Saturday, January 7, 2012

NEWS OF THE DAY.

உடலினுள் 14 தங்க பிஸ்கட் கடத்திய நபர் கைது.

ஒரு தொகை தங்க பிஸ்கட்டுக்களை உடலில் மறைத்துவைத்து கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட இலங்கையர் ஒருவர், கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பைச் சேர்ந்த அல்தாப் சாஹுல் ஹமீட் (வயது 47) என்ற குறித்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
வருமான புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் எக்ஸ் கதிர் பரிசோதனைக்குட்படுத்தியபோது, குறித்த நபர் தனது பெருங்குடலின் கீழ்ப்பகுதியில் 14 தங்க பிஸ்கட்டுக்களை மறைத்துவைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அரச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, குறித்த நபரின் உடலிலிருந்து தங்க பிஸ்கட்டுக்கள் அகற்றப்பட்டதாகவும் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
சரத் பொன்சேகாவை விடுவிக்க அமைச்சர் விமல் வீரவன்ச வலியுறுத்து! வீரவன்சவின் கருத்துக்கு சரத் பொன்சேகா கடும் ஆட்சேபம்.
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா விடுதலை செய்யப்படவேண்டும் என அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார். சரத் பொன்சேகாவின் விடுதலையை வலியுறுத்துபவர்களே, அவர் உள்ளேயே இருக்கவேண்டும் என அதிகளவில் விரும்புகின்றனர் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.தனது கணவர் மீது அந்த அம்மையாருக்கு அவ்வளவு அக்கறையிருக்குமானால், கணவரை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கலாம்தானே என்றும் அவர் கூறியுள்ளார்.
சிங்கள ஊடகமொன்றுக்கு அமைச்சர் வழங்கிய செவ்வியில், சரத் பொன்சேகாவின் விடுதலை தொடர்பாகக் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு:
சரத் பொன்சேகா, நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றிருப்பாராயின் முதல் 24 மணித்தியாலங்களுக்குள் கொலை செய்யப்பட வேண்டியவர்களின் பட்டியலில் நானும் இடம்பெற்றிருப்பேன்.
எது எப்படியிருப்பினும், அந்த நபரை ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யவேண்டும் என்பதுதான் எனது கருத்தாகும். சரத் பொன்சேகா மீதுள்ள அன்பின் காரணமாக நான் இந்தக் கருத்தைக் கூறவில்லை.
சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு கோருபவர்கள்தான் அவர் உள்ளே இருப்பதை அதிகளவில் விரும்புகின்றனர். விடுதலை செய்யுமாறு கோருவதெல்லாம் பொய் நாடகமாகும்.
அந்த அம்மையாருக்குத் தனது கணவர் மீது அவ்வளவு அக்கறையிருந்தால் கணவரை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கலாம்தானே? ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்படும் பட்சத்திலேயே அவர் பொதுமன்னிப்புக் குறித்து பரிசீலிக்கலாம்.எந்த ஒரு கைதியும் அவ்வாறு விடுதலையாவதற்கு ஆசைப்படுவார் அல்லவா? கைதிகளின் உறவுகள் ஜனாதிபதிக்குத் தமது உறவுகளை விடுதலை செய்யுமாறு கடிதம் எழுதுகின்றனர். அப்படியானால், அந்த அம்மையார் கோரிக்கை விடுக்காதிருப்பது ஏன்?
இரண்டாம் இணைப்பு
எனது கொலைப்பட்டியலில் விமல் வீரவன்சவின் பெயர் இருக்கவில்லை – சரத் பொன்சேகா
எனது கொலைப் பட்டியலில் விமல் வீரவன்சவின் பெயர் இருக்கவில்லை என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
“பித்தளை பஞ்சாயுத விமல் வீரவன்ச, என்னை விடுதலை செய்ய எனது மனைவி மன்னிப்பு கோர வேண்டுமென தெரிவித்துள்ளார்” எனக்கு விருப்பமில்லாத ஒன்றை எனது மனைவி செய்ய மாட்டார்.
விமல் வீரவன்சவின் வீட்டில் எப்படியோ எனக்கு தெரியாது.எனது கொலைப்பட்டியலில் விமல் வீரவன்சவின் பெயர் இடம்பெறவில்லை, சாரைப் பாம்புகளை அடித்து பாவத்தைத் தேடும் பழக்கம் எனக்கில்லை.
எனது கொலைப் பட்டியலில் விடுதலைப் புலித் தீவிரவாதிகளின் பெயர்கள் மட்டுமே இருந்தன.சாரைப் பாம்புகளின் பெயர்கள் எனது கொலைப் பட்டியலில் இருக்கவில்லை என சரத் பொன்கோ தெரிவித்துள்ளார்.
பொதுமன்னிப்பு தொடர்பில் அண்மைக்காலமாக வெளியாகி வரும் தகவல்கள் குறித்து கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொள்வதற்காக கொழும்பு தனியார் வைத்தியசாலைக்கு சென்று திரும்பிய போது சரத் பொன்சேகா இதனைத் தெரிவித்துள்ளார்.
கே.பி இலங்கையில் தான் இருக்கிறார்! இன்டர்போலுக்கு அறிவிப்பேன்: ஐ.தே.க பா.உ ஜயலத் ஜயவர்தன.

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளராக இருந்த குமரன் பத்மநாதன் (கே.பி.) இலங்கை அதிகாரிகளின் தடுப்புக்காவலில் இருப்பதை இன்டர்போலுக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்போவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயலத்ஜயவர்தன தெரிவித்துள்ளார்.இன்டர்போலினால் தேடப்படும் கிரிமினல்கள் பட்டியலில் கே.பியும் உள்ளார். எனவே அவருக்கு இலங்கை புகலிடம் அளிக்க முடியாது எனவும் ஜயலத் ஜயவர்தன நேற்று தெரிவித்துள்ளார்.
அண்மையில் நான் சென்னை பொலிஸ் ஆணையாளரை சந்தித்து, இலங்கையில் கே.பி. இருப்பதை தெரிவித்தேன். இது தொடர்பான ஆவணங்களையும் நான் கையளித்தேன்' என ஜயலத் ஜயவர்தன எம்.பி. தெரிவித்துள்ளார்.இந்தியாவினால், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கே.பி தேடப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு - கொலன்னாவைக்கிடையில் விமானத்திற்கு பயன்படுத்தப்படும் எரிபொருள் கசிவு.
கொழும்பு துறைமுகத்திலிருந்து கொலன்னாவை எரிபொருள் களஞ்சியசாலைக்கு எரிபொருள்கொண்டு செல்லும் நிலக்கீழ் குழாயில் சேதம் ஏற்பட்டுள்ளதால், களனி பாலத்திற்கருகே எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளதாக பெற்றோலியத் துறை அமைச்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 விமானங்களுக்குப் பயன்படுத்தப்படும் எரிபொருளே நேற்று பிற்பகல் பெருமளவில் கசிந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொலன்னாவைக்கு எரிபொருள்கொண்டு செல்லப்படும் குழாய்கள் பல தசாப்தகாலம் பழைமை வாய்ந்தவையாக காணப்படுவதாகவும் இவற்றுக்குமேல் கட்டிடங்கள் கட்டப்பட்டதால் அக்குழாய்கள் சேதமடைந்திருக்கலாம் எனவும் பெற்றோலியத் துறை அமைச்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மேற்படி எரிபொருள் கப்பல் ஒன்றிலிருந்து இரு நாட்களாக குழாய் மூலம் கொலன்னாவை களஞ்சியசாலைக்கு அனுப்பப்பட்டுக் கொண்டிருந்ததாகவும் தற்போது அந்நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற மகிந்த ராஜபக்ச விருந்துகளுக்கு செலவிட்ட தொகை 3500 மில்லியன் ரூபா?
ஜனாதிபதி தேர்தலின் போது, ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, சட்டவிரோத விருந்துபசாரத்திற்காக 3500 மில்லியன் ரூபாவை செலவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.2010 - 2011 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்திலும், 2012 ஆம் ஆண்டின் வரவு செலவுத்திட்டத்திலும் ஜனாதிபதியின் விசேட செலவீனத்தை பார்க்கும் போது இந்த தகவல் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2009 ஆம் ஆண்டு ஜனாதிபதியின் விசேட செலவீனமாக 7869 மில்லியன் செலவிடப்பட்டுள்ளது. இந்த செலவீனத்திலேயே சட்டவிரோத விருந்துபசாரத்துக்கான பணமும் அடங்கியுள்ளதாக கொழும்பு தகவல் ஒன்று தெரிவிக்கின்றது.2011 ஆம் ஆண்டு இந்தத் தொகை 4336 மில்லியன்களாக குறைவடைந்தது. எனினும் 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதிக்கு 3532 மில்லியன் ரூபாவே ஒதுக்கீடு செய்யப்பட்டன.
ஜனாதிபதி தேர்தலின் போது வாக்காளர்களை கவர்ந்திழுப்பதற்காகவே 3500 மில்லியன் ரூபா விருந்துபசாரங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.குறித்த விருந்துபசாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியபோது, அதற்கான பணம் ஜனாதிபதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பணம் அல்ல. அது தனிப்பட்டவர்களின் பணம் என்று அரசாங்கம் கூறியிருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
சிறிகொத்தா ஐ.தே.க. காரியாலயம் மூடப்பட்டுள்ளது! பூட்டை உடைக்கப் போவதாக சஜித் அறிவிப்பு.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் உள்ள உத்தியோகபூர்வ காரியாலயம் மூடப்பட்டுள்ளதாகவும்,  அதனால் அதற்குள்  பிரவேசிக்க முடியாத நிலைமை தமக்கு ஏற்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் திங்கட்கிழமை பூட்டை உடைத்து தமது ஆவணங்களை எடுக்கப் போவதாகவும் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மாத்தளையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டவாறு தமது தலைமையில் இன்று கூட்டம் நடைபெறும். கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை. எனத் தெரிவித்துள்ள சஜித் பிரேமதாச பொதுமக்களின் வாக்குகளினால் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவான தாம் மக்களுக்கு தொடர்ந்தும் சேவையாற்றுவதாக குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நாடாளுமன்றில் கரு ஜயசூரியவிற்கு வழங்கப்பட்டிருந்த தனியான அறை, கட்சி உறுப்பினர்களின் ஓய்வு அறையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளுக்கு சஜித் பிரேமதாச கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.இதேவேளை, சிறிகொத்தவில் சஜித் பிரேமதாசவிற்கு தனியான அறைகள் கிடையாது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த மாத இறுதியில் நாடு திரும்புகிறார் முஷாரப்.
பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப் தனது ஆதரவாளர்களுடன் எதிர்வரும் 25 அல்லது 27ம் திகதி நாடு திரும்பப் போவதாக தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனசிர் புட்டோ படுகொலை தொடர்பான வழக்கில் முஷாரப் நேரில் ஆஜராக வேண்டும் என ராவல்பிண்டி தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.ஆனால் முஷாரப் ஆஜராகவில்லை, எனவே அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் முஷாரப்பை கைது செய்ய அந்நாட்டு ஐ.எஸ்.ஐ மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தன.
இந்நிலையில் துபாயில் நிருபர்களிடம் முஷாரப் பேசுகையில், ராவல்பிண்டி நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணையை எதிர்க்கொள்ள தயாராக உள்ளேன். எனவே வரும் 25 அல்லது 27ம் திகதி நாடு திரும்ப திட்டமிட்டுள்ளேன். உலகம் முழுவதும் உள்ள ஆதரவாளர்களில் 600 பேர் அப்போது என்னுடன் வருவார்கள் என்று தெரிவித்தார்.நாடு திரும்பும் முன் அவர் சவுதி மன்னரை சந்திப்பார் என்றும் தகவல்கள் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
நைஜீரியாவில் மர்ம மனிதன் துப்பாக்கி சூடு: 20 பேர் பலி.
நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் டவுன் ஹாலில் கிறிஸ்துவ மக்களின் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.அப்போது அங்கு வந்த மர்ம மனிதன் ஒருவன் God Is Great என்று கூறிய படியே, கண்மூடித்தனமாக சுடத் தொடங்கினான்.
இதில் சம்பவ இடத்திலேயே 20 பேர் பலியாயினர், 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த கிறிஸ்துவ மக்கள் கூட்டமைப்பின் செய்தித் தொடர்பாளர், கிறிஸ்துவ மக்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை என்று தெரிவித்தார்.
இந்திய மாணவரை கொலை செய்தவர்களுக்கு கடும் தண்டனை அளிக்கப்பட வேண்டும்: கமரூன்.
இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் வெள்ளியன்று அனுஜ் பித்வேயின் பெற்றோர்களை சந்தித்து பேசும் போது இந்த கொடுஞ்செயல் செய்தவனுக்கு கடும் தண்டனை அளிக்க‌ப்பட வேண்டும் என கூறினார்.இதுகுறித்து மேலும் கேமரூன் பேசுகையில், அனுஜ் குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மான்செஸ்டர் காவல்துறையினர் வழங்குவார்கள் என உறுதியளித்தார்.
மேலும் பித்வேயின் பெற்றோர் நேற்று மான்செஸ்டரின் சால்போர்டு பகுதியில் பித்வே கொல்லப்பட்ட இடத்திற்குச் சென்றனர். பின் அவர்கள் அளித்த பேட்டியில், பித்வேயின் கொலைக்கு இப்பகுதி மக்களை குற்றம் சொல்ல முடியாது. கொலை செய்த நபரைத் தான் குற்றம் சாட்ட வேண்டும் என்றனர்.பித்வேயின் உடல் இரண்டாவது பிரேத பரிசோதனை முடிந்து இறுதிச் சடங்குகள் செய்யும் ஒரு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்நிறுவனத்திடம் இருந்து உடலைப் பெற்று அவர்கள் இன்று நாடு திரும்புவர் என எதிர்பார்க்கப்படுகிறது. பித்வே படித்து வந்த லங்காஷர் பல்கலைக்கழகம் அவரது பெற்றோருக்கு தேவையான நிதியுதவி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கனடாவின் பொருளாதார நிலை குறித்து மக்கள் கவலை.
கனடாவின் பொருளாதார நிலை குறித்து கவலைப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது என சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.2009ம் ஆண்டில் கனடாவின் பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதாக நம்பியவர்கள் 54 சதவீதம் பேர். இதுவே 2010ம் ஆண்டில் 36 சதவீதம் என்றாகி 2011ம் ஆண்டில் 25 சதவீதம் என குறைந்து விட்டது.
மக்களிடையே பொருளாதாரம் குறித்த அவநம்பிக்கை தோன்றி விட்டது என்பதை இந்த கருத்துக்கணிப்பு எடுத்துக்காட்டுகிறது.இதனால் மக்கள் மிகவும் கவலையோடும், பொருளாதாரத்தில் அக்கறை மிகுந்தவர்களாகவும் இருப்பதாக போலாரா ஆய்வு மையத்தின் தலைவர் மைக்கேல் மர்ஸோலினி தெரிவித்தார்.
70 சதவீதம் மக்கள் பொருளாதாரம் வீ்ழ்ச்சியடைத் தொடங்கிவிட்டதாக கவலை தெரிவித்தனர். 2012ம் ஆண்டில் கனடாவில் பொருளாதார வளர்ச்சி 2 சதவீதம் சரியும் என்று பொருளியல் அறிஞர்கள் கருதுகின்றனர்.வேலையில்லா திண்டாட்டம் 7.4 சதவீதம் என்றாகி விட்டதால் சுமார் 1.5 பில்லியன் இளைஞர்கள் வேலை தேட வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.
ஈராக்கில் தொடர் குண்டுவெடிப்பு: 72 பேர் பலி.
ஈராக் தலைநகர் பாக்தாதில் ஷியா பிரிவு முஸ்லிம்கள் வசிக்கும் பகுதியில் அடுத்தடுத்து நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 72 பேர் உயிரிழந்தனர்.அமெரிக்க படைகள் ஈராக்கிலிருந்து வெளியேறி வரும் நிலையில் இத்தகைய தாக்குதல்கள் மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இங்குள்ள சதர் நகர் பேருந்து நிறுத்தத்துக்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது. பேருந்துக்காக காத்திருந்த 33 பேர் உயிரிழந்தனர்.இதையடுத்து சாலையோரத்தில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது. இதில் ஒருவர் உயிரிழந்தார். மூன்றாவதாக ஒரு குண்டை காவல்துறையினர் செயலிழக்கச் செய்தனர்.
இந்தச் சம்பவம் நிகழ்ந்த 2 மணி நேரத்துக்குப் பிறகு கஸிமியா பகுதியில் இரண்டு சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் வெடித்தன. இதில் 20 பேர் உயிரிழந்தனர்.அமெக்கப் படைகள் வெளியேறி வரும் நிலையில் இராக்கில் சன்னி முஸ்லிம்கள் மற்றும் ஷியா பிரிவு முஸ்லிம்களிடையே போராட்டம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஸ்வீடன் நாட்டில் புதிய மதத்திற்கு அங்கீகாரம்.
இணையத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலமாக தகவல்களை பரிமாறும் சேவையை செய்யும் ஸ்வீடன் நாட்டு அமைப்பு ஒன்றை ஸ்வீடன் அதிகாரிகள் ஒரு மதமாக அங்கீகரித்திருக்கிறார்கள்.
காப்பிமிஸத் திருச்சபை என்று தன்னை அழைத்துக் கொள்ளும் அந்த அமைப்பு இந்த அங்கீகாரம் மூலமாக, தகவலைப் பரிமாறிக் கொள்ளும் புனிதப்பணிக்கு மேலதிக சட்டபூர்வ பாதுகாப்பு கிடைக்கும் என்று நம்புகின்றனர்.காப்புரிமை பாதுகாப்புக்கு எதிராக இயங்கும் ஸ்வீடிஷ் பைரேட் இயக்கத்துடன் இந்த அமைப்பு மிக நெருங்கிய தொடர்புகளை வைத்திருப்பதாக ஸ்வீடிஷ் ஊடகங்கள் கூறுகின்றன.
கடத்தி செல்லப்பட்ட பாதுகாப்பு படை வீரர்களை கொடூரமாக கொன்ற தலிபான்கள்.
