விலங்குகளிலிருந்து மாறுபட்டு, மனிதன் எப்போது தரையிலிருந்து கைகளை தூக்கி எழுந்து, நிமிர்ந்து கால்களை ஊன்றி நிற்கவும், நடக்கவும் ஆரம்பித்தான்?
இதுவரையிலும் கிடைத்த ஆதாரங்களின்படி சுமார் 1.9 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு என்பதுதான் நாமறிந்த தகவல். ஆனால் 3.7 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே கால் தடம் பதித்த மனிதன் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கின்றது. தான்சேனியாவிலுள்ள லேடோலி என்னுமிடத்தில் பாறைப்படிமங்களில் 11 மனித கால் தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த கால் தடங்கள் சிம்பன்சிக்கள், உரங்க்-உட்டான்கள் மற்றும் கொரில்லாக்களின் பாத
அமைப்பிலிருந்து வேறுபடுகின்றன. இதற்கு முன்பு இதே போல் காணப்பட்ட காலடி சுவடுகள் ஒன்றே ஒன்றாக இருந்ததனால் அவற்றை ஒப்பிட்டுப்பார்ப்பது இயலாமல் போயிற்று. ஆனால், தற்போது கிடைத்துள்ள 11 சுவடுகளினால் ஒப்பிட்டுப்பார்ப்பது சுலபமாகி இருக்கிறது.
இன்றைய நாகரீக மனிதனுக்கு இதுவே முன்னோடி என்று கருதப்படுகிறது.
ஆதிமனிதன் இரண்டே பிரிவு தான் என்பது நாம் அறிந்தது. ஒன்று ஆப்பிரிக்காவை மையமாக கொண்டது. மற்றொன்று நியாண்டர்தாலை ஆதாரமாகக்கொண்டது. தற்போது கண்டுபிடிக்கப்பட்ட ஆதி மனிதனின் எக்ஸ் க்ரோமோசோம்கள் நியாண்டர்தால் மனிதனிடமிருந்து தோன்றியிருக்க வேண்டும் எனவும் அது நிச்சயமாக ஆப்பிரிக்காவை சேர்ந்த மனிதனுடையதல்ல என்றும் ஒரு ஆராய்ச்சி தெரிவிக்கிறது. இந்த இரண்டு பிரிவும் ஒரு கால கட்டத்தில் ஒன்றுடன் ஒன்று கலந்திருக்க வேண்டுமெனவும் அந்த ஆய்வு மேலும் தெரிவிக்கிறது.
நியாண்டர்தால் மனிதனின் முன்னோர்கள் சுமார் 4 லட்சத்திலிருந்து 8 லட்சம் ஆண்டுகளுக்கு முன் ஆப்பிரிக்காவை விட்டு வெளியேறி தற்போதைய பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி மற்றும் ரஸ்யா பகுதிகளில் கடந்த 30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரை வாழ்ந்திருக்க வேண்டும் என அந்த ஆய்வில் மேலும் தெரிய வந்துள்ளது. அதே நேரத்தில் தற்போதைய நாகரீக மனிதன் சுமார் 50 ஆயிரத்திலிருந்து 80 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆப்பிரிக்காவிலிருந்துதான் வெளியேறியிருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. உடல் பலமும், பகுத்தறிவும் பெற்றிருந்த நியாண்டர்தால் மனிதனுக்கு தற்போதைய நாகரீக மனிதன் தோன்றிய இனத்தோடு தொடர்பு இருந்ததா? என்ற கேள்விக்கு ஆம் என்பது தான் பதில். நியாண்டர்தால் மனிதனும் தற்கால நாகரீக மனிதனும் ஒருவ்ருடன் ஒருவர் இரண்டற கலந்து போனவர்கள் தான் என்பதும் ஆராய்ச்சியாளர்களின் கருத்து.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF