஸ்புக் இடம்பெற்றது.
எங்களிடம் வந்த விவாகரத்து தொடர்பான 5,000 முறைப்பாட்டில் மூன்றில் ஒன்றில் பேஸ்புக் பற்றி மனுதாரர்கள் குறிப்பிட்டனர். பேஸ்புக் பக்கங்களில் தங்கள் நண்பர்களுடன் பலர் மனம் திறந்து தகவல்களை பரிமாறிக் கொள்கின்றனர்.அவற்றில் தங்கள் முன்னாள் காதல், கள்ளக் காதல், அலுவலக நட்பு ஆகியவை பற்றி தெரிவிக்கின்றனர். இவை வாழ்க்கை துணைக்கு தெரிய வரும் போது குடும்பத்தில் பிரச்னை ஏற்படுகிறது. விவாகரத்தில் முடிகிறது.
மேலும் பேஸ்புக் தொடர்பு மூலம் கள்ளத் தொடர்பு ஏற்படுத்தவும், காதலை வெளிப்படுத்தவும் எளிதாக முடிகிறது. அதை வாழ்க்கை துணையிடம் இருந்து மறைக்க முயன்றாலும் நண்பர்கள் அல்லது பேஸ்புக் பக்கத்தில் தேடுவதன் மூலம் கணவர் அல்லது மனைவியால் கண்டுபிடித்து விட முடிகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்திரனின் ஈர்ப்பு விசை குறித்த ஆய்வு: நாசாவால் செயற்கைகோள்கள் அனுப்பப்பட்டது.
சந்திரனின் ஈர்ப்பு சக்தியை கண்டறிய அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் கிரைல்- ஏ, கிரைல்- பி என்ற இரண்டு செயற்கைகோள்களை கடந்த வாரம் விண்ணுக்கு அனுப்பியது.
இந்த இரண்டு செயற்கைகோள்களும் ஒரு வாரத்தில் சந்திரனின் நீள்வட்ட சுற்றுப்பாதையை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டது.அதன் படி கிரைல்- ஏ செயற்கைகோள் நேற்றும், கிரைல் -பி செயற்கைகோள் இன்றும் குறிப்பிட்ட இலக்கை சென்றடைந்தன.
அவை சந்திரனின் ஈர்ப்பு சக்தி குறித்த புதிய தகவல்கள் மற்றும் ஒளிப்படங்களை எடுத்து விஞ்ஞானிகளுக்கு அனுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த செயற்கைகோள்கள் பல புதுவித கண்டுபிடிப்புகளை கண்டறிய உதவியாக இருக்கும் என நாசாவின் முன்னணி விஞ்ஞானி முனைவர் மரியா ஷுபேர் தெரிவித்துள்ளார்.