கடத்திச் செல்லப்பட்ட 15 பாதுகாப்புப் படை வீரர்களைக் கொன்று விட்டதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர்.இவர்கள் அனைவரும் தெற்கு வஜிரிஸ்தான் பழங்குடியினப் பகுதியிலிருந்து கடந்த மாதம் கடத்தப்பட்டவர்களாவர். இவர்கள் அனைவரையும் கொன்றுவிட்டதாக தெஹ்ரிக்-இ-தலிபான் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் இஷனுல்லா இஷான் தெரிவித்துள்ளார்.
கைபர் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் இத்தகவலைத் தெரிவித்தார். கொல்லப்பட்டவர்களது சடலம் வடக்கு வஜிரிஸ்தான் பகுதியில் வீசப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்தார்.இருப்பினும் இஷானின் இந்த அறிவிப்பை தலிபான் அமைப்பின் தலைமை உறுதி செய்யவில்லை. கடந்தாண்டு டிசம்பர் மாதம் 23ம் திகதி இராணுவத்துக்கு எதிராக தலிபான் அமைப்பினர் மேற்கொண்ட தாக்குதலில் 15 பாதுகாப்புப் படையினரைக் கடத்திச் சென்றனர்.இவர்களை விடுவிக்க சிறையில் உள்ள சில தலிபான்களை விடுவிக்க வேண்டும் என அப்போது கோரிக்கை விடுத்திருந்தனர்.
கைபர் பகுதியில் தலிபான்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கையைக் கண்டித்து தலிபான் அமைப்பினர் இத்தாக்குதலை மேற்கொண்டனர். இதுபோன்ற பல பழிவாங்கும் தாக்குதலை தொடர்ந்து மேற்கொள்ளப்போவதாக இஷான் தெரிவித்துள்ளார்.கடந்த ஞாயிற்றுக்கிழமை தலிபான்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் தலிபான் கமாண்டர் கம்ரான் காலித் கொல்லப்பட்டதாக பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தலிபான்களின் இந்த நடவடிக்கையால் பாகிஸ்தான் இராணுவத்துக்கும், தலிபான் அமைப்பினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.பாதுகாப்புப் படையுடன் பேச்சுவார்த்தை தொடர்வதாக தெஹ்ரிக்-இ-தலிபான் அமைப்பின் தலைவர் மெளலவி ஃபகிர் முகமது தெரிவித்த போதிலும் அதை இஷான் மறுத்துள்ளார்.
நியூயார்க் தாக்குதல்: இந்து, முஸ்லிம் அமைப்புகள் கண்டனம்.
நியூயார்க்கில் சமீபத்தில் இந்து கோவில் மற்றும் இஸ்லாமிய ஸ்தலத்தில் நடத்த தாக்குதலுக்கு இந்து மற்றும் முஸ்லிம் அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.இது குறித்து அமெரிக்க இந்து சேவா டிரஸ்ட் வெளியிட்ட அறிக்கையில், கோயில்கள் மீது தாக்குதல் நடத்துவது என்பதை எந்த அமைப்பாலும் பொறுத்துக் கொள்ள இயலாத ஒன்று என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டைட்டானிக் கப்பல் மூழ்கி 100வது ஆண்டு: பொருட்களை ஏலம் விட முடிவு.
கடலில் மூழ்கி விபத்திற்குள்ளான உலகின் பிரபலமான பயணிகள் கப்பலான டைட்டானிக் கப்பலில் எஞ்சிய சேதமடைந்த பாகங்கள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 15ம் திகதி பொது ஏலம் விடப்படவுள்ளது.இதில் ஹேர்ப்பின் முதல் சமையலுக்கு பயன்படுத்திய பாத்திரம் வரை கடலில் மீட்டு எடுக்கப்பட்ட 5000 வகையான பொருட்கள் ஏலத்திற்கு வருகின்றன.
கடந்த 1912-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் உலகப்புகழ்பெற்ற டைட்டானிக் பயணிகள் கப்பல், அமெரி்க்காவின் வட அட்லாண்டிக் கடலில் சென்று கொண்டிருந்த போது பனிப்பாறையில் பயங்கரமாக மோதி விபத்திற்குள்ளானது.இந்த கப்பலில் பயணித்த 2228 பேர்களில் 1800-க்கும் மேற்பட்டோர் கடலில் முழ்கி பலியாயினர். கடலில் முழகி விபத்திற்குள்ளான டைட்டானிக் கப்பல் கடந்த 1984-ம் ஆண்டு கனடாவின் நியூபவுண்ட் லேண்ட் கடல் பகுதியில் 4 கி.மீ ஆழத்தில் முழ்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, பின்னர் தனியார் நிறுவனம் ஒன்று 1987, 1993, 1994, 1996, 1998, 2000 , 2004 ஆகிய ஆண்டுகளில் கப்பலில் எஞ்சிய பொருட்களை சேகரித்து வந்தது.
இந்நிலையில் டைட்டானிக் கப்பல் முழ்கியதன் 100-ம் ஆண்டு தினத்தையொட்டி, நியூயார்க்கைச் சேர்ந்த கர்ன்‌ஷே என்ற ஏல நிறுவனம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 15ம் திகதி ஏலம் விட முடிவு செய்துள்ளது.இந்த ஏலத்தில் ஹேர்ப்பின் முதல் பெரிய பொருட்கள் என 5000 வகையான பொருட்களை ஏலம் விடப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு: 50 வாகனங்கள் மோதல்.
அமெரிக்காவில் கடும் பனிமூட்டத்தில் 50 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி கொண்டதில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.உலகின் பல நாடுகளில் பனிப்பொழிவு அதிகமாக காணப்படுகிறது. இதனால் ரயில், பேருந்து, விமான போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் போர்ட் ஆர்தூர் பகுதியில் நேற்று கடும் பனிப்பொழி நிலவியது. மேற்கு பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை 5.45 மணிக்கு பனிமூட்டம் அதிகமாக இருந்தது.அப்போது இரண்டு கார்கள் மோதிக் கொண்டன. அதன்பின் வேகமாக வந்த வாகனங்களும் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டன. நெஞ்சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
இரண்டு கார்களும் தீப்பற்றி எரிந்தன. சுமார் 50 வாகனங்கள் மோதிக் கொண்டதில் 2 பேர் பலியாயினர். பலர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் 4 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று ஜெபர்சன் கவுன்டி ஷெரீப் கரோல் கூறினார்.மேலும் அவர் கூறுகையில், இந்த விபத்தில் பலருடைய எலும்புகள் உடைந்துள்ளன. அவர்களில் பலருடைய நிலை கவலைக்கிடமாக உள்ளது. மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. பனிமூட்டத்தால் வாகனங்கள் மெதுவாக செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
.
பின்லேடன் கொலை குறித்த படத்தை தயாரிக்க உதவிய அமெரிக்க உளவுத்துறை.
அல்கொய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானின் அபோதாபாத்தில் தங்கியிருந்தார்.இதை கண்டறிந்த அமெரிக்க இராணுவம் கடந்தாண்டு மே மாதம் 1ம் திகதி அவரை சுட்டுக் கொன்றது.
இந்த சம்பவத்தை  படமாக ஆஸ்கார் விருது பெற்ற இயக்குனர் காதரின் பிஜெலோ இயக்கியுள்ளார். இப்படம் வருகிற அக்டோபரில் வெளியிடப்படுகிறது.பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து தனக்கு சில தகவல்களை தந்து உதவும்படி இயக்குனர் காதரின் பிஜெலோ அமெரிக்க உளவுத் துறை மற்றும் இராணுவ தலைமையகத்துக்கும்(பென்டகன்) கடிதம் எழுதி இருந்தார்.
அதை எற்றுக் கொண்டு பின்லேடன் கொல்லப்பட்ட போது நடந்த சில நிகழ்வுகள் குறித்த தகவல்களை தந்து உதவியதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்க்கட்சியான குடியரசு கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பீட்டர் கிங் கடும் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளார்.பின்லேடன் கொல்லப்பட்டது குறித்த இரகசிய தகவல்களை வெளியிட்டதன் மூலம் இச்சம்பவத்தில் ஈடுபட்ட இராணுவத்தின் சீல் 6-வது பிரிவினரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். பீட்டர் கிங் நாடாளுமன்ற உறுப்பினர் உள்நாட்டு பாதுகாப்பு அமைப்பின் தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரான்சின் வெளிவாகரத்துறை அமைச்சர் துனிஷியா வருகை.
பிரான்சின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலைன் ஜீப்பே துனிஷியா நாட்டிற்கு வருகை புரிந்துள்ளார்.
சமயச் சிறுபான்மையினர் மற்றும் பெண்களின் நிலை பற்றி பேசுவதற்காகவும், சட்டத்தின் வழியில் துனிஷியா அரசு செயல்பட வேண்டிய ஆலோசனைகளை வழங்கவும் தான் வந்திருப்பதாக இவர் தெரிவித்தார்.ஒரு வருடத்திற்குள் இரண்டாவது முறையாக வருகை தரும் ஜீப்பே, இந்த முறை துனிஷியாவின் வெளிவிவகாரத்துறை அமைச்சரான ரபீக் அப்துஸ்ஸாமைச் சந்திக்கிறார். இதுவே இவர்களின் முதல் சந்திப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
துனிஷிய ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பல முக்கிய பிரமுகர்களையும் இவர் சந்தித்து பேசுகிறார். இவர்களிடம் பிரான்ஸ் மற்றும் துனிஷியாவிற்கு இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்தவும் ஜீப்பே பேச்சுவார்த்தை நடத்துவார்.ஜீப்பேயின் வருகைக்கு துனிஷியாவில் எதிர்ப்பு கலந்த வரவேற்பு காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
ஜேர்மன் ஜனாதிபதிக்கு புதிய நெருக்கடி.
ஜேர்மன் ஜனாதிபதி கிறிஸ்ட்டியன் உல்ப் தற்பொழுது புதுவித பிரச்னையில் சிக்கி உள்ளார்.உல்ப்பை பற்றி பத்திரிகையில் செய்தி வெளியிட்டதைத் கண்டித்து, இவர் பிரபல பத்திரிக்கையின் ஆசிரியருக்கு மிரட்டல் விடுத்ததாக பத்திரிகையாசிரியர் கய் மக்மன் குற்றம் சுமத்தினார். அவரது மிரட்டல் ஒலிப்பதிவு செய்யப்பட்டிருப்பதால் அந்த ஓடியோ நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படலாம்.
இந்தக் குற்றச்சாட்டு குறித்து தன்னுடைய விளக்கத்தை அளிக்க உல்ப் ஒரு பேட்டியளித்தார். ஆனால் மறுநாள் காலை நாளிதழ்கள் அவர் தனக்குக் கிடைத்த வாய்ப்பைத் தவறவிட்டாரே ஒழிய முறையான விளக்கம் அளிக்கவில்லை என்று செய்தி வெளியிட்டன. இச்செய்தியின் தலைப்பு “A Washed Chance” என்பதாகும்.
Suddcutsche Zeitung என்ற நாளிதழ் செய்தி வெளியிடுகையில், ஒரு நாட்டின் ஜனாதிபதிக்கு இருக்கும் மிகப்பெரிய உரிமை, தவறுக்கு மன்னிப்பு வழங்குவதாகும். இப்போது இவரே இவருக்கு மன்னிப்பு வழங்கி கொள்ளட்டும், தனக்குத் தானே மன்னிப்பு வழங்கும் முதல் ஜனாதிபதி ஜேர்மனியில் இவர் தான் என்று எழுதியது.மேலும் ARD தொலைக்காட்சி நடத்திய கருத்துக் கணிப்பின்படி உல்ப் ஜனாதிபதியாக தொடரலாம் என்று 47 சதவீதம் பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர். இதற்கு முன்பு நடத்திய கருத்துக்கணிப்பில் இவருக்கு 63% பேர் ஆதரவு தெரிவித்திருந்தனர். இப்போது இவருக்கு மக்கள் ஆதரவு குறைந்து கொண்டே வருவது குறிப்பிடத்தக்கது.
ஈரான் தடை ஏற்படுத்தினால் தாக்குதல் நடத்துவோம்: பிரிட்டன் எச்சரிக்கை.
ஈரான் ஹோர்முஸ் ஜலசந்தியை அடைப்பதால் அந்த வழியில் நடைபெறும் எண்ணெய் வர்த்தகம் தடைபடுகிறது என்று பிரிட்டனின் பாதுகாப்பு செயலர் தெரிவித்தார்.மேலும் இதனை அனுமதிக்க முடியாது, இது உலக வர்த்தகச் சட்டத்திற்குப் புறம்பான செயலாகும். இதனால் பிராந்திய வளர்ச்சியும், உலக வளர்ச்சியும் பாதிப்படையும் என்று அமெரிக்க பாதுகாப்பு செயலர் லியோன் பனெட்டா ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
பிரிட்டன் மற்றும் அமெரிக்காவின் பாதுகாப்பு செயலர்கள் பென்டகனில் சந்தித்து ஈரானின் வழிமறித்தல் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.ஈரானில் அணு ஆயுத தயாரிப்பு நடப்பதாக சந்தேகப்படும் அமெரிக்கா அங்கு ஆளில்லா போர் விமானத்தின் மூலமாக தாக்குதல் நடத்தியது. இதற்குப் பதிலாக ஈரான் தனது கட்டுப்பாட்டில் இருந்து தன்னுடைய எல்லைக்கு உட்பட்ட ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய்க்கப்பல்கள் போக முடியாமல் அடைத்து விட்டது.
இதற்கு முன்பாக ஐ.நா பாதுகாப்பு குழு ஈரான் மீது கடுமையான பொருளாதார நடவடிக்கைகளை கொண்டு வந்தது. ஈரானில் பிரிட்டன் தூதரகத்தின் மீது சில ஈரானியர்கள் தாக்குதல் நடத்தியதால் பிரிட்டன் தன் அதிகாரிகளை திரும்ப அழைத்துக் கொண்டது.பிரிட்டனில் இருந்த ஈரான் தூதரையும் ஈரானுக்கே திருப்பி அனுப்பி வைத்தது. ஈரானுடன் எவ்வித வங்கித் தொடர்போ, வர்த்தக தொடர்போ கூடாது என்று தன் நாட்டு மக்களிடமும் நிறுவனங்களிடமும் பிரிட்டன் அரசு எச்சரித்தது.
இதனால் கோபம் அடைந்த ஈரான் மேல்நாட்டு கப்பல்களின் போக்குவரத்தை தடை செய்யும் விதமாக ஹோர்முஸ் ஜலசந்தியில் சோதனைமுறை ஏவுகணைத் தாக்குதலை நடத்தி அச்சுறுத்தியது.இவ்வாறு தடைகள் வரும் பட்சத்தில் நாடுகளின் ஆதரவை திரட்டி ஈரானுக்கு பதிலடி கொடுப்போம் என பிரிட்டனின் பாதுகாப்பு செயலர் தெரிவித்தார். இந்த தாக்குதல் கடற்கொள்ளைக்கும், தீவிரவாதத்திற்கும் எதிரான தாக்குதலாகும். இதனால் வளைகுடா நாடுகளின் பாதுகாப்பு உறுதிபடும் என்றும் கூறினார்.எனவே ஈரான் ஜலசந்தியை அடைத்து வர்த்தகத்திற்கு தடை ஏற்படுத்தக் கூடாது என்று எச்சரித்தார்.
மீண்டும் போர் பயிற்சியில் ஈரான் கடற்படை: அச்சத்தில் மேற்குலக நாடுகள்.
ஹோர்முஸ் நீரிணையில் மீண்டும் ஈரான் கடற்படை பயிற்சியில் ஈடுபடப் போவதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடாவுக்கு இடையில் உள்ள ஹோர்முஸ் நீரிணையில், கடந்தாண்டு டிசம்பர் மாதம் இறுதியில் தொடங்கி 10 நாட்கள் ஈரான் கடற்படை போர் பயிற்சியில் ஈடுபட்டது. அப்போது மூன்று ஏவுகணைகளை வெற்றிகரமாக பரிசோதித்தது.
இந்தப் பயிற்சியும், ஏவுகணை சோதனையும் மேற்குலகில் பதட்டத்தை ஏற்படுத்தின. இந்நிலையில் ஈரான் செய்தி நிறுவனம் ஒன்று நேற்று முன்தினம் வெளியிட்ட செய்தியில், பிப்ரவரி மாதம் மீண்டும் ஈரான் கடற்படை பாரசீக வளைகுடா மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் போர் பயிற்சியில் ஈடுபடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் பதவி காலம் முடிவதற்கு முன்பே தேர்தல் நடத்த ஆளும் கட்சி முடிவு.
பாகிஸ்தானில் ஆளும் கூட்டணி அரசு தனது பதவிக் காலத்தை முடிக்குமா என்ற சந்தேகம் வலுவடைந்து வரும் நிலையில், அடுத்தாண்டு நடக்க உள்ள பொதுத் தேர்தலை முன்கூட்டியே நடத்த ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சி முடிவு செய்துள்ளது.
பாகிஸ்தானில் அரசுக்கும் இராணுவத்திற்கும் இடையிலான மோதல் சமீபத்தில் வெளிச்சத்திற்கு வந்தது. இதையடுத்து இராணுவப் புரட்சி ஏற்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் இரு தரப்பும் மேற்கொண்ட சமாதானத்தை அடுத்து ஆளும் கூட்டணி அரசு தொடரும் என இரு தரப்பும் தொடர்ந்து கூறி வருகிறது.
இதற்கிடையில் நேற்று முன்தினம் ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் முக்கியத் தலைவர்கள் கூட்டம் இஸ்லாமாபாத்தில் நடந்தது. இதில் ஜனாதிபதி சர்தாரி, பிரதமர் கிலானி ஆகியோர் கலந்து கொண்டனர்.இந்தாண்டு மார்ச் மாதம் 11ம் திகதி நடக்க உள்ள நாடாளுமன்றத்திற்கான தேர்தல் பிப்ரவரியிலும், அடுத்தாண்டு நடக்க உள்ள பொதுத் தேர்தலை இந்தாண்டு அக்டோபர் மாதம் 16ம் திகதி நடத்தலாம் என இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இந்தாண்டு ஜூன் மாதம் நிதிநிலை அறிக்கை தாக்கலான பின் எந்த நேரத்திலும் பொதுத் தேர்தல் நடத்தப்படலாம் என நேற்று முன்தினம் மத விவகாரத் துறை அமைச்சர் குர்ஷித் ஷா தெரிவித்தார்.கடந்த வாரம் பேட்டியளித்த பிரதமர் கிலானி முன்கூட்டியே தேர்தல் நடப்பதற்கு வாய்ப்பில்லை எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF